அமுதசுரபி இதழில் ஜூன் மாத வெண்பாப்போட்டிக்கான ஈற்றடியை புலவர் சித்தாந்த ரத்தினம் ராமச்சந்திரன் வழங்கியிருந்தார். "நன்றே வருமென்று நம்பு" என்ற அந்த ஈற்றடிக்கான வெண்பாக்களில் நான் எழுதிய வெண்பாவும் தேர்வாகி பிரசுரமாகியிருக்கிறது.
பிரசுரமான வெண்பாவைத்தவிர அதே ஈற்றடிக்கு எழுதிய மேலும் சில வெண்பாக்கள் உங்கள் பார்வைக்கு.
தளர்ந்து விடாதே தனித்துநின்ற போதும்
கிளர்ந்து எழுக களத்தில்- இளநெஞ்சே
குன்றாத ஊக்கம் குறிக்கோள் எனக்கொண்டால்
நன்றே வருமென்று நம்பு.
சென்ற வினைபோகச் சிந்தை தெளிவடைந்து
நின்ற நிலைதன்னில் நேர்படுக - நன்றுள
குன்றோன் துணையிருக்கக் கேடில்லை எந்நாளும்
நன்றே வருமென்று நம்பு.
கன்றிய துன்பம் களைந்து கவலைநீக்கி
என்றுமே இன்பம் இயையுமே - பொன்றாத
அன்பே அரணாக ஆக்கி அகமகிழ்ந்து
நன்றே வருமென்று நம்பு.
பொன்னே எனப்பொழுதைப் போக்காது நற்செயலில்
தன்னையே தந்து தடையின்றி - முன்னின்று
நின்றே உழைக்க நிலைகாணும் நல்வாழ்வு
நன்றே வருமென்று நம்பு.
