Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Friday, 18 December 2015

தொலைத்த பொக்கிஷங்கள்

 நன்றி- தி இந்து
2005 ஆம் வருடம் ஜூலை மாதம் மும்பையை ஒரு மழை உருட்டி விளையாடியது. வருடாவருடம் வந்து செல்லமாய் மெல்லக்கிள்ளிப்போகும் மழை அவ்வருடம் பேயறை அறைந்ததில் நாங்களெல்லாம் நிலை குலைந்துதான் போனோம். சில இடங்களில் தரைத்தளத்தை மூழ்கடித்ததோடு நில்லாமல் முதல் தளத்தையும் அசுர வேகத்தில் விழுங்கியிருந்தது வெள்ளம். அவற்றில் என் குழந்தைகள் படித்த பள்ளியும் ஒன்று.

அப்போது யூனிட் டெஸ்டுகள் நடந்து கொண்டிருந்ததால் அதற்கு முன்பே வகுப்பு நோட்டுப்புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு தரைத்தளத்திலிருந்த ஸ்டாஃப் ரூமில் வைக்கப்பட்டிருந்தன. எதிர்பாரா விதமாய் பெருமழை வெள்ளம் இரவே ஸ்டாஃப் ரூமில் புகுந்து அத்தனையையும் மூழ்கடித்தது. வெள்ளம் வேறு இரண்டு நாட்களுக்கு மேலாகியும் வடியாததால் புத்தகங்கள் அனைத்தும் மழை+சாக்கடை நீரில் ஊறிக்கிடந்தன. மழைநீர் வடிந்து பள்ளியும் திறந்தபின் நோட்டுப்புத்தகங்கள் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இங்க் பேனாவை உபயோகித்து எழுதப்பட்டவை தண்ணீரில் கந்தரகோலமாயிருக்க பால் பாயிண்ட் பேனாவால் எழுதப்பட்டிருந்த குறிப்பேடுகள் தப்பிப் பிழைத்திருந்தன.

அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்து நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு துணி காய வைக்கும் கொடிக்கயிற்றில் தொங்க விட்டு நீரெல்லாம் வடிந்தபின் அப்படியே உலர விட்டு தாள்கள் கிழியாது என்று நம்பும் பக்குவத்திற்கு உலர்ந்தபின் இஸ்திரிப்பெட்டியால் தேய்த்து மீதமிருந்த ஈரத்தையும் உலர்த்தினோம். இங்க் பேனாவால் எழுதப்பட்ட குறிப்பேடுகளை குடும்பத்தினர் அனைவரும் கொஞ்சங்கொஞ்சமாக எழுதிக்கொடுத்தோம்.

சமீபத்திய சென்னை மழையின்போது ஏராளமான புத்தகங்கள் பாழான செய்திகளைப் பார்க்கும்போதும் கேட்கும் போதும் இப்படி ஏதாவது செய்து அந்தப்புத்தகங்களைக் காப்பாற்ற முயற்சிக்கலாமே என்று மனது அடித்துக் கொள்கிறது. வாக்யும் க்ளீனர் ஹேர் ட்ரையர் போன்ற உபகரணங்களின் ஃப்ளோயர் கொண்டும் வெப்பக்காற்றால் உலர வைக்கலாம். இயன்றவர்கள் தெரிந்தவர்களுக்கு செய்து கொடுக்கலாம்.

அச்சுப்பிரதிகளை ஏதாவது செய்து நிச்சயமாக மீட்டெடுக்கலாம். குப்பை மலையில் இன்னொரு குவியலாக அவை கிடப்பதைக் காணும்போது மனது வலிக்கிறது. //புத்தகங்கள் வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதங்களின் தொகுப்பல்ல. அவை நேற்றின் வரலாற்றை, இன்றைய நிகழ்வை நாளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பொக்கிஷங்கள்’ என்பார்கள்.// ரொம்பவும் சரி. விதி வசத்தால் பெரும்பாலான சமயங்களில் அப்பொக்கிஷம் நம் கண்ணெதிரிலேயே நம் கையை விட்டுப்போவதை ஒரு விதக் கையாலாகாத்தனத்துடன் பார்த்துக்கொண்டே இருக்க நேர்ந்து விடுகிறது.

வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது
கல்வி என்னும் பொருள் இங்கிருக்க உலகெல்லாம் பொருள் தேடி அலைவதேனோ" எனும் ஆன்றோர் வாக்கு, ஒருவன் கற்ற கல்விக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர கல்வி கற்க உதவும் புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் முதல் மடிக்கணினி, மேசைக்கணினி வரையிலான சாதனங்களுக்குப் பொருந்தாது என்பது இது வரை எத்தனையோ முறை நிரூபணமாகியிருக்கிறது. ஒரு புத்தகம் வெளியாகிறதெனில் எழுத்தாளரிலிருந்து அச்சிடுபவர் வரை அதன் பின் எத்தனையோ பேரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மறைந்திருக்கிறது. அத்தனையையும் இப்போதைய மழை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது. இப்போதும் தனி நபர்களின் சேமிப்பிலிருந்த புத்தகங்கள் முதல் வரும் ஜனவரியில் நடைபெறவிருந்த புத்தகத்திருவிழாவிற்காக பதிப்பகத்தார் அச்சிட்டு தயார் செய்து வைத்திருந்த புத்தகங்கள் வரையில் அத்தனையும் வெள்ளநீரில் மூழ்கி பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. இவற்றில், பதிவர்களாகிய நாம் வெளியிட்டிருந்த நூல்களும் அடங்கும் என்பது ஆற்றவியலாத சோகமே. நீரில் மூழ்கியதால் ஒரு சில இடங்களில் அச்சு இயந்திரங்களும் பழுதாகியிருப்பதும் பெரும் குலைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வெளியாகும் தி இந்து இது தொடர்பாக சிறப்புக்கட்டுரையொன்று வெளியிட்டிருக்கிறது.

மும்பை வெள்ளம் வடிந்த போது, அதிகம் சேதமாகாத, குறைந்த சேதமுள்ள பொருட்களை கடைக்காரர்கள் மிகக்குறைந்த விலைக்குக் கொடுத்தார்கள். தள்ளி விட்டார்கள் என்றே சொல்லலாம். மக்களும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள். அம்மாதிரியே அதிகம் சேதப்படாத புத்தகங்களை அப்படியே தூக்கி குப்பையில் எறிவதை விட, தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைக்கலாம். வீணாக குப்பையில் மக்கி அழிவதை விட வாசிப்பில் விருப்பமுள்ள ஒருவர் கையில் சென்று சேர்வது கலைமகளுக்கும் விருப்பமான ஒன்றாகத்தான் இருக்கும்.

Friday, 24 February 2012

அதிர்ச்சி வைத்தியம் பலனளிக்குமா?..

கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கணும். விதை விதைச்சதும் முளைச்சு, விளைஞ்சு அறுவடையாகிரும்ன்னு அவசரப்பட முடியுமோ?.. குறைஞ்ச பட்சம் வேரூன்றித் தழைக்க ஆரம்பிச்சாலாவது எப்படியும் பிழைச்சுரும்ன்னு நம்பிக்கையோட இருக்க முடியும். அது வரைக்கும் பொறுமை.. பொறுமை.. அண்ட் பொறுமை தேவை. பொறுமை எருமையை விடப்பெரியதுன்னு சும்மாவா சொல்லி வெச்சிருக்காங்க பெரியவங்க.

எப்பவும் போல அன்னிக்கும், பொறுமையா ஒரு சிகரெட் புகைக்கலாம்ன்னு பொட்டிக் கடைக்கு வந்து ஒரு சிகரெட் வாங்கிக்கிட்டு, கடையிலிருந்த லைட்டரோட பட்டனை அமுக்கினா, அது..ராம் நாம் சத்ய ஹை"அப்டீன்னு சவுண்டு விடவும் பதறியடிச்சுப் பின் வாங்கிய மக்களுக்கு, ஒரு இயக்கம் கொடுக்கற அதிர்ச்சி வைத்தியம் அதுன்னு மொதல்ல புரியலை..
காமிராவில் பிடிச்சாந்தது..
வடக்கே இந்துக்களின் இறுதி ஊர்வலத்தும்போது, கூடவே நடக்கறவங்க "ராம் நாம் சத்ய ஹை" அப்படீன்னு மெதுவான குரல்ல உச்சாடனம் செஞ்சுட்டே போவாங்க. போற உசுரு கடவுள் நாமத்தைக் கேட்டுக்கிட்டே போகட்டுமேங்கற நினைப்புத்தான். அதைத்தவிர வீண் அரட்டையோ அல்லது வேறு எந்த நிகழ்வுகளோ இருக்காது. அந்த உச்சாடனத்தைக் கேக்கறப்ப கொஞ்சம் நம்ம உசுரையே அசைச்சுப் பார்த்துடற மாதிரி இருக்கும். பொதுவாவே இறுதிச்சடங்கு நிகழ்வுல கலந்துக்கறவங்களுக்கு ஒரு விதமான பற்றற்ற மனநிலை இருக்கும். பூமியில உசிரோட இருக்கறவரைக்கும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய மனுஷன் கடைசியில் என்னத்தைக் கொண்டு போறான். நாமளும் அப்படித்தானே போகப்போறோம்,.. அதனால இருக்கறவரைக்கும் மத்தவங்களுக்குப் பிரயோசனமா இருக்கணும், அன்பா இருக்கணும்ன்னு ஒரு வைராக்கியமே வரும். இதைத்தானே மயான வைராக்கியம்ன்னு சொல்றோம். அந்த இடத்தை விட்டு வெளியில வந்தப்புறம், "பழைய குருடி கதவைத்திறடி"ன்னு பழைய வாழ்க்கை முறைக்கே திரும்பறது தனிக்கதை :-) இங்கெல்லாம் இறுதி யாத்திரை போகுதுன்னா, கிட்டக்கப் போயி இறந்தவங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுட்டு அவங்கவங்க வழியில போவாங்க.

மனுசன் உலகத்துக்கு வந்தது ஒரே வழியில் ஆனா, உலகத்தை விட்டுப் போறது வெவ்வேறு வழிகளில்ன்னு சொல்லுவாங்க. அங்கே இறுதியாத்திரை செஞ்சுட்டிருக்கறவரும் அப்படித்தான் ஏதாவதொரு வழியில், ஏன் கான்சராலக் கூட உலகத்தை விட்டுப் பிரிய நேர்ந்துருக்கலாம்.

ஆனாலும் நம்ம அரசாங்கத்துக்கு மக்கள் மேல அபார நம்பிக்கைதான். முதியோர் கல்வி, அறிவொளி இயக்கம், இது போக வழக்கமான கல்வி நிலையங்கள்ன்னு எக்கச்சக்கமா ஏற்படுத்திக் கல்வியை ஊட்டறோமே.. அது வீணாப் போகுமா?. எப்படியும் மைக்ராஸ்கோப் வெச்சுப் படிச்சாவது தெரிஞ்சுக்குவாங்க என்ற அசாத்திய நம்பிக்கை அவங்களுக்கு இருக்கு. அதனாலதான் கடுகை விடச் சின்னதா "Cigarette is Injurious to Health"ன்னு சிகரெட் பொட்டியில் எழுதி வெச்சிருக்காங்க. ஒரு வேளை இங்க்லீஷ் படிக்கத் தெரியலைன்னா என்னா செய்யறதுன்னுதான் "புகை பகை".. "புகை பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு"ன்னு தமிழ்லயும் எழுதி வெச்சிருக்காங்க.

ஆனாலும் மக்கள் இந்த வெண்சுருட்டை(தமிழ்ல இந்தப் பேருதானே?.. தெரிஞ்சவங்க சொல்லுங்க) விடறதா இல்லை. பொது இடங்கள்ல புகை பிடிச்சா அபராதம்ன்னும் ஒரு சட்டம் வந்துச்சு. ஆனாலும் ஓரளவுக்கு குறைக்க முடிஞ்சுதே தவிர முழுசும் இதை தடுக்க முடியலை. சிகரெட்டால புற்று நோய் வர வாய்ப்பிருக்குன்னு சொன்னாக்கூட மக்கள் சட்டை செய்யறதா இல்லை. இதுக்கு மேல ஒரு அரசாங்கம் மக்களை எப்படித்தான் எச்சரிக்கை செஞ்சு பாதுகாக்க முடியுமாம்.. யக்கா நீ சொல்லேன்!! அண்ணாத்தை நீங்க சொல்லுங்களேன் :-)

நடமாடும் புகை போக்கிகள் அதான் சிகரெட் பிடிக்கிறவர்கள் தங்களோட வீட்ல தனியிடத்துலயோ, இல்லைன்னா, மறைவா எங்கியாவதோ பிடிச்சா மத்தவங்களுக்குப் பிரச்சினையில்லை. அட்லீஸ்ட் வாங்குன கையோட கடை மறைவுல நின்னு கதையை முடிச்சுட்டுக் கிளம்புனாக்கூட தொந்தரவில்லை. ஆனா, இரு சக்கரத்துலயோ நாலு சக்கரத்துலயோ போற போக்குலயும், நடந்து போகறச்சயும் புகையை மத்தவங்களுக்கும் சப்ளை செய்யறவங்களை என்னன்னு சொல்றது. சிலருக்கு அந்த வாசனை விருப்பமானதா இருக்கலாம். ஆனா, ரோட்டுல குழந்தைகளும் நடமாடுது, அவங்களுக்கு இந்தப் புகை அலர்ஜியாக் கூட இருக்கலாம்ங்கறதையும் இவங்க யோசிக்கிறது நல்லது.

புகை பிடிக்கிறவங்களை விட அதைச் சுவாசிக்கிறவங்களுக்குப் பாதிப்பு கூடுதல்ன்னு கண்டு பிடிச்சிருக்காங்க. சமீபத்தில் பையருக்கு உடம்பு சரியில்லாம மருந்து வாங்கப் போயிருந்தப்ப, கடையில் ஒரு குடும்பம் நின்னுட்டிருந்தது.கடைப்பையரும் அவங்க குடும்பமும் நண்பர்கள் அதனால மனசு விட்டுப் பேசிக்கிட்டிருந்தாங்க. கசமுசன்னு கடைப்பையன் கிட்ட பேசிக்கிட்டு இருந்ததைக் கவனிச்சதும் காதை அந்தப் பக்கம் அனுப்புனேன். ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகியிருக்கும் அவங்களோட மூத்த பையருக்கு கான்சராம். கல்யாணம் நிச்சயமாகி ஒரு மாசமே ஆகியிருந்த நிலையில் ரொம்ப சீரியஸான கட்டத்துல அட்மிட் ஆகியிருக்கார். ஒரு கெட்ட பழக்கம் கூட இல்லாத அவருக்கு, செயின் ஸ்மோக்கரான அவங்கப்பா மூலமா கான்சர் பரவியிருக்குது. பாதிக்கப்பட்ட பையருக்கு வயசு இருபத்தஞ்சைக் கூட தாண்டலைங்கறதுதான் கொடுமை.

சிகரெட்டை முடிச்சுட்டுக் கனிஞ்சுட்டிருக்கற துண்டை, அப்படியே வீசிட்டுப் போறவங்களையும் சொல்லணும். நம்ம நாட்ல கிராமங்கள்லயும், நகரங்கள்லயும் செருப்பில்லாம வெறுங்காலோட நடக்குற நிலைமையில் இன்னும் கூட ஆட்கள் இருக்கத்தான் செய்யறாங்க. இங்கேயும் எத்தனையோ ஏழைக்குழந்தைகள் வெறுங்காலோட சிக்னல்கள்ல அங்கியும் இங்கியும் ஓடறதைப் பார்த்திருக்கேன். ஏதாவதொரு ஆட்டோ, அல்லது காரிலிருந்து விழும் கனல்துண்டு அதுங்க பாதத்தைப் பதம் பார்க்கவும் வாய்ப்பிருக்கே.

திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு நம்மூரு வாத்தியார் பாடி வெச்சது இங்கேயிருக்கும் Cancer Patients Aid Association- (சுருக்கமா)CPAA-க்கு எப்படித்தான் தெரிஞ்சதோ.. திருடங்களைத் திருத்தணும்ன்னா அதிர்ச்சி வைத்தியம்தான் சரிப்படும்ன்னு துணிஞ்சு இறங்கிட்டாங்க. மொதல்ல குறிப்பிட்ட சிகரெட் லைட்டர்தான் அந்த அதிர்ச்சி வைத்தியம். இது மின்சாரத்துல இயங்கறதால ஷாக் ட்ரீட்மெண்டுன்னும் இங்க்லீஷ்ல சொல்லிக்கலாம்.

மும்பையில் பான் கடைகள் ரொம்பவே பிரபலம். பான் வகைகளும், குட்கா போன்ற வஸ்துகளோட சிகரெட்டும் இருக்கும். இதான் சரியான களம்ன்னு களமிறங்கிய CPAA மும்பையில் மட்டும் மொத்தம் 25 இடங்கள்ல இந்த லைட்டர்களை கடைக்காரங்களோட அனுமதியோட வெச்சிருக்கு. நிறையப்பேர் இதை வெச்சுக்க எதிர்ப்பு தெரிவிக்கறாங்கதான். சரிதானே?.. தன்னோட காலைத் தானே கோடரியால வெட்டிக்க யாருக்குத்தான் விருப்பமிருக்கும்?. இதை வெச்சுக்க அனுமதிச்சா எங்க பொழைப்பு என்னாகறதுன்னு கேக்கறாங்க. உங்க பொழைப்புக்காக மத்தவங்க வாழ்க்கையில் விளையாடறது ஞாயமான்னு கேக்குற CPAA  இந்தத்திட்டத்தை கட்டாயமாக்க வேணப்பட்ட சட்ட பூர்வமான முயற்சிகளையும் எடுத்துட்டு வருதுன்னு இதோட இயக்குனர் தெரிவிச்சுருக்கார். கான்சருக்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் கிட்ட பரப்பும் முறைகளில் இந்தத் திட்டமும் ஒன்னு..

யூடியூப்ல ச்சும்மா வலை மேய்ஞ்சுட்டிருந்தப்ப கிடைச்ச புதையல் இது. மேற்கொண்டு தகவல் தேடுனப்ப இவங்களுக்குன்னு தளமும் இருக்கறதைக் கண்டு பிடிச்சேன். சேவைகள், கான்சருக்கான சிகிச்சை முறைகள்ன்னு ஒரு தகவல் சுரங்கமே இருக்குது அங்கே. லைட்டரோட ஸ்விட்சை அமுக்கினதும் எப்படி ஷாக் அடிச்சு, ஓரோருத்தரும் ஜெர்க்காகுறாங்கங்கறதை நீங்களே வீடியோவில பாருங்க ..

ஒரு சிலர் மட்டும் இந்த உச்சாடனத்தை தனக்கான எச்சரிக்கை ஒலிக்கிறதா எடுத்துக்கிட்டு , "இந்த சிகரெட் பழக்கம் இனிமேலும் அவசியமா"ன்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க. மத்தபடி மெஷினைக் கண்டு பின் வாங்குனாலும் சிகரெட்டை விடமுடியாத சிலர் வத்திப் பொட்டி கேக்க ஆரம்பிச்சுருக்காங்களாம். இன்னும் சில துணிஞ்ச மனசுள்ளவங்க அந்த லைட்டரைத் தைரியமா உபயோகப் படுத்தறாங்களாம். வழக்கமா அரசாங்கம், ஜோரா ஆரம்பிச்சு ஆரம்ப ஜோர்ல கொண்டாடப்பட்டு, கடைசியில காயலாங்கடைக்குப் போற நல்ல திட்டங்கள் மாதிரி இல்லாம, பொது நல சேவை மனப்பான்மையோட தனியார் ஆரம்பிச்சுருக்கும் இதுவாவது நீடிச்சு நின்னு நல்ல பலனைத்தரணும்..

இப்போ தீர்ப்பு மக்கள் கையில்....


Saturday, 12 November 2011

கெளம்பிட்டாங்கய்யா.. கெளம்பிட்டாங்கய்ய்யா...

படம் கொடுத்ததுக்கு நன்றி கூகிள் அண்ணாத்தை
'இந்திய நண்டுகள்' கதை கேள்விப் பட்டிருக்கீங்களா?..  நிச்சயமா கேள்விப் பட்டிருப்பீங்க. கேள்விப் படாதவங்களுக்காக இன்னொருக்கா சொல்றேன்.

வெளிநாடுகளுக்கு ரகசியமா விலங்குகளைக் கடத்தல் செஞ்சுட்டிருந்த ஒரு கூட்டம் தனக்குச் சொந்தமான ஒரு கப்பல்ல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக அனுப்ப வேண்டிய விலங்குகளைப் பத்திரமா காற்று நுழையும் வசதி கொண்ட கண்டெய்னர்கள்லயும், சிலதை சின்னச்சின்ன கூடைகள்லயும் அடைச்சு வெச்சு தயார் செஞ்சுட்டிருந்தாங்க. (இது கதை, அதனால லாஜிக்கெல்லாம் பார்க்கக் கூடாது. சொல்லிட்டேன் :-))) அதுல நண்டுகள் இருந்த ஒரு கூடையை மட்டும் மூடாம அப்படியே விட்டு வெச்சிருந்தாங்க. இதை அந்தக் கம்பெனியில புதுசா வேலைக்குச் சேர்ந்த ஒரு ஊழியர் கவனிச்சுட்டார். ஐயய்யோ.. அதெல்லாம் வெளிய ஓடிடுமே.. அப்றம் சட்ன்னு பிடிக்கவும் முடியாதே'ன்னு அவருக்கு கவலையாப் போச்சு. உடனே கூடையை மூடி வைக்கிறதுக்காக தன்னோட மேலதிகாரி கிட்ட போய் உதவி கேக்கப் போனார். 

மேலதிகாரி அவரை லட்சியமே செய்யலை. 'ஒண்ணும் சிரமப்பட வேணாம். அப்படியே விட்டுடு'ன்னார். தொழிலாளிக்கு ஒண்ணும் புரியலை, 'அப்படியே விட்டுட்டா அது ஓடிப் போயிடாதா?'ன்னு அவரோட அடிமனசுலேர்ந்து கேள்விகள்  தண்ணி பட்ட ஈனோ உப்பு மாதிரி குபீர்ன்னு பொங்குது.'உனக்கு சந்தேகமாருந்தா அந்தக் கூடையை நல்லா கவனிச்சுப்பாரு'ன்னுட்டு மேலதிகாரி போயே போயிட்டார். குழம்பிய தொழிலாளி கூடைக்குள்ள பார்த்தா நல்லா கொழுகொழுன்னு பத்துப்பதினஞ்சு நண்டுகள் உள்ள கிடக்குது. அதுல ஒண்ணு மெதுவா மேல ஏறி வெளியே வரப் பாக்குது. பாதி வழி ஏறிக்கிட்டிருக்கும்போதே இன்னொரு நண்டு கபால்ன்னு முதல் நண்டோட காலைப் புடிச்சு கூடைக்குள்ள இழுத்துப் போடுது. இப்படியே விளையாட்டு தொடருது. மொத்தத்துல ஒரு நண்டு கூட கூடையை விட்டு வெளியே வரலை. இதைக் கொஞ்ச நேரம் கவனிச்சுட்டிருந்த நம்மாளு, மேலதிகாரி கிட்டப் போயி, 'மொதலாளி.. கூடைய மூட வேணாம்ன்னு நீங்க ஏன் சொன்னீங்கன்னு இப்பத்தான் புரியுது. ஆனா, இவ்ளோ நண்டுக் கூடைகள் இருக்கறப்ப அந்த நண்டுகள் மட்டும் ஏன் அப்படி வித்தியாசமா நடந்துக்குது. எனக்கு ஒண்ணும் புரியலை"ன்னார்.

"புரியாததாலதான் நீ இன்னும் தொழிலாளியா இருக்கே. புரிஞ்சுக்கிட்டதாலதான் நான் மேலதிகாரியா ப்ரமோஷன் வாங்கி வந்துருக்கேன். சரி. சொல்றேன் கேட்டுக்க. அதெல்லாம் இந்தியாவுலயும் அதைச் சுத்தியிருக்கற கடற்பகுதிகள்லயும் பிடிச்ச நண்டுகள். ஏதாவது ஒரு நண்டு முன்னேற முயற்சி செஞ்சாலும், பக்கத்துல இருக்கற நண்டுகள் காலைப் பிடிச்சு இழுத்து அதை முன்னேற.. அதாவது கூடையை விட்டு வெளியேற முடியாம செஞ்சுடும். இது அதுங்களோட இயற்கைக் குணம். புரிஞ்சதா?"ன்னுட்டுப் போயிட்டார்.

'இந்தியர்களான நமக்கு நம்மில் ஒருத்தர் முன்னேறுனா பொறுக்காது'ங்கறதை சொல்றதுக்காக கட்டி விடப்பட்ட கதை இது. இத மொதமொதல்ல உருவாக்குன ஆளு மட்டும் கையில கிடைச்சார்... அந்த நண்டுக் கூடையிலயே போட்டு அடைச்சு, கூடுதலா நாலஞ்சு நட்டுவாக்காலிகளையும் விடணும். கிர்ர்ர்ர்... ஆனா, கொஞ்சம் உங்க சொந்தச் செலவுல ரூம் போட்டு யோசிச்சுப் பாருங்க. இலைமறை காய் மறையா கொஞ்சம் உண்மையும் எட்டிப் பாக்குதுன்னுதான் சொல்லணும். தனக்குத் தெரிஞ்சவங்களோட,.. முக்கியமா சொந்தக்காரங்களோட, வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பார்த்து எத்தனை பேர் உண்மையிலேயே மனசார சந்தோஷப்படறோம்? இது ஒரு கேள்விக்குறியாவே ஏன் எப்பவும் இருக்குது?.

ஆனா, எப்பவுமே எதுவுமே அப்படி இருக்கறதில்லை. முன்னே பின்னே தெரிஞ்சவங்க முன்னேறுனா வேண்ணா பொறாமைப்படுவோமா இருக்கலாம். ஆனா, முன்னே பின்னே தெரியாதவங்களை முன்னேத்தியே தீருவோம்ன்னு வைராக்கியமாஒரு கூட்டமே அலையுது தெரியுமோ?.  நம்ம ஈமெயிலுக்கு ஒரு லெட்டர் அனுப்பி, 'உங்க மெயிலுக்கு பெரிய தொகையொண்ணு பரிசு விழுந்துருக்குது.. ஃப்ரம் டுடே நீங்க ஒரு கோடீஸ்வரர்'ன்னு சொல்ற நல்ல மனசோ,..  இல்லைன்னா, தன்னோட சொத்துல ஒரு பகுதியை நம்ம பேருக்கு எழுதி வெச்சுட்டு செத்துப் போற பெரிய மனசோ வெளிநாட்டுக் காரங்களுக்கு மட்டுந்தான் இருக்குது. நம்மள்ல எத்தனை பேருக்குங்க இருக்குது?... :-)

அட.. மெயிலை விடுங்க.. அது ஓல்டு யுகம். டெக்னாலஜி முன்னேறும்போது கொளுகையை பரப்பற வழியையும் முன்னேத்தணுமா இல்லியா?.. அதனால அடுத்தாப்ல மொபைல்ல மெஸேஜ் அனுப்ப ஆரம்பிச்சாங்க. காசு பணம் மட்டும் கொடுத்தாப் போதுமா?.. அதனால முத்துமாலை, தங்க நெக்லஸ்ன்னு அவங்க நமக்குக் கொடுக்கற அன்புப்பரிசு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. பாசக்காரங்களா இருக்காங்களேப்பா :-))))

இப்ப லேட்டானாலும் லேட்டஸ்டா இன்னொரு ஹைடெக்கான வழியைக் கண்டுபிடிச்சுருக்காங்க. இப்பல்லாம் நம்ம நம்பருக்கே போன் செஞ்சு நேரடியா அட்டாக்தான். எப்படியாவது நம்மை கோடீஸ்வரங்களாக்கியே தீரணும்ன்னு விடாமுயற்சி செய்யற அந்த அன்பை நினைக்கிறப்ப கண்கள் பனிக்கின்றன.. காதுகளும் இனிக்கின்றன :-)

அப்படியொரு உடன்பிறவா உடன்பிறப்பு கிட்டயிருந்து சமீபத்துல எனக்கும் ஒரு போன் கால் வந்தது. கைவேலையா இருந்ததால ரங்க்ஸே அட்டெண்ட் செஞ்சார். இது எங்களுக்குள்ள ஜகஜம்தான்.

"ஹலோ.."

"......"

"நெஜமாவா.. நீங்க வெளையாட்டுக்குச் சொல்லலியே.."

"...................."

"ஹைய்யோ... என்னால நம்பவே முடியலை. ஆச்சரியமா இருக்குது."

".................."

"ஆனாலும், உங்களுக்குப் பெரிய மனசுங்க. இவ்ளோ பெரிய தொகை.... எப்டீங்க? எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துரும் போலிருக்கே"

"..................." 

இதுவரைக்கும் ரங்க்ஸ் கொடுத்த ஓவர் ஆக்டிங்லயே என்னவோ வில்லங்கம்ன்னு புரிஞ்சு போச்சு. இந்தச் சமயத்துல மொபைலைப் பிடுங்கி லவுட் ஸ்பீக்கர்ல போட்டுட்டு, மறுபடியும் ரங்க்ஸ் கைல கொடுத்தேன்.

"உங்கூர்ல இருக்கற '****' பாங்க்ல பணத்தைப் போட்டுடுவோம். அதை வெளிநாட்டு பேங்க்லேர்ந்து கொண்டு வர வேண்டியிருக்கு இல்லியா.. அதுக்கான சார்ஜை மட்டும் நீங்க கொடுத்தாப் போதும். உங்களுக்கு இருபத்தஞ்சு லட்சம் கிடைச்சுடும்"ன்னு பேசிக்கிட்டிருக்கச்சயே லைன் கட்டாகிடுச்சு. க்ளைமாக்ஸ் சீன்ல மலை விளிம்புல நின்னுட்டிருக்கற ஹீரோயினை வில்லன் காப்பாத்துவாரா?.. இல்லை ஹீரோ காப்பாத்துவாரா?.. ன்னு நகத்தைக் கடிச்சுக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்கறப்ப கரண்ட் கட்டானது மாதிரி இருந்தது.

யாரு என்ன?.. ன்னு ரங்க்ஸ் கிட்ட விவரம் கேட்டேன். விஷயம் ரொம்ப சிம்பிள்தான். ஈமெயில்ல அடிக்கடி நடக்கறதுதான். என்னோட மொபைல் நம்பருக்கு குலுக்கல் முறையில் பரிசு கிடைச்சுருக்கு. ஜஸ்ட் இருபத்தஞ்சு லட்சம் ரூபாய்கள். ஒரு வெளிநாட்டுக் கம்பெனி பரிசு கொடுக்குது. வெளிநாட்ல உள்ள பாங்கிலிருந்து இங்கிருக்கும் பாங்குக்கு பணத்தைக் கொண்டாந்து நம்ம அக்கவுண்ட்ல போட்டுடுவாங்களாம். அதுக்கு ச்சார்ஜா குறிப்பிட்ட அமவுண்டை அவங்க கொடுக்கற அட்ரசுக்கு அனுப்பிட்டா, நமக்கு இந்தியாவுலயே ஒரு அட்ரஸ் கொடுப்பாங்க. அந்த அட்ரஸுக்குப் போய்ப் பார்த்தா நம்மூரு பாங்குக்கான ஏஜண்ட் இருப்பார். அவர் கிட்ட நமக்கான பரிசுப் பணம் இருக்கும். அவர் கூடப் போனா நம்ம பாங்குல நம்ம அக்கவுண்டுல நம்ம கண்ணு முன்னாடியே பரிசுப் பணத்தை டெப்பாசிட் செஞ்சுடுவாங்க. இந்த மாதிரியெல்லாம் தில்லுமுல்லு நடக்குதுன்னு ரங்க்ஸுக்கும் தெரியும். அதனாலத்தான் முதல்லே எதிர்முனையில் இருந்த பார்ட்டி அடிச்ச கூத்துக்கெல்லாம் பதில் கொடுத்துட்டிருந்தார் :-))

ஆஹா!!.. இந்த மாதிரி ஒரு சம்பவத்தை அடிப்படையா வெச்சு நம்ம வித்யாசாகர் ஒரு கதை எழுதியிருந்தாரேன்னு ஞாபகம் வந்தது. அதுல ஹீரோ ஏமாந்துடுறதா கதை முடியும். அந்தக் கதையை ரங்க்ஸ் கிட்ட சொன்னேன்.  கொஞ்சம் யோசிச்ச ரங்க்ஸ் அந்த நம்பரைக் கூப்பிட்டார். 

"சார்.. நீங்க சொன்ன அமவுண்டை அனுப்பிடறேன். எங்கே அனுப்பணும்ன்னு சொல்லுங்க.."

"நீங்க மொதல்ல காசை அனுப்பிடுங்க.. அப்றம் நானே அட்ரசை மெஸெஜ் அனுப்பிடறேன்"

"சார்.. " அப்டீன்னு ஆரம்பிச்சு ரங்க்ஸ் பாட்டுக்கு அளந்து விட்டுக்கிட்டே போறார். போனையே முன்னே பின்னே பார்க்காத ஒருத்தர், கத்திப் பேசுனாத்தான் எதிர் முனையில் இருக்கற ஆளுக்கு கேக்கும்ங்கறமாதிரி நினைச்சுக்கிட்டு ஊரையே கூட்டுவாரே.. அந்த மாதிரி ஹை டெஸிபல்ல பேசுறதையும், மீட்டர் கணக்குல ரீல் உட்டதையும் கேட்டுக்கிட்டிருந்த நாங்க ஒரு கட்டத்துல வாயை இறுக்கப் பொத்திக்கிட்டு கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சுட்டிருந்தோம். சிரிப்புச் சத்தம் கேட்டு எதிராளி உஷாராயிடக் கூடாதே. 

பசங்க வேற 'அப்பா.. போதும்'ன்னு சைகை காட்டுதுங்க. இவரானா மணிக்கு இத்தனை கி.மீங்கற வேகத்துல ரீல் விட்டுக்கிட்டிருக்கார். 'ஆஹா.. ஒரு அடிமை சிக்கிட்டார்டா..'ன்னு இவருக்கு ஒர்ரே பூரிப்பு. ஒரு வேளை எதிராளியும் அப்படித்தான் நினைச்சுருப்பானோ??.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

பேச்சு வாக்குல, 'சரீங்க.. உங்க அட்ரசைச் சொல்லுங்களேன்"ன்னு நைசா ஒரு பிட்டைப் போட்டார்.

".............."

"ஹலோ..ஹல்லோ.."

அவ்ளோதான்.. லைன் கட். இவர் மறுபடி மறுபடி அந்த நம்பருக்கு போன் செஞ்சுட்டே இருக்கார். லைன் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதுன்னு ஒரு பொண்ணு கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்குது. பாவம்.. தொண்டை கட்டிக்கப் போவுதுன்னுட்டு பரிதாபப்பட்டு போன் செய்யறதை விட்டுட்டார்.

அப்றம் ஆற அமர உக்காந்து இதைப் பத்தி பேசிக்கிட்டிருக்கும்போதுதான் அந்த நம்பரை நமக்குத் தெரிஞ்ச போலீஸ் நண்பர் மூலமா ட்ரேஸ் செஞ்சு ஆளைப் பிடிக்கலாமேன்னு ஒரு நினைப்பு. பிடிச்சு மரியாதை செலுத்த வேணாமா?.. ஏன்னா, நமக்கு தொலைபேசுன ஆளு ஒரு இந்தியன். இந்தியன் முன்னேறணும்ன்னு துடியாத் துடிக்கிற ஒரு இந்தியனுக்கு மாலை மரியாதை கூட செய்யலைன்னா அப்றம் எப்படி?.

மொபைலை எடுத்துப் பார்க்கறச்சே.. 'ஆஹா!!,... வட போச்சே..'ன்னு நொந்துட்டேன். கால் ஹிஸ்டரி ரொம்பி வழிஞ்சதால பேச்சு வாக்குல என்னையறியாமலேயே அத்தனையையும் க்ளியர் செஞ்சுருக்கேன்.. அடப்பாவி மக்கா!!! மறுபடியும் எங்க கிட்ட இல்லைன்னாலும் வேற யார் கிட்டயாவது மாட்டாமயா இருப்பே :-))

ஆகவே மக்களே.. உங்களைக் கோடீஸ்வரன் ஆக்கறதா சொல்லிக்கிட்டு எந்த ரூபத்துல வேண்ணாலும் பொறி வைக்கப்படலாம். மாட்டிக்காம எச்சரிக்கையா இருந்து தப்பிச்சுக்கோங்க.. ஆனா, அறியாமையாலும், பேராசையாலும் இப்படிப் பட்ட ஆட்கள் கிட்ட மாட்டிக்கிடற பாமரர்கள் கதிதான் பரிதாபத்துக்குரியது. 

Thursday, 2 September 2010

இந்த கொசுத்தொல்லை தாங்கலைங்க.. - பாகம் இரண்டு.

ரிங் பால், அதாவது schizont க்குள்ள இருக்கும் கருதான், அடுத்த தலைமுறை கிருமிகளை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்குது. இந்தக்கருக்கள் பல்கிப்பெருகி, merozoites ஆக வெளிவருகின்றன. இவற்றில், ஒரு பாதி மறுபடியும் ரத்தத்தில் கலந்து சிவப்பணுக்களை கபளீகரம் செய்ய ஆரம்பிக்குது. மீதிப்பாதி gametocytes ஆக உருமாறுது. ஏன் இப்படி இதுகள் உருமாறுதுன்னு.. இன்னும் யாராலயும் கண்டுபிடிக்க முடியல. இந்த gametocytes தான் கொசுவின் உடம்பில் புகுந்து, மறுபடியும் மலேரியா கிருமிகளா வெளிவருது.

ஒவ்வொரு வகை மலேரியா கிருமியின் gametocyte-ம் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். உதாரணமாக,
Plasmodium falciparum - நீள்வடிவமாக சாஸேஜ் போல இருக்கும்.
Plasmodium malaria - நீள்வட்ட வடிவமாக,
Plasmodium vivax - உருண்டையாக இருக்கும்.

இரத்தப்பரிசோதனையின் போது, நம்மை எந்த கிருமி தாக்கி இருக்கக்கூடும்ன்னு, இந்த வடிவத்தை வச்சுத்தான் சுமாரா கண்டுபிடிக்கிறாங்க.

gametocytes-ல் ரெண்டு வகைகள் இருக்குது. micro gametocytes,மற்றும் macto gametocytes. முதல் வகையில் உள்ள கரு பெரிதாகவும், பின்னதில் சிறிதாகவும் இருக்கும். இவற்றில் மைக்ரோ, ஆண் அணுவாகவும், மேக்ரோ பெண் அணுவாகவும் பங்கு வகிக்கின்றன.இதுவரைக்கும் மனுஷ உடம்பில் வளர்ந்த இவை இதுக்கு மேல வளரணும்ன்னா கட்டாயம், கொசுவின் உடம்புக்கு போயே ஆகணும். மலேரியாவால பாதிக்கப்பட்ட ஒருத்தரின் ரத்தத்தை கொசு உறிஞ்சும்போது இவை, கொசுவின் வயிற்றுக்குள்ளே போகின்றன.

கொசுவின் உடம்புக்குள்ளே போன இந்தக்கிருமிகளில், மைக்ரோவின் கரு,செல்பிரிதல் என்னும் நிகழ்ச்சி மூலம் ஆறு கருக்களா மாறுது. அவற்றுக்கு வாலும் முளைச்சு, நல்லா வளர்ந்தப்புறம் இவை gametocyteக்கு வெளியே வந்து பிரிஞ்சு போயிடுது.

மேக்ரோ முதிர்ந்து, கருவுறுதலுக்கு தயாராகுது. மைக்ரோவும், மேக்ரோவும் இணைஞ்சதால கரு உண்டாகி, வளருது. இது மொதல்ல உருண்டையாத்தான் இருக்கும். மெதுவா இது புழுவின் வடிவத்துக்கு மாறுது. இது கொசுவின் வயிற்றுப்பகுதியை துளைச்சிக்கிட்டு வெளியேறி, வயிற்றுக்கும்.. கொசுவின் மேல்தோலுக்கும் இடைப்பட்ட இடத்துல ரெஸ்ட் எடுக்குது. ரெஸ்ட் காலத்துல வேணுங்கிற ஊட்டச்சத்தை கொசுவிலிருந்தே எடுத்துக்குது. இதை 'oocyst'ன்னு சொல்லலாம்.

வளரும்போதே, கரு மறுபடியும் நிறைய தடவை பிரிஞ்சு, தனித்தனி உயிர்களாகுது.இவைதான் 'sporozoites'ன்னு சொல்லப்படற கிருமிகள். வளர்ச்சிப்பருவம் முடிஞ்சதும், 'oocyst' உடைஞ்சு, sporocytes கொசுவின் வயிற்றுப்பகுதி திரவத்துல கலக்குது. கொசுவோட உடம்புல புகுந்ததிலிருந்து, இந்த வளர்ச்சிப்பருவம் வர்றதுக்கு மொத்தம் 10 ,12 நாட்களாகும்.

கொசுவின் உடம்புல, ஒரு டூர் அடிச்சிட்டு.. கடைசியா இவை கொசுவின் உமிழ்நீர் சுரப்பிகளுக்கு வந்து சேருதுகள். பிறகென்ன.. இப்போ, கொசு யாரையாச்சும் கடிக்கும்போது, எச்சிலும்.. அதோட சேர்ந்து கிருமிகளும் உடம்புக்குள்ள போயிடும். மறுபடியும் ஆட்டம் ஆரம்பம்......

ஒருத்தருக்கு மலேரியா அட்டாக் ஆகியிருக்குன்னு சில அறிகுறிகளை வெச்சு தெரிஞ்சுக்கலாம். கடுமையான காய்ச்சல், நடுக்கம், குளிர்தல்,அளவுக்கு மீறிய வியர்வை, கடுமையான உடல்வலி, மற்றும் தசை வலி, வாந்தி, மற்றும் கடுமையான அசதி இதெல்லாம் இருக்கும். சிவப்பணுக்களை இதுகள் தாக்குவதால இரத்தத்தில் ப்ளேட்லட்ஸின் எண்ணிக்கை ரொம்பவே குறையும். சிலசமயம் ஆபத்தான நிலைக்கும் கொண்டுபோயிடும். மருந்து கொடுத்தும் சரியாகலைன்னா,.. அப்பேர்ப்பட்ட சந்தர்ப்பங்களில் ஆஸ்பத்திரியில் அட்மிட் செஞ்சு ரத்தம் ஏத்த வேண்டி வந்துடும். என் பையருக்கும் மலேரியா வந்தப்ப ப்ளேட்லட்ஸ் வெறும் 35,000 த்துக்கு போயிட்டது. நல்ல வேளையா மருந்து கொடுத்ததில் கூடுதலாக ஆரம்பிச்சதால, பயமில்லாம போச்சு. ஆனாலும் பக்க விளைவாக உடம்புவலி ரொம்ப நாள் இருந்தது.

இந்தக்கொசுக்களால மலேரியா மட்டுமல்ல.. யானைக்கால் வியாதி,டெங்கு போன்ற வியாதிகளும் பரவுது. கொசுக்களை நம்மால முடிந்தவரை கட்டுப்படுத்தலாம். 

விடியற்காலை, மற்றும் மாலைக்கருக்கல் நேரங்களில்தான் இவை ரொம்பவே உலாத்தும். இந்த நேரங்களில் வெளியே சுத்துறதை குறைச்சிக்கலாம்.

சுத்துனாலும், உடம்பு முழுக்க மூடியிருக்கிற மாதிரி உடை அணிஞ்சிக்கலாம். முக்கியமா சிறு குழந்தைகளுக்கு..

 நல்ல தரமான கொசுவிரட்டி, கொசுவலைகளை உபயோகிக்கலாம்.

இப்பல்லாம் கொசுவலை அடிச்ச ஜன்னல்கள் புழக்கத்துக்கு வந்துட்டது. அவற்றை உபயோகப்படுத்தி, வாசல் கதவுகளை சாயந்திரங்களில் இறுக்க மூடி வைக்கலாம்.

எல்லாத்தையும்விட முக்கியமானது, தண்ணீரை தேங்க விடக்கூடாது. அங்கேதான் கொசுப்பண்ணையே இருக்கும். வீடுகளிலோ, அக்கம்பக்கங்களிலோ உடைஞ்ச டப்பா, டயர், குண்டு குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறதை பார்த்தா அப்புறப்படுத்தலாம். சிலபேர் அதில் மண்ணெண்ணெய் விடுவாங்க. எதுக்குன்னா,.. கொசுக்கள் செத்துடுமாம்.

அப்படியும் கொசு கடிச்சால் என்ன ஆகும்.. இங்கே வாங்க..

இன்னும் விளக்கமா புரியணும்ன்னா,.. வீடியோவா பாருங்க.






Friday, 9 April 2010

வெட்ட வெட்ட துளிர்க்கும்.



இப்போ கொஞ்ச காலமா, உலகை உலுக்கிவரும் பிரச்சினைகளில் ஒன்று..சுற்றுப்புற சூழல் மாசடைதல், அதன் காரணமாக பூமி வெப்பமடைதல். இதற்கு நிரந்தரத்தீர்வாக மக்களுடைய விழிப்புணர்வோடு, நெடுங்காலத்தீர்வாக மரங்கள் நடவேண்டும் என்பதை, அடிக்கடி விவாதித்து வருவதோடு நிறுத்தி விடுகிறோம் என்றே தோன்றுகிறது. இருக்கும் மரங்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக,, வெட்டிச்சாய்த்து வருகிறோம்..ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு பதிலாக இரண்டு மரங்களையாவது நட்டு வைக்கவேண்டும். ஒரு சின்ன இலை வளர அந்த மரம் எவ்வளவு முயற்சி எடுத்திருக்கும்!!!

ஒரு வீட்டின் முன்..ஒன்றிரண்டு மரங்கள் இருந்தால், நிச்சயம் அந்த வீட்டில் மின்விசிறிகள், ஏர்கண்டிஷன் பயன்பாடு குறையும்.மின்கட்டணம் மிச்சமாகும்.குளுமையான வேப்பமரத்துக்காத்து யாருக்குத்தான் பிடிக்காது!!. மரங்கள் ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலமும்,கரியமில காத்தை உறிஞ்சிக்கொள்வதன் மூலமும் , சுற்றுப்புற சூழல் மாசுபடுதலை பெரிய அளவில் குறைக்கின்றன.மரங்களால் மழை பெய்யும், நீர்வளம் பெருகும்,நீர்வளம் பெருகினால் எல்லா வளங்களும் பெருகும்.

நாகர்கோவிலில் இருந்து திரு நெல்வேலி செல்லும் பாதையில், முப்பந்தல் என்று ஒரு இடம் வரும். பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் ஒன்று உண்டு அங்கே. அந்த இடத்தில்,காவல்கிணறுவிலக்கு வரை ரோட்டின் இரு பக்கங்களிலும் வளர்ந்திருக்கும் மரங்கள், ரோட்டில் வெய்யில் விழாதவாறு அடர்த்தியாக வளர்ந்திருக்கும்.வாகனங்கள் செல்லும்போது, பசுமைக்குகை ஒன்றில் செல்லும் உணர்வு ஏற்படும். குளுமையாக இருக்கும். இருசக்கரவாகனங்கள் செல்வதற்கே தடுமாறும் அளவு காற்று வீசும்.இப்போது அந்த இடம் தன்னுடைய முகத்தை தொலைத்துவிட்டது.. சின்ன செடிகள் கூட இல்லை. என்னுடைய அந்த பிரியமான சினேகிதியை, என்னால் மறக்கமுடியவில்லை.

இளைய தலைமுறை இப்போது கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு வருகிறது என்றே சொல்லவேண்டும். செடிகொடி வளர்ப்பதிலும், மரம் நட்டு பராமரிக்கவேண்டும் என்று முயற்சிப்பதிலும் இவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.ஏற்கனவே இருக்கும்
மரங்களை பாதுகாப்பதிலும் நம்மைவிட இவர்களே துடிப்புடன் இருக்கிறார்கள். மலைப்பிரதேசங்களில், மரங்களை வெட்டிச்சாய்த்து குடியிருப்புகள்,ரிசார்ட்ஸ் போன்றவற்றை கட்டுவதன் மூலம், அங்கே நிலத்தின் பிடிப்புத்தன்மை குறைந்து வருகிறது.சென்ற மழையின் போது, ஊட்டியில் நடந்த நிலச்சரிவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளுமையான பிரதேசங்கள் இப்போது வெப்பமடைந்து வருகின்றன.ஊருக்கே ஏசி போட்டமாதிரி இருந்த இடங்களில் இப்போது ஏசி வசதியுடன் தங்குமிடங்கள் இருக்கின்றன. ஒரு சின்ன விஷயம்... ஏசி, ஃப்ரிட்ஜ் போன்றவை, குளிரூட்டுவதற்காக வேலை செய்யும் போது வெளிவிடும் ஒருவித வாயு, சுற்றுப்புற சூழலை வெப்பமடையச்செய்வதில் பங்கு வகிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்புற சூழல் வெப்பமடைவதால், பருவ நிலை மாற்றங்கள், காலம்தப்பிய மழை,துருவப்பிரதேசங்களில் பனி உருகுவதால், கடற்கரையோர நகரங்களுக்கு ஆபத்து ஆகியவை ஏற்படுகின்றன. எங்க ஊரில்,. மழைக்காலத்துக்கு அப்புறம் ஒரு துளி கூட பெய்யாது. குளிரை முடித்து வைக்க சிறுதூறல், அப்புறம் அடுத்த சீசனுக்குதான் வருணபகவான் எட்டிப்பார்ப்பார். நேற்று, இடி,மின்னல், அப்புறம் லேசாக பூமி நனைதல் என்று விசிட் அடித்தார்.இன்னும் மேகமூட்டம் இருக்கிறது .வெக்கை கொஞ்சம் குறைந்தாலும், நேரங்கெட்ட நேரத்தில் வந்துவிட்டு,வரவேண்டியசமயத்தில் வராமல் ஏமாற்றிவிடுவாரோ என்று ஐயப்பாடு எழத்தான் செய்கிறது. நேற்றைய மழை இங்கே இருக்கிறது.

மழை பெய்யவில்லை, ஆகவே விவசாயம் செய்ய முடியவில்லை என்றஅங்கலாய்ப்பையும் நிறையவே கேட்டு வருகிறோம். விளை நிலங்களெல்லாம் ப்ளாட் போடப்பட்டு,வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. திடீர் நகர்கள் பல இரவோடிரவாக முளைத்து வருகின்றன. நீர்வளம் மிகுந்த நாஞ்சில் நாட்டிலும் இது பரவிவருவது பெருத்த அதிர்ச்சியாக இருக்கிறது. விளை நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டால்,உணவுக்கு... வீடுகளின் மொட்டைமாடிகளில் பயிரிடவேண்டிய நிலை ஏற்படும். நம்முடைய சந்ததியினருக்கு எத்தகைய உலகத்தை நாம் விட்டுச்செல்லப்போகிறோம்?..எல்லாச்செல்வங்களையும் சுரண்டியபின்னர், அவர்களுக்கென்று என்ன மீதம் விட்டு வைக்கப்போகிறோம்?..

மக்கள்தொகை பெருக்கத்தின் ஒரு தேவையாகவும், நகரமயமாக்கலின் விளைவாகவும் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. காற்று, நிலம், நீர் என்று எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் மாசுபடுத்த இந்த அரக்கனால் மட்டுமே முடியும். மும்பையில் அங்கங்கே தொழிற்பேட்டைகள்(இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டுகள்)உண்டு. அதில் ஒன்று தலோஜா. தொழிற்பேட்டையை தாண்டியவுடன், சும்மா பச்சைப்பசேலென்று வயல்வெளிகளும் மரங்களுமாய் இருக்கும். பயிர்பச்சைகளின் மணம் முகத்தில் காற்றுடன் வந்து மோதும்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் உணர்வு வரும்.இப்போது அந்தப்பகுதியில் முக்கால் பாகத்தை தொழிற்பேட்டை தன்னுடைய கரங்களால் அணைத்துக்கொண்டு விட்டது. இனி அங்கேயும் அமிலக்காற்றுதான் வீசும்.


விளை நிலம் சமப்படுத்தப்படுகிறது.

பக்கத்திலுள்ள நிலங்களில் மரங்களை எரித்து காலி செய்யும் வேலை நடக்கிறது.
இன்னும் சில மாதங்களில் அங்கே ஒரு தொழிற்சாலை, ware house,ஏதாவது கட்டப்படலாம்.

பாதி எரிந்த நிலையில் நிற்கும் இந்த மரத்தைப்பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?..

எனக்கு இதுதான் தோன்றியது......

விருட்சங்களாய்
நிமிர்ந்து நின்றவை;
விறகுகளாய் நிற்கின்றன.

இந்த இடத்தில்தானே இருந்தது?
எனக்கு நிழல் கொடுத்த,
அந்த
பெயர் தெரியா மரம்.

உபயோகமற்றுப் போய்விடவில்லையே?!!
உயிர் நீப்பதற்கு;

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கையில்,
ஏனிந்த அவசரப்பாடை என்று
புலம்பும் மனதை;
சூழ்ந்து கொள்கிறது
ஏதோ ஒரு வெறுமை.

உயிர் வாழும் இச்சை
ஒட்டிக்கொண்டிருக்கிறது எச்சமாய்...
வெந்தவிந்த உடம்பில்,
எங்கோ ஓரிடத்தில்..


மரங்களின் முக்கியத்துவத்தை நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு மீட்டெடுத்துச்செல்வோம். நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பார்கள், இப்போது கோடையும் வந்து விட்டது. இந்த சமயத்தில், நம்முடைய பதிவுகளில் இது பற்றிய இடுகை இட்டு, விழிப்புணர்வை பரவச்செய்வோம்.

இதை தொடர நான் அழைப்பது,







இன்னும் விருப்பமிருப்பவர்கள் தொடரலாம்.

Wednesday, 17 March 2010

நீர்வளத்தைக்காப்போம்.

ஒரு மனிதனின் வாழ்வாதாரம் தொடங்குவதே நீரிலிருந்துதான்.இயற்கை நமக்களித்த அற்புதமான வரங்களில் ஒன்று அது. நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கும், அறிவியல் முன்னேற்றத்துக்கும் விலையாக நாம் கொடுக்க நேர்ந்தது,வரங்களை... பெற்றுக்கொண்டது சாபங்களை. விளைவு..இன்று குடிதண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

ஒரு மனிதனின் உடம்பில் சுமார் 60% நீர்தான் நிரம்பியிருக்கிறது. மீதமுள்ள 40%தான் இன்னபிற அம்சங்களான தசை, நரம்புகள், எலும்புகள் எல்லாம்.ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!!. இந்த நீர்தான் நமது உடலின் வெப்பத்தை சம நிலையில் வைத்திருக்கிறது. வெய்யில் காலத்தில் நமது உடலின்வெப்ப நிலை உயரும்போது, வியர்வையாக வெளிப்பட்டு, வெப்பத்தை குறைக்கிறது. மேலும் ,..ரத்த ஓட்டம், சுவாசம்,ஜீரணம் போன்ற செயல்கள் தடையில்லாமல் நடக்க காரணம் இந்த நீர்தான்.

பூமியில் இருக்கும் நீர் வளத்தில் 97% கடல்நீராக இருக்கிறது. வெறும் 3%தான் நல்ல நீர். அதிலும் மூன்றில் இரண்டு பங்கு உயர்ந்த மலைப்பகுதிகளிலும்,துருவப்பகுதிகளிலும் உறைபனியாக உறைந்திருக்கிறது.மீதமுள்ளது நிலத்தடி நீராகவும், சிறிதளவு காற்றில் ஈரப்பதமாகவும் உள்ளது. நினைக்கும்போதே நாம் எதிர்கொள்ளவிருக்கும் நிலை புரிகிறதல்லவா...

அதனால்தான் அணைகளை கட்டுகிறோம். ஏரி, குளங்களை ஏற்படுத்தி தண்ணீரை சேமித்து வைக்கிறோம்.. அதிலும் பெரும்பாதி ஆவியாகி போய்விடுகிறது. விளைவு.. அண்டை மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நிலை. ஏனெனில் நாம் நீர்த்தேக்கங்களை பெருக்குகிறோமே தவிர, நீர் ஆதாரங்களை பெருக்குவதில்லை. முக்கியமாக மரம், மழைக்கு நண்பன் என்பதை தெரிந்து கொண்டும் மரங்களை அழிக்கிறோம்.நிலத்தடி நீரை சொட்டு விடாமல் மோட்டார் போட்டு உறிஞ்சி விடுகிறோமே தவிர, அதை பாதுகாப்பதில் அக்கறை காட்டுவதில்லை.

நமது முன்னோர்கள் புத்திசாலிகள். கோயில் தோறும் குளங்கள் ஏற்படுத்தி வைத்து நிலத்தடி நீர் வற்றிப்போகா வண்ணம் பாதுகாத்தார்கள். ஊருக்கொரு ஊருணி அமைத்து விவசாயத்துக்கான நீரை பகிர்ந்து கொண்டார்கள். நாம் அவற்றையெல்லாம் பிளாட் போட்டு, நிலத்துக்குள் சொட்டு நீர்கூட போகாவண்ணம் தடுத்து வைத்திருக்கிறோம்.ஆறுகளில் மணலை எடுப்பதால் அந்த சுற்று வட்டாரத்தில் நிச்சயமாக நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது, என்று தெரிந்தபின்னும் அதை கட்டாயமாக செய்கிறோம்.

தண்ணீர் தட்டுப்பாட்டுக்கான முக்கிய காரணமாக மக்கள் தொகை பெருக்கத்தை சொல்லலாம். கூடவே இலவச இணைப்பாக தொழிற்சாலைகள் பெருகுதல், வேலைவாய்ப்புக்காக நகரத்துக்கு இடம் பெயரும் மக்கள் புற நகர்களை உண்டாக்குதல், இவற்றை சொல்லலாம். அவற்றுக்கான தண்ணீர் சப்ளை அதிகரிக்கும்போது ஏற்கனவே அங்கு வசிப்பவர்களுக்கு நிச்சயமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கிராமங்களிலோ விதவிதமான மோட்டார்கள் இரவும் பகலும் பூமித்தாயின் ரத்தத்தை உறிஞ்சி எடுத்து விடுகின்றன.

இருக்கும் நீர் நிலைகளையும் வேண்டியமட்டும் பாழ்படுத்தி வைத்திருக்கிறோம். "தூரப்போடுறதை தண்ணியில போடு" என்று புது மொழி உண்டாக்கி வைத்திருக்கிறோம்.ஆறுகளில் வந்து சேரும் குப்பைகளும்,கழிவுகளும் தான் எத்தனை விதங்கள். அதிலும் தொழிற்சாலைக்கழிவுகளை அப்படியே தண்ணீரில் கலக்க விடுகின்றனர். சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுகளை விடக்கூடாது என்று சட்டமே இருந்தாலும் அதை நிறைய பேர் பின்பற்றுவதில்லை. இதனால் அந்த தண்ணீர் எதற்கும் பயன்படாமல் போகிறது. தமிழ் நாட்டில் நொய்யல் ஆற்றை ஒரு உதா'ரணமா' சொல்லலாம். கழிவு நீரின் வீரியம் பக்கத்து வயல்களுக்கும் பரவியிருப்பதால் அவைகளும் தரிசாக கிடக்கின்றன. இங்கே உல்ஹாஸ் என்றொரு நதி இருக்கிறது. ஆனால் சாக்கடையாக ஓடிக்கொண்டிருக்கிறது.பக்கத்திலுள்ள ஃபேக்டரி கழிவுகளெல்லாம் அதில்தான் கொட்டப்படுகின்றன. தொட்டுபொட்டு வைத்துக்கொள்ளலாம்போல் கரேலென்றுதான் ஓடுகிறது. கடந்து போக வேண்டுமென்றால் மூக்கு வேலை நிறுத்தம் செய்தால்தான் முடியும்.



உல்ஹாஸ் நதி???..

கடலையும் நாம்விட்டு வைப்பதில்லை. எல்லாக்கழிவுகளும் கடைசியில் அங்கேதான் போய் சேர்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு, எதிர்ப்பு வந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.மேலும் காற்றில் கலந்திருக்கும் நச்சுப்புகையிலிருக்கும் கெமிக்கல்கள் மழை பெய்யும் போது நீரில் கலந்து, கடைசியில் கடலை அடைகின்றன. சில இடங்களில் அமில மழை பெய்தது என்று கேள்விப்படுகிறோமே அது இப்படித்தான் நடக்கிறது.நம் முன்னோர் சிறுகச்சிறுக சேமித்து வைத்த செல்வமாகிய நிலத்தடி நீரை கண்மூடித்தனமாக செலவு செய்து கொண்டிருக்கிறோம்.இப்படியே போய்க்கொண்டிருந்தால் நம் சந்ததியினருக்கு தண்ணீர் என்பது மியூசியத்தில் இருக்கும் பொருளாகத்தான் இருக்கும். நாம் முயற்சி எடுத்தால் நிலைமையின் தீவிரத்தை கொஞ்சமாவது மாற்ற முடியும்.



தண்ணீர் சுழற்சி.

மழை நீர் சேகரிப்பு என்பது ஒரு அற்புதமான விஷயம். இயற்கை கொடுக்கும் பரிவை நாமும் கொஞ்சம் திருப்பிக்கொடுக்கலாம். பெய்யும் மழையை சிமிண்ட் திரையிட்டு தடுக்காமல் இருக்கலாம். ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்பு என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். நிச்சயமாக அதன் பிரதிபலன் விரைவிலேயே தெரிய வரும்.

இருக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.தாகத்தால் தவிக்கும் மனிதனுக்கு ஒரு தம்ளர் தண்ணீர் என்பது விலைமதிப்பில்லாத பொக்கிஷமாகத்தான் தோன்றும்.ஆகவே சில விஷயங்களில் கொஞ்சம் மெனக்கெட்டால் ஒரு சில லிட்டர்களையாவது மிச்சம் பிடிக்கலாம். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் அது நிச்சயம் பெருகும்.

  • காய்கறிகளை கழுவ குழாய் நீரை திறந்துவிடாமல், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் முக்கி கழுவலாம் .கழுவிய தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம்.

  • பாத்திரங்களையும் இதே போல கழுவலாம் . இரண்டு பாத்திரங்களில் தண்ணீர் எடுத்துக்கொண்டு முதல் பாத்திரத்திலுள்ள தண்ணீரைக்கொண்டு கழுவி, பின் இரண்டாவது பாத்திரத்தில் முக்கி கழுவலாம். இந்த முறை மும்பை மழையின் போது ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டின் போது எனக்கு பலன் கொடுத்தது. இது என் ஆச்சி சொல்லிக்கொடுத்தது.

  • வாகனங்களை கழுவ பக்கெட் தண்ணீர் போதும். எங்க பில்டிங்கில் ஒரு வாளித்தண்ணீரைக்கொண்டே, சுமார் நாலு காரை எங்க செக்யூரிட்டி துடைத்து விடுவார்.

  • நிறைய பேர் தன்னை அறியாமல் செய்யும் தப்பு இது. அதாவது பல் தேய்க்கும்போது தண்ணீரை திறந்து விடுவது. ஒரு மக்கில் தண்ணீர் எடுத்துக்கொண்டால் போதுமே. தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம்.

  • துணி துவைக்க வேண்டிய துணிகள் சேர்ந்தபின்னே மெஷினை இயக்கலாம். சிறு சிறு துணிகளாக இருந்தால் கைகளாலேயே துவைக்கலாம் இது இன்னும் தண்ணீரை மிச்சப்படுத்தும். துணி துவைத்த தண்ணீரை பெரிய டப்பில் பிடித்து வைத்து பாத்ரூமில் உபயோகப்படுத்தலாம்.
  • தனி வீடுகளாக இருந்தால், பாத்திரம் கழுவிய தண்ணீர் நேராக தோட்டத்துக்கு போகுமாறும் ஏற்பாடு செய்யலாம்..

  • வீடுகளில் பைப்பில் தண்ணீர் லீக்கேஜ் இருந்தால் உடனடியாக வாஷரை சரி செய்யலாம். அதுவரை ஒரு பக்கெட்டை வைத்து, தண்ணீர் வீணாக போகாதவாறு பார்த்துக்கொள்ளலாம்.

  • இப்போதெல்லாம் ஃப்ளஷ் டேங்க் half மற்றும் full வசதியுடன் வருகிறதாம். நம் தேவைக்கேற்றவாறு பாதி டேங்க் அல்லது முழு டேங்க் ஃப்ளஷ் ஆகிறதாம் . இதனால் தேவையில்லாமல் தண்ணீர் வேஸ்ட் ஆகாது.

  • செடிகளுக்கு காலை அல்லது மாலையில் மட்டும் தண்ணீர் ஊற்றலாம்.மதிய வேளையில் மண் லேசாக சுட ஆரம்பித்திருக்கும் அப்போது ஊற்றினால் நிறைய தண்ணீரை வாங்கும்.
  • மழைக்காலங்களில் வீடுகளில் மழை நீரை சேகரித்து உபயோகப்படுத்துவது நிறைய வீடுகளில் வழக்கம். கூரையை ஒட்டினாற்போல் ஒரு தகரம் அல்லது ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டை பதித்து, வழியும் நீரை ஒரு பெரிய பாத்திரத்தில் சேகரிப்பார்கள். இதை வென்னீர் போட மற்றும் வடிகட்டிய சுத்தமான நீராக இருந்தால் சமைக்கவும் பயன் படுத்தலாம்.
தொலை நோக்கு திட்டமாக வீட்டுக்கொரு மரம் வளர்க்கலாம். மரங்கள் நமக்கு தரும் பயன்கள் கணக்கில் அடங்காதவை.இதை உணர்ந்து கொள்ளாமல் வெட்டி வீழ்த்தி வருகிறோம். மரங்கள் செழித்தால் மழை செழிக்கும். மழை செழித்தால் தண்ணீர் வளமும் செழிக்கும். 'வரப்புயர' என்று அவ்வையார் பாட்டி வாழ்த்தியதை நாம் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வோம்.

இயற்கை நமக்கு இரண்டு சந்தர்ப்பங்களை தந்திருக்கிறது. ஒன்று அசுத்தங்களோடு கூடியது. இன்னொன்று தூய்மையானது. இரண்டில் நாம் எதை தேர்ந்தெடுக்கப்போகிறோம்?...

தொடர் பதிவுக்கு அழைத்த மாதேவிக்கு நன்றி.இப்போ நானும் யாரையாவது அழைக்கணுமே.

வாங்க அம்பிகா,

இன்னும் விருப்பமுள்ளவர்கள் எல்லோரும் எழுதலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails