Thursday 26 May 2022

சாரல் துளிகள்

வெய்யிலை சலித்து உள்ளே அனுப்புகிறது வலையடித்த ஜன்னல். ஒவ்வொரு கம்பியாய்த் தாவும் அணிற்பிள்ளை விரவிக்கொடுக்கிறது.

சுவரில் தலை சாய்த்து அமர்ந்திருப்பவளின் கன்னத்தில் படிகிறது ஜன்னல் கம்பிகளின் நிழல். இப்போது அவள் ஜன்னலில் சாய்ந்திருக்கிறாள். ஆம்.. அப்படித்தானிருக்க வேண்டும். பூக்களைத் தொடுத்துக் காய்ப்பேறிய விரல்களால், பச்சிளம் தளிரை வருடுகிறாள். அன்று ஒரு கிள்ளுப்பூ அதிகமாகவே சூட்டப்பெறுகிறது அந்த உச்சிக்குடுமி.

நேற்றிரவு முகவரி தெரிவித்த தவளையைத்தேடி, இன்று சுடுபகலில் தவ்வித்தவ்விப் போய்க்கொண்டிருக்கும் பாம்பின் மனசை அலைபாய வைக்கிறது எலிக்குஞ்சுகளின் கொண்டாட்டக் கூச்சல். போலச்செய்வதிலாவது ஒரு பாவனையும் முனைப்பும் இருக்கிறது, நகலெடுப்பதில் அதுவுமில்லை.

எழுப்பி எழுப்பி சலித்த இல்லத்தரசி பெருஞ்சத்தமெழ பாத்திரம் துலக்குகிறாள் திங்கட்கிழமை காலையில் தடதடவென எழுந்தோடுகின்றன பூனைக்குட்டிகளும் பிள்ளை குட்டிகளும் ஒரு கைப்பேசியில் அவனும் அவளும் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். யார் கண்டது? எதிர் முனையிலிருப்பது யாரோவொருவரின் முன்னாள் காதலாகவுமிருக்கலாம். தலைக்குல்லாவை இழுத்து வீசும் கைக்குழந்தையைத் தோளில் கிடத்தியபடி வெயிலில் நடந்து செல்லும் தாயின் கை குடையாய்ப்படிந்திருக்கிறது சேயின் தலை மேல். சலனமின்றி இருவரையும் அவசரமாய்க்கடக்கிறது, சிறுதுண்டு மேகம்.

வேரோடிப் படர்ந்து கொண்டிருக்கும் அருகின் வனத்தில் திணறிக்கொண்டிருக்கிறது தழைக்கவியலாத ஆலங்கன்று.

சளைக்காமல் நீந்தி உடற்பயிற்சி செய்தாலும் பெருத்துக்கொண்டே போகிறது தொப்பை குறையாத மீன்.

Tuesday 10 May 2022

கண்ணாச்சி என்கிற தாயக்கட்டை ஆச்சி - நூல் அறிமுகம்

குழந்தைகளாக இருக்கும்போது சீக்கிரம் வளர்ந்து விட மாட்டோமா என்று ஆசைப்படுவதும், வளர்ந்தபின் குழந்தைகளாகவே இருந்திருக்கக்கூடாதா!! என்று ஏங்குவதும் என்ன மாதிரியான மனநிலையைச்சாரும்??. தங்கமக்கா என நான் அன்போடு அழைக்கும் திருமதி. தங்கம் வள்ளிநாயகம் எழுதியுள்ள "கண்ணாச்சி என்கிற தாயக்கட்டை ஆச்சி" நூலின் பல பகுதிகளை வாசிக்கையில் வாசகருக்கு அப்படியான உணர்வே தோன்றும். நம் பால்ய நினைவுகள், செய்த சேட்டைகள், காக்காய்க்கடி தோழமைகள் என பலவும் மனக்கண் முன் நிழலாடி, புன்னகை பூக்க வைக்குமென்றால் அது மிகையல்ல.

இந்நூல் தங்கமக்காவின் முதல் நூலாம், ஆனால் வாசிக்கையில் அப்படித்தோன்றாவண்ணம் ஆற்றொழுக்காய் தவழ்ந்து செல்கிறது நடை. மொத்தம் 33 கட்டுரைகள் கொண்ட இந்நூலில் பெரும்பான்மையானவை நூலாசிரியரின் சொந்த ஊரான கழுகுமலையில் அவரது இளம்பிராயத்தில் நிகழ்பவையே. குழந்தைகளின் உலகத்தில் ஆச்சிகளுக்கென்று ஒரு தனியிடம் உண்டு. விளையாட்டுத்தோழமையாக, ஆலோசனை சொல்லும் மந்திரியாக, அப்பா அம்மாவின் கண்டிப்பிலிருந்து காக்கும் மெய்க்காப்பாளராக, சிறந்த கதை சொல்லியாக, உடல் மற்றும் மனதைப் பேணிப்பாதுகாக்கும் மருத்துவராக, எல்லாவற்றுக்கும் மேலாக நல்லாசானாக இருப்பவர்கள் அவர்களே. அவர்களுக்கு அடுத்தபடிதான் அப்பா அம்மாவும் மற்ற உறவுகளும்.

கிராமிய விளையாட்டுகளான, பல்லாங்குழி, தாயக்கட்டை போன்றவற்றில் கைதேர்ந்தவர்கள் இந்த ஆச்சிகள், அவர்களிடம் விளையாடி மிச்சம் கொண்டு போக முடியாது. ஒரே காய் நகர்த்தலில் நமது எல்லா ராஜதந்திரங்களையும் காலி செய்து விடுவர். தாயக்கட்டை ஆச்சிகள், பேரப்பிள்ளைகளோடு இருக்கும்போதுதான் அவர்கள் தங்கள் தனிமையை வெல்கின்றனர், அல்லாத பொழுதுகளில் தாத்தாவிற்கும் சேர்த்து அவர்களே பல்லாங்குழி விளையாட வேண்டிய அவலநிலைதான். பொதுவாக பெண்குழந்தைகளுக்கு அவர்களின் நெருக்கமான முதல் தோழியாக ஆச்சிதான் இருப்பார். ஆச்சிகள் ரத்த உறவாகவோ நெருங்கிய சொந்தமாகவோ கூட இருக்க வேண்டியதில்லை. பேரன் பேத்தி வயதுள்ள எல்லாக்குழந்தைகளுக்கும் அவர்கள் ஆச்சிதான், தன்னுடைய புதுப்புடவையை முதன்முதலில் பேத்திதான் உடுத்த வேண்டுமென்ற பாசக்காரிகள். வழிப்போக்கனுக்கும் வயிறார உணவிட்டு, அவனது கஷ்டங்களைக்கேட்டுக் கண்ணீர் வடிக்கும் தாய்மனசு கொண்டவர்கள்.

இந்நூலில் தங்கமக்கா தனது வாழ்வியல் அனுபவங்களை, அலங்காரப்பூச்சின்றி இயல்பான மொழியில் சொல்லிச்செல்கிறார். தான் சந்தித்த மனிதர்களைப்பற்றி அவர் குறிப்பிடும்போது அதில் சொல்லிக்கொள்ளும் எண்ணிக்கையில் பெண்களே இருக்கின்றனர். அவற்றில் நாணாவின் அம்மா, மடிசார் மாமி, பகவதி டீச்சர், பெரிய வீட்டு அம்மா போன்றோரை மறக்க முடியாது எனில், "பொம்மனாட்டிகளாப்பிறந்தா சகிச்சுண்டுதான் ஆகணும். நாம தேமேன்னு இருந்தா அவாளுக்கே சலிச்சுப்போய் விட்டுடுவா" என பெண்களுக்கான வாழ்க்கைப்பாடமெடுக்கும் வசந்தா என்றும் நினைவில் நிற்பார். இப்படி சகித்துக்கொண்டுதான் அம்மாக்களும் பாட்டிகளும் காலத்தை ஓட்டினர். வாழ்க்கை என்பது இப்படித்தான்’ என்ற பக்குவம் எல்லா மனிதர்களுக்குமே வந்து விடுகிறது. வசந்தா போன்றவர்களுக்குச் சீக்கிரமாக.. சிலருக்கு வாழ்வு முடியும்போது. எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்வதும், எல்லாவற்றையும் ஆச்சரியமாகவோ கடினமாகவோ பார்ப்பதுமான இரு வழிகளில் கடக்கிறது வாழ்வு.

நூலில் நெல்லை மண்ணுக்கேயுரிய நுணுக்கமான வார்த்தை விளையாட்டுகளும், குறும்புகளும் விரவிக்கிடந்தாலும் ஊடேஊடே கோவைத்தமிழும் கொஞ்சம் எட்டிப்பார்க்கிறது. கோவையின் பேருந்துப்பயணத்தைச் சுவாரஸ்யமாய்ச் சொல்வதைப்போலவே தான் முதன்முதலாய் கத்துக்குட்டித்தனமாய் செய்த சமையல் அப்பாவிற்கு அவரது அம்மையை எப்படி நினைவூட்டியது என்றும் அதே சுவாரஸ்யத்தோடு சொல்கிறார். பெண்குழந்தைகளை சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைச் செய்ய வைக்க வேண்டுமென்றால், "உன்னைய மாதிரி உண்டா?" என லேசாக உசுப்பேத்தி விட்டால் போதும், பம்பரமாகச் சுழல்வார்கள். ஆனால், இங்கே நூலாசிரியரின் அப்பா முகஸ்துதி செய்யாமல் மறைமுகமாகப் பாராட்டுவதிலிருந்தே அவர் உண்மையாகவே தன் அம்மையின் கைப்பக்குவத்தை மகளிடம் கண்டிருக்கிறார் என்பது விளங்குகிறது. அப்பாவிற்காகச் சமைத்தது கடமை, ஆனால் அதில் அன்பும் பாசமுமல்லவா கலந்திருக்கிறது. பின்னெப்படி ருசியில்லாமல் போகும்?

இரயில் பயணங்களில் பத்தியில் அவர் விவரித்திருந்த ஒவ்வொன்றையும் நான் மும்பை-நாகர்கோவில் பயணங்களின்போது நேரில் கண்டிருக்கிறேன். என்னவொன்று எண்பதுகளின் பிற்பகுதிகளில் தொலைதூரப் பயணங்களின்போது கூஜா கட்டுப்படியாகாது. ஐந்து லிட்டர் கேன்களை வாங்கி வைத்துக்கொண்டு, ரயில் நிற்கும் ஒவ்வொரு பெரிய நிலையங்களிலும் ஓடியோடி தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். மருந்து போல் அளவாகத்தான் குடிப்போம். மிளகாய்ப்பொடி தடவிய இட்லி, வாட்டிய வாழையிலை, தூக்குவாளிகளில் புளிச்சோறு, பொரித்த கூழ்வற்றல் போன்றவற்றை அப்படியே கண் முன் நிறுத்தி விடுகிறார் தங்கமக்கா. 

பலவீனமானவர்கள் போல் தோற்றமளிப்பவர்கள் உறுதி மிக்கவர்களாகவும் இருப்பதுண்டு. அப்பலவீனத்திலிருந்தே தங்களுக்கான பலத்தைத் திரட்டிக் கொள்கிறார்கள். மெலிந்த கிளையை இறுகப்பற்றியிருக்கும் தேன்சிட்டைப்போல். தந்தையின் இடத்திலிருந்து தம்பியையும் குடும்பத்தையும் பொறுப்புடன் கவனித்துக்கொள்ளும் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய அண்ணனைப்போல், சொல்லாத கிளிஜோசியத்துக்குக் காசு வாங்காமல் திருப்பிக்கொடுத்த ஜோசியரைப்போல், ஏழு நாட்கள் விடாமல் சைக்கிள் ஓட்டுபவரைப்போல். 

மொத்தத்தில் பார்க்கும்போது ஒரு சிறுமியின் பார்வையில் விரியும் வாழ்க்கைச்சித்திரங்களாக இருந்தாலும் தனித்தனியே சிறுகதைகளாக விரியக்கூடிய கூறுகள் கொண்டிருக்கின்றன. "ப்ரியங்கள் சுமந்த அத்தை" பத்தி மேலும் விரிந்து ஒரு பெண்ணின் உணர்வுகளையும் அவற்றின் சாராம்சங்களையும் பேசுகிறது. சிறு பெண்ணாக இருந்ததிலிருந்து இறுதிக்காலம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் அவளது மனம் படிப்படியாக முதிர்ந்து பக்குவப்படுவது சித்திரிக்கப்பட்டுள்ளது. அக்கால மற்றும் இக்காலப் பெண்களிடையே இருக்கும் வித்தியாசத்தை பெண்களும் பூக்களும் என்ற கட்டுரையில் அவர் விவரிக்கையில் நாமும் 'ஆமா.. ஆமா..' என்கிறோம்.

தான் சந்தித்த, தனது பாதையில் கடந்த எல்லா மனிதர்களையும் ரத்தமும் சதையுமாக நம்முன் உலவ விட்டிருக்கிறார் நூலாசிரியர். கடந்து வந்த பாதையெங்கும் பதிந்த நினைவுத்தடங்களில் தளும்பி நிற்கும் ப்ரியம் பொசிந்து ஆங்கோர் கடலாய் ஆர்ப்பரிக்கிறது நூலெங்கும்.

 நூலாசிரியர்: திருமதி. தங்கம் வள்ளிநாயகம்

பதிப்பகம்: கோதை பதிப்பகம்

விலை: ரூ. 210

Tuesday 3 May 2022

கரையெல்லாம் செண்பகப்பூ - புத்தக மதிப்புரை


சுஜாதா..

வயது வித்தியாசமில்லாமல் அத்தனை வாசகர்களையும் சம்பாதித்து வைத்திருக்கும் முத்திரை பதித்த எழுத்தாளர். வர்ணனைகள் நிரம்பிய வரிகளைக்கொண்ட நாவல்கள், சிறுகதைகளிடையே இவர் ஜனரஞ்சகமாய் எழுதிய கதைகள் ஒரு புதிய மலர்ச்சியை உண்டாக்கின. தனது வித்தியாசமான கற்பனை மற்றும் நடையால் பெருவாரியான வாசகர்களைக் கவர்ந்திழுத்தவர். இவர் தொட்டு எழுதாத துறைகளே கிடையாது எனினும் அறிவியலை சுவாரஸ்யமான கதைகள் மூலம் வெகுஜனத்துக்குக் கொண்டு சேர்த்ததில் இவரது பங்கு முக்கியமானது. சினிமாக்களில் கதை வசனமும் எழுதிய சுஜாதாவின் பல்வேறு நாவல்களில் ஒரு சில திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் "கரையெல்லாம் செண்பகப்பூ" என்ற நாவல். ஆனால், நாவல் அளவுக்கு திரைப்படம் அவ்வளவு சோபிக்கவில்லை.

கரையெல்லாம் செண்பகப்பூ சற்றே அமானுஷ்ய நிழல் கொண்ட த்ரில்லர் வகை நாவல். கிராமத்து ஜமீன் பங்களாவைக் கதைக்களமாகக்கொண்டது. வழக்கமாகக் கிராமங்களுக்கு டாக்டர்தான் வருவது வழக்கம், ஆனால், நாவலில் பட்டணத்து இளைஞனொருவன் நாட்டுப்பாடல் ஆராய்ச்சிக்காக வருகிறான், பங்களாவில் தங்குகிறான். அங்கே ரத்னாவதியால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் புதையல் , அதை எடுப்பதற்காக ஜமீன் வாரிசாக பொய் சொல்லி நுழையும் சினேகலதா, அவளது கூட்டாளியான பயாஸ்கோப், மற்றும் கிராமத்து ஜோடியான வள்ளி, மருதமுத்து, இவர்களைச்சுற்றி நிகழ்வதே கதை.

மடித்து வைத்திருக்கும் பொட்டலத்தைப் பிரிப்பது போன்று ஒவ்வொரு சம்பவமும் தன்னை வெளிக்காட்டிக்கொண்டு இறுதியாக பங்களாவில் இருக்கும் மர்மத்தை நோக்கி சுவாரஸ்யமாக நம்மை இட்டுச்செல்கிறது. ஒவ்வொரு முடிச்சாக அவிழ அவிழ நமது நெஞ்சத்துடிப்பு கூடிக்கொண்டே போகிறது. ஆரம்பத்தில் சித்திரிக்கப்படும் அமானுஷ்யம் கடைசியில் ஒன்றுமில்லாமல் போகும்போது, அப்படியெனில் அது யாராக இருக்கக்கூடுமென நாம் நகம் கடிக்க ஆரம்பித்து விடுகிரோம். இந்நாவல்  ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்ததாம். அக்கால கட்டத்தில் அடுத்த பகுதி வரும்வரை வாசகர்கள் எப்படித்தவித்திருப்பார்கள் என ஊகிக்க முடிகிறது. நாவலில் அதிகமும் வர்ணனைகள், அலங்காரமான வாக்கியங்கள் என எதுவும் கிடையாது. ஆனால், அவரது வாசகர்களுக்கென வரிகளில் நிறையவே 'தீனி' போட்டிருக்கிறார்.

நா.வானமாமலை ஐயாவின் "தமிழர் நாட்டுப்பாடல்கள்" புத்தகத்திலிருந்து பெரும்பான்மையான நாட்டுப்புறப்பாடல்கள் மேம்பட்டி கிராம மக்களின் வாய்மொழியாகவும் பெரியாத்தாவின் வாய்மொழியாகவும் இந்நாவலில் இடம்பெற்று குளிர்தென்றலாய் வருடுகின்றன. ஊர்த்திருவிழாவில் "பழையனூர் நீலி" கதையின் பல்வேறு வடிவங்களில் ஒன்று வில்லிசையில் இசைக்கப்படும். அப்பாடல் வரிகளை வாசிக்கும்போது நம் உடம்பும் பதறுகிறது. நடக்கவிருக்கும் அசம்பாவிதங்களுக்குக் கட்டியம் கூறுவது போன்று அமைந்துள்ளது அப்பகுதி.

பொதுவாக, கிராமங்கள் என்றாலே அங்குள்ள மக்கள் ரொம்பவே வெள்ளந்தியானவர்கள் என்ற பொதுச்சித்திரம் ஒன்றுண்டு. அப்படியில்லை, அங்கிருப்பவர்களும் நம்மைப்போன்ற மனிதர்களே, கிராமமோ நகரமோ மனித உணர்வுகள் எல்லா இடங்களிலும் ஒன்றே என்ற உண்மையைப் பளிச்செனச்சொல்லியிருக்கிறார். க்ரஷ், பொஸஸிவ்னெஸ், சபலம், வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளல், பணத்தாசை என மனித மனதின் எல்லா அழுக்குகளும் இங்கே சித்திரிக்கப்பட்டுள்ளன. "மனிதன் மகத்தான சல்லிப்பயல்" என்ற ஜி.நாகராஜனின் கூற்று நாவலில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், இறுதியில் வெள்ளியின் தடுமாற்றத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

நறுக்கென்ற வரிகளில் மின்னற்தெறித்தாற்போன்று எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் அத்தனை வாசகர்களையும் இன்றும் கவர்ந்திழுக்கும் என்றும் பசுமையான சித்திரம் என்றால் மிகையல்ல.

ஆசிரியர் : சுஜாதா

வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்.


கொலுசு போட்ட பூனை


ஒரு காலத்தில் நான்கு நண்பர்கள் கூட்டாக பஞ்சு வியாபாரம் செய்து வந்தனர். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பஞ்சை கோடவுனில் சேமித்து வைப்பது வழக்கம். அடைசலாக இருந்த கோடவுனுக்கு வந்த ஒரு எலி, "ஆஹா... ரொம்ப வசதியான இடமா இருக்கே, இங்கேயே செட்டிலாகி விடலாம்" என்று அங்கேயே தங்கி குட்டி போட்டுப் பல்கிப்பெருகலாயிற்று.

எலிகளின் பற்கள் மிக வேகமாக வளருமென்பதும், அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கூராக வைத்திருக்கவுமென அவை பொருட்களைக் கரம்பும் என்கிறது அறிவியல். ஒரு எலி என்றாலும் பரவாயில்லை, எலிக்கூட்டமே அல்லவா கோடவுனில் கிடக்கிறது. அவை துவம்சம் செய்ய ஆரம்பித்தன. பஞ்சு மூட்டைகளைக் கடித்து ஓட்டையாக்குவதும், பஞ்சைப் பறத்துவதும், கோடவுனிலிருக்கும் கணக்குப்புத்தகங்களைப் பஞ்சு பஞ்சாகக் கிழிப்பதுமாக அவற்றின் கொட்டம் அதிகரித்துக்கொண்டே போயிற்று.

எலித்தொல்லையைச் சமாளிக்கவென நான்கு பேரும் ஒரு பூனையை வளர்க்க ஆரம்பித்தார்கள். அதுவும், நாளொரு எலியும் பொழுதொரு கிண்ணம் பாலுமாக வேட்டையாட ஆரம்பித்தது. சில நாட்களிலேயே எலித்தொல்லை கட்டுக்குள் வந்துவிடவே நண்பர்கள் ரொம்பவே மகிழ்ச்சியடைந்தார்கள். பூனையின் மேல் சொல்லவொண்ணா பாசமுண்டாயிற்று. நான்கு பேரும் போட்டி போட்டுக்கொண்டு பாசத்தைப்பொழிந்தார்கள். ஆளுக்கொரு பொறுப்பாகப் பிரித்துக்கொண்டு அதற்கு வேண்டியதையெல்லாம் பார்த்துப்பார்த்துச் செய்தார்கள். ஒரு படி மேலேயே போய் பட்டுச்சொக்காய், கால்களுக்குக் கொலுசு, கழுத்துக்கு வைர அட்டிகை என அணிவித்து அழகு பார்த்தனர்.

இப்போதெல்லாம் எலிகள் பூனையைக் கண்டு நடுங்குவதில்லை. கொலுசு சத்தம் கேட்டதுமே, அவற்றின் மனதில் தந்தி அடித்து, அவையெல்லாம் ஓடிப்போய் பதுங்கி விடும். இப்படியிருக்க, கோடவுனில் புதிதாய் வேலைக்குச் சேர்ந்திருந்த இரவுக்காவலனுக்கோ ஒரு புதுப்பிரச்சினை தோன்றியிருந்தது. நடுஇரவில் வெள்ளையாய் ஒரு உருவம் ஜல் ஜல் என கொலுசோசை ஒலிக்க அங்குமிங்கும் அலைவதை அரசல்புரசலாய்க்கண்டு பயத்தில் நடுங்கினான். இரண்டு கைகளிலும் தாயத்துகள், நெற்றி நிறைய கோவில் பிரசாதங்கள் என பேயிடமிருந்து காத்துக்கொள்ள எல்லா விதமான ஆயுதங்களோடுதான் அவன் பணிக்கு வருவதே. அன்றும் அப்படியே நாற்காலியில் ஆழ்ந்த நித்திரையிலாழ்ந்து அவன் பணி செய்யுங்காலை, ஒரு உருவம் அவன் மேல் பாய்ந்தது. "யம்மே.." என வீறிட்டு எழுந்த வேகத்தில் அவன் கையிலிருந்த லத்தி அவ்வுருவத்தின் மேல் வேகமாக மோதவும் "ம்யாவ்" என்ற அலறலோடு தூரப்போய் விழுந்தது, நொண்டிக்கொண்டே நகர முயன்றது.

"அயயோ.. இது எஜமானர்கள் வளர்க்கற பூனையாச்சே. இதுவா இத்தனை நாள் என்னைப் பயமுறுத்துச்சு, நடக்க வேற சிரமப்படுதே" என்றபடி பூனையைக் கையிலெடுத்து கால்களைப் பரிசோதித்தான். வலது முன்னங்காலைத் தொடும்போது வலியால் சீறியபடி அவன் கையைத் தட்டிவிட முயன்றது. அவனுக்குத்தெரிந்த கை வைத்தியமாக அப்போதைக்கு கைக்குட்டையைக் கிழித்து காலில் கட்டுப்போட்டு விட்டான். மறுநாள் வந்த நண்பர்கள் நடந்ததைக் கேள்விப்பட்டு கோபமும் வருத்தமும் ஏற்பட்டாலும், பூனையின் அடிபட்ட காலுக்குச் சொந்தக்காரர் அதன் காலில் காயத்திருமேனி எண்ணெய்யைத் தடவி நீவி விட்டு கட்டுப்போட்டார். எண்ணெய் நன்கு ஊறட்டுமென கட்டின் மேலும் கொஞ்சம் ஊற்றி விட்டார்.

அந்தப்படியே இரண்டொரு நாள் போனது, பூனையை பெட்ரெஸ்டில் வைத்துப் பார்த்துக்கொண்டனர். படுத்த வாக்கிலேயே பக்கவாட்டில் நாக்கை மட்டும் நீட்டி சாப்பிடும் அளவுக்கு அது சோம்பேறியாய்ப் போய்விட்டது. சின்னாளிலேயே பழகப்பழகப் பாலும் புளித்து கசந்து படுக்கையும் நொந்தது அதற்கு. எலியின் சுவையை நாக்கு தேடியது. கனவில் கூட சுண்டெலிகளின் கொட்டம்தான். எலி ரோஸ்ட், சுண்டெலி 65, தந்தூரி பெருச்சாளி என நாக்கில் ஜொள் வழிய அது கனவிலாழ்ந்திருந்த காலை, தொட்டு விடும் தூரத்திலில் ஒரு எலி வந்து, "பிடி பார்க்கலாம்" என வம்புக்கிழுத்தது. கோபம் கொண்ட பூனை பாயவும், பூனையின் கேண்டில் லைட் டின்னருக்கென அங்கே அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தி சரிந்து விழவும் சரியாக இருந்தது. 

பக்கத்திலிருந்தாலே கப்பெனப் பற்றிக்கொள்ளும் பஞ்சும் நெருப்பும், கை கோர்த்துக்கொள்ளுமளவுக்கு நெருங்கினால் கேட்கவா வேண்டும். ஒரு நொடியில் கோடவுனே எரிந்து சாம்பலானது. செய்தியறிந்து ஓடி வந்த நண்பர்கள் குய்யோமுறையோ என வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதனர். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும், பண்டல் பண்டலாய் எரிந்த பஞ்சு திரும்ப வரவா செய்யும்?. சிசிடிவி மூலம் நடந்ததையெல்லாம் அறிந்து கொண்டவர்கள், கட்டுப்போட்ட காலுக்குச் சொந்தக்காரரின் மேல் வழக்குப்போட்டு, மிச்சம் மீதி இருந்த சொத்துகளும் பஞ்சாய்ப்பறந்து கொண்டிருக்கின்றன எனக்கேள்வி.

கெட்டும் பட்டணம் போ என்பார்கள், பட்டணம் போய் கெட்டுப்போன பூனையோ, "வனத்தில் மேய்ஞ்சாலும் இனத்தில் வந்து அடையணும்" என்ற தாயின் சொல்லைத்தட்டாத தனயனாக சொந்த ஊருக்கே போய் விட்டது. அங்கே, ஒரு நாய்க்குட்டிக்குப் பயந்து மரத்தில் தாவி ஏறும்போது காலில் ஏற்பட்டிருந்த சுளுக்கு சரியாகி விட்டதாம். கோடவுனில் மிச்சம் மீதி இருந்த எலிகளெல்லாம் பக்கத்துக் கிராமத்து வயல்வெளிகளில் விளைந்திருக்கும் ஆர்கானிக் விளைபொருட்களை நாடியிருப்பதாகத் தகவல்.

இதனால் அறியப்படும் நீதி என்னவெனில்: எலித்தொல்லை அதிகமானால், எலிப்பொறி வையுங்கள், இல்லாவிடில் pest controlஐ நாடுங்கள்.

Sunday 1 May 2022

செம்பருத்தி நூல் அறிமுக உரை - கல்கியில் வெளியானது.

எந்தவொரு செயலையுமே ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் என்று சொல்வதுண்டு.சுமாராகவோ நன்றாகவோ.. எப்படிச்செய்தாலும் சரி,.. அதற்கு ஒரு சின்னப்புன்னகையாகவோ மெல்லிய தலையாட்டலாகவோ கிடைக்கும் அங்கீகாரம் தரும் போதை அதீதமானது. இன்னும் நன்றாகச் செய்ய வேண்டுமென்ற உற்சாகம் நிச்சயமாக ஊற்றெடுக்கும். அதுவே மேலும் முன்னேறவும் தூண்டும். 

என்னதான் எதையும் எதிர்பார்க்காமல்தான் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டாலும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில், "இன்னிக்கு சமையல் நல்லாருக்கு.." என்று ரங்க்ஸ்கள் வாய்தவறிச் சொல்லி விட்டால் நாம் மகிழ்ந்துதானே போகிறோம். தினமும் சொல்லத்தான் நம் புத்திர சிகாமணிகள் இருக்கிறார்களே 🙂 இந்த ஒரு வார்த்தைக்காகவே அடுத்த வேளைச் சமையலை இன்னும் ருசியாகச் செய்து போடுகிறோமா இல்லையா? :-))

வீட்டில் கிடைக்கும் சின்ன அங்கீகாரமே நம்மை இவ்வளவு உற்சாகப் படுத்தும்போது, ஊரளவில் கிடைக்கும் அங்கீகாரம் நம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தாதா என்ன? அதுவும் பெரிய பத்திரிகைகள் நம்மையும் நம் எழுத்துகளையும் கவனிக்கிறார்கள், வாசிக்கிறார்கள், அங்கீகரிக்கிறார்கள் என்பதை அறிய வரும் அக்கணம் பொற்கணம்.

வாசிப்பு ஒரு மனிதனைப் பண்படுத்துகிறது, பண்பட்ட வாசிப்பு இன்னும் அவனை மேம்படுத்துகிறது. புத்தகங்கள் மீதான காதல் அதைத் தேடித்தேடி வாசிக்க வைக்கிறது. வாசித்ததோடு நின்று விடாமல் அவ்வினிய அனுபவத்தை நம் அணுக்கர்களோடு பகிரும் விழைவும் உண்டாகிறது. அவ்வினிய பயணத்தின் பொருட்டு ஃபேஸ்புக்கில் உருவானதே "வாசிப்போம்-தமிழ் இலக்கியம் வளர்ப்போம்" குழு. எத்தனையெத்தனை நூற்களைப்பற்றி அறிந்து கொள்ள இயலுகிறது!!

எழுத்தாளர்கள், ஆன்றோர் நிரம்பிய இக்குழுவில் இணைந்து நான் பகிர்ந்த நூல் அறிமுகங்களில் தி. ஜானகிராமன் எழுதிய "செம்பருத்தி"யின் அறிமுகம் பெரும் வரவேற்பைப்பெற்றதுடன், கல்கி ஆன்லைன் இதழிலும் வெளியாகியிருக்கிறது என்ற இனிய செய்தியை குழுவின் வழிநடத்துனர்களில் ஒருவரான திரு. மந்திரமூர்த்தி அவர்கள் மூலம் இன்று அறிந்தேன். குழுவினர் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி.

பிரசுரித்த கல்கி இதழின் எடிட்டர் திரு. ரமணன் அவர்களுக்கு இங்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். வாசிப்பின் ருசி அறிந்தவர்களுக்கும், தேடல் உள்ளவர்களுக்கும் "நூல் அறிமுகம்" பகுதியின் மூலம் நீங்கள் செய்து வரும் பணி அளப்பரியது.

கல்கியில் வெளியாகியிருக்கும் நூல் அறிமுகக்கட்டுரையை வாசிக்க இணைக்கப்பட்டிருக்கும் சுட்டியைச் சொடுக்குங்கள்.


எனது வலைப்பூவில் எழுதிய அறிமுக உரையை வாசிக்க 

LinkWithin

Related Posts with Thumbnails