Showing posts with label தமிழ்மணம் நட்சத்திரப்பதிவு. Show all posts
Showing posts with label தமிழ்மணம் நட்சத்திரப்பதிவு. Show all posts

Sunday, 7 August 2011

பாவ்பா.....ஜி வைபோகமே...

'பாவ்பாஜி' மும்பையின் பிரபலமான உணவுவகைகளில் ஒண்ணு. வட நாட்டுல எல்லோரையும் மரியாதையா அவங்க பேரோடயோ உறவைக்குறிக்கும் சொல்லோடயோ 'ஜி' என்ற விகுதியைச்சேர்த்தே கூப்பிடுவாங்க. 'இந்த' 'ஜி'..  அந்த 'ஜி' இல்லை :-)). பாஜின்னா கறின்னு அர்த்தம்.  'பாவ்'ன்னு சொல்லப்படும் பன்னை,..  காய்கறிகளைக்கொண்டு செஞ்ச கறியைத்தொட்டுக்கொண்டு சாப்பிடுவாங்க. கறியோட மேல, நறுக்கிய கொத்துமல்லியிலை,நறுக்கிய வெங்காயம், சுட்ட அல்லது வறுத்த அப்பளம் (நொறுக்கியது) போட்டுச்சாப்பிட்டா.... ஸ்ஸ்ஸ்!!!! அதுவும் இந்த மழைக்காலத்துல இதான் இப்ப ஹாட் ஸேல்.

வீடுகள்ல நைட் இதான் டிபன்னா,.. மத்தியானத்துலேர்ந்தே வயித்தைக்காலியா வெச்சுக்கற ஆட்களும் உண்டு :-) செய்யறதும் ஈஸிதான். என்ன.. வட நாட்டுல கிடைக்கிற 'பாவ்' மத்த இடங்கள்ல கிடைக்கறதில்லை. அதனாலென்ன.. ப்ரெட்டைத்தொட்டுக்கிட்டும், அந்தந்த இடங்கள்ல கிடைக்கற பன்னை துணைக்கு வெச்சுக்கிட்டும் சாப்டலாமே. நல்லாவே பொருந்தும்.

சுமாரான அளவுல ஒரு காலிஃப்ளவர்.. மழைக்காலத்துல எதுவுமே சுமாரா கிடைக்கலை,.. எல்லா காலிஃப்ளவருமே ஃப்ரெஷ்ஷா, ஜூப்பராதான் இருக்குது ன்னாலும் பரவால்லை. அளவு நடுத்தரமா இருந்தாக்கூட போதும் :-))

ஒரு கப் உரிச்ச பட்டாணி,.. உரிக்காததுதான் மார்க்கெட்டுல கிடைக்கும். கால்கிலோ வாங்கிட்டு வந்து உரிச்சு ஃப்ரிஜ்ஜுல வெச்சுக்கிட்டா, அடுத்ததடவை செய்யறதுக்கோ,.. இல்லைன்னா வேற க்ரேவிகள் செய்யறதுக்கோ உபயோகப்படுத்தலாமில்ல..

 நடுத்தர அளவுல ஒரு கேரட்டும் ஒருஉருளைக்கிழங்கும் ,.. தோலுரிச்சு வட்டவட்டமா வெட்டி வெச்சுக்கோங்க. அதெல்லாம் முடியாது!!.. என்னிஷ்டப்படி சின்னதாதான் வெட்டுவேன்னாலும்.... சரி. ஓ.கே; உங்க இஷ்டம்.

ஒரு மழையில நனையாத காய்.. அதான்,.. 'குடை'மிளகாயையும் நீள்வாக்குல நறுக்கி வெச்சுக்கோங்க. இப்ப,.. நறுக்கப்பட்ட எல்லாக்காய்களையும் ஒரு பாத்திரத்துல போட்டு அது மூழ்கறவரைக்கும் தண்ணி ஊத்தி தேவையான அளவு உப்புப்போட்டுக்கோங்க. அந்தப்பாத்திரத்தை குக்கர்ல வெச்சு, குழையறவரைக்கும் வேகவெச்சு எடுங்க. (உங்க வீட்டு குக்கர் எத்தனை விசிலடிக்கும்ன்னு எனக்கு தெரியாதே. எங்கூட்டு குக்கர்ல நாலுவிசில் அளவுக்கு வெச்செடுப்பேன் :-))

அப்படியே மூணு தக்காளிகள், மூணு வெங்காயங்கள், மூணு இஞ்ச் அளவுல இஞ்சித்துண்டுகள், மூணு+மூணு ஆறுபல் பூண்டுகள் எல்லாத்தையும் பொடியா நறுக்கி, நல்ல விழுதா அரைச்சு தனியா ஒரு கிண்ணத்துல வெச்சுக்கோங்க.

குக்கருக்கு இருக்கற ஹைப்ரஷர், லோ ப்ரஷரானதும் பாத்திரத்தை வெளியில் எடுத்து, காய்கறிகளை மத்துகொண்டு மசிச்செடுங்க.இல்லைன்னா, இப்பல்லாம் உருளைக்கிழங்கை மசிக்கறதுக்குன்னே ஒரு கருவி கிடைக்குது. அதாலயும் மசிச்சுக்கலாம். மொத்தத்துல நல்லா மசியணும்.. அவ்ளோதான். மிக்ஸில போடறதெல்லாம் வேணாம். போட்டா, காய்கறிகளெல்லாம் காணாமப்போயிடும். மசிச்செடுத்தா ஒன்னு ரெண்டு காய்கள் நான் இங்க இருக்கேன்னு காட்டிக்கொடுக்கும்.அதான் பாவ்பாஜிக்கே ருசி :-))

இப்ப அடுப்புல ஒரு வாணலியோ, அல்லது அடிபிடிக்காத பெரிய பாத்திரமோ வெச்சு, அதுல பத்துகிராம் வெண்ணெயும், ரெண்டு பெரிய ஸ்பூனளவு எண்ணெயுமா விட்டு சூடாக்குங்க. நல்லா சூடானதும், அதுல அரைச்செடுத்த தக்காளி+வெங்காயக்கலவையை விட்டு பச்சை வாசனை போறவரைக்கும் வதக்குங்க. அப்றம், ரெண்டு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்ப்பொடி, நாலு கரண்டி பாவ்பாஜி மசாலாப்பொடி, தேவையான அளவு உப்பு போட்டு வதக்குங்க. காஷ்மீரி மிளகாய்ப்பொடி நல்ல நிறத்தை மட்டுமே கொடுக்கும்.. காரத்தைக்கொடுக்காது. காஷ்மீரி மிளகாய்ப்பொடி கிடைக்கலைன்னா நம்மூரு மிளகாய்ப்பொடியை ஒரு டீஸ்பூன் மட்டும் போட்டு வதக்குங்க. இல்லைன்னா காரம் நாக்கை உரிச்செடுத்துடும் :-)

நல்ல வாசனை வந்ததும், மசிச்ச காய்கறிக்கலவையை அதுல ஊத்துங்க. கொஞ்சம் நீர்க்க,.. அதாவது பாயாசம் அளவுக்கு இருக்கணும். அதனால தேவைப்படற அளவுக்கு தண்ணீரை ஊத்தி, உப்பு சரிபார்த்துட்டு நல்லா கொதிக்கவையுங்க. கொதிக்கறவரைக்கும் சும்மா இருக்காம, ரெண்டு வெங்காயம், அரைகட்டு கொத்தமல்லி இதுகளை பொடியா நறுக்கி வெச்சுக்கிட்டா நலம்.. விருப்பமிருந்தா அப்பளம் சுட்டோ, பொரிச்சோ வெச்சுக்கலாம். முந்தியெல்லாம் ஹோட்டல்கள்ல அப்பளம் கண்டிப்பா பரிமாறப்படும். இப்பல்லாம் சில ஹோட்டல்கள்ல மட்டும்தான்...

பன்,பாவ், ப்ரெட் இதுல ஏதாவதொண்ணை வெண்ணெய் தடவி தோசைக்கல்லுல வாட்டி வெச்சுக்கிட்டா இன்னும் ருசியாயிருக்கும். உடல் நலத்துல கவனம் செலுத்தறவங்க வெண்ணை சாத்தாமலும் சாப்பிடலாம்..

எல்லைக்கோடுகள் பிரிக்கப்பட்ட ஒரு தட்டில்,(ஹோட்டல்கள்ல இட்லி பரிமாறுவாங்களே.. அதே ரகம்)பெரியபாகத்தில் பாஜியை ஊத்தி, பக்கத்துல இருக்கற சின்னச்சின்ன இடங்கள்ல பாவ், வெங்காயமல்லி கலவை, அப்பளம், சின்னத்துண்டு எலுமிச்சைன்னு பரிமாறணும்ங்கறது மரபு. அப்றம் சாப்பிடுறவங்க பாஜியின் தலையில் வெங்காயமல்லி அட்சதையை தூவி, அப்பளம் நொறுக்கி நலங்கிட்டு, எலுமிச்சைச்சாறு அபிஷேகம் செய்து பின் அதெல்லாத்தையும் கலந்து பின்நவீனத்துவ உணவாக்கி சாப்பிடணும்கறது சம்பிரதாயம்.. ஒரு ஸ்பூனையும் பக்கத்துல வெச்சுட்டா, பாஜியை மட்டும் வயித்துக்குள்ள ஏற்றுமதி செய்யவும் சுலபமாயிருக்கும் :-))
(படங்கள் உபயம் -  இணையம்)

டிஸ்கி: இந்த நட்சத்திர வாரம் முழுக்க பொறுமையா என்னோட இடுகைகளை படிச்சு, பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தின உள்ளங்களுக்கு ஒரு சிறு விருந்தளிச்சு நன்றி சொல்லிக்கிறேன்.



Saturday, 6 August 2011

இளைய தலைமுறைக்கொரு சல்யூட்!!!...

( நன்றி- இணையம்).
1. 'டிர்ர்ர்ர்ரிங்....' வழக்கம்போல பள்ளிக்கூடம் முடிஞ்சதுக்கான கடைசி மணியடிச்சதும்,'ஹே...' என்ற கூப்பாடோடு வகுப்பறைக்கூண்டிலிருந்து விடுபட்ட சீருடைப்பட்டாம்பூச்சிகள் பறந்து வந்தன. சிலபேரைக்கூட்டிச்செல்ல அம்மாக்கள், தாத்தாக்கள், பாட்டிகள் வந்திருந்தாங்க. இன்னும் சிலபேர் இரண்டு,மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்காக காத்திருந்தாங்க.

பெரிய சைஸ் நான்கு சக்கரவாகனம்.. அதாங்க ஸ்கூல் பஸ்ஸில் ஏறி உக்காந்த குழந்தைகள், வகுப்பறையில் பாடம் நடத்தும்போது குடிக்க அனுமதிக்கப்படாமல் மீந்துபோன தண்ணீரை தாகமெடுத்த தொண்டையில் சரித்துக்கொண்டனர். அப்படியும் தண்ணீர் மீதமிருந்தது அவங்களுக்கு விளையாட்டுப்பொருளாவதற்காக.

'ச்சளப்....' ஒருத்தனின் உடையை நனைத்த புண்ணியத்தை கொட்டிக்கொண்டுவிட்டு சரேல்ன்னு புத்தகமூட்டையை சரணடைஞ்சது  ஒருத்தனின் தண்ணீர் பாட்டில். கோபப்படுறதுக்கு பதிலா, சிரிச்சுக்கிட்டே அவனுக்கு அபிசேகம் செய்தான் ஏற்கனவே நனைஞ்சவன்.

'பஸ்ஸுக்குள்ள தண்ணீரை சிந்தாதீங்கடா..' பசங்களுக்கும்,டிரைவருக்கும் துணையாக வரும் பெரியண்ணனின் குரல்,.. கிளம்புவதற்கு அடையாளமாக டிரைவர் கொடுத்த ஹாரனின் ஒலியோடு தேய்ஞ்சு மறைஞ்சது. பஸ்ஸின் ஜன்னலுக்கு வெளியே தலைகீழாக கவிழ்க்கப்பட்ட பாட்டிலிலிருந்து அருவியெனக்கிளம்பிய தண்ணீர், எதிர்காத்தால சிதறி,... பக்கத்துல வாகனங்கள்ல வந்துக்கிட்டிருந்தவங்க மேல பூஞ்சாரலைப்பொழிஞ்சதை ரசிச்சான் பாட்டிலுக்கு சொந்தக்காரன்... அவங்க திட்டுறதையும் பொருட்படுத்தாம..

கொளுத்துற கோடையில மக்களும்,மாக்களும்,மரஞ்செடி கொடிகளும் தண்ணீர் கிடைக்காம அவஸ்தைப்படறப்ப இப்படி தன் கண் முன்னால் தண்ணீர் வீணாவதை சகிக்காத,.. அதே பள்ளியைச்சேர்ந்த 'கிமயா' என்ற சிறுமிக்கு மட்டும்.. 'ஏதாவது செய்யணும் பாஸ்..'ன்னு தோணியது. பள்ளிக்கூட நிர்வாகத்தோட ஒத்துழைப்போட, வாசல்லயே ஒரு பிளாஸ்டிக் தொட்டிய வெச்சு, பசங்களை மிச்சம்மீதி இருக்கற தண்ணீரை அதுல கொட்டும்படி கேட்டுக்கிட்டா.. அப்படி சேகரிக்கப்பட்ட தண்ணீர் பள்ளிக்கூட வளாகத்துல இருக்கற தாவரங்களுக்கு ஊற்றப்பட்டது. இதனால், பள்ளிக்கூடத்துல இருக்கற தண்ணீர்த்தொட்டியில் நிறைய தண்ணீர் மிச்சப்பட்டது... சிறுதுளி பெருவெள்ளமென....

2. பாய்ந்தோடி வந்த லோக்கல் ரயில் நிக்கறதுக்கு முன்னாடியே, அடிச்சுப்பிடிச்சு ஏறின இரண்டு கல்லூரி மாணவிகளை எரிப்பது போல் பார்த்தார், ஏற்கனவே அங்கே நின்னுக்கிட்டிருந்த பெண்மணி ஒருவர். ஏறும்போது அவங்க காலை லேசா மிதிச்சுட்டாங்களாம். அதான் அம்மணிக்கு கோவம்.. 'அதான் மாத்திமாத்தி ஸாரி சொல்லிட்டோமில்ல.. இன்னும் எத்தன தடவைதான் ஸாரி கேக்குறது. லோக்கல்ல இப்படித்தான் கூட்டமிருக்கும்ன்னு உங்களுக்கு தெரியாதா?.. இடிபடாம வரணும்ன்னா,. உங்களுக்குன்னு ஸ்பெஷல் ரயில் விடச்சொல்லுங்க.." மாணவியொருத்தி பொரிஞ்சதும்தான் அம்மணியின் பார்வைக்கனல் குறைஞ்சது... ஆனா குறையலை.

பக்கத்துல இருந்தவங்களோட பார்வைகளெல்லாம், 'இந்தக்காலத்து பசங்களுக்கு பொறுமையே இல்லை.. மரியாதை தெரியலை'ன்னு சொல்றமாதிரியே இருந்தது. அப்பப்பார்த்து,...'டமுக்கு.. டம்.. டமுக்கு.. டம்..'ன்னு ஒரு ஏனோதானோங்கற ஒரு மேளச்சத்தம். அஞ்சாறு வயசிருக்கும் ரெண்டு குழந்தைங்க... பையனும் பொண்ணுமா. ரெண்டுத்துக்கும் ஒண்ணு இல்லைன்னா.. ஒண்ணரை வயசு வித்தியாசமிருந்தாலே அதிகம்.

ரயில்ல வாசக்கதவுக்கு நேரா இருக்கற அகலமான இடத்துல, பயணிகள் கொஞ்சம் இடைவெளிவிட்டு நின்னுக்கிட்டிருந்த அந்த குறுகலான இடத்துல, பையன் வாகா குத்தவெச்சு உக்காந்துக்கிட்டு, மேளமடிக்க ஆரம்பிச்சான். பொண்ணு, ஒரு இரும்புக்கம்பி வளையத்தை வெச்சுக்கிட்டு, வித்தை காமிக்க ஆரம்பிச்சா.. சட்னு வளையத்தை பக்கத்துல வெச்சுட்டு, அப்படியே குட்டிக்கரணமடிச்சா பாருங்க.. எங்கே ரயிலுக்கு வெளியே விழுந்துடுவாளோன்னு ஒரு கணம் பதட்டமாயிடுச்சு.

எழுந்துவந்த சிறுமி தட்டேந்தி வசூலுக்கு வர, ரெண்டும், அஞ்சுமா காசுகள் கலகலத்துச்சு அந்தத்தட்டுல. டக்ன்னு அந்த கல்லூரி மாணவிகள், அந்தப்பசங்களை கிட்டே கூப்பிட்டு இருபது ரூபாய்களை எடுத்து நீட்டினாங்க. வாங்கிக்கிட்டு, மறுபடியும் அந்தப்பெண் குட்டிக்கரணமடிக்க தயாராக, அவ கையைப்பிடிச்சு,.. 'இங்கே பாரு.. இங்க இருக்கற எல்லோருடைய சார்பாவும்தான் அந்தக்காசைக்கொடுத்தேன். இந்தமாதிரி விபரீதமான வித்தையெல்லாம் செய்யாதே.. ஓடு..'ன்னாங்க. அடுத்த ஸ்டேஷன் வரவும் இறக்கியும் விட்டுட்டாங்க. இப்ப அவங்களை மத்த சக பயணிகள் பார்த்த பார்வையில் நிச்சயமா பெருமிதம் இருந்திச்சு. மனிதம் இன்னும் சாகலைப்பா..

'இந்தக்காலத்துப்பசங்கல்லாம் பெரியவங்களை எங்கேங்க மதிக்கறாங்க, மரியாதை கொடுக்கறாங்க ?..' அப்படீன்னு கேக்கறது எந்தக்காலத்துலயுமே வழக்கமாத்தான் இருக்குது. என்ன ஒண்ணு.. அந்தக்காலத்துல குழந்தைகளாயிருந்து இந்தக்காலத்து பெரியவங்களானவங்க கூட இதைச்சொல்லி புலம்பறதுதான் வேடிக்கை.

இந்தக்காலத்து குழந்தைகளுக்கு இன்னும் என்னென்ன தெரியாதுன்னு கேட்டா, ஒரு பெரிய லிஸ்டே வெச்சிருப்பாங்க. சமூக விழிப்புணர்வு குறைஞ்சுக்கிட்டு வருது, சுற்றுப்புறத்தை சுத்தமா வெச்சுக்கத்தெரியலை, மனிதாபிமான உணர்வும் குறைஞ்சுக்கிட்டே வருது, விருந்தோம்பல் போன்ற நல்ல பழக்கங்களும் தெரியலை. கத்துக்கொடுத்தாலும் கத்துக்கற பொறுமை இல்லை, அப்படி இப்படின்னு அடுக்கிடுவாங்க.

இந்தக்குற்றச்சாட்டுகளெல்லாம் ஓரளவு மட்டுமே உண்மையாயிருந்தாலும், அதுல பெத்தவங்களோட பங்களிப்பும் இல்லாமலில்லை. சின்ன வயசுலயே அவங்களுக்கு நல்ல பழக்கங்களை கத்துக்கொடுக்காம வளர்ந்தப்புறம் அதையெல்லாம் அவங்ககிட்ட எதிர்பார்க்குறோம். குழந்தைகளை குழந்தைகளா வளரவிடாம, நம்மோட கல்விச்சூழலும் அவங்களை அழுத்தி, குழந்தைப்பருவத்தை இனிமையா கழிக்கவிடாம செய்யுது. ஆனா, நம்ம தலைமுறையிலாவது இதையெல்லாம் உணர்ந்து சரி செய்ய முயற்சிக்கிறோம். அதன் பலனா வருங்காலத்தலைமுறையும் கொஞ்சம் கொஞ்சமா மீண்டுவருதுன்னே சொல்லலாம்.

இங்கே சொன்னது ஒருசில உதாரணங்கள்தான்.. இதேமாதிரி வெளிச்சத்துக்கு வராத இன்னும் எத்தனையோ வாலிப,வாலிபிகள் இருக்கக்கூடும். அந்த இளைய தலைமுறைக்கெல்லாம் ஒரு ராயல் சல்யூட்...

லொள்ளுடன் ஒரு அட்வைஸ் :-))).

அந்தக்காட்டுல சிங்கம்,புலி, சிறுத்தை முதலான மாமிச பட்சிணிகளும் மான் முயல், எலி, யானை போன்ற தாவரபட்சிணிகளும், ரெண்டையும் கலந்தடிச்சு சாப்டுற,.. வயித்துக்கு வஞ்சகம் செய்யாத பிராணிகளும், எக்கச்சக்கமா வசிச்சு வந்தன. மனிதர்களோட பார்வை இன்னும் படாத காடு.. ஆகவே எக்கச்சக்கமான மரங்கள் ரொம்பவே அடர்ந்து படர்ந்து சூரியக்கதிர்களே தரையில் விழாதபடிக்கு எக்கச்சக்க நிழல் கொடுத்து வந்தன. மிருகங்களும் வேட்டையாடப்படற பயமில்லாம சுதந்திரமா சுத்திக்கிட்டு வந்தன..

அங்க இருக்கற மிருகங்களோட ஒர்ரே கெட்ட பழக்கம் போதைப்பழக்கம்தான் திட திரவ வாயு நிலைகள்ல இருக்கற எல்லா பொருட்களையும் டேஸ்ட் செய்யாம விடறதில்லை. சாயங்காலமானா,..  பகலெல்லாம் வேட்டையாடின அலுப்புதீர, "வென்னீர் போட்டு வைய்யி.. இன்னிக்கி பிடிச்சுட்டு வந்ததை நெறைய வெண்ணெய் போட்டு பொன்முறுவலா வறுத்து வைய்யி"ன்னு மனைவியை நோக்கி உத்தரவு போட்டுட்டு,.. கடையை நோக்கி நடையைக்கட்டிடுவாங்க.. மனைவிகளெல்லாம் அவங்களைத்திருத்தறதுக்காக அறிவுரை சொல்லிச்சொல்லி அலுத்துப்போயிட்டாங்க.

(பய புள்ளைகளை கஷ்டப்பட்டு இழுத்துக்கொண்டாந்திருக்கேன்.. நீங்களாவது நல்லபுத்தி சொல்லுங்க :-))

ஒரு சாயங்காலம் நேரத்துல,.. கடைக்கு போயிட்டு தம்மடிச்சுட்டு வந்தது பத்தாதுன்னு பார்சல் வாங்கியாந்து, 'உற்சாகபானம்' அருந்திக்கிட்டிருந்த கரடிகிட்ட ஒரு எலி ஓடிவந்தது..

"அண்ணே.. அண்ணே.. வேணாம்ன்னே இந்தப்பழக்கம்.. இந்த போதைப்பழக்கத்தால உங்க குடும்பத்தை கவனிக்க மறந்துடறீங்களே.. இதெல்லாம் நல்லால்லை. இந்தக்காட்டைப்பாருங்க.. இயற்கை எவ்வளவு அழகா தாண்டவமாடுது.. இதையெல்லாம் பார்த்து ரசிக்காம குடியே கடி.. ச்சே!!.. கதின்னு கிடக்கறீங்களே. உங்களுக்கு ஏதாவதொண்ணுன்னா உங்க புள்ளைகுட்டிகளெல்லாம் நடு ரோட்டில் நிக்குமே.. அதுங்க பாவமில்லையா. அதுங்க முகத்துக்காகவாவது இந்தப்பழக்கத்தை விட்டுடுங்க"ன்னு கெஞ்சிக்கூத்தாடுச்சு.

எலியைக்கண்டதும், மொதல்ல எளக்காரமா நினைச்ச கரடிக்கு தன்னோட குட்டிகளைப்பத்தி எலி சொன்னதும், அதுங்க எதிர்காலத்தை நினைச்சு பயம் வந்துடுச்சு.. "ஆத்தாடீ.. எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா,.. என் குடும்பம் நடுக்காட்லேயில்ல நிக்கும்.. பரவால்லை.. பய மூளைக்காரந்தான்.. இந்த சின்னவயசுலயே இவ்ளோ ஞானமா!!!!.. இப்படி தன்மையா மென்மையா புரியவைச்சிருந்தா மனைவிங்க பேச்சை எப்பவோ கேட்டிருந்துருப்பேனே." ன்னு ஒரேயடியா ஆச்சரியப்பட்டுது.
(சத்தியம் பண்ற நேரத்துல இந்த எலித்தம்பி எங்க போனான்னு தெரியலியே.. )
"சரி எலித்தம்பி, நீ சொல்றதும் சரிதான்.." என்ற கரடி,.. 'நாளை முதல் குடிக்கமாட்டேன்.. சத்தியமடி தங்கம்..'என்று எலியின் தலையிலடிச்சு சத்தியம் செய்ய ஓரடி முன்னே வைக்க, தன் உயிரை காப்பாத்திக்க எலி ஈரடி பின்னே வைச்சது.. எலி மட்டும் அப்படியே நின்னுட்டிருந்துருந்தா இந்தக்கதை கிடைச்சுருக்குமா :-)))

"சரி வா.. யாம் பெற்ற அறுவையுரை பெறுக இவ்வனம்.. அப்படியே காலாற நடந்து இந்தக்காட்டையே போதையின் பிடியிலிருந்து விடுவிக்கலாம்" அப்டீன்னுட்டு எலியும் கரடியும் காட்டை சுத்திப்பார்க்க புறப்பட்டுதுங்க..

போற வழியில ஒரு குதிரை, ஏதோ ஒரு போதைப்பொருளை உறிஞ்ச படாதபாடு பட்டுட்டிருந்தது.. அதுகிட்டயும் இவங்க ரெண்டுபேரும் சேர்ந்து மூளைச்சலவை செய்ய, அதுவும் மனசு மாறி அவங்க கூட புறப்பட்டுச்சு. மூணுபேருமா காட்டுவலம் வர்றாங்க.. போறவழியில பார்க்க கிடைக்கிற மிருகங்களையெல்லாம் இப்படி ஒவ்வொண்ணா கூட்டு சேர்த்துக்கிட்டு வந்துக்கிட்டிருக்காங்க.
பாதையில ஒரு புலி, கையில் மதுக்கிண்ணத்தை ஏந்திக்கொண்டு பாட்டுப்பாடி ஆடிக்கிட்டிருந்தது. நெறைய பேரு தன்னோட வீட்டை நோக்கி வர்றதைப்பார்த்தது,.." என்ன என்ன..பிரச்சினை?.. எதுவானாலும் இப்ப தீர்ப்பு சொல்லமுடியாது"ன்னுது.

"ஏண்ணே.."ன்னு பரிதாபமா கேட்டன மிருகங்களெல்லாம். காட்டுராஜா சிங்கம்,.. காட்டு மந்திரியா புலியை நியமிச்சுட்டு வெளி நாட்டுக்கு சுற்றுப்பயணம் போனதுலேர்ந்து பதினெட்டுப்பட்டிக்கும் தீர்ப்பு சொல்ற உரிமை புலிகிட்டதான் இருந்துவந்தது. அதனாலயே அதுக்கு பவுசும் ஏறிப்போச்சு :-)


'ஆலமரம் சாஞ்சிருச்சே.. அதனால அதுக்கடியில மாட்டிக்கிட்ட,.. அரைக்காப்படி சொம்பும் நெளிஞ்சிருச்சே.. சொம்பு வாங்கியாரப்போயிருக்கற ஆளு வந்தப்புறம்தான் தீர்ப்பெல்லாம் சொல்லமுடியும். அதனால இப்ப வழக்கு என்னான்னு மட்டும் சொல்லிட்டுப்போங்க"ன்னுது புலி..

"வழக்கெல்லாம் ஒண்ணுமில்ல மதி மந்திரியாரே. எங்களையெல்லாம ஆளற பொறுப்புல இருக்கற அரசாங்கமே.. அதாவது மதி மந்திரியாரே மதுவருந்தலாமா..  அதுவும் எங்களை விட்டுட்டு தனியா அருந்தலாமா??!!.... போதைப்பொருட்களை உபயோகிக்கிறது தப்பில்லையா.. இதெல்லாம் எலித்தம்பி சொன்னதும்தான் எங்களுக்கு நல்லா புரிஞ்சது..  நீங்களும் புரிஞ்சுக்கோங்க. வேண்டாம்ண்ணே!!.. நாளைமுதல் மட்டுமல்ல இன்று முதலே அதை தூக்கியெறிங்க.. இந்தபிரச்சாரத்தைத்தான் நாங்க எல்லோரும் காடுமுழுக்க பரப்பிட்டு ஜமா சேர்த்துட்டு வரோம்"ன்னு யானை சொல்லிமுடிக்க.......'பளார்'ன்னு ஒரு அறைவிழுந்த சத்தம்.


யாரு அடிவாங்கினாங்கன்னு சுத்துமுத்தும் பார்த்தா,.. எலி கன்னத்தை தடவிவிட்டுக்கிட்டு நிக்குது.

"அட ஏண்ணே!!.. நல்ல விஷயத்தைத்தானே சொல்லிருக்கான். ஒரு சின்னப்பையனைப்போயி அடிச்சிட்டீங்களே"ன்னு அங்கலாய்த்தது கரடி.
புலி பதிலளிச்சது,.. "யாரு சின்னப்பையன்?.... இவனா!!!!.. நேத்தும் இப்படித்தான் எக்கச்சக்கமான போதையில.. இதே டயலாக்கை பேசிக்கிட்டு,... என்னைய பக்கத்து ஊரு காடுமுழுக்க மூணுமணி நேரம் அவங்கூட சுத்த விட்டுட்டான்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்" 

இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் மது மற்றும் மற்ற போதைப்பொருட்கள், வீட்டுக்கும் நாட்டுக்கும் மட்டுமல்ல... காட்டுக்கும் கேடுதான் :-)


டிஸ்கி: இதை நாலுவரி குறுந்தகவலா அனுப்பிவெச்ச என் பெண்ணின் தோழிக்கு நன்றி :-)))))))))))





Friday, 5 August 2011

புதிதாய்ப்பிறந்தேன்...(வல்லமையில் வெளியானது)

வணக்கங்க.. எல்லாரும் நல்லாருக்கீங்களா??.. உங்களுக்கென்ன!! நல்லாத்தான் இருப்பீங்க.  நான் இப்ப இருக்கிற நிலையில, யாரைப்பாத்தாலும் என்னைவிட சந்தோஷமா இருக்காங்கன்னே தோணுதுங்க.

இவ்வளவு நேரம் எம்பேரைச்சொல்லலைல்லே.. பேருக்கென்னங்க. உங்களுக்கு எந்தப்பேரு புடிச்சிருக்கோ அந்தப்பேருல கூப்பிட்டுக்கோங்க. ஆனா, தயவு செய்து எம்பிரச்சினைக்கு மட்டும் ஒரு முடிவு சொல்லிடுங்க..

தைப்பூசம்.. முருகனுக்கு உகந்த நாள். காவடியெடுத்தும், அலகு குத்தியும், இதெல்லாம் செய்யாம பிரார்த்தனை மட்டுமே செய்யும் பக்தர்களுக்கும், இது எதுவுமே செய்யாம சும்மா..'முருகா..' அப்படீன்னு ஒரு தடவை மனசால் மட்டும் நினைச்சுக்கிறவங்களுக்கும், அருள் செய்யற கடவுளுக்கான திருநாள். ஆனா, அன்னிக்கு எல்லோருக்கும் அருள் பாலிச்சுட்டு, கடைசில என்னை மட்டும் மறந்துட்டாரே. அன்னிக்கி நான் கோயிலுக்கு போகாம இருந்திருக்க கூடாதா..  இதெல்லாம் நடந்திருந்தா.. இன்னிக்கி இப்படி புலம்பிட்டிருக்க மாட்டேன்.

இப்படி உக்காருங்க.. வெவரமா சொல்லுறேன். அன்னிக்கி, அம்மா.. தங்கை, அப்புறம் மத்த சொந்தக்காரங்க, பக்கத்துவீட்டுக்காரங்கன்னு ஒரு கூட்டமா கோயிலுக்கு போயிருந்தோம். தேங்காபழமெல்லாம் உடைச்சு சாமி கும்பிட்டுட்டு, வேப்பமர நெழல்ல உக்காந்து கட்டுச்சோத்தை சாப்பிட்டுட்டு, அம்மாவும், மத்தவங்களும் அக்கடான்னு அங்கியே உக்காந்துட்டாங்க. எங்கூருக்கு சாயந்திரம்தான் வண்டி.. அதுவரைக்கும் என்ன செய்யறது??.. உண்ட களைப்புலயும், வேப்பமர நெழல் தந்த சொகுசுலயும், அங்கியே ஆளாளுக்கு கட்டைய சாச்சுட்டாங்க.

எவ்வளவு நேரம்தான் அங்கியே உக்காந்து, போறவர்ற ஆளுகள பாத்துட்டு இருக்கிறது.. சும்மா.. காலாற நடந்துட்டு வரலாமேன்னு எந்திரிச்சிப்போனேன். திருவிழான்னா, சந்தையும் கூடணும்கறது வழக்கம். வளையலு, பாத்திரங்கள், முட்டாயி, அப்புறம் திடீர் புடவைக்கடைகள்ன்னு ஒவ்வொண்ணா பாத்துட்டே நடந்தவன், ஒரு பொரிகடலை பாக்கெட்டை வாங்கி கொறிச்சிக்கிட்டே.. அப்படியே தெப்பக்குளத்துப்பக்கம் வந்தேன். திருவிழா நடக்கறதால குளம் நெறய தண்ணி திமுதிமுன்னு கெடக்குது.. செலபேரு துவைச்சுக்குளிச்சிட்டு இருக்காங்க. வெயிலா இருந்தாலும், தண்ணி நெறஞ்சு கெடக்கிறதால குளுந்து கெடக்குது. அப்படியே படிக்கட்டுல உக்காந்துக்கிட்டு, பொரிகடலையை ஒருவாய் தின்னுக்கிட்டும், ஒருகை.. மீன்களுக்கு போட்டுக்கிட்டும், வேடிக்கை பாத்துக்கிட்டிருந்தேன்.

அப்பதான், எனக்கு பக்கத்துல படிக்கட்டுல சுருட்டி வெச்சிருந்த துணிகளும், அதுக்கு மேல அலட்சியமா வெச்சிருந்த மணிபர்சும் கண்ணுல பட்டது. என்னது!!.. இப்படி பொறுப்பில்லாம வெச்சுட்டு போயிருக்காரேன்னு நெனச்சிக்கிட்டேன். அழகான மெரூன் கலர்ல, உப்பிப்போய் இருந்த பர்சை விட்டு கண்ணை எடுக்கமுடியலை. யாரும் பார்க்கலைன்னு நோட்டம் விட்டுட்டு, சட்ன்னு அதை எடுத்து என்னோட பாக்கெட்ல வெச்சுக்கிட்டு அங்கேருந்து வேகமா வந்துட்டேன்.

தேர்மூட்டுக்கு கிட்ட வரவும், எதிர்க்க அம்மாவும் மத்தவங்களும் வந்துக்கிட்டிருந்தாங்க.. 'உன்னை எங்கேல்லாம் தேடுறது.. சொல்லாம கொள்ளாம எங்க போன??..'ன்னு அம்மா சத்தம்போட ஆரம்பிச்சாங்க. 'ஷ்..சத்தம் போடாத.. இங்க பாரு'ன்னு பர்சை காமிச்சேன். 'அடியாத்தே... எல்லாம் நூறு ரூவா தாளால்லே இருக்கு.. ஏதுடா இது?'ன்னாங்க அம்மா. 'கீழ கெடந்துச்சு கண்டெடுத்தேன்'னு ஒரு பொய்யை சொல்லிட்டேன். எனக்கு புத்திசொல்றதவிட்டுட்டு.. கொடுக்கிற தெய்வம் பர்சோட கொடுத்திருச்சுன்னு சந்தோஷப்படறாங்க அம்மா.

பகல்ல பக்கம் பார்த்து பேசுன்னு சொல்லுவாங்க. நான் பார்த்துப்பேசியிருக்கணும்..  ஆனா, பார்க்கலை..  அதனால, பக்கத்துல நின்னுட்டு பேசிட்டிருந்த ஆட்கள்ல ஒரு ஜோடி கண்கள் எங்களை பாத்திட்டுது. அதையும் நான் கவனிக்கல. ரூவா கெடைச்ச சந்தோஷத்துல, உண்டியல்ல காணிக்கையா பத்து ரூபா போட்டுட்டு, திருவிழாக்கடைக்கு போயி, தங்கச்சி ரொம்ப நாளா ஆசைப்பட்ட செருப்பை வாங்கிக்கொடுத்தேன். பாவம்.. எத்தனை நாள்தான் வெறுங்காலோட அது பள்ளிக்கொடத்துக்கு போவும்?.. கடைக்காரருக்கு ரூவாயை கொடுக்கவும், டக்குன்னு ஒரு கை இரும்பு மாதிரி எங்கையை பிடிச்சிக்கிடுச்சு. திரும்பி பாத்தேன்.. நடுங்கிட்டேன். நாலஞ்சுபேரு, ஒரு போலீசோட நிக்கிறாங்க.

'இந்தப்பயலத்தான் நீ சொன்னியா..'ன்னு ஒரு ஆளு கேக்கவும், 'ஆமா..'ங்குது ஒரு சின்னப்பொண்ணு. அட..!! இத நான் தேர்மூட்டுக்கு கிட்ட ஆளுககூட பாத்தேனே.

'இது உங்க பர்சுதானான்னு பாருங்க..'

'மெரூன் கலர்!!...என்னோடதுதான்..'ன்னு சொல்லிக்கிட்டே வெள்ளையும் சொள்ளையுமாட்டு ஒரு ஆளு முன்னால வந்தாரு. ' உங்க பர்சுதான்னு சொல்றதுக்கு என்ன ஆதாரம்??' ன்னு போலீசு கேக்கவும், 'உள்ளே ட்ரெயினுக்கான மந்த்லி பாஸும்,அடையாள அட்டையும் இருக்கும். அதுல என்னோட போட்டோவும் இருக்கும். பாத்துக்கிடுங்க..'ன்னு வெறைப்பா பதிலு வந்தது. சரி பாத்துட்டு, போலீசு என்னைத்திரும்பி பாத்தாரு. எனக்கா.. கண்ணீரு முட்டிக்கிட்டு விழ தயாரா இருக்குது. 'நடலே.. ஸ்டேஷனுக்கு..' ன்னு கையைப்பிடிச்சி இழுக்கவும், இதெல்லாம் பாத்து ஒண்ணும் புரியாம முழிச்சிட்டிருந்த அம்மா அலற ஆரம்பிச்சிட்டாங்க.

'ஐயா.. எம்புள்ள திருடனில்லைய்யா.. கீழ கெடந்தததான் எடுத்தாந்தான்.. ஒரு சின்னப்புள்ள சொல்லைக்கேட்டு, எம்புள்ளய ஒண்ணும் செஞ்சிடாதீங்க' ன்னு கெஞ்சுறாங்க.

'எம்மா.. கீழ கெடந்தத கண்டெடுத்தாலும், உரியவங்ககிட்ட சேர்க்கணும்கற புத்தி இல்லையா உங்களுக்கு?.. கொளத்தங்கரையில துணிகளுக்கு மேல வெச்சிருந்துருக்காரு. குளிச்சிட்டு வந்தவரு பர்சை காணோம்ன்னு வழி நெடுக புலம்பிக்கிட்டே தேடியிருக்காரு. இவரு கூட வந்த ஆட்கள்கிட்ட சொல்லும்போதுதான், அவங்க கூட இருந்த இந்தப்பொண்ணுக்கு,  தேர்மூட்டுக்கிட்ட உங்கமகன் உங்ககிட்ட காமிச்ச பர்சு, அவங்க சொல்ற அடையாளத்துல இருந்தது ஞாபகம் வந்திருக்கு. கீழ கெடந்துச்சுன்னு உங்க மகன் சொன்னதையும் அந்த பொண்ணு கவனிச்சிருக்கு. அதான், ஒரு சந்தேகத்துல வந்து பார்த்தா.., அவனே அம்புட்டுக்கிட்டான். துணிகளுக்கு மேல வெச்சிருந்தது கால்முளைச்சா வீதிக்கு வந்திருக்கும்?.. ரெண்டு தட்டு தட்டினாத்தான் இனிமே இப்படி செய்யமாட்டான்' னு சொல்ல, அம்மா அழுதுக்கிட்டே கெஞ்ச.. அதுக்கு மேல அம்மாவ பாக்கமுடியாம கண்ணீரோட தலைய திருப்பிக்கிட்டேன்.

பர்சை பறிகொடுத்தவர் என்ன நெனச்சாரோ..' பரவால்ல சார்.. சின்னப்பையந்தானே!! விட்டுடுங்க. நான் கேசை வாபஸ் வாங்கிக்கிறேன்'னு பெரிய மனசோட சொல்லவும் ஒரு சின்ன வாக்குவாதத்துக்கு அப்புறம் எல்லோரும் போயிட்டாங்க. அந்தப்பொண்ணு என்ன திரும்பி பாத்துக்கிட்டே போச்சு. அம்மாவுக்குத்தான் ஆறவேயில்லை.. எம்மேல வீண்பழி போட்டதுக்கு, வழி நெடுக அந்தப்புள்ளைய கரிச்சுக்கொட்டிட்டே வந்தாங்க. கொஞ்ச நாளைக்கு எனக்கு உறுத்திக்கிட்டே இருந்திச்சு.. அப்புறம் மெல்லமெல்ல மறந்தே போச்சு.

நான் மறந்தாலும், முருகன் மறக்கலை பாருங்க. இப்ப நான் பத்தாங்கிளாஸ் போகப்போறேன். நல்லா மேல்படிப்பெல்லாம் படிச்சு பாஸாகி, நல்ல வேலைக்குபோயி அப்பா,அம்மாவை ஒக்காரவெச்சு சாப்பாடு போடணும்ன்னு மனசுல ஒரு வெறி. வயக்காட்டு வேலை, கூலிவேலைன்னு அவங்களும் எவ்வளவுதான் கஷ்டப்படுவாங்க. மொதல் நாள் பள்ளிக்கோடத்துக்கு போனவனுக்கு, நாலாவது வரிசையில ஒக்காந்திருந்த அந்தப்பொண்ணை, எங்கியோ பார்த்தமாதிரி தோணிக்கிட்டே இருந்திச்சு. மறுபடி பார்க்க பயமா இருந்திச்சி.. இது கிராமம்..பொண்ணுங்க கிட்ட பேசறதெங்கே.. பார்த்தாலே தோலை உரிச்சுடுவாங்க.

பள்ளிக்கோடம் விட்டு வெளியே வந்தப்ப, அந்தப்பொண்ணே எங்கிட்ட வந்து, ' உன்னை எங்கியோ பார்த்திருக்கேனே..'ன்னு ஆரம்பிச்சு என் முகத்தை கூர்ந்து பார்த்தவ,..' அன்னிக்கி, நீதானே கோயில்ல அந்த பர்சை...'ன்னு இழுத்தா பாருங்க,  எனக்கு 'குப்'புன்னு வேர்த்துடுச்சு. பதில் சொல்லாம விறுவிறுன்னு ஓடியாந்துட்டேன். இவ எப்படி இங்கே வந்தா??.. ராத்திரி முழுக்க ஒரே சிந்தனை. விடிஞ்சு, பள்ளிக்கோடத்துக்கு போயி, 'திருடன்'ன்னு ஒரு முத்திரையோட அந்தப்பொண்ணோட மொகத்துல முழிக்க வெக்கமாயிருக்கு. மத்த பசங்ககிட்ட சொல்லிட்டா??.. அவ்வளவுதான். இந்த ராத்திரி விடியாமலேயே இருந்துட்டா எவ்வளவு நல்லது..

 படிக்கலைன்னா, நான் ஆசைப்பட்டமாதிரி எங்க வீட்டு வறுமையை விரட்டவும்முடியாது. கல்லோடயும், முள்ளோடயும் எங்க அப்பா கஷ்டப்படறத பார்க்கப்பார்க்க எனக்கு ரத்தக்கண்ணீரே வருது. இந்த பள்ளிக்கோடத்த விட்டு வேற ஊரு பள்ளிக்கொடம், இல்லைன்னா வேலைக்கின்னு எங்கியாச்சும் போயி சேரலாம்ன்னா, என்னைய ரொம்ப நம்பிக்கிட்டிருக்கற அப்பாட்ட என்னன்னு சாக்கு சொல்றது!!. அவரு மனசொடிஞ்சு போகமாட்டாரா??..  எனக்கு ஒண்ணுமே தோணமாட்டேங்குது.

மறுநாள் பள்ளிக்கொடத்துக்கு போக மனசில்லாம, வீட்ல சுருண்டு கெடந்தேன். யாரோ கூப்பிடுற சத்தம்... வெளியெ வந்து எட்டிப்பார்த்தா,... 'ஆத்தீ!!.. அந்தப்பொண்ணு'. விருட்ன்னு வீட்டுக்குள்ள திரும்புன என்னை ஓடிவந்து வழிமறிச்சா..

"எதுக்கு என்னிய கண்டு பயப்படறே?.. நான் என்ன சிங்கமா?.. புலியா?.."ன்னு கேட்டா.

"அதுக்கும் மேல.. "ன்னு தலையக்குனிஞ்சுக்கிட்டு முணுமுணுத்தேன்.

"ஏதோ அறியாத வயசுல தெரியாம செஞ்ச தப்பை, இன்னும் ஞாபகம் வெச்சுக்கிட்டு 'நீதானே அது'ன்னு என்னியப்பார்த்து கேட்டா அவமானத்துக்கு பயப்படமாட்டாங்களா"ன்னேன்.

"உன் கூட்டாளிகள் கிட்ட சொல்லிடுவேன்னு பயமா"ன்னு கேட்டா குறும்போட..

ஆமான்னு சொல்லவும் தயக்கமாருக்கு.. இல்லைன்னு சொல்லவும் மனசில்லை.. ரெண்டும் கலந்தமாதிரி தலையை ஆட்டிவெச்சேன்.

"பயப்படாத.. நேத்து என்னிய பார்த்ததுலேர்ந்து, இந்தப்பயம்தான் உன்னைய ஆட்டிவெச்சிருக்கும்ன்னு நல்லாவே புரியுது.. நேத்துமுழுக்க நீ பட்ட மனவேதனையையே உனக்கான தண்டனையா நெனைச்சிக்கோ. படிப்பையும் எதிர்காலத்தையும் நாசமாக்கிக்காம, எல்லாத்தையும் மறந்துட்டு இப்ப பள்ளிக்கொடம் பொறப்படு.. நான் யாருகிட்டயும் ஒருவார்த்தையும் சொல்லவே மாட்டேன்.. இது சத்தியம். போதுமா?.."

வெய்யக்காலத்துல குளுமையா எளநி குடிச்சமாதிரி, புதுசாப்பிறந்தமாதிரி.. மனசுல இருந்த பாரமெல்லாம் இறங்கி அப்பாடான்னு இருந்தது எனக்கு, அந்த பதிலைக்கேட்டதும் .. ஒடனே வீட்டுக்குள்ள ஓடினேன்.. பள்ளிக்கொடப்பையை எடுத்துட்டு வர்றதுக்கு..

டிஸ்கி: இந்தக்கதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி..




Thursday, 4 August 2011

நமக்கே நமக்காக..

உடம்போட எடையைக்குறைச்சு ஒரு ஸ்லிம்ரனா ஆகணும்கறதும், ஹீரோக்கள் மாதிரி சிக்ஸ்பேக் வைக்கணும்கறதும் இந்தக்கால இளவட்டங்களோட ஆயுட்கால கனவு. அதனால, கோடை காலத்துல காலை நேரங்கள்ல பார்த்தாப்போதும்.. வேர்க்க விறுவிறுக்க வாக்கிங் போறதும் பக்கத்துல இருக்கற பூங்காக்கள்ல போயி, செட்டு சேர்த்துக்கிட்டு யோகா செய்யறதும்.. வீட்ல, ஜிம்முலன்னு உடற்பயிற்சி செய்யறதும்ன்னு அடடா!!!!!... திமிலோகப்படும்.

 கடந்துபோன மழை மற்றும் குளிர்காலத்துல, வெளியே போகப்பயந்துக்கிட்டு போர்வையை இன்னும் நல்லா இழுத்து மூடிக்கிட்டு உறங்கியும், ஒரே இடத்துல உக்காந்து சாப்பிட்டும் சேர்த்த உடல்பருமனை, வெய்யில்காலத்துல கரைக்கிறேன் பேர்வழின்னு சிலபேர் உடம்பைப்போட்டு படாதபாடு படுத்திட்டிருப்பாங்க.

‘எப்படியாவது குறைஞ்சது பத்து கிலோவாவது குறைச்சே ஆகணும்’கறது அவங்களோட கனவு லட்சியமா இருக்கும். லட்சியத்தை கைப்பிடிக்கப்போற வேளையில கோடை முடிஞ்சு மழைக்காலம் வந்து தொலைச்சுடும். ‘இந்த மழையில் வாக்கிங் போவாங்களா?.. சூடா பஜ்ஜி சாப்பிட்டா நல்லாருக்குமே.. பக்கோடா சாப்பிட்டா நல்லாருக்குமே’ன்னு முழ நீள லிஸ்டில் இருக்கற பலகாரங்களை வயித்துக்குள் ஏற்றுமதிசெய்வாங்க

விளைவு!!.. இன்னும் உடம்பு பூரிச்சுப்போகும். 'அதெல்லாம் எங்க குடும்ப வாகே அப்படித்தான்' அப்படீன்னு ஒரு முத்தாய்ப்போட எடைகுறைக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு,.. அளவு சின்னதாய்ப்போன அழகான ஆடைகள், ஒரு பெருமூச்சோடு தானமளிக்கப்பட்டுவிடும்.

இன்னும் சிலபேர், வீட்ல கல்யாணம், அல்லது இன்னபிற விசேஷங்கள் வருதுன்னா, அன்னிக்கு அழகா தெரியணும்கறதுக்காக அதுக்கு முன்னாடியே எடையைக்குறைக்கறேன் பேர்வழின்னு பரண்ல கிடக்கற ஷூக்கள், ட்ராக் சூட்டுகளை கரப்பான்கள்கூட்டத்து நடுவுலேர்ந்து தேடிக்கண்டுபிடிச்சு முறையா பயிற்சி செய்ய ஆரம்பிப்பாங்க. என் தோழி இரண்டாவது குழந்தைக்கு தாயாராகுமுன், பத்துகிலோ எடையைக்குறைச்சு தயாராகிவிட்டிருந்தாங்க. அதன்பலனா, பிரசவத்துக்கப்புறம் பெண்களுக்கு வழக்கமா கூடிப்போகும் எடைப்பிரச்சினையிலேர்ந்து தப்பிச்சாங்க..

ஆனா, இப்படியெல்லாம் குறைக்கப்படற எடை நிரந்தரமா ஒரே நிலையில் இருக்குதான்னு கேட்டா,.. அதான் கிடையாது. குறிக்கோள்கள் நிறைவேறினதும் எடைகுறைப்பு லட்சியமும் காத்துல பறந்துடும்..“எங்க பரம்பரையிலேயே எல்லோருக்கும் பூசினமாதிரி உடம்புங்க.. அப்படியே அவங்க தாத்தாவாட்டம்,.. பாட்டியாட்டம்..” என்ற சால்ஜாப்புகள் சொல்லப்படும். இப்படி ஒரு குறிப்பிட்ட காலத்துக்காக குறைக்கப்பட்ட எடை அதே வேகத்துல மறுபடியும் கூடுதலாயிடும்ன்னு பயமுறுத்தறாங்க J

இதுக்கெல்லாம் நாற்காலியிலேயே குடியிருக்கற நம்முடைய வாழ்க்கைமுறையும், உணவுப்பழக்கவழக்கங்களும்தான் முக்கிய காரணம். அசையாம ஒரே இடத்துல உக்காந்திக்கிட்டிருந்தா சாப்பாடு சரியா செரிக்காது.. செரிச்சதும் கொழுப்பு செல்களா மாத்தப்பட்டு உடம்புல சேமிக்கப்படும். விளைவை தன்னைத்தானே ஆளுயுயர கண்ணாடியில் பார்த்து தெரிஞ்சுக்கோங்க J

சாதாரண மக்களுக்கே இம்புட்டு பாடு இருந்தா, நம்மமேல வீசப்படற அர்ச்சனைப்பூக்களையெல்லாம் தாங்கிக்கிட்டு, நாற்காலிய எப்பவுமே விட்டுக்கொடுக்காம, தமிழுக்கு சேவைசெய்யறதுக்காக கணினி முன்னாடி உக்காந்துக்கிட்டு, பொட்டி தட்டுற நமக்கு எவ்ளோ கஷ்டம் இருக்கும்.அதையெல்லாம் தாண்டி நம்ம உடல் எடையையும், ஆரோக்கியத்தையும் கட்டுப்பாட்டுல வெச்சிக்க,.. நம்ம டாக்குட்டர் ’கெட்வெல்’ சொல்ற அறிவுரையையும் கவனிக்கலாம். 

1. தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகள்:
இடுகை எழுதறதுக்கு முன்னாடி, என்ன விஷயத்தைப்பத்தி எழுத’லாம்’. என்னென்ன பாயிண்டுகள் சேர்க்க’லாம்’. மத்தவங்க கவனத்தை ஈர்க்கறமாதிரி என்ன தலைப்பு வைக்க’லாம்’ இப்படி எல்லா ‘லாம்’களையும் எப்படி பார்த்துப்பார்த்து தேர்ந்தெடுக்கறோமோ… அதேமாதிரிதான் சாப்பாட்டையும் தேர்ந்தெடுக்கணும்,..  பொரிச்செடுத்த பஜ்ஜி, வடை, போண்டாக்களை மத்தவங்க இடுகைகள்ல போயி எடுக்கறதோட நிறுத்திக்கணும்.. நெஜத்துல அவிச்ச, சுட்ட, வாட்டிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கறது உடம்புக்கு நல்லது.

2. சாப்பாட்டை நிதானமா மென்னு சாப்பிடணும்.
மின்சாரம் கட்டாகுறதுக்குள்ளாற இடுகையை எழுதிமுடிக்கணுமே… மத்த பதிவுகளையும் படிச்சு பின்னூட்டமிடணுமே.. அதுக்குள்ள சாப்பிட்டுடலாம்ன்னு அவசர அவசரமா சாப்பிடக்கூடாது. பொதுவா நாம சாப்பிட ஆரம்பிச்ச பதினஞ்சாவது நிமிஷத்துலதான் ‘வயிறு நிறைஞ்சுடுச்சு’ன்னு நம்ம மூளை தகவல் அனுப்புமாம். அதனால அவசர அவசரமா சாப்பிடுறப்ப, எப்போதும் சாப்டுறதைவிட கொஞ்சம் கூடுதலாவே சாப்பிட்டுட வாய்ப்பிருக்குதாம். சாப்பாட்டுல பழங்கள் பச்சைக்காய்கறிகள் சேர்க்கப்பட்ட,.. நார்ச்சத்து நிரம்பிய ஆரோக்கியமான உணவை சாப்பிடறது நல்லது.
3 .தண்ணி குடிக்க மறந்துடாதீங்க
இது ரொம்ப முக்கியமானது.. சிலவிஷயங்களைப்பத்தி படிக்கிறப்ப (உதாரணமா என்னோட இந்த இடுகை J) ‘சரி.. சரி.. தண்ணியக்குடி’ன்னு நம்மை நாமே தேத்திக்கிறதுக்காக சொல்லிக்கிறதுண்டு. அந்தமாதிரி சமயங்களில் ஒருகப் தண்ணீரைக்குடியுங்க. ஒரு நாளைக்கு குறைஞ்சபட்சம் எட்டிலிருந்து பத்துகப் தண்ணியாவது குடிக்கிறது ரொம்ப நல்லது. இது உடம்பிலிருக்கிற நச்சுப்பொருட்களை வெளியேத்தவும், சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி, சாப்பாட்டுல இருக்கற சத்துக்களை உடம்புமுழுக்க எடுத்துச்செல்லவும் உதவியாயிருக்கு. ஜூஸ்,இளநீர் இதுகளெல்லாம்கூட எடுத்துக்கலாம்..
4.காலையுணவை மறக்காதீங்க.
என்னிக்குமே காலைச்சாப்பாட்டை மறந்துடாம எடுத்துக்கறது நல்லது. இடுகையை காலைல பப்ளிஷ் கொடுத்துட்டு, பின்னூட்டம் வருதா.. வருதான்னு F5 பட்டனை தேய்ஞ்சுபோறவரைக்கும் அழுத்தி அழுத்தி, கண்ணு பூத்துப்போறவரைக்கும் கணினித்திரையை பார்த்துட்டே இருந்தா நிச்சயமா சாப்பிடமறந்துதான் போகும். அதைவிட புரோட்டீன் சத்துகள் நிரம்பிய சாப்பாடா எடுத்துக்கிட்டு அப்புறமா கணினிப்பக்கம் வந்தா, இன்னும் தெம்பா பின்னூட்டத்துக்கு காத்திருக்கலாம். அன்னிக்குப்பூரா எதிர்பார்த்த அளவுக்கு பின்னூட்டம் வரலைன்னாலும், சோர்வே வராது 
:-) இன்னும் தெம்பா பின்னூட்டங்களுக்காக காத்திருக்கலாம். ரெண்டு இட்லி.. ஒரு பக்கெட் சாம்பாரும் ஓகேதான். அதுக்கு மாறா பூரி,பராத்தா,பொங்கல்ன்னு சாப்பிட்டா கண்ணைச்சொக்கிட்டு வரும்.. அப்றம், லேப்டாப்பையே தலையணையாக்கி தூங்கிடுவீங்க… கவனமா இருங்க J

5.உணவை பகிர்ந்து உண்ணுங்க..
சிஸ்டத்துல வாசிச்சுட்டிருந்தத அப்படியே பாதியில விட்டுட்டு சாப்பிடவந்துட்டு, சாப்பிட சோம்பல்பட்டு நம்ம தட்டுல இருக்கறதை, வாழ்க்கைத்துணையோட தட்டுலயோ… இல்ல பசங்களோட தட்டுலயோ, அவங்க பார்க்காத நேரத்துல நைசா வெச்சுடறதுதான் பகிர்ந்துண்ணுதல்ன்னு,.. இதுக்கு அர்த்தம் சொல்லமாட்டேன் J

ஒரே நேரத்துல பெரிய பாத்திகட்டி வளைச்சுக்கட்டாம அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா சின்ன்ன்ன பாத்தி கட்டுனாப்போதும்.. இந்த வழிமுறை அடிக்கடி பசிஎடுப்பதை தடுக்குது.. அதுக்காக ஒவ்வொரு வேளையும் ஃபுல்மீல்ஸ் சாப்பிட்டுட்டு வெயிட்டே குறையமாட்டேங்குதேன்னு புலம்புனா, கம்பேனி பொறுப்பாகாது J
6.நொறுக்குத்தீனியை தவிருங்க..
சிலபேருக்கு சினிமா பார்க்கறச்சே, டிவி பார்க்கறப்ப, இப்ப லேட்டஸ்டா பொட்டிதட்டுறப்ப நொறுக்ஸ் சாப்பிடுற பழக்கம் இருக்கும். மொதல்ல அந்தப்பழக்கத்தை டிலீட் செய்யுங்க. இல்லைன்னா, விஷயத்தோட சுவாரஸ்யத்துல எவ்ளோ சாப்பிட்டோம்ன்னே தெரியாது J. அதுவுமில்லாம அதோட துணுக்குகள் கீபோர்டுல விழுந்து வைச்சா எறும்புத்தொல்லையும் வரும்.. அதோட, ‘நாராயணா.. இந்த எறும்புத்தொல்லை தாங்கலைடா’ன்னு டயலாக்கை மாத்தி சொல்லிக்கலாம்.

7.ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தை சமாளியுங்க.
மன அழுத்தம் கூடுதலா இருக்கச்சேதான், ஒண்ணு எக்கச்சக்கமா சாப்ட்டு குண்டாயிருவாங்க. இல்லைன்னா சாப்பிடாம இருந்து நரம்பாட்டம் ஒல்லியாகிடுவாங்க. ரெண்டுமே தப்பு.. அதனால மன அழுத்தத்தை அண்டவிடாதீங்க. யோகா, ஏரோபிக்ஸ் மாதிரியான பயிற்சிகளால மன அழுத்தத்தை விரட்டிடலாம். இந்த மன அழுத்தங்களுக்கான காரணங்கள் ஆளுக்காள் வித்தியாசப்படும். உதாரணமா சொல்லணும்ன்னா,.. ஒரு இடுகை ஃப்ளாப் ஆனா என்ன!!.. ‘இதுவும் கடந்துபோகும்’ன்னுட்டு அடுத்த இடுகையை இன்னும் நல்லா எழுதி, பாப்புலராக்குற வழியைப்பார்க்கலாமே :-)))
8.உடற்பயிற்சி செய்யுங்க..
உடற்பயிற்சிங்கறதையே மறந்து, கணினி முன்னாடியே தவம் கிடக்கறதால என்னாகும்ன்னு நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை J. அதனால, காமணி நேரத்துக்கொருக்கா எழுந்துபோயி நடந்துட்டு வருவது நலம். இந்த வாய்ப்பை ‘சரி..சரி.. தண்ணியக்குடி..’ திட்டத்துக்கு பயன்படுத்தி, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கிறவங்க ‘சிக்கனம் சின்னச்சாமி’ என்ற பட்டத்தை தமக்குத்தாமே வழங்கிக்கொள்ளலாம் J. அதேசமயத்தில் காற்றடைத்த குளிர்பானங்கள் டீ காபி இவற்றை தவிர்க்கவும். ‘ஐயோ.. டீ காபி இல்லைன்னா எனக்கு வேலையே ஓடாதே’ங்கறவங்க.. அதோட அளவைக்குறைச்சுக்கோங்க. அதுக்குப்பதிலா, எவ்ளோ வேண்ணாலும் நீர்மோர் குடிக்கலாமே..

இதுபோக ஒரு நாளைக்கு சுமார் 30 நிமிடங்களுக்காவது வெளியே வாக்கிங் போயிட்டு வர்றது நல்லது. இந்த வாக்கிங் நேரம் விடியற்காலையா இருந்தா, ஃப்ரெஷ்ஷா காய்கறி வாங்கிட்டு வரது, வீட்டிலிருக்கும் செல்லப்பிராணியையும் வாக்கிங் கூட்டிட்டுப்போறதுன்னு செஞ்சா வீட்லயும் நல்லபேரு எடுக்கலாம்.

9.காலம் கழிந்து சாப்பிடவேண்டாம்
இது, நடுராத்திரியில.. டின்னரெல்லாம் முடிச்சு,.. எல்லோரும் தூங்கினப்புறமும் சிஸ்டத்துக்குள்ள தலையை விட்டுக்கிட்டு, எழுதவோ வாசிக்கவோ செய்யும் சாமக்கோழிகளுக்கானது...(நான் உட்பட :-)) ராத்திரி ரொம்ப நேரத்துக்கப்புறம் மறுபடியும் பசி எடுக்குதுன்னுட்டு பிஸ்கட்ஸ், டோஸ்ட்ன்னு வளைச்சா அது நல்லதில்லை. நேரம் கழிச்சு சாப்பிடற சாப்பாடு சீரணமாகாது.. உடம்புல வெயிட்டைத்தான் கூட்டும்.
10. சுவரோ, டிராயிங் போர்டோ இல்லை காகிதமோ.. ஏதாவது ஒண்ணு அடிப்படையா இருந்தாத்தான் சித்திரம் எழுதமுடியும். அதேமாதிரி, உடல் எடையை கட்டுக்குள்ள வைக்காட்டி இதயசம்பந்தமான நோய்களும் வர வாய்ப்பிருக்கு. ஒருத்தரோட எடை எவ்ளோ இருந்தா ஆரோக்கியமான நிலைன்னு நாமே கண்டுபிடிச்சிக்கலாம். 

உங்க உயரத்தை செ.மீட்டரில் அளந்துக்கோங்க. அதுலேர்ந்து 100-ஐக்கழிங்க. மீதி வருவதுதான் உங்க சரியான எடை. உதாரணத்துக்கு உங்க உயரம் 158 செ.மீ இருக்குதுன்னு வெச்சுப்போம். அப்படீன்னா உங்க எடை 58கிலோவா இருக்கணும். ஆனா, உங்க எடை அதுக்கும்மேல கூடுதலாயிருந்தா.. நீங்க உடற்பயிற்சி செய்யவேண்டிய நேரம் வந்துட்டுதுன்னு அர்த்தம். நல்லா பயிற்சி செஞ்சு தெம்பா இருந்தாத்தானே பதிவுகள்ல போயி கும்மியடிக்கமுடியும்.. :-)).. சரியா!!..


ரெடி.. ஸ்டார்ட் மூஜிக் :-)))
 


அவ்வ்வ்வ்..... அவன் ஏன் ஓடிப்போனான்???!!!...

வரவர இவனுங்க சாப்டுறதுக்கு கொடுக்கற இம்சை இருக்கே… சாப்பாட்டை வெச்சா சாப்பிடாம… சிந்தறதும் செதர்றதும், வாரியிறைக்கிறதும்ன்னு ஒரே அட்டகாசம். ஒருத்தனை ஒருத்தன் தொரத்தரதும், விரட்டிப்பிடிக்கிறதுமா சாப்பிடற பொழுதுகள்லதான் விளையாட்டும். இவனுங்களை நாம ஏதாச்சும் சொன்னா,.. அவ்ளோதான். ’குய்யோ..முறையோ..’ன்னு ஒரே கூப்பாடு. வடிவேலு சொன்னாப்ல, ‘ஒரே சின்னப்புள்ளைத்தனமால்ல இருக்கு’ன்னு தோணினாலும் அதானே உண்மையும் கூட J

‘இந்த அவனுங்க அவனுங்கன்னு அடிக்கடி சொல்றீங்களே!!… அவனுங்கல்லாம் யாருங்க!!..’ன்னு நீங்க கேக்குறது புரியுதுங்க.(டாக்டர் இஸ்டைலில் படிக்கவும். டாக்டர் யாருன்னு வலையுலத்துக்கு சொல்லத்தேவையில்லைன்னு நினைக்கிறேன்). சொல்றேன்…

எங்க வீட்டுக்கு மூணுபேர் எப்பவும் மத்தியானம் சாப்பிட வருவானுங்க.. மூணுபேர்ன்னா சொன்னேன்??.. மூணு வெரைட்டின்னு சொன்னா ரொம்ப பொருத்தமாருக்கும். ‘சாப்பாடு தா.. தா..’ங்கற பெரிய வாக்கியத்தை அவனுங்க பாஷையில சிம்பிளா ஒத்தைச்சொல்லுல, ’கா.. கா..’ன்னு சொல்லுவாங்க. இதத்தான், சுருங்கச்சொல்லி விளங்கவைக்கிறதுன்னு பெரியவங்க சொல்லுவாங்களோன்னு நானா விளங்கிக்கிட்டேன் :-)

அவனுங்க கேக்குறாங்களேன்னு நாம சட்னு சாப்பாட்டை கொண்டுபோயி வெச்சிடமுடியாது. ஒருத்தனுக்கு வெறுஞ்சாப்பாடு வேணும். ஒருத்தனுக்கு குழம்பு ஊத்திவேணும், இன்னொருத்தன் ரொம்ப விசேஷம்…. தண்ணியில போட்டு கழுவிட்டுத்தான் சாப்பிடுவான்.. சுத்த்த்தம்!!!!!!! (குழம்பு உட்பட கழுவிட்டுத்தான் சாப்டுவான்) ஆங்!.. மூணு வெரைட்டி வந்துடுச்சுல்லே J


அதுவும் நேரத்தோட வரமாட்டானுங்க.. மத்தியானம் மூணுலேர்ந்து மூணரைக்குள்ளதான் வருவானுங்க.. பங்க்சுவாலிட்டியாம்!!!.. சொல்றானுங்க J இதுனாலயே ஆரம்பத்துல இதுங்க வந்துடுச்சுன்னா, ‘அம்மா.. மூணரைக்காக்காங்க வந்துடுச்சூ’ன்னு பசங்க கொரல் குடுப்பாங்க. நானும் போயி சாப்பாட்டை வெச்சுட்டு வந்துடுவேன். ஒருத்தன் ஒழுங்கா சாப்டுட்டு போயிடுவான்.
ஒருத்தன் அதுக்கப்புறமும் சாப்பிடாம கத்திக்கிட்டிருக்கறதை அப்புறமாத்தான் கவனிச்சேன்.. ‘ஏன்?.. நல்லாத்தானே போயிட்டிருந்தது.. என்ன இப்ப..”ன்னு கேட்டதும்,.. அதுல ஒருத்தன் மட்டும், டபக்ன்னு எந்திரிச்சி, அதுங்க குடிக்கிறதுக்காக தண்ணி ஊத்திவெச்சிருந்த தட்டுல சாதத்தைப்போட்டுட்டு அப்றமா சாப்டறதை.. ‘சரி.. காரம் ஒத்துக்கலை போலிருக்குன்னு, மறுநாள் கொஞ்சமா குழம்பு ஊத்திவெச்சா அப்றமும் இதே கதைதான். ‘போடா..’ன்னுட்டு வெறுஞ்சோத்தை வெச்சேனா, இன்னொருத்தன் கபால்ன்னு பாய்ஞ்சுவந்து சோத்தை முழுங்க ஆரம்பிச்சுட்டான்.. ஆஹா!!.. இதுங்க என்னிய வெச்சு காமெடி பண்ணுதுங்களே…

அதுலேர்ந்து வெறுஞ்சோத்தைப்போட்டு, அதோட ஒருஓரத்துல குழம்பு ஊத்திவெச்சுட்டு... வேணுங்கறமாதிரி தின்னுக்கோன்னுட்டு வந்துடுவேன். அதுலேர்ந்து இவனுங்களுக்கு சோத்துக்காக்கா, தண்ணிக்காக்கா, கொழம்புக்காக்கான்னு அடையாள நாமகரணம் சூட்டப்பட்டது மறைக்கப்படாத வரலாற்று உண்மை :-) . இவனுங்க போனதும், மிச்சமீதியை எங்கூரு அதிகாரபூர்வமற்ற மாநிலப்பறவையான புறா, அப்றம் குருவியெல்லாம் வந்து காலிபண்ணும். தண்ணி குடிக்கிறதுல புறாம்மாவும்,அய்யாவும்தான் சமர்த்து.. தட்டுல இருக்கறதை மூச்சுக்கூட விடாம ‘சர்ர்ர்ர்ர்’ன்னு ஓரேயடியில குடிச்சுட்டுத்தான் நிமிருவாங்க.

இன்னிக்கி காலைல வழக்கம்போல, அஞ்சரைமணிக்கு கையில காப்பியோட பால்கனியில நின்னு, எதிர்ல தெரியிற மலைலேர்ந்து கொட்டிக்கிட்டிருக்கற அருவியை வேடிக்கை பார்த்துக்கிட்டே காப்பியை குடிச்சுமுடிச்சுட்டு,(நல்ல மழைபெஞ்சதுல திற்பரப்பு ரேஞ்சுக்கு அருவி கொட்டுது) வழக்கம்போல மை ஃபேவரிட், ‘ கணேஷாய தீமஹி..’யை கேக்கலாம்ன்னு சிஸ்டத்தை இயக்கிட்டு, காலைல டிபனுக்கு சாமையரிசி உப்புமா செய்யலாமா.. இல்லைன்னா, சேமியா உப்புமா செய்யலாமான்னு உலகமகா முடிவெடுக்கமுடியாம ஆழ்ந்த சிந்தனையில ஆழ்ந்திருந்ததை.., அரைஉறக்கம்ன்னு உலகவழக்குல சொல்றதையெல்லாம் நான் ஏத்துக்கமாட்டேம்ப்பா J (ஹை.. ஒர்ர்ர்ர்ரே வாக்கியமா எழுதிட்டேனே!!!.. வெரிகுட்)

அப்ப, பால்கனிலேர்ந்து ஒரே கூப்பாடு கேக்குது .. ‘இன்னும் சாப்பாடாகலை. பொறவு வா..’ன்னா கேக்க மாட்டேங்கான். நேத்திக்கு மிஞ்சிய சாதத்தை, ஆப்பத்துக்கு இன்னிக்கு அரைக்கிறப்ப சேர்த்து அரைக்க ஆகுமேன்னு ராத்திரியே தண்ணி ஊத்திவெச்சுட்டேன்.. பழையதைப்போயி போடமுடியுமா.. இவனுங்க சூடாவே சாப்டு பழகினவங்க... இப்ப என்ன செய்ய?.. 


பசிக்கு பாவமில்லைன்னுட்டு அந்த பழையதை கொஞ்சூண்டு பிழிஞ்சு வந்து போட்டேன்..”கா..கா..கா..’ ஒரே கத்தல். பழையது சாப்பிடமாட்டார் போலிருக்குன்னுட்டு ஒரு ஸ்லைஸ் ப்ரெட்டை பிச்சுப்போட்டேன்.. காலைல நீராகாரமோ, தயிர்விட்ட பழையதோ சாப்பிட்டா அல்சருக்கு நல்லதுன்னு தெரியாது போலிருக்கு. கண்டதையும் சாப்டறதால அல்சர் வராமயா இருக்கும்?.. ‘கா..கா..கா…’ இன்னும் சுருதி கூட்டி கத்துது. இது வழக்கமில்லியே… ஒருவேளை இவன் புதுசோ!!…

“காலைல அஞ்சரை மணிக்கு வந்து நின்னா,. இதான் கிடைக்கும். வேணும்ன்னா மத்தியானம் வா.. 'பிரியாணி' போடறேன்…’ன்னு சொன்னேன். அவ்ளோதான் ஓடியே போயிட்டான்…. என்னாச்சுன்னு தெரியலை. அப்றம் அந்த சாப்பாட்டையெல்லாம், வழக்கமான வாடிக்கையாளர்களான புறாவும்,குருவியும் வந்து காலிசெஞ்சாங்க.. ஆமா??... அந்தக்காக்கா ஏன் ஓடிப்போச்சு ??!!!!!!!......




Wednesday, 3 August 2011

அறிதுயில்..(திண்ணையில் வெளியானது)



                                             

குழந்தைகளுக்கு அழகே குறும்புதானே.. முழிச்சுட்டு இருக்கற நேரங்கள்ல அதுங்க பண்ற அட்டகாசம் இருக்கே.. அப்பப்பா:-)) ஒவ்வொண்ணும் அந்த விஷயத்துல கோகுலத்து கிருஷ்ணர்கள்தான். அதுவே, தூங்கறச்ச, அடடா!!.. கொள்ளையழகு!!. 


இந்தக்குழந்தைதான் அவ்ளோ விஷமம் செய்யுதுன்னு சத்தியம் செஞ்சாலும் யாரும் நம்ப மாட்டாங்க. அப்படியொரு தேவதைமாதிரியான சாந்தமானதொரு முகதரிசனத்தோட இருக்கும். பார்த்துக்கிட்டே இருக்கலாம்போல இருக்கும். தூங்கும்போது அதிகம் பார்க்கக்கூடாது.. கண்ணு பட்டுடும்ன்னு சொல்லுவாங்க. அதெல்லாம் உண்மையோன்னு தோணும்.


அதுங்க சேட்டைய தாங்கமுடியாம 'ஒரு நிமிஷம் சும்மாயிருக்க மாட்டியா'ன்னு அதுங்க கிட்ட பரிதாபமா மன்றாடுறதும் நாமதான். எப்பவாவது நம்ம மேல இரக்கப்பட்டு அதுங்க அமைதியா இருந்தா,  'இன்னிக்கு என்னாச்சு?.. புள்ள சுரத்தே இல்லாம இருக்குதே!!.. ஒடம்புக்கு ஏதாச்சும் இருக்குமோ' ன்னு பதறுவதும் நாமதான். 


நமக்கெல்லாம் பல்பு கொடுக்கறதுலயும், சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளாய் நம்மை ஆடவைக்கிறதுலயும் கில்லாடிங்க இந்த வாண்டுகள். சாப்பிட ஆரம்பிக்கும் அந்த ஆரம்ப வயசுகள்ல, ' இது வேணாம்,.. அது இருந்தாத்தான் சாப்பிடுவேன்.."ன்னு அடம் பிடிக்கும். அது கேக்குறதை செஞ்சு கொடுத்தா மூணாவதா இன்னொண்ணை கேட்டு பிடிவாதம் பிடிக்கும். நாமளும் புள்ளை சாப்பிட்டா சரின்னு அதுங்க எதைக்கேட்டாலும் மறுக்காம கொடுக்கறோம். 


ஒரு விதத்துல இது தப்புதான். கேட்டதையெல்லாம் கொடுத்து பழக்கிட்டு, அப்புறம் நாம கொடுக்கமுடியாத ஏதாவதொண்ணை அதுங்க கேக்கும்போது நம்மால தரமுடியலைன்னா அந்த ஏமாத்தத்தையும் அதுங்களால தாங்கிக்க முடியறதில்லை.. நாமளும் அதுக்கு பழக்கறதில்லை. அப்படி கேட்டு கிடைக்கலைன்னா அவ்ளோதான். பெரிய மனுஷர்கள் மாதிரி 'உம்'ன்னு உக்காந்திருப்பாங்க. எது கேட்டாலும் அவங்ககிட்டயிருந்து பதில்வராது.. கோவமா இருக்காங்களாம் :-)))))))) ரொம்ப அரும்பாடுபட்டுதான் சமாதானப்படுத்த வேண்டியிருக்கும். 


இதுல கோவிச்சுட்டு தூங்கறமாதிரி ஆக்டிங் கொடுக்கற அறுந்தவாலுகளும் உண்டு.. இங்கேயும் அப்படி ஒரு வாலோட ஆட்டத்தை வாசிச்சு ரசியுங்க :-)


ஆயிரம் முறை சொல்லியனுப்பியும்
இனிப்புடன் வரமறந்த
தந்தையின் மீதான நேற்றைய கோபத்தை
ஒரு கண்ணிலும்; ..
உடன் விளையாட வரமறுத்த
அன்னையின் மீதான இன்றைய கோபத்தை
இன்னொரு கண்ணிலும்
சுமந்துகொண்டு;
கட்டிலிலேறி கவிழ்ந்துகொள்கிறாய்..

என்னுடைய எல்லா
சமாதானமுயற்சிகளையும் புறந்தள்ளிவிடுகிறது….
உன்னுடைய செல்லக்கோப
கன்னஉப்பல்…

அம்மாசித்தாத்தாவின் பஞ்சுமிட்டாய்வண்டி
தூதனுப்பிய மணியோசையும்கூட
உனது பொய்த்தூக்கத்தை
கலைக்கமுடியாமல் வெட்கி;
முகம் மறைத்தோடுகிறது இருளில்..

தாயின் குரலும்
தந்தையின் சீண்டலும் பலனளியாமல்..
ஊர்ந்துவந்த நண்டும் நரியும்கூட
விரல்விட்டு இறங்கியோடிவிடுகின்றன..

இனிப்புப்பெட்டியின் கலகலச்சத்தம் ஏற்படுத்திய
இமைகளுக்குள்ளின் மெல்லிய நடமாட்டத்தை,
அவசரமாய் தலையணையில் முகம்புதைத்து
கைதுசெய்கிறாய்..

கொஞ்சலும் கெஞ்சலும் பயனற்றபொழுதில்;
மிட்டாய்ப்பெட்டி திரும்பக்கொடுக்கப்பட்டுவிடுமென்ற
செல்லமிரட்டலுக்கு உடனே பலனிருக்கிறது!!..
‘தூங்கும் பிள்ளைக்கு காலசையுமே’யென்ற
பல்லாண்டு பழைய அங்கலாய்ப்புக்கு
உடனே பதில்சொல்கிறாய் ‘தற்செயலாய்’ விரலசைத்து..

பொய்த்தூக்கமேயெனினும்
அவ்வழகும் ரசிக்கக்கூடியதேயன்றோ!!!!!..
இதற்காகவென்றேனும், அடிக்கடி ,
அறிதுயில் கொள்ளடா..
என்,
அனந்த பத்மநாபனே………


டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.




'பழ'மொழிகள் பத்து..

(படத்துக்கு நன்றி -இணையம்)
1. மாம்பழத்தை மரத்துலே பார்த்தா,..ஊறுகாயை பாட்டில்ல பார்க்கலாம்

2. மாமியார் உரிச்சா பலாப்பழம் .. மருமகள் உரிச்சா வாழைப்பழம்.

3. கூரை ஏறி கொய்யாப்பழம் பறிக்கமுடியாதவன்,..ஆல்ப்ஸ் மலைஏறி ஆப்பிள் பறிச்சேன்னானாம்..

4. ஒரு பெட்டி திராட்சைக்கு ஒரு பழம் பதம்..

5. ஆயிரம் ரூபாய்க்கு அன்னாசி வாங்குனவன்,.. அஞ்சு ரூபாய்க்கு கத்தி வாங்க யோசிச்சானாம்.

6. அக்கடை வாடிக்கையாளருக்கு இக்கடைப்பழம் சிறப்பு.

7. பேரீச்சம்பழம் களவுபோனா கணக்கு பார்ப்பான்.. பேரீச்சைமரம் போன இடம் தெரியாது.

8. பண்டிகை காலத்துல பஞ்சாமிர்தத்துலயும் அஞ்சாறு வகையாம்.

9. பழச்சாறு பிழியறப்ப சும்மா இருந்துட்டு, குடிக்கிறப்ப கிளாசை தூக்கிக்கிட்டு வந்த கதையால்ல இருக்கு!!!..

10.அலங்காரக்கூடையாம், ஜரிகைத்தாளாம்.. உள்ளே இருக்குமாம் அழுகலும் புளிப்பும்.



டிஸ்கி: இதுமாதிரி உங்களுக்கு தெரிஞ்ச பழமொழிகளை ரீமிக்ஸ் செஞ்சு 'பழ'மொழிகளாக்கி பின்னூட்டத்துல எடுத்துவிடுங்க :-))





Tuesday, 2 August 2011

மனசெல்லாம் பூவாசம்...(வல்லமையில் வெளியானது)


(படம் கொடுத்து உதவிய இணையத்துக்கு நன்றி)
‘டட்ட்டடட்ட்…’ என்று ஒரே சீராகப்போய்க்கொண்டிருந்த ஆட்டோ வேகம் குறைத்து, ஒரு காரின் பின்னால் நின்றபோதுதான்,.. ‘ஓ.. சிக்னல் விழுந்துடுச்சா’ என்று நினைத்தபடி லேசாக தலையைத்தாழ்த்தி, பக்கத்தில் அமர்ந்திருந்த ரோஷினியைத்தாண்டி, கிடைத்த இடைவெளியில் தெரிந்த ஆட்டோமேடிக் சிக்னலுக்கு பார்வையை அனுப்பினேன். ரெய்டு வரப்போகிறார்கள் என்பதைத்தெரிந்துகொண்ட அரசியல்வாதியின் பல்ஸைப்போல சிகப்பு நிற எண்கள் வேகவேகமாக இறங்குவரிசையில் மாறிக்கொண்டிருந்தன.

‘தீதி… ஒரு ரூபா கொடேன்.. காலைலேர்ந்து என் தம்பிக்கு சாயாகூட வாங்கிக்கொடுக்கமுடியலை.. பசிக்குது..’ என்றபடி பரிதாபமாக நோக்கியபடி, ரோஷினி தடுக்கத்தடுக்க ஆட்டோவுக்குள் தெரிந்த சல்வார்கால்களைத்தொட இடுப்பிலிருந்த தன்தம்பியுடன் குனிந்தாள்,.. நிமிர்ந்தபோதுதான் என்னைப்பார்த்திருக்கவேண்டும். வறுமையின் மொத்த உருவமாய் நின்ற அவள், அடுத்தவினாடியில் கழுகைக்கண்ட கோழிக்குஞ்சாய் ஓடி ரோட்டின் அந்தப்பக்கம் நின்றுகொண்டிருந்த பேருந்தின் பின்னால் மறைந்துவிட்டாள்.

‘அந்தப்பொண்ணு ஏன் உன்னைப்பார்த்துட்டு ஒளிஞ்சு ஓடுது?..’ கேள்வியாய் நோக்கிய ரோஷினிக்கு பதில் சொல்ல எத்தனிக்குமுன் பச்சைவிளக்கு எரிந்து ஆட்டோ புறப்பட்டுவிட்டது. அவளுக்கு பதிலாய்ச்சொன்ன சொற்களை காற்றோடு அரைத்துச்சென்றது எங்களைக்கடந்த ட்ரக் ஒன்று. ‘அப்புறம் சொல்கிறேன்.. ‘ என்று கையசைத்துவிட்டு, ரயில்வே ஸ்டேஷன் முன்னால் வந்து நின்றதும் இறங்கி கூட்டத்தோடு கூட்டமாய்க்கலந்து டிக்கெட் கூப்பன்களை தானியங்கி மெஷின்களுக்கு தின்னக்கொடுத்து, அடையாளம் வாங்கிக்கொண்டுவிட்டு திரும்பினேன்.

ப்ளாட்பாரத்தில் வந்து தூண்களைச்சுற்றி அமைக்கப்பட்டிருந்த கிரானைட் திண்ணைகள் ஒன்றில் வாகாக அமர்ந்துகொண்டோம். ‘பயணிகள் கவனத்திற்கு..’ என்று ஆரம்பித்து குறிப்பிட்ட இரண்டு ஸ்டேஷன்களுக்கு இடையே ரிப்பேர் வேலை நடப்பதால் சாயந்திரம் வரை அந்தப்பாதையில் மட்டும் ரயில்கள் ஓடாது என்பதை வருத்தத்துடன் சொல்வதாக ரயில்வே அறிவிப்பு ஒலித்து ஓய்ந்தது.  நாங்கள் எங்களது ரயில் வருவதற்காக காத்திருந்த நேரத்தில்,…’ இப்ப சொல்லு..’ என்றபடி என் முகத்தை ஏறிட்டாள். விடமாட்டாள் போலிருக்கிறதே!!..

‘அது ஒண்ணுமில்லை.. வழக்கமா தினமும் அந்த சிக்னல் பக்கம் பார்க்கறதுதான். குடும்பம் அங்கியேதான் ப்ளாட்பார்முல வசிக்குது போலிருக்கு. அதான் பார்த்தியே, பத்துப்பதினஞ்சு பசங்க அங்கியே சுத்திக்கிட்டு, சிக்னல்ல நிக்கிறவங்ககிட்ட காசு கேக்கறதை..’

‘ஆமா,.. பார்த்திருக்கேன். சிலதுகள் வெறுமே காசு கேக்கும். சிலதுகள் இன்னிக்கு மாதிரி கால்ல விழுந்துடும். சில பசங்க போட்டிருக்கற சட்டையையோ, துப்பட்டாவயோ வெச்சு காரு கண்ணாடிகள தொடச்சுட்டு காசு கேக்கும். ப்பா.. பார்க்கவே பரிதாபமாயிருக்கும். காசு கொடுத்தா இதுகளை ஊக்குவிக்கறாப்ல ஆகிடுமேன்னும் தோணுது.. பசங்களைக்கடத்திட்டு வந்து இந்தத்தொழில்ல இறக்கி சம்பாத்தியம் செய்யற கும்பல் இன்னும் பெருகிடுமே. அதுக்காக, பார்த்துட்டு சும்மாப்போகவும் முடியலை. என்ன செய்யறதுன்னுதான் தோணலை..’

‘ஒரு வயசு வந்தப்புறம், சில ஆம்பிளைப்பசங்க கெட்ட சகவாசம் காரணமா, சமூகவிரோதச்செயல்கள்ல ஈடுபடறாங்க.. ஆனா, அந்தப்பொண் குழந்தைகள்?... அவங்க எதிர்காலம். அறிஞ்சும் அறியாமலும் இருக்கற வயசுல யாராச்சும் அவங்களை தப்பிதமா உபயோகப்படுத்தவும் ச்சான்ஸ் இருக்கு.. அது இன்னும் பரிதாபம். அதான், இப்ப பார்த்தோமே!!.. அந்தப்பொண்ணுகிட்ட இப்படி பிச்சை எடுக்கறதுக்கு பதிலா, குறைஞ்சபட்சம் சிக்னல்கள்ல ஏதாவது சின்னச்சின்ன பொருட்களை வித்துப்பொழைக்கலாமேன்னு டோஸ் விடுவேன். அதான், என்னைப்பார்த்ததும் ஓடுது..’

‘ இவ்ளோதானே.. எப்படியும் திரும்பிப்போகறச்சே அந்தவழியாத்தானே போகணும். நான் பார்த்துக்கறேன்…” என்று அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் ரோஷினி.

போன வேலையை நல்லபடியாக முடித்துக்கொண்டு திரும்பியபோது, அதே ரோடு, அதே சிக்னலில் அதே பெண் பார்வைக்குக்கிடைத்தாள். இப்போது வேறு ஒரு வாகனத்தில், கார்க்கண்ணாடியை துடைத்துக்கொண்டு கெஞ்சிக்கொண்டிருந்தாள். ஒன்றும் கிடைக்கவில்லையோ என்னவோ.. சிக்னல் கிடைத்து அந்த வாகனம் கிளம்பியபோது, என்னவோ உதட்டுக்குள் திட்டுவதுபோல் தெரிந்தது. துப்பட்டாவை தோள்மேல் போட்டுக்கொண்டு ப்ளாட்பாரத்துக்கு திரும்பியவள், சத்தமில்லாமல் வந்து பின்னால் நின்ற எங்களைக்கவனிக்கவில்லை.

கவனித்து ஓடத்தயாரானவளை கையைப்பிடித்து நிறுத்தினாள் ரோஷினி. ‘ தீதி.. என்னை விட்டுடுங்க.. அப்பா அடிப்பாரு..’ என்று பார்வையை அங்குமிங்கும் செலுத்திக்கொண்டே அலைபாய்ந்தவளை அமைதிப்படுத்திப்பேசிய ரோஷினியை ஏறிட்டாள் அந்தப்பெண்.

‘வேற என்னதான் செய்யறது.. பிச்சை எடுக்கறது எனக்கும் பிடிக்கலைதான். வயிறுன்னு ஒண்ணுஇருக்கே.. ஏழையா, ப்ளாட்பாரத்துல பொறந்தது என் தப்பா?..’ வெறுப்பை உமிழ்ந்தன அவளது வார்த்தைகள்.

‘சரி.. அதுக்காக பிச்சை எடுக்கறது ரொம்ப ஒசத்தியோ..’ ரோஷினியும் விடவில்லை. ‘ இங்க பாரு. நான் N.G.O.வுல இருக்கேன்.. என்னால முடிஞ்ச உதவிகளைச்செய்யறேன். ஏன்னா, தேவைப்படறவங்களுக்கு உதவுறதுதான் எங்க வேலையே. உன்னாட்டம் எத்தனைபேரு பூவு, சின்னப்பசங்களுக்கு புக்கு, பென்சில்ன்னு கூட சிக்னல்ல வித்துப்பொழைக்கிறாங்க. உனக்கென்ன?..”

‘அதுக்கு காசு வேணுமே..’ தரையைப்பார்த்துக்கொண்டு பதிலளித்தாள் சிறுமி. ‘விவரமானவளாத்தான் இருக்கே.. நேத்து கூட இனிமே பிச்சை எடுக்காதேன்னு சொல்லி பத்து ரூபா கொடுத்தேனே. என்ன செஞ்சே?..’ என்னிடமிருந்து புறப்பட்ட கேள்விக்கணையை, ‘ எங்கப்பா குடிக்கிறதுக்கு புடிங்கிட்டுப்போயிட்டாரு..’ என்ற பதில் கணையால் முறித்துப்போட்டாள்.

‘சரி.. இப்ப நான் காசு தரமாட்டேன். அதுக்குப்பதிலா கொஞ்சம் பூவு வாங்கிட்டு வந்து தருவேன். எப்படி விக்கணும்ன்னும் சொல்லித்தருவேன். புத்தியா பொழைச்சுக்க. என்ன?..’ என்றாள் ரோஷினி.

மெல்ல தலையாட்டிய சிறுமியின் கைகளில், பக்கத்து செக்டரில் இருந்த மொத்தமாய் விற்பனை செய்யும் பூமார்க்கெட்டிலிருந்துநான் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்த,.. ஒரே சீராக வெட்டப்பட்டிருந்த பத்து மல்லிகைப்பூச்சரத்துண்டுகளை திணித்தாள். ‘ஒரு துண்டு நாலு மூணுலேர்ந்து நாலுரூபாய்க்குள்ள விக்கணும்.. பேரம் பேசி வாங்குறவங்களும் இருப்பாங்க. சட்னு ஒத்துக்கிட்டு ஒரேயடியா அவங்க சொல்ற விலைக்கு குடுத்துடாதே. விலையை குறைக்க மாட்டேன்னு கொஞ்ச நேரம் பிகு செஞ்சுக்கிட்டு அப்புறமா கொஞ்சமா குறைச்சுக்கொடு. எல்லாம் போகப்போக நீயே பழகிப்பே.. இப்ப ஓடு. சிக்னல் விழுந்துடுச்சு பாரு..’

ஏதோ பிறந்ததிலிருந்தே இதே தொழில்செய்துகொண்டிருப்பவள் போல ஒவ்வொரு வண்டியாக ஓடியோடி பூ விற்றுக்கொண்டிருந்தாள். ‘ அக்காவுக்கு பூ வாங்கிக்கொடுங்க சாரே.. வண்டிக்குள்ள இருக்கற சாமிபடத்துக்கு பூ போடுங்க ஐயா..’ ஒவ்வொன்றாய் விற்றுத்தீர்ந்துகொண்டிருந்தன. கோடுபோட்டால் ரோடு போட்டுவிடுகிறாளே.. சாமர்த்தியசாலிதான்.

அங்கேயே காத்துக்கொண்டிருந்த எங்களிடம் முகம் கொள்ளாப்பூரிப்புடன் திரும்பி வந்தாள். கையில் இரண்டு மூன்று பூத்துண்டுகள் மட்டுமே எஞ்சியிருந்தன. ஒரு பூத்துண்டு இரண்டு ரூபாய் என்று நான் வாங்கிக்கொண்டுவந்து கொடுத்தது அவளுக்கு எத்தனை ரூபாய் லாபத்தைச்சம்பாதித்துக்கொடுத்திருக்கிறது என்று கணக்குப்போட்டு அவளுக்குச்சொன்னபோது நம்பமுடியாமல் விழிபிதுங்கப்பார்த்தாள்.
மலங்க மலங்க விழித்த அந்தக்குழந்தையை பார்க்க பரிதாபமாக இருந்தது..

லேசாக திரையிட்ட கண்ணீரை சமாளித்துக்கொண்டு, ‘ பார்த்தேயில்ல.. பூ விக்கிறப்ப உன்னை யாரும் அடிச்சுவெரட்டலை. வேணாம்ன்னாக்கூட மரியாதையா ‘வேணாம்மா’ன்னுதான் சொல்றாங்க. இந்த வாழ்க்கை உனக்கு வேணும்ன்னா சொல்லு.. என்னால முடிஞ்ச ஏற்பாடு செய்யறேன். உங்க அப்பாவ பத்தி கவலைப்படாதே.. தேவைப்பட்டா நாங்க லேசா மெரட்டிவைப்போம். பயப்படாதே..’ என்றேன்.

‘‘மெரட்ட தேவையிருக்காதுண்ணே.. அதை நான் பார்த்துக்கறேன்.. உங்களுக்கு வசதிப்பட்டா இதேமாதிரி தேவைப்படறப்ப ஒத்தாசை செய்யுங்க. அது போதும்..’ என்றவள், ‘அக்காவுக்கு பூ வாங்கிக்கொடுங்கண்ணா.. வெளியே கூட்டிட்டு வந்துருக்கீங்கல்ல..’ சின்னச்சிரிப்புடன் ஒரு துண்டு பூவை நீட்டினாள் என்னிடம்.

‘எங்கிட்டயேவா!!!.. அது சரி!!. ரெண்டு துண்டாவே கொடு..’ என்று சிரித்தபடி எட்டு ரூபாயை நீட்டினேன் பேரம் பேசாமல்.. அப்போதுதான் மலரத்தொடங்கியிருந்த அரும்புகள் மெலிதான வாசனையை அந்த பிராந்தியம் முழுவதும் பரப்பத்தொடங்கின.


டிஸ்கி: இந்த சிறுகதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி.












Monday, 1 August 2011

தமிழ்மணத்துல இந்த வார நட்சத்திரமாம் : -) அறிமுகம்..


எழுத ஆரம்பித்தது...


சின்னவயசுல, அதாவது அஞ்சாறு வயசு இருக்கும்போதே எழுத ஆரம்பிச்சுட்டேன். சிலேட்டுக்குச்சியால் 'அ' ன்னு எழுதினதுதான் என்னோட முதல் எழுத்தனுபவம். என்னோட முதல் வாசகரான அப்பா, ' ஆஹா!!.. என்பொண்ணு என்ன அழகா எழுதறா!!..' அப்படீன்னு பாராட்டினதுதான் முதல் விமர்சனமும் கூட.. :-))))).

ஒவ்வொரு எழுத்தாளர்களையும் வாசிக்க வாசிக்கத்தான், நாமளும் எழுதணும்கற ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரம்பிச்சது. கதை, கவிதைன்னு மனசுல தோணுறதையெல்லாம் ரகசியமா ஒரு நோட்டுல எழுதி நானே படிச்சுப்பார்த்துப்பேனே தவிர, அதை மத்தவங்க பார்வைக்கும் கொண்டுபோகணும்ன்னு தோணவேயில்லை. எதேச்சையா, என்னோட கவிதைக்கு கல்லூரியில் கிடைச்ச பாராட்டு, 'பரவால்லையே நாம எழுதறதும் வாசிக்கறாப்லதான் இருக்கு'ன்னு ஒரு திருப்தியை கொடுத்தது.

அந்த உத்வேகத்துல, 'விடிய மறுக்கும் இரவுகள்' ங்கற தலைப்புல நடத்தப்பட்ட, ஒரு கவிதைப்போட்டிக்கு எங்க கல்லூரி சார்பா அனுப்பப்பட்ட கவிதைகள்ல என்னோட கவிதை, ஆறுதல் பரிசை தட்டிக்கிட்டு வந்தது... கலந்துக்கிட்ட முதல் போட்டியிலேயே அது பரிசை தட்டிக்கிட்டு வந்ததால, ஏதோ,.. முதல்பரிசே கிடைச்ச சந்தோஷம் எனக்கு :-) கவிதை நோட்டு ரொம்ப காலத்துக்கு முன்னாடி தொலைஞ்சு போனதால, முழுக்கவிதையும் இப்ப ஞாபகம் இல்லை..

'ஒரு வேளை
கனவுகளை மட்டும் அனுபவிப்பதற்காகத்தான்
எங்கள் இரவுகள்
இன்னும்
விடிய மறுக்கின்றனவோ...' அப்டீன்னு முடியும் கடைசிபத்தி வரிகள் மட்டும் ஞாபகமிருக்கு :-).  கல்லூரியோட ஆண்டுவிழா மலர்லகூட பரிசுகிடைச்ச விஷயம் என்பேரோட வந்துச்சு..  போனஸா என்னோட இன்னொரு கவிதை வெளியீட்டோட... ரொம்ப சந்தோஷமா இருந்தது :-)

அங்கிருந்து ஆரம்பிச்ச எழுத்துப்பயணம் இப்போ வலைப்பூவில் தொடர்ந்துக்கிட்டிருக்கு.. இதோ இப்ப, தமிழ்மண நட்சத்திரமா உங்க முன்னாடி நின்னுட்டிருக்கேன். செய்தியறிஞ்சதும் லேசா ஒரு உதறல் இருந்தாலும், இதையும் ஜமாய்ச்சுடலாம்ன்னு ஒரு உற்சாகத்துல இறங்கிட்டேன். ஜமாய்க்கப்போறேனா.. சொதப்பி வைக்கப்போறேனான்னு தெரியலை :-))


இப்ப என்னைப்பத்தி ஒரு சின்னஅறிமுகம்:

வலைப்பதிவில் தோன்றும் பெயர்..

அமைதிச்சாரல்.

பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம்..

கிட்டத்தட்ட சொந்தப்பேரு மாதிரிதான். தமிழ்ப்படுத்தியிருக்கேன்.. பேரு யோசிக்கும்போது காசை சுண்டிவிட்டேன். பூ விழுந்தா பூப்பாதை(சொந்தப்பேரு),தலை விழுந்தா சிங்கப்பாதை(புனைப்பேரு). அது என்னடான்னா ஓடிப்போயி சிஸ்டம் இருக்கிற டேபிளுக்கு கீழே போயி தூங்கிடுச்சு. என்னடா செய்யறதுன்னு யோசிச்சேன்.எனக்கு மழை பிடிக்கும்.. அதுவும் அடிச்சிப்பெய்யுற மழையை விட மெல்லிய சாரல் ரொம்பப்பிடிக்கும். அதனால அந்தப்பேரு.

தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

பொழுதுபோகாத ஒரு நாள்லதான் கூகிள்ல தமிழ்வார்த்தைகள் வர்றதை கண்டுபிடிச்சேன்.. அது என்னடான்னா துளசிதளத்துக்கு கொண்டுபோய் விட்டது. 'வாங்களேன்.. கேக் சாப்புடலாம்'ன்னு கூப்பிட்டு துளசியக்கா விருந்து வெச்சாங்க. அப்புறம் அங்கியே செட்டிலாயிட்டேன்.. மறுபடி கண்டுபிடிக்கத்தெரியாம ரெண்டுமூணு நாள் முழிச்சது தனிக்கதை. கடைசியில் கூகிள் அண்ணாச்சி கண்டுபிடிச்சுக்கொடுத்தார். மொதல்ல தமிழ்மணம் இருக்கிறது தெரியாது.. இடுகைகளுக்கு பின்னூட்டம் வரும்ன்னும் தெரியாது..

கொஞ்சம் கொஞ்சமா தமிழ்மணம் பக்கமும் வர ஆரம்பிச்சேன். ரொம்ப நாளுக்கப்புறம் சொந்தவூடு கட்டலாம்ன்னு முடிவெடுக்கும்போதுதான் கெட்டப்பை கொஞ்சம் மாத்திக்கலாம்ன்னு இந்தப்பேரு வெச்சிக்கிட்டேன்.. அக்காவுக்கு லாரி அனுப்ப யோசிக்கிறவங்க அது நெறைய ரோஜாப்பூவை அனுப்பிவையுங்க, முட்களை எம்பக்கம் அனுப்பிவிடுங்க :-)))

எழுதுவது பொழுதுபோக்குக்காகவா,.. அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிறைய சம்பாதிச்சிருக்கேன்..அதவெச்சு,மும்பையின் கொலாபாபகுதியில் வில்லா வாங்கிப்போடணும்ன்னு திட்டம்.எவ்வளவுன்னு சொன்னா ஐ.டி.லேர்ந்து ஆட்கள் வந்துடுவாங்க.:-))))). இப்படீல்லாம் சொல்லுவேன்னு நினைச்சீங்களா... நான் சம்பாரிச்சது ஓரளவு தன்னம்பிக்கையை.. நிறைய நட்புகளை, கொஞ்சூண்டு எழுத்தை.

எழுதும் தமிழ் வலைப்பதிவுகள்..

ஒண்ணு உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச 'அமைதிச்சாரல்'.

கவிதைன்னு கிறுக்கறதை தனியா தொகுக்க வசதியா 'கவிதை நேரமிது'

பேரண்ட்ஸ் கிளப்பிலும் இருக்கேன்.

எனக்கு கொஞ்சம் பாட்டுக்கிறுக்கு உண்டு. மென்மையான பாடல்களை கேக்கப்பிடிக்கும். அதுக்காக ஆரம்பிச்சது குயில்களின் கீதங்கள்.

பதிவை பற்றி முதன் முதலில் தொடர்புகொண்டு பாராட்டியவர்கள்...

முதல்பின்னூட்டம் போட்ட சகோ எல்.கே,ராமலஷ்மி மேடம், துளசியக்கா, வல்லிம்மா,முத்தக்கா, அப்புறம் இப்ப பின்னூட்டத்துல பாராட்டுற நீங்க வரைக்கும் பெரிய லிஸ்டே இருக்குதே.. எதைன்னு சொல்ல!!! :-)

என்னைப்பற்றி...

நானே என்னைப்பத்தி என்ன சொல்றது..என் எழுத்துக்கள் சொல்லட்டுமே..(அப்படி ஒண்ணு நான் போடுற மொக்கையில் இருக்கா என்ன???):-))))))

வாசிப்பனுபவம்..

வாசிப்பது என்பது, எப்பொழுதும் என்னை, என் உலகத்துக்கு இட்டுச்செல்வதாகவே இருந்திருக்கிறது. இரண்டாம் வகுப்பில் படிக்கும்போது, குமுதம், விகடனை எழுத்துக்கூட்டி படிப்பதில் ஆரம்பித்தது, நாளடைவில் கதைப்பைத்தியமாகவே ஆகிவிட்டேன். அம்மா திட்டியதோ,டியூஷன் டீச்சரிடம் வத்தி வைத்து கண்டிக்க செய்வதோ, எதுவும், கதைப்புத்தகத்தை, பாடப்புத்தகத்தில் மறைத்து வைத்து படிக்க ஆரம்பித்த நிமிடத்தில் மறந்துவிடுவேன், இந்த உலகத்தையும் சேர்த்து.

நாளடைவில் பூந்தளிர் படிக்க கிடைத்தது. என் வாசிப்புத்தோழன் என் கடைசி தம்பிதான். கடையில் இருந்து வாங்கி வந்ததும், என் மடியில் அமர்ந்து கொண்டு,... வாசிப்போம். அப்போது அது மாதமிரண்டு முறை வந்து கொண்டிருந்தது, எட்டு ரூபாய் என்று நினைக்கிறேன்.காக்கை காளி,சமந்தகன், வேட்டைக்கார வேம்பு எல்லோரும் எங்கள் தோழர்கள். அதன்பின் champak,அம்புலிமாமா,என்று வளர்ந்து, சுஜாதா கதைகளை தேடிப்பிடித்து வாசிப்பதில் தீவிரமடைந்தது.

எனது மாமா ஒருவர், அப்போது லைப்ரரி ஒன்றில் உறுப்பினராகியிருந்தார்.அங்கிருந்து நாவல்களை எடுத்துக்கிட்டு வருவார். பாக்கெட் நாவல் அப்போதுதான் அறிமுகமான சமயம். ராஜேஷ்குமார் மட்டும்தான் அதில் எழுதிக்கொண்டிருந்தார். த்ரில்லர் கதைகளுக்காக விரும்பி படிப்பேன். வார இதழ்களில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களின் நாவல்கள், ஒவ்வொன்றாக படிக்க கிடைத்தது. ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது, வாசிக்கும் பழக்கம் வந்தது. பாடப்புத்தகங்கள் மூளைக்குள் ஏற்றும் சுமையை, கொஞ்சம் இறக்கி வைக்க முடிந்தது. இப்போதும், சாப்பிடும்போது படிக்க ஏதாவது இருக்க வேண்டும். தவறென்று தெரிந்தும் விட முடியவில்லை.

பள்ளியில் படிக்கும்போது, தமிழாசிரியர் கல்கியை அறிமுகப்படுத்தினார். சாண்டில்யனையாவது, சிலவார இதழ்களில் வாசிக்க கிடைத்தது. கல்கியை வாசிக்க கல்லூரி வரை காத்திருக்க வேண்டி வந்தது. எங்கள் கல்லூரியில், ஒவ்வொருவருக்கும் இரண்டு டோக்கன்கள் கொடுப்பார்கள். அதாவது ஒரே நேரத்தில், இரண்டு புத்தகங்கள் எடுக்க அனுமதி.படித்து விட்டு திருப்பிக்கொடுக்கும்போதுதான் அடுத்த புத்தகம் கிடைக்கும்.கோ-எஜூகேஷன் ஆதலால் வாரத்தில் செவ்வாய், வெள்ளி மட்டும்தான் பெண்கள் லைப்ரரிக்கு செல்ல அனுமதி உண்டு.பொன்னியின் செல்வனையும், சிவகாமியின் சபதத்தையும் எத்தனைமுறை வாசித்திருப்பேன் என்று நினைவில்லை.

இப்போதும் அடிக்கடி சென்னை லைப்ரரி. காம் சென்று வாசிப்பேன். தமிழாசிரியர் மெர்க்குரிப்பூக்களைப்பற்றி சொன்னதிலிருந்து, பாலகுமாரன் அறிமுகமானார்.ஜெயகாந்தனின் எழுத்துக்களை தேடித்தேடி படித்ததுண்டு.சிவசங்கரி எழுதியதில், நண்டு எனக்கு பிடிக்கும், இன்னொரு நாவலான 'குட்டி' திரைப்படமாகக்கூட வந்தது. சுஜாதாவின்,' கரையெல்லாம் செண்பகப்பூ' எங்கள் லைப்ரரியில் ஒரு நாளும் இருந்ததில்லை. எப்போது கேட்டாலும் யாராவது எடுத்துப்போயிருப்பதாகத்தான் பதில் வரும். காத்திருந்தே மூன்று வருட படிப்பும் முடிந்துவிட்டது. கடைசியில்,திரைப்படமாக பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டேன்.

பூர்வீகம் திர்னவேலி மாவட்டமா இருந்தாலும் ,  வாழ்க்கையின் ஒரு சிறுபகுதியை கன்யாகுமரி மாவட்டத்துல கழிக்க நேர்ந்ததன் பலனா, அந்த மாவட்டத்துலயே, நாஞ்சில் நாட்டுப்பகுதியில் புகுந்தவீடும் அமையப்பெற்று இப்போ மும்பையில் மையம் கொண்டிருக்கிறது என்வாழ்க்கை :-)). இங்கே வந்தபுதுசுல தமிழ்படிக்க, கேக்க ரொம்பவே ஏக்கமாருக்கும். இப்ப எல்லாத்துக்கும் சேர்த்து, வலைப்பூக்கள், இணைய இதழ்கள்ன்னு படுதீவிரமா, விட்டுப்போனதையெல்லாம் சேர்த்துவெச்சு வாசிக்கவும், விட்டுப்போன எழுத்தை தொடரவும் ஆரம்பிச்சிருக்கேன் :-))

இன்னும் ஒரு வாரத்துக்கு நம்ம ராஜாங்கம் இங்கேதான்.. மறக்காம நண்பர்களெல்லாம் சுற்றம்சூழ வந்துருங்கோ :-))))

டிஸ்கி: அறிமுகப்படலத்தை எங்கியோ படிச்சமாதிரியே இருக்குன்னுதானே நினைக்கிறீங்க. ஏற்கனவே பகிர்ந்துக்கிட்டதுதான்.. ஆனா, இப்ப கொஞ்சம் மாற்றங்களோடு :-))


LinkWithin

Related Posts with Thumbnails