Showing posts with label மும்பை மழை.. Show all posts
Showing posts with label மும்பை மழை.. Show all posts

Wednesday, 30 June 2010

மழையே மழையே...4(கடைசிப்பாகம்).



சூரிய பகவானின் தரிசனம் கண்டு ரெண்டு மூணு நாள் ஆகியிருக்கும். அன்னிக்கு மதியத்துக்கு மேல மழை கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு நிக்க ஆரம்பிச்சுடுச்சு. மழை விட்டும் தூவானம் விடாத கதையா, ஹை டை இன்னும் முடியாததால தண்ணீர் மட்டம் அப்படியே இருந்தது. பசங்களெல்லாம் கிடைச்ச வாய்ப்பை நழுவ விடாம கப்பல் செஞ்சுவிட்டு விளையாடிக்கிட்டிருந்தாங்க. மெதுவா காரை நிறுத்தியிருந்த இடத்துக்கு போய் பார்த்தேன்.எதிர்பார்த்ததுதான்... மிக்ஸிங் எதுவுமில்லாமலேயே தண்ணியில மிதந்துக்கிட்டிருக்கு. நல்லவேளை இருக்கைகள் வரை தண்ணி ரொம்பலை. ஆக்ஸிலேட்டர் நல்லா கடப்பாரை நீச்சலடிச்சு குளிச்சிக்கிட்டிருக்கு. இந்த மழைக்கப்புறம் எல்லா சர்வீஸ் செண்டர்களிலும் பயங்கர பிஸினெஸ் தெரியுமோ..

மதியத்துக்கு மேல நீர்மட்டம் குறைய ஆரம்பிச்சது. இப்ப ரங்க்ஸ் பையரை கூட்டிக்கிட்டு, 'சும்மா.. அப்டிக்கா போயிட்டு வர்றேன்'ன்னு நழுவிட்டார். போயிட்டு சாவகாசமா, ஆடி அசைஞ்சு அரைகப் பால் பாக்கெட்டோட வர்றாங்க. ஏது இதுன்னா.. ரெண்டுபேரும் ஊர்க்காடெல்லாம் சுத்திச்சுத்தி, ஊருக்கு வெளிய இருக்கிற பண்ணைக்கு பக்கமா போயிருக்காங்க. அங்க பால்சப்ளை நடக்கிறதை பார்த்ததும் வாங்கிட்டு வந்திருக்காங்க. அரைகப் பால் வெறும் முப்பதே ரூபாய்தானாம். இதுல, அரைமணிக்கொருக்கா ஊசிபோட்டு பால்சுரக்க வெச்சு, காசுபார்த்த கொடுமையும் அங்கெல்லாம் நடந்துக்கிட்டிருந்ததாம். நெறைய மாடுகள் வெள்ளத்தில் அடிச்சிக்கிட்டு போயிட்டதால உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டம். அதை இப்படி ஈடுகட்டி மழையுள்ளபோதே நனைஞ்சிருக்காங்க.

கிட்டத்தட்ட நாலாம் நாள் தண்ணீரெல்லாம் சுத்தமா வடிஞ்சு, தரையெல்லாம் கொஞ்சம் காயவும் ஆரம்பிச்சுடுச்சு. அப்பாடா... இனி இயல்பு நிலை திரும்பிடும்ன்னு நினைச்சிருந்தோம். வீட்டுக்குள்ளேயே இருந்தா ஊர் நிலவரம் எப்படி தெரியும்!!. கிளம்பிட்டேன்.. ரோடெல்லாம் ஒரே குப்பை. தண்ணீரில் ஊறிப்போன ஃபர்னிச்சர்கள், மெத்தைகள். பாய் தலையணைகள், உணவுப்பொருட்கள்ன்னு எல்லாத்தையும் மக்கள் வெளியே கொண்டு வந்து குப்பையா குமிச்சிக்கிட்டிருக்காங்க . வீட்டை சுத்தம் பண்ண வேணாமா.. கடைத்தெருவிலிருந்த ஒண்ணு ரெண்டு கடைகளை தவிர மற்ற இடங்களில் தண்ணீர் புகுந்ததால ஊறிப்போன அரிசி, சோளம், கோதுமை மூட்டைகளை அப்படியே குப்பைத்தொட்டிக்கு பக்கத்துல கொண்டாந்து கொட்டியிருந்தாங்க.

ஒருகடையின் வெளியே வெச்சிருந்த போர்டை பார்த்ததும் திக்குன்னு ஆயிடுச்சு. 'பக்கத்தூர்ல இருக்கிற அணை எப்போ வேணும்ன்னாலும் உடையலாம், எல்லாரும் பாதுகாப்பா இருந்துக்கோங்க'ன்னு எழுதி வெச்சிருந்தாங்க. அந்த அணை நிரம்பிவழியுது, ஏகப்பட்ட ஷட்டர்களை திறந்து தண்ணீரை வெளியேத்துறாங்கன்னு தோழி ஏற்கனவே சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. உடனே வீட்டுக்கு ஓடிவந்தேன். இங்கே என்னடான்னா அதுக்குள்ளே இதப்பத்தி கேள்விப்பட்டு மீட்டிங்கை கூட்டிட்டாங்க. அப்படி அணை ஒடைஞ்சா தண்ணி அரை மணி நேரத்துல இங்கே வந்துடும். மொதல்ல தரைத்தளம் மற்றும் முதல் தளத்துல இருக்கிறவங்க, முக்கியமான பொருட்களை (documents, pass books, passport, jewels,cash) எடுத்துக்கிட்டு மேல்தளங்கள்ல இருக்கிறவங்க வீட்டுக்கு போயிடுங்கன்னு அறிவிச்சாங்க. எங்க வீட்டுக்கும் ரெண்டு ஃபேமிலியை அழைச்சோம். முக்கியமான பொருட்களோட கம்ப்யூட்டர், டிவி, உணவுப்பொருட்கள்ன்னு என்னல்லாம் கொண்டு வரமுடியுமோ, அதையெல்லாம் எங்க வீட்டுல பத்திரப்படுத்தினாங்க.

அந்த சூழ்நிலையில் எனக்கு 'கள்ளிக்காட்டு இதிகாசம்'தான் ஞாபகம் வந்தது. வைகை அணையில் நீர் நிரம்பும்போது இப்படித்தானே ஊர்களெல்லாம் மூழ்கும். அந்த சூழ்நிலையிலும் ரங்க்ஸ் கிட்டபோய் செயின் இருக்கான்னு கேட்டேன். கடைசி நேரத்துல காமெடி பண்றாளே.. பயத்துல மூளை கலங்கிடுச்சோன்னு நினைச்சாரோ இல்லியோ.. 'எதுக்கு?' ன்னார். 'இல்ல, காரை கட்டிப்போட்டா வெள்ளத்துல அடிச்சிக்கிட்டு போவாதில்ல'ன்னு சொன்னப்புறம்தான் நான் கேட்டது தங்கச்செயின் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டு நிம்மதிப்பெருமூச்சு விட்டார். அணை உடைஞ்சு வெள்ளம் வந்தா அந்த வேகத்துல நம்ம பில்டிங்கே நிக்குமோ நிக்காதோ.. ஸ்டீல் செயினெல்லாம் எந்த மூலைக்கு.. பொழச்சுக்கெடந்தா நம்ம கார்ல பயணம்.. இல்லேன்னா தேவலோக வாகனத்துல பயணம். எது வாய்க்குதோ பாக்கலாம்.

இத்தனை பேர் ஒரே சமயத்துல வந்தா ட்ராபிக் ஜாம் ஆயிடும்ன்னு நெனைச்ச முப்பத்து முக்கோடி தேவர்களெல்லாம் ஓவர்டைம் பாத்து, அந்த அணையை காப்பாத்திட்டாங்க. சில இடங்களில், அணை உடையப்போவுதுன்னு வதந்தியா கிளப்பறதுக்கே சில காமெடிபீஸ்கள் அலைஞ்சுக்கிட்டிருந்தது. ஒடனே மாநகராட்சி ஜீப்புல ஆட்களை அனுப்பி,' வதந்திகளை நம்பாதீர்'ன்னு தண்டோரா போட்டப்புறம்தான் வதந்தியலை ஓய்ஞ்சது. ஒரு வாரத்துக்குள்ள மும்பை மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பிடுச்சு.

மும்பை நகருக்குள் வெள்ளசேதம் நிறைய ஏற்படுவதற்கு நகருக்குள் ஓடும் Mithi நதியும் ஒரு காரணம் . Powai, மற்றும் விஹார் ஏரிகளிலிருந்து மும்பைக்கு குடி நீர் வழங்கப்படுது. இந்த ஏரிகளிலிருந்து வெளியாகும் அதிகப்படியான நீரே அந்த நதி. இது, Powai, Saki Naka, Bandra Kurla complex, calina, Dharavi மற்றும் பல இடங்கள் வழியா ஓடி மாஹிம்மில் அரேபியக்கடலில் கலக்குது. பேருக்குத்தான் இது நதியே தவிர எல்லாவிதமான மற்றும் தொழிற்சாலைக்கழிவுகளை கொட்டும் இடமாத்தான் இருக்குது.அதோட மழை நீர் வடிகாலாகவும் இது இருக்குது. மக்கள் கொட்டிய குப்பைகள் , கழிவுகளெல்லாம் அதோட ஓட்டத்தையே திசைதிருப்பிடுச்சு. மும்பையின் கலீனா பகுதிதான் வெள்ளத்தின்போது ரொம்பவும் சேதப்பட்டது. அதற்கு இந்த நதியே முக்கிய காரணம். போதாக்குறைக்கு பாந்திரா-குர்லா காம்ப்ளெக்ஸ் இதன் பாதையை மறித்துக்கட்டப்பட்டதால் மழைத்தண்ணீர் போக்கிடமில்லாம ஊருக்குள் புகுந்துடுச்சுன்னும் அரசியல் நடந்தது. வெள்ளமெல்லாம் வடிஞ்சப்புறம் அந்த நதியை தூர்வாரி ஆழப்படுத்தி சுத்தமும் செஞ்சாங்க. இப்பவும் வருஷாவருஷம் அந்த சடங்கு நடக்குது. நீர்மட்டம் கொஞ்சம் உயர்ந்தாலும் சரி.. உடனே வெள்ள எச்சரிக்கை கொடுத்து, அந்த பகுதி மக்களை உஷார்படுத்திடுவாங்க.

Mithi நதியின் பாதை.

மழையெல்லாம் முடிஞ்சப்புறம், பாலிதீன்பைகள் சாக்கடைகள், மற்றும் வடிகால்கள்ல போய் அடைச்சிக்கிட்டதாலதான், வெள்ள அபாயம் வந்துச்சுங்கிற ஒரு ஒலக மகா உண்மைய ரூம்போட்டு யோசிச்சு கண்டுபிடிச்சாங்க. (அவங்கவங்க இருந்த இடத்துல, ரெண்டு நாளா மாட்டிக்கிட்டு,... நகரமுடியாம இருந்த சந்தர்ப்பத்துல,.. யோசிச்சதாத்தான் இருக்கணும்). மழைக்கப்புறம் ஒரு மாசத்துக்குள்ளாற கடைக்காரர்களெல்லாம், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறதுக்காக அவங்க ஸ்டாக் வெச்சிருக்கிற பாலிதீன்பைகளை காலிபண்ணனும், அதுக்கப்புறம் அவங்க ஸ்டாக் வெச்சிருக்கிறதா கண்டுபிடிச்சா அபராதம், பொதுஜனங்கள் யாராவது கேரிபேக்கை கையில் வெச்சிருக்கிறதை பாத்தா ஆயிரம்ரூபாய் அபராதம்ன்னு சட்டம் போட்டாங்க. அப்புறம் 50 மைக்ரான் கள் அளவுக்கு பாலிதீன்பைகள் தயாரிச்சிக்கலாம்ன்னு ரெண்டு படி இறங்கிவந்தாங்க. இப்போ, 20 microns அதாவது .002 cm வரை அனுமதி கொடுத்திருக்காங்க. எதுவோ தேஞ்சு கட்டெறும்பு ஆச்சுதாமே!!! அந்தக்கதை ஞாபகம் வருதா :-))

மும்பையை பொறுத்தவரை, எந்த சீசனா இருந்தாலும் நல்லா ஜாலியா எஞ்சாய்பண்ணுவோம். மழை வந்தாத்தான் எங்களுக்கு ஐஸ்க்ரீமே ருசிக்கும் :-) வினாயகர் சதுர்த்திக்கப்புறம் நாரியல் பூர்ணிமான்னு ஒரு பண்டிகை வரும்... அதுவரை மழை இருக்கும். இங்கே கொஞ்சமா தண்ணி தேங்கறது, பஸ், ரயில் போக்குவரத்து தாமதப்படுவது, நிறுத்தப்படுவதெல்லாம், அன்றாட நிகழ்ச்சி... சொல்லப்போனா, நாங்களே அதை எதிர்பார்க்கிறதுண்டு... ஏன்னா மும்பை மக்கள் த்ரில் பிரியர்கள். இதோ இப்பக்கூட.. மும்பையின் புற நகர்பகுதியான தானாவில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்துருக்கு. இதையும் தாண்டி வருவோமில்ல....

நாலு நாளா பெஞ்ச மழையில் எங்கூடவே நனைஞ்ச உங்களுக்கு ரொம்ப நன்றி. யாருக்காவது சளி பிடிச்சிருந்தா, சொந்த அனுபவத்தில் ஒரு சின்ன டிப்ஸ் சொல்றேன்... செஞ்சு பாருங்க.

ஒரு கைப்பிடி துளசியும், ரெண்டு ஸ்பூன் பனங்கற்கண்டும், ரெண்டு கப் தண்ணியில் போட்டு கொதிக்கவெச்சு ஆறவிடுங்க. ஆறியதும் ஒரு ஸ்பூன் தேனை அதில் விட்டு, ஒரு நாளுக்கு ரெண்டுவேளைன்னு மூணு நாள் குடியுங்க. சளி, இருமல் ஓடிப்போயிடும்.

வர்ட்ட்டா....

Monday, 28 June 2010

மழையே மழையே..-3

(உதவி: கூகிள்)

மின்சாரம் நின்னு போயிட்டதால் இன்வர்ட்டர்+பேட்டரியும் எப்போ வேண்ணா மண்டையை போடலாம்ன்னு எதிர்பார்த்து, இட்லி மிளகாய்ப்பொடி, சாம்பார்ப்பொடி, ரெண்டும் தயார்செஞ்சு ஸ்டாக் வெச்சிருந்தேன். அதைவெச்சு ரெண்டு நாள் ஓட்டியாச்சு. இன்னிக்கு மழை கொஞ்சம் குறைஞ்சிருக்கு, ஆனா நிக்கலை. அதனால தண்ணியும் வடியலை. இதுக்கு மழை மட்டுமல்ல.. வேறொரு காரணமுமிருக்கு.

மும்பையிலுள்ள சாக்கடைகளாகட்டும், மழைநீர் வடிகாலாகட்டும்.. எல்லாமே வெள்ளைக்காரன் காலத்துல நிர்மாணிக்கப்பட்டு கட்டப்பட்டது. அதுக்கப்புறம் மாறிவரும் காலத்துக்கேற்ப, பெருசா ஒண்ணும் மாத்தியமைக்கலை. மும்பை என்பது ஏழு தீவுகளை ஒன்றிணைத்து உண்டாக்கப்பட்டது. அந்தக்காலத்தில் மக்கள்தொகை அதிகமில்லை. அதனால வசதிகளும் அதற்கேற்ப இருந்தது. இப்ப அப்படியில்லியே... ஆனா, மறுசீரமைப்புத்தான் ஒண்ணும் நடக்கலை.இங்கேதான் இயற்கையும் தன்னை கூட்டுச்சதியில் இணைச்சுக்கிட்டது.

ஹை டைட், லோ டைட் பத்தி உங்களுக்கு தெரிஞ்சுருக்கலாம்.
தெரியாதவங்களுக்காக... சந்திரன் பூமியை சுத்துதுன்னு சின்னப்புள்ளைல பள்ளிக்கூடத்துல படிச்சிருக்கோமில்லையா. இந்த ரெண்டுக்கும் நடக்கிற டக் ஆஃப் வார்தான் டைட் ஏற்பட காரணம். பூமிக்கு புவி ஈர்ப்பு விசை இருக்கிற மாதிரி சந்திரனுக்கும் ஈர்ப்பு விசை இருக்குது... அது பூமியை தன்னை நோக்கி இழுக்குது. ரெண்டும் காந்தம் மாதிரி ஒண்ணையொண்ணு இழுக்கிறதாலதான் சந்திரன் ஆயிரக்கணக்கான வருஷங்களா பூமியை பிரியாம இருக்கு. இல்லைன்னா, கோலிகுண்டாட்டம் தெறிச்சி வானவீதியில் ஓடிப்போயிருக்கும்.

சந்திரன், பூமியின் எந்தப்பக்கம் தன்னுடைய அருகில் இருக்குதோ,.. அதை தன்னை நோக்கி இழுக்கும்போது , 'நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வரமுடியாது'ன்னு பூமி அசையாம நின்னுக்கிடும். ஆனா தண்ணி கிட்ட பூமியின் பாச்சா பலிக்காது. அதைப்பிடிச்சு வெச்சுக்கிட முடியாததால் ஈர்ப்பு விசைக்குட்பட்டு தண்ணீர் சந்திரனின் பக்கம், அதாவது பூமியின் மேல்புறமாக பொங்குகிறது. இதனால் கடற்கரைப்பக்கம் வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்கிறது. இது காயல்கள் வழியாகவும், கழிமுகம் வழியாகவும் ஊருக்குள் புக வாய்ப்பிருக்கு. மும்பையில் மழை நீர் வடிகால்களின் மட்டம், கடல் மட்டத்தைவிட தாழ்வா இருந்ததால், மழை நீர் வடிந்து கடலுக்குள் போறதுக்கு பதிலா கடல் தண்ணீர், வடிகால்கள் மற்றும் சாக்கடை வடிகால்கள் வழியா நகருக்குள் புகுந்துடுச்சு.

மேலும், நம்ம மக்கள் கொட்டின குப்பையும் பழி வாங்கிடுச்சு. கடைத்தெருவில் ரெண்டு ரூபாய்க்கு பச்ச மொளகா வாங்கினாக்கூட பாலிதீன் கவர்ல போட்டுத்தான் கொடுப்பாங்க. இப்பிடி நெறைய சேர்ந்து போற ப்ளாஸ்டிக் குப்பைகளை மக்கள் அப்படியே போறபோக்குல வீசிட்டு போறதுதான்.. சாக்கடைகளில் போய் அடைச்சிக்கிட்டு மழைத்தண்ணி வடியவிடாம செஞ்சுடுச்சு. இது கூட டைடும் சேர்ந்துக்கிட்டதுதான் இந்த மோசமான நிலைமைக்கு முக்கியமான காரணம். வெள்ளத்திலிருந்து மீண்டதும் அரசு செஞ்ச முதல்வேலை பாலிதீன் கவர்களுக்கு தடா போட்டதுதான். ஏதாவது கடைகளில் பாலிதீன் கவர்களில் பொருட்கள் கொடுக்கிறமாதிரி தெரிஞ்சா, அவங்களுக்கு அபராதம், அடிக்கடி கடைகளில் சர்ப்ரைஸ் விசிட்ன்னு எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது. ஆனாலும், எந்த ஒரு நல்ல காரியத்துக்கும் ஆயுசு குறைவுன்னு சொல்லணுமா என்ன!!.

ரோட்டுல தண்ணி தேங்கினதால வாகனங்களின் எஞ்சினுக்குள் தண்ணி புகுந்து நடுரோட்டில் நின்னுடுச்சு. பெரிய வி.வி. ஐ. பிக்கள் கூட வாகனங்களை விட்டுட்டு நடந்து போக வேண்டியதாப்போச்சு. அவ்வளவு கிட்டக்க பாலிவுட் நட்சத்திரங்களை பாத்தவங்களுக்கு, இது அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமான்னு நிர்ணயிக்க முடிஞ்சிருக்காதில்லே . ஒரு சில இடங்களில் கார்க்கதவை திறக்க முடியாம உள்ளேயே மாட்டிக்கிட்டவங்க, மூச்சுமுட்டி இறந்த செய்திகளும் கிடைச்சது. இன்னும் கொஞ்ச நேரத்துல சரியாயிடும்ன்னு நம்பிக்கையில கண்ணாடிய ஏத்திவுட்டுட்டு, ஏசியையும் ஆன்பண்ணிட்டு உக்காந்திருந்தவங்களுக்கு,கடைசியில அதுவே எமனா வந்துடுச்சு:-((

(உதவி: கூகிள்)
அன்னிக்கு மழைக்கு தோதா, வத்தக்குழம்புக்கு அரைச்சு முடிக்கப்போகும் நேரம்.. விர்ர்ர்ர்ரூம்ன்னு ஓடிக்கிட்டிருந்த மிக்ஸி சொய்ங்க்ன்னு நோஞ்சான் மாதிரி குரல் கொடுத்துச்சு. ஆஹா.. பேட்டரியும் அவுட்டா!!!.. போச்சுடா.. ஹையா!!... இனிமே சமைக்க வேணாம்ன்னு இருக்கமுடியாதே :-((. கொஞ்ச நாள் கற்கால வாழ்க்கை வாழ்ந்து பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சதுன்னு பாஸிட்டிவா திங்க் பண்ணனும் ஆம்மா :-))). வெளியே நிலவரம் எப்படியிருக்குன்னு பாத்துட்டு அப்படியே மெழுகுவர்த்தி வாங்கலாம்ன்னு கிளம்பினேன். எந்தளவுக்கு வசதிகளுக்கு பழகிப்போயிருக்கோம்ன்னு, இதுமாதிரி சிக்கல்கள் வரும்போதுதான் உணரமுடியுது.

கடையில் பால் இல்லை. ஆனா,.. பால் பவுடர் கிடைச்சது. அவசர ஆத்திரத்துக்கு இதுவாவது கிடைச்சதேன்னு கிடைச்சதை வாங்கிக்கிட்டு, மேற்கொண்டு தேவைப்பட்டதையும் வாங்கும்போதுதான் ஞாபகம் வந்தது. சர்க்கரை வேணுமே.. ஆனா, ஒருத்தருக்கு ஒரு கிலோவுக்கு மேல கிடைக்காதாம்.விலையும் டபுள். நாங்க பத்துவருஷ வாடிக்கையாளர்ன்னதால சலுகையா ஒண்ணரைகிலோ கிடைச்சது. அதே வரிசையில் இருக்கிற அவங்களோட இன்னொரு கடையில், இன்னோரு ஒண்ணரைகிலோ சர்க்கரையும், கொஞ்சம் பால்பவுடரும் வாங்கி, கைக்குழந்தைக்காரியான என் சினேகிதிக்கு கொண்டு போய் கொடுத்தேன்.அவ வீட்டுக்காரர் நகராட்சியில் சிவில் எஞ்சினீயரா இருக்கார். வெள்ள நாட்களில் கூடுதல் வேலைல மாட்டிக்கிட்டார். அவருக்கு வீட்டுக்கு வரமுடியாத சூழ்நிலை, உதவிக்கும் யாரும் கிடையாது. மேலும் அவளோட குட்டிப்பையன் கிட்டத்தட்ட என்னோட வளர்ப்புமகன். பாத்துக்கிட்டிருக்க முடியுமா என்ன?..

கடையில் பால்பவுடர் வாங்கிட்டு திரும்பும்போது பாக்கிறேன். ஒருத்தர் கண்டென்ஸ்ட் மில்க்(மில்க் மெய்ட்) வாங்கிட்டு போறார். எலி மாட்டுச்சுன்னு , அவங்க சம்சாரம் பரிசோதனை ஏதாவது செய்றாங்களோ என்னவோ?.. இல்லையாம்.. அதை dilute செஞ்சு டீ, காப்பிக்கு உபயோகப்படுத்தவாம்... கடைக்காரர் சொல்றார். தேவைன்னு வரும்போதுதான் மக்களோட புத்தி என்னமா வேலை செய்யுது :-)).

ஒண்ணு சொல்லணும்... இந்த மழையால நிறைய சேதம், உயிரிழப்பு எல்லாம் ஏற்பட்டிருந்தாலும், மக்களுக்கிடையே உதவும் மனப்பான்மை, மனிதாபிமானம் எல்லாம் இன்னும் கூடுதலாக இது ஒரு சந்தர்ப்பமா இருந்திச்சின்னே சொல்லலாம். சில குடும்பங்களில் அப்பாவோ, அம்மாவோ, மழைகாரணமா வெளியே மாட்டிக்கிட பக்கத்துவீட்டுக்காரங்கதான் உதவியா இருந்தாங்க. எங்க வீட்டுலயும், அன்னிக்கு ரங்க்ஸ் வழக்கம்போல ஆப்பீசுக்கு போயிருந்தார்ன்னா என்ன கதியாகியிருப்போமோ :-(( .. பணியிடத்திலோ இல்லை வீட்டிலோ, ஏதாவது ஒரு இடத்துல இருந்தா நிம்மதியாயிருக்கும். பாதிவழி வந்துட்டு வெள்ளத்துல மாட்டிக்கிட்டா வீட்டுல இருக்கிறவங்களுக்கு கவலை வராதா என்ன.!!!

ஆசிரியையா இருக்கும் என்னுடைய தோழி, வீட்டுக்கு வரமுடியாம பள்ளிக்கூடத்துல மாட்டிக்கிட்டாங்க. வீட்டிலோ வயதான மாமியாரும் கணவரும் மட்டுமே. அம்மாவை காணாம அழுது ஏங்கிப்போன, அஞ்சுமாதமேயான பையனை சமாளிக்கமுடியாம, ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. தோழி பள்ளிக்கூடத்துல பத்திரமா இருப்பாங்கன்னு நெனைச்சா வெள்ளத்தோட போராடி , மூணாம் நாளே வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டாங்க. ஸ்கூல்ல இருந்து ரெண்டு நாள், நடந்தே வந்திருக்காங்க. தரைத்தளத்தில் வெள்ளம் புகுந்த இடங்களிலெல்லாம், மேல்மாடிகளில் இருந்தவர்கள்தான் அடைக்கலம் கொடுத்து ஆதரவா இருந்திருக்காங்க.

ரோடுகளில் அங்கங்க சாக்கடை மூடிகள் திறந்திருக்கிறது தெரியாம அதுல மாட்டி நிறையபேர் உயிரிழந்துட்டாங்க. தண்ணி தேங்கியிருக்கிற இடத்துல, ரோடு எங்கிருக்கு, சாக்கடை எங்கிருக்குன்னு தெரியாதில்லையா... அதனால பெரிய மரக்கிளைகளை வெட்டி அந்த திறந்த சாக்கடைகளில் போட்டு வெச்சு அடையாளப்படுத்தினாங்க. தண்ணீர்ப்பரப்புக்கு மேலாக இலைதழைகளை பார்த்ததும் மக்கள் சுதாரிச்சுக்கிடுவாங்கன்னு இந்த ஐடியா. பொதுவா மும்பை மக்கள் கொஞ்சம் பிந்தாஸா இருப்பாங்க. கூடுமானவரை எதையுமே ஈஸியா எடுத்துக்கிட்டு போயிட்டே இருப்பாங்க.. ஆனா, ஒரு பொதுப்பிரச்சினைன்னு வந்தா ஒருத்தருக்கொருத்தர் ரொம்பவே அனுசரணையா இருப்பாங்க. தன்னாலான எல்லா உதவிகளையும் செய்வாங்க.. அது, முன்பின் அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தாலும் சரி.. ஒவ்வொரு இயற்கை மற்றும் செயற்கை ஆபத்துகளிலிருந்து மும்பை மறுபடி மறுபடி மீண்டு, புத்துணர்வோடு எழுந்து நிற்கிறதே இதுக்கு சாட்சி.

(மழை பெய்யும்)




Thursday, 24 June 2010

மழையே மழையே...-2

(உதவி:கூகிள்).


பிரளயமே வர்றாப்ல மழை அடிச்சு ஊத்துது. பசங்க எழுந்து, ஸ்கூலுக்கு தயாராக ஆரம்பிச்சாங்க. 'இன்னிக்கு ஸ்கூல் போக வேணாம்'ன்னு சொன்னேன். 'ஐயோ !! இன்னிக்கி பரீட்சை இருக்குது தெரியுமில்ல. போக வேணாம்ன்னு சொல்றீங்களே'ன்னு பதறினாங்க. பாவம்.. என்ன நடந்ததுன்னு அவங்களுக்கு எப்டி தெரியும். ஜன்னல்கிட்டே கூட்டிட்டு போய் வெளியே காமிச்சேன். அதிர்ந்துட்டாங்க. பக்கத்து பில்டிங்கில் க்ரவுண்ட் ஃப்ளோரில்,வீடுகளுக்குள் தண்ணி புகுந்தாச்சு. நிச்சயமா இடுப்பளவுக்கும் மேலேயே இருக்கும். ரெண்டு கட்டடங்களுக்கிடையே இருந்த தடுப்புச்சுவர் இடிஞ்சு கிடக்கு. அதான் அந்த 'தடால்'... நேர்ல பாத்துட்டு அதிர்ந்து போயிட்டேன்.

எங்க பில்டிங் கொஞ்சம் உசரமான இடத்தில் இருப்பதால் தரைத்தளத்தில் தண்ணீர் வரலை. ஆனா,.. முன்பகுதி, பார்க்கிங் பகுதியெல்லாம் தண்ணீர் தேங்கி நிக்குது. எதிர்வரிசையில் தாழ்வான பகுதியில் இருக்கும் வரிசை வீடுகளில் (இங்கே அதை chawlன்னு சொல்லுவோம்) ஜன்னல் வரைக்கும் தண்ணீர் வந்துவிட்டது. மெல்ல மெல்ல எல்லோரையும் கலவரம் தொற்றிக்கொள்ள ஆரம்பிச்சது. டிவியில் வேறு,.. செய்திகள் வரிசையா வர ஆரம்பிச்சு விட்டது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறையும் அறிவிச்சுட்டாங்க. மொட்டைமாடியில் ஏறிப்போய் பாத்தா சுத்திலும் ஒரே வெள்ளக்காடா கிடக்குது. பக்கத்து பில்டிங்கில் எல்லாம் வாகனங்கள் மூழ்கிக்கிடக்கு. டிவியில் எந்தக்காலத்திலோ பாத்ததெல்லாம் இப்போ கண்முன்னாடி நடக்கிறதை நினைச்சா நம்பவே முடியலை. ஹெலிகாப்டரில் வரும் சாப்பாட்டு பொட்டலங்களை நம்பி இருக்கவேண்டி வந்துடுமோன்னு நினைப்பு ஓடுது.

( பில்டிங்கின் முன்னால் கேட்டை பாத்தே வெளியே எவ்வளவு தண்ணி நிக்குதுன்னு தெரிஞ்சுக்கலாம்).
மதியத்துக்கு மேலும் மழை விட்ட பாடில்லை. தண்ணீரும் வடிந்த பாடில்லை. சோதனையா மின்சாரசப்ளையும் நின்னு போச்சு. மொபைல் ரேடியோதான் நிலவரங்களை தெரிஞ்சுக்கவும், பொழுது போக்கவும் துணையா இருந்திச்சு. மின்சாரம் இல்லாததால வீடுகளுக்கு தண்ணி சப்ளையும் வராது. தரைத்தளத்தில் இருக்கிற வாட்டர் டேங்கில் இருந்து நாங்களே எடுத்துக்க வேண்டிய சூழ்நிலை. டேங்கை காலி பண்ணலைன்னா அழுக்குத்தண்ணி கலந்துடுற அபாயம். லிப்ட் வேலை செய்யாததால், மக்களெல்லாம் தண்ணிக்குடத்தை சுமந்துக்கிட்டு ஆறுமாடி ஏறி இறங்கியதை மறக்க முடியாது. பசங்களெல்லாம் அவங்க பங்குக்கு சின்னச்சின்ன பாத்திரங்களை நிரப்பிக்கிட்டு போனாங்க.

மதியத்துக்கு மேல ராஜாவும் ராணியுமா நகர்வலம் கிளம்பினோம். மழை இருந்ததால் கேமராவுக்கு தடா..காம்பவுண்டை விட்டு வெளியே வந்தா... இடுப்பளவு தண்ணியில் நிக்கிறோம். அப்படியே மெதுவா நகர்ந்து வந்து மெயின் ரோட்டுக்கு வந்தோம். அங்கெல்லாம் ப்ராப்ளம் இல்லை. ரயில்வே ஸ்டேஷனில் நிலைமை மோசமா இருக்குன்னு கேள்விப்பட்டு, பக்கத்திலிருந்த பாலத்தில் ஏறி நின்னு பாத்திட்டிருந்தோம். ட்ரெயின்களெல்லாம் அரைப்பாகத்துக்கு மேல மூழ்கியிருக்குது. ட்ரெயினுக்கும் ப்ளாட்பாரத்துக்குமா கயிறு கட்டி உள்ள இருந்தவங்களையெல்லாம் அதை பிடிச்சுக்கிட்டே நடந்துவரச்செஞ்சு காப்பாத்திட்டாங்க. சில இடங்களில் அது முடியாம,..ரெண்டு நாளா ட்ரெயினுக்குள்ளயே மாட்டிக்கிட்டு இருந்துருக்காங்க.
(உதவி:கூகிள்).

எங்க பக்கத்துவீட்டு ஆன்ட்டியோட பையர், இதேமாதிரி ட்ரெயினுக்குள்ள மாட்டிக்கிட்டார். உசிரை காப்பாத்திக்கிட, அப்பர் பெர்த்தில் ஏறி உக்காந்துக்கிட்டு இருந்திருக்கார். ரெண்டு நாளுக்கப்புறம் தண்ணி வடிஞ்சப்புறம் தண்டவாளம் வழியாவே நடந்து அக்கா வீட்டுக்கு வந்திருக்கார். அங்கிருந்து போன் வர்றவரைக்கும் , பாவம்.. அந்த மாமி வேண்டாத தெய்வமில்லை. சில இடங்களில் ப்ளாஸ்டிக் டப்பை உபயோகப்படுத்தி,அதிலே உக்காரவெச்சு கயிறுகட்டி இழுத்து, ஆட்களை காப்பாத்தியிருக்காங்க.ஆனா.. நிறைய பேருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கலை.

வெள்ளத்தில் நிறைய தட்டுமுட்டு சாமான்கள், ஃபர்னிச்சர்கள் எல்லாம் அடிச்சிக்கிட்டு வர்றதை, கையாலாகாத்தனத்தோட பாத்துக்கிட்டிருந்தோம். காட்டாறு மாதிரி வேகமா ஓடுற வெள்ளத்தில், அதுவும் ரெண்டாளு உசரத்துக்கு போயிக்கிட்டிருக்கிற சமயத்தில் ஆட்களே விழுந்திருந்தாகூட காப்பாத்தியிருக்க முடியாது. மும்பை நகருக்குள், அப்படி காப்பாத்தப்போயே நிறைய பேரு உசிரை விட்டுட்டாங்க.

அங்கிருந்து கிளம்பி அப்படியே தெரிஞ்ச ஏரியாவுல எல்லாம் சுத்தினோம். தாழ்வான பகுதிகள்ல எல்லாம் கட்டிடங்கள் முதல்மாடிவரைக்கும் மூழ்கியிருந்தது. கார்களெல்லாம் எங்கே நிக்குதுன்னே தெரியலை. சில கார்களின் மேல்கூரை மட்டும் தெரியுது. ரங்க்ஸோட ஃப்ரெண்ட் அதுக்கு நாலுமாசம் முன்னால்தான் லட்சக்கணக்கில் செலவு செஞ்சு வீட்டுக்கு இண்டீரியர் மாத்தியிருந்தார். எல்லாம் போச்சு. உழைப்பாளிகளோட நிலையோ இன்னும் மோசம். இருக்கிற வீடும் முங்கிப்போச்சு. கடைகளிலோ பொருட்களெல்லாம் மிதக்குது... தள்ளி நின்னு பாத்துட்டு வந்தோம்.இன்னொரு ஃப்ரெண்ட் முதல்மாடியில் குடியிருந்தார். வெள்ளம் பெருக ஆரம்பிச்சதும் அந்த கட்டிடத்தில் இருந்தவர்களை ஃபைபர் போட் மூலம் காப்பாத்தினாங்க.

கிட்டத்தட்ட எல்லோருமே, வீட்டுச்சிறையில் இருப்பதை போல்தான் இருந்தோம். இன்னும் எத்தனை நாளுக்குன்னு தெரியலை. நல்லவேளையா அப்பத்தான் வாராந்திர ஷாப்பிங் முடிச்சிருந்ததால், ஃப்ரிஜ்ஜும்,ஷெல்பும் ரொம்பியிருந்தது. மெடிக்கல் கிட்டையும் மாதாந்திர சாமான்கள் வாங்கும்போதே சரிபார்த்து அடுக்கியாச்சு. அதனால அவசரத்துக்கு மருந்தும் ரெடியாயிருந்தது. சாலை, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்ததால பால், மற்றும் மற்ற உணவுப்பொருட்கள், காய்கறிகள் கிடைக்கவேயில்லை. கிடைச்சாலும் வெளியே வரமுடிஞ்சாத்தானே வாங்குறதுக்கு. கைக்குழந்தைகள், இருக்கிற வீடுகளில் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க.

மின்சாரம் இல்லாட்டாலும் பேட்டரி,இன்வர்ட்டர் இருந்ததால் ஓரளவு ஒப்பேத்தினோம். மிக்ஸி ஓடணுமே... இல்லாட்டா மழைத்தண்ணியத்தான் குடிச்சு உசிர் வாழ்ந்திருக்க வேண்டி வந்திருக்கும். என்னதான்,கரண்ட் தட்டுப்பாட்டை உத்தேசிச்சு அரைச்சு விட்ட மசாலா தேவைப்படாத நாலு ரெசிபிக்களை கத்து வெச்சுக்கிட்டாலும்,.. நாக்கு கேக்கணுமே. தினமும் அந்த கரம்மசாலாவையும், பாவ்பாஜி மசாலாவையும் தின்னா நொந்துடும்.. வாழ்க்கை. அதுக்கும் வந்தது ஆபத்து...

(மழை பெய்யும்)..

Monday, 21 June 2010

மழையே மழையே..

2005-ல் வெள்ளம்( உதவி கூகிள்)

மும்பையில் மழை பெய்ய ஆரம்பிச்சுடுச்சு. உஸ்ஸ்.. அப்பாடா!! என்ன வெய்யில்... ரெண்டு துளி மழைத்தண்ணி பூமில விழுந்திச்சின்னா நல்லாருக்குமே!!ன்னு நினைக்கிற அளவுக்கு வெய்யில் வாட்டி எடுத்தது போக, இப்போ ஜிலீர்ன்னு நல்ல க்ளைமேட்டா இருக்கு. பொதுவா ஜூன் மாத முதல்வாரத்தில் ஆரம்பிக்கும் மழை, ஒரு காட்டு காட்டிட்டுத்தான் ஓயும்.இப்பவே மும்பையில் நிறைய இடங்களில் தண்ணீர் தேங்க ஆரம்பிச்சு, போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பையும் ஏற்படுத்துது.

ஒவ்வொரு வருஷமும் மழை ஆரம்பிச்சப்புறம் , ஒன்றிரண்டு நாளுக்காவது அங்கங்க தண்ணி தேங்கி, தண்டவாளங்கள் மூழ்கி, ட்ரெயின் லேட்டாவது நடக்கும். ஏதாவது ஒரு நாளுக்காவது,"இன்னிக்கு ட்ரெயின் ஓடாதாம்.. மழை காரணமா ரத்தாம்"ன்னு செய்தி வரும். அப்பத்தான் எங்களுக்கு, 'இந்த வருஷம் நல்லா மழை பெஞ்சிருக்கு'ன்னு திருப்தியாகும். இயந்திர வாழ்க்கையில் எதிர்பாராம கிடைக்கிற ஒரு நாள் லீவு அடடா!!!! அனுபவிச்சாத்தான் தெரியும்.

ஆனா,... கடந்த சில வருஷங்களா மழை ஆரம்பிச்சிட்டாலே, எல்லோர் மனசிலும் அந்த கறுப்பு வருஷத்தின் நினைவுகள் எட்டிப்பாக்கும். ஜூலை 2005ஐ மும்பை மக்கள் வாழ்நாளில் ஒரு போதும் மறக்க மாட்டார்கள்.. மறக்கவும் முடியாது.
ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு வழியில் பாதிக்கப்பட்ட, அல்லது பாதிக்கப்பட்டவர்களை பார்த்த அனுபவம் இருக்கும்.

எப்பவும் போல்தான் அந்த நாளும்,.. எல்லோருக்கும் போல் எங்களுக்கும் விடிந்தது. அந்த சமயத்தில் பசங்களுக்கு பரீட்சை நடந்துக்கிட்டிருந்தது. பரீட்சை சமயத்தில் ஸ்கூலுக்கு நானே கொண்டு போய் விட்டுட்டு, அப்றம் மறுபடி போய் அழைச்சிட்டு வர்றது பழக்கம். அன்னிக்கும் அப்படித்தான்... ஸ்கூலுக்கு போய் பசங்களை அழைச்சுட்டு வர்றதுக்காக கிளம்பினேன். மொத நாள் இரவிலிருந்தே மழை பெஞ்சுக்கிட்டிருந்தது. ஏதோ ஒரு உள்ளுணர்வில், ரங்க்ஸ் கிட்ட, 'இன்னிக்கி ஆப்பீசுக்கு லீவு போட்டுடுங்களேன்'னு சொன்னேன். எப்படா சொல்லுவான்னு காத்துக்கிட்டிருந்தாரோ என்னவோ....'சரி'ன்னு சொல்லிட்டு விட்டதூக்கத்தை தொடர போயிட்டார்.

பொண்ணோட பரீட்சை முடிஞ்சு, காத்துக்கிட்டிருந்தா,.. பையருக்கு பரீட்சை முடிய இன்னும் நேரமிருக்கு. அதுவரை காத்திருக்க வேணாம். அவர் ஸ்கூல் பஸ்லயே வந்துடட்டும்ன்னு நாங்க ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பினோம். ரோடெல்லாம் ஒரு முழம் உசரத்துக்கு தண்ணி நிக்குது. வண்டியெல்லாம் வேகமா போகமுடியாம நத்தை மாதிரி ஊர்ந்து போகுது. ஏன்னா,.. தண்ணிக்குள்ள பள்ளம், மேடு தெரியாது. ஒரு வழியா வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். ஆனா... மணி ரெண்டாகியும் பையர் வீட்டுக்கு வரலை. எனக்கோ கலக்கமா இருக்கு. பேசாம ஸ்கூல்லயே வெயிட் பண்ணி ரெண்டு பேரையும் சேத்து கூட்டிட்டு வந்திருக்கலாமேன்னு தோணுது.

எதுக்கும் மறுபடி பள்ளிக்கூடத்துக்கு போய் பாத்துட்டு வரலாம்ன்னு ஆட்டோ நிறுத்தம்வரை வந்தேன். அப்பாடா!!! எதிர்க்க ஸ்கூல் பஸ் வருது. 'ஏண்டா லேட்டாச்சு'ன்னு பையரை கேட்டா...'ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் பயங்கர வெள்ளம். தண்ணி பஸ்ஸுக்குள்ள அலையடிச்சு வருதுன்னா பாத்துக்கோங்க. மெதுவா நின்னு... நின்னு வந்தோம்'ன்னார். அன்னிக்கு முழுக்க மழை விட்ட பாடில்லை..அதுவும், வழக்கத்தைவிட அதிகமா பெய்யுது. ஆனா.. அப்ப ஒண்ணும் பெரிசா தோணலை.ஏன்னா.. சீசன்ல 24 மணி நேரம்,30 மணி நேரத்துக்கு மேல விடாமழை பெய்றது சகஜம். இந்த வருஷம் குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு வராதுன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டோம். அவரவர் ஒர்ரீஸ் அவரவருக்கு :-)))

மறு நாளும் பரீட்சை இருந்ததால், சீக்கிரமே எழுந்து எல்லாம் ரெடி பண்ணிட்டு எனக்கான காபியுடன் பால்கனிக்கு வந்து வெளியே பார்த்தா.. ஐயோ!!! இதென்ன... அப்ப திடீர்ன்னு தடால்ன்னு ஒரு சத்தம்...

(மழை பெய்யும்...)

LinkWithin

Related Posts with Thumbnails