Sunday 24 April 2022

படமும் பாடலும் (5)

பறக்குந் திறனிருந்தும் பற்றுவிடாப் பட்சி
சிறகை மறந்து சடசடக்கும்- பற்றை
மறந்து விடுவீரேல் மாந்தர் அறிவீர்
சிறக்கும் பிறவி இனிது.

முறுகல் அடையும் மொளவாடி நெய்யும்
சுடச்சுட காப்பியொடு உண் (இருவிகற்ப குறள் வெண்பா)

சுவையுங் குறையாத சூடும் நுரையும்
அவையத்து காப்பிக் கழகு. (ஒரு விகற்ப குறள் வெண்பா)

இரட்டுற மொழிதல் - பஜ்ஜியும் முகிலும்
உருவு மருவும் உளங்கொளும் வண்ணம்
வருவழி யெண்ணி விழிபூத் திருக்கும்
மிருதாய் மிதக்கும் மெதுவாய்க் கருக்கும்
தருமுகில் பஜ்ஜிக்கு நேர். (ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

உருவம் மாற்றமடையும், மனதைக்கொள்ளை கொள்ளும் நிறம் கொண்டது, அது வரும் வழியை நோக்கி விழி பூக்க காத்திருப்போம், எண்ணெய்யில்  அல்லது வானத்தில் மிருதுவாக மிதக்கும், மெதுவாகக் கருநிறம் கொள்ளும். (கவனிக்காமல் விட்ட பஜ்ஜி கருகி விடும்)

ஆகவே மழையைத் தருகின்ற முகிலும் பஜ்ஜியும் ஒன்று.

அத்தனும் அம்மையும்போல் ஆதுரம் பாலித்து
புத்தியும் போதிக்கும் நற்குருவாம் நித்தமும்
பத்தம் பயனுரைக்கும் நண்ணுநர் நேரென
புத்தகம் போலிங்கு ஏது. (ஒரு விகற்ப இன்னிசை வெண்பா) உலக புத்தக தினத்திற்காக எழுதப்பட்டது.

Monday 18 April 2022

அனல்


கோடை ஆரம்பித்து விட்டது. பொன்னை உருக்கி ஊற்றியது போல் வெயில் வழிந்து கொண்டிருக்கிறது, நெருப்பாய்ப்பொழியும் சூரியன், அனலை வேறு அனுப்பி இன்னொரு முனையில் தாக்குதல் நடத்துகிறார்.

நாகர்கோவிலில் இருந்தவரை வெய்யில் அத்தனை கடுமையானதாக இல்லை, அங்குள்ளது பொத்தினாற்போல் அடிக்கும் அம்மையைப்போன்ற ஊமைவெயில். கையை வெயிலில் நீட்டினால் சூடு உறைக்காதே தவிர தோலைக்கருக்கி விடும். குளித்த ஈரம் போல் வியர்வை படருமளவு அனலும் வாட்டும். ஆனாலும், சுற்றிச்சூழ இருக்கும் வயல் வெளி, தோப்புத்துரவு, குளங்குட்டைகளைத்தழுவி வரும் நாஞ்சில் காற்று நம்மையும் தழுவி வியர்வையை ஒற்றியெடுத்து விடும்.

சிறு வயதில், அப்பா இருந்த வரை, வேனல் காலங்களில் புத்தேரி குளம், நுள்ளி குளம், பழையாற்றின் வடக்காறு என நீர் நிலைகளுக்கு அழைத்துச்செல்வார். நுங்கும் இளநீரும் குலைகுலையாக வீட்டில் கிடக்கும். போதாதென்று, வீட்டு முற்றத்தில் சிமெண்டில் குளியல் தொட்டியும் கட்டி விட்டிருந்தார். நாங்கள் கிடந்து ஊறுவதற்கென்று. கோடை மழை வேறு அவ்வப்போது ஆசீர்வதித்துச்செல்வதால், அதிகமும் அனலின் தாக்கமில்லாமல்தான் வளர்ந்தோம்.

அப்போதெல்லாம், கோபாலசமுத்திரத்துப்பெரியம்மை வீட்டுக்குப் போவதென்றால், கொல்லக்கொண்டு போவது போல் இருக்கும். வெக்கையும் அனலும் வாட்டி வதைத்து விடும். 'செங்கச்சூளைல இருக்கது போலல்லா இருக்குது' என்பாள் அம்மை. சோதனையாக கோடை விடுமுறையின் போதுதான் அம்மன் கோவிலில் கொடை என பெரியப்பா லெட்டர் போடுவார். போயே ஆக வேண்டும். ஓடு போட்ட மச்சில்தான் இருக்க முடியாமல் காந்தும் என்றால், கீழ்வீட்டிலும் முற்றத்து வெயில் முகத்தில் அறையும். பகல் முழுதும் குடித்த வெப்பத்தை, இரவில் உதட்டோரத்துப்பாலாய் வழியவிடும் மச்சில் தூங்க முடியாமல் தட்டட்டியில் வந்து படுத்துக்கிடப்போம். அதற்காக, சாயந்திரமே தண்ணீரெல்லாம் தெளித்து வைத்திருப்போம். 'எல.. அது சூட்டல்லா இன்னும் கெளப்பி விடும், நாளக்கி வயத்த வலிக்கின்னு வரப்போறீங்க' என்பாள் ஆச்சி.

ஆச்சிகளின் வீடு இருந்த தெற்குவள்ளியூருக்குப் போனால் வீடு தங்க மாட்டோம். சக வயதுப்பிள்ளைகளோடும், சித்தப்பா மக்களோடும் சேர்ந்து ஊர்வெயிலை எல்லாம் முதுகிலும், முகத்திலும் வாங்கிக்கொண்டு ஊர் சுற்றும் ஜோரில் வெயிலாவது, அனலாவது, இன்னொன்றாவது. சின்ன கிராமத்தைச்சுற்றிச்சூழ வயல்வெளிகள் இருந்ததால் அதிகம் அனலடிக்காது.

மும்பை வெயில் வேறு மாதிரி. இங்குள்ள காற்றுக்கும் வேறு மாதிரி வாசனையுண்டு. திருமணத்தின்போது மை ரங்க்ஸ் மும்பையின் கிங்க்ஸ் சர்க்கிளில் ஆபீஸின் சகவாசிகளோடு ரூமை பகிர்ந்து வசித்து வந்தார். திருமணமானதும், புற நகர்ப்பகுதியான கல்யாணுக்குக் குடி புகுந்தோம். அங்கும் மத்திய அரசு ஊழியர்கள் எல்லோரும் ஒரே பகுதியில் வசித்து வந்ததால், அப்பகுதிக்கு அப்பொழுது சி.ஜி.எஸ் காலனி என்றே செல்லப்பெயர் இருந்தது. 

ஒரு பெரிய சதுரத்தை நடுவில் சுவரெழுப்பி இரண்டு செவ்வகங்களாகப் பிரித்து அந்த செவ்வகங்களையும் நடுவில் அரைச்சுவர் எழுப்பி மேலும் இரண்டிரண்டு செவ்வகங்களைப்பிரித்தாற்போன்ற வீடு. இரண்டு பெட்ரூம், ஹால், கிச்சன், கிச்சனிலேயே ஒரு பகுதியில் டாய்லெட், பாத்ரூம் எனப்பிரிக்கப்பட்ட பக்கா மும்பை ஸ்டைல் வீடு. இரண்டு பேருக்கு மிகத்தாராளமான பெரிய வீடு. கூரை மட்டும் ஆஸ்பெஸ்டாஸ். கோடையில் பொரித்து எடுத்து விடும். 

வெயிலோ, மழையோ, பனியோ மும்பை வாசிகள் கவலையே பட மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு வைத்திருப்பார்கள். கோடை வரும்போது, மை ரங்க்ஸ் வீடு முழுவதும் பக்கெட் பக்கெட்டாகத் தண்ணீரை ஊற்றி வைத்து விடுவார். ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே சாப்பாடு எல்லாம். நீளமான பைப் சுருளை வாங்கி வந்து வைத்துக்கொண்டு, ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் மேல் மழை பொழிவது போல் தண்ணீரைப்பீய்ச்சியடிக்கும் திருக்கூத்தும் நடக்கும். இரண்டு நாட்கள், 'நசநசன்னு இருக்கே' என இருந்தது. அப்புறம் அது பழகிப்போயிற்று. எவ்வளவு தண்ணீர் ஊற்றி வைத்தாலும் சாயங்காலத்துக்குள் அது காய்ந்து விடும். மிச்சமிருக்கும் ஈரத்தை படுக்கும்போது துடைத்து விட்டால், ஜில்லென்ற தரையில் கட்டையைச்சாய்த்த அடுத்த நிமிடம் கண்ணைச்சொக்கும்.

ஆனாலும், சின்னச்சின்ன அசௌகரியங்களும் இருந்ததான், இருந்த சொற்பப்பொருட்களைக் கட்டில் மேல் ஏற்றி வைத்து விட்டு, குரங்கு குத்த வைத்தது போல் நாற்காலிகளிலேயே உட்கார்ந்து கிடக்க வேண்டும். ஆசுவாசமாக, காலை நீட்டி உட்கார்ந்து, அரிவாள் மணை, சுளவு சகிதம் காய் நறுக்க முடியாமல், கத்தியால் நறுக்கப் பழகிக்கொண்டாயிற்று. போதாதென, சைக்கிளில் ஒட்டிக்கொண்டு வரும் மண், அதன் தடத்தை வீட்டு ஹாலில் பதித்து வைத்திருக்கும். காற்று அள்ளிக்கொண்டு போடும் தூசி தண்ணீரில் கலந்து கிடக்கும். முகப்பவுடர் அளவுக்கே மென்மையாக இருக்கும் மும்பையின் தூசி பொல்லாதது, பகல் முழுதும் நடந்த சுவடுகளை சாயங்கால நேரத்துத் தரை காட்டித்தரும், கழுவித்தீராது. 'தினமும்தான் தரை துடைக்கப்படுகிறதே, தினமும் தண்ணீரை ஊற்றியே ஆக வேண்டுமா? ரெண்டு நாளுக்கொரு முறை தொளிச்சா ஆகாதா?.. போதாதா?'  என்றால், 'ஊஹூம்.. மூச்.

பிள்ளைகளுக்கும் இது பிடித்துப்போயிற்று. ஒரு படி மேலே போய் ஃப்ரிஜ்ஜிலிருந்து ஐஸ்வாட்டரெல்லாம் எடுத்து வந்து தெளித்து வைக்க ஆரம்பித்தோம். ஊற்றி வைப்பது பாடில்லை, 'இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க' நடக்க வேண்டும், இல்லையெனில் காலை வாரி விடும். 

ஒரு சமயம், திருச்சியிலிருந்த என் பெரிய மச்சினர் வீட்டுக்குப்போயிருந்தோம். நல்ல கோடைக்காலம்.. தஞ்சை, ஸ்ரீரங்கம், முக்கூடல் என எல்லா இடங்களுக்கும் போய் விட்டு, சாயந்திரம் வீடு வந்தோம். மும்பையின் கோடைக்காலத்துக் கதைகளைப்பற்றி பேசிச்சிரித்து பொழுது போயிற்று. வீட்டில் தண்ணீரை தெளித்து வைத்து இவர் பண்ணும் திருக்கூத்தைப்பற்றி அவர் அண்ணனிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, 'இருங்க வரேன்' என்றபடி எழுந்து போனார் அவர். பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு பக்கெட் தண்ணீரைக்கொண்டு வந்து, குவளையால் கோரிக்கோரி தரையில் தெளிக்கத்தொடங்கினார் அந்த முன்னாள் மும்பை வாசி.

சரிதான்..

Sunday 17 April 2022

திருநெல்வேலி - நீர் நிலம் மனிதர்கள் (நாறும்பூ நாதன்)


ஒரு பகுதியைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், அப்பகுதியின் நீர், நில வளம், அமைப்பு, மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு, அப்பகுதியின் வரலாறு ஆவணப்படுத்தப்பட வேண்டும், பதிவு செய்யப்பட வேண்டும், பகிரப்படவும் வேண்டும். அப்படி நெல்லைச்சீமையைப்பற்றி நாம் அறிந்து கொள்ள ஏதுவான ஒரு நூல்தான் எழுத்தாளர் இரா. நாறும்பூ நாதன் அண்ணாச்சி எழுதிய திருநெல்வேலி நீர்- நிலம் - மனிதர்கள். அண்ணாச்சியே இந்நூலில் குறிப்பிட்டிருப்பதைப்போல திருநெல்வேலியின் ஒவ்வொரு அடிக்கு மட்டுமல்ல ஒவ்வொரு அங்குலத்துக்குமே வரலாறு உண்டு எனத்தோன்றுகிறது இந்நூலை வாசித்து முடிக்கையில். ஏயப்பா!!.. எத்தனைத்தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது இச்சுரங்கம் என மலைக்கிறோம். மாணாக்கருக்குப் பாடப்புத்தகமாகவே வைக்கலாம். 

வரலாறு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது நெல்லை மண்ணிலிருக்கும் "ஆதிச்ச நல்லூர்". சிந்து சமவெளி நாகரிக ஆய்வுக்கும் முற்பட்டது இங்கு நடந்த ஆய்வு. இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் தொல்லியல் ஆய்வும் ஆதிச்ச நல்லூரில் நடந்ததே.  எகிப்திய பிரமிடுகளை விட இங்குள்ள முதுமக்கள் தாழிகள் பழமையானவை என அறியும்போது ஆச்சரியம் மேலிடுகிறது. அவ்வாறே கொற்கையில் நடந்த ஆய்வும் தமிழ்நாட்டின் பல பழம்பெருமைகளை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது. பழந்தமிழகத்தில் கரன்சி அச்சடிக்கப்பட்ட முதல் இடமாக கொற்கை அமைந்துள்ளது. இவ்விரண்டு இடங்களிலும் பிஷப் கால்டுவெல் ஆரம்பித்து வைத்த அகழ்வாராய்ச்சியைப் பின்னர் பிற ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்துள்ளனர். இங்கு கிடைத்த பொருட்களைப்பற்றியும் அவை தற்போது எங்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப்பற்றியும் நூலாசிரியர் பல்வேறு தகவல்களைக் கொடுத்துள்ளார்.

நெல்லைச்சீமையில் அக்காலத்தில் மிஷனரிகள் வந்ததையும் அவர்கள் இங்குள்ள மக்களின், முக்கியமாக தாழ்த்தப்பட்ட, உடலில், மனதில் குறைபாடுள்ள மக்களின் அறிவுக்கண்களைத்திறந்து வைத்ததையும், ஏராளமான கல்வி நிலையங்களைத் திறந்து வைத்ததையும் வாசிக்கும்போது, தேவாலயங்களுடன் கல்வி நிலையங்களும் நிரம்பிய பாளையங்கோட்டையை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என ஏன் அழைக்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்து விடுகிறது. கூடவே மிஷனரிகள் அவர்கள் இந்தியாவுக்கு வந்த முக்கிய வேலையான மதம் பரப்புதலையும் செவ்வனே செய்திருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. ஆயினும் சாராள் டக்கர், ரெயினீஸ் அடிகளார், ஆனி ஜென் ஆக்ஸ்வித், ஃப்ளாரென்ஸ் சுவைன்ஸன், எமி கார்மைக்கேல் போன்றவர்கள் தங்களது சமயப்பணியையும் தாண்டி, கல்விப்பணிக்காக மக்கள் மனதில் ஏன் நீங்காத இடம் பெற்றனர் என்பது வரலாற்றுச்செய்தி. பாளையங்கோட்டையிலிருக்கும் பாப்பாத்தியம்மாள் கிணறுகளை யார் வெட்டினார் என்பதையும் அதன் தற்போதைய நிலை என்ன என்பதையும் சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளார். கோகிலா என்ற தஞ்சை மராட்டியப் பிராமணப்பெண், க்ளாரிந்தாவாக மாறிய வரலாறு அதன் பின்னிருக்கிறது. கழுகுமலையிலுள்ள வெட்டியான் கோவிலை, "தமிழகத்தின் எல்லோரா" என ஏன் அழைக்கிறார்கள் என்பதற்கான விடையை நூலாசிரியர் மிகவும் அழகுற விளக்கியுள்ளார். கழுகுமலை கட்டுரையின் ஒவ்வொரு வரியிலும் ஆசிரியரின் சொந்த ஊர்ப்பாசம் கொப்பளிப்பதை நன்றாகவே உணர முடிகிறது. 

நெல்லை என்றாலே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் "சுலோசன முதலியார் பாலம்"தான் நினைவுக்கு வரும். ஊர் கூடித் தேரிழுப்பார்கள் கண்டிருக்கிறோம். இங்கே தன் மக்கள் வரிச்சுமையால் அவதிப்படக்கூடாதென்று அத்தனை நிதிச்சுமையையும் தானே சுமந்து தனது சொந்தச்செலவில் ஒரு மனிதன் கட்டிய பாலம்தான் இன்றும் அவர் பெயரைச்சொன்னபடி அங்கே நின்று கொண்டிருக்கிறது. அதன் அருகிலிருக்கும் மேலப்பாளையத்தின் உண்மையான பெயர் என்னவென்றும் அங்கு தற்போது வசித்து வரும் முஸ்லிம் மக்கள் வந்த கதையும் சொன்ன விதம் வெகு சிறப்பு.  காருகுறிச்சி அருணாசலம், உமறுப்புலவர், தமிழ் அச்சுக்கலையின் தந்தையான ஆண்ட்ரிக் அடிகளார், வாக்கியத்தில் முற்றுப்புள்ளி வைக்கும் வழக்கத்தை ஆரம்பித்த வீரமாமுனிவர், நாட்டார் வழக்காற்றியலின் தந்தையான பேரா.நா.வானமாமலை, போன்றோரின் பணிகளைப்பற்றிய கட்டுரைகள் ஏராளமான அரிய தகவல்களைக்கொண்டுள்ளன. அதிலும் பண்பாட்டு ஆய்வாளர்கள் சாத்தாங்குளம் ராகவன் ஐயா,  தொ.பரமசிவம் ஐயாவைப்பற்றிய கட்டுரைகள் தவற விடக்கூடாதவை. இந்த ஒவ்வொரு கட்டுரைக்குப்பின்னும் தகவல்களைச் சேகரித்த ஆசிரியரின் உழைப்பு தென்படுகிறது.

இலக்கியமும் வாழ்வும் பின்னிப்பிணைந்தவை. புத்தகத்தில் இலக்கியத்துக்கு நெல்லை மண் அளித்த பங்கு விரிவாகச்சொல்லப்பட்டுள்ளது. நெல்லை மண்ணின் பொருநை இலக்கிய வட்டம், மாநில தமிழ்ச்சங்கம் பற்றிய கட்டுரைகளின் மூலம் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. ஆரெம்கேவியின் பட்டு மட்டுமல்ல அதன் முதலாளியின் வாசிப்பு ரசனையும் அழகே. வாசிப்பே எழுத்துக்கு அடிநாதம் எனச்சொல்வார்கள். வாசிப்பை ஒரு இயக்கமாகக் கொண்டு சென்றதாலேயே கோவில்பட்டியில் நிறைய எழுத்தாளர்கள் இருந்தார்களாம். கரிசல் மண்ணின் முன்னத்தி ஏரான கி. ராஜ நாராயணன் உட்பட கோவில்பட்டியின் எழுத்தாளர்களைப்பற்றி அறிய முடிகிறது. நாகர்கோவிலில் எழுத்தாளர்கள் அதிகம் என வேடிக்கையாகச்சொல்வதுண்டு. கோவில்பட்டியோ அதையும் மிஞ்சி விட்டது.

நெல்லை என்றால் எட்டையபுரத்துப் பாரதி இல்லாமல் வரலாறு நிறைவடையாது. அவருக்கு ஆங்கிலேயர் மீது வெறுப்பு ஏற்பட்ட கதையும், அவர்தம் தந்தையார் சின்னச்சாமி ஐயர்வாளின் ஸ்பின்னிங் மில் தற்போது இருக்கும் பரிதாப இருப்பும், நெல்லையின் புகழ்பெற்ற இந்துக்கல்லூரியின் வரலாறும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.

நூலில் நெல்லையின் பல்வேறு பெருமைகளான பறவைகள் சரணாலயங்கள், பத்தமடைப்பாய், கோவில்களில் இடம்பெற்றுள்ள மூலிகை ஓவியங்கள் போன்றவற்றைப்பற்றி மிகவும் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளது, பிரிட்டன் அரசு சேவைக்கான விருதைப்பெறும் கோகிலா ராமலிங்கம் உட்பட. மரியா காண்டீன், தமிழகத்தில் பேராசிரியர்களுக்கென்று ஓர் அமைப்பு ஏற்படக் காரணமாக அமைந்த லூர்து நாதன் சிலை, இன்றும் மக்களிடம் நற்பெயர் பெற்றிருக்கும் மனகாவலம் ஆஸ்பத்திரி போன்ற அரிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. 

நெல்லை என்றாலே அல்வாவுக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது குற்றாலம். சீசனின்போது எப்படிக் குளிக்கவேண்டுமென்று ரசிகமணி அவர்களின் விளக்கமிருக்கிறதே.. அடேயப்பா. கி.ரா. அவர்களின் படைப்புகளில் பறவைகள், தாவரங்கள், விலங்குகள் என்ற கட்டுரை இன்னும் சற்று விரிவாக எழுதப்பட்டால் தனி நூலாகவே அமையும். அவ்வளவு தகவல்களைக்கொடுத்திருக்கிறார் ஐயா.

எல்லா ஊருக்கும் ஏதாவதொரு பெருமை இருக்கத்தான் செய்யும். ஆனால் 'எந்தூரா இருந்தாலும் நம்மூரு மாதிரி வருமா?' என்றுதான் நம் மனதில் தோன்றும். நெல்லைச்சீமையைப்பொறுத்தவரை ஊர்ப்பாசமும் ஊர்ப்பெருமையும் சற்று அதிகம் கொண்ட வெள்ளந்தி மக்கள் நிரம்பிய ஊர் இது. நதிக்கரையில்தான் நாகரிகம் செழித்து வளரும் என்பார்கள். ஜீவநதியாம் தாமிரபரணி நதிக்கரை அதை நிரூபித்திருக்கிறது. நிலமென்னும் நல்லாள் மடியில் தாங்கி வளர்த்த மனிதர்களையும், அவர்கள் பேணிக்காத்த பண்பாட்டையும் அவர்தம் வாழ்வையும் இந்நிலத்தையும் அதன் பழம்பெருமைகளில் ஒரு துளியையும் இந்த நூலின் மூலம் நமக்குக் காட்டுகிறார் நூலாசிரியர். அவரே சொல்லியிருப்பது போல் இது சமுத்திரத்தின் ஒரு துளிதான், ஆனாலும் அதுவே ஒரு சமுத்திரமாய் பரந்திருக்கிறது எனில் நெல்லையின் முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ள ஒரு வாழ்நாள் போதாதென உணர வைப்பதே இந்நூலின் வெற்றி. 

நெல்லையிலிருந்து வெளியாகும்  'நெல்லை டைம்ஸ்" இதழில் தொடராக வெளியான 41 கட்டுரைகள் நூல் வடிவம் கொண்டு, சந்தியா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன. 

விலை : 270
ஆசிரியர்: இரா. நாறும்பூ நாதன்.

LinkWithin

Related Posts with Thumbnails