Showing posts with label மகளிர் தினம். Show all posts
Showing posts with label மகளிர் தினம். Show all posts

Tuesday, 8 March 2016

பெண்..

படக்கொடையளித்த இணையத்திற்கு நன்றி

பொய்மையை நம்பிடும் பொம்மையன்று சீர்தூக்கி
மெய்மையை ஆய்வாள் இவள்

விளக்கம்: யார் என்ன பொய் சொன்னாலும் நம்பிக்கொண்டு பொம்மை போல் இல்லாமல், ஆராய்ந்து அதிலுள்ள உண்மையை  அறிவாள்

மரணத்தின் கண்களில் மண்தூவி மன்னும்  
தரணியை ஆள்கிறாள் பெண்

விளக்கம்: பிறக்கு முன்னும் பின்னும் அவளை அழிக்க மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளையும் முறியடித்து, மரணத்தின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு இவ்வுலகை ஆள்கிறாள்.

விலைகொடாமற் பெண்ணுக்கு வாழ்வது கிட்ட
தலையெடுக்க வேண்டும் சுயம்

விளக்கம்: வரதட்சணை எனும் விலை கொடுக்காமல் பெண்ணுக்கு மணவாழ்வு கிடைக்க மனவுறுதியுடன் சுயமாய் சிந்திப்பவளாய், தன் காலில் நிற்பவளாய் தன்மானத்துடன் இருப்பவளாய் இருத்தல் வேண்டும்.

கல்விதனைப் பற்றிடக் கெட்டியாய் பெண்ணுக்கு
நல்வினைகள் ஓங்கும் தினம்

விளக்கம்: கல்வி எனும் பிடியைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டால் பெண்ணுக்கு நல்லவை நடக்கும்.

கருவறுத்த தீயோரும் தான்மறந்தார் தம்மைக்
கருக்கொண்ட தாயுமோர் பெண்

விளக்கம்: பெண்ணைக் கருவிலேயே அழிக்கும் தீயவர், தம்மைச்சுமந்தவளும் ஒரு பெண்தான் என்பதை மறந்து விடுகின்றனர்.

தளைப்பட்ட பெண்பாவாய் கட்டனைத்தும் மாயை
களைந்தே எழுக விரைந்து

விளக்கம்: தன்னைக் கட்டிப்போட்டிருப்பதாக நினைக்கும் தளைகள் அனைத்தும் மாயையே.. அவற்றை விரைந்து களைந்து எழுவாய் பெண்ணே.

செதுக்கியும் ஆக்கியும் செய்திடுவாள் செம்மை
ஒதுக்கிடாளோர் குப்பை அறி

விளக்கம்: வேண்டாத குப்பை என்று ஒதுக்காமல் என எதையும் செதுக்கிச் செம்மை செய்திடுவாள். (எதற்கும் லாயக்கில்லாதவர் என ஒதுக்கப்பட்ட மனிதர்களையும் செம்மையாக்குபவள் பெண்)

வால்: மகளிர்தினத்தின் சிறப்புக்கொண்டாட்டமாய் எனது குறள் வெண்பாக்கள் அரங்கேறுகின்றன.

Sunday, 8 March 2015

குங்குமமும் பிடித்த கவிதையும் பின்னே சாரலும்..

"போற்றவும் வேண்டா 
தூற்றவும் வேண்டா
சரிசமமாய் நடத்தப்படுவதெப்போ?''
முனைவர் அண்ணா கண்ணனின் "உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு" என்ற கவிதைத்தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த கவிதையின் சில வரிகள் குங்குமம் இதழ் சென்ற வருடம் மகளிர்தின சிறப்பாக வெளியிட்ட 'பிடித்த பெண் மொழிக்கவிதை' பகுதியில் வெளியாகியிருந்தது.. அண்ணா கண்ணனின் அத்தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த இன்னொரு கவிதையை அவரது தளத்திலேயே வாசிக்கலாம்.
குடும்பங்களில் நடக்கும் வன்முறைகளில் பொறுமை எல்லை மீறும்போது அது நாள்வரை தாக்கப்பட்டுக்கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் திருப்பித்தாக்கத்தொடங்குகிறார். அப்படித்தாக்கத்தொடங்கும் புள்ளிக்கு வருவதற்கு முன் அவர் தன்னளவில் நிறைய மனத்தடைகளையும் தன்னுள்ளேயே எழுப்பப்பட்ட கேள்விகளையும் தாண்டியே வந்திருப்பார். ஆதலால் அவரது கொந்தளிப்பைச் சமாளிக்க மற்றவர்களால் நிச்சயமாக இயலாது. அடி பணிந்தே ஆகவேண்டும். இதைத்தானே “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்று சொல்லிச்சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளும் அப்படித்தான். இதற்கு மட்டும் ஜாதி, இன, மத, நாடு வேறுபாடுகளே கிடையாது. ஏதாவதொரு அளவில் எல்லா நாடுகளிலும் ஏதாவதொரு வகையில் அவள் வன்முறைக்குள்ளாகிக்கொண்டே இருக்கிறாள். ஆகவேதான் துணிந்து எதிர்க்குரலெழுப்பும் பெண்களையும், 'இதென்ன ஊர்ல நடக்காததா? வீட்டுக்கு வீடு வாசப்படி. பொம்பளைன்னா பொறுத்துத்தான் போகணும்" என்று சுலபமாக அடக்கி விடுகிறார்கள். உட்செலுத்தப்படும் காற்றின் அழுத்தம் அதிகரித்துக்கொண்டேபோகும்போது சட்டென்று வெடித்துவிடும் பலூனைப்போல் ஒரு கட்டத்தில்  அவள் வெடித்தெழும்போது இவளால் என்ன செய்து விட முடியும் என்று அலட்சியமாக அதுகாறும் ஆதிக்கத்துக்குட்படுத்தி வந்த கூட்டம் திகைத்துத்தான் போய் விடுகிறது.

முற்காலம் போல் தற்சமயம் எல்லாப்பெண்களும் கண்ணையும் கருத்தையும் மூடிக்கொண்டு அடுத்தவர்களின் கருத்துகளுக்குத் தலையாட்டுவதில்லை. அன்பினால் சிலர் கட்டுண்டிருந்தனர் என்றால் தங்களது சுயநலத்திற்காக அவர்களைச் சிந்திக்கத்தெரியாதவர்களாய்,  எல்லாவற்றிற்கும் தங்களையே சார்ந்திருக்கும்படி ஆக்கியிருந்தவர்களிடம் சிலர் மாட்டிக்கொண்டிருந்தனர். இதனால் தங்கள் வாழ்க்கை, பொருள், நிம்மதி என்று தொலைத்தவர்களும் அதிகமே. இப்பொழுதோ பெண்கள் நல்லது கெட்டதை சுயமாகச்சிந்திக்கிறார்கள், திருமணம் போன்ற தங்கள் வாழ்க்கை முடிவுகளைத் தாங்களே எடுக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு முன்னை விட பொறுப்பும் அதிகரித்திருக்கிறது.

பெண்களின் நிலை எந்தளவு மேம்பட்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு முறை அலசும்போதும், பெண்சிசுவை வெறுத்தல், வரதட்சணைக்கொடுமை, பொருந்தாத்திருமணங்களினால் ஏற்படும் பிரச்சினைகள் போன்ற அம்சங்களில் பெரிதாக மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை என்ற நிலையே தெரிகிறது. வரதட்சணை கேட்கும் தாயை மகன் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஒரு பக்கம் என்றால் அப்படித்தடுக்கும் மகனை தாயே கடுஞ்சொற்கள் கூறியும், பயமுறுத்தியும் பணிய வைப்பதும் நடக்கத்தான் செய்கிறது. பெண் பிறந்தால், 'என் பிள்ளை பாரம் சுமக்க வேண்டி வருகிறதே' என்று புலம்பும் மாமியார்கள் அதே பிள்ளைக்கு திருமணத்திற்காகப் பெண் தேடி அலைந்த சரித்திரத்தையெல்லாம் வெகு வசதியாக மறந்தே விடுவார்கள். இதில் பெண்ணின் நிறம் கருப்பாக இருந்தால் அவ்வளவுதான்.. மனச்சித்திரவதை செய்தே அவளைச் சாகடித்து விடுவார்கள். சமீபத்தில் கூட குமரி மாவட்டத்தில் தன்னை கருப்பாக இருப்பதாக அடிக்கடி இடித்துக்கூறி வந்த கணவனின் கொடுமை தாங்க மாட்டாமல் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள்.

அடுப்பங்கரையிலேயே அடைந்து கிடந்த பெண்கள் வெளியே வந்து சுதந்திரக்காற்றைச் சுவாசிப்பது என்பது அவ்வளவு எளிதில் நடந்து விடவில்லை. அப்பெருங்கல்லைப் புரட்டிக்கொடுக்கும் நெம்புகோலாக இருந்த பெண்கள் எத்தனையோ பேர். குடும்பம், வேலை என்று இரட்டைச்சுமையுடன் சிரமப்பட்டபோதிலும், பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக நிற்கும் காலகட்டத்தில் வாழ நேர்ந்த போதும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகள் புரிந்து சிகரங்கள் தொடுகிறார்கள் பெண்கள். அவர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

அப்படியென்றால் காலம் மாறவேயில்லையா?.. நிச்சயமாக மாறுகிறது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக... பெண்களுக்கு திருமணப்பத்திரிகையில் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளவோ, அல்லது வேலைக்குப்போய் சம்பாதிக்கவெனவோ வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் அளிக்காமல் தற்காப்புக்கலை, தன்னம்பிக்கை, தனக்கு நேரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம், அவற்றை நல்ல முறையில் தீர்க்கும் அறிவு என்று அனைத்தும் கற்றுக்கொடுத்து வளர்க்கப்பட வேண்டும். சில இடங்களில் படித்த பெண்களை விட படிக்காதவர்களே தைரியமாக தங்களுக்கு நேரும் அநியாயத்திற்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்கள். தலையெழுத்து என்று முடங்குவதை விட்டு தங்களது நியாயமான உணர்வுகளை பெண் எப்போது வெளிப்படுத்துகிறாளோ, அப்போது நிச்சயமாக செவிகள் திறந்தே தீரும். அப்படித்திறக்கும் வரை ஒலித்துக்கொண்டே இருப்போம்.
வால்: பிடித்த பெண்மொழிக்கவிதையையும், சாரல் துளியையும் வெளியிட்ட குங்குமம் இதழுக்கு நன்றி.

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்..

Thursday, 8 March 2012

குடத்திலிட்ட தீபம் - சாவித்திரிபாய் ஃபுலே


                                                            
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டுமறிவினில் ஆணுக்கிங்கேபெண்
இளைப்பில்லை காண்”என்று பெண் விடுதலைக்கும்மி பாடிய பாரதியின் வாக்கிற்கேற்பப் பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். ஆணுக்குப்பெண் சமமாக, ஏன்! ஒரு படி மேலாகவே இன்று முன்னேறியுள்ளனர். விண்வெளிக்குச் சென்று சாதனை புரிந்த கல்பனா சாவ்லா முதல் இந்தியாவின் உயர்பதவியை அலங்கரிக்கும் பிரதீபா பாட்டில் வரை நம் கண்முன் எத்தனையோ சாதனைப்பெண்கள் உலா வருகின்றனர்.

பெண்கள் கல்வி கற்பதே பாவம் என்று கற்பிக்கப் பட்டிருந்த நம் நாட்டில் அந்தத் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து விட்டு இன்று கல்வியில் ஆண்களைவிட அதிகத் தேர்ச்சி விகிதமும் காட்டுகின்றனர். இந்த முன்னேற்றங்களெல்லாம் ஓரிரவில் நடந்து விடவில்லை. பெண்களுக்காக எத்தனையோ தியாக உள்ளங்கள் மெழுகுவர்த்தியாகத் தன்னையே உருக்கிக்கொண்டு நமக்காகப் பாடுபட்டதால்தான் நாம் இன்று இணையம் வரை கோலோச்ச முடிகிறது. இப்படிப்பட்ட தியாக விளக்குகளில் எத்தனையோ பேர் வெளியுலகத்திற்கு அதிகம் அறியப்படாமலேயே குடத்திலிட்ட தீபங்களாய் இருந்து மறைந்தும் போயினர். அத்தகையவரில் மராட்டிய மண்ணில் பிறந்த சாவித்திரிபாய் ஃபுலேயும் ஒருவர்.

இவர் மராட்டிய மாநிலத்தில் சதாரா மாவட்டத்தின் நைகாய் கிராமத்தில் லக்ஷ்மி பாய்க்கும், கண்டோஜி நாவ்ஸே பாட்டிலுக்கும் மகளாக 1831-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் மூன்றாம் தேதியன்று பிறந்தார். கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தாலும், வாசிக்கத் தெரியாவிட்டாலும் தனக்குச் சிறுவயதில் கிறிஸ்தவ அமைப்பொன்று கொடுத்த புத்தகத்தை அவர் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும்போதும் உடன் எடுத்துச் சென்றதே புத்தகங்களின் மேலும், கல்வியின் மேலும் கொண்டிருந்த அவரது தணியாத ஆர்வத்தைக் காட்டுகிறது. அக்காலத்தில் நிலவிய குழந்தைத் திருமண முறைப்படி ஒன்பது வயதுச் சிறுமியான அவர், பதின்மூன்று வயது ஜோதிராவ் ஃபுலேயைக் கைப்பிடித்து பூனா வந்த போது இந்தத் திருமணம் தன்னுடைய வாழ்வையே மாற்றிவிடப்போகிறது என்று அறிந்திருக்கவில்லை.

தாயை இழந்திருந்த ஜோதிராவ் அச்சமயம் தன்னுடைய உறவினரான சகுணா பாயால் வளர்க்கப்பட்டு வந்தார். ஆங்கிலேயர் ஒருவரின் மகனைப் பார்த்துக்கொள்ளும் தாதிப் பொறுப்பில் அச்சமயம் இருந்த சகுணா பாய் நன்கு ஆங்கிலம் பேசுவதில் தேர்ச்சி பெற்றிருந்தார். அதனால் ஈர்க்கப்பட்ட ஜோதிராவுக்கும் கல்வியில் இயற்கையாகவே ஆர்வம் ஏற்பட்டது. பூவோடு சேர்ந்த நார் மணப்பது இயல்பு. ஆனால் இயற்கையாகவே மணமிக்க பூக்கள் ஒன்று சேர்ந்தால் அது கதம்பமாகி இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் பெருமையைப் பெறுகிறது. அவ்வாறே இக்குடும்பத்தில் வந்து இணைந்த சாவித்திரி பாயும் தன் பங்குக்குக் கல்வி மணம் பரப்பியதில் ஆச்சரியமில்லை.

தான் கற்ற கல்வியைப் பிறருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று எண்ணி பூனாவின் நாராயண் பேட் என்ற பகுதியில் 1847-ல் மே ஒன்றாம் தேதியன்று ஜோதி ராவ் ஃபுலே ஒரு பள்ளியை ஆரம்பித்தார். ஒரு சில காரணங்களால் இப்பள்ளியை மூட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவே கல்விப்பணி தற்காலிகமாகத் தடைபட்டது. அச்சமயம் பூனாவில் பெண் குழந்தைகளுக்கெனத் தனிப்பள்ளி அமைக்கவேண்டுமென்று விரும்பிய ஜோதிராவ் அதன் முதற்கட்டமாகத் தன்னுடைய மனைவிக்குக் கல்விப்பயிற்சியளித்தார். கல்வியில் ஆர்வம் கொண்டிருந்த சாவித்திரிபாயும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுத் தேர்ச்சியடைந்தார்.

பெண்கள் தாம் வேறு பிற வழிகளில் பெறமுடியாத முன்னேற்றத்தைக் கல்வியால் பெற முடியும் என்பது பாரதியாரின் அழுத்தமான நம்பிக்கை. பெண்களின் முன்னேற்றத்திற்கு மூன்று வழிகளைக் கூறுகின்றார்.

“அதற்கு மூன்றுவிதமான உபாயங்கள் இருக்கின்றன,
முதலாவது உபாயம் கல்வி; இரண்டாவது உபாயம் கல்வி;
மூன்றாவது உபாயம் கல்வியே! அதாவது கல்வியைத் தவிர
வேறு எல்லா விதமான உபாயமும் சிறிதேனும் பயன்படாது
என்பது கருத்து”

என்ற பாரதியின் வாக்கை மெய்ப்பிப்பது போல், அடிமைப் பட்டுக்கிடந்த பெண் சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால் அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதே ஒரே வழி என்று எண்ணி 1848-ம் வருடம் ஜனவரி ஒன்றாம் தேதி பெண்குழந்தைகளுக்கென ஒரு பள்ளியை ஆரம்பித்துத் தங்களுடைய கல்விப்பணியைத் தொடர்ந்தனர். ஒன்பது மாணவிகளைக்கொண்ட இப்பள்ளியில் அனைத்து மாணவியரும் சாதி வேறுபாடின்றி சேர்க்கப்பட்டிருந்தனர். பூனாவில் அச்சமயம் நிலவிய சாதித்துவேஷச் சூழ்நிலையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் இவர் மிகுந்த எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.

ஒரு தாழ்த்தப்பட்ட பெண் தங்களுக்கு நிகராகக் கல்வி கற்றதுமல்லாமல் கற்பிக்கும் பணியையும் மேற்கொண்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. தினமும் பாடசாலைக்கு சாவித்திரி பாய் நடந்து போகும்போது அவரைச் சொல்லாலும் செயலாலும் அவமானப்படுத்தினர். அவர் மீது கற்கள், சாணம், குப்பைகள் போன்றவையும் வீசப்பட்டன. இதனால் ஒரு கட்டத்தில் மனம் தளர்ந்த சாவித்திரிபாய் தான் இனிமேல் கல்விச்சாலைக்கு செல்லப் போவதில்லை என்று கூறி விட்டார். மனைவியைத் தேற்றிய ஜோதி ராவ் அவரிடம் இரண்டு புடவைகளைக் கொடுத்து, “இதில், சுமாரான புடவையைக் கட்டிக்கொண்டு பாடசாலைக்குப் போ. எதிர்ப்பாளர்கள் வீசும் அக அழுக்கையும் புற அழுக்கையும் அது சந்திக்கட்டும். பள்ளிக்குப் போனபின் நல்ல புடவையைக் கட்டிக்கொள்” என்று கூறினார்.

அதன் படியே நடந்த சாவித்திரி ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அந்த எதிர்ப்பாளர்களில் ஒருவனைக் கன்னத்தில் அறைந்தார். புழுவேயானாலும் ஒரு கட்டத்தில் பாம்பாய்ச் சீறி தன்னெதிர்ப்பைக் காட்டத்தானே செய்கிறது. அதன் பின் அவரைத் தொந்தரவு செய்தவர்கள் அவரது வழிக்கே வருவதில்லை. சாதிக்க வேண்டுமென்று உழைப்பவர்களின் பாதையில் மலர்கள் மட்டுமல்ல முட்களும் நிறைந்திருக்கும். சாவித்திரி பாயைப் போல் ஒரு சிலர் மட்டுமே அந்த முட்களையும் மலரச்செய்து தன்னுடைய பாதையில் மணம் வீசச் செய்கின்றனர். அவ்வருடமே பூனாவில் ஐந்து மகளிர் பள்ளிகள் துவங்கப்பட்டன. இதுவே இவர்களது இடைவிடாத உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமும் பலனுமாகும். இவர்களது கல்விப்பணியைப் பாராட்டி ஆங்கிலேய அரசு இவர்களைக் கௌரவித்து சாவித்திரி பாயைச் சிறந்த ஆசிரியையாகவும் தேர்ந்தெடுத்தனர்.

இதை மட்டும் கண்ணுற நேர்ந்திருந்தால்,

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

என்று பாரதி அப்போதே ஆனந்தக் கூத்தாடியிருப்பார்.

அந்தக் காலத்தில் பத்துப்பன்னிரண்டு வயது நிரம்பியதுமே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்வித்து விடுவார்கள். பூனாவிலும் குழந்தைத்திருமணம் எனும் இக்கொடுமை நடந்து வந்தது. பால்ய விவாகத்தின் பலனாகப் பால்ய விதவைகளின் எண்ணிக்கையும் பெருமளவில் இருந்தது. தனக்கு என்ன நேர்ந்தது என்பதைக்கூட அறியாத சிறுமிகளான அவர்களின் நிலை மிகக்கொடியதாக இருந்தது. சதி என்றழைக்கப்பட்ட உடன் கட்டை ஏறுவதும், இல்லையெனில் தலை மழிக்கப்பட்டு வெள்ளையுடுத்தி மூலையில் முடங்குவதுமே அவர்களது தலையெழுத்தாக இருந்து வந்தது. பால்ய விதவைகள் குடும்பத்திலுள்ள சில ஆண்களால் வஞ்சிக்கப்பட்டுக் கர்ப்பமுறும் கொடுமையும் நடந்து வந்தது. அப்படிக் கர்ப்பமுறும் பெண்கள் ஒன்று தற்கொலை செய்து கொள்வார்கள் அல்லது செய்து கொள்ளத் தூண்டப்படுவார்கள், இல்லையெனில் பிறக்கும் குழந்தையைக் கொன்று விடுவார்கள்.

ஒரு சமயம் இப்படித் தற்கொலை முயற்சியில் இறங்கிய காசிபாய் என்னும் பால்யவிதவையைக் காப்பாற்றிய இத்தம்பதி, அவருக்குப் பிறக்கும் குழந்தையைச் சமூகத்தில் மற்றவர்களைப்போல் தலை நிமிர்ந்து வாழச்செய்வதாக உறுதியளித்தனர். அவருக்குக் குழந்தை பிறக்கும் வரை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டனர். குழந்தை பிறந்த பின் அதைத் தத்தெடுத்துத் தங்கள் குழந்தையாகவே வளர்த்தனர். யஷ்வந்த ராவ் என்று பெயரிடப்பட்ட அந்தக்குழந்தை பிற்காலத்தில் மிகவும் புகழ் பெற்ற டாக்டரானது. இப்படி ஒவ்வொருவராகத் தம்மால் கண்டுபிடித்துக் காப்பாற்ற இயலாதே என்று எண்ணிய தம்பதியினர் ஆங்காங்கே இதற்கெனப் பிரசவ விடுதிகளை அமைத்தனர். “சிசுக்கொலைத் தடுப்பு மையங்கள்” (பால்ஹத்யா ப்ரதிபந்தக் க்ருஹ) என்று பெயரிடப்பட்ட இந்த விடுதிகளில் ஆதரவற்ற பால்ய விதவைகள் தஞ்சமடைந்தனர்.

இனிமேல் பால்யவிதவைகளுக்கு தலை மழிக்க மாட்டோம் என்று அத்தொழிலைச் செய்து வந்தவர்களைக் கொண்டே அறிவிக்கச் செய்தார் சாவித்திரி. விதவை மறுமணத்தையும் ஆதரித்து அவ்வாறு செய்து கொள்ள விருப்பப் பட்டவர்களுக்கு மறுமணமும் செய்வித்தார். இவையெல்லாம் அவர் மீது உயர்சாதியினர் கொண்டிருந்த வன்மத்தை இன்னும் தூண்டியது. அடித்தட்டு மக்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் கூட கல்வி புகட்டினாலொழிய ஒரு சமுதாயத்தை முழுவதுமாக முன்னேற்றி விட முடியாது என்பதை உணர்ந்திருந்த தம்பதியினர், அவர்களுக்கென 1855-ல் இரவுப்பள்ளியையும் தொடங்கினர்.
படங்கள் கொடுத்துதவிய கூகிளாண்டவருக்கு நன்றி
பெண்கல்வி மற்றும் விதவைகளுக்காக மட்டுமல்லாது, ‘சத்ய சோதக் சமாஜ்’ என்ற அமைப்பை ஏற்படுத்திச் சமூகத்திற்கும் தன்னாலியன்ற சேவை செய்து வந்தார். தாழ்த்தப்பட்டவர்கள் என்று அறிந்தால் தவித்த வாய்க்குத் தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள். அந்தளவுக்கு அக்காலத்தில் தீண்டாமை என்னும் கொடுமை தலை விரித்தாடியது. எனவே தங்கள் வீட்டுக் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொள்ளுமாறு கூறி அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார். பூனாவில் சாவித்திரி பாய் எனும் கல்வித்தெய்வம் வாழ்ந்த அந்த வீடு நினைவிடமாக்கப்பட்டு தினமும் மக்கள் தரிசித்துச் செல்லும் கோயிலாக உள்ளது. ஒரு சமயம் பூனா சென்றிருந்த போது, அங்கே செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அழகான சிறிய வீடுதான். சாணம் பூசி மெழுகப்பட்ட மண் தரையுடன் கூடிய அந்த வீடும், அதிலிருக்கும் கிணறும் மிகவும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தனக்கு எல்லா வகையிலும் துணையிருந்த கணவர் ஜோதிராவ் ஃபுலே 1890-ம் ஆண்டு இயற்கையெய்தி தன்னை விட்டுப் பிரிந்த நிலையில் தன் கணவரின் சிதைக்குத் தானே கொள்ளி வைத்து அவர் காட்டிய மன உறுதி அசாத்தியமானதும் கூட. கணவர் இறந்த பின், மூலையில் முடங்கி விடாமல் அவர் விட்டுச் சென்ற சமுதாயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அத்தகையதொரு சமூகப் பணியின் போதே தன் இன்னுயிரையும் நீத்தார். பூனாவில் அச்சமயம் பரவியிருந்த ப்ளேக் நோயால் பாதிக்கப் பட்டிருந்தவர்களுக்குப் பணிவிடை செய்வதில் ஈடுபட்டிருந்த சாவித்திரிபாயையும் நோய் தாக்கியதன் காரணமாக 1897-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.

மாணவி, ஆசிரியை, சமூக சேவகி, ஆதரவற்றவர்களுக்கு அன்னை என்று மட்டுமல்லாது கவிதாயினி என்றொரு முகமும் இவருக்குண்டு. இன்றைய நவீன மராட்டியக் கவிதைகளுக்கு அடி கோலிய சாவித்திரி பாயின் கவிதைகள் “காவ்ய ஃபுலே”, “பவன் கஷி சுபோத் ரத்னாகர்” என்ற பெயர்களில் நூல்களாகத் தொகுக்கப்பட்டன. சாவித்திரி பாயின் நினைவு தினத்தன்று அவரது உருவப்படம் தாங்கிய அஞ்சல் தலைகளை வெளியிட்டு இந்திய அரசாங்கம் அவரைக் கௌரவப் படுத்தியுள்ளது. சிறந்த சமூக சேவை செய்பவர்களுக்குச் சாவித்திரி பாய் நினைவு விருதை அளிப்பதன் மூலம் அவர் பிறந்த மராட்டிய மாநிலமும் அவரைக் கௌரவப் படுத்தியுள்ளது.

வரலாற்றின் பக்கங்களில் சிலர் மட்டுமே இடம் பெறுகிறார்கள். சிலர் செய்த நற்செயல்களும், தியாகங்களும் வெளியில் தெரியாமலேயே குடத்திலிட்ட விளக்காக மறைந்தும் மறைக்கப்பட்டும் விடுகிறது. ஒரு தீபத்திலிருந்து கோடிக்கணக்கான தீபங்களை ஏற்றினாலும் தீபத்தின் ஒளி குன்றுவதில்லை, மாறாக அது ஒன்று பலவாகப் பல்கிப் பெருகுவதன் மூலம் மேலும் பிரகாசமாகவே ஒளிர்கிறது. அவ்வாறே இத்தகைய தீபங்களும் வரலாற்றில் இடம் பெறவில்லையெனினும் தானிருக்கும் இடத்தை மட்டுமாவது ஒளிரச் செய்கின்றன.

அனைத்து சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.


டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.


LinkWithin

Related Posts with Thumbnails