Friday, 27 April 2012

வாழ்தலின் ருசி..


படமெடுத்த என்னோட காமிராவுக்கு நன்றி.. :-)
எதையாவது பேச வேண்டுமென்பதற்காக எதையோ பேசிக் கடுப்படைய வைப்பதைக் காட்டிலும் எதுவுமே பேசாமல் மௌனம் காப்பதே மேல்.

நிமிடத்தின் கடைசித்துளிகள் சொட்டித்தீரும் வரைக்கும் அந்த நிமிடத்தின் மதிப்புப் புரிவதில்லை.

நிகழ்காலத்தில் என்ன கனவு காண்கிறோம் என்பதே நாம் வருங்காலத்தில் என்னவாக ஆகப்போகிறோம் என்பதற்கு அடிப்படையான முதல் விஷயம். அஸ்திவாரத்தைப் பலப்படுத்தினால் அன்றோ கட்டிடத்தின் ஆயுள் கூடும்..

வாழ்வின் இறுதிக்கணம் வரை தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பதில்தான் வாழ்தலின் ருசி அடங்கியிருக்கிறது.

மகிழ்ச்சியை வேண்டியபடி, ஒவ்வொரு கணத்திலும் அவை ஒளிந்திருப்பதைக் கண்டு கொள்ள முடியாமல் கை நழுவ விடுவதைப்போலவே, கோடையில் மழையையும் மழை மற்றும் குளிர் காலங்களில் வெய்யிலையும், எதிர்பார்த்து ஏக்கப்பட்டு, அவை தன்னியல்பாக நிகழும்போது அனுபவிக்கத் தெரியாமலேயே எல்லாப் பருவங்களும் கடந்து விடுகின்றன.

எல்லோருக்கும் பொதுவாக மேகத்தையும், சூரியனையும், நிலவையும் நட்சத்திரங்களையும், தென்றலையும், புயல் காற்றையும் படைத்ததைப் போலவே இன்ப துன்பங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன. அவரவரின் முதலீட்டிற்கேற்ப, ஒவ்வொருவர் பங்கிலும் வரவும் செய்யப்படுவதில்தான் ஒளிந்திருக்கிறது அவரவர் லாப, நஷ்ட வாழ்க்கைக்கணக்கு.

அழுது கரைப்பதற்கோ, இல்லை ஆர்ப்பரித்து ஆடி முடித்து விடுவதற்கோ ஒன்றுமில்லாத நேரங்களில் சிறிது வாழ்ந்தும் பார்ப்போம்.

கல் இடித்து விட்டது, முள் குத்தி விட்டது என்று தான் செய்த தவறுகளை மறைத்து விட்டு, தப்பிக்கும் மனப்பான்மையுடன், எப்போதும் பிறரைப் பழி கூறியே வாழ்பவர்கள் அதிலேயே சுகம் கண்டு விடுகின்றனர். இவர்களின் சொல்லம்புகள் அவர்கள் வட்டத்துக்குள் நுழையும் நல்லிதயங்களையும் விட்டு வைப்பதில்லை.

வெகு நாட்களாய்க் கனவு கண்டு வந்த எதிர்காலத் திட்டத்தில் எடுத்து வைக்கும் முதலடி எப்போதும் சற்று அழுத்தமாகவே இருக்கட்டும். அப்போதுதான் சறுக்கல்களை வென்று நிற்க முடியும், பாறையில் கட்டப்பட்ட வீடு போல்..

ஏமாற்றங்களையும் காயங்களையும் தாங்கிக் கொள்ளத் தெரிந்த பொறுமைசாலிகளின் வீட்டில்தான் அதிக நறுமணத்துடன் பூக்கின்றன ரோஜாப்பூக்கள்.

டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்..

Monday, 23 April 2012

அதோ பார் கோடு..

"வழி நடத்தும் கோடுகள்".. இதான் நம்ம பிட் குழுவினர் நடத்தும் போட்டிக்கான இந்த மாதத்தலைப்பு.. ஒரு காட்சியை அழகான புகைப்படமாப் பதிவு செய்யறப்ப கவனத்துல கொள்ள வேண்டிய முக்கியமான அம்சத்தையே இந்த மாசத்தலைப்பாக் கொடுத்துருக்காங்க.

கோடுகள் நம்மை எப்படிங்க வழி நடத்தும்ன்னு கேக்கறீங்கதானே?.. பிட் நடத்தும் பாடங்களை வகுப்பறையின் ஒரு ஓரமா நின்னுக்கிட்டுக் கவனிச்சுட்டு வரும் மாணவிங்கற முறையில் உதாரணத்தை வகுப்பறையிலிருந்தே ஆரம்பிக்கிறேன்.

இப்ப ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்துற, நம்ம சின்னவயசுப் பள்ளிக்கூட அனுபவத்தை மறுபடியும் ஞாபகத்துக்குக் கொண்டாங்க.. கரும்பலகையில் எழுதியிருக்கறதை அப்படியே வாசிச்சுட்டுப் போனா, அரைகுறைத் தூக்கத்துல இருக்கற என்னை மாதிரி மாணவச் செல்வங்களுக்கு, எந்த வரியை விளக்கறார்ன்னு புரியாது. அதனால, ஒரு பிரம்பை வெச்சுக்கிட்டு எந்த வரியை வாசிக்கிறாரோ அந்த வரியை பிரம்பால தொட்டுத்தொட்டு விளக்குவார் இல்லையா?.. அப்படி விளக்கறப்ப நம்ம கண்ணுக்கு எழுத்துகளை நோக்கி பிரம்பு இட்டுச் செல்லும்.

இந்தக் காட்சியில் வரிங்கறது நம்ம சப்ஜெக்ட். பிரம்புங்கறது வழி நடத்திச் செல்லும் கோடு. அதே மாதிரி நாம ஒரு பொருளைப் புகைப்படமாப் பதிவு செய்யறப்ப அதை நோக்கி இட்டுச் செல்லும் கோடுகளாக வேறு பொருட்களோ, நபர்களோ, பாதைகளோ அமைஞ்சா அந்தப் புகைப்படம் ரொம்ப அழகா அமையும்ன்னு நிபுணர்கள் சொல்றாங்க.

ஜெயிக்கிறோமோ இல்லையோ, நாமும் இங்கே இருக்கோம்ங்கறதைத் தெரிவிச்சுக்கறதுக்காகவாவது இந்த மாசமாவது படம் அனுப்பணும்ன்னு முடிவு செஞ்சு படமும் அனுப்பியாச்சு. அதுக்காக நான் சுட்டெடுத்த மத்த படங்களை உங்களுக்குக் காட்டாம வெச்சுக்க முடியுமோ? :-)

ஆகவே இதெல்லாம் உங்க பார்வைக்காக...
கோயிலை நோக்கிக் கூட்டிட்டுப் போற ரோடு..

போட்டியில ஜெயிக்கணும்ன்னு கோயில்ல போயி பிரார்த்தனை செய்யலாம்.. ஆனா, அதுக்குப் பதிலா கோயிலையே போட்டிக்கு அனுப்பிட்டா என்ன?.. அதான் முதல் படத்தைஅனுப்பிட்டேன் :-)


மும்பையின் கமலா நேரு பூங்காவின் உட்பக்கத்துக்குக் கூட்டிட்டுப் போகுது..
நடைபாதையும் இருபக்கத்திலும் இருக்கும் தடைக் கற்களும் பையரை நோக்கிக் கூட்டிப்போகுது..( என் பையர்தான் :-))
ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்களை நோக்கிப்போகும் கைப்பிடிச் சுவர்
கடலை நோக்கிக் குறிவைக்கும் அலிபாக் கோட்டைப்பீரங்கிகள்..
விவேகானந்தர் மண்டபத்தை நோக்கிக் கூட்டிப்போகும் படிக்கட்டுகள்..
மகரந்தத்தை நோக்கிச் செல்ல வைக்கும் பூக்காம்பு..
ஷிங்கனாப்பூர் கோயிலுக்கு வெளியே கூட்டிப்போகும் கோடுகள்..
நீலப்பாம்புகளா.. பலூன்களா?.. இட்டுச்செல்லும் கோடுகள் வழியே போய்ப்பார்ப்போம்..


ஆகவே உங்கள் பொன்னான கருத்துகளைக் கூறுமாறு தாறுமாறாக மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன் :-))

Friday, 13 April 2012

வந்தாள் சித்திரை மகள்..


இதோ, 

இன்னுமொரு புத்தாண்டு.

வாழ்வின் கணக்கில் இன்னுமொரு பக்கம். 

கர வருடத்தை வழியனுப்பி விட்டு நந்தன வருடம் பிறந்திருக்கிறது. இந்த சித்திரை மாதம் முதல் தினத்தை நாம் தமிழ்ப்புத்தாண்டு தினமாகக் கொண்டாடுகிறோம். என்னதான் தமிழ்ப்புத்தாண்டு என்றாலும் இது தமிழகத்தின் தென் மாவட்டமான கன்னியாகுமரியில், முக்கியமாக எங்கள் நாஞ்சில் நாட்டுப்பகுதியில் இன்றும் கேரளச்சாயலுடன் விஷூக்கனி கண்டே கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின் தாக்கத்தில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் விஷூக்கனி காணும் வழக்கம் ஒரு சில ஆண்டுகளாகக் காணப்படுகிறது.

விஷூ என்பதற்கு சரிசமமான என்ற பொருளும் உண்டு. அதாவது இன்றைய தினம் நாளும், இரவும் ஒரே அளவைக் கொண்டிருக்குமாம். இதனால்தான் நாஞ்சில் பகுதியிலும், கேரளத்திலும் இதை நாங்கள் சித்திரை விஷூ என்றே குறிப்பிடுவோம்.

சித்திரை விஷூவை முன்னறிவிப்பது போல் எங்கும் மஞ்சள் சரக்கொன்றை மலர்கள் பூத்துக்குலுங்க ஆரம்பித்து விட்டன. சர விளக்குகளை ஒன்றோடொன்று இணைத்துக் கட்டி விட்டது போன்று தோன்றும் இந்த மஞ்சள் சரக்கொன்றை சிவனுக்கு மிகவும் பிரியமானதாம். இந்தப்பூ விஷூக்கனியில் கட்டாயம் இடம் பெறும்.
 சரக்கொன்றை கிடைக்காததால பொக்கே வெச்ச இந்த வருஷக் கொண்டாட்டம்..
பூஜையறையிலோ அல்லது வரவேற்பறையிலோ விஷூவுக்கு முந்தைய நாள் இரவில் விஷூக்கனிக்கான ஏற்பாடுகள் அந்த வீட்டின் மூத்த பெண்மணியால் செய்யப்படும். ஒரு உருளியிலோ அல்லது அகலமான ஒரு தாம்பாளத்திலோ எல்லா வகையான பழங்கள், வெற்றிலை பாக்கு, தேங்காய், தங்க,வெள்ளி நகைகள், பணம், சில்லறைக்காசுகள் போன்றவை நிரப்பப்பட்டு, அதனுடன் மஞ்சள் சரக்கொன்றை மலரும் வைக்கப்படும். இதனை ஒரு கண்ணாடியின் முன் வைப்பார்கள். இந்த உருளியில் அருகில் அழகான கிருஷ்ணர் படமோ அல்லது சிலையோ வைக்கப்படும். இதனுடன் நிலவிளக்கும் மறுநாள் காலையில் தீபமேற்றத் தயாராக வைக்கப்படும். வாசலில் அழகான மாக்கோலம் போடப்பட்டு, நுழைவாயிலில் மாவிலைத்தோரணங்களும் கட்டி அலங்கரிப்பதுண்டு.

மறுநாள் இருள் பிரியாத, ஒருவர் முகம் இன்னொருவருக்குச் சரியாகப் புலப்படாத அந்த அதிகாலையில் வீட்டின் மூத்த பெண்மணி முதலில் எழுந்து, தீபமேற்றி விஷூக்கனி தரிசித்து விட்டு, வீட்டின் உறுப்பினர்களை ஒவ்வொருவராகக் கண்களைப்பொத்திக் கொண்டு வந்து, விஷூக்கனியின் முன் நிறுத்துவார். கண்களைத்திறந்ததும், இனிய கனி வகைகளையும், தங்கம், வெள்ளி, காசு பணம் போன்ற ஐஸ்வர்யங்களை முதலில் கண்டு விட்டு, தீபத்தையும் தரிசித்து விட்டு, பின் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பர். வருட ஆரம்பத்தில் நல்லவையையே கண்டால், அந்த வருடம் முழுமையும் நன்றாகவே இருக்கும், வருட முழுமைக்கும் காசு பணத்திற்கும் இனிமைக்கும் குறைவிருக்காது என்பது நம்பிக்கை. வருட ஆரம்பத்தில் தன்னுடைய முகத்தையே பார்த்துக் கொண்டால் பிற்பாடு ஏதாவது தீங்கு வந்தால் கூட, “யார் முகத்துல முழிச்சேனோ.. தெரியலை சாமி” என்று அடுத்தவரை வைய இடமிருக்காது :-)

கனி கண்டானதும், அனைவரும் குளித்து தயாராக வந்ததும், பூஜை நடைபெறும். அவலுடன், பழங்கள், வெல்லம், தேன், தேங்காய் போன்றவை சேர்த்துப் பிசைந்து உருண்டை பிடித்து நைவேத்தியமாக வைப்பார்கள். புதுமணத்தம்பதியினருக்கு பெண் வீட்டிலிருந்து தலை விஷுச் சீராக கிலோ கணக்கில் அவல், வெல்லம், தேங்காய், பழங்கள், ஏலக்காய், வெற்றிலை பாக்கு எல்லாம் முதல் நாளே வந்து விடும். தமிழகத்தின் மற்ற இடங்களைப்போல் அல்லாமல், எங்கள் பகுதியைப்பொறுத்தவரை சித்திரை முதல் நாள் என்றால் அவல்தான் பிரதானமாக கருதப்படும். அதுவும் சம்பா அவல் என்றால் இன்னும் விசேஷம்.
பதிவு மட்டுமல்ல படமும் மீள்பதிவா போடலாமாக்கும் :-)
தீபாராதனை முடிந்ததும், வீட்டின் மூத்தவர்கள் இளையவர்களுக்குப் பரிசாகப் பணம் கொடுப்பதுண்டு. இதை நாங்கள் “விஷூக் கை நீட்டம்” என்று சொல்லுவோம். சொந்தங்கள் கொடுக்கா விட்டால் கூட கையை நீட்டி அவர்கள் பாக்கெட்டிலிருந்து உரிமையுடன் பணத்தை எடுத்துக் கொள்வதாலும் இதற்கு கை நீட்டம் என்று பெயர் வந்திருக்குமோ என்னவோ. யோசிக்க வேண்டிய விஷயம் இது :-) இன்றைய தினம் முழுக்க சிறியவர்கள் அனைவரும் பெரியவர்கள் காலில் தடால் தடால் என்று விழுந்து எழுந்திருப்பார்கள். எதற்கா?.. ஆசி வாங்குவதற்கில்லை, கை நீட்டம் வாங்கத்தான். காலில் விழுந்தால் கையில் காசு.

மதிய விருந்து ‘சத்ய’ என்று அழைக்கப்படுகிறது. பலாப்பழ சீசன் தொடங்கி விட்டபடியால் இன்றைக்கு நிறைய வீடுகளில் பலாப்பழ பிரதமன் செய்யப்படும். சிறுபயிறு பாயசமும் கட்டாயம் இடம் பெறும். வெறும் ஒரு வகைப் பாயசத்துடன் நாங்கள் திருப்தி அடைந்து விடுவதில்லை,.. ஆகவே, ‘விஷு சத்ய’வில் பால் பாயசமும் உண்டு. 

இன்றைய தினம் கோயில்களிலும் கனி காணல் நடைபெற்று பக்தர்களுக்கு பகவான் கை நீட்டம் கொடுப்பார். சில சமயங்களில் தமிழ்,கேரள புத்தாண்டு தினங்கள் ஒரே நாளில் வருவதுண்டு. இந்த முறை கேரள மக்களுக்கு நாளை புத்தாண்டு பிறக்கிறது. ஆகவே ஐயப்பன், இன்று அவனைத்தரிசிக்கச் சென்ற என்னிடம், ”மக்ளே,.. நீ நாள வரூ. நமக்கு கனி காணாம். பின்னே கை நீட்டமும் தராம். இப்போள் அரவண கழிக்கூ” என்று சொல்லி அரவணைப்பிரசாதத்தைத் தந்து அனுப்பினான். கோயிலில் கணபதி ஹோமமும் அப்போதுதான் நடந்து முடிந்திருந்த படியால் கூடுதலாக அவல் பிரசாதமும் கொடுத்தான். சென்ற வருடம் ஒரே நாளில் தமிழ் மலையாள விஷூக்கள் வந்ததால், தரிசனம் செய்யப் போயிருந்த போது கை நீட்டம் கிடைத்தது. 
சென்ற வருஷம் சந்தோஷங்களும் , சில கஷ்டங்களும் நிறைந்ததாக இருந்திருக்கலாம். நல்லவை எடுத்து, அல்லவை தள்ளலாமே.மனமும் ஒரு குப்பைத்தொட்டிதான், அதையும் அவ்வப்போது சுத்தம் செய்யலாமே.

கொண்டாட்டமென்பது இன்றோடு முடிந்து விடாமல், இன்று என்பது இன்னொரு நாளாகி விடாமல், மகிழ்ச்சி என்பது பண்டிகையின்போது மட்டுமே என்றாகி விடாமல், புது வருடத்திற்கும், புது வாழ்க்கைக்குமாய்,

புத்தாண்டு வாழ்த்துக்கள். பிறந்திருக்கும் நந்தன ஆண்டு அனைவரின் வாழ்விலும் நந்தவனமாய் மகிழ்ச்சி குலுங்கிடச் செய்யட்டும்..

டிஸ்கி: வல்லமையில் மட்டுமல்லாமல் இங்கேயும் வாழ்த்திக்கறேன்.


Wednesday, 4 April 2012

எவரெஸ்டும் தொட்டு விடும் தூரம்தான்..

நேபாள-திபெத்திய எல்லையிலிருக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை புரிய வேண்டுமென்று ஆசைப்படாத மலையேறுபவர்களே இருக்க முடியாது. அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு முறையாவது இம்முயற்சியில் இறங்காமல் இருக்க மாட்டார்கள். அவர்களைத்தவிர உலகிலேயே மிக உயர்ந்த அந்தச் சிகரத்தைக் கண்ணால் கண்டு திருப்திப் பட்டுக்கொள்ளும் நம்மைப் போன்ற சாமானியர்களும் இனிமேல் எவரெஸ்டைத் தொடலாம். தொடுவதென்ன?.. நம் கையிலும் எளிதாக எடுத்துச் செல்லலாம். ஆம்,.. எவரெஸ்டிலிருந்து எடுத்து வரப்பட்ட கற்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரங்கள் இப்போது விற்பனைக்கு வந்திருக்கின்றன. “கோபோல்ட் ஹிமாலயா வாட்சஸ்” என்று பெயரிடப்பட்டிருக்கும் அக்கடிகாரங்களை, கைக்கடிகாரங்கள் உற்பத்தியில் பெயர் போன கோபோல்ட் கம்பெனியினர் தயாரித்திருக்கின்றனர்.
இணையத்துல சுட்டு எடுத்தாந்த வாட்ச்..
கம்பெனியின் உரிமையாளரான மைக்கேல் கோபோல்ட் என்பவர் இரண்டாண்டுகளுக்கு முன் நேபாளத்தைச் சேர்ந்த Ang namgel, Lakpa Thundu ஆகிய இரண்டு மலையேறும் வீரர்களின் துணையுடன் எவரெஸ்டுக்குச் சென்று அங்கிருந்து சில கற்களைக் கொண்டு வந்தார். இக் கம்பெனியின் தயாரிப்புப் பொருட்களுக்கான தூதுவரான Sir Ranulph Fiennes-ன் யோசனையின்படி, எவரெஸ்ட் கற்கள் முகப்பில் பதிக்கப்பட்டிருக்கும் இக்கடிகாரங்களின் விலை அதிகமில்லை. இந்திய மதிப்பில் வெறும் 8.42 லட்சங்கள் மட்டுமே.

இக்கடிகாரங்கள் எவரெஸ்ட் சிகரம் இருக்கும் நேபாளத்தில் தயாரிக்கப்பட்டிருப்பதால் அங்கே மட்டும் மலிவு விலையில் விற்கப்படுகிறது. எவரெஸ்டின் உயரத்தை நினைவு படுத்தும் வகையில் $ 8,848(இந்திய மதிப்பில் 4.5 லட்சம்)என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இக்கடிகாரங்கள் மொத்தம் 25 மட்டுமே தயாரிக்கப்பட்டிருப்பதால் விற்றுத் தீருமுன் வாங்கி விடுதல் நல்லது(வீடு வாங்க வீட்டு லோன் மாதிரி, வாட்ச் வாங்க வாட்ச் லோன் ஏதாவது கிடைக்குமா ஆப்பீசர்)

ஆகவே, மக்களே.. போனா வராது, பொழுது போனா திரும்பாது.. ஐயா வாங்க.. அம்மா வாங்க.. 

டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்..Monday, 2 April 2012

இதுவும் ஒரு கலைதான்..


படம் இணையத்துல சுட்டது :-)
பேரம் பேசுதல்ங்கறது உண்மையிலேயே ஒரு கலை. சில பேர் அதுல ரொம்பவே கை தேர்ந்தவங்களா இருப்பாங்க. கடைக்காரங்க ஒரு விலை சொன்னா, டகார்ன்னு அதுல நாலுல ஒரு பங்கு விலையை, பொருளோட விலையா இவங்க சொல்லுவாங்க. தேர்தல் சமயத்துல மக்களோட இறங்கி வந்து பழகற அரசியல்வாதி மாதிரி கடைக்காரர் மெதுவா கொஞ்சம் கொஞ்சமா இறங்கி வருவார். நாலு ஓட்டு வெச்சிருக்கும் தெம்பிலிருக்கும் வாக்காளர் மாதிரி வாடிக்கையாளர் புடிச்ச புடியிலேயே இருப்பார். கடைசியில் “உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்.. இதுக்கு மேல குறைச்சு வித்தாக் கட்டுபடியாகாதுங்க, இன்ன விலையே கொடுங்க”ன்னு பேரம் படியும். ஏதோ நிலாவுக்கே போயி அங்கே பாட்டி சுட்டு வெச்சுருக்கும் வடையை வாங்கியாந்த மெதப்புல வாடிக்கையாளர் நகர்வார்.

சமீபத்துல மும்பைக்குப் போயிட்டு திரும்பி வந்துட்டிருக்கறப்ப சிக்னல்கள்ல பொருட்கள் விக்கிற பையன் வெச்சிருந்த ஆல் இன் ஒன் சார்ஜரை எங்க டாக்சி ட்ரைவர் டகால்ன்னு அறுபது ரூபாய்க்குக் கேட்டார். அந்தப் பையரோ இருநூறு ரூபாயை விட்டு இறங்கி வரலை. பேரம் படியாம பொருளும் விக்கலை. வண்டி புறப்பட்டப்புறம், ‘இப்டி அறுபது ரூபாய்க்கு கேக்கறீங்களே எப்படி அந்தப் பையனுக்கு கட்டுப்படியாகும்?’ன்னு கேட்டாக்க, ‘எல்லாம் கட்டுப்படியாகும். அந்த சார்ஜரோட விலை உண்மையில் நூறு ரூபாய்க்குள்ளேதான்னு எனக்குத்தெரியும் அதான் அந்த விலைக்குக் கேட்டேன்’ன்னு பதில் வருது. கூடுதலா விலை சொல்லிட்டு அப்றம் குறைச்சுக்கற மாதிரி குறைக்கிறதுதான் இவங்க வியாபார தந்திரம். அண்ணாத்தை பேரம் பேசுன அழகைப் பார்த்துட்டு ஆண்களை விட பெண்கள்தான் நல்லா பேரம் பேசுவாங்கன்னு கேள்விப் பட்டிருந்த தகவலை மறுபரிசீலனை செய்ய வேண்டியதாப் போச்சுப்பா :-)

தக்காளி கிலோ அஞ்சு ரூபாய்க்கு விக்கிற காலம் வந்தாக் கூட, “நாலு ரூபாய்க்கு வருமா?”ன்னு கேட்டு, அந்த ஒரு ரூபாயைக் குறைக்கிறதுக்காக ஒரு மணி நேரம் பேரம் பேசி, வாக்கு வாதம் செஞ்சு, கடைசியில் போனாப்போகுதுன்னு கடைக்காரர் விட்டுக் கொடுத்தாலும், “இவ்ளோ காய்கறி வாங்கியிருக்கேன், கொஞ்சம் கொத்தமல்லித் தழை கொடுத்தாத்தான் என்னவாம்?ன்னு பிச்சுப் பிடுங்கி வாங்கியாந்து சாம்பாரோ அல்லது ரசமோ வெச்சா அதோட ருசியே தனிதான். அப்பத்தான் அன்னிய சாப்பாடும் செரிக்கும். அதுவே, பேரம் பேசாம கேட்ட காசைக் கொடுத்துட்டு வந்தா, ஏதோ கடைக்காரர் நம்ம கிட்ட அதிக விலை வெச்சு வித்துட்ட மாதிரியே வீட்ல உள்ளவங்க லுக் விடுறது இருக்கே.. ஸ்ஸப்பா!!!

பொதுவா நாமெல்லாம் கோயிலுக்குப் போறப்ப, தரிசனம் முடிச்ச கையோட, “நீ எனக்கு இதையெல்லாம் தந்தா நான் உனக்கு இதையெல்லாம் காணிக்கையாத் தருவேன்”னுதானே பேரம் பேசுவோம். நம்மை விட நம்ம எதிராளிக்கு கூடுதல் லாபம் கிடைச்ச மாதிரி ஒரு தோணலை உருவாக்கணும். அதான் பேரத்தோட வெற்றி. இந்த வகையில் பேரம் பேசுறதுல நம்ம பாட்டி ரொம்பவே கில்லாடி. எப்படி டீல் செய்யுறாங்கன்னு பாருங்க,..
”பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா“

பால், தேன், சர்க்கரைப்பாகு, பருப்பு எல்லாம் போட்டுச் செஞ்ச ஒரே ஒரு நிவேதனத்தை புள்ளையாருக்கு வெச்சுட்டு, இயல், இசை, நாடகம்ன்னு மூணு தமிழையும் கேட்டா, “கட்டாது அன்னையே”ன்னு சொல்லிரப் போறாரோன்னு பாட்டிக்குப் பயம். அதனால அதுல இருக்கற பொருட்களின் எண்ணிக்கையைப் பெரூசாவும், எல்லாத் தமிழையும் சங்கத்தமிழ்ங்கற ஒரே வார்த்தையில் அடக்கியும் சொல்லி, “நான் உனக்கு இவ்ளோ தரேன், நீ எனக்கு இந்த ஒண்ணே ஒண்ணைக் கொடுக்கப்டாதா”ன்னு அழகாப் பேரம் பேசுனாங்க. பேரம் படியாட்டாலும் பாட்டோட அழகுல மயங்கியே புள்ளையார் எல்லா வரங்களையும் கொடுத்துருப்பார்ங்கறது மட்டும் நிச்சயம்.

ஆனாலும் நம்ம மக்கள் எல்லா இடங்கள்லயும் பேரம் பேசுறது இல்லைதான். தங்க மாளிகைக்குள்ளே நுழைஞ்சு அவங்க சேதாரம், செய்கூலி, செய்யாத கூலின்னு எல்லாம் போட்டு முழ நீளத்துக்கு நீட்டுற பில்லை மறு பேச்சு இல்லாமக் கட்டிட்டு வெளியே வர்ற நாம வெளியே உக்காந்துருக்கற பழ வியாபாரி கிட்ட மட்டும் அடி மாட்டு விலைக்குக் கொடுக்கச் சொல்லிப் பேரம் பேசுறோம். பழ வியாபாரி கிட்டன்னு மட்டுமில்லை எப்பவுமே அடிமட்ட வியாபாரிகள் கிட்ட மட்டுமே பேரம் பேசுறதுதான் நம்ம வழக்கம். வழக்கம்ன்னு இருந்தா அதை மாத்திக்கப்டாது இல்லியா அதனால, பெரிய நகைக்கடைகள் துணிக்கடைகள்ல நாம பேரம் பேசுறதேயில்லை. அதுவே சின்ன அளவுல நடக்குற சில நகைக்கடைகள்ல அவங்க குடும்ப நண்பர்களுக்கு மட்டும் பேரம் பேசுற சலுகை வழங்கப்படுது.

கால்நடைகளை விக்கிறதுக்காக சந்தைக்குக் கொண்டாந்துருக்கறவங்க பேரம் பேசுற விதமே சுவாரஸ்யமாயிருக்கும். மத்த வியாபாரங்களை மாதிரி இது வாயால் பேசப்படறதில்லை. விக்கிறவர் வாங்குறவர் ரெண்டு பேரோட கைவிரல்களுக்கு மேல ஒரு துண்டைப் போட்டு மூடி மறைச்சுக்குவாங்க. துண்டுக்கடியில் எதிராளியின் விரல்களைப் பிடிச்சு, தொடுகையின் மூலம் விலை நிர்ணயிக்கப்படுது. இதுல அவங்க அடுத்தவங்களுக்குப் புரியாத மாதிரி சில சங்கேத குறிச்சொற்களையும் உபயோகப் படுத்துவாங்களாம்.

சிறு வியாபாரிகளில் காய்கனி விக்கிறவங்க பாடுதான் பரிதாபம். பெய்ஞ்சும் கெடுத்து பெய்யாமலும் கெடுக்கற மழை இவங்க வாழ்க்கையில் நல்லாவே விளையாடிருது. அதிக விளைச்சல் கண்டு மார்க்கெட்டில் சீப்படும்போது, அந்தப் பொருளோட விலை டகார்ன்னு குறைஞ்சு, போட்ட கொள்முதலாவது கிடைச்சுருமான்னு அவங்களை ஏங்க வெச்சுருது. அதுவே குறைவான விளைச்சல் சமயம் தட்டுப்பாடு ஏற்பட்டு, யானை விலை குதிரை விலைக்கு விக்க ஆரம்பிக்குது. சமீபத்துல கிலோ ஐம்பது ரூபாய்க்கும் மேல வெங்காயம் வித்ததை யாரும் மறந்துருக்க மாட்டீங்கதானே. இந்த மாதிரி சமயங்கள்ல வாடிக்கையாளர்கள் கிட்ட அதிகமாப் பேரம் பேசாம அவங்க கேட்ட விலைக்கு கொடுத்துட்டு வெறுங்கையோட நிக்க வேண்டியதிருக்கு.

“தீதீ.. இது கச்சா வியாபாரம். மத்த பொருட்கள் மாதிரி வெச்சிருந்தோ, விலை கூடுறவரைக்கும் பதுக்கியோ வெச்சு விக்க முடியாது. மிஞ்சிப்போனா மறு நாள் வரைக்கும் வெச்சுருக்கலாம், அவ்ளோதான். அப்படியும் விக்கலைன்னா எல்லாத்தையும் தூக்கிப் போடவேண்டியதுதான். வாடிப்போன காய்களையும் அழுகிப்போன பழங்களையும் யாரு வாங்குவாங்க சொல்லுங்க?.. அதனால கேட்ட விலைக்குக் கொடுத்துக் காலி செய்யறதைத்தவிர எங்களுக்கு வேற வழி தெரியலை. சில சமயம் கை நட்டம் ஆகும்தான். என்ன செய்யறது?”ன்னு எனக்குத் தெரிஞ்ச அந்தப் பழக்காரம்மா புலம்புனப்ப பாவமாத்தான் இருந்துச்சு.

அலைக்கற்றை, பீரங்கி, நில பேரங்களைத் தூக்கிச் சாப்பிடுற மாதிரியான, சமுதாயத்தையே சீரழிக்கிற மாதிரியான ஒரு பேரம் நம்ம சமுதாயத்துல ரொம்ப காலமாவே நடந்துட்டிருக்குது. காதல் திருமணமோ, பெத்தவங்க முடிவு செஞ்சு நடத்தி வைக்கிறதோ எதுவாயிருந்தாலும் சரி, வரதட்சணைங்கற பேரம் படிஞ்சாத்தான் நடக்கும். “எவ்ளோ செய்வாங்க?” என்ற மூலக் கேள்வியோடத்தான் பொண்ணு பார்க்கும் படலம் ஆரம்பிக்குது. அந்தப் பொண்ணோட தகுதிகளைவிட அவங்க வீட்டோட வசதி வாய்ப்புகளே அதிகம் பார்க்கப்படுது. இந்த வாய்ப்புகளும் பேரம் பேசறப்ப கணக்கில் கொள்ளப்படுது.

“’வசதியானவர்தானே.. இன்னும் ஒரு பத்துப் பவுன் போடலாமில்லே…’
‘வேற யாருக்குச் செய்யறீங்க.. எல்லாம் உங்க பொண்ணுக்கும் மருமகனுக்கும்தானே,..’
‘அவங்களுக்கென்ன ஆம்பிளைப் பிள்ளையா இருக்கு. எல்லாம் பொண் குழந்தைகளுக்குத்தானே. அதை இப்பவே செஞ்சுடட்டுமே. நாளைக்கு கொடுப்பாங்கன்னு என்ன நிச்சயம்..”.


இதெல்லாம் பேரத்துல தன்னோட கை ஓங்கியிருக்க மாப்பிள்ளை வீட்டாரால் சொல்லப்படும் பாயிண்டுகள். இதுவே பெத்தவங்களுக்கு ஒரே ஒரு பொண்ணாப் பொறந்துட்டா பேரம் பேசப்படறதில்லை. எல்லாமே நாளைக்கு தானா வந்து சேர்ந்துருமாம். இந்த பேரத்துல சில பொண்ணைப் பெத்தவங்களோட பங்கும் இருக்கறதை மறுக்கறதுக்கில்லை. வரதட்சணை கேக்கலைன்னா பையனுக்கு ஏதோ பிரச்சினைன்னு நினைக்கிறவங்களும் இருக்கத்தானே செய்யறாங்க.

மனுஷனோட தினப்படி வாழ்க்கையில் அவன் பேரம் பேசாத இடமே இல்லைன்னு சொல்லலாம். பிறந்த குழந்தையை சொந்தக்காரங்க கிட்ட உடனே காட்டுறதுக்காக ஆஸ்பத்திரியிலும் பேரம் பேசப்படுதுன்னு சொல்லிக்கிறாங்க. அதுலயும் ஆண்குழந்தைன்னா தனி ரேட்டாம். இந்தப் பேரம் பேசும் படலம் அந்தக் குழந்தை வளர்ந்து பள்ளிக்கூடத்துக்குப் போயி படிக்க ஆரம்பிக்கறப்பயும், “நீ இவ்ளோ மார்க் எடுத்தா நான் உனக்கு இன்னது வாங்கித்தருவேன்”னு ஆசை காட்டுறவரையிலும், தொடருது. இதெல்லாம் லஞ்சமாச்சேன்னு நினைக்கலாம். அந்த லஞ்சம் எவ்வளவுங்கறதை நிர்ணயிக்கிறதுலதான் பேரம் இடம் பெறுது.

பொறந்து, வளர்ந்து, படிச்சு, வேலைக்குப்போயி, நல்ல சம்பளம் வாங்கி, கல்யாணம் கட்டிக்கிட்டு, குடும்பம் நடத்தி, தன்னோட சந்ததியைப் பெருக்கி, வேலையிலிருந்து ஓய்வு கிடைச்சு, கடைசியில் இறுதியாத்திரை வரைக்கும் ஒவ்வொரு கட்டத்துலயும் கூடவே வர்றதுனால, உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்தபடியா மனுஷனோட அத்தியாவசியங்களில் ஒண்ணா பேரம் பேசும் கலையையும் சேர்த்துக்கலாமா??.. ஏன்னா, வாயுள்ள புள்ளைதான் பிழைக்கும்ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.LinkWithin

Related Posts with Thumbnails