“கழி ஓதம்” ரம்யா அருண் ராயனின் முதல் சிறுகதைத்தொகுப்பு. தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டணத்தைத் சேர்ந்த இவர் கவிஞருமாவார். இவரது முதல் கவிதைத்தொகுப்பான “செருந்தி” பல விருதுகளை வென்றுள்ளது. கோவையில் ஆசிரியையாகப் பணி புரிகிறார்.
மொத்தம் பன்னிரண்டு கதைகளைக்கொண்ட இச்சிறுகதைத்தொகுப்பில் ஒவ்வொரு கதையும் வித்தியாசமான களங்களைக்கொண்டவை. இவற்றில் ஒன்றிரண்டை இணைய இதழ்களில் அவை வெளியானபோதே வாசித்திருந்தேன். பெரும்பாலும் ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களையே கற்பனை சேர்த்து கதையாக்கியிருப்பது சிறப்பு. சிறுகதைகளுக்கான கரு நம்மைச்சுற்றி நடப்பவற்றை உற்றுக்கவனித்தாலே கிடைத்து விடும் என்பார்கள், அது உண்மைதான். முக்கியமாக தலைப்புச்சிறுகதையான கழி ஓதம். ஓதத்தைக் கருவாகக்கொண்டு நான் வாசிக்கும் முதல் சிறுகதை இதுவே. ஓதம் ஏற்படும்போது அதைக் கண்ணெதிரே படிப்படியாகக் கவனித்திருப்பதால் கதையை உள்வாங்க இயன்றது.
நம்மைச்சுற்றி நடப்பவற்றை மட்டுமல்ல, மனித மனங்களையும் படிக்கத் தெரிய வேண்டும். ரம்யாவுக்கு அது நன்றாகவே கை வந்துள்ளது. நீர்க்குரல், பின்னல், இலக்கணப்பிழைகள் போன்ற கதைகளில் உளவியல் ரீதியாகவும் ஒரு திறப்பு ஏற்படுகிறது. வவ்வாக்குட்டியும் கிட்டத்தட்ட அப்படித்தான். நடந்து கோவிலுக்குள் போக நினைத்த வவ்வாக்குட்டிக்குப்பதிலாக இன்னொரு வவ்வாக்குட்டி பறந்து கோவிலுக்குள் சென்றுவிட்டது. எந்த வவ்வாக்குட்டியாயிருந்தால் என்ன? கோவிலுக்குள் புகுவதுதான் முக்கியம் அல்லவா?! பின்னலில் எங்கோ எப்படியோ மனதில் விழுந்த விதை முளைத்து பின்னிப்பின்னி எவ்வளவு சிக்கலை உண்டாக்கிக்கொள்கிறது.
சிறுகதையாசிரியரினுள் ஒரு கவிஞரும் இருப்பதால் அழகியலுடன் அமைந்திருக்கின்றன கதைகள். உவர்ப்பு வாசத்துடன் மின்னும் நிலவொளி, அழும் வீடு, காற்றுடனேயே கண்ணாமூச்சி ஆடும் காற்று, சிரிக்கும் சில்லறை என ரசிக்க வைக்கின்றன வரிகள்.
ஒவ்வொரு கதையும் வாசிப்பவர்கள் மனதை ஒவ்வொரு விதத்தில் தொடுகின்றன. கழி ஓதம் கதையில் “தங்கப்புள்ள” என வாஞ்சையுடன் அந்த அண்ணன் கூறும்போது, பவுனும் அவளது கொலுசைச்சுமந்து தந்த கடலும் கூட அவனுக்கு மேலும் இரு சகோதரிகளாகிறார்கள். வேண்டாமென மனைவி உதறிவிட்டுப்போனாலும் இன்னும் அவளுக்கு தனது நினைப்பு இருக்கிறதா என நோட்டம் பார்க்கும் க்ளைவ்வின் நப்பாசையை என்ன சொல்ல!! இதற்கெல்லாமா விவாகரத்து வரை செல்வார்கள் எனத்தோன்றினாலும், ஆல்பம் கதையின் ஆனந்தி தனது வெகுளித்தனத்தைக் கொன்று கொள்ளும்போது பரிதாபமே மேலிடுகிறது. திருமணமாகி புகுந்த வீடு போகும்போது பெண்களிடம், ‘இன்னும் நீ சின்னப்புள்ள இல்லை. போற இடத்துல பொறுப்பா இருந்து நல்ல பேர் எடு’ என அறிவுறுத்தும்போதே அவர்களினுள்ளிருக்கும் அப்பாவித்தனத்தை கிள்ளி எறிந்துதானே அனுப்புகிறார்கள்.
தன்னியல்பு தடம் மாறும்போது அவர்கள் அது நாள் வரை இல்லாத புது மனிதர்களாக ஆகி விடுகிறார்கள், கவினைப்போல, ஆறாவெயிலாளைப்போல. அவளையும் பொற்செல்வியையும் மறக்க முடியாதபடி ஆக்கி விடுகிறது ரம்யாவின் எழுத்து. ‘குருதிக்கோடு’ வாசிப்பவர்கள் கண்களில் நீர்த்திரையிடச்செய்வது உறுதி. தனது குரலைப் பிரிய வேண்டாமென அப்புராணி கற்குவேல் முடிவெடுத்தது ஏற்றுக்கொள்ளத் தக்கதெனப்படுகிறது. தொகுப்பிலிருக்கும் பன்னிரண்டு கதைகளும் தனித்தனிக்கதைகளாயினும் அடிநாதமாக மனித நேயம் அவற்றை இணைத்திருப்பது சிறப்பு.
No comments:
Post a Comment