முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்காலத்தில் உணவைப்பற்றிய விழிப்புணர்வும் உடல் நலத்தின் மேல் அக்கறையும் மக்களிடையே பெருகி வருகிறது. ஒரு காலத்தில் ஊருக்குள் ஒன்றிரண்டு ஹோட்டல்கள் இருந்தாலே அதிசயம். ஆனால் இப்பொழுதோ தெருவுக்கு ஐந்தாறு ஹோட்டல்கள், மெஸ்கள் என பெருகிக்கிடக்கின்றன. போதாததற்கு, வேண்டியதை ஆன்லைனில் ஆர்டர் செய்து விட்டால் வீட்டுக்கே கொண்டு வந்து தந்து விடும் ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்றவற்றின் பெருக்கம். பல வருடங்களுக்கு முன்னால் கேள்விப்பட்டே இராத பெரும்பாலான உணவுகள் இன்று சர்வ சாதாரணமாக நமது தட்டுக்கு வந்திருக்கின்றன.
அவையெல்லாம் நமது உடலுக்கு ஊறு விளைவிக்காதவைதானா? அம்மாக்கள், பாட்டிகள் சமைத்ததைப்போல் ஆரோக்கியமும் ருசியும் நிரம்பியவைதானா? என அலசிப்பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. கூடவே, ‘அப்படியெல்லாம் யோசிக்க விட்டுவிடுவோமா?’ என கங்கணம் கட்டிக்கொண்டு ஏகப்பட்ட செய்முறைகளும் ஒவ்வொரு உணவகத்தின் சிறப்புகளையும் பற்றி யூட்யூபர்களின் ‘வேற லெவல்’ ரிவ்யூக்களும் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. பலனாக, வீட்டுச்சாப்பாடு சிறந்ததா? வெளிச்சாப்பாடு சிறந்ததா? என மேடைகளில் விவாதிக்கும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
‘உணவே மருந்து’ என வாழ்ந்து வந்தவர் நம் மக்கள். நோய் வாய்ப்பட்டு விட்டால், எந்த வகை சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் சரி, பத்தியச்சாப்பாடுதான் போடுவார்கள் நம் அம்மாக்கள். நகைச்சுவைக்காக நாம் ரசத்தை எவ்வளவோ கிண்டல் செய்கிறோம். ஆனால், காய்ச்சல் வந்து வாய் கசந்து கிடக்கும் ஒருவனுக்குத்தான் தெரியும் ரசம் வாய்க்கு எவ்வளவு உணக்கையாக இருக்கிறதென்று. மாறி வரும் உணவுப்பழக்கம், நேரமின்மை, வீட்டின் அஸ்திவாரமான குடும்பத்தலைவிக்கே உடல் நலம் குன்றுவது என பல காரணங்களால் இப்பொழுதெல்லாம் சாப்பாட்டை வெளியில் ஆர்டர் செய்து தருவித்துக்கொள்வது அதிகமாகியிருக்கிறது. மாதத்தில் ஒரு நாள் எனில் பரவாயில்லை, ஆனால், எப்போதாவதுதான் வீட்டில் சமைப்போம் என்ற நிலை ஆரோக்கியத்துக்கும், பணத்துக்கும் கேடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மிகவும் சுத்தமாக, சுகாதாரமாகச் சமைப்பதாகச் சொல்லிக்கொண்டாலும், வெளிச்சாப்பாடு உண்மையிலேயே அப்படித்தான் சமைக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே. வீட்டிலிருக்கும் அல்சர் நோயாளிக்கு, வயதானவர்களுக்கு, குழந்தைகளுக்கு, அதிக உடல் எடை கொண்ட உறுப்பினர்களுக்கு என ஒவ்வொருவருக்கும் ஏற்றாற்போல் நாம் பார்த்துப்பார்த்து சமைப்பதைப்போல் வெளியில் சமைத்து அனுப்புவதில்லை. ருசியையும், மணத்தையும், தோற்றத்தையும் மேம்படுத்த நிச்சயமாக செயற்கை நிறமிகள், எசென்ஸ்கள், அளவுக்கதிகமான எண்ணெய் போன்றவை கண்டிப்பாகச் சேர்க்கப்பட்டே வரும். வேடிக்கை என்னவெனில், வீட்டுச்சாப்பாடு போரடிக்கிறதென்று, வெளியில் சாப்பிடும்போது, வீட்டுச்சாப்பாடு மாதிரி திருப்தியாகவேயில்லை என அலுத்துக்கொள்வதுதான்.
ஒரு காலத்தில் பண்டிகைகள், நல்ல நாட்கள் என ஏதாவது விசேஷங்கள் வரும்போதுதான் வீட்டில் பட்சணங்கள், பலகாரங்கள் என ஏதாவது செய்வார்கள். இப்பொழுதெல்லாம் நினைத்தபோது செய்தோ, வெளியில் வாங்கியோ சாப்பிடுகிறோம். அவற்றில் பெரும்பாலானவை எண்ணெய்யில் குளித்த, நெய்யில் புரண்டவையாக, எக்கச்சக்கமான கலோரிகளைக் கொண்டவையாகவே இருக்கின்றன. அதிகமும் உடலுழைப்பு தேவைப்படாத, நாற்காலியிலேயே அமர்ந்திருக்கும் இன்றைய வாழ்க்கை முறையால் அந்த அதிகப்படியன கலோரிகள் எரிக்கப்படாமல் ஊளைச்சதையாய், வேண்டாத கொழுப்பாய் உடலில் தங்குகிறது. அது வேண்டாத வியாதிகளுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது. இதன் விபரீதத்தை உணர்ந்து சமீபகாலமாக விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. லோ கார்ப் முதலான பல்வேறு உணவு முறைகள், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர் மக்கள். ஆனால், இவை ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலில், டயட்டீஷியனின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனில், வெளிச்சாப்பாட்டையே முற்ற முழுக்கத் தவிர்த்து விட வேண்டியதுதானா எனக்கேட்டால் தவிர்க்க வேண்டாம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். இருவரும் வேலைக்குப்போகும் வீடுகளில் பணியிடத்துக்கும் வேலையிடத்துக்கும் இடையே பெருந்தூரம் இருந்தால் பயணத்திலேயே பெரும்பொழுது கழிந்து விடும். என்னதான் எளிமையாகச் சமையலைத் திட்டமிட்டுக்கொண்டாலும் ஏதாவதொரு கட்டத்தில் அலுப்பும் சலிப்பும் நிச்சயம் ஏற்படும். அப்படியான சந்தர்ப்பங்களில் வெளியில் சாப்பிடுவதில் தவறொன்றுமில்லை. அதற்காகக் குற்ற உணர்வு கொள்ளவும் தேவையில்லை. மஹாராஷ்ட்ராவில் “போளி பாஜி கேந்த்ர” மிகவும் பிரபலம். சோறு, சப்பாத்தி, பருப்புக்குழம்பு, இரண்டு வகைக்கறிகள், அதிகம் போனால் ஏதாவதொரு இனிப்பு, இவ்வளவுதான் அவர்களின் மெனு. பெண்களே சுகாதாரமாகச் சமைத்துத்தருகிறார்கள். சோளம், கம்பு, தினை போன்ற சிறுதானியங்களில் செய்த ரொட்டி, விரத நாட்களில் ஜவ்வரிசி உப்புமா, வடை போன்றவையும் கிடைக்கும். வேலை முடிந்து வீட்டுக்குச்செல்லும் பெண்கள் இவற்றில் தங்களுக்கு வேண்டியதை வாங்கிச்செல்வதுண்டு.
முழு உணவுத்தட்டு
தேவையைத்தவிர, வித்தியாசமான உணவுகளை ருசி பார்க்கும் ஆர்வமும் வெளிச்சாப்பாட்டு வகைகளைத் தேடி உண்ணத்தூண்டுகிறது. சிலர், வெளியூர்களுக்கோ வெளிநாடுகளுக்கோ சென்றால் முதலில் அந்தப்பகுதியின் ஸ்பெஷல் உணவு என்ன? என்று நிச்சயமாக அறிந்து ருசி பார்ப்பார். மும்பைக்கு வருபவர்கள் வடா பாவ், பாவ் பாஜி, மிசல் பாவ், சாபுதானா வடா, தாலிபீட் போன்ற மராட்டிய உணவுகளை ருசி பார்க்க நிச்சயம் விரும்புவர். அதைப்போலவே தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் இட்லி தோசை உண்ண விரும்புவதுமுண்டு. என்னதான் சமையலில் விற்பன்னராக இருந்தாலும் சில பகுதிகளின் வட்டார உணவுகளை அதே ருசியுடன், பக்குவத்துடன் சமைக்க இயலாது. அப்படியிருக்க சமையலில் அ ஆ கூட தெரியாதவர்கள் என்ன செய்ய முடியும்? மக்களின் இந்த உணர்வை நாடி பார்த்துப் புரிந்து கொண்ட உணவகங்கள் இப்பொழுதெல்லாம் நாம் மறந்து விட்ட பாரம்பரிய உணவுகளையும் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. திருவனந்தபுரத்தில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் காலையுணவாக பழைய கஞ்சி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.
மனிதனின் முக்கியமான அடிப்படைத்தேவைகளில் முதலிடம் பிடிப்பது உணவு. இந்தியர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும்போது “சாப்பிட்டீர்களா?” என வினவிக்கொள்வது வழக்கம். இந்தியாவில் இயற்கையாகவும் செயற்கையாகவும் ஏற்பட்ட பஞ்சங்களின்போது உணவுப்பற்றாக்குறையால் பெருமளவு மக்கள் உயிர் துறக்க நேரிட்டதின் நீட்சியாகவே அவ்வாறு விசாரித்துக்கொள்கிறோம் என்பர். அப்படி அடிப்படைத்தேவையான உணவை எக்காரணங்கொண்டும் வீணடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. திருமணம் போன்ற விசேஷங்களின்போது எக்கச்சக்கமான அயிட்டங்களைப்பரிமாறி அவை சாப்பிடப்படாமல் வீணாகிறது, ஆகவே, முற்காலம் போல் குறைவான அதே சமயம் சுவையான அயிட்டங்களைப்பரிமாறி நிறைவான விருந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாகி வருவதும் வரவேற்கத்தக்கதே.
எதைக்கொடுத்தாலும் போதும் என்ற மனநிறைவு கொள்ளாத மனிதன் உணவை மட்டுமே “போதும்.. போதும்” என்கிறான். ஆகவேதான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கின்றனர்.
அன்னம் என்பது சக்தி, அன்னமயம் பிராண மயம்.
டிஸ்கி: புழுதி மின்னிதழின் உணவுச்சிறப்பிதழில் வெளியானது.
4 comments:
சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் எல்லாமே நியாயமானவை.
பேஸ்புக்கில் படித்தேன். பிரியாணி பற்றிய கேள்விக்கு பதிலாகக் கிடைத்தஸ் நா நா பற்றிய லிங்க்கில் அவரையும் படித்தேன்.
மிக அருமையான பதிவு சாரல்.
அனைவருக்கும் மிக்க நன்றி
Post a Comment