Sunday, 27 April 2025

சாரல் துளிகள்

மண்ணிறங்கிய முதல் மழைத்துளியைக் கண்டது ஒரு நொடி. காலடித்தடத்தில் ஊறும் நீரைக்கண்டது மறு நொடி. இரண்டுக்குமிடையே குளிர்ந்து கிடக்கிறது மேகத்தின் வாழ்வு.

விழி மூடி ஓய்வெடுக்க ஏங்கும் களைத்தவளுக்கு, தலை சாய்க்கக் கிடைத்திருப்பது இலவம் பஞ்சுத்தலையணையா அல்லது மீன் கூடையா என்பது ஒரு பொருட்டேயல்ல. அவளுக்கு அதுவும் ஒரு தாய்மடியே.

பலி கொள்ளும் வரை.. இரையுடன் சற்று விளையாடுகிறது புலி, தப்பிக்க கருணை காட்டி நேரமளிக்கிறது சிலந்தி, வாத்சல்யமும் பாசமும் காட்டுகிறான் மனிதன்.

ஒருவர் தனது கடமைகளிலிருந்து விலக பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் வழுவாமலிருக்க தன்னறம் ஒன்றே காரணமாய் இருக்க முடியும்.

புரிந்தும் புரியாதவர்போல் அராஜகம் செய்வோரே, சாதுர்யமாய்க் காய் நகர்த்தி எதிராளியைக் குழப்புவதில் முன்னணியில் இருக்கின்றனர்.

இயல்பிலேயே கசக்கும் வேப்பம்பூவின் அமுதையும் அதற்கான தேனீ எங்கிருந்தாவது தேடி வந்துவிடுகிறது.

கண்ணாடி வளையல்களும் கொலுசுகளும் எழுதும் இசைக்குறிப்புகளுக்கான நுட்பங்கள் விடுவிக்குந்தோறும் இன்னும் இறுகிக்கொள்கின்றன.

எந்நேரமும் கொந்தளித்துக்கொண்டிருக்கும் கடலில் படகைச்செலுத்த இயலாது, அமைதியற்று அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதில் உருப்படியான சிந்தனைகள் பிறக்காது.

தன்னம்பிக்கையும் தைரியமும் இல்லாதவர்களே பிறரின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் குலைப்பதில் முதலிடம் வகிக்கிறார்கள்.

நமது அபிமானத்தைப் பெறுவதற்காக இன்னொருவரைத் தரம் தாழ்த்துபவர்கள் ஆபத்தானவர்கள். வேறொருவரின் அபிமானத்தைப் பெறுவதற்காக என்றாவது நம்மையும் தரம் தாழ்த்தக்கூடும் இவர்கள். அன்பைப் பூசிக்கொண்டிருக்கும் அவர்களை அடையாளம் காண்பதும் எளிதல்ல.

1 comment:

ஸ்ரீராம். said...

எல்லா துளிகளுமே அருமை.  ஒவ்வொரு துளிக்குள்ளும் ஒரு ப்ரவாகமே அடங்கி இருக்கிறது.

LinkWithin

Related Posts with Thumbnails