Sunday 28 August 2022

அளம் - புத்தக மதிப்புரை


கணவன் மனைவி இருவரில் பொருளீட்டும்பொருட்டு மனைவி பிரிந்து சென்றாலோ, குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்காத பொறுப்பற்ற ஊதாரியாய் இருந்தாலோ அல்லது இறந்து விட்டாலோ, கணவன் மீதி வாழ்க்கையைத் தொடர, குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிக் கரையேற்ற மிகவும் சிரமப்படுவான். அதுவே கணவனின் துணையும் ஆதரவும் இல்லாத சூழலில் வாழ நேர்ந்தால், மனைவியானவள் குடும்பத்துக்கே அச்சாணியாய் இருந்து எப்பாடு பட்டாவது குழந்தைகளை வளர்த்துக் கரை சேர்த்து விடுவாள். அப்படி கரை சேர்க்குமுன் அவள் படும் பாடுகளும் நடத்தும் போராட்டங்களும்தான் எத்தனையெத்தனை!!!! 

சின்னச்சின்ன கவலைகள் வந்தாலும் உடைந்து போவார்கள், தானும் பயந்து துவண்டு பிறரையும் பயத்துக்கு உள்ளாக்குவார்கள். சின்னச்சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுவார்கள். ‘பொசுக் பொசுக்கென’ அழுது தீர்ப்ப்பார்கள். ஆகவே, மலரினும் மெல்லியர் பெண்கள் எனக்கூறப்படுவதுண்டு. அப்படி மென்மையான பெண்கள்தான், வாழ்வில் விழும் அடிகளால் கெட்டிப்பட்டு, வலிமையானவளாகவும் பொறுப்பானவளாகவும் மாறுகிறாள். அதுவும், அசாதாரணமான சூழ்நிலைகளில் “அடுத்து என்ன செய்ய?” என கணவன் கலங்கி நிற்கும் சமயங்களில், “பாத்துக்கலாங்க.. சமாளிப்போம்” என அவள் கூறும் வார்த்தைகளில் கணவனுக்கு புதுத்தெம்பே அல்லவா வந்து விடுகிறது!.

ஆண் இல்லாவிட்டாலும் பெண் ஓய்ந்து உட்கார்ந்து விடுவதில்லை. குடும்பத்தைத் தாங்கிப்பிடிக்கப்போராடுகிறாள், ‘பொம்பள வளத்த புள்ளதானே?’ என்றொரு சொல் தன் பிள்ளைகளின் மேல் விழுந்து விடக்கூடாதென பிள்ளைகளை, முக்கியமாகப் பெண்பிள்ளைகளை அடைகாத்து வளர்க்கிறாள். அவளில்லாவிட்டால் குடும்பம் நிச்சயமாக இருண்டுதான் போய்விடுகிறது. நாளொரு பாடு, பொழுதொரு போராட்டமென தினந்தினம் செத்துப்பிழைக்கும் அப்பெண்களின் பிரதிநிதியான சுந்தராம்பாள் மற்றும் அவளது மூன்று மகள்களின் கண்ணீர்க்கதையை “அளம்” நாவலில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வி.

கப்பலில் வேலை செய்து சம்பாதித்து வருவதாகச்சொன்ன பொன்னையன் நாவலின் இறுதி வரி வரை திரும்பி வரவேயில்லை. வேலைக்குச் சேர்த்து விட்ட இடத்திலிருந்து காணாமல் போய் விடுகிறான். கோயில்தாழ்வு ஊரிலிருக்கும்போதும் குடும்பத்துக்காகச் சம்பாதிக்காமல் வெட்டியாகச் சுற்றிக்கொண்டிருந்தவன்தான் ஆகவே அவன் இருந்தாலும் இல்லாமற்போனாலும் உழைத்தாக வேண்டிய பொறுப்பு சுந்தராம்பாளுக்குத்தான். கஷ்டத்தையும் கண்ணீரையுமே சொத்தாகக் கொண்டிருக்கும் அவர்களை இயற்கைச்சீற்றமும் தன் பங்குக்குச் சோதிக்கிறது. எழ நினைக்கும்போதெல்லாம் அடித்து உட்கார வைக்கிறது. வீடு, ஆடு மாடுகள்,  விளைந்து நிற்கும் பயிர் என எல்லாவற்றையும் நந்தன, மன்மத வருடங்களில் ஏற்பட்ட புயல், வெள்ளத்தில் பறிகொடுத்து நிற்கிறார்கள். புயல் வீசும் அத்தியாயத்தை வாசிக்கும்போது, “கஜா” புயல் நினைவுக்கு வந்தது.

இரண்டு முறை திருமணம் செய்து கொடுத்தும் விதவையாய்த் தாய்வீட்டுக்கே மறுபடி மறுபடி வந்து சேரும் வடிவாம்பாள், மகிழ்வாய் ஆரம்பித்த மணவாழ்வு கணவன் வேறு திருமணம் செய்து கொண்டதால் கருகி விட, மூன்று குழந்தைகளுடன் தாய்வீட்டுக்குத் திரும்பும் இரண்டாவது மகளான ராசாம்பாள், கல்யாணமாகாத கடைசிப்பெண் அஞ்சம்மாள் என அவர்களது குடும்பமே நிலைகுலைந்து போகிறது. அவர்களது அயராத உழைப்பை மட்டுந்தான் விதியால் பறிக்கவியலவில்லை. சுப்பையன் சிங்கப்பூரில் எங்கோ இருக்கிறான் என்ற நம்பிக்கையிலேயே நாட்களை ஓட்டுகிறார்கள். என்றாவது ஒரு நாள் அவன் திரும்பி வரக்கூடும், தங்களைத் தேடுவான் என்ற நம்பிக்கை கொண்டிருப்பதால் கோயில்தாழ்வை விட்டு வெளியூருக்குப் பிழைக்கப்போகாமல் எல்லாச் சோதனைகளையும் தாங்கிக்கொண்டு அங்கேயே இருப்பது நெகிழ வைக்கிறது என்றாலும், குடும்பத்தின் மேல் அக்கறை கொள்ளாத ஒருத்தனுக்காக இவ்வளவு சிரமங்களைத் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. 

வாட்டும் வறுமையில் வயிற்றுப்பாட்டைக்கழிக்க அன்றாடங்காய்ச்சியான அவர்கள் படும் பாடுகள் அநேகம். இயற்கையும் அவர்கள் மேல் கருணை கொண்டு, மின்னிக்கிழங்கு, கொட்டிக்கிழங்கு, கார கொட்டிக்கிழங்கு, அதலை விதைகள், தொம்மட்டிக்காய்களும் பழங்களும் என அள்ளி வழங்கி அரைவயிற்றுக்காவது பசியைத்தீர்க்கிறது. உப்பளத்தில் வேலைக்குச் சென்றவர்கள் ஒரு கட்டத்தில் தங்களுக்கெனச் சொந்தமாக ஒரு துண்டு உப்பளத்தை வாங்குகிறார்கள். ஆண் துணையற்ற அக்குடும்பத்துக்கு அந்த உப்பளம்தான் இறுதியில் துணையாகிறது. அதில் விளையும் உப்பில் அவர்களது கண்ணீர் கலந்து இன்னும் கரிக்கலாம், யார் கண்டது?

நாவலில் நெடுக வேதாரண்யம், நாகப்பட்டினம் பகுதிகளின் வட்டார வழக்கு இடையோடுகிறது. அத்துடன், நெய்தல் நிலமான அப்பகுதிகள் மற்றும் உப்பளங்களின் நிலவியல் அமைப்பை மிகவும் அழகாகவும், அந்த எளிய பெண்களின் போராட்டத்தை யதார்த்தமான தனது எழுத்தால் அழுத்தமாகவும் இந்த வாழ்வியல் நூலில் பதிவு செய்துள்ளார் தமிழ்ச்செல்வி..

நூல்: அளம்
ஆசிரியர்: சு. தமிழ்ச்செல்வி
வெளியீடு: ந்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

Saturday 27 August 2022

“நேரா யோசி" - புத்தக மதிப்புரை


திரு. சுதாகர் கஸ்தூரியின் இப்புத்தகம் சுயமுன்னேற்றப் புத்தகமா எனில் ஆம், ஆனால் உளவியல் ரீதியான சுய முன்னேற்றப்புத்தகம் என்று கூறலாம். ஒரு மனிதன் முன்னேற முட்டுக்கட்டையாய், தடைக்கல்லாய் இருப்பது எவ்விதமான வெளிக்காரணியுமல்ல.. முழு முதற்காரணி அவனேதான். அவன் எனில் அவனது மனம், அந்த மனத்தை அவன் கையாளும் விதம், அவன் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பாங்கு, அவற்றைத் தீர்க்கும் விதம், தன்னைப்பற்றி அவன் கொண்டிருக்கும் சுய மதிப்பீடு, அவனது பொறுப்புணர்வு என பலவும் கொண்டது. அவையே பெரும்பாலும் அவனது வெளித்தெரியாத எதிரிகளுமாகும்.

“எண்ணித்துணிக கருமம்” என்பது ஆன்றோர் வாக்கு. அப்படி மனங்குவித்துச் சிந்தனை செய்யப்புகும்போது, இந்த எதிரிகள்தான் தடையாக வந்து நிற்பர். இந்நூலில் அப்படிப்பட்ட 26 எதிரிகளை நமக்கு இனங்காட்டி, அவர்களை வெல்லவும் தாண்டிச்செல்லவும் பல வழிமுறைகள் கூறப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றையும் வாசிக்கும்போது, “அட!! ஆமால்ல” என நாமும் ஒத்துக்கொள்கிறோம். நம்மில் உறையும் ஒவ்வொரு எதிரியையும் இனங்காண்கிறோம். இவற்றில் ஒவ்வொரு எதிரியும் முக்கியமானவர்தான் எனினும் என்னளவில், பின்னூட்டமற்ற போக்கு, சுய இரக்கம், விருப்பமும் முன் முடிவுகளும், பிரசார விளைவு மற்றும் செய்தி விளைவு, தேர்ச்சியெனும் பொறி, எல்லையற்ற நற்பண்புகள் போன்றவற்றை மிக முக்கியமானவையாகக் கருதுகிறேன். “நான் எதைச்செஞ்சாலும் வெளங்காது” என்ற கழிவிரக்கம் நம்மை ஒரு அடி கூட முன்னேற விடாமல் அப்படியே அங்கேயே ஆணியடித்தாற்போல் அமரச்செய்து விடும். அப்புறம் முன்னேற்றமாவது ஒன்றாவது..

மனம், மூளை இரண்டும் ஒன்றா வெவ்வேறா என்ற விவாதம் அவ்வப்போது எழுந்தடங்குவது உண்டு. நம் சிந்தனையின் வேகத்திற்கேற்ப மூளையின் செயல்பாடுகள் மாறுவதும், மூளையிலேற்படும் மாற்றங்களுக்கேற்ப நம் சிந்தனைகள் அமைவதும் உண்டு. Anxiety எனப்படும் மனப்பதற்றப்பிரச்சினை உள்ளவர்களுக்கு, சிறுசிறு பிரச்சினைகள் வந்தால் கூட அதை எதிர்கொள்ள கடினமாக இருக்கும், பயம் வந்து மூடிக்கொள்ளும், இதயத்துடிப்பு எகிற, உடல் முழுதும் வியர்த்து வழிய துவண்டு போவார்கள். ஏதாவது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை இவர்களை ரொம்பவே தொந்தரவு செய்யும், அப்பிரச்சினையை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஏதோ சிங்கம் புலியை நேரில் கண்டாற்போல் பயப்படுவார்கள். அந்த பயமே அவர்களை சிறைப்படுத்தி விடுவதுமுண்டு. இதெல்லாம் மூளையிலிருக்கும் (Amygdala)செய்யும் வேலை. 

நாம் கற்கால மனிதர்களாக இருந்தபோது இந்த அமைக்டிலாதான், “இங்கே நிற்காதே.. ஓடி உன்னைக்காப்பாற்றிக்கொள்” என எச்சரிக்கை செய்தது, அட்ரீனலினைச்சுரக்க வைத்துப் பரபரப்பூட்டியது. தற்காலத்திலும் அதேபோல்தான், சில செய்திகளைக்கேட்கும்போது அட்ரீனலினைச்சுரக்க வைத்து பரபரப்பூட்டி விடுகிறது. அதிகமான அட்ரீனலின் சுரப்பே anxietyக்கும் காரணமாகிறது. அந்த உணர்ச்சி வேகத்தில் ஓடும் நமது அனிச்சைச்சிந்தனைகளுக்கும், முடிவுகளுக்கும் அட்ரீனலினின் வேகம் சற்றுக்குறைந்த பின் வரும் சிந்தனைகளுக்கும் முடிவுகளுக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. இந்த அனிச்சை எண்ணங்களை மாற்றியமைப்பதற்காக CBT (Cognitive Behaviour Therapy) கொடுப்பதுண்டு. கொஞ்சங்கொஞ்சமாக அமைக்டிலாவின் தாக்கத்தைக் குறைத்து தர்க்கபூர்வமாக சிந்திக்கக் கற்றுத்தருவார் கவுன்ஸிலர். அதாவது எதையும் “நேரா யோசிக்க”க் கற்றுத்தருவார். நேரா யோசிக்கும்போது என்னதான் நாம் பிற காரணிகளால் தூண்டப்பட்டாலும் நிதானமிழக்காமல் இருப்போம். இப்புத்தகத்திலும் அந்த தெரப்பியின் அடிப்படையிலேயே பல்வேறு உத்திகள் சொல்லப்பட்டுள்ளன. “You can’t change, but modify” என கவுன்ஸிலர்கள் சொல்வதுண்டு.

நமது முன்முடிவுகள் காரணமாக, பிரச்சினைகளையும், இவ்வுலகையும் அது எப்படியிருக்கிறதோ அப்படிப்பார்க்காமல், நாம் எப்படிப்பார்க்க விரும்புகிறோமோ அப்படிப்பார்க்கிறோம். இவற்றிலுள்ள பிழைகளைச்சுட்டிக்காட்டி நேராக யோசிக்கக்கற்றுத்தந்து நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது இந்நூல். 

இன்றைய தினம் நம் முன் முக்கியமாக இளைய தலைமுறையினர் முன் நிற்பது “போலிச்செய்திகள்” எனும் மிகப்பெரிய எதிரி. “முன்னோர் ஒன்றும் முட்டாளல்ல” எனவும் “ஷேர் செய்யுங்கள்” என நிபந்தனை விதித்தும் வெளியாகும் பொய்ச்செய்திகள் அனேகம். இப்பொறிக்குள் விழுபவர்கள், பிறர் மீது வெறுப்பு, கோபம், மற்றும் ஆதாரமில்லாத மருத்துவக்குறிப்புகளைப்பின்பற்றுதல் என தங்கள் சமூக, குடும்ப உறவுகளைச் சிதைத்து உடல்நலத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இளைய தலைமுறையினர் சற்று யோசித்தாலே அதிலிருந்து வெளி வந்து விடுவர். இந்த நூல் அனைத்துத் தரப்பினரும் வாசிக்க ஏற்றதுதான் என்றாலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் வாசித்தால் அவர்களது மனநலம், சிந்திக்கும் திறன், அதன் காரணமாக வாழ்வில் முன்னேற்றம் என எல்லாமும் மேம்படும். கல்லூரிகள், பள்ளிகளில் பாடமாக வைக்கலாம்.

எழுத்தாளர், நண்பர், திரு.சுதாகர் கஸ்தூரி பன்முக வித்தகர். வெண்பா எழுதி வியக்க வைப்பார். தெற்கத்தித் தமிழில் எழுதி ரசிக்க வைப்பார். அறிவியல் கட்டுரைகள் எழுதி அசர வைப்பார். மும்பையில் வசித்தாலும் தூத்துக்குடித் தமிழர். அவரின் நூற்களில், 6174 மற்றும் 7.83 ஹெர்ட்ஸ் என இரு நூல்களையும் வாசித்திருக்கிறேன். இந்நூல் அவரது அனைத்து நூற்களிலிருந்தும் மாறுபட்ட ஒன்று.

Thursday 4 August 2022

"ஆனந்தவல்லி" - புத்தக மதிப்புரை


முடியாட்சி நடந்து வந்த காலத்தில், வென்றவர் தோற்ற மன்னரின் நாட்டிலுள்ள செல்வங்களை அழித்ததையும், மகளிரைச் சூறையாடிப் பொசுக்கியதையும், கவர்ந்து சென்று தம் நாட்டில் அடிமைகளாக வைத்திருந்ததையும், கைது செய்து கொண்டு வந்த ஆண்களை தம் நாட்டில் அணை, கோவில் கட்டுதல் போன்ற கடினப்பணிகளில் ஈடுபடுத்தியதையும் கேட்டிருக்கிறோம். பிற்காலத்தில் ஆங்கிலேயர் காலத்தில் மக்களை அண்டை நாடுகளுக்கு கொத்தடிமைகளாக அனுப்பியதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தக்காலத்தில் அடிமை வாணிகம் சர்வ சாதாரணமாகவே இருந்திருக்கிறது. ஆனால் இந்த வாணிகம் வெளிநாட்டில் மட்டுமன்றி உள்நாட்டிலும் நடந்திருக்கின்றது, குறிப்பாகப் பெண்களை ராஜாக்கள் விலை கொடுத்து வாங்கியிருக்கின்றனர். இச்சமயம் அரிச்சந்திரன் தன்னையும் தன் மனைவி மற்றும் மகனையும் அடிமைகளாக விற்றுக்கொண்ட கதை நினைவுக்கு வருகிறது. இந்த அவலம் நம் தமிழ்நாட்டிலேயே நிகழ்ந்திருக்கின்றது என்பது சீரணிக்க சற்றுக் கடினமான ஒன்றே. அப்படி விற்கப்பட்ட.. அதுவும் பெற்ற தகப்பனாலேயே அக்கதிக்கு ஆளாக்கப்பட்ட “ஆனந்தவல்லி” என்பாளின் உண்மைக்கதையே இந்நாவல்.

ஊர்ந்து நடந்து அதன்பின் ஓடத்துவங்காமல், நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலேயே நாலுகால் பாய்ச்சலில் ஓடத்துவங்கி விடுகிறது நாவல். பெரிய நாயக் கொத்தனின் திருவிளையாடல்களையும் அவன் எப்பேர்ப்பட்ட வாய்ஜாலக்காரன் என்பதையும் ஆரம்பத்திலேயே கோடு போட்டுக்காட்டி விடுகிறார் நூலாசிரியர். இப்பேர்ப்பட்ட ஒருத்தனிடமிருந்து அவன் மனைவி பிள்ளைகளை அவன் கூடப்பிறந்தவர்கள் காத்திருக்கக்கூடாதா என்ற அங்கலாய்ப்பு பின்னர் நமக்கு எழுகிறது. குறைந்த பட்சம் அவன் மனைவியாவது எதிர்த்து நின்று அவனைக் கேள்வி கேட்டு, நெறிப்படுத்த முயன்றிருந்தால் பாவம்.. ஒரு பெண்பிள்ளையின் வாழ்வு பிழைத்திருக்கும் என்று தோன்றுகிறது.

மீனாட்சியாக இருந்தவள் ஆனந்தவல்லியாக மாறும் வரையிலான வருடக்கணக்கான அவளது அடிமை வாழ்வில், ஐந்து வயதில் தன்னை மணந்த சபாபதிப்பிள்ளையை ஒரே ஒரு முறைதான் நினைத்துப்பார்க்கிறாள். ஆனால், அவனோ அவளை மீட்பதைத்தவிர வேறு சிந்தனையே இல்லாதவன். “அவ வெளிய வந்தாலும் ஒம்பொண்டாட்டியா இருக்கறதுக்கு தகுதியானவளா இருக்க முடியாது” என தகப்பனே ரசக்குறைவாகப் பேசினாலும் “அவள மீறி நடந்த எந்த விஷயத்துக்கும் அவள பொறுப்பாக்க முடியாது” என்ற நிலைப்பாடு கொண்டவன். பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆண் அவ்வண்ணம் ஒரு கருத்தைக் கொண்டிருந்தது வரவேற்கத்தக்கதே. அப்படியொரு எண்ணம் இருந்ததால்தானே அவன் மதறாஸ் மாகாணத்தின் கவர்னரின் கதவுகளைத் தட்டும் வரை போயிருக்கிறான். “மொகம் கூட தெளிச்சியா இல்லை, ஆனா அந்தப்பாசத்த மாத்திக்க முடியாதுப்பா” எனும்போது நாமும் கலங்குகிறோம்.

இவ்விருவரின் ஊடேயும் நாவல் முழுக்க இழையோடுகிறது தஞ்சை அரசின் அரசியல் வரலாற்றுச்சிடுக்குகளும், கல்யாண மஹாலின் பதவிஅதிகார அடுக்கும். கத்திக்கல்யாணத்துக்கும், மன்னர் நேரடியாக மணந்த அரசியருக்கும் கூட அதிகாரத்திலும் அவர்கள் வயிற்றிலுதித்த மக்களுக்கான உரிமையின் அடுக்கிலும் வித்தியாசம் இருந்திருக்கிறது. தவிரவும் போகஸ்திரீகளான பாயிகள், அவர்களுக்குப் பணிவிடை புரியும் அக்காமார்கள், இறுதியாக தொண்டூழியம் புரியும் ஏவல் பெண்டுகள் என இத்தனை பேரின் ஊடே அந்தக்கால தஞ்சையைக் காண்கிறோம். 

அக்காலத்தில் பெருமளவில் நிலவி வந்த ‘உடன்கட்டையேறுதல்’ எனும் கொடிய பழக்கத்தை ஆங்கிலேயர் வெறுத்ததற்கு ‘அரசகுடும்பத்துப்பெண் சதிமாதாவானால் அது ஆங்கிலேயருக்கு எதிராக அச்சமஸ்தானம் எழுப்பும் குரல்’ என்ற கண்ணோட்டம் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், பெண்டிரோ இரு வகைகளில் தூண்டப்பட்டு வந்தனர். சதிமாதாவானால் கிடைக்கும் தெய்வநிலை, நடுகல் வழிபாடு போன்ற உயர்நிலை ஒரு பக்கமெனில், “அக்னிப்பிரவேசம் ஒன்றில்தான் பெண்ணுக்குக் குடிப்பெருமை கிடைக்கும், அப்பெண்ணின் மைந்தனுக்கு அதன்மூலம் கிடைக்கும் அதிகாரம் இணையற்றது” என்ற மனநிலை இன்னொரு பக்கம். அக்காலத்தில் சதிமாதாக்களின் உடலில் இருக்கும் நகையை ஈமக்கடனை நடப்பித்த புரோகிதர்கள் மறுநாள் சாம்பலிலிருந்து எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது என்பது சொல்லப்பட்டிருக்கிறது.

அப்போது நம் நாட்டை மெல்ல மெல்ல கைக்குள் கொண்டு வந்து ஆளத்தொடங்கியிருந்த பிரிட்டிஷாரின் நரித்தனம், உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அதிகாரம் செய்தல் போன்றவை இந்த நாவலில் நிறையவே விளக்கமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. சொகுசாய் வாழ்வது ஒன்றே குறியாய், மக்கள் எக்கேடும் கெட்டுப்போகட்டும் என்று வாழ்ந்திருந்த அவர்களிடமிருந்து என்ன நியாயம் கிடைத்து விடும்?. ஆங்கிலேயரின் உண்டு உறைவிடப்பள்ளிக்கு நன்கொடை தருவதாக மஹாராஜா சொன்னபின் அவரை எதிர்த்துக்கொள்வார்கள் என்றோ, மீனாட்சியை விடுதலை செய்து அவள் கணவனுடன் அனுப்பி வைக்கும்படி ராஜாவுக்கு உத்தரவிடுவார்கள் என்றோ எதிர்பார்க்க முடியுமா என்ன?

அசிங்கப்பட்ட உடம்போடு வாழ்வதா? என தற்கொலைக்குத்துணியும் சந்திரம்மாவிடம் ஆனந்தவல்லி கேட்கும் கேள்வி ஒவ்வொரு பெண்ணும் தன்னிடம் கேட்டுக்கொள்ள வேண்டியது. விசுவாசம் என்பது கூட சமூகத்தின் ஜாதி, பொருளாதார படிநிலைகளுக்கேற்ப மாறுமா என்ன? அப்படித்தான் அப்பெண்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். என்றேனும் ஒரு நாள் தன் அம்மாவைப் பார்த்து விட முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாள் ஆனந்தவல்லி.

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியாத நேர்மையாளரான மோஹித்தே, மீனாட்சியின் நிலை கண்டு, அவள் கணவனுடன் இணைய தடையாக இருந்துவிடக்கூடாதே என்ற அங்கலாய்ப்பால் வீரம்மா என்ற அக்காவிடம் உதிர்த்த “பவித்ரம்” என்ற ஒரு சொல் மீனாட்சியின் வாழ்வைப் புரட்டிப்போட்டு அவளை அவள் குடும்பத்திடமிருந்தே பிரித்து விடும் என அவர் அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. “நான் ஒண்ணும் பரம்பரையா அக்காவா இருக்கறவ இல்ல” என வீரம்மாவை அந்தச்சொல் உலுக்கிப்போடாமல் இருந்திருந்தால் ஒருவேளை மீனாட்சி அவள் குடும்பத்தினருடன் சேருவதைத் தடுக்காமல் இருந்திருப்பாளோ என்னவோ!! ஒரு பெண்ணின் அகங்காரத்தைத் தூண்டிய அச்சொல்லால் இன்னொரு பெண்ணின் வாழ்வையே பலியிடத்துணிகிறாள்.

கொடிகட்டிப்பறந்த அடிமை வியாபாரத்துக்கு எதிராக மன்னரிடமும், அதன்பின் அவர்களையே கேள்வி கேட்கும் அதிகாரம் கொண்ட ஆங்கிலேயரிடமும் புகாரளித்தும்  மீனாட்சியை மீட்க இயலாத சபாபதியின் கையறுநிலை கலங்க வைக்கிறது. காவலனே கள்வனானால் என் செய்ய இயலும்?. சபாபதி மதறாஸ் கவர்னருக்கு எழுதிய கடிதத்தின் மேல் எழுந்து நிற்கிறது இந்நாவல். ஒற்றைக் கடிதத்தை அஸ்திவாரமாய்க்கொண்டு, இதுவரை யாருமே தொடாத புதுக்களத்தில்  பெருங்கோட்டையொன்றை எழுப்பியிருக்கிறார் எழுத்தாளர் லஷ்மி பாலகிருஷ்ணன். இவரது முதல் நாவல் என்று சொல்லவியலாத அளவுக்கு ஆரம்பத்தில் தொடங்கி இறுதி வரிகள் வரை விறுவிறுப்புடன் செல்கிறது இந்த நூல்.

ஆசிரியர்:லஷ்மிபாலகிருஷ்ணன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

“வேணுவன மனிதர்கள்” - புத்தக மதிப்புரை


பிஞ்சுப்பிராயத்திலிருந்து பழுத்து உதிரும் காலம் வரை வாழ்வில் நாம் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம், எத்தனையோ பேர் நம்மைச் சந்திக்கிறார்கள், சிறு பொழுதே சந்தித்துப்பிரிபவர்கள் முதல் அன்றாட வாழ்வில் தினமும் சந்திக்க நேர்பவர்கள் முதல் எத்தனையோ பேருடன் பழகினாலும் ஒரு சில மனிதர்கள் தம் தடத்தை லேசாகவோ அழுத்தமாகவோ நம் நினைவுகளில் பதிய வைத்து விடுகிறார்கள். அப்படி தன் நினைவில் பதிந்தவர்களை திரு. நாறும்பூ நாதன் அண்ணாச்சி இந்த வேணுவன மனிதர்களில் ரத்தமும் சதையுமாக உலவ விட்டிருக்கிறார்.

கிணற்றில் விழுந்த பொருட்களைத் துழாவி எடுக்கும் பாதாளக்கரண்டி அதற்கு முன் எப்போதோ விழுந்த பொருட்களையும் சேர்த்து தேடியெடுத்துத்தரும். அதைப்போல், இந்த மனிதர்களைப்பற்றி வாசிக்கையில் நாம் எப்போதோ சந்தித்த மனிதர்களிடம் போய் நிற்கிறது நமது நினைவுத்தடம். அவ்வகையில் இந்நூலும் ஒரு பாதாளக்கரண்டியே. காது கேட்காத, வாய் பேச இயலாத குருவம்மா அப்படித்தான் எங்கள் அம்மை வீட்டில் ஒத்தாசைக்கு வந்து போய்க்கொண்டிருந்த கிட்னம்மாவை ஞாபகப்படுத்தினார். காது கேட்காதே தவிர திக்கித்திக்கி ஓரளவு பேசுவார், எதிராளியின் உதடு அசைவுகளைக் கூர்ந்து கவனித்து ஓரளவு புரிந்து கொள்வார். எம்.ஜி.ஆர் படங்களென்றால் உயிர், பார்த்து விட்டு வந்து மறுநாள் வீட்டுக்காரியங்கள் பார்த்துக்கொண்டே அம்மைக்கும் எங்களுக்கும் கதை சொல்வார்.

பிரியமாய்ப் பழகி பசை போட்டு ஒட்டிக்கொண்டது போல் மனதில் ஒட்டிக்கொண்ட இன்னொருவர் “பாஞ்சாலி ஆச்சி’. தினமும் வீட்டுக்கு வருவார், ஆர்ப்பாட்டமாய் நுழைந்து உற்சாகமாய்ப்பேசி கலகலக்க வைத்து விட்டுச் செல்வார். வீட்டில் காய்த்த கொய்யாக்காய்கள், பழங்களை மடி நிறையக் கட்டிக்கொண்டு வருவார். சிறுபிள்ளைகள் இருக்கும் வீடுகளில் அவற்றைக் கொடுத்து ரசிப்பார். சில சமயம், வாசலில் வரும்போதே, அம்மையைப்பார்த்து “ஏ பிள்ள… சரஸோதில(சரஸ்வதி) புதுப்படம் போட்ருக்கான், வா, ரெண்டாம்ப்ளே போலாம்” எனக்கேட்டபடி ஆர்ப்பாட்டமாய் நுழைவார். வருகிறாயா? என்றெல்லாம் கேட்பது அவரது அகராதியிலேயே கிடையாது, கைப்பிடியாக இழுத்துக்கொண்டு போய் விடுவார். எல்லோரையும் குசலம் விசாரித்தபடி எல்லோருடனும் இணக்கமாக இருக்க எண்ணிய அவரை சேது ஆச்சி என்றும் சொல்லலாம்.

ஒரு காலத்தில் போட்டோ கிராபர்களுக்கு விசேஷ வீடுகளில் இருந்த வரவேற்பையும், அந்தக்கால ஃபிலிம் காமிராக்களையும், பற்றி திருச்சிற்றம்பலம் அண்ணாச்சியைப் பற்றிய கட்டுரையில் சுவைபடக் கூறியுள்ளார் நூலாசிரியர். இப்போதெல்லாம் “கேண்டிட் போட்டோகிராஃபி” மிகவும் பிரபலமான ஒன்று. அந்தக்காலத்திலேயே கலைநயத்துடன் எடுக்கப்பட்ட அவ்வகைப் போட்டோக்களின் மூலம் மட்டுமல்ல, வேணுவன மனிதர்களில் இடம் பெற்றதன் மூலமாகவும் காலத்துக்கும் நின்று பேசப்படுவார்.

புனைவுகளில் வேறு பெயர்களில் நிழலாக வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தும் பலரை அவர்களின் நிஜத்தோடு நம்முன் நிறுத்துகிறார் நூலாசிரியர். அவர்களில், நம் அடுத்த வீடுகளில் தினசரி பார்க்க வாய்க்கக்கூடிய எம்.ஜி.ஆர். சங்கரன், கல்யாணி அக்கா, பொன்னையா வாத்தியார், முத்தம்மாள், சிவஞான மாமா, சிகைக்கலைஞர் மகேந்திரன், சூரியன் முதல், கான்சர் வந்து படாதபாடு படும் ஆம்ஸ், தன் நகையேயானாலும் ஏலத்துக்கு வந்தபின் தனக்குச் சொந்தமில்லாத நகையைக் கையில் போடுவதும் தப்பு என்றெண்ணும் அறவுணர்வு கொண்ட அங்கயற்கண்ணி, சிறைப்பட்டிருக்கும் தோழர்களின் குடும்பங்கள் பசியில் வாடாவண்ணம் ஆதரித்த சங்கரப்ப நைனா, சலவைத்தாளை சரட்சரட்டென எண்ணி செலவு செய்ய புது ரூபாய்க்கட்டுகளையே கேட்டு வாங்கும், “சீதேவிய காலடிப்பக்கம் போட்டிருக்கீகளே” என அங்கலாய்க்கும் முத்துக்காளை, பால்யத்தைக் கிராமங்களில் கழிக்க நேர்ந்த ஒவ்வொருவரும் தனது விளையாட்டுத் தோழமையாகக் கண்டிருக்கக்கூடிய சாக்கடை முருகனாக இருந்து தற்போது சாத்தூர் முருகராக இருப்பவர், சவத்து மூதி போன்ற வசவுகளையே கை அசைவுகளில் விளக்கி விடும் பர்வதத்தக்கா வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தடம்.
எல்லாக் குடும்பங்களிலும், வேலையிடங்களிலும் பொறுப்பான ஒரு ஏமாளி இருப்பார். பிறர் செய்யத்தயங்கும், அஞ்சும் வேலைகளை நாலு நல்ல வார்த்தை சொல்லி இவர் மேல் சுமத்தி விட்டு, அவர்கள் ஒதுங்கி விடுவார்கள். வேறு வழியில்லாமல் செய்ய நேர்ந்தாலும், தன் மேல் நிஜமான பரிவு காட்டுபவர்களிடம் இளகி விடுபவர்கள் உண்டு.. பொறுப்பு கணேசனைப்போல். ரசிகன் என்ற நிலையைத்தாண்டி, எம்.ஜி.ஆரை ஆராதிக்கும் உபாசகனாகவே இருக்கும் தங்கராசு, மது மயக்கத்தில் தெருவாசிகளுக்குத் தொல்லை கொடுக்கும்போது அவரைத் திசை திருப்பி, நைச்சியமாய் அமைதிப்படுத்த ஒரு எம்.ஜி.ஆர். பாடல் போதும். “சந்திரன்” ரொம்பச்சுருக்கமாகச் சொல்லி விட்டாரோ எனத்தோன்ற வைக்கும் பகுதி. அணிந்துரையில் வண்ணதாசன் ஐயாவே சொல்லியிருப்பது போல் ஒரு நாவலாக விரியக்கூடிய சாத்தியக்கூறுகள் அதற்கு அதிகம். காவிரியைக் குறுமுனி கமண்டலத்தில் அடைத்தது போல் நூலாசிரியரும் சுருக்கி விடாமல் என்றாவது நாவலாகப் பெருகச்செய்வார் என எதிர்பார்ப்போமாக.

குழந்தைகளை வழிக்குக்கொண்டுவர வன்முறையைப் பிரயோகிக்கக்கூடாது என்ற நடைமுறை பள்ளிகளில் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும் இக்காலப் பிள்ளைகளுக்கு, அந்தக்காலத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பிரம்பால் அடிப்பதுண்டு என்ற செய்தியே புதுமையாகத் தோன்றும். ஆனால், ஆசிரியர்கள் பிள்ளைகளின் கல்வி மீது மட்டுமல்லாமல் ஒழுக்கத்திலும் அக்கறை கொண்டிருந்த காலம் அது. ‘கண்ணு முழிய மட்டும் விட்டுட்டு தோல உரிச்சுருங்க’ என பெற்றவர்களே ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கியிருந்த சமயம். அப்படியிருந்தும், தன்னிடம் கற்கும் மாணவனை அடித்து விட்டதற்காக, கலங்கி அழும், இறைவனிடம் மன்றாடும், தன்னையே அடித்துத்துன்புறுத்திக்கொள்ளும் அன்னத்தாய்கள் அபூர்வப்பிறவிகள்தான். தன்னிடம் பயிலும் பிள்ளைகள் எல்லோருமே தன் மகவுகள்தான் என்றெண்ணும் தாயுள்ளமல்லவா அது.

சுகாவின் எழுத்துகளை வாசிக்கும் அனைவருக்குமே “டவுன் மீனாட்சி” பரிச்சயப்பட்டவர்தான். நெல்லை ஜங்க்ஷன் மற்றும் டவுனில் எந்தெந்தக் கடைகளில் எந்தெந்த சாப்பாட்டு அயிட்டம் நன்றாக இருக்கும் என்ற அரிய தகவல்களைக் குவலயத்திற்கு அறியச்செய்வதில் இவரது பங்கு அளப்பரியது. இவர் அள்ளித்தெளித்திருக்கும் பட்டியலை அறியும்போது, இவ்வளவு கடைகளை எப்படித்தெரிந்து வைத்திருக்கிறாரென்று நூலாசிரியருக்கு மட்டுமல்ல நமக்கும் ஆச்சரியம் வரும். நெல்லை டவுனில் தெற்கு ரத வீதியிலிருக்கும் மாரியம்மன் விலாசின் புகழ் பெற்ற ‘திருப்பாகம்’ என்ற இனிப்பு இவர் சொல்லி நூலாசிரியர் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானது. ருசியும் அபாரம். இலக்கியம் படிக்காவிட்டாலும் மனிதர்களைப் படித்திருக்கும் மீனாட்சி முத்தாய்ப்பாகச் சொன்னதுதான் எல்லாவற்றிலும் உயர்ந்தது. அத்தியாயங்களில் வரவில்லைதான் எனினும் நம்பிக்கை ஒளிவிடுகிறது அரசு அண்ணன் என்னும் ஒளிக்கீற்று. 

“ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனையோ மனிதர்கள் வந்து போயிருப்பார்கள், அவர்களை நினைவூட்டவே இந்த நூல்” என நூலாசிரியர் கூறுவதைப்போல் அனைவரது வாழ்விலும் மனிதர்கள் வந்து போகிறார்கள்தான், ஆனால் ஏதோ ஒரு வகையில், நினைவில் தடமாய் தடயங்களாய் நின்று விடுகிறார்கள் அழியாமல்.

நூலாசிரியர் :திரு. இரா. நாறும்பூ நாதன்.
வெளியீடு; சந்தியா பதிப்பகம்.
விலை: Rs.140/-

LinkWithin

Related Posts with Thumbnails