Showing posts with label கவிதை மாதிரி. Show all posts
Showing posts with label கவிதை மாதிரி. Show all posts

Wednesday, 3 August 2011

அறிதுயில்..(திண்ணையில் வெளியானது)



                                             

குழந்தைகளுக்கு அழகே குறும்புதானே.. முழிச்சுட்டு இருக்கற நேரங்கள்ல அதுங்க பண்ற அட்டகாசம் இருக்கே.. அப்பப்பா:-)) ஒவ்வொண்ணும் அந்த விஷயத்துல கோகுலத்து கிருஷ்ணர்கள்தான். அதுவே, தூங்கறச்ச, அடடா!!.. கொள்ளையழகு!!. 


இந்தக்குழந்தைதான் அவ்ளோ விஷமம் செய்யுதுன்னு சத்தியம் செஞ்சாலும் யாரும் நம்ப மாட்டாங்க. அப்படியொரு தேவதைமாதிரியான சாந்தமானதொரு முகதரிசனத்தோட இருக்கும். பார்த்துக்கிட்டே இருக்கலாம்போல இருக்கும். தூங்கும்போது அதிகம் பார்க்கக்கூடாது.. கண்ணு பட்டுடும்ன்னு சொல்லுவாங்க. அதெல்லாம் உண்மையோன்னு தோணும்.


அதுங்க சேட்டைய தாங்கமுடியாம 'ஒரு நிமிஷம் சும்மாயிருக்க மாட்டியா'ன்னு அதுங்க கிட்ட பரிதாபமா மன்றாடுறதும் நாமதான். எப்பவாவது நம்ம மேல இரக்கப்பட்டு அதுங்க அமைதியா இருந்தா,  'இன்னிக்கு என்னாச்சு?.. புள்ள சுரத்தே இல்லாம இருக்குதே!!.. ஒடம்புக்கு ஏதாச்சும் இருக்குமோ' ன்னு பதறுவதும் நாமதான். 


நமக்கெல்லாம் பல்பு கொடுக்கறதுலயும், சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளாய் நம்மை ஆடவைக்கிறதுலயும் கில்லாடிங்க இந்த வாண்டுகள். சாப்பிட ஆரம்பிக்கும் அந்த ஆரம்ப வயசுகள்ல, ' இது வேணாம்,.. அது இருந்தாத்தான் சாப்பிடுவேன்.."ன்னு அடம் பிடிக்கும். அது கேக்குறதை செஞ்சு கொடுத்தா மூணாவதா இன்னொண்ணை கேட்டு பிடிவாதம் பிடிக்கும். நாமளும் புள்ளை சாப்பிட்டா சரின்னு அதுங்க எதைக்கேட்டாலும் மறுக்காம கொடுக்கறோம். 


ஒரு விதத்துல இது தப்புதான். கேட்டதையெல்லாம் கொடுத்து பழக்கிட்டு, அப்புறம் நாம கொடுக்கமுடியாத ஏதாவதொண்ணை அதுங்க கேக்கும்போது நம்மால தரமுடியலைன்னா அந்த ஏமாத்தத்தையும் அதுங்களால தாங்கிக்க முடியறதில்லை.. நாமளும் அதுக்கு பழக்கறதில்லை. அப்படி கேட்டு கிடைக்கலைன்னா அவ்ளோதான். பெரிய மனுஷர்கள் மாதிரி 'உம்'ன்னு உக்காந்திருப்பாங்க. எது கேட்டாலும் அவங்ககிட்டயிருந்து பதில்வராது.. கோவமா இருக்காங்களாம் :-)))))))) ரொம்ப அரும்பாடுபட்டுதான் சமாதானப்படுத்த வேண்டியிருக்கும். 


இதுல கோவிச்சுட்டு தூங்கறமாதிரி ஆக்டிங் கொடுக்கற அறுந்தவாலுகளும் உண்டு.. இங்கேயும் அப்படி ஒரு வாலோட ஆட்டத்தை வாசிச்சு ரசியுங்க :-)


ஆயிரம் முறை சொல்லியனுப்பியும்
இனிப்புடன் வரமறந்த
தந்தையின் மீதான நேற்றைய கோபத்தை
ஒரு கண்ணிலும்; ..
உடன் விளையாட வரமறுத்த
அன்னையின் மீதான இன்றைய கோபத்தை
இன்னொரு கண்ணிலும்
சுமந்துகொண்டு;
கட்டிலிலேறி கவிழ்ந்துகொள்கிறாய்..

என்னுடைய எல்லா
சமாதானமுயற்சிகளையும் புறந்தள்ளிவிடுகிறது….
உன்னுடைய செல்லக்கோப
கன்னஉப்பல்…

அம்மாசித்தாத்தாவின் பஞ்சுமிட்டாய்வண்டி
தூதனுப்பிய மணியோசையும்கூட
உனது பொய்த்தூக்கத்தை
கலைக்கமுடியாமல் வெட்கி;
முகம் மறைத்தோடுகிறது இருளில்..

தாயின் குரலும்
தந்தையின் சீண்டலும் பலனளியாமல்..
ஊர்ந்துவந்த நண்டும் நரியும்கூட
விரல்விட்டு இறங்கியோடிவிடுகின்றன..

இனிப்புப்பெட்டியின் கலகலச்சத்தம் ஏற்படுத்திய
இமைகளுக்குள்ளின் மெல்லிய நடமாட்டத்தை,
அவசரமாய் தலையணையில் முகம்புதைத்து
கைதுசெய்கிறாய்..

கொஞ்சலும் கெஞ்சலும் பயனற்றபொழுதில்;
மிட்டாய்ப்பெட்டி திரும்பக்கொடுக்கப்பட்டுவிடுமென்ற
செல்லமிரட்டலுக்கு உடனே பலனிருக்கிறது!!..
‘தூங்கும் பிள்ளைக்கு காலசையுமே’யென்ற
பல்லாண்டு பழைய அங்கலாய்ப்புக்கு
உடனே பதில்சொல்கிறாய் ‘தற்செயலாய்’ விரலசைத்து..

பொய்த்தூக்கமேயெனினும்
அவ்வழகும் ரசிக்கக்கூடியதேயன்றோ!!!!!..
இதற்காகவென்றேனும், அடிக்கடி ,
அறிதுயில் கொள்ளடா..
என்,
அனந்த பத்மநாபனே………


டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.




Sunday, 14 February 2010

அன்பெனும் மழையில்...happy valentine's day

உனக்கான என்னை
நீயும்
எனக்கான உன்னை
நானும்
கண்டு கொண்டதில்
ஆரம்பித்தோம்
நமக்கான நாம்.

**********************

ஊடலுக்குப்பின்
காதல்
இது பழமொழி
ஊடலுக்குப்பின்
ஊடல்
இது
காதலர் மொழி

**********************

இன்னும்
எத்தனைமுறை வேண்டுமானாலும்
விழுவேன்
தாங்கிக்கொள்ள
உன் கரம் இருந்தால்.

**********************

தினமும் பார்த்துக்கொள்ளவில்லை
பரிசுகள் என்னும்
உரமிடவுமில்லை
ஆனாலும் செழிக்கிறது
நாம் வளர்த்த பயிர்
அன்பெனும் மழையில்.

**********************
உன் கூந்தலில்
ரோஜாவை சூட்டியதால்
மற்ற மலர்களெல்லாம்
நிறமிழந்து போயின.
உன் கூந்தல் வாசத்தின் முன்
ரோஜாவோ
வாசமிழந்து போனது.

**********************

காதலர்களுக்குத்தான்
காதலர் தினம்
நமக்கெதற்கு!!!!
நாம்தான் தினம் தினம்
உயிர் வாழ்கிறோமே!!!
காதலை சுவாசித்து.

Tuesday, 19 January 2010

நெசமாவா....

காரண காரியங்கள்
எதுவும்,
தேவைப்படவில்லை!..

அழவைப்பதென்று
முடிவானபின்,
காரணங்கள் தேடுவது
கஷ்டமாகவும் இல்லை!!.

கண்ணீர் மல்கி,வெதும்பி,
குரல் குழற
கேட்டான் அவன்;
"நெசமாத்தான் சொல்றியா"

பட்டுப்பூச்சி சிறகடிப்பை
கண்களில் காட்டி
சொன்னாள் அவள்,

"நெசமாத்தான்!!
எங்கப்பா,
ரெண்டு பொம்மை
வாங்கியாந்தாரே!!!"

ஆற்றாமையுடன்
எறிந்த கல்பட்டு,
சுக்குநூறாய் உடைந்தது,
குட்டையில் மிதந்த
அழுக்கு நிலா!!..


Monday, 11 January 2010

விடையில்லை

என்னை,
என் எண்ணங்களை,
எனக்கு
அறிமுகப்படுத்திய,
என்
எழுத்துக்கு நன்றி.

விரல்களில் வழியும்
எறும்புகளைப்போல்,
விட்டு விடாமலும்
பற்றிக்கொள்ளாமலும்,
ஓர்
அவஸ்தை!!!...

கரையேறும் வழி
தெரிந்தபின்,
ஆழங்கள்
அமிழ்ந்து போகின்றன.

சாரலடிக்கும் பொழுதுகளில்
கைக்குட்டையாய்,
சூறாவளியில்
அனல் காற்றாய்,
உருமாற்றம் கொள்கிறது!.

அதுவோ!,
இதுவோ!, என்று
மயக்கம் கொள்ளும்போது,
எதற்கும் பிடிபடாமல்,
காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது
ஓர் புதிர்!!.


LinkWithin

Related Posts with Thumbnails