Friday 28 June 2013

பொம்மை மனிதர்கள்..

ஒரு விடையைப் பெறுவதற்காக அனேகமான கேள்விகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

‘ஆம்’ என்ற பதில் வந்து விடுமோவென்ற அச்சத்தினால் கூட, நிறையக்கேள்விகள் தயங்கி நின்று விடுகின்றன.

வேலி தாண்டும் வெள்ளாட்டை நினைவு படுத்துகிறது குறுகிய சாலைத்தடுப்பை அனாயாசமாகத் தாண்டிச்செல்லும் ஒரு வாகனம்.

அதிகம் பேசுவதால் மட்டுமன்றி தேவையான இடங்களில் பேசாமல் இருப்பதாலும் சில சமயங்களில் அவதிப்பட நேரிடுகிறது.

நாட்டியமாடும் மின்னலுக்கு, இடி ஜதி சொல்கிறதென்று, போட்டியாக மேளம் கொட்டுகிறது தகரக்கூரையில் மழை.

விலையுயர்ந்த நேரத்தை வீணாய்ச் செலவழிப்பவன் சோம்பேறி, பயனாய்ச் செலவழிப்பவன் உழைப்பாளி, பார்த்துப்பார்த்துச் செலவழிப்பவன் புத்திசாலி.

இறைவன் நம்மை இவ்வுலகிற்கு தனியே அனுப்புவதில்லை. திறமையெனும் நண்பனுடன்தான் அனுப்பி வைக்கிறார்.

'வாழ்க்கையென்றால் அப்படித்தான்’ என்று நாமாகவே சொல்லிக் கொள்கிறோமே ஒழிய, அது தன்னைப்பற்றி எதுவுமே சொல்லிக் கொள்வதில்லை.

சூரியனை மட்டுமே நோக்கியிருக்கும் சூரியகாந்தியாய் வாழ்க்கையின் நல்ல பகுதிகளை மட்டுமே நினைவில் நிறுத்துவோம். நிழல்கள் காலடியில் இருந்து விட்டுப் போகட்டுமே.

மனித உறவுகள் பொம்மைகளாய் மாறி விட்ட யுகத்தில், பொம்மைகளையும் உறவினராக்கிக்கொள்ள குழந்தைகளால் மட்டுமே முடிகிறது. 

Wednesday 26 June 2013

கிருஷ்ண கமல்..

பச்சைப்பசேல் பின்னணியில் நீலக்கற்களைப் பதித்தது போல் பூத்திருப்பவைகளைக் கண்டாலே மனது நிறைந்து போகிறது. 'க்ருஷ்ண கமல்' இப்படித்தான் மஹாராஷ்டிர மக்கள் இந்தப்பூவை அழைக்கிறார்கள். 'பிரம்மகமலுக்கு' அடுத்தபடியாக இந்தப்பூவை வீட்டில் வளர்ப்பதை மிகவும் பெருமையாகக் கருதுகிறார்கள். வீட்டில் இந்தப்பூச்செடியை வளர்த்தால் ஐஸ்வரியம் என்பது இங்கே உள்ளவர்களின் நம்பிக்கை.

ஆங்கிலத்தில் இந்தப்பூவை 'Passion flower' என்று அழைக்கிறார்கள். கொடி வகையைச்சேர்ந்ததால் மல்லிகையைப்போலவே வாசலில் இதைப் பந்தலிட்டும் வளர்க்கலாம். பற்றிப்படர ஏதுவாக தொட்டியிலேயே நான்கு அல்லது ஐந்தடி உயரத்திற்கு சில மூங்கில் குச்சிகளை ஊன்றி வைத்து அதிலும் படர விடலாம். நர்சரிகளில் அப்படித்தான் வைத்திருக்கிறார்கள்.மேலும் சில வழிமுறைகள் இங்கே இருக்கின்றன. கொஞ்சம் விலையுயர்ந்த வகை என்பதால் நர்சரிகளில் எண்ணிக்கையில் குறைவாகத்தான் வைத்திருக்கிறார்கள். வளர்ந்திருக்கும் அளவு மற்றும் நர்சரிகளைப்பொறுத்து, ஒரு செடி 200 ரூபாயிலிருந்து 400 வரை விலை போகிறது.

வெள்ளை, பிங்க், மற்றும் நீல வண்ணங்களில் பூக்கும் க்ருஷ்ணகமலில் நீலம் நாட்டு வகையைச் சேர்ந்ததாம். மற்றவையெல்லாம் ஹைப்ரிட் வகையைச் சேர்ந்தவை என்று நர்சரி நடத்துபவர் கூறினார். க்ருஷ்ணகமலில் சுமார் 500க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கிறதாம். எங்கள் வீட்டில் வளர்வது எந்த வகை என்று அறியும் ஆவலில் விக்கியண்ணனிடம் கேட்டபோது அது 'passiflora incarnata' வகையைச் சேர்ந்தது என்று கூறினார். மேலும் பல விவரங்களை அள்ளித்தந்திருக்கிறார்.

இதற்கு எக்கச்சக்க மருத்துவ குணங்கள் இருக்கின்றனவாம், கூடவே பக்க விளைவுகளும். மூலிகையாயிற்றே.. பக்க விளைவுகள் இருக்குமா என்ன? என்று ஆச்சரியத்தோடு மேலும் கேட்டால் அதிர்ச்சியூட்டும் தகவல்களை நம் முன் அள்ளிக்கொட்டுகிறார் கூகிளாண்டவர். ஆகவே இந்தச்செடியை வெறுமே அலங்காரத்திற்கும் பூஜைக்குமாக மட்டுமே வளர்ப்பது சாலச்சிறந்தது. எங்கள் வீட்டில் வெறும் அலங்காரத்திற்கு மட்டுமே..

மொட்டு ஒன்று மலர்ந்திடக்காத்திருக்கிறது..
மெல்ல மெல்ல இதழ் விரித்து..
ரகசியமாய் ஒரு புன்னகையுடன்..
மலர்ந்து சிரிக்கிறது..

பூவைத்தேடி வந்த தேனீ..
பளீரென்ற சிரிப்பு..
இந்தப்பூவுக்கு 'பாண்டவ கௌரவர் பூ' என்றும் பெயருண்டு என்றொரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது. அதாவது..

நீலக்கலரில் சுற்றியிருக்கும் இதழ்கள் கௌரவர்களாம்..

அதன் உட்புறம் மஞ்சள் கலரில் இருக்கும் ஐந்து மகரந்த இழைகள் பாண்டவர்களாம்..

அதற்கு மேற்புறம் மஞ்சள் கலந்த பச்சைக்கலரில் உருண்டையாக இருப்பது திரௌபதியைக்குறிக்குமாம்..

அதற்கும் மேற்புறம் இருக்கும் மூன்று இழைகள் பிரம்மா,விஷ்ணு,சிவன் என்ற மும்மூர்த்திகளைக் குறிக்கின்றனவாம்.

நீலத்தின் உட்புறம் தெரியும் பர்ப்பிள் வளையம் கிருஷ்ணர் கையிலிருக்கும் சுதர்சனச்சக்கரத்தைக் குறிக்கிறதாம்.

இப்படியெல்லாம் நினைத்துப்பார்க்க சுவாரஸ்யமாகத்தானிருக்கிறது இல்லையா :-)

வேடிக்கை காட்டிய களைப்பில் நொந்து நூடுல்ஸாகி..
இந்தப்பூவை வீட்டில் வளர்த்தே ஆகவேண்டும் என்று தவமாய்த்தவமிருந்து வாங்கிக் கொண்டு வந்து, "இது என் செடி, நானே தண்ணி ஊத்தி வளர்க்கப்போறேன்" என்று சொல்லி வீட்டில் நட்டு வைத்து விட்டு, அப்புறம் அதை அம்பேல் என்று விட்டு விட்ட என் பெண்ணிற்கு இந்த இடுகை சமர்ப்பணம் :-)))))))

என் செடிகளுக்குப் பொசியும் நீர் ஆங்கே கிருஷ்ண கமலுக்கும் பொசிகிறது :-))

Thursday 13 June 2013

ஒன்றும் இன்னொன்றும்..

நாட்கள் என்றுமே தம்மைப் புதுப்பித்துக்கொள்வதில்லை. தினமும் புதிதாய்ப் பிறக்கின்றன. நாமும் புதிதாய்ப் பிறப்போம், சோர்வூட்டும் கணங்களை மீறி.

பொருந்திய சூழல்களில் சந்தோஷத்துடன் இருப்பவனைவிட பொருந்தாச்சூழல்களிலும் தன்னைப்பொருத்திக்கொண்டு சந்தோஷமாய் இருப்பவன் பாராட்டுக்குரியவன்.

நேற்றிலிருந்து கற்றுக்கொண்டு, நாளையில் நம்பிக்கை வைத்து இன்றில் வாழ்வோம்.

செயல்களின்றித் தவறுகளில்லை, தவறுகளின்றி அனுபவங்களில்லை, அனுபவங்களின்றி ஞானமில்லை.

புன்னகைத்திரையிட்டு கண்ணீரை மறைக்கத்தெரிந்த நமக்கு நம் கண்ணீருக்குக் காரணமானவர்கள் புன்னகைத்துக் கொள்வதைச் சில சமயங்களில் அறிந்து கொள்ளத் தெரியாமல் போய்விடுகிறது.

வெற்றிக்கோபுரத்தை நோக்கி இட்டுச்செல்லும் படிக்கட்டுகளில் சில தோல்விகளும் புதைந்து கிடக்கலாம்.

அருகில் சென்று உற்றுப்பார்க்காத வரைக்கும் எல்லாப் பூக்களுமே அழகாகத்தான் தெரிகின்றன..

‘எதுவும் நிரந்தரமல்ல’ என்ற இரண்டு வார்த்தைகளில் அடங்கியிருக்கின்றன எண்ணிலடங்கா உணர்வுகள்.

மேலோட்டமாகப் பார்க்கையில் சலனமற்றுத்தெரிபவை உள்ளுக்குள் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கவும் கூடும்

உழைப்பு உடலையும் அனுபவங்கள் உள்ளத்தையும் பக்குவப்படுத்துகின்றன.

LinkWithin

Related Posts with Thumbnails