Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, 26 June 2017

ஆற்றுக்கால் பகவதி..

அழுத கண்ணும் சிவந்த மூக்குமாக தலைவிரி கோலத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் கண்ணகி. மதுரையில் தன்னுடைய சிலம்பை உடைத்து அதிலிருந்த மாணிக்கப்பரல்களே சாட்சியாக, தன் கணவன் கோவலன் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தபின், ஆவேசம் கொண்டு மதுரையைத் தீக்கிரையாக்கி விட்டு, அதே ஆவேசம் எள்ளளவும் குறையாமல் பரசுராம ஷேத்திரத்தில் அந்த ஆற்றங்கரைக்கு வந்தடைந்திருந்தாள். அங்கு இருந்த பெரியவர் ஒருவர் அவளை ஆற்றுப்படுத்தி அமைதியடையச்செய்தபின் அவள் பொன்னுடலோடு தனக்காகக் காத்திருந்த கோவலனுடன் புஷ்பக விமானத்திலேறி வானுலகம் சென்றாள் என்பது செவி வழிச் செய்தி. அவள் யார் என்பதைக் கண்டுகொண்ட பெரியவர் அந்த ஆற்றங்கரையிலேயே அவளுக்காக ஒரு கோவில் கட்டினார். பொதுவாக கேரளக்கோவில்களில் தேவியை "பகவதி" என அழைப்பது மரபு. அந்தப்படியே இவளும் "ஆற்றுக்கால் பகவதி" எனப் பெயர் கொண்டாள்.

திருவனந்தபுரத்தின் பத்மநாபசுவாமி கோவிலிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவிலிருக்கும் இக்கோவில் உள்ளூர் மக்களால் "தேவி ஷேத்ரம்" எனவும் அழைக்கப்படுகிறது. "பெண்களின் சபரிமலை" எனவும் அழைக்கப்படும் இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் பூர நட்சத்திரம் பவுர்ணமி தினத்தன்று நடைபெறும் "பொங்காலை" மிகப்பிரசித்தி பெற்றது. லட்சக்கணக்கான பெண்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதால் இரண்டு முறை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்ற பெருமையுடையது.

தேவி சன்னிதியிலிருந்து எடுத்துச்செல்லப்படும் தீபத்தினால் கோவிலின் பெரிய மற்றும் சிறிய பள்ளி அடுப்புகளும் பண்டார அடுப்புகளும் குலவை மற்றும் மங்கல ஓசைகள் முழங்க தீப்பெருக்கப்படும். இவ்வோசை கேட்டதும் அனைவரும் தத்தம் அடுப்புகளில் தீப்பெருக்குவர். கோவில் வளாகத்தில் மட்டுமன்றி சுற்றுப்பட்டு பத்து கி.மீ. அளவில் ரோடுகள் சந்துபொந்துகளில் அடுப்பு கூட்டி, புது மண்பானையில் பொங்கலிடுவர். அதன்பின் மேல்சாந்தியும் நம்பூதிரியும் பொங்கல் பானைகளில் நீர் தெளித்து நிவேதனம் செய்வர். ஆகாயத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பூமழை தூவியதும், மக்கள் தங்கள் நிவேதனத்தை தேவி ஏற்றுக்கொண்டாள் என்ற மகிழ்ச்சியுடன் வீடு செல்வர்.

கோவிலின் முற்றத்திலேயே ஒரு பக்கமாக இருக்கும் கவுண்டர்களில் அர்ச்சனைச் சீட்டு வாங்கிக்கொண்டு தேவிக்குப் பிரியமான தெச்சிப்பூ மாலையும் கையில் சுமந்து தரிசனத்துக்கான வரிசையில் நின்றோம். முற்றத்தின் இன்னொரு பக்கத்தில் கேரளக்கோவில்களுக்கேயுரிய வெடி வழிபாட்டுக்கான அனுமதிச்சீட்டுக் கவுண்டரும் இருக்கிறது. கோவிலின் கோபுரவாசல்களில் சக்தியின் வெவ்வேறு வடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. வாசலில் நிற்கும்போதே மூலவரைத் தரிசிக்க முடியுமளவிற்கு மிகச் சிறிய கோவில். இதை நாடியா எங்கெங்கிருந்தோ பக்தர்கள் வருகிறார்கள்!!!? என்ற வியப்பு தோன்றுவது இயல்பே. மூர்த்தி சிறிதெனினும் இவளது கீர்த்தி பெரிது.
வாசலைத்தாண்டினால் முன் மண்டப முகப்பிலும் பகவதியே சிறுவடிவில் அமர்ந்திருக்கக் காண்கிறோம். மூலவரைப்போலவே இவளுக்கும் வஸ்திரம் அணிவித்து அலங்காரங்கள் செய்யப்படுகிறது. அதைப்பார்த்துக்கொண்டிருந்தபோதே சங்கநாதத்துடன் கேரளத்துக்கேயுரிய செண்டை மேளம் முழங்கியது. என்னவொரு தாளநடை.!!! அதில் மயங்கி நின்றுவிட்டால் தீபாராதனையைக் காணாமல் தவறவிட நேரும்.. கவனம்.

மூலவரான பகவதி ரத்னாங்கி அணிந்து மலர்களினூடே மதிவதனம் காட்டி, "அஞ்சேல்" என அருள்பாலிக்கிறாள். அவளைத்தரிசித்துக்கொண்டு சற்றே முன்நகர்ந்து அர்ச்சனைச்சீட்டையும் வாங்கி வந்த தெச்சிமாலையையும் நீட்டினேன். மாலையை அருகிலிருந்த ஆணியில் ஏற்கனவே தொங்கிக்கொண்டிருந்த மாலைகளுடன் சேர்த்துப் போட்டு விட்டு "பிரசாதம் அந்தப்பக்கம்" என எதிர்ப்பக்கத்தைக் கை காண்பித்தார். அந்த ஆணி செய்த பாக்கியம்தான் என்னே!!.. எதிர்ப்பக்கத்தில், ஆஸ்பத்திரி மற்றும் வங்கிகளில் உரக்க டோக்கன் எண்ணைச் சொல்லி அழைப்பது போல் பெயர் மற்றும் நட்சத்திரத்தைச் சொல்லி உரக்க அழைத்துக்கொண்டிருந்தார் ஒருவர். உரியவர் போய், குங்குமம் களபம், பூக்கள் மற்றும் ஒரு வாழைப்பழம் வைக்கப்பட்டிருக்கும் இலைத்துண்டை வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். வெகுநேரமாக நாம் அழைக்கப்படவில்லையென்றாலும் பாதகமில்லை. விவரங்களைச் சொன்னால் போதும். பிரசாதம் வழங்கப்பட்டு விடும்.

பிரசாதம் வாங்கிக்கொண்டு திரும்பும்போது மறுபடி செண்டைமேளம் முழங்கியது. சன்னிதியின் முன் ஓடி வந்து நின்றால் அடடா!! உற்சவ மூர்த்தி சன்னிதிக்கு வெளியே கொண்டு வரப்பட்டு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. எல்லா அபிஷேகங்களும் முடியும் வரை செண்டை மேளம் தொடர்ந்தது ஓர் வித்தியாசமான அனுபவம். அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடத்தியதும் உற்சவ மூர்த்தி மறுபடியும் உள்ளே கொண்டு செல்லப்பட்டு விட்டது. ஒவ்வொரு வழிபாட்டின்போதும் செண்டையும் சங்கும் முழங்க தேவிக்கான பாடல்களும் பாடப்படுவதைக் கேட்பது நமக்கெல்லாம் ஒரு புது அனுபவம்தான்.

கோவிலினுள் சிற்பங்களுக்குக் கணக்கேயில்லை. விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், ரதி மன்மதன் சிலைகள், வினாயகர், ஆஞ்சநேயர் மற்றும் சிவன் என அனைவரும் ஆளுயரச் சிலைகளாக ஒவ்வொரு தூணிலும் வடிக்கப்பட்டிருக்கின்றனர். கண்ணகியின் வாழ்வு நிகழ்ச்சிகளும் சிற்பங்களாக இடம் பெற்றிருப்பதாக அறியப்படுகிறது. இரண்டாம் பிரகாரத்தில் வினாயகருக்கென தனிச்சன்னிதியும் அமைந்துள்ளது. அதன் அருகே கேரளக்கோவில்களுக்கேயுரிய சர்ப்பக்காவு அமைக்கப்பட்டு, பிரதி மாதமும் ஆயில்ய பூஜையும் நடந்து வருகிறது.

நாங்கள் பிள்ளையாரை வணங்கி நகரும்போது சர்ப்பக்காவினருகே சிறு கூட்டமாக ஆட்கள் நிற்பதும் நடுவில் நின்ற ஒருவர் ஏதோ பாடிக்கொண்டிருந்ததும் தெரிந்தது. என்னவென்று அங்கே போய்ப்பார்த்தால்,.. மக்கள் ஒவ்வொருவராக தங்கள் பெயரையும் நட்சத்திரத்தையும் சொன்னதும் அவர் தன் கையில் வைத்திருந்த, கொட்டாங்கச்சி வயலின் போன்ற சிறு கருவியை இசைத்தவாறே நாலைந்து வரிகள் பாடினார். இதுவும் அங்கே ஒரு விதமான வழிபாடாக நடத்தப்படுகிறது.

பிரகாரம் சுற்றி வரும்போது, பிரசாத ஸ்டால் தாண்டியதும் இருந்த சிறு முற்றத்தில், மணைப்பலகை முன் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்குகள், நெல் நிரப்பப்பட்ட பாத்திரம், அதில் செருகப்பட்டிருந்த தென்னம்பூக்குலை, நாணத்துடன் மணமக்கள் என திருமணச்சூழல் நிரம்பியிருந்தது. கேரள முறைப்படி நடக்கும் கல்யாணம்.. அதுவும் கோவிலில் நடக்கும் கல்யாணத்தைப் பார்த்தே ஆக வேண்டுமென ஆவல் முட்டினாலும், இன்னும் போக வேண்டிய இடங்கள் நினைவில் வந்து அழைக்க மனதில்லா மனதோடு அங்கிருந்து கிளம்பினோம்.

இக்கோவிலில் பொங்கல் வழிபாடு நடத்தப்படும் சமயம் "தாலப்பொலி" என்ற நேர்ச்சையும் பெண்குழந்தைகளால் நிறைவேற்றப்படும். இதனால் அக்குழந்தைகளுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிட்டுமென்பது நம்பிக்கை.

Monday, 21 November 2016

பாலும் பழமும் கடைகளில் தேடி..

"எல.. மணீண்டன் கல்யாணத்துக்கு ஸ்ருதிக்கி புளியங்கொட்ட பட்டுப்பாவாட எடுத்தாச்சி. இனும ஒனக்கு மட்டுந்தான் சேல எடுக்கணும். விடிஞ்சதும் ஆரெம்கேவி போலாம்" என்று அம்மா சொன்னதும் பட்டுப்பாவாடை துணியை கையில் வாங்கிப்பார்த்தேன். மெரூன், பச்சை, மஞ்சள் என்று கட்டம்போட்ட டிசைன் ஒரு மார்க்கமாகத்தான் இருந்தது. 

"ஒனக்கு வேற டிசைனே கெடைக்கலியா? இல்ல கலர்தாம் கிடைக்கலியா?" 

"தச்சுப்போட்டப்றம் பாரு, அதுவும் போட்டோல பாரு. இதாம் எடுப்பா இருக்கப்போவுது. ப்ளெயின் பாவாடதான் அவாட்ட நெறய இருக்கே" என்று எனது ஆட்சேபத்தை இடது கையால் ஒதுக்கிய அம்மாவின் கூற்று எத்தனை உண்மையானது என்பதை திருமண புகைப்படங்கள் வந்தபின் புரிந்து கொண்டேன். அப்பொழுதிலிருந்தே அந்த டிசைனில் புடவை வாங்கி மகளின் பட்டுப்பாவாடைக்கு மேட்சாகக் கட்டிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை வளர்ந்தது. எப்பொழுதாவது ஊருக்குப்போகும்போது புடவைக்கடைகளில் தேடுவேன். அது கிடைக்காது.. சொக்கா!!! எனக்கில்ல.. எனக்கில்ல. இல்லவேயில்ல. விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட என புடவை ஆசையை விட்டொழித்தேன்.

இப்படியாகத்தானே சில வருடங்கள் போனபின், சமீபத்தில் ஃபேஸ்புக்கில் என் நண்பிகளான முப்பெருந்தேவியர் ஒரே மாதிரியான புடவை கட்டி போட்டோ போட்டு வெறுப்பேத்தினார்கள். அது வேறேதுமில்லை. புளியங்கொட்டை டிசைன் என என் அம்மா நாட்டு வழக்கில் சொன்ன பாலும் பழமும் டிசைனேதான். கி கி கி. மறுபடி புத்தியில் தீ பற்றிக்கொண்டது. சில மாதங்களுக்கு முன் ஊருக்குப் போயிருந்தபோது நெல்லையி்லிருக்கும் சென்னை சில்க்ஸிற்குப் போனேன்.

"பாலும் பழமும் டிசைன்ல புடவை இருக்கா?"

உடனே பட்டுப்புடவை செக்ஷன் முழுக்க "ஏ.. பாலும் பழமும் எடுத்துப்போடு" என குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. கடைசியில் முஹூர்த்தப்புடவைகள் இருக்கும் செக்ஷனில் இருந்தவர் என் செவியில் பால் வார்த்தார்.

"இருக்குங்க. பாதிப்பாதி இருக்கு." அவர்சொன்னது half and half. அதாவது புடவையானது முட்டி வரைக்கும் ஒரு டிசைனும் கணுக்கால் வரைக்கும் பாலும் பழமும் கட்டம் போட்டதுமாக இருந்தது. அதுவும் நான் கேட்ட மல்ட்டி கலரில் இல்லாமல் மஞ்சளும் பச்சையும், காவியும் மெரூனும் என காவியக்கலர்களில் இருந்து கண்ணைப்பறித்தது. கடையைத் தலைகீழாகப் புரட்டி தேடியவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு வெறும்கையோடு நடையைக் கட்டினேன். இங்கில்லாவிட்டாலென்ன? ஆரெம்கேவியில் இருக்கும் என அங்கும் சென்றேன்.

"பாலும் பழமுமா? இன்னேரத்துக்கு பாலுக்கும் பழத்துக்கும் நா எங்க போக?". புடவை இருக்கிறதா எனக்கேட்ட சக பணியாளருக்கு இன்னொரு பணியாளர் அளித்த பதிலில் நெல்லைக்கே உரிய குசும்பு இருந்தது :-). என்றாலும், கடையை மூடிக்கொண்டிருந்த அந்த நேரத்திலும் வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்ய ஒவ்வொருவரும் தேடத்தொடங்கினர். கடைசியில் ஒருவர், "கெட்டு நாளைக்குத்தான் பிரிப்போம். ஆனா நீங்க ஆசையா கேக்கேளேன்னு இப்பமே பிரிச்சுட்டேன். பிடிச்சதைப் பாருங்க" என நாலைந்தை எடுத்துப்போட்டார். நல்லாத்தான் இருந்தது என்றாலும் நான் கேட்ட மல்ட்டி கலரிலோ பார்டரிலோ இல்லாததால் "போனால் போகட்டும் இந்தத் தடவையும்" என்ற மன நிலையை அடைந்திருந்தேன்.. எனினும் மகளுக்குப் பிடித்துப்போனதால் ஒன்றை எடுத்துக்கொண்டேன். ஆனாலும் "பாலும் பழமும் போச்சே" என வெம்பிய மனதை, "ஹெ.. யாருக்கு வேணும் பாலும் பழமும்? இந்தா இருக்கே பொடி தோசை.. சாப்டு" என சமாதானப்படுத்தியாயிற்று.

மறுநாள் நாகர்கோவிலில் சுற்றிக்கொண்டிருந்தபோதுதான் கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறோமோ எனத்தோன்றியது. வேப்பமூடு ஜங்க்ஷனில் இருக்கும் "நல்லபெருமாள் சில்க்ஸ்" நல்ல டிசைன் துணிகளுக்குப் பெயர் போனது. ஒரு காலத்தில் நெல்லை வட்டாரத்திலிருந்து கூட ஜவுளி எடுக்க இங்கேதான் வருவார்கள். இதை மறந்து விட்டோமே என என்னை நானே கடிந்து கொண்டு, கடைக்குள் நுழைந்து, நேராக பட்டுப்புடவை செக்ஷனுக்குச் சென்றேன். "பாலும் பழமும் டிசைன் இருக்கா?" எனக்கேட்டதுதான் தாமதம். நாலைந்தை எடுத்துப்போட்டார். அத்தனையும் நான் எதிர்பார்த்த மல்ட்டிகலர் கட்டங்கள் போட்ட புடவைகள். அளவான அழகான கட்டங்களும் அசத்தலான பார்டர்களுமாக ஜிலுஜிலுத்தன. "அள்ளிக்கோ" என பரபரத்த மனதை அடக்கிக்கொண்டு ரொம்பவும் பிடித்த புடவையை பத்தே நிமிடத்தில் செலக்ட் செய்து கையில் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். "ஆயிரம் சொல்லு.. இல்லே, ஐநூறு சொல்லு. கடைசில எங்கூர்தான் எனக்கு வேணுங்கறதைக் கொடுத்துச்சு" என மகளிடமும் பெருமையடித்துக்கொண்டேன். 

என்ன ஒன்று, இந்தப்புடவையைப் பார்க்கும்போது, "லேய்.. அன்னிக்கி என்னமோ, புளியங்கொட்டைலாம் பழைய டிசைன்.. இதப்போயி எடுத்தியேன்னு கேட்டியே" எனக் கிண்டலடிக்கலாம் அம்மா. அடுப்பில் காய் கருகுவதைக்கவனிக்கச் செல்வதைப்போல் நழுவி விட வேண்டும். அடுப்பே எரியாவிட்டாலும் கூட.

Monday, 11 January 2016

நல்ல மனம் வாழ்க..

பாஸ்போர்ட் மற்றும் இன்ன பிற விஷயங்களுக்குத் தேவைப்படும் என்பதால் என் பிள்ளைகளின் பிறப்பு சான்றிதழ்களின் இன்னொரு பிரதியை வாங்குவதற்காக சமீபத்தில் நாகர்கோவில் செல்ல நேரிட்டது. இப்பொழுதெல்லாம் ஆன்லைனில் தரவிறக்கிக்கொள்ளும் வசதி வந்து விட்டது என்றாலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அந்த வசதி இன்னும் வரவில்லை எனத்தெரிந்தது. ஆகவே நேரில் போய்த்தான் வாங்க வேண்டியிருக்கும் என்பதால் ஊருக்குப்போக தத்காலில் டிக்கெட் ரிசர்வ் செய்தோம். சான்றிதழ்கள் கிடைக்க எத்தனை நாட்களாகும் என்று தெரியவில்லை. போதாக்குறைக்கு அந்த வாரத்திலேயே கிறிஸ்துமஸ், சனி ஞாயிறு விடுமுறைகள் என வரிசை கட்டி நின்றதால் வந்த வேலை முடிய எவ்வளவு நாட்கள் ஆகும் என்றும் தெரியாததால் முனிசிபல் ஆப்பீசில் போய் நிலைமையைச்சொல்லி, குத்துமதிப்பாக எத்தனை நாட்கள் ஆகுமென்று தெரிந்து கொண்டு அதன் பின் மும்பை திரும்ப டிக்கெட் ரிசர்வ் செய்யலாம் என்று முடிவு செய்தோம். 

விண்ணப்பிக்கும்போது என்னென்ன டாகுமெண்ட்டுகள் தேவைப்படும் எனத்தெரியாததால் பிள்ளைகளின் போட்டோக்கள், வாக்காளர் அட்டை, பள்ளி இறுதிச்சான்றிதழ் முதற்கொண்டு அத்தனை டாக்குமெண்டுகளும் அடங்கிய ஃபைல், மகளின் பிறப்புச்சான்றிதழின் எஞ்சியிருந்த ஜெராக்ஸ் காப்பி, பஞ்சிங் மெஷின், ஸ்டாப்ளர், பேனாக்கள், ஃபெவிகால் மற்றும் ஒரு சில வெள்ளைத்தாள்கள் அடங்கிய பையோடு நாகர்கோவில் முனிசிபல் ஆப்பீசில் போய் இறங்கினேன். வளாகத்தில் மரங்களினூடே ஒளிந்திருந்த, திருப்பிப்போட்ட ‘ப்’ வடிவிலான கட்டிடத்தின் எந்தப்பகுதியில் சான்றிதழ்களுக்காக அணுக வேண்டும் எனத்தெரியாமல் காவலாளியை அணுகிக்கேட்டதும் அவர் ‘ப’வின் நடுவில் புள்ளியாய் அமைந்திருந்த சிறிய கட்டிடத்தைக் கை காண்பித்தார். நாலைந்து படிகள் ஏறிச்சென்று கவுண்டரில் கண்ணாடிக்கு அந்தப்பக்கம் இருந்தவரிடம் விசாரித்தேன். “இந்த அப்ளிகேஷனை மட்டும் நிரப்பிக்கொடுங்க. வேற டாக்குமெண்ட்ஸ் எதுவும் தேவையில்லை” என்றார். 

அவரிடம் சான்றிதழ்களுக்காகவே மெனக்கெட்டு மும்பையிலிருந்து வந்திருப்பதைச்சொல்லி கொஞ்சம் சீக்கிரம் கிடைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டேன். நிச்சயம் உதவுவதாகச்சொன்னவர் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து பக்கத்துக் கவுண்டரிலிருந்த பெரிய ஆப்பீசரிடம் கொடுக்கச்சொன்னார். விண்ணப்பங்களை நிரப்பியபின் வரிசையில் காத்து நின்று கொண்டிருந்தபோது இனம் புரியாத பதற்றத்தாலும் முதல் நாள் மாத்திரை எடுத்துக்கொள்ளாததாலும் இருதயத்துடிப்பு சற்று அதிகரித்திருந்தது. போதாக்குறைக்கு மும்பையிலிருந்து கடுமையான ஜலதோஷம் மற்றும் இருமலோடு கிளம்பியிருந்தேன். மூக்கோடு சேர்ந்து காதும் அவ்வப்போது அடைத்துக்கொண்டு படுத்திக்கொண்டிருந்ததால் எதிரில் யாராவது பேசும்போது சற்றுக்கூர்மையாக அவதானித்துக்கேட்க வேண்டியிருந்தது வேறு கடுப்பைக்கிளப்பியது. 

ஒரு வழியாக பெரிய ஆபீசரின் முன் சென்று விண்ணப்பங்களைக்கொடுத்ததும் விஷயத்தைச்சொல்லி “இதுக்குன்னே மும்பைலேர்ந்து வந்திருக்கேன். கொஞ்சம் சீக்கிரம் கிடைச்சா கொள்ளாம்” என்று அவரிடமும் எனது வேண்டுகோளைச்சொன்னேன். அவரது பதிலைப்பொறுத்துதான் மும்பைக்கு ரிடர்ன் டிக்கெட் எடுக்க வேண்டுமென்றும் சொன்னேன். “எம்மா ரெண்டு நாள்ல கிடைக்காதே. கிறிஸ்மஸ், சனி, ஞாயிறுண்ணு எல்லாம் வருது. அடுத்த வாரம் ஆயிருமே. வந்தது வந்தீங்க.. கூடுதலா ரெண்டு நாள் நாரோயில்ல தங்கி வாங்கிட்டுப்போங்க” என்றவர் கொஞ்சம் யோசித்தார். பின், “சரி.. ஒண்ணும் பிரச்சினையில்ல.. ரெண்டு ஃபார்முக்கும் அறுவது ரூவா கொடுங்க. சாயந்திரம் ஒரு மூணு மணி வாக்குல வாங்க. இங்க மேடத்துக்கிட்ட சொல்லி ஏற்பாடு செய்யறேன்” என்றார். அவர் அறுபது என்று சொன்னது கண்ணாடி ஜன்னலைத்தாண்டி வரும்போது தேய்ந்து, ஜலதோஷத்தால் அடைத்திருந்த என் காதில் அறுநூறு என்று விழவே ரூபாயை எடுத்து நீட்டினேன். 

அதிர்ச்சியான அவர், “ எம்மா.. எதுக்கு இவ்ளோ? அறுவதுதான்” என்று கூறியபடியே அதிகப்படியான பணத்தைத்திருப்பித்தந்தார். “அவ்ளோதானே சொன்னீங்க?” என்று குழம்பிய என்னிடம் “இல்லம்மா.. அறுவதுதான்” என்றவர் ‘இங்கே யாருக்கும் அதிகப்படி காசு எதுவும் கொடுத்துராதீங்க’ என்று ஜாடை செய்தபோதுதான் ஒருவேளை நான் அதை லஞ்சமாகக் கொடுத்ததாக நினைத்துக்கொண்டு விட்டாரோ என்று சந்தேகம் வந்தது. அடடா!!.. எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்று வழி தேடும் இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு நேர்மையான அரசாங்க அதிகாரியா?. நான் தவறுதலாகக் கொடுத்திருந்தாலும் அதை சாக்குப்போக்குச் சொல்லி தக்க வைத்துக்கொள்ளாமல் திருப்பிக்கொடுத்தது அந்த நல்ல மனம். 

பகலுணவை முடித்துக்கொண்டு நாகர்கோவில் மணிமேடைப் பகுதியிலிருக்கும் சுதர்சன் புக்ஸில் சென்று சற்று நேரம் அலசி ஆராய்ந்து ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கிக்கொண்டபின் சொன்னது போல் சாயந்திரம் மூன்று மணிக்கு மேல் முனிசிபல் ஆபீசிற்குப்போனேன். அங்கே ஒரு மேடத்திடம் அறிமுகப்படுத்தி வைத்து விட்டு, “சர்ட்டிபிகேட்டுக்குன்னே மெனக்கெட்டு வந்திருக்காங்க. கொஞ்சம் சட்ன்னு முடிச்சுக்கொடுங்க” என்று நிலைமையையும் எடுத்துச்சொன்னார். பக்கத்துக் கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்கு அழைத்துச்சென்ற மேடம், “மகனுக்கு கொஞ்சம் டைம் ஆகும். நாளைக்குத்தான் ரெடியாகும். மகளோட சர்ட்டிஃபிகேட் காப்பி இருக்கதால இப்பம் சாயந்திரம் அஞ்சு மணிக்கு கிடைச்சுரும். இப்பம் மூணரை மணி ஆவுது. இருந்து வாங்கிட்டுப்போங்க..  இல்லண்ணா சாயந்திரம் அஞ்சு மணிக்கி வாங்க" என்றவர் சற்று யோசித்து விட்டு, "ஒண்ணு செய்யலாம், ரெண்டையும் சேத்து நாளைக்கே வாங்கிக்கிறீங்களா?" என்று கேட்டார். இரண்டு மணி நேரத்துக்குள்ளாக இன்னொரு முறை தங்குமிடத்துக்கும் முனிசிபல் ஆபீசுக்கும் அலைய தெம்பில்லை. மறு நாள் வந்து வாங்கிக்கொண்டால் இன்றைய அதிகப்படி அலைச்சல் மிச்சமாகும் என்பதால் இரண்டையும் மறுநாள் ஐந்து மணி வாக்கில் வந்து வாங்கிக்கொள்வதாகச்சொல்லி விட்டு தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.

மறுநாள் சென்றபோது பையனின் சான்றிதழ் தயாராகி ஆபீசரின் கையெழுத்துக்காகக் காத்திருந்தது. பெண்ணின் சான்றிதழை கீழே ஆபீசில் சென்று கையெழுத்திட்டு வாங்கியபின், ஓட்டமும் நடையுமாக பக்கத்துக் கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்கு ஓடிச்சென்று சற்றுக்காத்திருந்து பையனின் சான்றிதழையும் கையெழுத்திட்டு வாங்கியபின்தான் ‘அப்பாடா’ என்று நிம்மதிப்பெருமூச்சு வந்தது. முனிசிபல் ஆபீசுக்குள் அங்கே இங்கே என்று ஊழியர்களிடம் சொல்லி வைத்து, அனைவரும் விடுமுறைக்குத் தயாராகிக்கொண்டிருந்த அந்த அவசரத்திலும், சான்றிதழ்களைத்தயார் செய்ய வைத்து, விரைவில் கிடைக்க உதவிய பெரிய ஆபீசருக்கு நேரில் சென்று நன்றி சொல்லி விட்டு, லேசான மனதுடன் நாகராஜா கோவிலுக்குச்சென்று மனங்குளிர தரிசித்து வந்தோம். 

பொதுவாகவே அரசாங்க அலுவலகம் என்றால், வேலை சட்டென்று முடியாது, இழுத்தடிப்பார்கள், சுலபமாக முடித்துக்கொடுக்க மேற்படி எதிர்பார்ப்பார்கள் என்றெல்லாம் சில அபிப்ராயங்கள் மக்களிடையே உண்டு. அதிலும் சான்றிதழ்கள் ஏதாவது வழங்க வேண்டுமென்றால் ஆதாயம் ஏதுமில்லாமல் நிச்சயமாகச்செய்து கொடுக்க மாட்டார்கள் என்று பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்பேர்ப்பட்ட இடத்திலும், இக்கட்டான நிலையிலிருக்கும் மக்களுக்கு எவ்வித பலனையும் எதிர்பாராமல் வேண்டிய சேவையைச் செய்து கொடுக்கும் அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர் நினைத்திருந்தால், விடுமுறையைக் காரணம் காட்டி வேலையை இழுத்தடித்திருக்கலாம். அல்லது சீக்கிரம் முடித்துக்கொடுக்க ஆதாயம் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் மெனக்கெட்டு சான்றிதழ்களுக்காகவே ஊருக்குச்சென்றிருந்த எங்களிடம், எதையும் எதிர்பாராமல் எங்கள் நிலையைப் புரிந்து கொண்டு உதவி செய்த அந்த நல்ல மனம் நீடூழி வாழ்க.

Friday, 3 January 2014

சிறகு விரிந்தது- என் முதல் புத்தக வெளியீடு..

"சிறகு விரிந்தது" 

என் முதல் புத்தகத்தின் தலைப்பு மட்டுமல்ல, தொடரும் பயணத்திற்கான ஆயத்தமும்தான். 
வாசித்தலென்பது ஒரு சுகானுபவம்.. மழையில் நனைவதைப்போல. அது எழுத்துகளாகவும் இருக்கலாம், வாழ்வியலாகவும் இருக்கலாம், சக மனிதர்களாகவும் இருக்கலாம். அவ்வாறு வாசிக்கப்பட்டவற்றில் சில கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டாலும் சில துளிகள் மட்டும் எப்படியோ விதையாய் விழுந்து முளைத்து வேரோடி கவிதையாய் முளைத்து விடுகின்றன. 

கவர்ந்த காட்சிகளையும் எண்ணங்களையும் அடைந்த அனுபவங்களையும் கதை, கவிதை, கட்டுரைகளாகவும் ஒளிப்படங்களாகவும் என்னுடைய வலைப்பூவான “அமைதிச்சாரல்” தளத்திலும், கவிதைகளுக்கெனத் தனியாக “கவிதை நேரம்” என்றொரு வலைப்பூவும் நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே..

ஏன் கவிதைகள்?.. சமூகம் மற்றும் சம மனிதர்கள் மீதான பார்வைகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், எண்ணங்கள் என்று எல்லாவற்றையும் பற்றிப் பகிர்ந்து கொள்ளவும் பேசவும் கவிதை ஒரு வசதியான வடிகால். பக்கம் பக்கமாகப் பன்னிப்பன்னிச் சொல்வதை விட சில வரிகளிலேயே சுருங்கச்சொல்லி விளங்க வைத்து விடவும் முடிகிறதே.

ஒவ்வொரு கவிதையையும் வெளியிடும்போதெல்லாம் வாசித்துப் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய உங்கள் அனைவரின் ஆதரவே இந்நூல் வெளியாவதற்கு முழு முதற்காரணம். உங்கள் அனைவருக்கும் மற்றும் கவிதைகளை வெளியிட்ட மின்னிதழ்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.

இது என்னுடைய கவிதைகளின் முதல் தொகுப்பு. அகநாழிகை பதிப்பகம் மூலமாக வெளியாகிறது. சென்னையில் எதிர்வரும் 10.01.2014 முதல் 22.01.2014 வரை நடைபெற உள்ள 37வது சென்னைப் புத்தகத் திருவிழாவில் அகநாழிகைப் பதிப்பகத்தாரின் ஸ்டாலிலும் அகநாழிகை புத்தக உலகத்திலும் கிடைக்கும். அவர்களிடம் போன் மூலமாகவும் ஆர்டர் செய்து வரவழைத்துக்கொள்ளலாம். ஆன்லைன் விவரங்கள் பிறகு பகிர்கிறேன். 
ஸ்டாலுக்குப் போகும் வழி:"இரண்டாவது நுழைவு பாதையான மா.இராசமாணிக்கனார் பாதையின் ஆரம்பத்திலேயே இடது புறம் இரண்டாவது கடையாக இருக்கிறது." என்று வாசுதேவன் குறிப்பிட்டிருக்கிறார்.

அகநாழிகை புத்தக நிலையத்தின் முகவரி:
புத்தகம் எப்படி வெளியாகப்போகிறதோ என்ற கலவையான உணர்வுகள் என்னை ஆக்கிரமித்திருந்தன. ஆனால், மிகக் குறுகிய கால அளவே இருந்தபோதிலும் சிறந்த முறையில் இக்கவிதைத்தொகுப்பை வெளிக்கொணர்ந்து கைகளில் தவழ விட்டிருக்கும் அகநாழிகை பதிப்பகத்தாரையும் திரு. பொன். வாசுதேவன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்களுக்கும் அழகாக அச்சிட்ட அச்சகத்தாருக்கும் எனது நன்றிகள். அட்டைப்படத்திலிருப்பது என் காமிராவில் பிடிபட்ட குருவிதான் :-)

தனது பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையில் அணிந்துரை அளித்து உற்சாகப்படுத்திய "வல்லமை" மின்னிதழின் நிறுவனர்  திரு. அண்ணா கண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கல்லூரிக்காலத்தில் கவிதைப்போட்டியொன்றில் பரிசு பெற்ற “விடிய மறுக்கும் இரவுகள்” என்ற எனது கவிதைதான் முதல் விதையாய் விழுந்து எங்கள் தமிழ்ப்பேராசிரியர் திரு. நடராஜன் அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் வளர ஆரம்பித்து, வலைப்பூவாய்க் கிளை பரப்பினாலும் கணவரும் குழந்தைகளும் கொடுத்த உற்சாகத்தால்தான் இன்று கவிதைத்தொகுப்பாய் மலர்ந்து நிற்கிறது. கணவரை எப்போதோ பெயரில் கூட்டுச் சேர்த்துக்கொண்டாயிற்று, ஆகவே தூண்டுகோலாய் இருக்கும் எனது குழந்தைகள் பாஸ்கர், சுருதி இருவருக்கும் இத்தொகுப்பை சமர்ப்பணம் செய்கிறேன்.

இதற்கு மேல் நான் என்ன சொல்ல?.. என் எழுத்துகள் பேசட்டும்.

சிறகு விரித்த என் பயணத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்.

Monday, 4 November 2013

பாதுகாப்பே மகிழ்ச்சியானது..

தீபாவளிக்கொண்டாட்டமெல்லாம் நல்லபடியாக முடிந்ததா?.. பெண்களெல்லாம் பலகாரங்கள் சுட்டு முடித்த களைப்பில் இருப்பார்கள். மற்றவர்கள் அவற்றை ஒரு கை பார்த்த களைப்பிலும் புதுப்படங்களைக் கண்டு களித்த மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். ஆனால், இந்தப் பொட்டுப்பொடிசுகளுக்கு மட்டுந்தான் இன்னும் தீபாவளி முடியவில்லை. பின்னே.. வாங்கி வைத்திருக்கும் பட்டாசுகள் இன்னும் மீதம் இருக்கிறதே :-) நடுராத்திரி என்றும் பாராமல் வெடித்துத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். சிறிசுகள் பட்டாசு கொளுத்தும் ஸ்டைலைப் பார்த்தால் பழமொழியில் பொய்யில்லை என்றுதான் தோன்றும் :-). புதுத்துணிகள் பலகாரங்கள் கொடுப்பதை விட பட்டாசுகள்தானே அவர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சி.

"எக்கா.. லெச்சுமி வெடி, குருவி வெடியெல்லாம் வெடிக்கறது இருக்கட்டும். அணுகுண்டை வெச்சு வெடிக்க வைப்பியா?" என்று நக்கலுடன் கேட்டான் வயதில் இளையவனானாலும் விளையாட்டுத்தோழனான வெங்கிட்டு. எல்லாம் ஒரு காலத்தில் நான் பட்டாசு வெடித்த லட்சணத்தைப் பார்த்துத்தான். ஒரு தாளைக் கிழித்து அதில் பட்டாசுத்திரி படும்படி வைத்துவிட்டு தாளின் ஒரு முனையைக் கொளுத்தி விட்டு ஓடி வந்து விடுவேன். தீ பரவி பட்டாசுத்திரியைத் தொட்டதும் படாரென்று வெடிக்கும். அவ்வளவு வீர தீர தைரியசாலியான என்னை.. என்னைப் பார்த்து ஒரு சிறுவன் இப்படிக் கேட்கலாமோ!! :-))). நக்கலடித்ததுமில்லாமல் "நானெல்லாம் அணுகுண்டு வெடிக்க பயப்படவே மாட்டேன். ஒண்ணு வெடிச்சுக் காட்டட்டுமா" என்று உதார் வேறு விட்டுக்கொண்டே ஒரு அணுகுண்டைக் கையில் எடுத்தான். சரி,.. ஊதுவத்தியைக் கொடுத்து விட்டு நாம் ஓட்டம் பிடித்து விடலாம் என்று நம்ம்ம்ம்பி கொஞ்சம் இந்தப்பக்கம் திரும்பினேன். 'பட்ட்டார்' என்றொரு சத்தம் காதைப்பிளந்தது. திடுக்கிட்டுத்திரும்பினால் கொதகொதவென்று வெந்த கையுடன் நிற்கிறார் அண்ணாத்தை. என்னடாவென்றால் அணுகுண்டை கையிலிருக்கும்போதே பற்ற வைத்து தூக்கி எறிந்து ஆகாயத்தில் வெடிக்க வைக்கலாம் என்று நினைத்தாராம். ஃப்ளாப் ஆகிவிட்டதாம். கூலாகச் சொல்கிறார். 

 நன்றாக நாலு திட்டு திட்டிவிட்டு, தரதரவென்று வீட்டுக்குள் இழுத்து வந்து குளிர்ந்த தண்ணீரில் கையை விடச்சொல்லி, பின் இங்க்கையும் நிறைய ஊற்றி, "வீட்டுக்குப் போய் அம்மா கிட்ட காமி. மருந்து இருந்தா போட்டு விடுவாங்க. இல்லைனா ஆசுத்திரிக்குப் போ" என்று சொல்லி அனுப்பினேன். இத்தனை களேபரத்திற்கும் பிள்ளையாண்டன் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வர வேண்டுமே!! மூச்.. அத்தனை வேதனையையும் எப்படித்தான் அடக்கிக் கொண்டிருந்தானோ. இப்பொழுது நினைத்தாலும் பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

இங்கேயும் சில பிரகஸ்பதிகள் அப்படித்தான் இருக்கிறார்கள். வெடிகளை மட்டுமென்ன, ராக்கெட்டுகள், பூச்சட்டி என்று சொல்லப்படும் பொறிவாணங்களையும் கூட அனாயாசமாகக் கையில் பிடித்துக்கொண்டுதான் பற்ற வைக்கிறார்கள்.அது பொங்கி மங்களம் பாடும்போது இவர்களும் சேர்ந்து கொண்டு "ஐயோ.. அம்மா, வலிக்குதே" என்று கோரஸ் பாடுவதுண்டு.

மும்பையில் தீபாவளி தேய்பிறை ஏகாதசியன்று ஆரம்பித்து, வளர்பிறை துவிதியை வரைக்கும் ஏழு நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதில் லக்ஷ்மி பூஜை மிகவும் முக்கியமான பண்டிகை. இதைப்பற்றி விவரமாக ஏற்கனவே எழுதியிருக்கிறேன். சாயந்திரம் வீட்டில் லக்ஷ்மி பூஜையை முடித்து விட்டு, புதுசை உடுத்திக்கொண்டு பார்க்கிங்கிற்குப் போய் வாகனங்களுக்குப் பொட்டிட்டு, மாலை சாற்றி, ஊதுவத்தி காண்பித்து பூஜை செய்தபின் பட்டாசுகளைக் கொளுத்துவது இங்கே வழக்கம். நாங்களும் வழக்கம்போல் வீட்டில் பூஜை முடித்து, வாகனங்களுக்கும் பூஜை செய்து விட்டு பட்டாசு கொளுத்த ஆரம்பித்தோம். பையருக்கு நட்சத்திரப்படி நேற்று பிறந்தநாளும் கூட :-))

எங்கள் வீட்டில் கடந்த சில வருடங்களாக ஒலியை ஏற்படுத்தும் பட்டாசுகளைக் குறைத்துக்கொண்டு ஒளிவெள்ளத்தில் மூழ்கடிக்கும் பட்டாசுகளை வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். "Go green" என்று சிந்திக்க ஆரம்பித்திருக்கும் பிள்ளைகளின் ஆர்டர். அவ்வப்போது குழந்தைகள் சொல்வதையும் பெரியவர்கள் கேட்க வேண்டும்தானே :-). இந்த வருடம் மும்பை முழுக்கவே ஒலிப்பட்டாசுகள் குறைவாகவும் ஒளிப்பட்டாசுகள்தான் அதிகமாகவும் வெடிக்கப்பட்டதாக நாளிதழ் தகவல் கொடுத்தது. இதைக் கண்கூடாகவும் கண்டோம். 

பட்டாசு கொளுத்தி முடித்தபின் வீட்டுக்கு வந்து, தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். எங்கள் பில்டிங்கின் எதிர் வரிசையிலிருக்கும் குடியிருப்பில் கீழ்த்தளத்தில் கடைகளும் உண்டு. கடைக்காரர்கள் பை நிறைய விதவிதமான பட்டாசுகளை வைத்துக்கொண்டு ஜமாய்த்துக்கொண்டிருந்தார்கள். கேலியும் கூத்துமாகப் பொழுது போய்க்கொண்டிருந்தது. வெடிகளில் 25 shots என்றொரு வெடிவகை உண்டு. இரண்டு செங்கல்களை ஒட்டி பாக்கெட் போட்டுக்கொடுத்தாற்போன்ற அமைப்பிலிருக்கும் அதை திரியைக் கொளுத்தி வைத்து விட்டால் போதும். 25 வெடிகளும் பெட்டியிலிருந்து ஒவ்வொன்றாகக் கிளம்பி வானத்தில் போய் வெடித்துப் பூப்பூவாய்ச் சிதறும். இதை அந்த இளைஞர் கூட்டத்தில் ஒருத்தர் பற்ற வைத்து விட்டு யதாஸ்தானம் திரும்பினார். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது.

சர்ர்ர்ரென்று வேகமாக வந்த ஹோண்டா சிட்டி வாகனமொன்று புகைந்து கொண்டிருந்த வெடியின் மேலாகக் கடந்து அதை இழுத்துக்கொண்டு சென்றது. "அரே.. பாப்ரே.." என்று அலறினார்கள் அக்கம்பக்கம் நின்றவர்கள் அனைவரும். நடந்த விபரீதத்தை வண்டியின் டிரைவர் உணருமுன்னே வண்டிக்கடியில் மாட்டியிருந்த பெட்டியிலிருந்து ஒவ்வொரு வெடியாகக் கிளம்பி டாம்.. டாமென்று வெடிக்க ஆரம்பித்தது. அவ்வளவுதான் தடதடவென்று வண்டியிலிருந்தவர்கள் இறங்கி ஓடி  பாதுகாப்பாக நின்று கொண்டார்கள். உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஓடுவது என்று சொல்வார்களே!! அதை அன்று கண் முன் கண்டேன். கெட்டதிலும் நல்லதாக ஒரு விஷயம் நடந்திருந்தது. அதாவது வண்டியில் மாட்டி இழுத்த வேகத்தில் பெட்டி கிடைமட்டமாகச் சரிந்திருந்ததால் வெடிகளும் மேற்புறமாகக் கிளம்பாமல் கிடைமட்டமாகச் சாலையில் சென்று வெடித்துக்கொண்டிருந்தன. மேற்புறமாகக் கிளம்பியிருந்தால் வண்டி என்னவாகியிருக்குமென்று நினைத்துப்பார்க்கவே குலை நடுங்குகிறது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறதே. அதுவும் குஞ்சும் குளுவானுமாகக் குழந்தை குட்டிகளுடன் சென்று கொண்டிருந்த குடும்பம் அது.

சாலைகளில் வெடிகளை வைப்பவர்கள் கடந்து செல்பவர்களை எச்சரிக்க வேண்டாமோ!! வழக்கமாக "பட்டாசு வெச்சிருக்கோம். கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க" என்று அனைவரும் எச்சரிக்கை செய்வது வழக்கம்தான். என்னவோ போங்க.. அன்றைக்கு அந்தக் குடும்பத்தினரின் தலை தப்பித்தது தம்பிரான் புண்ணியந்தான். காரின் கீழிருந்து புறப்பட்டு வந்த ஒவ்வொரு வெடிகளையும் பதைபதைக்கும் மனங்களோடு நாங்களும் பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஒரு சின்னப்பொறி எத்தனையோ குடும்பங்களின் வீடுகளை ஒளிவெள்ளத்தில் ஆழ்த்துகிறது. அதேபோல் கண்ணீர்க்கடலிலும் மூழ்கடித்து விடவும் வல்லது. நாம் மட்டுமல்ல நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கத்தான் பண்டிகைகளும் கொண்டாட்டங்களும். காலத்துக்கும் நினைத்துப் பார்த்து வெம்பி வேதனைப்பட அல்ல.
நேற்று இரவில் சுமார் பதினொரு மணியளவில் பக்கத்துப் பில்டிங்கில் எல்லோருடைய தூக்கத்தையும் கலைக்கும் வண்ணம் அதிரும் வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்தது. தவுசண்ட் வாலாவோ என்னவோ!!. "திவாலி முடிஞ்சாச்சு.. போய்த்தூங்குங்க" என்று கத்த வேண்டும் போலிருந்தது. அதன் பின் ஒன்றரை மணியளவில் ஆரம்பித்து விடியற்காலை சுமார் நான்கு மணி வரைக்கும் கூட பட்டாசுச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததாம். ear muffler மற்றும் ear plugs துணையிருந்தும் சத்தம் காரணமாகத் தூங்க முடியாமல் தவித்த பையர் விடியலில்தான் தூங்கியிருக்கிறார். நமக்கே இப்படியென்றால் கைக்குழந்தைகள் முதியவர்கள் இருக்கும் வீடுகளில் என்ன கதியோ!!. பண்டிகையின் மகிழ்ச்சியையே கெடுத்து விடுகிறது இப்படிப்பட்ட சிலரின் செயல்கள். அததற்கென்று நேரம் காலம் இருக்கத்தானே செய்கிறது.

எல்லோரும் சந்தோஷப்படத்தான் பண்டிகைகள். அத்தனை பேரையும் வேதனைக்குள்ளாக்கி ஒரு சிலர் சந்தோஷப்பட அல்ல. நாமும் மகிழ்ச்சியாக இருப்போம்.. நம்மைச்சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயல்வோம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.. (எங்கூர்ல இன்னும் திவாலி முடியலை :-))

Thursday, 25 July 2013

குங்குமம் இதழின் வலைப்பேச்சில் சாரல் துளி.

பார்த்த, கேட்ட, படித்த மற்றும் ஏற்படும் அனுபவங்களையொட்டி நம் மனதிலும் ஏதாவது கருத்துகள் தோன்றுவது இயல்பே. அப்படித் தோன்றும் எண்ணங்களை எழுதி வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துத்தான் எழுத ஆரம்பித்தேன். அப்படி எழுதுவதற்காக ரூம் போட்டு உட்கார்ந்து சிந்திக்கும்போது வந்து விழுவது போதாதென்று அவ்வப்போது சில சிந்தனைகள் சுயம்பாகவும் உதிப்பதுண்டு. இப்படி ஒவ்வொரு துளிகளாகச் சேர்பவற்றை அவ்வப்போது எண்களிட்டு முகநூலிலும், குழுமங்களிலும் பகிர்வது மட்டுமன்றி "சாரல் துளிகள்" என்று என் வலைப்பூவிலும் தொகுத்துப் போடுவது வழக்கம்.

சாரல் துளிகளை ஆரம்பத்தில் சும்மா விளையாட்டாகத்தான் எழுத ஆரம்பித்தேன். அதன்பின் நாளாக நாளாக கண்ட, கேட்ட, உணர்ந்த விஷயங்களைப் பகிர்வதற்கான ஊடகமாகவும் இது ஆகிவிட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல வரவேற்பும் கிடைக்க ஆரம்பித்ததும் உற்சாகமாக எழுத ஆரம்பித்தேன். ஃபேஸ்புக்கில் எழுதும் துளிகளில் சிலவற்றைக் 'குங்குமம் தோழியின் தினமொழிகள்' வெளியீட்டிலும் காணும் பேறு கிடைத்தது. நமக்கான அங்கீகாரத்தை விடவும் மகிழ்ச்சியான விஷயம் இருக்கிறதா என்ன :-)

கொஞ்சம் கொஞ்சமாக ஃபேஸ்புக்கில் பகிர்பவற்றை குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில்(சுமார் 10 துளிகள்) சேர்ந்ததும் இங்கே ப்ளாகிலும் பகிர்ந்து வருகிறேன். பின்னாளில் என்றைக்காகவது புத்தகமாக வருமா? என்றும் சில நல்ல உள்ளங்கள் கேட்பதுண்டு. காலம்தான் அதற்குப்பதில் சொல்ல வேண்டும்.

'சாரல் துளிகள்' மொத்தமும் எப்பொழுது புத்தகமாக வருமென்று நானறியேன், ஆனால் இந்தத்தொகுப்பிலிருந்து ஒரு துளியான, 

"வேலி தாண்டும் வெள்ளாட்டை நினைவு படுத்துகிறது குறுகிய சாலைத்தடுப்பை அனாயாசமாகத் தாண்டிச்செல்லும் ஒரு வாகனம்."

என்ற துளி, அச்சுப்புத்தகத்தில், அதாவது இந்த வாரக் குங்குமம் இதழில் வெளியாகியிருக்கிறது. 

குங்குமம் இதழுக்கு மிக்க நன்றிகள்.

Thursday, 14 March 2013

பத்திரம்.. பத்திரம்..


வெள்ளை யூனிஃபார்ம் போட்டுக்கொண்டு கிரிக்கெட் விளையாடும் பொடிசுகளும், ஓரத்திலிருக்கும் நானா-நானி பார்க்கில் குட்டீஸை விளையாட விட்டுவிட்டு கட்டைச்சுவரில் உட்கார்ந்திருக்கும் பெரிசுகளும், அதே கட்டைச்சுவரில் மொபைலில் தலையை விட்டுக்கொண்டு ‘யாருக்கோ காத்திருக்கும் இளசுகளுமாக அந்தக் காலை நேரத்திலேயே அமர்க்களமாக இருந்தது மும்பை-தாதரின் ‘மீனா தாயி கார்டன் என்றும் அழைக்கப்படும் சிவாஜி பார்க். மீனா தாயி யார் என்பவர்களுக்காக, இவர் காலஞ்சென்ற திரு.பால்தாக்கரேயின் காலஞ்சென்ற மனைவி என்ற சிறு குறிப்பு வழங்கப்படுகிறது. கார்டனின் வாசலியேயே கையில் ஆரத்தித் தட்டுடன் நம்மை வரவேற்பதற்காக மார்பளவுச்சிலை வடிவில் காத்திருக்கும் அவரைக் கண்டு கொண்டபடியே டாக்சியில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். நேர்ப்பாதையில் பயணப்பட்ட டாக்சி தாதரிலிருக்கும் ஷிவ்சேனாவின் தலைமையகத்துக்கு அருகே வந்ததும் சட்டென ப்ரேக் போட்டு நின்றது. பயமெல்லாம் காரணமில்லை,.. அங்கே இருந்த சிக்னலில் சிகப்பு விழுந்து விட்டது அதனால்தான் :-)))))))))

தலைமையகத்தின் முகப்பில் கண்ணாடிச்சுவர்களுக்கப்பால் சாலையைப் பார்த்தாற்போல் அமைந்திருக்கும் சேனையின் சேனாதிபதி படத்துக்கு மாலையணிவிக்கும் புதுப்பழக்கம் வந்திருக்கிறது. ஆள்காட்டி விரலை நீட்டி எதிரில் நின்று கொண்டிருக்கும் வாகனங்களை சேனாதிபதி பால்தாக்கரே அவர்கள் எச்சரிக்கை செய்த வண்ணம் இருப்பதால் அங்கே ட்ராபிக் ஜாம் ஏற்படுவதேயில்லை. அவரையும் கடந்து போய்க் கொண்டிருந்தோம். திடீரென்று சூழல் குளுகுளுவென்று மாறியது. ரோட்டின் இரு பக்கங்களும் மரங்கள் அடர்ந்த சூழல். ஜிலுஜிலுவென்று வந்த காற்றை அனுபவித்தபடியே “இந்த இடம் ரொம்பவே அழகாருக்கு என்றார் பையர். ஆமாம்,.. ஒரு கார்டன் இருந்தாலே அந்த இடம் ஜில்லுன்னு இருக்கும். இங்கே அஞ்சு கார்டன்கள் இருக்கே. கேக்கணுமா என்ன?. அதனால்தான் இந்த இடத்துக்கே ஃபைவ் கார்டன்ஸ் என்று பெயர். இது ‘வடாலா ஸ்டேஷனுக்கு ரொம்ப அருகில் இருப்பது இன்னொரு சிறப்பு. ஆனாலும் இது கிழக்கு மட்டுங்கா பகுதியில்தான் அடங்கும் என்று பையனுக்கு ஸ்தலபுராணத்தை விவரித்தேன்.

அங்கிருந்து இடப்புறம் திரும்பி வடாலா சர்ச்சையும், கெமிக்கல் இன்ஸ்டிட்யூட்டையும், டான்பாஸ்கோ ஸ்கூலையும் கடந்து போய்க்கொண்டிருந்தோம். அடுத்து வரப்போகும் நாற்சந்திப்பில் வலப்பக்கம் திரும்ப வேண்டும் நமக்கு. நாற்சந்தியில் ஒரு காவலர் நின்று போக்கு வரத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார். நமக்கு வலப்பக்க ரோட்டில் மிஞ்சிப்போனால் பத்து வயதிருக்கும் சிறுமி புத்தக மூட்டையோடு ரோட்டைக்கடப்பதற்காக வலது பக்கமும் இடதுபக்கமும் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தாள். காவலர் நிறுத்துவதற்குள் கடந்து விட வேண்டுமென்று வெண்ணெய்யில் இறங்கிய சூடான கத்தியாய் டாக்ஸி சல்லென்று போய்க்கொண்டிருந்தது. நமது வண்டி வலப்பக்கம் திரும்பவும் அந்தச்சிறுமி சட்டென்று சாலையைக் கடப்பதற்காக ஒரு எட்டு முன்வைத்தாள். அவ்வளவுதான்.. சர்ர்ர்ர்ரென்று அவளது புத்தகப்பையை உரசிக்கொண்டு டாக்ஸி பறந்தது. நாங்களெல்லாம் அப்படியே ஆடிப்போய் விட்டோம். அந்தக்களேபரத்திலும் அந்தக்குழந்தை தப்பித்துக்கொண்டாள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். நின்றோ அல்லது வந்த வழியே திரும்பிப்போயோ என்னவாயிற்று என்று பார்க்க இயலாத சூழல். வந்த ஆவேசத்தில் ட்ரைவரை ஒரு பிடி பிடித்தோம். “வண்டி வர்றதைப்பார்க்காம அவ ரோட்டைக் க்ராஸ் செஞ்சா. ஆகவே இது என் தப்பில்லை என்று கூசாமல் சொல்கிறார்.

சரி,.. அந்தப்பொண்ணுதான் ரோட்டைக் க்ராஸ் செய்யறதுக்காக அங்கே நிற்குதுன்னு தெரியுதில்லே. அட்லீஸ்ட் ஹார்ன் அடிச்சு எச்சரிக்கையாவது செய்திருக்க வேணாமா?” என்று கேட்டால் பதிலே இல்லை. “நீங்க சிரமப்பட வேணாம். நாங்க வேற வண்டியில் போய்க்கறோம் என்று ரங்க்ஸ் சொன்னதும்கூட காதிலேயே விழாத மாதிரி வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். ‘சீ..’ என்றாகி விட்டது. மன்னிப்புக்கேட்கும் தொனியோ அல்லது தவறு செய்த உணர்வோ கூட அவரிடம் இல்லை. உடனேயே அருகில் தென்பட்ட டாக்சி ஸ்டாண்ட் அருகில் இறங்கிக்கொண்டு கணக்குத்தீர்த்து அனுப்பி விட்டோம். இவரை நம்பி வண்டியில் பயணம் செய்ய முடியுமா?.. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சேர்ப்பாரோ... இல்லை, போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பாரோ?.. யாருக்குத்தெரியும். உடல் நிலை சரியில்லாத பையரை ஆஸ்பத்திரியில் காண்பித்து விட்டு திரும்பிக்கொண்டிருக்கிறோம். இந்தச்சூழலில் பார்ட்டியிடம் சண்டை போட யாரால் முடியும்?. பையரின் முன்னால் டென்ஷனைக் காண்பித்துக்கொள்ளவில்லையே தவிர இரண்டு மூன்று நாட்களாகவே "பாவம்,.. அந்தப்பெண்ணுக்கு ஒன்றும் ஆகாதிருக்க வேண்டும்" என்றுதான் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒரு கெட்டது நடக்கும்போது ஒரு நல்லதும் நினைவுக்கு வருமாம். இப்படித்தான் ஒரு சாயந்திரம் மும்பையிலிருந்து பையரும் நானும் டாக்சியில் வந்து கொண்டிருந்தோம். டாக்ஸியில் காஸ் தீரப்போகிறது. நிரப்புவதற்கு வேறொரு திசையில்தான் போக வேண்டுமென்று சொன்னார் ஓட்டுனர். “பையா,.. மொதல்லயே சொல்லியிருந்தா வேற டாக்சியில் ஏறியிருப்பேனே. இப்படி பாதி வழியில் சொன்னால் என்ன அர்த்தம்?” என்றேன். “பாபி,.. நானும் கவனிக்கலை என்கிறார். கடைசியில் எங்களை வண்டியில் உட்கார வைத்து விட்டு, அவரே ரோட்டில் நின்று ஒவ்வொரு டாக்சியாக வழிமறித்து கடைசியில் அவரது நண்பர் ஒருவரின் வண்டியை ஏற்பாடு செய்து பத்திரமாக ஏற்றி அனுப்பினார். அவர் நினைத்திருந்தால் நடு வழியிலேயே இறக்கி விட்டுவிட்டு தனக்குச் சேர வேண்டிய காசை வாங்கிக்கொண்டு போயிருக்கலாம். ஆனால், மனிதாபிமானம் மும்பையில் இன்னும் மிச்சமிருக்கிறது என்பதை நிரூபித்து விட்டுச் சென்றார். இப்படிப்பட்ட வைரங்கள் இருக்குமிடத்தில்தான் சில கூழாங்கற்களும் கிடக்கின்றன. இந்த மாதிரி சாலையில் கவனமில்லாமல் வண்டியோட்டும் ஆட்களால்தான் விபத்துகளும் அதிகம் ஏற்படுகின்றன.

மும்பையில் 2011-ல் மட்டும் 4.4 லட்சம் சாலை விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றனவாம். அதிலும் எங்கள் நவிமும்பையின் பாம்பீச் ரோடு விபத்துகளுக்கு மிகவும் பெயர் பெற்றது. சமீபத்தில் கூட இரண்டு மராட்டி நடிகர்களைக் காவு வாங்கியது. ஆகவே அனைவரையும் எச்சரிக்கும்பொருட்டு ஹிந்துஸ்தான் டைம்ஸார் பேலாப்பூரிலிருந்து ஆரம்பித்து வாஷி வரைக்கும் போகும் இந்த ரோட்டில் பத்தடிக்கொரு எச்சரிக்கை பேனர்கள் வைத்திருக்கிறார்கள். இந்த பேனர்களைப் பார்த்துக்கொண்டே வண்டியோட்டி யாரும் விபத்து ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.






சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிப்பதிலும், பாதுகாப்பான சாலைப்போக்குவரத்திலும் இந்தியாவிலேயே மும்பைதான் முதலிடத்தைக் கடைப்பிடிக்கிறது என்று முன்பு எங்கோ வாசித்த ஞாபகம். அதெல்லாம் இப்போது பழங்கதையாய்ப்போய் விடும் போலிருக்கிறது. சடாரென்று கட் அடித்து குறுக்கே புகும் ஆட்டோக்கள் பெருகி விட்டன. ட்ரக் ஆட்களும் அப்படித்தான் நெருக்கி வருகிறார்கள், வண்டி போவதற்கு சில சமயம் இடமே கொடுப்பதில்லை என்று பசங்கள் சொல்லுவதுண்டு. எப்பொழுதுமே சின்ன வண்டியைக் கண்டால் பெரிய வண்டிக்காரர்களுக்கு இளக்காரம் என்று சொல்லுவார்கள். தப்பு ஸ்கூட்டர் மேலோ கார் மேலோ இருந்தாலும் பாவப்பட்ட சைக்கிள்தான் பழி சுமக்க வேண்டும். இதன் காரணமாகவே சுற்றுச்சூழல், உடற்பயிற்சி என்று பல்வேறு காரணங்களுக்காக சைக்கிளைப் பிடித்துக்கொண்டிருந்த என் பையர் அதைக் கைவிட்டு விட்டு பைக்குக்கு மாறி விட்டார்.

சாலைப்பாதுகாப்பு வாரம் என்று வருடத்தில் ஒரு நாள் கொண்டாடி, அந்த ஒரு வாரத்தில் மட்டும் ஹெல்மெட், சீட் பெல்ட் எல்லாம் சரியாகப் போட்டுக்கொண்டிருக்கிறார்களா என்று செக் செய்தால் ஆயிற்றா?.. மற்ற நாட்களிலும் சர்ப்ரைஸ் சோதனைகள் நடத்த வேண்டும். அதே போல் மக்களும் தங்களுக்குரிய பொறுப்பையுணர்ந்து பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சிலர் ஹெல்மெட்டை அணிந்து கொள்ளாமல் கையில் சுமந்து செல்வார்கள். போலீசார் சோதனையிடுவதைக்கண்டதும் 'டக்'கென்று தலையில் கவிழ்த்துக்கொள்வார்கள். என்னதான் அபராதம் விதித்து, விதிமுறைகளைக் கடுமையாக்கி என்று மக்களை வழிக்குக்கொண்டு வர முயன்றாலும் 'நான் செய்வதைத்தான் செய்வேன்' என்றிருப்பவர்களை என்ன சொல்ல!! இப்படிப்பட்டவர்கள் வீட்டிலிருப்பவர்களின் அறிவுரையையும் காதில் போட்டுக்கொள்வதில்லை. நம்முடைய நன்மைக்குத்தான் சொல்கிறார்கள் என்பதை இவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தங்களை எதிர்பார்த்து ஒரு அன்புக்கூட்டமே காத்திருக்கிறது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். கிடைத்திருப்பது ஒரு ஆயுள்.. அதை நம் கவனக்குறைவால் தொலைத்து விடாதிருப்போமே.

டிஸ்கி: படங்கள் ரன்னிங்கில் எடுக்கப்பட்டவை. கொஞ்சம் அப்படியிப்படி ,.. ஃபோகஸ் இல்லாமல் இருந்தால் மன்னிச்சூ :-)))

Wednesday, 25 January 2012

நினைவுச்சின்னங்கள்- என் காமிராப் பார்வையில்.

அமெரிக்காவை மனசுல நினைச்சதும் ஜுவாலை ஏந்தி நிக்கிற சுதந்திரதேவியும், டில்லியை நினைச்சதும் செங்கோட்டையும், மதுரைன்னதும் மீனாட்சியும், ஆக்ரான்னதும் தாஜ்மஹாலும்தான் ஞாபகம் வருது. (வடக்கே உள்ளவங்களுக்கு ஆக்ரான்னதும் வேற ஒரு 'வில்லங்கமான' ஞாபகமும் வர்றதுண்டு). அந்தந்த இடங்களை ஞாபகப்படுத்தற விஷயங்களைத்தானே நினைவுச்சின்னங்கள்ன்னு சொல்றோம். அதுக்காக, திருனேலின்னதும் 'அல்வா'தானே ஞாபகம் வருது. அப்டீன்னா அல்வாதான் திருனேலியோட நினைவுச்சின்னமான்னு வில்லங்கமால்லாம் யோசிக்கப்டாது. பின்னே இருட்டுக்கடை எதுக்கு இருக்குதாம்?? காலப்போக்குல அதுவும் நினைவுச் சின்னமா ஆனாலும் ஆகலாம், சொல்ல முடியாது :-) 

ஒவ்வொரு ஊர்லயும் எந்தவொரு கட்டிடத்தைக் கட்டும் போதும், எந்த நோக்கத்துல கட்டப்பட்டாலும் நாட்பட அந்த ஊரைப் பத்தி நினைக்கும் போதே சம்பந்தப்பட்ட கட்டிடமும் நினைவுக்கு வர்ற மாதிரி அந்த ஊரோட வரலாற்றுல இரண்டறக் கலந்துடுது. சம்பந்தப்பட்ட கட்டிடத்தோட படத்தைப் பார்க்கிறப்பவும் "அட!!.. இது அந்த ஊராச்சே.."ன்னு சட்டுன்னு அந்த ஊரோட ஞாபகமும் வந்துரும். அதுவும் அந்த ஊர் நாம போய் வந்த ஊராயிருந்தா கேக்கவே வேணாம். அங்கே தங்கியிருந்த நாட்கள், அனுபவங்கள்ன்னு சரசரன்னு கொசுவத்தி பத்திக்கும். இதுல சில கட்டிடங்களைக் கட்டும் போதே அறிஞர்கள், நிகழ்வுகளோட ஞாபகார்த்தமா நினைவுச்சின்னங்களா கட்டினாலும், சில கட்டிடங்கள் மொதல்ல வெறுமே கல்லு மண்ணாலான கட்டிடமா இருந்துட்டு காலப்போக்குல நினைவுச் சின்னங்களாப் ப்ரமோஷன் வாங்கிக்கும். அப்படி என்னோட காமிராவில் பிடிச்சிட்டு வந்த சில நினைவுச்சின்னங்களை, ஃப்ளிக்கரோட நிறுத்திக்காம இங்கேயும் பகிர்ந்துக்கறேன் :-))

கன்னியாகுமரி: இந்தப் பேரைச் சொன்னதும் குமரியம்மனுக்கு அடுத்தபடியா மனசுல வர்றது விவேகானந்தரோட ஞாபகார்த்தமா கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவுச் சின்னம்தான். அமெரிக்கா போறதுக்கு முந்தி அவர் இந்தப் பாறையில் அமர்ந்துதான் தியானம் செஞ்சாராம். அந்த ஞாபகார்த்தமா 1970ல் கட்டப்பட்ட இந்த மண்டபம் அரிச்செடுக்கும் உப்புக் காத்தையும் சுனாமியையும் சமாளிச்சுக் கிட்டுக் கம்பீரமா நிக்குது.

மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா: கிட்டப் பார்வையில்..


விவேகானந்தரும், ஸ்ரீபாத மண்டபமும் ஒரு தொலை நோக்குப் பார்வையில்.. 
இந்த காந்தி மண்டபத்தோட படத்தைப் பார்த்த அப்றமும் இது கன்னியாகுமரிதானேன்னு தெரிஞ்சுக்காதவங்க ஒரு நடை கன்னியாரி போயிட்டு வந்துருங்க. கன்னியாகுமரிக் கடல்ல கரைக்கிறதுக்கு முன்னாடி அவரோட அஸ்தியை வெச்சிருந்த ஞாபகார்த்தமா கட்டப்பட்ட இந்த மண்டபத்துல,   மேல் விதானத்துல இருக்கற ஒரு துளை வழியா அஸ்தியை வெச்சிருந்த இடத்துக்கு ஒவ்வொரு வருஷமும் காந்தி ஜெயந்தி தினத்தன்று, அதாவது அக்டோபர் 2-ம் தேதி அன்னிக்கு சரியா நடுப்பகல் 12 மணிக்கு சூரிய பகவான் ஒளியபிஷேகம் செஞ்சு அஞ்சலி செலுத்தறதைப் பார்க்கக் கூட்டம் நெரியும். எள்ளு போட்டா எண்ணெய்தான் விழும். 

மும்பையில் மலபார் பகுதியில் தொங்கும் தோட்டத்துக்குப் பக்கத்துல இருக்கற கமலா நேரு குழந்தைகள் பூங்காவில் இருக்குது இந்த பாட்டிம்மாவின் ஷூ.. (பாவம்.. ஒரு ஷூவை இங்கே தொலைச்சுட்டு என்ன சிரமப் படறாங்களோ :-))

மும்பையின் தாஜ் ஹோட்டல்: 565 அறைகளைக் கொண்ட இந்த ஹோட்டல் திரு. ஜாம்ஷெட்ஜி டாடாவால் கட்டப்பட்டு,  1903-ம் வருஷம் டிசம்பர் 16-ம் தேதியன்னிக்கு விருந்தினர்களுக்காக திறந்து விடப்பட்டிருக்கு. முதலாம் உலகப்போர் சமயத்துல இதை 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையா மாத்தி உபயோகப் படுத்தியிருந்துருக்காங்க.  இதுல படத்தோட இடது பக்கம் இருக்கறது பழைய ஹோட்டல். இதுல நடுவே இருக்கும் வெங்காயக்கூம்பு பகுதியில் ஈஃபில் டவர்ல உபயோகப் படுத்தியிருக்கற அதே வகை இரும்பை வெளிநாட்லேருந்து தருவிச்சுப் பயன்படுத்திக் கட்டியிருக்காங்களாம். 

1980-85 கால கட்டத்துல உலகத்துலயே சிறந்த ஐந்தாவது ஐந்து நட்சத்திர ஹோட்டல்ங்கற இடத்தை அடைஞ்ச பெருமை இதுக்குண்டு. 2008-ல் 26 நவம்பர் அன்னிக்கு நடந்த தாக்குதல்ல கொஞ்சம் கலகலத்தாலும் மறுபடியும் மீண்டு வந்து, அழிவின் சுவடுகளையெல்லாம் துடைச்சுப் போட்டுட்டுத், தனக்காக உயிர் கொடுத்தவர்களின் நினைவையும் சுமந்துக்கிட்டுத் தலை நிமிர்ந்து நிக்குது. தாக்குதலுக்கு அப்புறம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படமே அதுக்குச் சாட்சி.

மும்பையின் புகழ்பெற்ற கேட் வே ஆஃப் இந்தியா: இது வெள்ளைக்காரங்க அவுங்க பாஷையில் வெச்ச பேரு. நாம தமிழ்ல இந்தியாவின் நுழைவாயில்ன்னு சொல்லிக்கலாமே. இது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துல அப்போதைய ராஜாவும் ராணியுமா இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், மேரியம்மா தம்பதியினரின் இந்திய வருகையைக் குறிக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கு. 1911-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1924-ல் பணிகள் முடிவடைஞ்சு, அதே வருஷம் டிசம்பர் 4-ம் தேதி திறந்து வைக்கப் பட்டிருக்கு. இதோட உசரம் 85 அடிகளாம். ஜெய்ப்பூர்லேருந்து கொண்டு வரப்பட்ட துளையிட்ட ஜன்னல்கள்(இதுகளை ஜாலின்னு சொல்லுவாங்க) பார்க்கவே பிரமிக்க வைக்குது. இந்திய மற்றும் முகலாயக் கட்டிடக்கலையின் கலவை கட்டிடம் முழுசும் பிரதிபலிக்குது. மும்பைக்கு முதன்முதல்ல வந்திறங்கும் சுற்றுலாப்பயணிகள் தவறாம பார்வையிட்டு அதிசயிக்கும் இடங்கள்ல இதுக்குத்தான் முதலிடம். மும்பைக்கு வந்துட்டு கேட்வே ஆஃப் இந்தியாவைப் பார்க்கலைன்னா ஜென்ம சாபல்யம் கிடைக்காது தெரியுமோ :-). எதிர்த்தாப்ல இருக்கற தாஜ் ஹோட்டல்ல தங்கிக்கிட்டா நாள் முழுசும் பார்த்துட்டே இருக்கலாம். (சில வருந்தத்தக்க நிகழ்வுகளால இப்ப தாஜும் நினைவுச்சின்னமாகிடுச்சு ) 

மும்பையின் பாந்திரா-வொர்லி கடல் இணைப்பு: 1999-ல் பால் தாக்கரேயால் அடிக்கல் நாட்டப்பட்டு 2010-ல் மக்கள் உபயோகத்துக்காக முழுவதும் திறந்து விடப்பட்டது. போக்குவரத்து நெரிசலுக்குப் பேர் போன மும்பையில் இந்தப் பாலம் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம். இந்தப் பாலம் வர்றதுக்கு முந்தி, இங்கேருந்து அங்கே போகறதுக்குச் சுமார் ஒன்னரையிலேர்ந்து ரெண்டு மணி நேரம் எடுக்குமாம். இப்பல்லாம் பாந்திராவுலேர்ந்து வொர்லிக்கு வெறும் ஏழே நிமிஷத்துல போயிடலாம். போக்குவரத்து நெரிசல் இருந்தா சுமார் பத்துப்பதினஞ்சு நிமிஷங்களாகும். அவ்ளோதான்.  டோல் வசூல் கொஞ்சம் கூடுதல்தான்னாலும் நல்லாவே பராமரிக்கிறாங்க.

டிஸ்கி: ஊர் சுத்தப் போயிருந்தப்ப விவரங்கள் சொன்ன கைடுக்கும், மேல் விவரங்கள் கொடுத்த விக்கியண்ணனுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம் :-))

Sunday, 15 January 2012

தாத்தா பாட்டி சொல்றதைக் கேளுங்க..


இணையத்துலேர்ந்து சுட்ட பொங்கல்..
கடவுளோட படைப்புகள்லயே ரொம்பவும் அற்புதமான படைப்பு என்ன தெரியுமா?.. மனுஷனைப் படைச்சதுதான்.மத்த படைப்புகளில் இல்லாத ஒரு அற்புதமான சக்தி மனுஷனுக்கு இருக்கு. அதான் பேசும் சக்தி.மற்ற மிருகங்களுக்கும் வாயிருந்தாலும், மனசுல தோணற எண்ணங்களை வார்த்தையால் வெளிப்படுத்தும் திறமை மனுஷனுக்கு மட்டுமே இருக்கு. அப்படிப்பட்ட மனுஷப்படைப்பை ஏந்தான் படைச்சோமோன்னு அந்தக் கடவுளே நொந்துக்கற அளவுக்கு அந்த திறமையை தவறா உபயோகப் படுத்துறதும் கூட மனுஷனோட சிறப்பம்சம்தானோ.

சில பேர் இருக்காங்க.. நகைச்சுவைங்கற பெயர்ல எப்பவும் மத்தவங்க மனசைப் புண்படுத்தி அதுல சந்தோஷப்படுறதையே வழக்கமா வெச்சிருப்பாங்கற ரகம். பொதுவா நகைச்சுவைங்கறது நாமளும் சிரிக்கணும், நாம யாரை அல்லது எதைப்பத்திக் கிண்டல் செய்யறோமோ அவங்களும் சிரிக்கணும். அதான் நல்ல நகைச்சுவை. அப்படியில்லாம ஒருத்தரோட உருவத்தையோ இல்லை அவங்களோட தனிப்பட்ட குணங்களையோ எள்ளல் செய்யறது நிச்சயமா குரூரமானது. சம்பந்தப்பட்டவங்க அழுதுக்கிட்டிருக்கப்ப மத்தவங்க சிரிக்கிறதுங்கறதை நகைச்சுவைங்கற வகையில் சேர்க்கறதை நினைச்சுக் கூட பார்க்க முடியலை.

இன்னும் சில ரகங்கள் இருக்காங்க. பொதுச்சபையில் எப்போ எதைப் பேசணும்ன்னே ஒரு இங்கிதமில்லாம வார்த்தைகளை வெளியிட்டுடுவாங்க. உதாரணமா, கல்யாணமாகி ஒரு வருசம்தான் ஆகியிருக்கும். அந்தப் பொண்ணைப் பார்த்து, “ஏம்மா.. ஏதாவது விசேஷமுண்டா?..”ன்னு கேப்பாங்க. கணவர் வெளி நாட்ல இருக்க, பொண்ணு அம்மா வீட்டுக்கு ஒரு ஆறுதலுக்காக வந்துருக்கும். அதைத் தெரிஞ்சு வெச்சிருந்தாலும், அந்தப் பொண்ணைப் பார்த்து, “ஏம்மா, ரொம்ப நாளா இங்கேயிருக்கியே?.. உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினையா?”ன்னு கேப்பாங்க. "ஆமா,.. பிரச்சினைதான். இன்னும் அம்பது பவுன் நகை கொண்டாந்தாத்தான் வீட்டுக்கு வரலாம்ன்னு எங்க மாமியார் சொல்லிட்டாங்க. எம்மேல இவ்ளோ அக்கறை காமிக்கிற நீங்க அதைப்போட்டு எங்கூர்ல கொண்டு விடுங்களேன்னு அந்தப் பொண்ணு திருப்பிச் சொன்னா இவங்க நிலை என்ன?. இதெல்லாம் தேவையா?.. எங்க கல்யாணத்துக்கப்புறம் முதல் முறையா ஊருக்குப் போனப்ப, ரெண்டு மாசம் லீவு எடுத்துட்டுப் போனோம். ஊருக்குப் போயிச் சுமார் பத்து நாள்தான் ஆகியிருக்கும். ரங்க்ஸைப் பார்த்து ஒரு உறவு, “என்னப்பா?.. தொடர்ந்தாப்ல பத்து நாளா ஊர்ல இருக்கியே, வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்துட்டியா..”ன்னு கேட்டது. அடப்பாவிகளா..ன்னு நொந்து நூடுல்ஸாயிட்டோம்.

“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” ன்னு இப்படிப்பட்ட ஆட்களுக்காகத்தான் வள்ளுவர் பாடி வெச்சிருக்காரோ என்னவோ!!. ஒண்ணும் புரியலை போங்க :-)

அதே மாதிரி, மறந்தும் மத்தவங்க கிட்ட ஒரு இன்சொல் சொல்லாம எப்பவும் சுடுசொற்களால் அபிஷேகம் செஞ்சுக்கிட்டிருக்கறவங்களும் உண்டுதான். ஒரு சொல்லால பிரிஞ்ச குடும்பங்களும் உண்டு, இணைஞ்ச குடும்பங்களும் உண்டு. இதைத்தானே “ஒரு சொல் வெல்லும்,.. ஒரு சொல் கொல்லும்”ன்னு சொல்லி வெச்சிருக்காங்க. நாலு நல்ல வார்த்தை சொல்றதால மனுஷங்களுக்கு என்ன நட்டம் ஆகிடப் போகுதுன்னே புரிய மாட்டேங்குது.

சொல்லால அவமதிக்கிறது ஒரு வகைன்னா, செயலால அவமதிக்கிறது இன்னொரு வகை. இப்ப,.. நல்ல நாளும் அதுவுமா நீங்க உங்க நண்பர் வீட்டுக்குப் போறீங்கன்னு வெச்சுக்குவோம். அட!.. இதோ,.. காணும் பொங்கல் வருது. அன்னிக்கு ஃப்ரெண்ட் வீட்டுக்கு ஒரு விசிட் அடிக்கலாமேன்னு குடும்பத்தோட போறீங்க. ஒரு ஃப்ரெண்டு வீட்ல உங்க தலையை வாசல்ல கண்டதுமே, அந்த வீட்டுப் பையன், “அப்பா,..நாராயணன் மாமா வந்துருக்கார்”ன்னு சொன்னதும், உங்க ஃப்ரெண்டு ஓடி வந்து,.. ”வாடா மாப்ளே..”ன்னு கையைப் பிடிச்சுட்டு வர்ற உங்க பையனைக் கொஞ்சிட்டு, “வாம்மா..”ன்னு உங்க தங்க்ஸையும் வாய் நிறைய அழைச்சு வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போறார். வீட்டுக்குள்ள போனதும், அவங்க தங்க்ஸும் கலகலன்னு அன்பா உபசரிக்கிறார். இருந்து சாப்பிட்டுட்டுத்தான் போகணும்ன்னுட்டு அவங்க தங்க்ஸ் நிமிஷத்துல விருந்துச் சாப்பாட்டைத் தயாரிச்சுடறாங்க. நேரம் போறதே தெரியாம உக்காந்து சந்தோஷமாப் பேசிச் சிரிச்சு பொழுதைக் கழிக்கிறீங்க.

சரி,..வீட்டுக்குக் கிளம்பலாம்ன்னு திரும்பி வந்துட்டிருக்கறப்ப அதே ஏரியாவுல இருக்கற இன்னொரு ஃப்ரெண்டு வீட்டுக்கும் போயி வாழ்த்திட்டு வந்துடலாமேன்னு நினைச்சு அங்கியும் போறீங்க. நீங்க வர்றதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி அந்த வீட்டு வாண்டு வாசல்ல விளையாடிட்டு இருக்குது. உள் தாழ்ப்பாள் போட்டிருக்கற கம்பிக் கதவை நீங்களே திறந்துட்டு உள்ள வர்றதைப் பார்த்தும் கவனிக்காத மாதிரி குடும்பமே டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்ல மூழ்கியிருக்குது. திடீர்ன்னு, அப்பத்தான் உங்களைக் கவனிச்ச மாதிரி உங்க ஃப்ரெண்டு வெளியே வந்து, “வாங்க..”ன்னு ஒப்புக்கு பொத்தாம் பொதுவாச் சொல்லிட்டு உள்ளே போயிடறார். நீங்களும் தொடர்ந்து வீட்டுக்குள்ள போறீங்க.

உள்ளே, வீட்ல மொத்தப் பேரும் டிவி நிகழ்ச்சியோட சுவாரஸ்யத்துல மூழ்கியிருக்காங்க. நீங்க இந்த நேரத்துல வந்ததை அவங்க விரும்பலைங்கறதை அவங்க முகமே காட்டிக் கொடுக்குது. பொங்கல் பண்டிகையின் தாத்பரியத்தைப் பத்தி, வட நாட்டு நடிகை, “என்க்கூ பொங்கள் ரோம்ப ப்டிக்கும். ஆக்சுவலி நானு தீவ்லி அன்னிக்கும் பொங்கள் சாப்டும்”ன்னு சிலாகிச்சுப் பேசற தத்துவ முத்துகளைக் கேக்கறது தடங்கல் பட்டுப் போச்சேன்னு வேண்டா வெறுப்பா எழுந்து போயி, கடனேன்னு சீனி போட்ட வெந்நீர்த் தண்ணியை ‘டீ’ங்கற பேர்ல கொண்டாந்து டீபாய்ல கொஞ்சம் சிதறி விழுறபடிக்கு வெச்சுட்டுப் போறாங்க அவங்க தங்க்ஸ். அங்கேயிருக்கற மொத்த நேரமும் நீங்க மட்டும்.. நீங்க மட்டுமே பேசிக்கிட்டிருக்கறீங்க. அதை டிவியில் பாதிக் கவனமும், உங்க கிட்ட பாதிக் கவனமுமா கேட்டுட்டிருக்காரு உங்க நண்பர்.

இடைக்கிடையே, உங்க பேச்சுக் குரல் தனக்கு இடைஞ்சலா இருக்குன்னு சொல்லிக் காட்டுற மாதிரி உச்சுக் கொட்டிக்கிட்டேயிருக்காங்க அந்த வீட்டுப் பெரியவங்க. நல்லவங்களுக்கு அடையாளம் சொல்லிக்காம கிளம்புறதுதான்னு, நீங்க கிளம்புறப்ப, ‘சரி’ன்னு ஒத்தை வார்த்தையில் தலையாட்டிட்டு மறுபடியும் டிவியில் மூழ்கிடறாங்க. அதுக்கு மேலும் நீங்க அங்க நிப்பீங்களா என்ன??
  
இப்ப சொல்லுங்க,.. இந்த ரெண்டு வீடுகள்ல எந்த வீட்டுக்கு அடிக்கடிப் போகணும்ன்னு தோணும்?.. உங்க கருத்தை விட்டுத் தள்ளுங்க. உங்க ஃப்ரெண்ட் எது செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்குன்னு நட்பைப் பெருசா நினைக்கிற "நண்பேண்டா". அதுவே, உங்க குடும்பத்தாரைக் கேட்டுப் பாருங்க. நிச்சயமா முதல்ல போன ஃப்ரெண்டு வீட்டுக்குத்தான் அவங்க ஓட்டுப் போடுவாங்க. வீட்டுக்கு வந்தவங்களை அதுவும் நல்ல நாளும்  அதுவுமா குடும்பத்தோட வந்துருக்கறவங்களை ‘ஏன் வந்தே?’ன்னு சொல்லாம சொல்ற மாதிரி நடந்துக்கறவங்க வீட்டு வாசப்படியை மிதிக்காம இருக்கறதே நல்லது. இதைத்தான் நம்ம முன்னோர்கள், ‘மதியார் தலைவாசல் மிதியாதே’ன்னு சொல்லி வெச்சுட்டுப் போயிருக்காங்க.

கோடி ரூபா கொடுத்தாக் கூட உன்னை மதிக்காதவர் வீட்டுக்குப் போகாதே,  அவங்க அன்பில்லாம கொடுக்கறது அமிர்தமேயானாலும் அதைச் சாப்புடாதேன்னு நம்ம நாவப்பழப் பாட்டி, அதாங்க ஔவையாரே பாடி வைக்கலையா,..
“மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்.
உண்ணீருண் ணீரென் உபசரியார் தன்மனையில்
உண்ணாமை கோடி பெறும்”

ஏன்னா,.. அவங்களும் அப்படித்தான் ஒருத்தர் வேண்டா வெறுப்பா ஒப்புக்காகக் கொடுக்கறதை சாப்புட மாட்டாங்க. மீறிச் சாப்பிட நேர்ந்தா அவங்க மனநிலை எப்படி இருக்கும்ங்கறதையும் சொல்லி வெச்சிருக்காங்க.
“காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதேவீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தைய்யையோ
அன்பிலாள் இட்ட அமுது.”

இது ஔவையாருக்கு மட்டுமல்ல, நமக்கும் பொதுவானதுதான். “‘வா’ன்னு ஒரு வார்த்தை சொல்லலை பார்த்துக்கோ. இனிமே அவன் வீட்டுப் படியை மிதிப்பேனா?.. செத்தாலும் மிதிக்க மாட்டேன்..”ன்னு எத்தனை பேர் வீரசபதம் எடுத்திருப்போம். எத்தனை விஷேச வீடுகள்ல, “சாப்பிடுன்னு ஒரு வார்த்தை சொல்லலை”ன்னுட்டு உறவுகளுக்குள்ளே சண்டைகள் நடக்கறதைப் பார்த்திருப்போம்.

இதெல்லாம் எதுக்குங்க?..தேவையா?. மனுஷனாப் பிறந்தவர்கள் ஒருத்தரையொருத்தர் மதிக்கவும், அன்பா நடத்தவும் தெரிஞ்சுக்கணும். எடுத்திருக்கறது ஒரு பிறவி. அடுத்த பிறவின்னு உண்டா இல்லியான்னே மொதல்ல யாருக்கும் தெரியாது. அது அவங்கவங்க தனிப்பட்ட நம்பிக்கைகள். அப்டியே இன்னொரு பிறவி எடுத்தாலும், மறுபடியும் இதே உறவுமுறைகளோடப் பிறப்போம்ன்னோ ஒருத்தரையொருத்தர் சந்திச்சுக்குவோம்ன்னோ நிச்சயமில்லை. அப்றம் எதுக்காக ஒருத்தரையொருத்தர் தேவையில்லாம காயப்படுத்திக்கணும்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”ன்னு வள்ளுவர் தாத்தா பாடி வெச்சுருக்கறதைப் பின்பற்றி நம்மை மதிக்காதவங்களா இருந்தாலும், இந்த நல்ல நாளும் அதுவுமா நம்ம வீட்டுக்கு வந்தா, அவங்களையும் நல்லபடியா நடத்துவோம்.பழையன கழிக்கும் போகிப் பண்டிகையில் பொறாமை, போட்டி மனப்பான்மை, கெட்ட எண்ணங்கள்ன்னு எல்லாத்தையும் எரிச்சுட்டு, புதியன பெருகும் பொங்கல் பண்டிகையில் சந்தோஷங்களை மட்டுமே பொங்க வைப்போம்.


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் :-)

டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்..



Wednesday, 11 January 2012

மும்பை-2012 புகைப்படக் கண்காட்சியும் நானும்..

அடுத்த வருஷங்களுக்கான அறிவிப்பு..
ஏதாவது ஒரு பொதுவான தொழில்ல இருக்கற நண்பர்கள் உதவி தேவைப்படும் சமயங்களில், தங்களுக்குள்ளயே ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கறது சகஜம்தான். இப்ப நம்ம பதிவுலகத்தையே எடுத்துக்குவோம். நமக்கு தெரிஞ்ச தொழில் நுட்பங்களை இடுகையிடறது மூலமா, நிச்சயம் ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கறோம்தானே.

1970-களில் மும்பையின் ஃபோர்ட் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வெச்சிருந்த சில நண்பர்களும் அப்படித்தான் தங்களுக்குள்ளேயே தொழில் முறையில் உதவி செஞ்சுக்கறதை வழக்கமா வெச்சிருந்தாங்க. புகைப்படத் துறையில் நாளுக்கு நாள் எவ்வளவோ புதுப்புது முயற்சிகள் நடக்குது, புகைப்படக் கருவிகள், லென்சுகள்ன்னு சந்தைக்கு தெனமும் எவ்வளவோ விதவிதமா வந்துக்கிட்டே இருக்குது. இது தவிர, எடுத்த படத்தை டெவலப் செய்யறது, ப்ரிண்ட் போடறது, அதுகளை ஆல்பமாக்குறதுன்னு எவ்வளவோ வேலைகள் இருக்குது. (அப்ப டிஜிட்டல் காலம் வரலைங்கறதை நினைவில் கொள்க).


அந்த வேலைகளில் ஏற்படற சந்தேகங்களை நிவர்த்தி செய்யறதுல ஆரம்பிச்சு, ஆல்பம் தயார் செய்யறதுக்கான தரமான பொருட்கள், பிலிம், எங்கே டெவலப் செய்யக் கொடுத்தா வேலை தரமானதா இருக்கும்கற தகவல் உதவிகள் உட்பட எல்லோரும் ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்துக்குவாங்க. இப்ப நம்ம ‘பிட்,ஃப்ளிக்கர்’ எல்லாம் ஆத்துதே.. அதே கடமையைத்தான் அப்ப அவங்களும் ஆத்திக் கிட்டிருந்துருக்காங்க.

அப்பத்தான், இதை மாதிரி தகவல் உதவிகள் தேவைப்படற மத்த புகைப்பட ஆர்வலர்களுக்கும் உதவியா இருக்கற மாதிரி நம்ம வட்டத்தை பெரூசாக்கினா என்னான்னு அவங்களுக்கு தோணியிருக்கு. மளமளன்னு ஏற்பாடுகள்ல இறங்கி, 1973-ம் வருஷம் ஜூன் 23-ம் தேதியன்னிக்கு சுமார் இருபத்தஞ்சு நண்பர்கள் கூடி, Photographic Dealers Association(PDA)ன்னு ஒரு அமைப்பை ஏற்படுத்தினாங்க. காலப்போக்குல வட்டம் 3400 மெம்பர்களைக் கொண்டதா வளர்ந்து தன்னோட பேரை All India Photographic Trade & Industry Association அப்டீன்னு மாத்திக்கிடுச்சு.
கண்காட்சிக்குள் ஒரு கண்காட்சி..
புகைப்படக் கலையை ஊக்குவிக்கறதுக்காகவும், லேட்டஸ்டான டெக்னிக்குகளை மக்கள் கிட்ட பகிர்ந்துக்கவும் என்ன வழின்னு யோசிச்சப்பதான் மக்களெல்லாம் ஒரு கூரையின் கீழ் கூடி எக்ஸிபிஷன் நடத்தினா என்ன?ன்னு தோணியிருக்கு. புகைப்படக் கலை சம்பந்தமா இருக்கற எல்லா விஷயங்களும் ஒரு கூரையின் கீழ் கிடைக்குதுன்னா நல்லதுதானே.. அப்படியே மக்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களையும் கண்காட்சியா வெச்சாங்கன்னா, புது விஷயங்களையும் கத்துக்கிடலாம்ன்னு முடிவெடுத்து 1978-ம் வருஷம் முதற் கொண்டு ‘போட்டோ ஃபேர்’ நடத்த ஆரம்பிச்சுருக்காங்க. அப்பலேர்ந்து இன்னி வரைக்கும் அதே கோரேகாவ் (Goregaon) NSE மைதானத்துல இருக்கற Bombay Exhibition Centre-லதான் இது நடக்குதுங்கறது ஒரு விசேஷச் செய்தி. இங்கே மட்டும் இன்னும் மும்பையாக்காம விட்டு வெச்சிருக்காங்களேன்னு யோசனையோட பார்த்தேன். ஒரு கேட்ல மட்டும் Bombay-ஐ சுரண்டி எடுத்துட்டு, வெறுமே எக்ஸிபிஷன் செண்டரை மட்டும் விட்டு வெச்சிருக்காங்க. மத்த கேட்ல இன்னும் பாம்பேயோட அதிகாரம்தான் நடக்குது.
கண்காட்சி நடக்குற இடத்துல உள்ளே ஸ்டால் போடறவங்களுக்காகவும், அதெல்லாம் சரியாயிருக்கான்னு செக் செய்யறதுக்காக வந்து போற பார்வையாளர்களுக்கும் தனித்தனியா ஆன்லைன்ல ரெஜிஸ்ட்ரேஷன் வசதி செஞ்சுருந்தாங்க. அதெல்லாம் வெளியூர்லேர்ந்து வரவங்களுக்குத்தான். உள்ளூர்க் காரங்க நமக்கெதுக்கு? நாம நேரடியா டீல் செஞ்சுக்குவோம்ன்னுட்டு கிளம்பிட்டோம். நீள நீளமான மேசைகள்ல விண்ணப்ப படிவங்களை வெச்சுக்கிட்டு நமக்காகக் கால் கடுக்க காத்துட்டிருக்காங்க. படிவத்தை நிரப்பிக்கிட்டு, பக்கத்துலயே இருக்கற ஜன்னல்ல நூறு ரூபாயையும் சேர்த்துக் கொடுத்ததும், கொஞ்சம் இந்தப் பக்கம் வந்து காமிராவைப் பாருங்கன்னு சொல்லி நம்மைப் படம் எடுத்துக்கறாங்க. ஆச்சு.. ஐடி தயார். அதையும் ஐடியை கழுத்துல போட்டுக்கறதுக்காக ரிப்பனில் கோர்த்த கார்டையும் ஒரு பையில் போட்டுக் கொடுத்துடறாங்க. வாங்கிட்டு நேராப் போயி க்யூவில் நின்னு உள்ளே நுழைஞ்சோம்.

பீரங்கியை.. அதாங்க.. நம்ம கேனானை தவிர மத்தவங்க எல்லாம் ஸ்டால் போட்டுருக்காங்க. ஒலிம்பஸ், ஃப்யூஜியோட நம்ம நிகானும் அங்கே நிக்கார். மொதல்ல ஒவ்வொரு வரிசையா பார்த்துட்டே வருவோம். வேணுங்கறதை மனசுல முடிச்சுப் போட்டு வெச்சுக்கிட்டு, பொருளை கம்பேர் செஞ்சு வாங்கிக்கலாம்ன்னு முடிவு எடுத்திருந்தேன். அதான் ஒவ்வொரு பொருளுக்கும் நாலஞ்சு கடைகள் தொறந்து வெச்சுருக்காங்களே..
ஸ்டால்கள்..
முந்தின தடவை போயிருந்தப்ப போட்டோ, வீடியோ காமிராக்கள், லென்சுகள்ன்னு நிறைய கடைகள் இருந்தது. இப்ப ஒரே ஒரு கடையை தவிர மத்த இடங்கள்ல காமிராக்களை காணோம். ஜூம் லென்சுகள் பார்க்கலாம்ன்னு ஒரு ஐடியா இருந்தது. ஆனா sigmaவுல மட்டும்தான் லென்சுகள் வெச்சிருந்தாங்க. நாலஞ்சு கடைகள் பார்த்துட்டு, ஒரு கடையில் வாங்கினாத்தானே நமக்கு திருப்தி. வெறுமே ஒரே ஒரு கடையில் பார்த்துட்டு வாங்கினா நம்ம கொளுகையை விட்டுக் கொடுத்துட்டதா ஆகிடாதோ.. அதனால வெறுமே ட்ரைபாட் மட்டும் வாங்கிக்கிட்டேன். லென்ஸ் வேணும்னா இங்கே இருக்கற வாஷிக்குப் போனா ஆச்சு. இன்னொரு சமயம் வாங்கிக்கலாம். மொதல்ல எனக்கு எந்த மாதிரி லென்ஸ் தேவைங்கறதை மொதல்ல முடிவு செஞ்சுட்டு அப்றம் போகலாம்ன்னு ஒத்திப் போட்டுட்டேன்.

போட்டோ ஸ்டுடியோ வெச்சுருக்கறவங்களுக்கு இந்தத் தடவை நடந்த கண்காட்சி ரொம்பவே உபயோகமா இருந்துருக்கும்.ஃப்ளாஷ் லைட்டுகள், ரிஃப்ளெக்டர்கள், ட்ரைபாடுகள், பின்னணிக்கான துணிகள், அப்றம் வீடியோவுலயும், போட்டோக்கள்லயும் உபயோகப் படுத்தறதுக்கான எக்கச்சக்கமான தீம்களுக்கான சாப்ட்வேர்கள், போட்டோ ஃப்ரேம்கள், வீடியோ எடிட்டிங்குக்கான சாப்ட்வேர்ன்னு கொட்டிக் கிடந்துது. இப்பல்லாம் கல்யாண வீடியோக்கள், போட்டோக்களை 3D தொழில் நுட்பத்துல தயாரிக்கிறதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்டு. விருப்பமிருக்கறவங்க பேரைப் பதிஞ்சுகிட்டா, எப்படித் தயாரிக்கிறதுன்னு பயிற்சி கொடுப்பாங்க. பயிற்சி எடுத்தப்புறம் அந்த முறையில் வீடியோக்கள், போட்டோக்கள்ன்னு தயார் செஞ்சு அசத்தலாம். அதுக்குன்னு இருக்கும் கண்ணாடியைப் போட்டுக்கிட்டு வீடியோக்களைப் பார்த்து எஞ்சாயலாம் :-)

இப்பல்லாம் யாரும் பெயர் பொறிக்கறதில்லையாம்...
இப்பல்லாம் கப், தலையணை, ப்ளேட், பொம்மை இத்யாதிகள்ல தங்களோட போட்டோக்களை பதிஞ்சு வெச்சுக்கற வழக்கம் பெருகிட்டு வருது. முக்கியமா குட்டீஸ் இதை ரொம்பவே விரும்பறாங்க. அதுக்கான கருவிகளும் காணக்கிடைச்சது. அதே மாதிரி சினிமா, டெலிவிஷன் ஷூட்டிங்குகளுக்கு உபயோகப் படுத்தற கிரேன்கள் அங்கங்கே கொக்கு மாதிரி தலையை நீட்டி எட்டிப் பார்த்துட்டு இருக்குது. ‘ஸ்டெடிகேம்’ன்னு ஒரு வகை காமிரா. இது கூடுதல் அதிர்வுகள் இல்லாம ஷூட் செய்ய ஏதுவா இருக்குமாம். மத்த காமிராக்கள் மாதிரி இதை ட்ரைபாடிலோ, ட்ராலியிலோ வைக்க தேவையில்லை. காமிராமேன் உடம்புல கட்டிக்கிட்டு நடிகர், நடிகைகள் கூடவே நடந்து போய் நடிப்பைப் படம் பிடிக்க ஏதுவா Garrett Brown என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கு. இதை உடம்புல கட்டிக்கிட்டு ரெண்டு பேர் அங்கியும் இங்கியும் நடந்து டெமோ கொடுத்துட்டிருந்தாங்க.
ஸ்டெடியாப் படம் புடிக்கும் ஸ்டெடிகேம்..
கண்காட்சி நடந்த நாட்கள் முழுசும், பிரபல போட்டோகிராபர்கள் வந்து, வொர்க் ஷாப்கள் நடத்துனாங்க. அழகழகான போட்டோக்களெல்லாம் கண்காட்சிக்கு வெச்சிருந்தாங்க. விட்டுட்டு வர மனசேயில்லை. போன தடவை ஃபேஷன் ஷோ சமயத்துல மாடல்கள் ஒவ்வொரு கம்பெனிகளோட காமிராக்களைக் கையில் பிடிச்சுட்டு பூனை நடை நடந்துட்டிருந்தாங்க. இந்தத் தடவை portrait மாடலிங்காம். அங்கங்கே நின்னு போஸ் கொடுத்துட்டிருந்தாங்க. தொழில் முறை போட்டோ கிராபர்கள் சந்தர்ப்பத்தை உபயோகிச்சுக்கிட்டு சுட்டுத் தள்ளிட்டிருந்தாங்க. என்னை மாதிரி கத்துக்குட்டிகள் ‘ஞே’ன்னு வேடிக்கை பார்த்துட்டு நகர்ந்து போயிட்டோம்.
வளைச்சு வளைச்சு படம் எடுத்தாலும் அசராம போஸ் கொடுத்தவங்க..
காஃபிடோரியா பரவாயில்லாம இருக்கு.இன்னும் நாலு டேபிள் சேர் போட்டுருந்தா, அலைஞ்சு திரிஞ்சு அலுத்த கால்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துட்டு, வாய்க்கு வேலை கொடுத்துருக்கலாம். இல்லாததால மியூசிக் சேர் விளையாண்ட மாதிரி, உக்காந்துர்ந்தவங்கள்ல யாரு எழுந்திரிச்சுப் போறான்னு கவனிச்சுட்டு இருந்துட்டுக் காலியான நாற்காலியைக் கபால்ன்னு கவ்விட்டு வர வேண்டியதாப் போச்சு.

அடுத்த வருஷத்துக்கான புகைப்படக் கண்காட்சி இந்தியத் தலை நகர்ல நடக்கப் போவுதாம். துண்டு போட்டு இடம் புடிக்க ரெடியா இருந்துக்கோங்க. அதுக்கு அடுத்த வருஷம் அதாவது 2014-ல் மறுபடியும் மும்பை வருதாம்.


LinkWithin

Related Posts with Thumbnails