Saturday, 29 December 2012

நட்சத்திரங்களின் வழிநடத்தல்..

காரியங்களைச் சாதித்துக் கொள்ளும்போது மட்டுமல்ல எல்லாப் பொழுதுகளிலும் செலுத்தப்படுவதே அன்பு.

வலியைவிட வலிக்குமே என்ற உணர்வுதான் அதிகமான வலியைத்தருகிறது.

இராக்கால ஒற்றையடிப்பாதையாயினும் நட்சத்திரங்களின் கீற்றொளியே போதுமானதாகி விடுகிறது தன்னம்பிக்கை உடையவனுக்கு.

நாம் தேர்ந்தெடுப்பவையும் நம்மைத்தேர்ந்தெடுப்பவையும் நம் வாழ்வின் போக்கைத் தேர்ந்தெடுக்கின்றன.

சினம் ஒரு நெருப்பு என்பது பேருண்மை என்று ஒத்துக்கொள்கிறோம், சூடு பட்டபின்.

ஏதாவதொரு நல்ல நோக்கத்துடன் வாழ்ந்து அதில் வெற்றியடைவதே நம் வாழ்வியல் நோக்கமாக இருக்கட்டும்.

கையிலிருப்பதை விட கை நழுவிச்சென்று விட்டவற்றைப்பற்றியே வருத்தப்பட்டு, இறுதியில் இருப்பதுவும் நழுவுவதை அறியாதவர்களாகிறோம்.

சின்னப்பூக்கள் ஒன்று சேர்ந்து உருவாகும் பூங்கொத்தாய் மணக்கிறது வாழ்க்கை சின்னச்சின்ன முடிச்சுகளில் ஒளிந்திருக்கும் சந்தோஷங்களால்.

ஆடிக்கொண்டேயிருக்கிறது தராசுமுள் சில சமயங்களில், மனசாட்சிக்கும் செயலுக்கும் இடையில்.

நம்மை மீறிச்சென்று விட்ட விஷயங்களைப்பற்றி வீணே கவலைப்படுவதை விட அதை எவ்விதத்திலாவது சரி செய்ய இயலுமாவென்று முயலுவது மேலானது.

Thursday, 27 December 2012

முத்தான மூன்று..

நேற்றுத்தான் ஆரம்பித்தது போலிருக்கிறது. அதற்குள் மூன்று வருடங்கள் முடிந்து விட்டன ப்ளாக் எழுத ஆரம்பித்து. புத்தாண்டையும் ஏசுபிரான் பிறந்தநாளையும் கொண்டாடுபவர்களுக்கு மட்டுமல்ல. என் ப்ளாகுக்கும் இது கொண்டாட்டக் காலம்தான் :-) ஆகவே கேக் எடுங்கள்.. கொண்டாடுங்கள் :-))
பேஸ்புக்கில் நண்பர் மெர்வின் அன்டோ நடத்தி வரும் புகைப்படப் பிரியன் குழுவில் வாராவாரம் நடக்கும் போட்டிகளில் "ரயில் மற்றும் ரயில் பயணங்கள்" என்ற தலைப்பில் நடந்த போட்டியில் கலந்து கொண்ட இந்தப்படம் முத்துகள் பத்தில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாதமிருமுறை வெளிவரும் இன் அண்ட் அவுட் சென்னை இதழில் நான் எழுதிய அட்சிங்கு.. என்ற சிறுகதை வெளியாகியிருக்கிறது. இதழாளர்களுக்கு என் நன்றி உரித்தாகுக..
கேக்கைச் சுவைத்துக்கொண்டே ரயிலில் அமர்ந்து சிறுகதையை வாசியுங்கள் :-))

இத்தனை வருடங்களாக என் எழுத்தை வாசித்துப் பின்னூட்டி உற்சாகமும் ஆதரவும் கொடுத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday, 20 December 2012

ஒன்றும் ஆயிரமும்..


'சும்மா ஒரு வார்த்தையை மட்டும் சொல்லி முடித்து விடுகிறேன்'என்று சொல்லி ஆரம்பிப்பவர்கள் ஒரு பேருரையையே நிகழ்த்தி விடுகிறார்கள்.

கனிகளைத் தராத மரத்தைக் கடிந்து கொள்கிறோம், அதன் வேரில் வெந்நீரை ஊற்றி விட்டு.

பிறர் நம்மீதோ நாம் பிறர் மீதோ வைத்திருக்கும் முழுநம்பிக்கையை இழக்க ஒரு நொடி போதும். அதை மீண்டும் பெறுவதற்கோ ஒரு பிறவி கூடப் போதாமலாகி விடுகிறது சில சமயங்களில்.

பகையை வளர்க்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் முறிக்க  சகிப்புத்தன்மையுடன் கூடிய விட்டுக்கொடுத்தல் எனும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.

எதிரிகளாக இருப்பவர்கள் திடீரென்று புகழ ஆரம்பிப்பதும், நண்பர்களாக இருப்பவர்கள் காரணமில்லாமல் விலக ஆரம்பிப்பதும் அதற்குப்பின்னால் ஏதேனும் இருக்குமோ என்று யோசிக்கத்தூண்டுகிறது.

வாதத்தை விட விதண்டாவாதத்தையே பலரும் பிறரைப் பணியச்செய்யும் வழியாகக் கைக்கொள்கின்றனர்.

கடந்தகாலக் கசப்புகளை மறக்க முயல்வதே எதிர்கால சந்தோஷங்களுக்கான திறவுகோல்.

ஒருவரின் தவறை மன்னிக்கிறோமென்றால் அத்தவறை முழுவதுமாக மறந்தும் விடுவதே நல்லது.

பொக்கிஷங்களைத் தொலைத்துவிட்டு வெறும்பெட்டியைக் காவல் காக்கிறோம் பல சமயங்களில்.

சொல்வதைவிட ஏற்று நடப்பதுதான் கடினமாக இருக்கிறது அறிவுரைகளைப் பொறுத்தமட்டில்.

Monday, 17 December 2012

“ஐயய்யோ.. என் வீட்டைக்காணோம்..”


குழந்தைகளின் படிப்பை முன்னிட்டு நிரந்தர வீட்டை விட்டு தற்காலிகக் குடியிருப்பு தேடிய போது, இந்த வீட்டைப் பார்த்ததுமே பிடித்துப்போனதற்கு ஹாலுக்கப்பால் புல்வெளி, புல்வெளிக்கப்பால் மரம், செடி, கொடிகள், பறவைகள் மண்டிக்கிடந்த மனை, மனைக்கப்பால் காற்றின் வழியைத் தடைசெய்யாத உயரம் குறைந்த குடியிருப்புகள், குடியிருப்புகளுக்கப்பால் பாலருவி வழிந்து கொண்டிருந்த மரகதமலையும் ஒரு காரணம். கோடைக்காலத்தில் மரகதத்தை அடகு வைத்து விட்டு மூளியாய் நின்றிருக்கும் மலைக்கு, வருணக்கணவன் வந்ததும் அதை மீட்டுக் கொடுப்பது வருடாவருடம் நடக்கும் கூத்து.

தினமும் காலையில் பல குரல்களில் பாடித் திருப்பள்ளியெழுப்பும் பறவைகள் கூட்டம். குடியிருப்பின் புல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் நேரத்துக்குக் கரெக்டாக அந்தப்பக்கம் வந்து ஆஜர் கொடுக்கும் மைனாக்களைக்கண்டதும் சீனியர்களைக்கண்ட ஜூனியர்களைப்போல் அலறியடித்துக்கொண்டு புறாக்கள் இந்தப்பக்கம் பறந்து விடும். தண்ணீரில் விளையாட வரும் குருவிகள், தென்னை மரக்கிளையில் அமர்த்தலாக உட்கார்ந்து கொண்டு ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் காகங்கள் என்று லூட்டிக்குப் பஞ்சமிருக்காது. இவர்கள் அடிக்கும் கொட்டத்தினிடையே பக்கத்துக்குடியிருப்பிலிருந்து கூண்டுக்கிளியொன்றின் கதறல் ஒலியும் விட்டுவிட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும்.
கம்பிகளுக்கப்பால்..
இப்படியான ஒரு காலைப்பொழுதில்தான் டுவ்வீக்.. டுவ்வீக்.. என்றொரு வித்தியாசமான பறவைக்குரல். எங்கிருந்து வருகிறதென்று அனுமானிக்க முடியவில்லை. அதேசமயம், பக்கத்து மனையில் மண்டிக்கிடந்த புதரில் ஆங்காங்கே அசைவுகள், திடீரென ஒரு சின்னஞ்சிறிய உருவத்தின் தாவல்கள் தென்பட்டன. ஒன்று.. இரண்டு.. நாலைந்து ஜோடிகள் இருக்கலாம். அன்று முழுவதும் காத்திருந்தும் தரிசனம் கிடைக்கவில்லை.

ஒரு வாரம் சென்றிருக்கலாம். சோம்பலான ஒரு மதிய வேளை. எதேச்சையாக வெளியே பார்த்தால் குடியிருப்பின் காம்பவுண்டுச்சுவரில் குருவிக்கூட்டம் ஒன்று உட்கார்ந்திருந்தது. உட்கார்ந்திருந்தது என்றா சொன்னேன்?. ஒரு நிமிஷம் கூட சேர்ந்தாற்போல் உட்காரவில்லை. அங்குமிங்கும் தாவுவதும், தள்ளிப்போய் உட்கார்ந்திருக்கும் தன்னுடைய இணையின் அருகே போய் உட்கார்ந்து கொள்வதும், யாராவது வருவதுபோல் தெரிந்தால், சட்டென மதிலுக்கு அந்தப்பக்கம் இருக்கும் ஆமணக்குச் செடியின் இலை மறைவில் மறைந்து கொள்வதுமாக ஒரே சேட்டை. பார்த்தால் சாதாரணக் குருவிகள் மாதிரியும் தெரியவில்லை. தலைக்குக் கறுப்புத்தொப்பி வேறு போட்டுக்கொண்டிருந்தன. வீட்டிலிருந்து கீழிறங்கிப்போய்ப் பார்ப்பதற்குள் பறந்தாலும் பறந்து விடும். எடு காமிராவை. ஜும் செய்து பார்த்தால்… ஹைய்யோ!!. “புல்புல்”. சமீப வருடங்களில் பார்த்ததில்லை. இந்த வருடம்தான் புதுவரவு போலிருக்கிறது.
அடித்த காற்றில் ஃபோகஸ் பறந்துவிட்டது. பொறுத்தருள்க :-)
சில நாட்கள் பொறுமையாகக் கவனித்ததில் தினமும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. ஒரு நாள் கொஞ்சம் அரிசி மணிகளைக்கொண்டு போய் அவைகள் வழக்கமாக உட்காருமிடத்தில் போட்டு விட்டுக் கொஞ்சம் தள்ளிப்போய் காமிராவுடன் நின்று கொண்டேன். வந்து உட்கார்ந்தவை சுதாரிக்குமுன் சுட்டுத்தள்ளினேன்.

புல்புல்கள் அந்த மனைக்குக் கிட்டத்தட்ட பட்டா போடாத சொந்தக்காரர்கள் ஆகிவிட்டன என்றே சொல்லலாம். குடியும் குடித்தனமுமாக சொந்தபந்தம் சூழ வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தன. ஒரு மழைத்துளி விழுந்தாலும் போதும். சட்டென ஆமணக்கு இலைக்குடைக்குள் பாதுகாப்பாக உட்கார்ந்து கொள்ளும். மழை விட்டதும் வெளியே வந்து சுவரில் உட்கார்ந்து பொழுதைப்போக்கும். ரொம்பவே கூச்சசுபாவமுடையவை. கொஞ்சம் தொலைவில் ஆள் நடமாட்டம் தெரிந்தாலே “புடிக்க வர்றாங்க.. ஓடிக்கோ” என்பதுபோல் சரேலென்று மறைந்து விடும். மழைக்காலத்தைக் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருந்தன. காலையிலும் மாலையிலும் வழக்கமான நேரத்தில் வந்து விடுவார்கள். வந்து விட்டேன் என்று அறிவிப்பதைப்போல் “டுவீக்..டுவீக்” என்று குரலெழுப்பிக்கொண்டே தோட்டம் முழுக்கச் சுற்றிப் பார்வையிட்டு விட்டு, அரைமணி நேரம்போல் விளையாடிவிட்டுச் சென்று விடுவார்கள்.
படம் மீள்பதிவு :-)
மழைக்காலம் முடிந்து பச்சைப்பசேல் புற்களெல்லாம் காய்ந்து காவி அணியத்துவங்கியிருந்த சமயம். தினமும் இரவில் காய்ந்த புற்களைத் தீக்குத்தின்னக்கொடுக்கும் படலம் ஆரம்பமாகியிருந்தது. இதுவும் வருடாவருடம் நடப்பதுதான். அதன்பின் இயந்திரங்களைக்கொண்டு வந்து ஓரளவு செடி செத்தைகளையெல்லாம் அகற்றி, தரையைச் சமன்படுத்துவார்கள் எதிரிலிருக்கும் திருமண மண்டபத்துக்காரர்கள். இல்லாவிட்டால் திருமணத்திற்கு வருபவர்கள் வாகனங்களை எங்கே நிறுத்துவதாம்? கோடிக்கணக்கில் காசு கொடுத்து வாங்கிய இடத்தை உரிமையாளர் சும்மா போட்டு வைப்பாரா என்ன?

இந்த அலங்காரங்களெல்லாம் முடிந்த ஒரு சாயந்திர வேளை. வழக்கம்போல் விசிட்டுக்கு வந்த புல்புல் வித்தியாசத்தை உணர்ந்து திணறியது.. தடுமாறியது. “கிணத்தைக் காணோம்..” என்று கூப்பாடு போட்ட வடிவேலுவைப்போல் “ஐயய்யோ.. என் வீட்டைக்காணோம்..” என்று அதன் மொழியில் டுவ்வீக்.. டுவ்வீக் என்று அலறியபடியே சுவரில், ஒரு காலத்தில் அதன் இருப்பிடமாயிருந்த ஆமணக்குச்செடியின் மொட்டைக்கொம்புகளில், அருகிருந்த மரக்கிளையில் என்று தாவித்தாவி அமர்ந்து அலைபாய்ந்தது. அந்த இடத்தின் மேலாகப் பறந்து பறந்து தேடியது. பின் சென்று விட்டது.

குடியிருக்கும் வீட்டைப் பறிகொடுப்பதைப் போன்ற துயரம் எதுவுமே கிடையாது. நம்முடைய சுகங்கள், துக்கங்கள், வறுமை, சந்தோஷம், செல்வச்செழிப்பு எல்லாவற்றையுமே தனதாக்கிக்கொள்ளும் ஒரு நட்பு அது. செங்கல் சிமெண்டுடன் நம் உயிரையும் சேர்த்தல்லவா பிணைத்துக்கொண்டு அது நிற்கிறது. ‘எது இருக்கிறதோ இல்லையோ தலைக்கு மேல் சொந்தமாக ஒரு கூரை இருந்தால் அதுவே போதும்’ என்பதே நிறையப்பேரின் தாரகமந்திரமாகவும் இருக்கிறது என்பதற்குப் பெருகி வரும் வீட்டு விளம்பரங்களே சாட்சி. குடியிருந்த குடிசையைத் தீவிபத்தில் தொலைத்து விட்டு ஓரிரவில் நடுத்தெருவுக்கு வரும் மக்களின் துயரமோ சொல்லவொண்ணாதது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தனக்கென்று ஓர் கூரை இருக்கிறதென்ற நிறைவுதானே மனிதனை அத்தனையையும் தாங்கச்செய்து, நிம்மதியான உறக்கத்தை இரவில் பரிசளிக்கிறது.

அதன்பின் இரண்டொரு நாட்கள் காலையிலும் மாலையிலும் பக்கத்து மனையில் டுவ்வீக்.. டுவ்வீக் என்ற கதறல் கேட்டபடியே இருந்தது. தன்னுடைய இருப்பிடம் மறுபடியும் கிடைத்துவிடுமென்ற நப்பாசையில் வந்திருக்குமோ என்னவோ. அதன்பின் காணாமலே போயிற்று.

ஒரு நாள் சாயந்திரம் அந்தக்காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தன மீசை முளைத்த சில இளம்பறவைகள்..

Friday, 7 December 2012

இது அவங்க ஏரியா..

சாப்பிடவும் ஒலி எழுப்பவும் வாய் இருந்தாலும், மனிதர்களைப்போல் பேச முடியாத காரணத்தினாலேயே விலங்குகளை வாயில்லாப்பிராணிகள் என்று குறிப்பிடுகிறோம். மனிதர்களிலும் கூட மனதில் நினைப்பதை வெளியே கூறும் துணிச்சல் இல்லாதவர்களையும் அந்தப்பெயரிலேயே அழைப்பது வேறு விஷயம் :-)

மனிதனை விட விலங்குகள் என்னதான் புத்தி கூர்மையானவை என்று சொல்லப்பட்டாலும் மனிதன் தந்திரமாக அவைகளையெல்லாம் அடக்கி ஆண்டு விடுகிறான். ஒரு மரத்தையே முறித்துப்போடும் வலிமையுள்ள யானை ஒரு சிறு இரும்புச்சங்கிலிக்குக் கட்டுப்பட்டு ஐந்துக்கும் பத்துக்கும் கையேந்தும் கொடுமையே இதற்குச் சான்று.

கண்ணில் அகப்பட்ட ஒரு சில மிருகங்களை இங்கே கட்டிப்போடாமல் சுதந்திரமாக விட்டு வைத்திருக்கிறேன். அவைகளைத் தொந்தரவு செய்யாமல் பார்த்து ரசியுங்கள். அனுமதிக்கட்டணம் கிடையாது :-)

இன்னிக்காவது வாழைப்பழமும் தேங்காயும் கிடைக்குமா?
ரெண்டு செகண்டுதான் அசையாமல் நிற்பேன். போட்டோ பிடிச்சுக்கோ
அல்லோ.. எச்சூஸ் மீ. இது எங்களுக்கு லஞ்ச் டைம்.
சிந்தனை செய் மனமே.. 

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ்ல கலந்துக்கறதுக்கு பயிற்சி எடுத்திட்டிருக்கேன்..
அம்மாவைக்காணோம்.. 
கண்ணா.. முறுக்கு தின்ன ஆசையா :-)
போனி டெயில் இப்ப ஃபாஷன் இல்லையாம். அதான் லூஸ்ல விட்டுட்டேன் :-)
பாவம் போல் ஒரு பார்வை..
அடுத்த ரவுண்டுக்கு ரெடியா இருக்கறவங்கல்லாம் சட்டுன்னு வாங்க. போலாம் ரைட்ட்ட்..

Tuesday, 4 December 2012

மம்மியைப்பார்க்கப்போனோம்..


ஏதோ இப்பவாவது எங்களுக்கெல்லாம் தரிசனம் கொடுக்க வேண்டுமென்று தோன்றியதே.. நம்மூருக்கு வந்தவங்களை நாம் போய்ப் பார்க்கவில்லையென்றால் எப்படி? வயதில் நம்மை விட மூத்தவர்களாக இருந்தால் நாம் நேரில் போய்ப்பார்ப்பதுதானே மரியாதை. அதுவும் எங்களையெல்லாம் விட 3000 வருஷம் வயதில் பெரியவர்களாகப் போய் விட்டார்கள். பார்த்து விட்டு வருவோமென்று நானும் பெண்ணும் பெண்ணின் தோழியுமாகக் கிளம்புனோம். :-)
எங்களூர் மியூசியத்தில்தான் இப்போது தற்காலிக வாசம். போன மாதம் அதாவது நவம்பர் 21-ம் தேதியன்று வந்தார்கள். அடுத்த வருஷம் மார்ச் 24-ம் தேதி வரைக்கும்(இந்த டிசம்பர் 21-ம் தேதி உலகம் அழிஞ்சுராம இருந்தா) இங்கேதான் ஜாகை. மும்பையில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இப்ப இதுவும் சேர்ந்து விட்டது. நாலைந்து மம்மிகளும் கூடவே அவர்களுக்குண்டான பொருட்களுமாக மியூசியத்தின் முதல் மாடியில் நல்லாவே செட்டிலாகி விட்டார்கள்.

வேல்ஸ் மியூசியமென்று முன்னாளிலும் சிவாஜி வஸ்து சங்க்ரஹாலயா என்று இன்னாளிலும் அழைக்கப்படும் இந்த மியூசியத்திற்கு மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்திலிருந்தோ அல்லது சர்ச் கேட் ரயில் நிலையத்திலிருந்தோ பொடி நடையாகவே போய்ச்சேரலாம். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் இடது கைப்பக்கமாக போய்க்கொண்டே இருந்தால் மும்பையின் புகழ் பெற்ற ஃப்ளோரா ஃபவுண்டனுக்கு அடுத்தபடியாக மியூசியத்தின் வாசலில்தான் நம் கால்கள் சென்று நிற்கும். மியூசியத்தைத் தொட்டடுத்துதான் ஜஹாங்கீர் ஆர்ட் காலரி இருக்கிறது.

இந்தக்கண்காட்சியைப் பார்ப்பதற்கென்று தனியா ஏதும் அனுமதிச்சீட்டு வாங்க வேண்டியதில்லை. மியூசியத்தைச் சுற்றிப்பார்ப்பதற்காக மாணவர்களிடம் 20, பொதுமக்களிடம் 50, வெளி நாட்டினரிடம் 300 ரூபாய்கள் வசூலிக்கிறார்கள். மாணவர்கள் தங்களோட ஐ.டி கார்டை கூடவே கொண்டு வரவேண்டியது அவசியம். நம்ம நாட்டைப்பத்தித் தெரிந்து கொள்ள ஆவலோடு வரும் வெளிநாட்டுக்காரர்கள் கிட்டே கூடுதல் காசு வசூலிப்பதுதான் கொஞ்சம் இடிக்குது. இவ்ளோ அதிகத் தொகை வசூலித்தால் வருபவர்கள் வாசலோடு போய்விட மாட்டார்களா?.. 

நாம் கொண்டு செல்லும் பைகள் எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து விட்டு, உள்ளே அனுப்புகிறார்கள். தண்ணீர் பாட்டில்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. பிடுங்கிப்போட்டுக்கொண்டு டோக்கனைத்தந்து அனுப்புகிறார்கள். 

மியூசியத்தின் முன்பகுதியிலேயே 3D காட்சி நடக்கிறது. உள்ளே இருக்கும் மம்மியை அதன் கட்டுகளைப்பிரிக்காமலேயே சிடி ஸ்கேன்,எக்ஸ்ரே, எல்லாம் செய்து அதன் ரகசியங்களைக் கண்டறிந்து நமக்கு விளக்கிச்சொல்கிறார்கள். மம்மியை வைத்திருக்கும் மரப்பெட்டியின் மேல் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளை வைத்து அதன் பெயர், குடும்பத்தகவல்கள் போன்ற எல்லாவற்றையும் கண்டறிந்து விளக்குகிறார்கள். இந்த ஷோவைப் பார்த்து விட்டு அப்புறம் கண்காட்சியைப் பார்க்கப்போனால் இன்னும் கூடுதலாக விளங்கிக் கொள்ளலாம்.

முதல் மாடியில் மம்மிகள் இருக்கும் இடத்துக்குப் போனதுமே படமெடுக்க அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்கள். ஆனால் மியூசியத்தில் மற்ற பகுதிகளைச் சுற்றிப்பார்க்கும்போது படம் எடுத்துக்கொள்ளலாம். மொபைல் காமிராவுக்கு 20, ஸ்டில் காமிராவுக்கு 200 மற்றும் வீடியோ காமிராவுக்கு 1000 ரூபாய்கள் வசூலிக்கப்படுகிறது. ஃப்ளாஷுக்கும், ட்ரை பாடுக்கும் அனுமதியில்லை. மற்றபடி தாராளமாக வளைத்து வளைத்துச் சுட்டுக்கொள்ளலாம். காமிராவுக்கு அனுமதிச்சீட்டு வாங்கியதும் அதை ஒரு நூலில் இணைத்து காமிராவிலேயே கட்டித்தொங்க விட்டு விடுகிறார்கள். மணிக்கட்டிலும் சின்னதாக ஃபோட்டோ பாஸ் என்று எழுதப்பட்ட ஒரு பாண்டேஜைக் கட்டி விடுகிறார்கள். ஒவ்வொருத்தரா போட்டோவுக்கு பாஸ் எடுத்துருக்கீங்களா என்று கேட்டுக்கொண்டிருக்க தேவையில்லாமல் காமிராவையும் கையையும் பார்த்ததுமே விலகி வழி விடுகிறார்கள்.

மம்மிகளெல்லாம் பாவம்போல் படுத்திருக்கிறார்கள். போரடித்தால் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளக்கூட முடியாதபடி அவர்களது உடம்போடு வாயையும் சேர்த்து துணியால் பொதிந்து வைத்திருக்கிறார்கள்.  :-) மொத்தம் நான்கு மம்மிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களுமாக கண்காட்சியில் இடம் பெற்றிருக்கின்றன. மம்மிஃபையிங் என்று சொல்லப்படும் முறையில், மூளையை மூக்கு வழியாக வெளியே இழுக்க உபயோகப்படுத்தப்படும் கருவிகள் முதற்கொண்டு சில ஒரிஜினல்களும் பல மாதிரிகளுமாகப் பொருட்கள் இடம் பெற்றிருக்கின்றன. மற்ற மம்மிகளெல்லாம் காபினில் சமர்த்தாகப் படுத்துக்கொண்டிருக்க,, காற்றாட வெளியே வந்து படுத்திருந்த, வெறுமே பாண்டேஜ் துணியால் சுற்றப்பட்ட மம்மி ஒன்றை நம் கண்ணெதிரே பார்ப்பது விசித்திரமான அனுபவம்தான். 

இங்கே இருக்கும் மம்மிகள் அனைத்தும் லண்டனிலிருக்கும் பிரிட்டிஷ் மியூசியத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை. பொதுவா இந்தியாவில் ஆங்காங்கே மியூசியங்களில் மம்மிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், எகிப்திலிருந்து, அதுவும் பிரமிடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரிஜினல் மம்மிகள் இந்தியாவுக்கு வருவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. அந்த வகையில் அதைப்பார்வையிட்ட நாங்களும் வரலாற்றில் இடம் பிடித்தோம்.

இங்கே இருக்கும் மம்மிகளில் “நெஸ்பரனூ”வின் மம்மி குறிப்பிடத்தகுந்தது. இதன் ரகசியங்களைத்தான் பல்வேறு தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்தி வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்தப்படம் இணையத்தின் நன்கொடை..
“நெஸ்பரனூவும் அவரது தந்தையும் கார்னாக் கோயிலில் பூசாரிகளாக இருந்தவர்கள். சுமார் ஐம்பது வயதில், அதுவும் ப்ரெயின் ட்யூமர் காரணமாக நெஸ்பரனூ இறந்திருக்கக்கூடும். என்று அறியப்படுகிறது. இந்த மம்மியில் வெகு நாட்களாகக் யாருமறியாமல் இருந்த ஒரு சுவாரஸ்யமான ரகசியம் கண்டறியப்பட்டிருக்கிறது.

பொதுவாக மம்மிகளை அடுத்த உலகத்திற்கான வாழ்க்கைக்காகத் தயார் செய்யும்போது சில பொருட்களையும் மந்திரச்சொற்களையும், மந்திரசக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் சில படங்களையும் அதனுடன் வைத்து மூடுவது வழக்கம். இதனுடன் கூடுதலாக நெஸ்பரனூவின் தலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு களிமண் கிண்ணம் ஆராய்ச்சியின்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதை வைக்கும் சம்பிரதாயம் கிடையாதே என்று விவாதித்து அலசும் வேளையில்தான் ஒரு உண்மையைக் கண்டறிந்தார்கள்.

அதாவது, உடலைப் பதப்படுத்தும்போது ஒரு விதப் பசையை உடல் முழுக்கப் பூசி விடுவது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் மூளையை வெளியே எடுத்தபின் தலைப்பகுதியில் பூசும்போது அதிகப்படியான பசை வழிந்து தேங்குவதற்கு ஏதுவாக தலைக்கடியில் களிமண் கிண்ணம் ஒன்றை வைத்தவர்கள் அதை எடுக்க மறந்து விட்டார்கள். ஞாபகம் வந்து அதை எடுக்க முயற்சித்தபோது அது நன்றாக ஒட்டிகொண்டு விட்டது. இப்போது என்ன செய்வதென்று குழம்பிய அவர்கள், பிறர் தன்னுடைய தப்பைக் கண்டுபிடித்து விடுமுன் மளமளவென்று பாண்டேஜ்களைச் சுற்றி வைத்து விட்டார்கள். இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக புதைந்து கிடந்த இந்த ரகசியம் இப்போதுதான் வெளியாகியிருக்கிறது.

நாங்கள் கண்காட்சியைச் சுற்றிப்பார்த்து முடிக்கும்போது மாலை மணி ஆறு ஆகிவிட்டது. மியூசியம் மூடப்படும் நேரம். அனேகமாக மியூசியம் மொத்தமுமாக அங்கிருந்த கடைசி பத்து ஆட்களில் நாங்களும் அடக்கம். குழந்தைகளுக்கானால் இன்னும் பார்த்துத்தீரவில்லை. அந்த அரையிருட்டுச் சூழ்நிலையில் வெறுமே பாண்டேஜால் சுற்றப்பட்ட அந்த மம்மி, லேசானதொரு அமானுஷ்ய உணர்வைத்தூண்டியதென்னவோ நிஜம். 

“நாம உள்ளே இருக்கறதைக் கவனிக்காம வெச்சுப்பூட்டிட்டுப் போயிட்டாங்க, ராத்திரியானதும் மம்மிகளுக்கெல்லாம் உயிர் வந்துருதுன்னு வெச்சுக்குவோம். என்னவாகும்?” என்று ஒரு பிட்டைப்போட்டேன்.

“என்னாகும்,.. அதுகளை உக்கார வெச்சு விடிய விடிய கதை பேசுவோம்.”ன்னு கோரசா பதில் வந்தது. நிறைய இடுகைகளுக்கு ஐடியா கிடைக்கும் போலிருக்கே :-)

LinkWithin

Related Posts with Thumbnails