Showing posts with label வெண்பா. Show all posts
Showing posts with label வெண்பா. Show all posts

Wednesday, 1 July 2026

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா - அமுதசுரபியில் வெளியானது

அமுதசுரபி இதழில் ஜூலை மாத வெண்பாப்போட்டிக்கான ஈற்றடியை பாவலர் கருமலைத் தமிழாழன் வழங்கியிருந்தார். "உழைப்பே தரும்நல் உயர்வு" என்ற அந்த ஈற்றடிக்கான வெண்பாக்களில் நான் எழுதிய வெண்பாவும் தேர்வாகி பிரசுரமாகியிருக்கிறது. 

தேர்வாகி பிரசுரமான வெண்பாவைத்தவிர, அதே ஈற்றடிக்கு நான் எழுதிய மேலும் சில வெண்பாக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு:

கல்லாமை நீக்கிக் கருத்தூன்றி நாளும்நற்
சொல்லாளன் போலவே சொல்லெடு- நல்லாய்
விழைவொடு நாள்தொறும் வீறுகொண்டு கற்பாய்
உழைப்பே தரும்நல் உயர்வு

ஊழைநம்பிச் சோம்பி உலோபர்பின் ஏகாதோர்
கூழைபோல் கும்பிட்டுக் கோராதோர் - வாழி
தழைத்திடச் செய்யும் தகவோர்க்கு என்றும்
உழைப்பே தரும்நல் உயர்வு

நற்பேறு நாளும் நடைவந்து நிற்காது
பொற்பேறாம் நற்செயல் பூணுக - மற்றோ
பிழைக்க வழிகண்டு பேறுகள் காண்பாய் 
உழைப்பே தரும்நல் உயர்வு.

சோம்பல் களைந்து சுறுசுறுப்பாய் நாளும்நாம்
ஆம்பல் மலராய் அகமலர்ந்(து) — ஓம்பும்
விழைவு கருதி விவேகமாய் ஆற்றும்
உழைப்பே தரும்நல் உயர்வு.

Wednesday, 3 June 2026

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா - அமுதசுரபியில் வெளியானது

அமுதசுரபி இதழில் ஜூன் மாத வெண்பாப்போட்டிக்கான ஈற்றடியை புலவர் சித்தாந்த ரத்தினம் ராமச்சந்திரன் வழங்கியிருந்தார். "நன்றே வருமென்று நம்பு" என்ற அந்த ஈற்றடிக்கான வெண்பாக்களில் நான் எழுதிய வெண்பாவும் தேர்வாகி பிரசுரமாகியிருக்கிறது. 


பிரசுரமான வெண்பாவைத்தவிர அதே ஈற்றடிக்கு எழுதிய மேலும் சில வெண்பாக்கள் உங்கள் பார்வைக்கு.

தளர்ந்து விடாதே தனித்துநின்ற போதும்
கிளர்ந்து எழுக களத்தில்- இளநெஞ்சே
குன்றாத ஊக்கம் குறிக்கோள் எனக்கொண்டால்
நன்றே வருமென்று நம்பு.

சென்ற வினைபோகச் சிந்தை தெளிவடைந்து
நின்ற நிலைதன்னில் நேர்படுக - நன்றுள
குன்றோன் துணையிருக்கக் கேடில்லை எந்நாளும்
நன்றே வருமென்று நம்பு.

கன்றிய துன்பம் களைந்து கவலைநீக்கி
என்றுமே இன்பம் இயையுமே - பொன்றாத
அன்பே அரணாக ஆக்கி அகமகிழ்ந்து
நன்றே வருமென்று நம்பு.

பொன்னே எனப்பொழுதைப் போக்காது நற்செயலில் 
தன்னையே தந்து தடையின்றி - முன்னின்று 
நின்றே உழைக்க நிலைகாணும் நல்வாழ்வு 
நன்றே வருமென்று நம்பு.

Saturday, 30 May 2026

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா - அமுதசுரபியில் வெளியானது

இதே ஈற்றடிக்கு எழுதிய இன்னும் சில பாக்களுடன் பிரசுரமான வெண்பாவும்..

பொன்னிறக் காலைப் பொழுதும் பொலிவான
கன்னல் நிகர்த்த கிளிமொழியும் - வன்னமிகு
அன்னத் திரளும் அடர்வனமும் சூழ்ந்திட
என்னே இயற்கை எழில்.

பச்சை வயலும் பனிமுகில் சூழ்மலையும்
இச்சை தரும்பூ வினங்களும் - நச்சியே
கொன்றை பொலிவதைக் கண்ணாரக் காணீரோ
என்னே இயற்கை எழில்.

வெள்ளி அருவி விரிந்து விழப்பொழிந்து
துள்ளி வருமே துணையுடனே - தெள்ளிய
அன்னம் அசைந்து அலைமேல் மிதக்குதே
என்னே இயற்கை எழில்.

கானப் புனலும் கதிரவன் பொன்னொளியும்
வானவில் ஏற்றிய வண்ணமும் - வானோங்கி
தென்னையும் புன்னையும் தானுயர்ந்து நோக்கிட
என்னே இயற்கை எழில்.

மின்னும் பனிமலை மேவிய புல்வெளியில்
மின்மினிப் பூஞ்செறிவு முன்றிலாய்- நன்றாக
முன்னே விரிந்த முழுமை யினைக்காண
என்னே இயற்கை எழில்.

வெண்பாவை வெளியிட்ட அமுதசுரபி இதழுக்கு நன்றி.

Friday, 28 November 2025

படமும் பாடலும் (10 )

சொன்னால் விலகுவாரும் சொக்கிச் சுவைப்பரே
இன்சுவையும் சூடும் இளநுரையும் நன்றாமே
பொன்நிகர் அப்பமுடன் பச்சி பகராதோ
மன்னுபுகழ் காபியின் மன்

உன்னதம் காணவென உள்ளத்தால் உள்ளியது
நன்முத்தும் பொன்னும் நிறைக்காது ஏங்கியது
நின்றாடும் ஆசையால் நெஞ்சமிங்கு தேடியது
இன்னொரு காபி இனிது.
****************************************************************

கள்ளத்தால் வாழும் கடும்பாவி யோர்வாழ்வு
உள்ளத்தில் நோயாய் உருப்பெறும் - உள்ளபடி
இன்னயம் பேசாதோர் இல்தவிர்த்துச் செல்தலுடன்
நன்னயம் நாடாமை நன்று.
*********************************************************************
பொன்னலரி சென்னியோன் பொற்கழல் சூடுதல் மன்னுயிர் ஓதிய மாண்பிங்கு இன்னபிற உன்னதம் ஈதென ஊரார் உவப்பதெலாம் என்னென காண்கிலேன் யான் 
*********************************************************************


இலைபழுத்து வீழும் நிலையெள்ளு வோர்முன் 
அலைபொலியும் தண்பூ தலையால் - மலைவேந்த
சீரற்றோர் தாழார் சிலநாளில் மேலெழுவார்
ஆரக்கால் அஃதே உலகு.

Tuesday, 7 October 2025

படமும் பாடலும் (9)


எண்ணிய தெய்துவது எப்போவென் றேங்கியே
கண்ணில் மிதக்கும் கனவு


போஹாவும் மிக்சர் பழமும் கலந்துண்ண
ஆஹா அமிர்தம் இது.
***************************************************************



அன்னை பிழைத்தால் அவளுக்கு ஏச்சுண்டு
கன்னற் கனிமொழியாள் செய்யும் குறும்புகளோ
முன்னர் கடிதோச்சும் மூதன்னை பின்தணிந்து
அன்பை அளிப்பாள் அணைத்து.
**************************************************************************


குழைந்து கிடக்கும் குளமெலாம் ஊறும்
தழைகள் பொலிந்து துளிர்க்கும் - துழைஇ
குழைக்கும் உழவர்க் கினியதாம் நன்றாய்
மழையை அருந்திய மண்.
***************************************************************************
எட்டிநாம் நிற்பினும் அட்டியின்றிக் கண்பார்ப்பான் 
கிட்டே நெருங்கிடக் கட்டுண்டோ - இட்டமுடன் 
சட்டென சென்னிசூடிச் சிக்கெனப் பற்றுக
விட்டலன் பாதம் விடாது.


Tuesday, 31 December 2024

படமும் பாடலும் (8)



கயல்விழி ராதையொடு கோதையு முண்டு
குயில்மொழி ஆய்ச்சியர் காண்ப துயர்வாய்
மயலுற்ற னைத்தும் மதுசூதன் விட்டு
வயல்வெளியில் நின்றான் வளர்ந்து.
***********************************************************************

லேட்டாபால் வாரதினால் நாக்கேங்கு தேகாலை
லோட்டா நிறைகாப்பிக் கே.
*************************************************************************

கட்டுச்சோற் றுப்பொதிக்குக் கச்சிதமாய்த் தேர்வதில்
இட்லிக்கு உண்டோ இணை.

சுடச்சுடக் காபியுடன் இட்லியெனில் சொர்க்கம்
சடனாய் அருகே வரும்.

சட்னியொரு கண்ணெனில் சாம்பாரோ மற்றொன்றாம்
இட்டமெக் கண்ணெனச் செப்பு

பஞ்சுபோல் இட்லியைப் பாய்ந்துண்ணீர் நாளைகிட்டும்
மிஞ்சியமா தோசையாய் வார்த்து
*************************************************************************

ரசவடைக் கென்றே சுடினும் சபல
வசப்படின் எஞ்சுவ தேது.
****************************************************************************

வாயைக் கிளறவரும் வம்பரின் அன்பெலாம் மாயைதா னென்றே உணர்

**************************************************************************************

வீட்டுக் கிரண்டொரு வாகனம் உண்டாயின்
ரோட்டில் பெருகாதோ ஜாம்
*********************************************************************************

தங்கவளை கேட்டதும் தங்கவலை யெண்ணாது மங்காத ரத்னவளை மாட்டுகிறீர் பர்த்தாவே வாங்கிய வாங்கியை வாட்டியே இன்றேனும் பாங்காய்ச் சமைக்கிறேன் பாத்.

Thursday, 25 July 2024

படமும் பாடலும் (7)


வாலைப்பெண் கைக்குடம் வீழ்ந்துடைந்த நீர்பெருகி
சாலையோரம் மண்நனைத் தன்னதே மங்குல்
அலைவுற்று மீவெடித் தாசாரம் வீசி
மலைமூழ் குமருவி நீர்.
*******************************************************************

பெடையு மடையு மிடையூறு டைத்தாய்
அடைமழையில் கீச்சுங் கிளி.

******************************************************************

காழ்ப்பும் அழுக்காறுங் கொண்ட கலகத்தார்
வாழ்வையோ போமென செப்பு
********************************************************************

அனுபவங்க ளோடுரைக ளாகுமே யாசான்
அனுதினம் சென்னியணி வோம்.
(ஒருவிகற்பக் குறள் வெண்பா)
*********************************************************************

தனியாய்ப் புலம்புமெனைத் தேற்றுவாள் தாயும்
கனிவாய் அறுபடைக்குக் கந்தனாம் அண்ணன்
இனிதாய் அரசில் பனிமலையி லீசன்
தனித்தபின் நானுந் தனி.

P.C: Yadhavan Raghavan

Wednesday, 10 July 2024

படமும் பாடலும் (6)


பற்றுந் தளிரும் படருமி ளங்கொடியும்
முற்றும் பழுத்து முறிய விருப்பதுவும்
சாதல்வ ரையன்பு செய்வதே நாநிலத்தில்
காதலுக் கென்றும் சிறப்பு. 

(பல விகற்ப இன்னிசை வெண்பா)


நடைப்பயிற்சி ஜிம்மோடு நாளும் உழைத்தும்
எடைகுறையா சோகத்தில் ஏங்கி சடையா
தடைபல உண்டபினும் தீப்பசி கொல்ல
படைத்தாள் பனீர்புர்ஜி பாவ்

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

******************************************************

நுங்கிள நீருடன் நல்மோருந் தீஞ்சாறும்
பொங்குபுனல் முங்குதலு மாகுமே- நங்காய்கேள்
எங்கிலும் செய்யோன் எரிக்கும் சுடுகதிர்
தாங்க இவையே சிறப்பு

*****************************************************************


முன்கோபி மூத்த சினம்பெருக்கி யன்னதே
மன்றிலெ ரிக்கும் வெயில்
*********************************************************************


விழிபூத்துப் பல்லார் வகித்த பொறுதி
வழிகாட்ட சூறையாய் வந்ததே வான்நீர்
மழைத்தாரைப் பந்தலில் மும்பை மிதத்தல்
பழையநாள் தொட்டு வழக்கு.

Saturday, 6 May 2023

ஈற்றடிக்கு எழுதிய பாக்கள்.


துளிர்க்கும் முகையால் களிக்கும் களிறு
குளிர்பனி தூங்கி ஒளிமர மொத்த
தளிர்நிறை காவில் களியாடும் உள்ளத்(து)
ஒளியில் விரியும் உலகு

நெளிகயிறு பாம்போ விளிகுரல் பேயோ
இளிவரல் அஞ்சி ஒளிப்பர் கிலியை
தெளிந்த மனத்திற்குத் தீங்கில்லை உள்ளத்(து)
ஒளியில் விரியும் உலகு.

பிறப்பும் இறப்பும் பிறவியில் நேராம்
சிறப்பும் சறுக்கலும் அஃதே அறிவாய்
தெளிந்த மனத்திற்குத் தீங்கில்லை உள்ளத்(து)
ஒளியில் விரியும் உலகு.

கல்வி கெடுப்போன் கெடுமதி கொண்டோன்
கலப்பட ஔடதம் காய்கனி செய்வோனை
சற்றுமா ராயாமல் சுற்றம் பிழைப்போனை
எற்றோமற் றெற்றோமற் றெற்று.

குடிநீர் குலைப்பார் ஒருக்காரே குப்பை
மடிப்பிள்ளை பெண்ணெனில் மாய்த்திடும் பற்றிலர்
சற்று மறியா செழுமரம் சாய்ப்போரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று.

கச்சிதமாய் கூண்டிலிட்டு காய்பழ மும்வைத்து
மிச்சமீதி சேவை முடித்துத் திரும்புகையில்
நச்சென்று தாழ்ப்பாளும் நைத்தது கண்டு
கீச்சுக்கீச் சென்னும் கிளி.

இச்சகத்து னக்கோர் இணையுண்டோ வென்றவர்
அச்சமின்றிப் பொய்யுரைத்த அச்சிறு சச்சரவு
மிச்சமற்றுப் போமோ மயங்கி விடையற்று
கீச்சுக்கீச் சென்னும் கிளி.

Sunday, 24 April 2022

படமும் பாடலும் (5)

பறக்குந் திறனிருந்தும் பற்றுவிடாப் பட்சி
சிறகை மறந்து சடசடக்கும்- பற்றை
மறந்து விடுவீரேல் மாந்தர் அறிவீர்
சிறக்கும் பிறவி இனிது.

முறுகல் அடையும் மொளவாடி நெய்யும்
சுடச்சுட காப்பியொடு உண் (இருவிகற்ப குறள் வெண்பா)

சுவையுங் குறையாத சூடும் நுரையும்
அவையத்து காப்பிக் கழகு. (ஒரு விகற்ப குறள் வெண்பா)

இரட்டுற மொழிதல் - பஜ்ஜியும் முகிலும்
உருவு மருவும் உளங்கொளும் வண்ணம்
வருவழி யெண்ணி விழிபூத் திருக்கும்
மிருதாய் மிதக்கும் மெதுவாய்க் கருக்கும்
தருமுகில் பஜ்ஜிக்கு நேர். (ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

உருவம் மாற்றமடையும், மனதைக்கொள்ளை கொள்ளும் நிறம் கொண்டது, அது வரும் வழியை நோக்கி விழி பூக்க காத்திருப்போம், எண்ணெய்யில்  அல்லது வானத்தில் மிருதுவாக மிதக்கும், மெதுவாகக் கருநிறம் கொள்ளும். (கவனிக்காமல் விட்ட பஜ்ஜி கருகி விடும்)

ஆகவே மழையைத் தருகின்ற முகிலும் பஜ்ஜியும் ஒன்று.

அத்தனும் அம்மையும்போல் ஆதுரம் பாலித்து
புத்தியும் போதிக்கும் நற்குருவாம் நித்தமும்
பத்தம் பயனுரைக்கும் நண்ணுநர் நேரென
புத்தகம் போலிங்கு ஏது. (ஒரு விகற்ப இன்னிசை வெண்பா) உலக புத்தக தினத்திற்காக எழுதப்பட்டது.

Monday, 5 March 2018

படமும் பாடலும் - இரட்டுற மொழிதல்

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடையணி என்றும் அழைப்பர். ஒரு சொல் பிரிபடாமல் தனித்து நின்று பல பொருள் தருவது செம்மொழிச் சிலேடை என்றும், சொற்றொடர் பல வகையாகப் பிரிக்கப்பட்டுப் பல பொருள்களைத் தருவது பிரிமொழிச் சிலேடை என்றும் பெயர் பெறும். இரட்டுறமொழிதல் அணிப்படி எழுதப்பட்ட சில வெண்பாக்கள் இங்கே.


சீறிச் சினந்தெழும் சிந்தியதும் பின்வாங்கும்
ஊறில் மருந்தாம் உடலுக்கு வேறிலை
மாலுவந்த பள்ளி மணவழ கந்தரிக்கும் 
பாலுக்குப் பாம்பென ஓது (இரு விகற்ப இன்னிசை வெண்பா) 

விளக்கம்:

பால்-பொங்கி வரும்போது சினந்து சீறி வருவது போலிருக்கும். பொங்கிச் சிந்தி விட்டால் அடங்கி பாத்திரத்தில் பின் வாங்கி விடும். உடலுக்கு ஊறு விளைவிக்காத மருந்தாகவும் செயல்படுகிறது(கால்ஷியம் குறைபாடுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்). திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார். மணவழகரான சிவனோ அபிஷேகப்பொருளாகத் தரித்துக்கொள்கிறார். 

பாம்பு - சினங்கொண்டு சீறும், விஷத்தைச் சிந்தி விட்டால் ஆக்ரோஷம் அடங்கிப் பின்வாங்கி விடும். பாம்புக்கடிக்கு பாம்பின் விஷத்திலிருந்து மாற்று மருந்து பலபடியான சோதனைகளுப்பிறகு பெறப்படுகிறது. திருமால் பள்ளி கொண்டால் சிவன் அணியாகத் தரித்துக்கொண்டிருக்கிறார்.

ஆகவே பாலுக்குப் பாம்பு நிகரெனக்கூறுவாயாக.
வெண்மையால் தண்மையால் வெண்மணி நேரலால்
கண்சாத்தும் கன்னியர் காதலால் வேண்டலால்
பெண்மீனாள் மாநகரில் பேர்புகழ் கொண்டன்று
வெண்ணிலவும் மல்லிகையும் நேர். (ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

(நேரலால்-ஒத்திருத்தலால், வெண்மணி-முத்து, கண்சாத்துதல்- அன்போடு நோக்குதல், வேண்டல்- விரும்புதல், கொண்டன்று- கொண்டது)

மல்லிகைப்பூ- வெண்ணிறம் கொண்டது, குளிர்ச்சியானது, வெண்முத்தையொத்த மொட்டுகளைக் கொண்டது, கன்னியர் அன்போடு நோக்கி இம்மலரை விரும்புவர், மீனாட்சியானவள் பெண்மீனைப்போல் காத்துவரும் நகரமான மதுரை மல்லிகைப்பூவுக்குப் பெயர்போனது.

நிலவு - வெண்ணிறத்தோடு ஒளிர்வது, குளிர்ச்சியான ஒளியைப்பொழிவது, வெண்முத்தைப்போல் நிறங்கொண்டது, காதல் வயப்பட்ட கன்னியரால் அன்போடு விரும்பி நோக்கப்படுவது. மீனாட்சி ஆளும் மதுரையில் நிகழும் சித்ரா பௌர்ணமி விழா மிகவும் புகழ் பெற்றது.

ஆகவே மல்லிகைப்பூவும் நிலவும் நிகரானது.

மடுவிருக்கும் ஓசையொடு முட்டவரும் வாங்கும்
உடுநீர் அணுக்கத் துரப்பும் கடுகிக்
குறுவிலை போக்கும் திறந்ததும் பாவும் 
அறுமையும் ஆவும் நிகர். (இரு விகற்ப நேரிசை வெண்பா)

(உடுநீர் - அகழி
அணுக்கம் - அருகில்,அண்மையில்
உரப்பும் - ஓசையெழுப்பும்
கடுகி - விரைந்து
குறுவிலை - பஞ்சம்
பாவும் -தாண்டும், பரவும்
அறுமை - ஆறு)

பசு: பால் நிரம்பிய மடுவிருக்கும், ஓசையிட்டுக்கொண்டு முட்ட வரும். நீர் நிலைகளில் நீரருந்தும், அருகில் சென்றால் கத்தும், வறுமையுற்ற குடும்பத்தின் பஞ்சகாலத்தை விரைந்து போக்க உதவியாய் இருக்கும். தொழுவத்துக் கதவைத் திறந்தவுடன் வெளியே தாண்டி ஓடிச்செல்லும்.

ஆறு: ஆற்றின் பாதையில் மடு எனப்படும் பள்ளங்கள் நிறைய உண்டு. நீர் நிரம்பி ஓசையுடன் இருபக்கக் கரைகளையும் முட்டித்தொட்டுக்கொண்டு வரும். பழைய காலங்களில் ஆற்று நீரைக் கொண்டு வந்து அகழி அமைத்தனர்.. தொலைவில் அமைதியாகத் தெரியும் நதி அருகில் செல்லும்போதுதான் சத்தத்துடன் ஓடிக்கொண்டிருப்பது தெரியும். தண்ணீர் பசுமையைப் பெருக்கி பஞ்சத்தைப் போக்குகிறது. அணை,மதகு போன்றவற்றின் மடைக்கதவு திறந்தவுடன் ஓடி வெளியாகும்.

ஆகவே ஆறும் பசுவும் நிகரானது.

மண்டுதலால் கொத்துக் குடுமி யிருத்தலால்
தண்ணிழற் தண்டின்பாற் கண்டிசின் பண்டிதர்
கண்படின் சீருறும் மண்ணகத்து பீலிக்கண்
தண்தேங்காய் ஒத்தது வாம். (ஒரு விகற்ப நேரிசை வெண்பா) 

(மண்டுதல்- நெருங்குதல்,அதிகமாதல்,திரளுதல்.
கண்டிசின்- கண்டேன்,பார்ப்பாயாக
பீலிக்கண்- மயில்தோகைக்கண்)

பீலிக்கண் - மயிற்தோகையில் மிகுதியாகக் காணப்படும், கிருஷ்ணனின் கொத்துக்குடுமியில் இருக்கும். தண்ணிழலைத்தரும் தண்டின் முடிவில் இருப்பதைப் பார்ப்பாயாக. வித்தை கற்றவர் கண்டால் சீர் செய்து அலங்காரப்பொருளாக்குவர். இம்மண்ணில் பீலிக்கண்ணும் தேங்காயும் ஒன்று.

தேங்காய்- தென்னை மரத்தின் உச்சியில் தேங்காய்கள் பெருகி நெருங்கி விளைந்திருக்கும். உரித்தபின் உச்சியில் கொத்தாய் குடுமி போன்று நார் இருக்கும். குளிர்ந்த நிழலைத்தரும் ஓலைகளையுடைய மரத்தண்டின் முடிவில் காணலாம். கைவினை வித்தையறிந்தவர் கண்டால் இதைக்கொண்டு கைவினைப் பொருட்கள் செய்வர். இம்மண்ணி்ல் தேங்காயும் பீலிக்கண்ணும் ஒன்று.

Thursday, 13 October 2016

படமும் பாடலும் - 3

படம் அளித்த தூண்டுதலால் எழுதப்பட்ட பாக்கள் இங்கேயும் தொடர்கின்றன. 

பொற்புறுத்தப் போதுமில்லை பொற்சரிகை நான்வேண்டேன் 
பெற்றவரு டன்மக்கள் பாங்குடனே வசித்திடவே
சிற்றலகாற் சேர்த்திட்ட சிறுதுரும்பும் சுள்ளிகளும்
மற்றதெலாந் திரட்டியேநான் மணிவீடு கட்டுகிறேன் (கலி விருத்தம்)

2) மூவகை மாவொடு முச்சரக் கிட்டரைத்து
தூவலா யிஞ்சியுடன் தேங்காயுந் தான்கலந்து
ஆவலாய்ச் சுட்டதை சட்னியோ டுண்ணவே
தேவமிழ் தன்ன அடை (ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)
அரிசி, உளுந்து, பருப்பு இம்மூன்றையும் சேர்த்தரைத்த மாவோடு நல்லமிளகு, மிளகாய், சீரகம் என்ற மூன்று சரக்குகளையும் சேர்த்து இட்டு அரைத்து தேங்காய், இஞ்சி இரண்டையும் துருவித்தூவிக் கலந்து ஆவலுடன் சுட்டதை சட்னியுடன் உண்டால் தேவாமிர்தமாக அடை ருசிக்கும்.

3)அடைமழை மாசுகம் சூடாய்ப் பருப்பு
வடையுடன் டீயும் பெறின்.
புசித்தும் அடக்கவொண்ணா ஊறுநீர் நாவே
ருசிப்பாய் தினமும் வடை

வடையுடன் சட்னியை வாயிட சொர்க்கம்
தடையின்றி மண்ணில் வரும். (ஒரு விகற்பக் குறள் வெண்பாக்கள்)

4) ஊறிய நற்பயிறு முப்பொடு தேங்காயும்
தேறிய தக்காளி தக்க மசாலுடன்
சீறிய தண்ணீரில் வெந்த உசலுக்கு
மாறிய பன்னே ருசி (ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)


Friday, 29 July 2016

ஒரு சொல்.. பல பாக்கள் -2

"ஆழி" என்னும் சொல்லுக்கு கடல், சக்கரம் என மேலும் சில அருஞ்சொற்பொருட்களும் உண்டு.

1) கொடுத்தான் கிடந்தான் புதைத்தான் சமரில்
எடுத்தானே ஆழியை மால்

விளக்கம்: (கணையாழி கொடுத்தான் பாற்கடலில் கிடந்தான், பாரதப்போரில் தேர்ச்சக்கரத்தை அழுத்தி அர்ச்சுனனைக் காத்தான், அசுரர்களை வதம் செய்ய சுதர்சனச்சக்கரத்தை எடுத்தான் திருமால்)

2) ஆழியில் வீற்றிருந்து ஆடியது போதுமே
நாழி பலவாச்சே வா

3) திருவாழி மார்பன் அணிந்த படையாம் 
திருவாழி காப்பு நமக்கு

விளக்கம்: (திருமகளான லக்ஷ்மி வாழ்கின்ற திருமார்பை உடையவன் அணிந்த ஐம்படைகளில் ஒன்றான சுதர்சனச்சக்கரம் நம்மைக் காக்கட்டும். நாகர்கோவில் அருகேயுள்ள திருப்பதி சாரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளின் திருப்பெயர் திருவாழி மார்பன் இங்கே என்பது குறிப்பிடத்தக்கது.

4) மாலனை சங்கரன் மைத்துனனை கண்ணனை
பாலாழி ஈந்த திருவின் பதியை
கிருஷ்ணனை மோகினியை மாமருந்தே யன்ன
திருத்துழாயைப் பாடும் குழல் (பல விகற்ப இன்னிசை வெண்பா) 

5)
பாலாழி நீங்கினோன் காலாழி ஏத்தியே
வேலாழி ஏகினன் வாயுமகன்- சீர்மிகக்
காட்டினன் ஆழி வழுத்தியு யிர்த்தன்னை
மீட்டும் அளித்தாள் மணி (பல விகற்ப இன்னிசை வெண்பா) 

விளக்கம்: பாற்கடலை விட்டு அகன்று பூவுலகில் அவதாரமெடுத்திருக்கும் ராமனின் பாதத்தை வணங்கி அவனருளால் கடலையும் கடந்து வந்த ராமதூதனாகிய அனுமன், ராமனது கணையாழியை சீதையிடம் காண்பித்தான். புத்துயிர் பெற்ற அன்னை அவனை வாழ்த்தி தனது அடையாளமாக தன்னுடைய சூடாமணி எனும் நகையை ராமனிடம்  சேர்ப்பிக்கச்சொல்லி அனுமனிடம் கொடுத்தனுப்பினாள்.

Tuesday, 19 April 2016

படமும் பாடலும் - 2

படக்கொடை-இணையம்
பத்தடிமேல் வந்ததால் பல்லற்று ஊசிவாய்
குத்துவதால் மன்னுயிர் கத்திடுதே – சத்தமின்றி
சுத்திடினும் மட்டையால் சாகும் மருந்துக்கு
எத்திடுமிப் பொல்லாக் கொசு (ஒருவிகற்ப நேரிசை வெண்பா)

ஆணவர் அஞ்சிட ஆரணங்கு செய்திட
மாணப் பெரிதே கவலையிது- வாணலியில்
அப்பாமல் வந்தால் அருசியாம் அம்முறைநீ
தப்பாமல் உப்புமா செய் (இருவிகற்ப நேரிசை வெண்பா)
அரும்பி அலர்ந்த அனற்பூவாம் கோடை
விரும்பி வனங்களை யுண்டு - கரும்பாய்
வருக்கையும் மாவும் வகையாய் அளித்தும்
வருத்திடவும் செய்யுதே காண் (ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
மாந்தரெலாம் ஏத்தி வணங்கும் பரம்பொருளாம்
நீந்துபுனல் கொண்டோன் அருளினால் - ஏந்துபுகழ்
நாஞ்சிலாம் நாடிதுடன் என்றென்றும் வாழியவே
நாஞ்சிலின் சீர்மிகு கூர் (இருவிகற்ப நேரிசை வெண்பா)

அரவமிகு கோயிலின் நாமமிதன் பேராம்
அருமாந்த ஊரிதன் மன்புகழ் சாரலாம்
கொஞ்சும் இயற்கையையும் நங்கைநீ பாடுக
நாஞ்சிலின் நாரோயில் சீர் (இருவிகற்ப நேரிசை வெண்பா)

Saturday, 16 April 2016

ஒரு சொல்.. பல பாக்கள் -1

படக்கொடையளித்த இணையம் வாழ்க
'அம்பு' என்ற சொல்லுக்கு வில்லிலிருந்து புறப்படும் அம்பைத் தவிர நீர், முகில், தளிர், மூங்கில்,வளையல் எனவும் வேறு அர்த்தங்கள் உள்ளன. இந்த அர்த்தம் வரும்படியாக 'அம்பு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி எழுதிய சில ஒரு விகற்பக்குறள் வெண்பாக்கள்.

1. அம்பு நிறைந்திட்ட அம்புடைந்து பெய்ததால்
அம்பது  ஓங்கியது காண்
விளக்கம்: (நீர் நிறைந்த முகிலுடைந்து பெய்ததால் மூங்கில் வளர்ந்தது காண்) 

2. அம்பணிந்த அம்புயத்தாள் அம்பெறிய ஓடியதே
அம்பு சுவைத்த பிடி
விளக்கம்: (வளையலணிந்த தளிர்க்கரத்தை உடைய பெண் அம்பெறிய, மூங்கிலைச் சுவைத்த பெண்யானை ஓடியதே)

3.நங்கையின் அம்புகளை தங்கையும் தேர்ந்ததால்
பங்கயத்தால் அம்புசொரிந் தாள்
விளக்கம்: [நங்கை(பெண்,பெயர்ச்சொல்) விரும்பிய வளையல்களைத் தங்கையும் விரும்பியதால் தாமரை போன்ற கண்களால் நீர் சொரிந்தாள்(அழுதாள்)] 

4.அம்பறுத்துச் செய்யம்பு இட்டு முகந்திட
அம்பது தோய்த்தது வாம்
விளக்கம்: (மூங்கிலை அறுத்துச்செய்த வளையல்களை அணிந்து தண்ணீர் முகந்திட நீர் அதை நனைத்தது)

5.தண்ணம்பு தூவித் துளிர்த்த விருட்சத்தை
மண்மீது காத்தல் கடன்
விளக்கம்: குளிர்ந்த மேகம் பொழிந்ததால் துளிர்த்து வளர்ந்த மரத்தைக்காத்தல் நம் தலையாய கடமையாகும்.

Monday, 11 April 2016

படமும் பாடலும் - 1

(இருவிகற்ப நேரிசை வெண்பா)

மக்களைப் பள்ளியில் பார்வதி சேர்த்திடுமுன்
மிக்க விரைந்து உரைத்திடுக - தக்கதோர்
ஓலைக் கொருவிலக்கம் உண்ட துவல்லெனில்
மாலைக்குள் ஏறும் தொகை

குன்றும் கடலும் குமரனுக்கே அப்பனுக்கோ
என்றும் சுடலையே ஏற்றவிடம் - அன்னையவள்
கண்டாளே புற்றினைக் கோவிலாக பிள்ளையும்
கொண்டான் அரசடி தான்

கனியால் கசந்தவன் குன்றேறி நின்றான்
இனிதாய் உரைகூறி அம்மையும் பற்றிவர
ஒக்கல் இறங்காயோ ஓர்பிடி நீவிடாயோ
பக்கலில் தேடுகிறான் பார் (இருவிகற்ப இன்னிசை வெண்பா)


அழகிய படத்தைத்தந்துதவியமைக்கு நன்றி பத்மாசனி ஸ்ரீமதன்

குமிழ்நகை கண்டு குதித்துவந்த வானம்
குமிழொளிந்து வண்ணவில்லாய் தானிறங்கி பாலன்
மழலை மொழிகேட்டு தான்மயங்கி மங்கி
அழகற்றுச் செல்லுதே வில் (இருவிகற்ப இன்னிசை வெண்பா)


  நம் வித்யா சுப்ரமணியன் வரைந்த படத்திற்காக கிச்சா என்னை எழுத வைத்த வெண்பா

உருவுதடம் நீக்கி உறிதொங்கி வெண்ணெய்
திருடுவாய் ஏடணையொ ளிக்கவொட்டா கண்ணா
சதங்கை சிணுங்கிட சாயுமுரல் கத்த
சிதறுதே வெண்ணெயும் காண் (இருவிகற்ப இன்னிசை வெண்பா)

வால்: படங்கள் கொடுத்த தூண்டுதலால் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே சேமிக்கப்படுகின்றன.

LinkWithin

Related Posts with Thumbnails