Saturday 16 April 2016

ஒரு சொல்.. பல பாக்கள் -1

படக்கொடையளித்த இணையம் வாழ்க
'அம்பு' என்ற சொல்லுக்கு வில்லிலிருந்து புறப்படும் அம்பைத் தவிர நீர், முகில், தளிர், மூங்கில்,வளையல் எனவும் வேறு அர்த்தங்கள் உள்ளன. இந்த அர்த்தம் வரும்படியாக 'அம்பு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி எழுதிய சில ஒரு விகற்பக்குறள் வெண்பாக்கள்.

1. அம்பு நிறைந்திட்ட அம்புடைந்து பெய்ததால்
அம்பது  ஓங்கியது காண்
விளக்கம்: (நீர் நிறைந்த முகிலுடைந்து பெய்ததால் மூங்கில் வளர்ந்தது காண்) 

2. அம்பணிந்த அம்புயத்தாள் அம்பெறிய ஓடியதே
அம்பு சுவைத்த பிடி
விளக்கம்: (வளையலணிந்த தளிர்க்கரத்தை உடைய பெண் அம்பெறிய, மூங்கிலைச் சுவைத்த பெண்யானை ஓடியதே)

3.நங்கையின் அம்புகளை தங்கையும் தேர்ந்ததால்
பங்கயத்தால் அம்புசொரிந் தாள்
விளக்கம்: [நங்கை(பெண்,பெயர்ச்சொல்) விரும்பிய வளையல்களைத் தங்கையும் விரும்பியதால் தாமரை போன்ற கண்களால் நீர் சொரிந்தாள்(அழுதாள்)] 

4.அம்பறுத்துச் செய்யம்பு இட்டு முகந்திட
அம்பது தோய்த்தது வாம்
விளக்கம்: (மூங்கிலை அறுத்துச்செய்த வளையல்களை அணிந்து தண்ணீர் முகந்திட நீர் அதை நனைத்தது)

5.தண்ணம்பு தூவித் துளிர்த்த விருட்சத்தை
மண்மீது காத்தல் கடன்
விளக்கம்: குளிர்ந்த மேகம் பொழிந்ததால் துளிர்த்து வளர்ந்த மரத்தைக்காத்தல் நம் தலையாய கடமையாகும்.

2 comments:

'பரிவை' சே.குமார் said...

அம்புக்கு இம்புட்டு அர்த்தம் இருக்கா...
குறளும் விளக்கமும் அருமை அக்கா...

கீதமஞ்சரி said...

ஆஹா.. அபாரம்.. அம்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி சொல்லினிமையோடு சுவைக்க அற்புதமான பாக்கள். பாராட்டுகள் சாந்தி.

LinkWithin

Related Posts with Thumbnails