Saturday, 27 August 2016

நாகரம்மன் கோவில் (நாகர்கோவில்)

அக்காலத்தில் “கோட்டாறு” என்று அழைக்கப்பட்டு வந்த அவ்வூரின் ஒரு பகுதியில் தன் வீட்டுக் கால்நடைகளுக்காகப் புல்லறுத்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண். வேகவேகமாகப் புல்லறுத்துக்கொண்டிருந்தவள் திடீரென மண்ணிலிருந்து ரத்தம் பீறிடுவதைக்கண்டு பயந்து அலற, சத்தம் கேட்டு அக்கம்பக்கம் மாடு மேய்த்துக்கொண்டும் புல்லறுத்துக்கொண்டும் நின்றுகொண்டிருந்த மக்கள் ஓடி வந்தார்கள். அவளது விரல் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தவர்கள் சற்றே வியப்புடனும் பயத்துடனும் தங்களுக்குள் கிசுகிசுவெனப் பேசிக்கொண்டார்கள். அவள் காட்டிய திசையில் இருந்தது ஒரு சிறிய நாகர் சிலை. அக்கூட்டத்திலிருந்த முதியவர் ஒருவர் கண் மூடிப் பிரார்த்தித்துக்கொண்டு சிறிது மண்ணை எடுத்து ரத்தம் வந்த பூமியின் மேல் இட உடனே அது நின்றது. பக்திப்பரவசப்பட்ட மக்கள் தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி நாகராஜனை வணங்கினர். அந்த இடத்தில் நாகராஜனுக்கு ஒரு சிறிய கோவிலும் அமைத்து வழிபட ஆரம்பித்தனர். கோவிலின் புகழ் கொஞ்சங்கொஞ்சமாகப் பரவத்தொடங்கியது.

அச்சமயத்தில் களக்காட்டை தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்த வேணாட்டு மன்னர் உதயமார்த்தாண்ட வர்மா தோல்நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். இக்கோவிலைப்பற்றிக்கேள்விப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து தரிசனம் செய்து சென்றவரின் வியாதி நாளடைவில் குணமடைய ஆரம்பித்தது. பெருமகிழ்ச்சியுற்ற அவர் இக்கோவிலுக்கு ஏராளமான திருப்பணிகளைச் செய்தார். அவர் ஆரம்பித்த வழக்கத்தைத் தொடர்ந்து இன்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாகரம்மனை வணங்கி பாலபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. அதிலும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம் தரிசனத்திற்காக அலைமோதும்.

இந்தியாவிலேயே நாகரை மூலவராகக் கொண்ட ஒரே கோவில் இதுதான். அதன் காரணமாகவே இவ்வூரும் “நாகர்கோவில்” எனப்பெயர் பெற்றது. கோவிலின் பெயரையே தன் பெயராகத்தாங்கி நிற்கும் ஒரே ஊரும் இதுதான் என்ற சிறப்புகள் நாகர்கோவிலுக்கு உண்டு. இக்கோவிலுக்கு முத்து தியேட்டரின் அருகிலிருக்கும் கிழக்கு வாசல் வழியாகவோ அல்லது தெற்கிலிருக்கும் பெரிய வாசல் வழியாகவோ வரலாம். கோவிலின் முன்பக்கத்திலிருக்கும் நாகசுனையில் கால் நனைத்து விட்டு அருகிலிருக்கும் பெரிய மேடையில் வீற்றிருக்கும் பிள்ளையாரை வலம் வந்து வணங்கி, இம்மேடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கணக்கற்ற நாகர் சிலைகளுக்கு மஞ்சள் பொடி மற்றும் பாலால் அபிஷேகம் செய்த பின்னரே கோவிலுக்குள் செல்ல வேண்டும். வெளியூர் பக்தர்களின் வசதிக்காக பால் கோவிலிலேயே விற்பனை செய்யப்படுகிறது. 40, மற்றும் ஐம்பது ரூபாய் என இரண்டு விதங்களில் கிடைக்கின்றன. வாங்கி ஒவ்வொரு நாகரின் தலையிலும் துளித்துளியாய் ஊற்றிக்கொண்டே சென்றால் ஆயிற்று. இந்த மேடையில் ஒரு காலத்தில் இரண்டு பெரிய அரச மரங்கள் இருந்தன. தொண்ணூறுகளில் ஒரு பெரிய மழையின்போது ஒரு மரம் விழுந்து தற்சமயம் ஒன்று மட்டுமே எஞ்சியிருக்கிறது. 
அனந்தனுக்கும் நாகரம்மனுக்கும் தனித்தனியாக நுழைவாயில்கள் இருந்தாலும் பொதுவாக நாகரம்மன் சன்னிதியின் நுழைவாயில் வழியாகச் செல்வதே மரபு. உள்வாசலில் துவாரபாலகர்களாக தர்னேந்திரனும் பத்மாவதியும் ஐந்து தலை நாகத்தின் வடிவில் ஆளுயுரச்சிலைகளாக அமர்ந்திருப்பது கண் நிறைந்த காட்சி. சமீப வருடங்களாக பாதுகாப்புக்காக கம்பித்தடுப்புக்குள் பித்தளைக்கவசம் அணிந்து ஜொலிக்கிறார்கள். கவசத்தில் அடைபடாமல் கற்சிலைகளாக இருந்த முற்காலத்தில் அவர்களுக்கும் துளி பால் ஊற்றி விட்டு உப்பும் மிளகும் தூவி விட்டுச்செல்வோம். இப்பொழுதோ தொட்டுக்கும்பிட வேண்டுமென்றாலும் பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது. மூலவர் நாகரம்மன் ஓலை வேய்ந்த கருவறையில் ஐந்து தலை நாகத்தின் வடிவில் ஈரமான மண்தரையில் அமர்ந்திருக்கிறார். இம்மண்ணே இன்றும் நாகரம்மன் கோவிலின் முக்கியப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது வருடத்தில் ஆறுமாதம் கறுப்பாகவும் மீதி ஆறுமாதம் வெள்ளையாகவும் இருக்கும். நாகரம்மனுக்கு உகந்த ஆயில்யம் நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பாலபிஷேகம் மற்றும் பால் பாயசம் நிவேதனம் செய்வது சிறப்பு. சமீப காலங்களில் ஆவணி ஞாயிறன்று முன்னூறு ரூபாய் சிறப்புத்தரிசன வரிசையில் சென்று தரிசனம் செய்பவர்களுக்கு ஒரு லிட்டர் பால்பாயசம் அடங்கிய எவர்சில்வர் டப்பாவும் இன்ன பிற பிரசாதங்களும் வழங்கப்படுவதாக செய்தி.

கோவிலின் உட்பிரகாரத்தில் நாகரம்மனுக்கு இடது புறமாக வலம் வந்தால், சிவன் அனந்தன், கன்னி மூலை கணபதி மற்றும் உற்சவர் சன்னிதிகளை தரிசிக்கலாம். உற்சவர் சன்னிதிக்கு முன்புறம் இடது பக்கத்தில் சுவரிலிருக்கும் சிறிய ஜன்னல் வழியே கர்ப்பக்கிரகத்தின் ஓலைக்கூரையும் காணலாம். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் இந்த ஓலைக்கூரையை புதிதாக மாற்றிக்கட்டுவார்கள். இத்திருப்பணியை கோவிலில் பூஜை செய்பவர்களே செய்வது வழக்கம். வேறு யாரும் செய்ய அனுமதியில்லை. இன்றும் இங்கே ஒரு பாம்பு வசிப்பதாக தகவலுண்டு, முன்பெல்லாம் பக்தர்கள் இந்த ஜன்னல் வழியே முட்டைகளையும் காசுகளையும் நாகரம்மனுக்குக் காணிக்கையாக அளித்து விட்டுச்செல்வது வழக்கம். முன்னொரு காலத்தில் இந்த இடத்தில் “ஓடவள்ளி” என்றொரு மூலிகைக்கொடி படர்ந்திருந்தது. இதன் இலைகளைப் பிரசாதமாகக் கொடுத்து வந்தனர். இதன் ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு சுவையிலிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பாம்புகளின் இருப்பிடமாக இது இருந்ததால் ஓர் அதிகாரி இதை வெட்டி அகற்ற உத்தரவிட்டார் என்றும் பின்னர் அதன் அருமை தெரிந்த பின்னர் அதை நட்டு வளர்க்க எவ்வளவோ முயற்சி செய்தும் இயலவில்லை என்றும் அக்கால ஆட்கள் சொல்லக்கேள்வி.

உட்பிரகாரம் சுற்றி வெளி வந்தால் கற்துண்டுகள் பாவிய இரண்டாம் பிரகாரமான வெளிப்பிரகாரம். இதன் தென்பக்கத்தில் பத்திருபது வருடங்களுக்கு முன் இரண்டு பன்னீர்ப்பூ மரங்கள் வானளாவி வளர்ந்திருந்தன. தரையெங்கும் பாவிக்கிடக்கும் பூக்களை அள்ளிச் சேகரித்துக்கொண்டு ஒவ்வொரு சன்னிதியிலும் இட்டுச்செல்வது குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. மூப்பாலோ அல்லது வேறெந்த காரணத்தாலோ அவை தற்போது வெட்டப்பட்டது வருந்த வைத்தாலும் அடிமரத்திலிருந்து துளிர்த்து வளர ஆரம்பித்திருப்பது சற்றே ஆறுதலளித்தது. வெளிப்பிரகாரத்தில் தென்பக்கம் பூதத்தார் சன்னிதியும் வடபக்கம் மணிகண்டனின் சன்னிதியும் உள்ளன. 
இதன் பின்பக்கமிருக்கும் வாசலில் வடபுறமாக இரண்டு படியேறினால் துர்க்கையும் குமரனும் வேணுகோபாலனும் தனித்தனிச் சன்னிதிகளில் அருள் பாலிக்கிறார்கள். கோவிலின் திருக்குளத்திலிருந்து கிடைத்தவளாகையால் இவளுக்கு தீர்த்த துர்க்கை என்றும் பெயருண்டு. ராகுகாலங்களில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுவதற்காக மக்கள் கூட்டம் பெருமளவில் வரும். இந்த சன்னிதிகளின் முன்பிருக்கும் பெரிய கூடத்தில் அனுமனும் கண்ணாடிப்பெட்டிக்குள் காட்சியளிக்கிறான். அப்படியே திரும்பி நடந்தால் திருக்குளமருகிருக்கும் வாசல் பக்கத்தில் சன்னதி கொண்டிருக்கும் இடும்பனையும் தரிசிக்கலாம். இடும்பனைத்தரிசித்து விட்டு அதன் பின் வந்த வழியே திரும்பி நடந்து சாஸ்தா சன்னிதியின் முன்புற வாசல் வழியே வந்து அனந்தன் சன்னிதியின் முன்னாலிருக்கும் கொடிமரத்தினருகே விழுந்து வணங்குதல் மரபு. நாகர் இருக்குமிடத்தில் கருடன் இருத்தாலாகாது என்பதால் அனந்தன் எனும் ஆதிசேஷனுக்குரிய வாகனமான ஆமை கொடிமரத்தில் இடம்பெற்றுள்ளது. கொடிமரத்தின் பீடத்தில் சற்றுக்கீழே சிறிய நாகமொன்று நெளிந்து செல்லும் கோலத்தில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

கோவிலிலிருந்து வெளியேறும் தெற்கு வாசலருகே கலை நிகழ்ச்சிகளுக்காகக் கட்டப்பட்ட மண்டபமொன்று திருமண மண்டபமாகி தற்பொழுது அன்னதானக்கூடமாக உருமாறியிருக்கிறது. முன்பெல்லாம் தை மாதம் நடக்கும் பத்து நாள் உற்சவத்தில் சேஷகோபாலன், வெ.ஆ. நிர்மலா போன்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகள் கட்டாயம் இடம்பெறும். இதற்காகவே சுசீந்திரத்தின் மார்கழித்திருவிழாவை அடுத்து நாகரம்மன் கோவிலின் தைத்திருவிழா குமரி மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும். தை மாதம் நடக்கும் தேர்த்திருவிழாவும், சப்பர ஊர்வலமும் மிகவும் பிரசித்தி பெற்றவை. திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை விழாவும்,கந்தசஷ்டி விழாவும் இங்கு நடக்கும் இதர முக்கிய விழாக்களாகும் தினமும் காலை 4.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை. மாலை 5.00 மணிமுதல்இரவு 8.30 மணிவரை நடை திறந்திருக்கும். தற்காலத்தில் தேர்த்திருவிழா அன்றைக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் பூட்டிக்கிடக்கும் கோவிலின் தெற்கு உள்வாசல் சப்பர ஊர்வலத்தை முன்னிட்டு மட்டுமே திறக்கப்படுவது வழமை.
சைவ, வைணவ, சமண மதங்களின் ஒருங்கிணைப்பான இக்கோவில் நேபாளக் கட்டடக்கலையை ஒத்திருக்கிறது என்பாரும் உளர். முன்பு இக்கோவில் சமணர்களுக்கானதாக இருந்தது எனவும் ஆராய்ச்சிகள் பல நடந்துள்ளன. அவற்றில் ஒன்று இங்கே.  

இக்கோவிலின் குளக்கரை, கோவில் மதிற்சுவர்கள், உட்புறச்சுவர்கள் மற்றும் பிரகாரங்களில் பதிக்கப்பட்டிருக்கும் நாகர்சிலைகளுக்குக் கணக்கே கிடையாது. பாம்புகளின் நடமாட்டமிருந்தாலும் பாம்பு கடித்து மரணமடைந்தவர் இவ்வூரிலும் சுற்று வட்டாரத்திலும் இல்லை என்றே சொல்லப்படுகிறது. ராகு கேது பரிகாரத்தலமாகவும் உடல் மற்றும் தோல் நோய்களைத் தீர்த்து வைக்கும் ஸ்தலமாகவும் இக்கோவில் அறியப்படுகிறது. நோய் தீர வேண்டிக்கொண்டு உப்பும் நல்லமிளகும் வாங்கிப்போடுவதும் உடல் பாகங்களை வெள்ளியாலோ அல்லது மரத்தாலோ செய்து காணிக்கையாகப் போடுவதும் உண்டு. தவிரவும் பாம்பு மற்றும் முட்டைகளை வெள்ளியால் செய்து காணிக்கை செலுத்துவதும் உண்டு. அதுவும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்யவும் காணிக்கை செலுத்தவுமாக கோவிலில் கூட்டம் நெரியும். அத்தனை நாளும் பார்த்த கோவில்தானா என்று நமக்கு சந்தேகம் வருமளவுக்கு ஜேஜே என்று திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். சிறார்களுக்கான நடைவண்டிகள், பழக்கடைகள், வரவிருக்கும் நவராத்திரிக்கான கொலுபொம்மைகள், மஞ்சள் குங்குமக்கடைகள் மற்றும் பல என்று ஷாப்பிங்கிற்கும் குறைவிருக்காது. 

LinkWithin

Related Posts with Thumbnails