Thursday 5 September 2024

சாரல் துளிகள்


கனவுகள் நொறுங்கும் ஒலி காதுகளுக்குக் கேட்பதில்லை.

நனவின் இருண்மைகளுக்குள் அடைகாக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன மேலும் பல கனவுகள்.

ஆடியில் தன் பிம்பத்தை நோக்கியவாறு வெகுநேரம் நின்றிருந்தது நனவு. பொறுத்திருந்து பொறுமையிழந்து நனவின் கைகோர்த்து நடக்கத்தொடங்கிய பிம்பம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது கனவென.

நிராசையாகப் போகக்கூடியவை எனத் தெரிந்தே காணும் கனவுகளுக்கு நித்ய கண்டம் பூர்ணாயுசு.

பூவாகிக் காயாகிக் கனியக் காத்ததைப் பறிகொடுப்பதையொத்ததே, கனவு வளர்த்து நிதர்சனத்துக்காகப் பலி கொடுப்பதும்.

கனவுகளால் அலங்கரிக்கப்பட்டு கனவை நோக்கி இட்டுச்செல்லும் கனவுப்பாதையில் அடிக்கொரு வேகத்தடை இடறத் தயாராய்.

கலையாத கனவொன்றை வேண்டி நின்றால், சுக்குநூறாய்க்கலைத்த துண்டுகளையள்ளிக் கையில் நிறைத்து, இணைத்து அடைந்துகொள் என்னும் விதியே.. அடியெது முடிவெது என்றாவது சொல்லிப்போ. 

யார் தொலைத்த கனவோ?!.. வழி மறந்து தவித்துக்கொண்டிருந்ததை யாரோ இன்னொருவர் அபயமளித்து அழைத்துச்சென்று கொண்டிருக்கிறார்.

கனவின் அடியொற்றி ஓடியும் கை நழுவி விட, குற்றப்பத்திரிகை வாசித்தபடி அமர்ந்திருப்பவரின் கண்ணுக்குள் உற்று நோக்கி, 'என்னையடையும் இலட்சியத்தைத் தொலைத்தது நீயா நானா?'வெனக்கேட்கிறது மீளவும் வந்த கனவு. 

தன்னிடம் வருபவர்களிடம் அவ்வப்போது பலியும் கேட்கிறது அடிக்கொரு தரம் சன்னதம் கொண்டு ஆடியபடியிருக்கும் உக்கிரமான ஆதி கனவிலிருந்து கிளைத்த அந்த அதியுக்கிரக் கனவு.

Monday 19 August 2024

திருநெல்விருந்து - சுகா

அனுபவக்கட்டுரைகள், ஆளுமைகளைப்பற்றிய பகிர்வுகள் எனப் பல்வேறு வகைகளில் மொத்தம் 22 கட்டுரைகளைக்கொண்டது சுகாவின் “திருநெல்விருந்து”. திரைப்பட இயக்குநர், வசனகர்த்தா, எழுத்தாளர் என்பவை தவிர சமீபத்தில் கவிஞராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். ஆனந்த விகடனில் வெளியாகி மிகவும் பேசப்பட்ட தொடரான “மூங்கில் மூச்சு” உட்பட சுகா எழுதிய தாயார் சன்னிதி, வடக்கு ரத வீதி, சாமான்யனின் முகம் போன்ற புத்தகங்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றவை. “வேணுவனம்” என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார்.

நெல்லையின் மண்வாசனை வீசும் இவர் எழுத்துகளை வாசிக்கும் ஒவ்வொருவரும், அவர்கள் எந்த ஊரைச்சேர்ந்தவராயிருந்தாலும் சரி.. அந்தந்த நிமிடங்களில் அந்தந்த சம்பவங்களோடு தம்மைத் தொடர்பு படுத்திப் பிணைத்துக்கொள்வது திண்ணம். அவரவர் ஆச்சிகளும் அவர்களோடு கழித்த பால்யமும் நினைவுக்கு வந்து ஒரு சில நொடிகளாவது அந்தக்காலத்துக்கே போய் வாழ்ந்து விட்டு வருவர்.

கலாப்ரியா அண்ணாச்சியின் எழுத்துகளுக்கு அடுத்தபடியாக திருநவேலியை, குறிப்பாக ரதவீதிகளை சுகாவின் எழுத்துகளில்தான் நான் நுட்பமாகத்தரிசித்தேன், காலார நடந்துவிட்டு மாரியம்மன் விலாஸில் திருப்பாகம் வாங்கிக்கொண்டும் வந்தேன். என்ன ஒன்று.. சுகாவின் நெல்லையின் மீனாட்சி சொன்னதுபோல் விஞ்சை விலாஸில் நன்னாரிப்பால் குடிக்கப்போக வாய்க்கவில்லை. போலவே நடைப்பயணம் சென்று நடைச்சித்திரம் வரைவதெல்லாம் சுகா போன்றோருக்கே சாத்தியம். நடைபயில்வோரை நம்பித்தானே அத்தனை சுக்குக்காப்பிக்கடைகளும் ஹோட்டல்களும் கட்டி வைத்திருக்கிறார்கள். 

அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் வரைதான் உள்ளூர் வெளியூர் என்ற நினைப்பெல்லாம். மாவட்ட, மாநில எல்லைகளைத்தாண்டி விட்டாலோ எல்லாமே நம்மூர்தான். அது ஆளாருச்சியாக இருந்தாலென்ன? கல்லிடைக்குறிச்சியாக இருந்தாலென்ன? மும்பையாகவே இருந்தாலும்தானென்ன? ஒரு சிலருக்கு மட்டுந்தான் ஊரோடு தொடர்பு வாய்க்கிறது. காசியின் இட்லிக்கடைக்காரரைப்போன்ற பலர் “தேவைப்படலை” என்றே இருந்து விடுகிறார்கள், “முப்பது வருஷமா இதுதான்யா நம்ம ஊரு” என்றிருக்கும் மும்பை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சமையற்கலைஞரைப்போல.

திருநெல்விருந்தும் ஆத்மருசி கந்தையா பெரியப்பாவும் பின்னே மனோஜும் வெகுநாளைக்கு வாசகர் நினைவில் நிற்பார்கள். உணவின் ருசி என்பது நாக்கோடு நின்று விடுவதில்லை, அன்பும் பாசமும் நல்ல மனசும் சேர்த்துக்குழைத்துச்செய்த உணவின் ருசி ஆன்மா வரை சென்று படிந்து விடும், ஆகவேதான் அது அமிர்தமுமாகிறது. சொந்த ஊரின் மேல் கொண்ட பாசம் என்பது வெறும் கட்டடங்களாலும் மனிதர்களாலும் மட்டும் அல்ல, அவ்வூரின் உணவின் மேல் கொண்ட பற்றும்தான். ஊர் என்பது உணவோடு பின்னிப்பிணைந்ததும்தானே? புளியோதரையுடன் பொரிகடலைத்துவையலைத்தொட்டுக்கொள்வது என்பது நெல்லைக்கேயுரிய நுண்தகவல். இக்கட்டுரைகள் முழுக்க உணவைப்பற்றி.. குறிப்பாக நெல்லையின் உணவுகளைப்பற்றி எத்தனையெத்தனை தகவல்கள். பசி நேரத்தில் இக்கட்டுரைகளை வாசிக்காதிருப்பது நலம். நாக்கு அப்படியே மிதக்கிறது, என்றாலும் டிங்கிரி டோல்மா தோசையை மனோஜுக்காகவாது நூலாசிரியர் சாப்பிட்டுப்பார்த்து விட்டு  பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கலாம் எனத்தோன்றியதைத் தவிர்க்க இயலவில்லை. 

உணவு, இசை மட்டுமல்லாது சுவாளங்களின் மீதும் கோட்டி கொண்டவர் நூலாசிரியர் என்பது, அவரை அறிந்தவர்கள் நன்கறிந்தது. குஞ்சுவின் சம்பந்தியான பறக்கை கோலப்பனின் பைரவப்ரியமும் அதற்குக்கொஞ்சமும் குறைந்ததல்ல. எந்த வகையில் சம்பந்தியானார் என்பதை நூலில் வாசித்துத்தெரிந்து கொள்ளுங்கள். அக்கட்டுரையை வாசிக்கும்போது எழுத்தாளர் ஜெயமோகனின் வீட்டில் வளர்ந்த “ஹீரோ” நினைவுக்கு வந்தான்.

ஹாஸ்யமும் சுயபகடியும் சுகாவின் எழுத்தின் சிறப்பம்சம். ஆங்காங்கே கண்ணிவெடிகளைப்போல் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் அவற்றின் மேல் நாம்தான் கவனமாகக் கடந்து செல்ல வேண்டும். அவரது கட்டுரைகளில் “ஜயண்ட் வீல்”க்கு எப்பொழுதுமே ஒரு தனி இடம் உண்டு. வாசிப்பவர்கள் அனைவருமே சிலாகித்துச் சிரித்து உருள்வார்கள். அந்தப்பட்டியலில் இனிமேல் “சுளுக்கு” கட்டுரையும் இடம் பெறும். “இவளே” கட்டுரை அடுத்த கண்ணிவெடி. என்னமா எழுதறார்!!!!! என வியக்கும்போதெல்லாம் சட்டென நினைவுக்கு வரும், “இது தமிழ்க்கடலிலிருந்து பிறந்த நதியல்லவா!!” என்பது. தாமிரபரணிக் கரையில் பயணித்து இந்நதி கொணர்ந்து சேர்த்த அனுபவ முத்துகள் ஏராளம்.

பல்வேறு ஆளுமைகளுடன் பழகி அந்த நினைவுகளை நாம் இது வரை கண்டிராத கோணத்தில் நம்முடன் பகிர்ந்திருக்கிறார் சுகா. கோவிட் காலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரைகளில் என்றுமே எழுதித்தீராத அவரது நெல்லை நினைவுகளும் விதைக்கப்பட்டுள்ளன. அவை வாசகர் நெஞ்சில் நிச்சயம் அவரவர் ஊர் நினைவுகளாய் முளைத்தெழும். 

ஆசிரியர்: சுகா
பதிப்பகம்: சுவாசம்

Friday 2 August 2024

சாரல் துளிகள்

இணை வைக்கப்படும் எதையும் ஒன்றுமில்லாததாக்கி விடுகிறது கண்ணீரின் கனம்.

யாருமற்ற வனாந்திரத்தில் தன்னந்தனியாய் தன்னுடனே உரையாடிக்கொண்டிருக்கிறது பாறையிடுக்கில் மலர்ந்திருக்கும் ஒற்றை மஞ்சள் மலர்.

எத்தனையோ யுகங்களாய்த் திருவிளையாடியும் நிறைவுறா சொக்கனை நோக்கி குறும்புடன் மலர்கிறது மீனாட்சியின் மூக்குத்திப்பூ.

ஒவ்வொரு பன்னீர்ப்பூவிலும் ஒவ்வொரு ராகத்தை ஊதுகின்றன வண்டுகள், ராகமாலிகையாய் மணக்கிறது வனம்.

ரகசியமாய் என்ன சொல்லிப்போனதோ காற்று.. மெல்லமாய்ச் சிலிர்க்கிறது மரம்.

பல்லாயிரம் ஊசிகளால் தையலிடுகிறது மழை. ஆயினும், அத்தனை பொத்தல்களின் வழியும் மழலைகள்போல் எட்டிப்பார்க்கின்றன முளை விட்ட விதைகள்.

முன்னுச்சிக்கேசம் கலைத்துப்போகும் மென்காற்றுக்கு குழந்தையின் பிஞ்சு விரல்கள்.

"திமிங்கிலங்களென்ன இந்த மீன்களை விடப்பெரியவையா?" எனக் கேலி செய்தன கிணற்றுத்தவளைகள், இணைந்து கொண்டு பரிகசித்தன சிறு மீன்கள். இறுதிவரை அவை அக்கிணற்றைக்கூட அறியவில்லை.

புறத்தே சீறும் பேரொலியெல்லாம் அகத்தே இறங்காமல் விரட்டியொடுங்கும் உள்ளமைதியில் மொட்டு வெடிக்கும் ஓர் மலர்.

தையத்தையவென தாளமிட்டாடும் குதிரைகளின் கால்களின் கவனமெல்லாம் கடிவாளத்தில் மையம் கொண்டிருந்தன.

Friday 26 July 2024

திருக்கார்த்தியல் - ராம் தங்கம்


வாழ்வின் துயரங்களால், புறக்கணிப்புகளால், ஊழால் அலைவுறும் சிறுவர்களின் வலி மிகுந்த உலகின் சித்திரமே எழுத்தாளர் ராம் தங்கத்தின் “திருக்கார்த்தியல்” எனும் இந்தச் சிறுகதைத்தொகுப்பு. பதினொரு கதைகள் கொண்ட இந்தத்தொகுப்பு 2023 வருடத்திற்கான யுவபுரஸ்கார் விருது பெற்றது. தொகுப்பின் தலைப்புச்சிறுகதையான “திருக்கார்த்தியல்” வென்ற பரிசுகள் எண்ணிலடங்கா.

இத்தொகுப்பிலுள்ள கதைகளில் பல, வறுமையினாலும் பசியினாலும் சிதைக்கப்பட்ட வாழ்வுடைய சிறுவர்களையே கதைமாந்தர்களாகக்கொண்டவை. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களத்தைக்கொண்டது, அனுபவங்களைக்கொண்டது எனினும் அச்சிறுவர்கள் அனைவருக்கும் ஒரே முகம். இன்னும் சற்றுக் கூர்ந்தால் அந்த எல்லாச்சிறுவர்களும் ஒன்றே என்ற புள்ளியில் அமைவர். விதியாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு விளிம்பு நிலையிலிருக்கும் முகமற்ற அக்குழந்தைகளுக்கு ராம் தங்கம் தன்னுடைய மொழியின் வழி ஓர் அடையாளம் கொடுத்திருக்கிறார்.

சபிக்கப்பட்ட தங்கள் வாழ்வின் பாடுகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்த இந்தச்சிறுவர்களின் வாழ்வியல் இன்னல்களை நூலாசிரியர் எவ்வித ஒப்பனையுமின்றி அலங்கார வர்ணனைகளின்றி அவர்களின் களத்திலிருந்தே அப்படிக்கப்படியே தரிசிக்க வைக்கிறார். குழந்தைத்தொழிலாளர் முறை பெருமளவில் தடை செய்யப்படாத அக்காலத்தில் நாமும் இத்தகைய சிறுவர்களை எச்சில் இலை எடுப்பவனாக, சைக்கிள் கடையில், ஜூஸ் கடையில் எடுபிடியாக, ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கிப்படிப்பவனாக, ஹோட்டல்களில் எச்சில் தட்டுகளையும் கிண்ணங்களையும் கழுவுபவனாக, வீடுகளுக்குச் செய்தித்தாள், பால் போன்றவற்றைப் போடுபவனாக, ஷூ பாலீஷ் போடுபவனாக என பல்வேறு உருவங்களில் கண்டிருக்கக்கூடும். அவர்கள் அத்தனை பேரையும் இணைக்கும் புள்ளியாக இருப்பது ‘பசி’. கொடிது கொடிது இளமையில் வறுமை என்றாள் அவ்வைப்பாட்டி. படிக்க வேண்டிய வயதில் தன் குடும்பத்தினரின் வயிற்றுக்காகவும் உழைக்க வேண்டியிருப்பது எத்தனை பெரிய துயரம்.

இத்தொகுப்பின் ஒரு சில சிறுவர்கள் அன்னையாலும் குடும்பத்தாலும், கையாலாகாமல் கைவிடப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் இருந்தும் யாருமில்லாமல் இருப்பது பெருவலி. ஒரு துண்டு கொழுக்கட்டைக்காக அலந்து ஊரின் தெருக்களில் நடந்து ஏமாந்து இறுதியில் சபித்து அழும் செந்தமிழின் கண்ணீருக்கு அடர்த்தி அதிகம். செந்தமிழைப்போலவே பாதித்த இன்னொருவன் வினோத். ‘கடந்து போகும்’ என்ற கதையின் நாயகனான அவனை எளிதில் கடந்து போக இயலவில்லை. உயிர் போகும் வாதையிலிருக்கும் நிலையிலும் அவனிடம் கடை முதலாளி வேலை வாங்குவது அப்பட்டமான உழைப்புச்சுரண்டல். இந்தச்சிறுவர்களைப்போல் கையறு நிலையில் இல்லாவிட்டாலும் தாயால் கைவிடப்பட்டு, வீட்டை விட்டே செல்வதன் மூலம் வளர்ந்த இளைஞரான ராஜீவும் அதே கோட்டிலமைகிறான்.

பிள்ளைப்பசியோ.. பெருந்தீயோ! என்பார்கள். அந்தப்பசியே இத்தொகுப்பிலிருக்கும் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. சிறுவர்களுக்கு வயிற்றுப்பசி எனிலோ பெரியவர்களுக்கு அகங்காரப்பசி, அதிகாரப்பசி. அந்தப்பசிக்காக அறத்தை மீறத்துணிந்த பெரியவர்களைப்போலல்லாமல் வறுமையிலும் செம்மையாக தன்னறத்தை மீறாமலிருப்பவர்கள் இச்சிறுவர்கள். இவர்களின் வாழ்வின் துயரை அவர்களின் மொழியிலேயே சொல்லும்போது அதன் வீரியம் நம்மைத்தாக்குகிறது. அப்பா அம்மா இல்லாத நிலையில் ஆதரவற்றோர் விடுதியில் தங்கிப்படிக்கும் நிலையிலும் சாதி எனும் கொடிய அரக்கனின் கைகளில் சிக்கி, வாழ்வே கேள்விக்குறியாகும் கார்த்திக் என்றாவது திரும்பி வந்து விட மாட்டானா என நம்மை ஏங்க வைக்கிறது, ‘பானி’யின் மரணமோ பெருவலியுடன் நம்மைப்புரட்டிப்போடுகிறது.

பால்யத்தையும் கல்வியையும் இழந்து விளிம்பில் வாழ நேரும் இவர்கள் முன், வாழ்வு தன் இருண்மை மற்றும் ஒளி பொருந்திய இரு கரங்களையும் நீட்டுகிறது. தாம் சந்திக்க நேரும் மனிதர்கள் ஏற்படுத்தும் தாக்கங்களுக்கேற்ப அவர்கள் அக்கரங்களிலொன்றைப் பற்றிக்கொள்ளக்கூடும். அதற்கேற்ப அவர்களின் திசை மாறவும் கூடும்.

நாஞ்சில் நாட்டு மண்ணில் நிகழும் இக்கதைகள் அம்மண்ணின் மொழியிலேயே, வட்டார வழக்கிலேயே அதே சமயம் அனைவரும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் சொல்லப்பட்டிருப்பது மிகச்சிறப்பு. இக்கதைகளில் சொல்லப்படும் மனிதர்கள் நம்முன் நேரடியாக வாழ்கிறார்கள். அதனாலேயே பெரிய நாடாரையும், மூத்த பிள்ளையையும் கூட நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கனகச்சிதமான சித்தரிப்பும் இயல்பான, அதே சமயம் வலுவான கதைமொழியும் கொண்டு வலிகளுடனும் காயங்களுடனும் வெளிப்பட்டிருக்கும் கதைமாந்தர் நம்முள் கடத்தும் அவ்வலியை நம்மால் வெகுநாட்களுக்கு இறக்கி வைக்க இயலாது. அதுவே இத்தொகுப்பின் வெற்றியும் கூட.

டிஸ்கி : இத்தளத்தில் இது எனது 500 ஆவது இடுகை.

Thursday 25 July 2024

படமும் பாடலும் (7)


வாலைப்பெண் கைக்குடம் வீழ்ந்துடைந்த நீர்பெருகி
சாலையோரம் மண்நனைத் தன்னதே மங்குல்
அலைவுற்று மீவெடித் தாசாரம் வீசி
மலைமூழ் குமருவி நீர்.
*******************************************************************

பெடையு மடையு மிடையூறு டைத்தாய்
அடைமழையில் கீச்சுங் கிளி.

******************************************************************

காழ்ப்பும் அழுக்காறுங் கொண்ட கலகத்தார்
வாழ்வையோ போமென செப்பு
********************************************************************

அனுபவங்க ளோடுரைக ளாகுமே யாசான்
அனுதினம் சென்னியணி வோம்.
(ஒருவிகற்பக் குறள் வெண்பா)
*********************************************************************

தனியாய்ப் புலம்புமெனைத் தேற்றுவாள் தாயும்
கனிவாய் அறுபடைக்குக் கந்தனாம் அண்ணன்
இனிதாய் அரசில் பனிமலையி லீசன்
தனித்தபின் நானுந் தனி.

P.C: Yadhavan Raghavan

Wednesday 10 July 2024

படமும் பாடலும் (6)


பற்றுந் தளிரும் படருமி ளங்கொடியும்
முற்றும் பழுத்து முறிய விருப்பதுவும்
சாதல்வ ரையன்பு செய்வதே நாநிலத்தில்
காதலுக் கென்றும் சிறப்பு. 

(பல விகற்ப இன்னிசை வெண்பா)


நடைப்பயிற்சி ஜிம்மோடு நாளும் உழைத்தும்
எடைகுறையா சோகத்தில் ஏங்கி சடையா
தடைபல உண்டபினும் தீப்பசி கொல்ல
படைத்தாள் பனீர்புர்ஜி பாவ்

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

******************************************************

நுங்கிள நீருடன் நல்மோருந் தீஞ்சாறும்
பொங்குபுனல் முங்குதலு மாகுமே- நங்காய்கேள்
எங்கிலும் செய்யோன் எரிக்கும் சுடுகதிர்
தாங்க இவையே சிறப்பு

*****************************************************************


முன்கோபி மூத்த சினம்பெருக்கி யன்னதே
மன்றிலெ ரிக்கும் வெயில்
*********************************************************************


விழிபூத்துப் பல்லார் வகித்த பொறுதி
வழிகாட்ட சூறையாய் வந்ததே வான்நீர்
மழைத்தாரைப் பந்தலில் மும்பை மிதத்தல்
பழையநாள் தொட்டு வழக்கு.

Sunday 23 June 2024

சாரல் துளிகள்..


வானவில்லை வரைந்து முடித்தபின் வண்ணங்குழைத்த தூரிகையைச் சற்றே உதறியது மேகம். வண்ணத்துளிகள் படிந்த சிறகுகளை ஒவ்வொரு பூவிலும் ஒட்ட வைத்தபடி பறந்து கொண்டிருக்கின்றன வண்ணத்துப்பூச்சிகள்.

நட்சத்திரங்களை இழந்த வானம் கலங்காதிருக்க, மேகங்கள் மட்டும் ஓரமாய்ப்போய் அழுது விட்டு வருகின்றன.

வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு தன்னியல்பு கழன்று, இறுதியில் நமக்கே நாம் அன்னியராகத் தெரிகிறோம். சிலர்  அதை பக்குவம் என்கின்றனர், சிலர் அனுபவப்பாடம் என்கின்றனர், சிலரோ திக்குத்தெரியாத உலகில் அப்போது, பழைய தன்னைத் தேடி அலைகின்றனர்.

இன்னொருவரின் அடியொற்றிச் செல்வதுதான் எவ்வளவு சௌகரியமாயிருக்கிறது! வழிசமைத்துச் செல்லும் கால்களில் கல்லும் முள்ளும் குத்துவதை மட்டும் பிறர் காண்பதேயில்லை.

ஊரென்ன சொல்லும், உலகம் என்ன சொல்லும்? என எல்லாவற்றுக்கும் கவலைப்பட்டுக்கொண்டிருக்காதீர்கள். எத்திசையில் நகர்வது என குழம்பிக்கொண்டேயிருந்தால் முதல் அடியைக்கூட எடுக்க முடியாது.

நேற்றைய சூரியனின் கதகதப்பில் இன்றைய தானியத்தைக் காய வைக்க முடியாது. காலங்கடந்த பின் ஆற்றாமையைத்தவிர வேறேதும் எஞ்சுவதில்லை.

நினைவுகள் சொட்டி நனைந்த வெளியெங்கும் அரும்பும் மொக்குகளை மலர வைக்க முயல்கிறது அதே பௌர்ணமி இரவு, வெடித்துப்பரவுகின்றன  ஓராயிரம் பௌர்ணமி நிலாக்கள்.

ஒளிந்து பிடித்து விளையாடும் குழந்தையைப்போல் மலைக்குகைகளுக்குள் மறைந்து மறைந்து விளையாடுகிறது ரயில்.

சிங்கத்தின் பிடரியையும் யானையின் மத்தகத்தையும் கூட தொட்டுவிட்டு மீண்டுவிடலாம் போலிருக்கிறது, மழையைத்தின்று வெயிலை அருந்தி எரிமலைச்சரிவில் விளையாடும் இந்த மனதை மீட்டுக்கொண்டு வருவதுதான் பெரும்பாடு.

அவரவர் கால்தடங்களைப்பதித்துச்சென்ற மணல் வெளியில் தன் தடத்தையும் வரைந்து சென்றது அலை.

LinkWithin

Related Posts with Thumbnails