Thursday, 11 July 2019

முப்பொழுதும் க்ரீன் டீ..

உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில், உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டத்துவங்கியிருக்கும் காலகட்டம் இது. ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள், மிதமான மற்றும் கடுமையான உடற்பயிற்சி முறைகள் என ஒரு சாரார் தீவிரமான முனைப்பிலிருக்க, இன்னொரு பக்கம் நோகாமல் நோம்பு கும்பிடும் மக்களும் உள்ளனர். இரண்டாம் வகை மக்களுக்கு க்ரீன் டீ ஓரளவு உதவுகிறது. ஒரு நாளைக்கு மூன்று கப் க்ரீன் டீயுடன் மிதமான உடற்பயிற்சியும் மேற்கொண்டு வந்தால் உடற்பருமன் மற்றும் எடை குறைந்து கட்டுக்குள் வருகிறது. 

க்ரீன் டீக்கும் சாதாரணமாகக் கடைகளில் கிடைக்கும் தேயிலைத்தூளுக்கும் என்ன வித்தியாசம்?. பறிக்கப்பட்ட தேயிலைக்கொழுந்துகளை முறைப்படிப் பதப்படுத்தாமல் அதன் பசுமை அதிகம் மாறிவிடாமல் வைத்தால் அதுவே பசுந்தேயிலை எனப்படும் க்ரீன் டீ. பதப்படுத்தப்பட்ட தேயிலை கறுப்பு வண்ணத்தில் இருக்கும். பசுந்தேயிலை தூளாகவும் காய்ந்து சுருங்கிய இலைகளாகவும் கடைகளில் கிடைக்கிறது. இதில் தூளை விட இலைகள் மிகவும் சிறப்பான பலன்களைத்தருகின்றன. சாதாரணமாக ஒரு நாளைக்கு மூன்று கப் க்ரீன் டீ குடிப்பதே போதுமானது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே.

க்ரீன் டீயிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்டுகள் நமக்கு பல வகையிலும் பலன் கொடுக்கின்றன. இவை நம் உடலின் மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி கலோரிகளை எரிக்கின்றன. இதனால் உடலின் அதிகப்படி கொழுப்புகள் கரைந்து உடல் மெலிந்து, எடை குறைந்து, வயதான தோற்றம் மாறி இளமைத்தோற்றம் கிடைக்கிறது. உடல் எடை மற்றும் கொழுப்பு காரணமாக சீர் கெட்டிருந்த ஆரோக்கியம் சீர் படுகிறது. இரத்தத்திலிருக்கும் கொழுப்பு கரைவதால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.  க்ரீன் டீயில் குறைந்த அளவிலிருக்கும் காஃபின் நமது மூளை நரம்புகளைத்தூண்டி, அதன் செயல்திறனை அதிகரித்து நம்மை சுறுசுறுப்பாக வைக்கிறது. ஞாபகசக்தியும் மேம்படுகிறது. அல்ஸீமர் எனும் மறதி நோயிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. கட்டிகளைக் கரைத்து புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகச் சொல்லப்பட்டாலும் அது இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. அது சம்பந்தமாக ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.
நிறைய சாதகங்கள் இருப்பது போல் ஒரு சில பாதகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. நாணயத்துக்கு இருபக்கங்கள் இருப்பது போல் என்றும் சொல்லிக்கொள்ளலாம். கொழுப்பைக்கரைக்கும் தன்மை காரணமாக ஸ்ட்ரோக், மாரடைப்பு போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்தாலும் அதே தன்மையின் காரணமாக ரத்தத்தைச் சட்டென்று உறைய விடாமலும் தடுக்கிறது. ஆகவே ரத்தத்தை நீர்க்கச்செய்யும் மருந்துகள், ஆஸ்ப்ரின், விட்டமின் கே போன்றவற்றை  எடுத்துக்கொள்பவர்கள், Anxiety எனும் மனப்பதற்றப் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்த பின் க்ரீன் டீயை எடுத்துக்கொள்வது நன்று. ஏனெனில் ரத்தம் ஏற்கனவே நீர்த்து இருக்கும்பொழுது அதை இன்னும் நீர்க்கச்செய்யும் விதமாக க்ரீன் டீயை அருந்தினால் இரத்த அழுத்தம் அதிகமாகக்கூடும். படபடப்பு, லேசான மயக்கம் போன்றவை ஏற்படும். க்ரீன் டீயிலிருக்கும் காஃபின் மனப்பதற்றத்தை மேலும் அதிகரிக்கச்செய்யும். பொதுவாகவே காஃபின் ஒவ்வாமை உள்ளவர்கள் காஃபி, டீ வகைகளைத் தவிர்ப்பது சிறந்தது.

க்ரீன் டீயை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக்கூடாது, அசிடிட்டி, அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் க்ரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது எனவும் கூறப்படுகிறது. வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடித்தால் வயிற்று உபாதைகள் வரும் என்று கேள்விப்பட்டாலும் அவ்வாறு வரவில்லை என்று சொந்த அனுபவத்தில் கண்டு கொண்டேன். கொதிக்கக்கொதிக்கவும் இல்லாமல் ஆறிக் குளிர்ந்தும் இல்லாமல் பொறுக்கும் சூட்டில் குடித்தால் துவர்ப்பு தெரியாது. 

க்ரீன் டீயைத் தயாரிப்பது மிகவும் சுலபம். இதற்கு பால் தேவையில்லை. கொதி நிலையிலிருக்கும் ஒரு கப் வெந்நீரில் சிறிது தேயிலைத்தூளையோ அல்லது க்ரீன் டீ பாக்கெட்டையோ போட்டு இரண்டு நிமிடம் மூடி வைத்து விட வேண்டும். பின் வடிகட்டிக் குடிக்கலாம். சுவைக்கேற்ப சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளலாம். அப்படியில்லாமல் அடுப்பில் வைத்தும் தயாரிக்கலாம்.
இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். அதிலேயே சிறிதளவு இஞ்சியைத் துருவிப்போட்டுக்கொள்ளவும். விரும்பினால் இஞ்சிக்குப் பதிலாக அரை ஸ்பூன் சுக்குப்பொடியையும் போட்டுக்கொள்ளலாம். மழை மற்றும் குளிர் காலங்களில் சுக்கு தொண்டைக்கு எவ்வளவு இதம் தரும் என்பதைக் கூறித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லைதானே? கால் ஸ்பூன் டீ மசாலாவையும் சேர்த்துக் கொதிக்க வைத்தால் ருசியும் மணமும் அதிகரிக்கும், புதிதாக அருந்த ஆரம்பித்திருப்பவர்களுக்கு துவர்ப்புச்சுவை உறுத்தாது. கொஞ்சம் நாக்குக்குப் பழகியபின் டீ மசாலா போடுவதை நிறுத்திக்கொள்ளலாம். எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்ததும், இரண்டு டீ சாஷேக்களையோ அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் க்ரீன் டீத்தூளையோ போட்டு, அடுப்பை குறைந்த தணலில் ஒரு நிமிடம் வைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக டீத்தூளின் சாரம் தண்ணீரில் இறங்கட்டும். லேசான பொன்னிறத்திற்கு தண்ணீர் மாறுவதைக் கண்கூடாகக் காணலாம். சட்டென்று வேலை ஆக வேண்டுமென்று அதிகத்தணலில் வைத்தால் டீ கடுத்து ருசி கெட்டு விடும். குடிக்கவே இயலாது.

ஒரு நிமிடத்திற்குப் பின் இறக்கி வடிகட்டி, ஒரு கப் தேநீருக்கு அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து விட்டு ஒரு டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து பயன்படுத்தலாம். மீதமிருக்கும் ஒரு கப் தேனீரை ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்தால் அடுத்த முறைக்கு ஆகும். என்னிடமிருக்கும் மில்டன் ஃப்ளாஸ்க் 22 மணி நேரம் வரை சூடு தாங்குகிறது. ஆகவே கொஞ்சம் மொத்தமாக தேனீர் தயாரித்து அதில் ஊற்றி வைத்துக்கொள்வது வழக்கம். வேண்டும்போது சட்டென கோப்பையில் ஊற்றி சுடச்சுட அருந்தலாம். கேஸ் செலவும் மிச்சம்.  ஆஃபீசுக்கு டப்பாவுடன் வழக்கமாக வெந்நீர் எடுத்துச்செல்லும் என் மகள் தற்பொழுதெல்லாம் தானே க்ரீன் டீ தயாரித்து, எடுத்துச்செல்ல ஆரம்பித்திருக்கிறாள். அப்படியொரு பொழுதில் அதை வீடியோவாக எடுத்து  என்னுடைய யூ டியூப் சேனலில் வலையேற்றியதை இங்கேயும் பகிர்ந்திருக்கிறேன். கண்டு க்ரீன் டீ தயாரித்து பலனடையுங்கள்.

பால் மற்றும் பால் பொருட்கள், நமது உடல் எடையைக் கூட்டுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறதென்று சொல்லப்படுகிறது. பால் சேர்க்காமல் தயாரிக்கப்படுகிறது ஆகவே, க்ரீன் டீயால் எடை கூடுதலாகாது. கொழுப்பைக் கரைப்பதனால் எடை குறையவே செய்யும். தயாரித்த பின் எஞ்சும் சக்கையை நன்கு ஆறவிட்டு, அதன் பின் செடிகளுக்குப் போட்டால் நல்ல உரமாகிறது. ஏனோதானோவென பூத்துக்கொண்டிருந்த எங்கள் வீட்டு ரோஜா, டீத்தூள் உரத்தைப்போட ஆரம்பித்தபின் கப்பும் கவறுமாகக் கிளை விட்டு, முன்பை விட அதிகமாகவும் பெரிதாகவும் பூக்க ஆரம்பித்திருக்கிறது. வடிகட்டிய டிக்காக்ஷனில் ஃபேஸ் பேக்கைக் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற விட்டுக் கழுவிக்கொண்டால் சுருக்கங்கள் குறைந்து தோல் மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails