Monday, 14 May 2018

ஃபேஸ்புக்கில் பேசியவை - 13

பறந்து சென்ற பசுங்கிளி பாதிக்கனவில் மிழற்றும்போழ், சித்தங்கலங்காதிரென்று செப்புமோ சின்னக்கிளி..

சுற்றி வளைத்து, மென்று விழுங்கி சொற்கள் உதிர்க்கப்படுமுன் கண்கள் நேரடியாகச் சொல்லி விடுகின்றன.

ஒரு நூறு யுகங்களாய் தொடுவான மண்ணுள்ளுறங்கிக் காத்திருக்கிறது அவ்விதை. அதற்கென்று விதித்த காற்றும் நீரும் வரம் கொடுக்கும் வரை அதன் தவம் தொடரும்.

எப்போது பிறக்கும்.. எப்போது இறக்கும் என்ற இரு காத்திருப்புகளின் நடுவான இடைவெளியில் எத்தனையோ காத்திருப்புகளில் வாழ்வு கடக்கிறது.

குடிப்பவன் ஈரல் வெந்து சாகிறான், அவன் குடும்பம் மனம் நொந்து சாகிறது.

எட்டாத பொருளாயின் கிட்டவில்லையெனில் சட்டென மறக்கலாம். கையிலிருந்து தட்டிப்பறிக்கப்பட்டது அதன் தழும்பையல்லவா விட்டுச் சென்றிருக்கிறது.. காலத்துக்கும் மறக்க முடியாதபடி.

ஓரலை தணிகிறதும் ஒன்று கொப்புளித்து எழுவதுமாக வாழ்வுலையில் வெந்தவியும் ஆன்மாவின் அடியாழத்தில் மின்னுகிறது சிறுதுண்டு வானவில்.

மெல்லச்சுழன்று கொண்டிருக்கும் அம்மாயச்சுழல் இரண்டாம் பேருக்குத் தெரியாமல் இழுத்துப்போட்டிருந்த அச்சிற்றெறும்பினருகில் மிதக்கும் செவ்வண்ண வாதுமையிலையில் ஏற்கனவே அடைக்கலம் புகுந்திருந்த கட்டெறும்பு முதலாம் எறும்பை வன்மத்துடன் நோக்குகையில் மேலும் வேகத்துடன் நகர ஆரம்பிக்கிறது அச்சுழல்..

முன்னாளில் பசுஞ்சிற்றாடை அணிந்த குமரியாய், இந்நாளில் குல்மொஹரும் சரக்கொன்றையும் சூடிய மங்கல மகளாய்த் திகழும் அம்மலை, சின்னாளில் வயோதிகம் கொண்டு வெறுமை கொள்ளும்போது அதைக் கை விடுவதாயில்லை கனி சுவைத்த பட்சிகள். அம்மலையைத் தூக்கிக்கொண்டு இதோ பறந்து கொண்டிருக்கின்றன அமிர்தசாகரம் நோக்கி.

மண்ணிலிருந்து முகிழ்த்தெழும் தாவரத்தின் செழிப்பு புகழப்படும் அளவுக்கு அதன் வேரின் உழைப்பு கண்டு கொள்ளப்படுவதில்லை.

Tuesday, 8 May 2018

ஃபேஸ்புக்கில் பேசியவை - 12

வெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல்.

தேங்கி நிற்கும் சேற்று நீரில் தன் முகத்தை வியந்து கொண்டிருக்கிறது குருவி, தின்ன வந்த மண்புழுவை மறந்து விட்டு.

மனித மனத்தை விட ஆகச்சிறந்த கால இயந்திரம் ஒரு போதும் கண்டுபிடிக்கப் படப் போவதில்லை. ஊசலைப்போல் இறந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்குமாகப் பயணித்துக் கொண்டிருந்தாலும், இறந்தகாலத்திற்குச் சென்றுவிட்டு அங்கிருந்து கிளம்பும்போது மட்டும் சற்று அதிகமாகவே சுணங்கிக் கொள்கிறது. நிகழ்காலக் கடமைகளென்று எதுவுமில்லாவிட்டால் அதை அங்கேயே விட்டுவிடலாம்தான்.

மாந்தோப்பை அழித்து எழுப்பிக்கொண்டிருக்கும் மேம்பாலத்தின் கம்பியிலமர்ந்து, மேம்பால இடுக்குகளில் காகம் கூடு கட்டுவதெக்காலமென ஏக்கத்துடன் யோசிக்கிறது குயில்.

இதயத்தை ரணமாக்கி ரத்தம் கசியச்செய்யும் மென் சோகத்துடன் கூவும் இக்குயிலின் குரலில் துளிர்க்கின்றன அன்றொரு நாள் ஆடித்திரிந்த வசந்தத்தின் அனைத்து மலர்களும்.

சரளைக்கற்கள் நிரம்பிய சாலையில் வெறுங்காலால் நடந்து பழக்கப்பட்டவன், நல்ல சாலையில் நடக்கும்போது சற்றே கூசுகிறான். துரோகங்களையே சந்தித்துப் பழகிப்போனவன் அவன் சந்திக்கும் முதல் ஆதுரத்தை சற்று ஐயத்துடனேயே நோக்குவதைப்போல்,  அவனுக்கு அது சற்று ஒவ்வாமையாய்க்கூட இருக்கிறது.

தூளியிலசையும் சிறு குழவி போல், மெல்ல காற்றிலசைகிறது சிறு மலர். இந்நாளை இனிமையாக்க இது போதும்.

கூட்ட நெரிசலில் தவறிய குழந்தையாய் அதோ சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது, எனக்கான பிரியம் பொதிந்த கையசைப்பு.

வண்ணத்துப்பூச்சியின் சிறகணைந்து, கனவொன்றைத் தேடி பிரபஞ்சத்தில் நீந்திக் கொண்டிருக்கிறது எனதொரு நேசம். இப்புவியில் முகிழ்த்திருக்கும் அக்கனவு வாசம் பரப்பும்போது அதில் படியக்கூடும் என் நேசத்தின் நிறம்.

எருக்கந்தோட்டத்தில் பூத்த மல்லிகை சற்று மிதமாகத்தான் மணக்கிறது. அதனாலென்னவென்று கலந்து கட்டி மாலையாய் அணிந்திருக்கிறார் அரசமரத்தடிப் பிள்ளையார்.

LinkWithin

Related Posts with Thumbnails