Saturday, 15 August 2015

ச்சலோ ஷிர்டி, ஷிங்கணாப்பூர்..

லட்டு தின்னக் கசக்குமா என்ன? அதுவும் ஷிர்டி சாயிபாபா கொடுக்கும் லட்டு. கூடவே ஷிங்ணாப்பூரிலிருக்கும் சனீஸ்வரர் தன் பங்குக்கு தேங்காய் பர்பியும் தரப்போவதாகச் சொன்னார். சென்று தரிசனம் செய்து விட்டு அப்படியே நலம் விசாரித்து வரலாம் என்று அவர்கள் மேல் பாரத்தைப் போட்டு விட்டுக் கிளம்பிப்போய் வந்தாயிற்று.

முந்தைய பயணவிவரங்கள்

http://amaithicchaaral.blogspot.com/2011/01/blog-post_27.html

http://amaithicchaaral.blogspot.com/2011/02/blog-post.html

http://amaithicchaaral.blogspot.com/2011/02/blog-post_03.html
லட்டுடன் தேங்காய்பர்பியும்..
சென்ற முறை அவதியவதியாக ஓடிப்போய் வந்ததைப்போலில்லாமல் இந்த முறை பயணத்தை சற்று நிதானமாக அமைத்துக்கொண்டோம். ஷிங்கணாப்பூரிலிருக்கும் சனீஸ்வரரை தரிசனம் செய்து விட்டு, ஷிர்டி சென்று அங்கே இரவு தங்கி மறுநாள் சாயிபாபாவைத் தரிசித்து விட்டு, மதியம் கிளம்பினால் இரவுப்பொழுதுக்குள் மும்பை வந்தடைந்து விடலாமென்று திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன?

ஒரு நாள் பயணத்தை இரண்டாகப் பிரித்துக்கொண்டதால் சற்று நிதானமாக காலை எட்டரை மணியளவில் கிளம்பலாம் என்று நினைத்திருந்தாலும் கடைசி நிமிட வேலைகள், சமீபத்தில் லேசிக் சிகிச்சை முடித்திருக்கும் மகளுக்கு கண்ணில் மருந்து ஊற்றுதல் போன்ற லௌகீகங்களை முடித்து விட்டு, வண்டிக்கும் எங்களுக்கும் பெட்ரோல் போட்டுக்கொண்டு கிளம்ப பத்து மணியாகி விட்டது. சென்ற முறை ஒவ்வொரு இடமாக நின்று ஒவ்வொருத்தரிடமாக வழி விசாரித்துச் சென்றதைப்போல் இம்முறையும் ஆகி விடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக ரங்க்ஸ் வழியை காகிதத்தில் எழுதிக்கொண்டு வந்திருந்தார். அதை எழுதியிருந்த நேரத்திற்கு மேப்பை ப்ரிண்ட் எடுத்திருக்கலாம். ஹூம்.. :-) 



மும்பை-பூனா எக்ஸ்ப்ரஸ் வழியில் படான் குகை உட்பட ஒவ்வொரு குகைப்பாதைக்குள்ளும் மலை வளைவுகளிலும் லேசான மழையினூடே எங்கள் எக்ஸ்ப்ரசும் புகுந்து பயணப்பட்டது.  மழைக்காலமாதலால் மலைமுகடுகளும் சிகரங்களும் மேகத்தொப்பி அணிந்து கொண்டிருந்தன. வழியில் பழுதடைந்து விடும் வாகனங்களுக்குச் சிகிச்சையளித்துக் காப்பாற்ற ஸ்பானர், ஸ்க்ரூ ட்ரைவர் சகிதம் ஆங்காங்கே மொபைல் டாக்டர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இனிமேல் கனரக வாகனங்களுக்கு மட்டுமே சாலைச்சுங்க வரி வசூலிக்கப்படும் என்று புதியதொரு சட்டம் வந்திருப்பதால் எல்லா டோல் கேட்டுகளிலும் சிறிய வாகனங்களுக்கு டாட்டா காட்டி வழியனுப்பி வைக்கிறார்கள்.
இங்கிருந்து ஷிங்கணாப்பூர் வரையிலுமான மொத்தப்பாதையிலும் இரண்டு இடங்களில் மட்டுமே வரி கட்டினோம். கூகிளாரிடம் வழி விசாரித்து ரங்க்ஸ் ரகசிய பாஷையில் எழுதிக்கொண்டு வந்திருந்த விவரங்கள் புரிபடாமல் ஒரு கட்டத்தில் அதைக்கடாசி விட்டு “நேவிகேஷனாய வித்மஹே ஜிபியெஸ்ஸாய தீமஹி தன்னோ கூகிள் ப்ரசோதயாத்” என்று கூகிளாரிடம் நேரடியாகச் சரண்டரானோம். அவர் அனுப்பிய அம்மணி அசரீரியாய் “நேராப்போய் லெப்டில் திரும்பு.. அக்கம்பக்கம் பார்க்காம இந்த ரோட்டிலேயே நேராப்போ” என்றெல்லாம் திருவாய் மொழிந்து எங்களை சூஷ்ம உருவில் கைப்பிடித்து வழி நடத்திச்சென்றார். பயணங்களின்போது வழக்கமாய் நாங்கள் சொல்லும் யோசனைகளை இந்தக்காதில் வாங்கி அந்தக்காதில் விடும் ரங்க்ஸ் இப்பொழுது கூகிளார் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு ஸ்டியரிங்கால் நிறைவேற்றிக்கொண்டிருந்தார். என்னவொரு மந்தஹாசம்!! “ஆஹா.. ஆஹா.. சயின்ஸ் என்னமா முன்னேறியிருக்கு” என்று பாராட்டுப்பத்திரம் வேறு. கிர்ர்ர்ர்ர்ர்ர்..

மும்பை-ஷிங்கணாப்பூர் பாதையில் செல்லும்போது சாப்பாட்டைப்பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. சீரான இடைவெளிகளில் “விட்டல் காமத்”தின் ரெஸ்டாரண்டுகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கின்றன. மோரில் சிலபல வஸ்துகளுடன் புளிக்கரைசலையும் கலந்து தயாரிக்கப்படும் “சோல் கடி” என்றொரு அற்புத ருசி கொண்ட பானம் இங்கெல்லாம் கிடைக்கிறது. அஹமத் நகரை நெருங்கும்போது “smiling stones”ல் சற்று இளைப்பாறினோம். முந்தைய தடவை சென்றபோது இருந்த ஈமுக்கோழிகளைத் தேடினேன். கண்ணில் தட்டுப்படவில்லை. வாத்துக்கூட்டம் மட்டும் கொட்டகைக்குள் ஓய்வில் இருந்தன. 
ஷிங்கணாப்பூர் செல்லும் வழியெங்கும் கம்பங்காடுகளும், சோளக்கொல்லைகளும், கரும்புத்தோட்டங்களும், மக்காச்சோளக்கொல்லைகளுமாக கண்ணுக்குக் குளிர்ச்சியாய் பசுமை நிறைந்திருக்கிறது. ஒன்றிரண்டு வயல்களில் முட்டைக்கோஸும் விளைந்திருக்கக்கண்டோம். போட்டோ எடுக்கக்கூட நிற்காமல் என்னதான் அடித்துப்பிடித்து விரைந்தாலும் ஷிங்கணாப்பூரை அடையும்போது மாலை நான்கு மணி ஆகிவிட்டது. 

முன்னைக்கு இப்பொழுது கோயில் நிறையவே மாறியிருக்கிறது. அழுக்கும் சாக்கடையுமாக இருந்த இடத்தில் கோயிலைப்போலவே தோற்றம் கொண்ட வாகன நிறுத்துமிடம் ஒன்று கோயில் நிர்வாகத்தால் கட்டப்பட்டு வருகிறது. முன்பு போல் அதிக நேரம் வரிசையில் நின்று சனீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்ய அனுமதியில்லை. ஈரத்துணியுடன் ஆண்கள் மட்டும் வரிசையில் நின்று நல்லண்ணெய் அபிஷேகம் செய்து வந்த சம்பிரதாயம் கடாசப்பட்டு விட்டது. ஆகவே வளாகத்தில் நிலவி வந்த எண்ணெய் வாசனையும் மறைந்து விட்டது. இப்பொழுதெல்லாம் மூர்த்தியின் அருகே செல்லவும் யாருக்கும் அனுமதியில்லை. மொத்த பீடமும் இப்பொழுது கம்பிச்சிறைக்குள் இருக்கிறது. செல்லும் மக்கள் தாங்கள் கொண்டு செல்லும் தேங்காய், பூக்களை பீடத்தின் படிக்கட்டில் வைத்து வணங்கிச்செல்கிறார்கள். உணர்ச்சி மேலிட்டு சில பக்தர்கள் மலர்மாலைகளை சனீஸ்வரரின் மூர்த்தியின் மேல் எறிகிறார்கள். அவற்றையெல்லாம் அவ்வப்போது ஒரு கோவில் ஊழியர் அகற்றி, மூர்த்தியைப்போர்த்தியிருக்கும் சால்வையை மற்றும் சூட்டியிருக்கும் மாலையை மாற்றி புதிது சூட்டுகிறார்.

கொண்டு செல்லும் எண்ணெய்யை அங்கிருக்கும் ஒரு தொட்டியில் கொட்டி விட்டால் மோட்டார் மற்றும் குழாய்கள் மூலம் அது எடுத்துச்செல்லப்பட்டு மூர்த்திக்கு அபிஷேகம் (ஷவர் பாத்) செய்யப்படுகிறது என்று தேங்காய்ப்பழக்கடையில் தகவல் கிடைத்தது. ஆனால், பக்தர்களின் எண்ணிக்கையையும், அபிஷேகம் ஆகிக்கொண்டிருக்கும் எண்ணெய்யின் அளவையும் ஒப்பு நோக்கினால் கணக்கு சற்று இடிப்பதைக் கண் கூடாகக்காணலாம். எனக்கென்னவோ தொட்டியில் ஊற்றப்படும் எண்ணெய் அபிஷேகம் ஆவதாகத்தோன்றவில்லை. வேறு ஏதோ சுழற்சி முறை இருப்பதாகத் தோன்றுகிறது.  தேங்காயை முன்னெல்லாம் தனியாகச்சேகரித்து வந்தார்கள். இப்பொழுது நாம் விரும்பினால் அதை உடைத்து பாதியை பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். மேளம், மணி முதலியவற்றுக்கு மட்டுமல்லாமல் இப்பொழுது தேங்காய் உடைக்கவும் கோவில்களில் இயந்திரம் வந்து விட்டது.

ஏகப்பட்ட மாற்றங்கள் வந்த இக்கோவிலில் ஒன்று மட்டும் மாறவில்லை. அதுதான்.. பிரசாதமாகக் கொடுக்கப்பட்ட தேங்காய் பர்பியின் ருசி. மூன்று பர்பிகள் கொண்ட பாக்கெட் பத்து ரூபாய்தான். கொஞ்சம் வாங்கிக்கொண்டு லேசான இருட்டினூடே ஷிர்டியை நோக்கிப்பயணப்பட்டோம்.வீடுகளுக்கு கதவு, ஜன்னல்கள் பொருத்த ஆரம்பித்திருக்கிறார்கள். லாக்கர் வசதியுடன் கூடிய இந்தியன் வங்கிக் கிளையும் போதுமான பாதுகாப்புகளுடன் இருப்பது வெளியிலிருந்து பார்த்தாலே தெரிகிறது. வழியெங்கும் கரும்புத்தோட்டங்களின் எண்ணிக்கைக்கு ஈடாக கரும்புச்சாறு பிழியும் செக்குகள். இவை மாடுகளால் இழுக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. மும்பைக்குள் இப்பொழுது இவை இயந்திரங்களாலும் இழுக்கப்படுகின்றன. கரும்புச்சாறு அருந்த வரும் குழந்தைகளைக் குஷிப்படுத்த பலூன்கள் கட்டப்பட்ட ஊஞ்சல்களும் நிறைய ஆடுகின்றன. நன்கு இருட்டி விட்டதால் வண்டியில் இருந்தவாறு கூட படமெடுக்க முடியவில்லை. ஆகவே, மும்பையில் கண்ட இயந்திரச்செக்கு உங்கள் பார்வைக்கு :-)
கோயிலுக்கு அருகே நிறைய ஹோட்டல்கள் இருந்தாலும் பார்க்கிங் வசதி எப்படியிருக்குமோ என்ற தயக்கத்தால் சற்றுத்தொலைவிலேயே தங்கிக்கொண்டு, மறுநாள் ஷேர் ஆட்டோவில் சாயிபாபாவைத் தரிசிக்கப் புறப்பட்டோம். பயந்தது போல் இல்லாமல் நல்ல ஹோட்டல்கள் கோவிலுக்கு முன்னேயே இருக்கக்கண்டது நிம்மதி. இந்தக்கோவில் அன்று கண்ட மேனி அழியாமல் அப்படியே இருக்கிறது. விதிமுறைகளிலும் ஒன்றும் மாற்றமில்லை. வழக்கம்போல் மொபைல், காமிராக்களை சுருக்குப்பையில் போட்டு ஒப்படைத்து விட்டு தடவல் சோதனைக்குப்பின் நாலாவது நுழைவாயில் வழியாக தரிசனத்துக்குச் செல்லும் வரிசையில் இணைந்து கொண்டோம். 

நகர்ந்து கொண்டே இருந்த வரிசை பதினொன்னரை மணியளவில் ஒரு மண்டபத்தில் நிறுத்தப்பட்டது. ஆரத்திக்கான நேரமாம். நேரில் பார்க்க முடியவில்லையே என்று வருந்தும் பக்தர்களின் குறையைத் தீர்க்கும் பொருட்டு ஆங்காங்கே தொலைக்காட்சிப்பெட்டிகள் வைக்கப்பட்டு ஆரத்தி நேரடியாக ஒளிபரப்பப் படுகிறது. பாபாவின் திருச்சிலையின் மேலும் சமாதியின் மேலும் போர்த்தப்பட்டிருந்த குங்கும வண்ண சரிகைச்சால்வைகளும் மாலைகளும் அகற்றப்பட்டு பச்சை வண்ணச்சால்வைகளும் மாலைகளும் சாற்றப்பட்டு, தூப தீபங்களுடன் ஆரத்தி நடப்பதை விஞ்ஞான வளர்ச்சியின் உதவியால் கண்ணாரக்கண்டோம். கருவறையில் ஆரத்தி நடைபெறும் அதே சமயம் வரிசையில் நிற்கும் பக்தர்களும் ஆரத்திப்பாடல்களைப்பாடி பரவசமடைகின்றனர். நெரிசல் தாங்காத சிறு குழந்தைகளின் அழுகை, சிணுங்கல், விளையாட்டு போன்றவை போனஸாகக் கிடைக்கின்றன.

நகர்ந்து நகர்ந்து சாயிபாபா வீற்றிருந்த பொன்னம்பலத்தை வந்தடைந்தோம். இழுத்து வீசப்படுவதில்லையே தவிர இங்கும் பக்தர்களை “லௌக்கர் ஜா” என்று விரட்ட ஆரம்பித்து வெகு காலமாயிற்று. என்றாலும் திருப்தியாக தரிசனம் செய்ய முடிந்தது. முன்பு போல் நாம் கொடுக்கும் மாலைகள் பாபாவிற்குச் சாற்றப்படுவதில்லை. வாங்கி ஓரமாக வைத்து விட்டு அங்கே குவிந்திருக்கும் மாலைகளிலிருந்து ஒன்றை உருவி பிரசாதமாகத் தருகிறார்கள். மற்றபடி நாம் வாங்கிச்செல்லும் சால்வை, தேங்காய், கடிஷக்கர் பாக்கெட்டுகளை பொருட்படுத்துவதேயில்லை. ஆகவே அதையெல்லாம் வாங்காதிருப்பது நலம். நாங்களும் அவ்வாறே சபதமெடுத்துக்கொண்டோம். தரிசனம் முடித்து நான் மட்டும் லேண்டி பாகைப் பார்வையிடச்சென்றேன். பாபா கையால் வெட்டப்பட்ட எண்கோணக்கிணறு கம்பிவலையால் மூடியிடப்பட்டு யாரும் அருகில் செல்லவியலாதவாறு வேலியுமிடப்பட்டு இருக்கிறது. அதேபோல் அரச/வேப்ப மரங்களின் அருகே அவர் கையால் ஏற்றப்பட்ட நந்தாதீபத்தைத் தேடினேன். என்ன மூர்த்தியென்றே தெரியாத ஒரு சிலையருகில் கல்விளக்கொன்றின் மேல் ஒரு சிறிய அகல் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அகல் புத்தம்புதிதாய் இருப்பதைப்பார்க்கும்போது அது நந்தாதீபமாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஒரு வேளை அந்த கல்விளக்குதான் நந்தாதீபமாக இருந்ததோ என்னவோ?!!.

மியூசியத்தில் அவர் பயன்படுத்திய பொருட்கள், உடுத்தியிருந்த உடை, மாவு திரிக்கப் பயன்படுத்திய திரிகை, மற்றும் அவர் சமாதியடைந்தபின் கடைசியாக அவரைக்கிடத்திக் குளிப்பாட்டிய கட்டில் எல்லாவற்றையும் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். கூடவே பல்லக்கு, சக்கர நாற்காலியும் இருக்கிறது. அன்பளிப்பாகக்கொடுக்கப்பட்ட இந்த நாற்காலியை கடைசி வரை அவர் உபயோகப்படுத்தவே இல்லையாம். இதே மியூசியத்தில், இக்கோவிலில் வைக்கப்படுவதாக இருந்த முரளீதரன் சிலை உட்பட்ட ஐந்து சிலைகளும் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவை நன்கு பராமரிக்கப்படுகின்றன என்பதை அவை புதுக்கருக்குடன் காட்சியளிப்பதிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது.

தரிசனத்திற்காக மக்கள் வரிசையில் நிற்கும் மண்டபங்களில் ஆங்காங்கே, :பூக்கள், மாலைகள் மற்றும் தேங்காய்களை பாபாவின் சிலை மேல் வீசாதீர்கள்” என்றொரு அறிவிப்பைக்காண நேர்ந்தது. பூக்கள், அட்சதை மற்றும் மாலைகளை எறிவதையாவது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தேங்காய் போன்ற எடையுள்ள பொருட்களை சிலை மேல் எறிவது என்ன மாதிரியான பக்தி டிசைன்? என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதேபோல் கோயில்களில் நடக்கும் தள்ளுமுள்ளும் அப்படித்தான்.

மாதக்கணக்கில்,.. சில சமயம் வருடக்கணக்கில் திட்டமிட்டு, தூரதேசங்களிலிருந்து தொலைவைப்பொருட்படுத்தாமல் மணிக்கணக்கில் பயணப்பட்டு, உடல் நலம் சரியில்லையென்றால் அதற்கான முன்னேற்பாடுகளும் செய்து கொண்டு பணத்தைச்செலவழித்து, பொறுமையுடனோ பொறுமையிழந்தோ.. சில சமயம் பிறரின் பொறுமையைச் சோதித்தோ, வரிசையில் நகர்ந்து வந்து விட்டு, இறைவனின் முன் நிற்கும் கடைசி நிமிடத்தில், முன்னால் நிற்பவர்களை இடித்துத்தள்ளி முட்டி மோதி மூர்த்தியைப் பார்த்தும் பாராமலும் கன்னத்தில் போட்டுக்கொண்டு காலில் தேள் கொட்டினாற்போல் ஓடுவார்கள் சிலர். அவ்வளவு நாள் காத்த பொறுமை கடைசி நிமிடத்தில் இவர்களுக்கு எப்படி காணாமற்போகிறது?.. அந்த பகவானுக்கே வெளிச்சம். கொஞ்சம் ஒழுங்கைக்கடைப்பிடித்தால் அத்தனை மக்களும் நல்லபடியாக தரிசனம் செய்யலாமே. என்னவோ போங்க.

திட்டமிட்டபடி மதியம் கிளம்ப முடியாமல் மாலை நான்கு மணியளவில் கிளம்பினோம். திரும்பும்போது நாசிக் நெடுஞ்சாலை வழியாக வரவேண்டும் என்பது திட்டம். கூகிள் வழிகாட்ட சரியான வழியில் பயணப்பட்டோம். நாசிக் வெங்காயத்துக்கும் பெயர் போனது. கோடை காலங்களில் சாலையின் இருபுறங்களிலும் வெங்காய வயல்களைக் காணலாம். அறுவடை நடந்து முடிந்த சமயமாயிருந்தால் வயல்களிலேயே வெங்காயங்களை மூட்டை கட்டத்தோதாகக் கொட்டி வைத்திருப்பதைக் காணலாம். மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் வானம் பார்த்த கரிசல் மண் பூமியில், சோளமும், கரும்பும் பயிரிட்டு காற்று வீசும்போதெல்லாம் வயல்வெளியெங்கும் பசும் அலை படர்ந்து செல்கிறது.  குச்சிகள் நட்டு வைத்து, அதில் படர்ந்திருக்கும் தக்காளிச்செடிகள் காய்த்துப் பழுத்துக்குலுங்குகின்றன. இருபுறமும் மாதுளைத்தோட்டங்களில் கெம்புப்பொட்டலங்களாய் மாதுளம்பழங்களுக்கும் குறைவில்லை. முற்றிய சரக்குகளெல்லாம் சாலையோரக்கடைகளில் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு மூட்டை வெங்காயத்தை வாங்கிப்போட்டிருக்கலாமோ என்று நேற்று ஒரு கிலோ வெங்காயத்தை ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கும்போது எண்ணிக்கொண்டேன். 
எங்க ஊரு மாட்டுக்காரர்.
மும்பை பூனா நெடுஞ்சாலையைப்போல் இந்த வழியில் நல்ல ரெஸ்டாரண்டுகள் ஒன்றும் கிடையாது. அப்படியே இருந்தாலும் சாய் என்ற பெயரில் சுடுதண்ணீர்தான் கிடைக்கும். சாப்பிடவும் ஆறிக் காய்ந்து போன வடாபாவையும் ப்ரெட் கட்லெட்டையும் தவிர ஒன்றும் கிடைக்காதென்பதால் மும்பையிலிருந்து கிளம்பும்போதே பிஸ்கட், சாக்லெட், ஜூஸ், முறுக்கு என்று ஏகப்பட்ட தீனிகளை மூட்டை கட்டி வைத்திருந்தோம். ஆனாலும், களைத்திருந்த ரங்க்ஸுக்காக ஒன்றிரண்டு இடங்களில் அந்த சுடுதண்ணீரைக் குடித்து வைத்தோம். 

கிராமங்கள் வழியாக சென்ற முறை வந்தபோது அத்தனையும் மண்சாலையாக இருந்தன. இப்பொழுது அதில் பெயருக்கு தார் பூசி சாலையாக்கியிருந்தார்கள். மழை தன் கைங்கர்யமாக ஆங்காங்கே குழி பறித்து வைத்திருந்ததால் ஜானவாச ஊர்வலம் போல் ஊர்ந்து வந்து ஒரு வழியாக நெடுஞ்சாலையை எட்டியபோது நன்கு இருட்டி விட்டது. “அப்பாடா.. கஸாரா காட் பகுதியைத் தாண்டியிருப்போம் என்று நினைத்த ரங்க்ஸின் மனப்பால் “கஸாரா காட்” பகுதி ஆரம்பிக்கிறது என்று பல்லைக்காட்டிய போர்டைப்பார்த்ததும்.திரிந்து பனீரானது. 

சொய்ங்க்.. சொய்ங்க்.. என்று வளைந்து நெளியும் மலைப்பாதையில் இருட்டுக்குப் பழகாத கண்களை சாலையில் பதித்து எங்களை சர்ர்ரென்று தாண்டிப்போன மோட்டார் சைக்கிளுக்கெல்லாம் டாட்டா காட்டிக்கொண்டு வந்தோம். போதாக்குறைக்கு சாம்பிராணிப்புகை மூட்டம் போல் திடீரென்று வெளேரென்று மேகக்கூட்டம் வந்து வழி மறித்து, கொட்டும் மழையோடு கூட்டுச்சேர்ந்து கொண்டு கும்மியடித்தது. மேகத்துக்கு அந்தப்பக்கம் ரோடு இருக்கிறதா பள்ளத்தாக்கு இருக்கிறதா என்று கூட தெரியாமல் ரங்க்ஸ் கிட்டத்தட்ட ஸ்டியரிங் மேல் அமர்ந்து வண்டியை ஓட்டி வந்தார். துணைக்கு நானும், சாலை ஓரங்களில் பதித்திருந்த பளீரிடும் மஞ்சள் ஸ்டிக்கர்களைப்பார்த்து சாலையில்தான் செல்கிறோமா என்று கவனித்துக்கொண்டே வந்தேன்.  இனிமேல் தொலைதூர பயணங்களுக்கு கால்டாக்ஸிதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். பகல் நேரத்திலென்றால் அந்த அழகை ரசித்திருக்கலாம். இரவு நேரத்தில் அது அச்சுறுத்தியது. அதிக அழகே ஆபத்தானதுதானே. என்றாலும் இந்தப்பயணம் நெடுநாள் நினைவில் நிற்கும். செக்குமாடாய்ச் சுற்றி வரும் வாழ்க்கையில் பயணங்கள் ஒரு புத்துணர்ச்சியை ஊட்டத்தான் செய்கின்றன.. செய்தது.

11 comments:

'பரிவை' சே.குமார் said...

பயணங்கள் ஒரு புத்துணர்ச்சிதான் அக்கா...
அருமையான பயணம் குறித்த பகிர்வு.
மனைவி பத்து நாட்களுக்கு முன் 8 நாள் பயணமாக ஷீரடி சென்று வந்தார்....

துளசி கோபால் said...

முந்தி வாசிச்சதுக்கு இப்ப ரொம்பவே மாறித்தான் போயிருக்கு. வீடுகளுக்குப்பூட்டு வந்துருச்சா?

பூனாவில் இருந்து பக்கமோ! தெரிஞ்சுருந்தால்.....
போகட்டும். சங்க்னாப்பூர் சனி பார்க்கக் கொடுத்து வைக்கலை. ஆனாலு போன மாசம் சனியை நிஜமாவே பார்த்தேன். எழுத நேரம் கிடைக்கலை:-(

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் பகிர்வு மிக நன்று.

வெங்கட் நாகராஜ் said...

வீடுகளுக்குப் பூட்டு வந்துவிட்டதா.... ரொம்ப நாளாகவே இப்படி வரும் என்று நினைத்தேன்......

பயணங்கள் - அவ்வப்போது தேவையாகத் தான் இருக்கிறது. ஆதலினால் பயணம் செய்வோம்!

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா சாந்தி ரங்க்ஸை இழுக்காம முடிக்க வரலைல்ல.. ஹாஹா

பத்ரமா கொண்டுவந்து விட்டாரே.. அதுவும் ஸ்டீரியங்கின் மேல். நானும் இதுபோல் மழை அல்லது பனிமூட்டத்தில் சென்றால் ( கணவர் அல்ல ட்ரைவர்தான் - கால் டாக்ஸி ) பதட்டத்துடன் ரோட்டோர மைல் கல்லையே பார்த்துட்டு வருவேன். :)

சாயியை பார்க்கணும் எப்பக் கூப்பிடுவாரோ தெரில.. :)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

ரசித்தமைக்கு மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துள்சிக்கா,

விடுபட்டிருந்த வரிகளை உங்களுக்காக இடுகையில் சேர்த்திருக்கிறேன்.

நீங்கள் கண்ட சனியை எங்களுக்கும் தரிசனம் செய்து வையுங்களேன் :-)

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

காமிரா கொண்டு போனதோட சரி. மெனக்கெட்டு படம் எடுக்கவேயில்லை, காரில் விரையும்போது க்ளிக்கியதோடு சரி :-(

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

மாற்றம் ஒன்றே மாறாதது என்று இருக்கிறதே.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேனக்கா,

அந்தச்சமயத்தில் திக்திக் என்றுதான் இருந்தது என்றாலும் இப்பொழுது நினைக்கையில் அவ்வளவு ஆபத்தாகத்தோன்றவில்லை.

ஒருவேளை பயம் தெளிந்து விட்டதோ!!!!! ;-)

வருகைக்கு நன்றி.


சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேனக்கா,

அந்தச்சமயத்தில் திக்திக் என்றுதான் இருந்தது என்றாலும் இப்பொழுது நினைக்கையில் அவ்வளவு ஆபத்தாகத்தோன்றவில்லை.

ஒருவேளை பயம் தெளிந்து விட்டதோ!!!!! ;-)

வருகைக்கு நன்றி.


LinkWithin

Related Posts with Thumbnails