Friday, 21 May 2010

திக்.. திக்.. திக்..

இன்னிக்கு காலைல வேறெதுவும்தான் கிழிக்க முடியலை,.. இதையாவது கிழிப்போமேன்னு காலண்டரில் தாளைக்கிழிச்சேன். தேதிய பாத்ததும் திக்குன்னு ஆகிப்போச்சு. மே- 21.. ஆமா.. அதுக்கென்ன. நேத்திக்கி இருவதுன்னா இன்னிக்கு இருவத்தொண்ணு, நாளைக்கு இருவத்திரெண்டு. இதெல்லாம் ஒரு விஷயமான்னு கேக்கணும்போல் இருக்கா.. ஆனா, நீங்க கேக்க மாட்டீங்க ஏன்னா, உங்களுக்கே தெரியும் அந்த கறுப்பு தினத்தைப்பத்தி . இந்த தினம் என்னோட வாழ்க்கையிலும் மறக்கமுடியாத ஒண்ணு .

என் பையன் பிறந்தபின் , ரொம்ப சின்னக்குழந்தையை என்னால தனியா பார்த்துக்க முடியாது, அதுவும் முதல்குழந்தைங்கிறதால இன்னும் கவனம் தேவைன்னு சொல்லி , நான் நாலஞ்சு மாசம் ஊரிலேயே இருக்கும்படி கட்டாயப்படுத்திட்டாங்க. அதெல்லாம் நான் பார்த்துப்பேன்னு சொல்லியும் யாரும் கேக்கலை. ஒருவழியா டிக்கெட்டெல்லாம் புக் பண்ணி புறப்பட நாள் குறிச்சோம். என்னிக்கு,... மே இருபத்தொண்ணு அன்னிக்கு.

குழந்தைக்கு வேண்டியது , எனக்கு வேண்டியது , நாட்டுமருந்துப்பொருட்கள் , இன்னும் இங்கே கிடைக்காத சாதனங்கள்ன்னு பார்த்துப்பார்த்து மூட்டை கட்டுற வேலை நடந்துச்சு. இப்ப மாதிரி மும்பையில் சவுத் இண்டியன் கடைகளும் அப்போ நிறைய கிடையாது... இருந்தாலும் எல்லா அயிட்டங்களும் கிடைக்காது .

கிளம்புறதுக்கு முன்னால சொந்தக்காரங்க வீட்டுக்கு போய் , "நா போயிட்டு வரேன்"ன்னு சொல்லிட்டு வரவும் ,அவங்க எங்க வீட்டுக்கு வரவுமா ஒரே பிசி ஷெட்யூல். கடைசியா, நா ஊருக்கு பேக்கப் ஆகிற நாளும் வந்திச்சு . விடியக்காலை அஞ்சு மணிக்கு ட்ரெயினைப்பிடிக்கணும் . கடைசி நேர பேக்கிங்கில் அம்மா பிசியாயிட்டாங்க . அன்னிக்கு என்னோட சொந்தக்காரங்க ஒருத்தரும் என்னை வழியனுப்ப வந்திருந்தாங்க . வீட்டுக்கு பக்கத்துல இருந்த தியேட்டரில் நைட்ஷோ பாத்துட்டு வரலாம்ன்னு கிளம்பினோம் .

படம் பாத்துட்டு வெளிய வரும்போது நைட் ஒண்ணரை, ரெண்டு மணி இருக்கும். தியேட்டருக்கு வெளிய பயங்கரக்கூட்டம் . ரோட்டிலெல்லாம் ஆட்கள் நின்னுக்கிட்டு சீக்கிரம் வீட்டுக்கு போங்கன்னு எல்லாரையும் அவசரப்படுத்திட்டு இருக்காங்க. போலிஸெல்லாம் நிக்குது . நாளைக்காலைலதான ஊருக்கு போறேன் இப்ப எதுக்கு பாதுகாப்பு!!!! . அப்பத்தான் அந்த செய்தி இடி மாதிரி விழுந்திச்சு . "பிரதமர் ராஜீவ் காந்திய கொல செஞ்சுட்டாங்களாம் ". உண்மையிலேயே இடி மாதிரியான செய்திதான். அரசியலை அவ்வளவு உன்னிப்பா கவனிச்சதில்லைன்னாலும் அவர் கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கை அப்போ விவாதத்தில் இருந்ததை கவனிச்சிருக்கேன். நல்ல ஸ்மார்ட்டான ,துடிப்பான ஒரு அரசியல்வாதி . விவாதங்களுக்கு அப்பாற்பட்டு, அவரை அப்போதைய மாணவர்களுக்கு ரொம்ப பிடிக்கும் .

எப்படியோ வீடு வந்து சேர்ந்தோம் . இப்பத்தான் என்முன்னால் நிக்கிற பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமா உறைக்க ஆரம்பிச்சது . விடிஞ்சா ரயிலப்பிடிக்கணும் . இத விட்டா அப்றம் டிக்கெட் கிடைக்க எத்தனை நாளாகுமோ?.. மொதல்ல நாளைக்கு ரயில் ஓடப்போகுதோ இல்லியோ ,.. கைக்குழந்தையை கொண்டுக்கிட்டு எப்டி பயமில்லாம போகமுடியும் . ரெண்டு நாள் ரயில் பயணமாச்சே.. வழியில் ஏதாவது பிரச்னைன்னா , லக்கேஜ் போனாலும் போயிட்டுப்போகுதுன்னு விட்டுடலாம்.. கைக்குழந்தையை வெச்சுக்கிட்டு ஊர்போய்ச்சேர முடியுமா?? புத்தியில ஒண்ணுமே ஓடமாட்டேங்குது.

கடைசில ரிஸ்க் எடுக்க வேணாம்ன்னு முடிவு பண்ணி , பயணத்தை கான்சல் செஞ்சேன். அங்கங்க சின்னச்சின்னதா கலவரம் வேற ஆரம்பிச்சுட்டது. ரங்க்ஸுக்கு போன் பண்ணி , பயணம் ரத்து ஆனதை சொல்லிடலாம்ன்னா , லைனே கிடைக்க மாட்டேங்குது . ட்ரங்க் கால் புக் பண்ணி, ஒருவழியா சாயந்திரம் லைன் கிடைச்சது.

விஷயத்தை சொன்ன கையோட இன்னொரு கவலை பிடிச்சிக்கிட்டது. அடுத்தது எப்போ டிக்கெட் கிடைக்குமோ!!!! ஆனா.. பயந்தமாதிரி இல்லாம ரயில் கூடுதல் பாதுகாப்போட புறப்பட்டு பத்திரமா மும்பை வந்து சேர்ந்ததுன்னு அப்புறமா தெரிய வந்துச்சு. இருந்தாலும் எதுக்கு ரிஸ்க்.

இப்போ மாதிரி காலக்கெடுவெல்லாம் இல்லாட்டாலும்,... அப்பவும் டிக்கெட் புக் செஞ்சா ரெண்டு மாசத்துக்கப்புறத்திய தேதியில்தான் பயணம் புறப்படமுடியும். அடுத்த புறப்படும் படலம் ஆரம்பமாகியது. அடியைப்பிடிடா பாரதப்பட்டா...ன்னு மறுபடியும் முதலிலிருந்து டிக்கெட் புக் செய்வது, காத்திருப்பது, லக்கேஜ் பேக் செய்வதுன்னு ஆரம்பிச்சது . பட்ட காலிலே படும் என்பது மாதிரி இந்தமுறை தடங்கல் இன்னொரு ரூபத்தில் வந்தது. ரொம்ப நெருங்கிய சொந்தம் ஒண்ணு ஆக்ஸிடெண்டில் தவறிடுச்சு. இந்த முறை அம்மா எங்கூட வரமுடியாத நிலைமை. ஆகவே, வெற்றிகரமான இரண்டாவது தடவையா இப்பவும் பயணம் கேன்சல். திருவனந்தபுரத்திலிருந்து புறப்படுற ஏதாவது ட்ரெயினில் டிக்கெட் கிடைக்குமான்னு பார்க்க ஆரம்பிச்சேன் . இந்த தடவை கோடை விடுமுறை என்பதால், எந்த ட்ரெயினிலும் டிக்கெட் கிடைக்கலை.

வேற வழியில்லாம , அடுத்ததா இன்னொரு முயற்சி எடுத்தோம். சென்னையிலிருந்து மும்பைக்கு ஏகப்பட்ட ட்ரெயின் இருக்கு, அதுல தத்கால்ல முயற்சி செய்யலாம்ன்னு பார்த்தா நல்ல வேளையா கிடைச்சிட்டது. ரங்க்ஸ் சென்னை வந்து என்னைக்கூட்டிச்செல்வதா ப்ளான். திட்டப்படி , குறிப்பிட்ட நாள் காலைல , சென்னை வந்து சேர்ந்தோம். இந்த தடவையும் ஏதாவது குழப்பம் வராம இருக்கணுமேன்னு மனசுக்குள்ள ஒரே படபடப்பு .

ட்ரெயினில் ஏறி, மும்பை வந்து சேர்ந்தப்புறம்தான் நிம்மதியாச்சு. வருஷாவருஷம் .. மே-21 வந்தாலே கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சுடும். அன்னிக்கு இருந்த பதட்டமும் படபடப்பும், ஞாபகம் வரும்.கூடவே ஒரு குற்ற உணர்வும் வரும். நம்முடைய உடன்பிறவா சொந்தங்கள், வாழ்நாள் முழுசும் படற கஷ்டத்துக்கு முன்னாடி , இதெல்லாம் தூசு. இதைப்போய் கஷ்டம்ன்னு நினைக்கிறேனேன்னு தோணும். ஒரு நாள் பயணத்துக்கே நான் எப்படியெல்லாம் பயந்தேன். ஆனா, அங்க.....

டிஸ்கி: இது இருவத்தொண்ணாம் தேதி எழுதப்பட்டது. பிஞ்ச வலையை ஒட்ட வைக்கிறதுக்கு நாள் பிடிச்சதால் லேட்டா வெளியிடப்பட்டது.

23 comments:

Chitra said...

பரப்பரப்பான இடுகை...... நல்லா எழுதி இருக்கீங்க....

வெங்கட் நாகராஜ் said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து சொல்லி இருக்கீங்க. எனக்கும் அந்த சமயத்தில் சில பிரச்சனைகள் தில்லியில் நடந்தது. அதைப்பற்றி தனியா ஒரு பதிவே போடலாம்.. :)

Ahamed irshad said...

சுவராஸ்யமான பதிவு..அருமை..

எல் கே said...

// வீட்டுக்கு பக்கத்துல இருந்த தியேட்டரில் நைட்ஷோ பாத்துட்டு வரலாம்ன்னு கிளம்பினோம் .
/கைக்குழந்தையுடன் நைட் ஷோவா?? ஹ்ம்ம்
// ஒரு நாள் பயணத்துக்கே நான் எப்படியெல்லாம் பயந்தேன். ஆனா, அங்க.....
//
ஹ்ம்ம் சரிதான்

//பிஞ்ச வலையை ஒட்ட வைக்கிறதுக்கு நாள் பிடிச்சதால் லேட்டா வெளியிடப்பட்டது//
ஒட்டவைக்கக் கூடாது தைக்கணும்.

அமைதி அப்பா said...

ஒரு பயணத்தின் பின்னே எவ்வளவு நிகழ்வுகள். அப்பாடா!

ஹுஸைனம்மா said...

//பிஞ்ச வலையை ஒட்ட வைக்கிறதுக்கு நாள் பிடிச்சதால் //

மீன் பிடிக்கப் போறீங்களா? வலை ஏன் பிஞ்சுது? திமிங்கலமா மாட்டுச்சு?;-)))

ஹுஸைனம்மா said...

இந்த மாதிரி சம்பவங்கள் வேதனை தரும்!! அன்னிக்கு கல்யாணம் வச்சிருந்த ஒரு நண்பர், பைக்குல தம்பதியைக் கூட்டிட்டு தேவாலயம் போய் கல்யாணம் பண்ணிவச்சாங்க!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

அன்னிக்கு அனுபவிச்ச அதே பரபரப்புதான்.

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

ஆஹா.. எழுதுங்களேன்,தெரிஞ்சுக்கறோம்.ரொம்ப பரபரப்பான தினங்கள் இல்லையா.

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அஹமது,

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

பேரனை பாட்டிகிட்ட விட்டுட்டுதான் நைட்ஷோ. ஸோ நோ ப்ரச்னைஸ்.

வலையை ஒட்டித்தான் வெச்சிருக்கேன். தமிழ்மணம் பார்க்கமுடியலை. அப்பப்ப பிச்சுக்குது. தைக்கிறதுக்கு கடைக்கு கொண்டு போகவேண்டியிருக்குமோ என்னவோ :-)))

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

ஆமாங்க. வந்து சேர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சு.

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

திமிங்கலம் கிடைச்சா அதை தலைமை தாங்க வெச்சு வாளமீனுக்கும் வெலாங்கு மீனுக்கும் கல்யாணம் செஞ்சு வெச்சு மொய் தேத்தலாம்ன்னா... கெடைக்க மாட்டேங்குதே :-))))

அன்னிக்கு என்னோட நெருங்கிய தோழிக்கும் கல்யாணம்.அரசியல் பின்னணி உள்ள குடும்பம்கிறதால குறிச்ச நாள்லயே பாதுகாப்போட நடந்துச்சு.

நன்றிங்க.

நசரேயன் said...

//இதெல்லாம் ஒரு விஷயமான்னு கேக்கணும்போல் இருக்கா.//

கேட்கலை.. கேட்கலை

சந்தனமுல்லை said...

படிக்கும்போதே திக் திக் எங்களையும் தொற்றிக்கொள்கிறது! நிஜமாவே தில்தாங்க..தனியா குழந்தையை தூக்கிக்கிட்டு கிளம்பறதுக்கு!

அப்புறம், கடைசிலே உங்க டச்..ரசிச்சேன்! :-)

Prathap Kumar S. said...

சுவாரஸ்யம்....:))

கண்மணி/kanmani said...

உண்மைதான் சாரல்....எதிர்பாராத அந்த துடிப்பான தலைவனின் இழப்பு...தெரிந்தோதெரியாமலோ நிறைய பேரை பாதிச்சிருக்கு...

சரியா அன்னைக்குத்தான் எங்க பாட்டி செத்துப் போயி நான் ஊருக்குப் போயி...இன்னும் நிறைய....தோல்விகள்

அப்பாவி தங்கமணி said...

கஷ்டம் தான் போங்க. உங்களுக்கு மே 21 சோகம்னா எனக்கு மே 22 ... அதுக்கு 11 வருஷம் கழிச்சு.. அந்த சொகம் என்னனு விவரமா அப்புறம் சொல்றேன் விடுங்க ..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசர்,

சமத்து..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முல்லை,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாஞ்சில் பிரதாப்,

நன்றிப்பா, முதல்வருகைக்கும் கருத்துக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கண்மணி டீச்சர்,

ஆஹா... உங்களுக்கும் கொசுவத்தி சுத்திடுச்சா!!!

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

அந்த சுகமான சோகம் என்னன்னு சொல்லுங்க தெரிஞ்சுக்கறோம் :-)))))))

LinkWithin

Related Posts with Thumbnails