தலைப்பிரசவத்துக்காக, இந்தியா வந்திருக்கும் தம்பிமனைவியிடம், போனில் பேசிக்கொண்டிருந்தேன்.ஏழு மாதங்கள் ஆனபின் தான் வருவேன் என்றவள், ஐந்து மாதங்களிலேயே இந்தியா வந்து விட்டாள். 'பனிக்குடத்தில் நீர் கம்மியாக இருக்கிறது, ஆகவே ஏழு,எட்டு மாதங்கள் ஆன நிலையில் விமானப்பயணம் அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை' என்று அவளது டாக்டர் சொல்லி விட்டாராம்.எனவே தம்பி, அவசர அவசரமாக குறைந்த நாள் விடுப்பில் கொண்டுவந்து விட்டுவிட்டு, திரும்பிச்சென்று விட்டான்.
பனிக்குட நீர் கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு பாதுகாப்பை கொடுக்கிறது. கர்ப்பிணியின் வயிற்றில் தெரியாத்தனமாக அடிபட்டுவிட்டால்கூட அது குழந்தையை அதிகம் பாதிக்காது. சிசுவின் வளர்ச்சிக்கு, இந்த நீர் மிகவும் முக்கியமானது.சிசு இந்த நீரைக்குடிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அதனுடைய நுரையீரல்கள் வளர்ச்சி பெறுகிறதாம். இப்படி குடிக்கப்படும் நீர், சிசுவால் 'சூசூ'வாக வெளியேற்றப்படுகிறது.இதனால் சிசுவை சூழ்ந்திருக்கும் நீரின் அளவு, மெயிண்டெயின் செய்யப்படுகிறது.
சாதாரணமாக 36-37 வாரங்கள் ஆன நிலையில் 800மிலி-1000மிலி வரை இருக்கும். அதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.ஆனால், ரொம்ப சீக்கிரமாகவே குறைய ஆரம்பித்து விட்டால், சிசுவின் அசைவு பாதிக்கப்படுகிறது.ஆகவே கை,கால்கள் வளைந்து பிறத்தல், கிட்னி சரியாக வளர்ச்சி பெறாத நிலையில் பிறத்தல் என்ற சில நிலைகளை சந்திக்க நேரிடும்.நார்மல் டெலிவரி என்பதே கொஞ்சம் கஷ்டமாகி, சிசேரியனுக்கும் இட்டுச்செல்லும்.
இந்த நீர் குறைபாட்டை வழக்கமான செக்கப்புக்கு செல்லும்போதே, டாக்டர்கள் கண்டுபிடித்து,தேவையான மருந்துகளை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இது எதனால் ஏற்படுகிறது, என்பதையும், இன்னும் விளக்கமாக கண்டுபிடிக்க முடியவில்லை.சாதாரணமாக, கர்ப்பிணியின் உடம்பில் ஏற்படும் dehydration, ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆகவே, இந்த சமயத்தில் நிறைய நீர் அருந்துவதையும், ஓய்வு எடுத்துக்கொள்வதையும் சிபாரிசு செய்வார்கள்.இப்படி ஒரு சூழ்நிலையில்தான் அவள் இந்தியா வந்திருந்தாள்.
வழக்கமான விசாரணைகளுக்குப்பின், பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம்.எனக்கு ஏதோ நெருடியது.. ஏனெனில் அவள், மிகவும் கலகலப்பானவள்.தைரியசாலி..ஒரு நிமிடம் கூட சோம்பியிருக்க மாட்டாள். இன்றைக்கு ஏனோ.. சுரத்தில்லாமல் பேசிக்கொண்டிருந்தாள். சரி.. கர்ப்பகால அசதி, தலைப்பிரசவம் என்பதால பயம்,fluid குறைவாக இருப்பதால், ஏதும் பிரச்சினை வருமோ என்ற குழப்பம்... இப்படி ஏதாவது காரணம் இருக்கலாம், என்று நினைத்துக்கொண்டு, "என்னம்மா.. டாக்டரிடம் போனாயா?.. என்ன சொன்னார்?" என்று கேட்டேன்."மைனி..எனக்கு, இந்த ஆஸ்பத்திரி அவ்வளவு திருப்திகரமாக இல்லை, சுகாதாரமாகவே இல்லை.. நான் வேறு ஆஸ்பத்திரி போகப்போகிறேன்" என்றாள். எனக்கு ஒரு நிமிடம் குழப்பமாக இருந்தது. மருத்துவம் சார்ந்த துறையில் பணிபுரியும், எனது இன்னொரு அண்ணிக்கு அங்கே நல்ல பழக்கம் உண்டு, அவர்களின் சிபாரிசால்தான் அந்த ஆஸ்பத்திரி தேர்ந்தெடுக்கப்பட்டது.பின் என்ன குழப்பம்.. இங்கே சிபாரிசு இருந்தா.. சிசேரியன் செய்யாம நார்மல் டெலிவரிக்கு காத்திருப்பாங்களாம். அண்ணியால் சிபாரிசு செய்யப்பட்ட ஒருபெண்ணுக்கு ஆபரேஷன் தியேட்டர்வரை சென்று, பின் நார்மல் டெலிவரி ஆனது. இன்னொரு சொந்தக்காரப்பெண், இந்த விபரம் தெரியாமல் விட்டுவிட்டதால் சமீபத்தில், சிசேரியன் ஆனது.
இப்பல்லாம் இந்த சிசேரியன் கலாச்சாரம் பெருகி வருகிறதோ.. என்று ஒரு தோணல்.. நார்மல் என்பதே அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஆகிவிட்டது. எந்த ஆஸ்பத்திரியிலும், அவசரப்பட்டு செய்வதில்லை.. என்று நினைத்தாலும்,வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் நார்மலுக்கு காத்திருக்கலாமே என்று ஒரு ஆதங்கம்.
அவள் குறிப்பிட்ட வேறொரு ஆஸ்பத்திரி, நான் ஏற்கனவே அவளிடம் சொன்னதுதான், இங்கே,இந்த நீர் குறைபாட்டுடன் வரும் கர்ப்பிணிகளை,முழு கவனத்துடன் பார்த்துக்கொள்கிறார்கள். வேறுவழியில்லை என்றால் தவிர சிசேரியன் செய்வதில்லை.அங்கேதான் போகப்போகிறேன் என்றிருக்கிறாள். 'எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமே பகவானே' என்றிருக்கிறது.