Saturday, 23 January 2010

உள்ளிருப்பு போராட்டம்.

தலைப்பிரசவத்துக்காக, இந்தியா வந்திருக்கும் தம்பிமனைவியிடம், போனில் பேசிக்கொண்டிருந்தேன்.ஏழு மாதங்கள் ஆனபின் தான் வருவேன் என்றவள், ஐந்து மாதங்களிலேயே இந்தியா வந்து விட்டாள். 'பனிக்குடத்தில் நீர் கம்மியாக இருக்கிறது, ஆகவே ஏழு,எட்டு மாதங்கள் ஆன நிலையில் விமானப்பயணம் அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை' என்று அவளது டாக்டர் சொல்லி விட்டாராம்.எனவே தம்பி, அவசர அவசரமாக குறைந்த நாள் விடுப்பில் கொண்டுவந்து விட்டுவிட்டு, திரும்பிச்சென்று விட்டான்.

பனிக்குட நீர் கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு பாதுகாப்பை கொடுக்கிறது. கர்ப்பிணியின் வயிற்றில் தெரியாத்தனமாக அடிபட்டுவிட்டால்கூட அது குழந்தையை அதிகம் பாதிக்காது. சிசுவின் வளர்ச்சிக்கு, இந்த நீர் மிகவும் முக்கியமானது.சிசு இந்த நீரைக்குடிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அதனுடைய நுரையீரல்கள் வளர்ச்சி பெறுகிறதாம். இப்படி குடிக்கப்படும் நீர், சிசுவால் 'சூசூ'வாக வெளியேற்றப்படுகிறது.இதனால் சிசுவை சூழ்ந்திருக்கும் நீரின் அளவு, மெயிண்டெயின் செய்யப்படுகிறது.

சாதாரணமாக 36-37 வாரங்கள் ஆன நிலையில் 800மிலி-1000மிலி வரை இருக்கும். அதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.ஆனால், ரொம்ப சீக்கிரமாகவே குறைய ஆரம்பித்து விட்டால், சிசுவின் அசைவு பாதிக்கப்படுகிறது.ஆகவே கை,கால்கள் வளைந்து பிறத்தல், கிட்னி சரியாக வளர்ச்சி பெறாத நிலையில் பிறத்தல் என்ற சில நிலைகளை சந்திக்க நேரிடும்.நார்மல் டெலிவரி என்பதே கொஞ்சம் கஷ்டமாகி, சிசேரியனுக்கும் இட்டுச்செல்லும்.

இந்த நீர் குறைபாட்டை வழக்கமான செக்கப்புக்கு செல்லும்போதே, டாக்டர்கள் கண்டுபிடித்து,தேவையான மருந்துகளை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இது எதனால் ஏற்படுகிறது, என்பதையும், இன்னும் விளக்கமாக கண்டுபிடிக்க முடியவில்லை.சாதாரணமாக, கர்ப்பிணியின் உடம்பில் ஏற்படும் dehydration, ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆகவே, இந்த சமயத்தில் நிறைய நீர் அருந்துவதையும், ஓய்வு எடுத்துக்கொள்வதையும் சிபாரிசு செய்வார்கள்.இப்படி ஒரு சூழ்நிலையில்தான் அவள் இந்தியா வந்திருந்தாள்.

வழக்கமான விசாரணைகளுக்குப்பின், பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம்.எனக்கு ஏதோ நெருடியது.. ஏனெனில் அவள், மிகவும் கலகலப்பானவள்.தைரியசாலி..ஒரு நிமிடம் கூட சோம்பியிருக்க மாட்டாள். இன்றைக்கு ஏனோ.. சுரத்தில்லாமல் பேசிக்கொண்டிருந்தாள். சரி.. கர்ப்பகால அசதி, தலைப்பிரசவம் என்பதால பயம்,fluid குறைவாக இருப்பதால், ஏதும் பிரச்சினை வருமோ என்ற குழப்பம்... இப்படி ஏதாவது காரணம் இருக்கலாம், என்று நினைத்துக்கொண்டு, "என்னம்மா.. டாக்டரிடம் போனாயா?.. என்ன சொன்னார்?" என்று கேட்டேன்."மைனி..எனக்கு, இந்த ஆஸ்பத்திரி அவ்வளவு திருப்திகரமாக இல்லை, சுகாதாரமாகவே இல்லை.. நான் வேறு ஆஸ்பத்திரி போகப்போகிறேன்" என்றாள். எனக்கு ஒரு நிமிடம் குழப்பமாக இருந்தது. மருத்துவம் சார்ந்த துறையில் பணிபுரியும், எனது இன்னொரு அண்ணிக்கு அங்கே நல்ல பழக்கம் உண்டு, அவர்களின் சிபாரிசால்தான் அந்த ஆஸ்பத்திரி தேர்ந்தெடுக்கப்பட்டது.பின் என்ன குழப்பம்.. இங்கே சிபாரிசு இருந்தா.. சிசேரியன் செய்யாம நார்மல் டெலிவரிக்கு காத்திருப்பாங்களாம். அண்ணியால் சிபாரிசு செய்யப்பட்ட ஒருபெண்ணுக்கு ஆபரேஷன் தியேட்டர்வரை சென்று, பின் நார்மல் டெலிவரி ஆனது. இன்னொரு சொந்தக்காரப்பெண், இந்த விபரம் தெரியாமல் விட்டுவிட்டதால் சமீபத்தில், சிசேரியன் ஆனது.

இப்பல்லாம் இந்த சிசேரியன் கலாச்சாரம் பெருகி வருகிறதோ.. என்று ஒரு தோணல்.. நார்மல் என்பதே அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஆகிவிட்டது. எந்த ஆஸ்பத்திரியிலும், அவசரப்பட்டு செய்வதில்லை.. என்று நினைத்தாலும்,வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் நார்மலுக்கு காத்திருக்கலாமே என்று ஒரு ஆதங்கம்.

அவள் குறிப்பிட்ட வேறொரு ஆஸ்பத்திரி, நான் ஏற்கனவே அவளிடம் சொன்னதுதான், இங்கே,இந்த நீர் குறைபாட்டுடன் வரும் கர்ப்பிணிகளை,முழு கவனத்துடன் பார்த்துக்கொள்கிறார்கள். வேறுவழியில்லை என்றால் தவிர சிசேரியன் செய்வதில்லை.அங்கேதான் போகப்போகிறேன் என்றிருக்கிறாள். 'எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமே பகவானே' என்றிருக்கிறது.

Wednesday, 20 January 2010

ஏம்ப்பா.... இப்படி??????.

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள்ளாம் ஆரம்பிக்கப்போவுது.இவ்வளவு நாள் சரியா படிக்காதவங்க கூட,இப்போ ராத்திரி, பகலா விழுந்து, விழுந்து படிக்க ஆரம்பிச்சிருப்பாங்க..அம்மாக்களெல்லாம் ஹார்லிக்ஸும், மசாலா டீயும் போட்டுக்கொடுத்துட்டு, ஏதோ அவுங்க பரீட்சை எழுதப்போவது போல, டென்ஷனோட கூடவே முழிச்சிருப்பாங்க!!!. பாத்துப்பாத்து சமைச்சு கொடுப்பாங்க...

"கீரை சாப்புடு.... பழம் சாப்புடு.... பாவம்.. ராப்பகலா முழிச்சு புள்ளைக்கு உஷ்ணம் ஏறிப்போச்சு..படிச்சு,படிச்சு, புள்ளைக்கு தொண்டை கட்டிப்போச்சுன்னு சொல்லி சுக்கு காப்பி போட்டு கொண்டு வந்து, பக்குவமா ஆத்தி, புள்ளை இருக்கிற இடத்துக்கே, கையில கொண்டாந்து கொடுப்பாங்க..

புள்ளைங்களை பச்சத்தண்ணியில, குளிக்கக்கூட விட மாட்டாங்க.. ஜலதோஷம் பிடிச்சுக்குமாம்...லேசா ஒரு தும்மல் போட்டாக்கூட 'புள்ளையை சரியா கவனிக்கிறதை விட வேற என்ன வேலைன்னு'அம்மாவுக்கு திட்டு விழும்...பொதுப்பரீட்சை வருதுன்னு புள்ளையை பொத்தி பொத்தி, பாத்துக்குவாங்க..

பரிச்சை ஆரம்பமானதுலேர்ந்து,புள்ள படிக்கிது,அதோட கவனம் செதறக்கூடாதுன்னு சொல்லி,இவங்க கவனமா பாத்துப்பாங்க.பரிச்சைக்கு வேண்டிய எல்லாம் சரியா கொண்டு போவுதான்னு ஒன்னுக்கு ரெண்டு தரம் சரிபாத்து வைக்கிற பெற்றோர்கள் நிறையா பேர் இருக்காங்க.

அவுங்க மனசுலேயும் லேசா கலக்கம் இருக்கத்தான் செய்யும்.அவுங்க கலக்கம் பரிச்சையை நெனைச்சு இல்ல.. ரிசல்ட்டை நெனைச்சுதான்..ஊர்ல உள்ள, இல்லாத பொல்லாத நெனைப்பெல்லாம் அப்பத்தான் ஓடிவரும்."யப்பா!... கொலசாமி.... எம்புள்ளைக்கி நல்ல படிப்பையும், புத்தியையும் கொடுப்பா"ன்னு,ஆயிரத்தெட்டு வேண்டுதல் வெப்பாங்க.ரிசல்ட் வர்ற அன்னிக்கு புள்ளையை விட, டென்ஷன் படற பெத்தவங்க எக்கச்சக்கம். எல்லாம்...... இந்த பாழாப்போன அறிவு, அன்னைக்குன்னு சில புள்ளைங்களுக்கு மழுங்கிப்போயிருதே....அதை நெனைச்சுத்தான். அங்கன,.. அந்தப்பையன் அப்படி பண்ணிக்கிட்டான், இங்கன, இந்தப்பொண்ணு இப்படி பண்ணிக்கிட்டா அப்டிங்கிற ரிசல்ட்டும் சேர்ந்தே இல்ல வருது..

ஏஞ்சாமி....படிப்ஸ் பார்ட்டிங்களை விடுங்க...அவுங்க பாஸாகிடுவாங்க... கொஞ்சம் முயற்சி செஞ்சா தேறுறவங்க, கடைசி நேரத்துல, விழுந்து விழுந்து படிச்சிட்டு ஓடுறவங்க இவுங்கள்ளாம் கொஞ்சம் யோசிக்கலாமில்ல...பெத்தவங்க கண்ணீருக்கு யாருப்பா பதில் சொல்றது.. இப்பல்லாம், அனேகமா புள்ளைங்க இஷ்டப்படற படிப்பைத்தானே படிக்கிறாங்க....அப்படி இல்லையா... மொதல்லே அப்பா.. அம்மா.... கிட்டே உட்கார்ந்து பேசுங்க... புரிய வையுங்க..."ஃப்யூச்சர்ல என்னவா ஆகப்போறோம்கிறதை எட்டு, அல்லது ஒன்பதாம் வகுப்பு வரும்போதே முடிவு செஞ்சுக்கோங்க,அதுக்கேத்த மாதிரி உழைங்க" அப்டின்னு நான் இல்லை,.. ஒரு அறிஞர் சொல்லியிருக்கார்.

அவரவருக்கான அரிசியை ஆண்டவன் அளந்து வெச்சிருப்பான், அதனால தயவு செஞ்சு மனச அலைபாய விடாதீங்க.

அப்பா... அம்மாக்களும் கொஞ்சம் யோசிக்கணும். பரிச்சை கிட்டே வந்த பிறகு, பசங்களை ஓட ஓட விரட்டுவதை விட,மொதல்லேயே அவங்க கிட்ட உக்காந்து பேசுங்க... ஏதாவது பிரச்சினை இருந்தா, அவங்களுக்கு அதை தீர்க்க உதவி செய்யுங்க.. இதில் முக்கியம், தீர்க்கிறேன் பேர்வழின்னு நீங்களே பிரச்சினையா மாறிடாதீங்க...

அவங்களுக்கு, தேவையானத வாங்கி கொடுப்பது மட்டுமில்லை... வீட்டுல படிக்கிறதுக்கான அமைதியான சூழ்நிலையையும் உண்டாக்கி கொடுங்க.உங்களோட நிறைவேறாத ஆசைகளை உதாரணமா கலெக்டர், இஞ்சினியர், டாக்டர்ன்னு இருந்தா அவுங்க மேல திணிக்காதீங்க. ரிசல்ட் பற்றிய பயம் அவங்களுக்கு வராம பாத்துக்கோங்க..படிக்கிறப்ப லேசான கண்காணிப்பு தேவை...பாடங்களை கரெக்டா முடிக்க முடியலையா... டைம்டேபிள் போட்டு படிக்கச்சொல்லுங்க...

ஓரொருத்தருக்கு, ஓரொரு மாதிரி படிக்கிற பழக்கம் இருக்கும். "நான் விடியக்காலையில எந்திரிச்சு படிச்சேன். நீயும் அப்டித்தான் படிக்கணும்"ன்னு எல்லாம் வற்புறுத்தாதீங்க. அவங்களுக்கு, தன்னம்பிக்கை வர்றமாதிரி பேசுங்க..என்ன மார்க் வாங்கினாலும், அப்பா...அம்மா... நம்மள வெறுக்க மாட்டாங்கன்னு நம்பிக்கை வெச்சாலே , அந்தப்புள்ளை, தவறா முடிவெடுக்காது.


Tuesday, 19 January 2010

நெசமாவா....

காரண காரியங்கள்
எதுவும்,
தேவைப்படவில்லை!..

அழவைப்பதென்று
முடிவானபின்,
காரணங்கள் தேடுவது
கஷ்டமாகவும் இல்லை!!.

கண்ணீர் மல்கி,வெதும்பி,
குரல் குழற
கேட்டான் அவன்;
"நெசமாத்தான் சொல்றியா"

பட்டுப்பூச்சி சிறகடிப்பை
கண்களில் காட்டி
சொன்னாள் அவள்,

"நெசமாத்தான்!!
எங்கப்பா,
ரெண்டு பொம்மை
வாங்கியாந்தாரே!!!"

ஆற்றாமையுடன்
எறிந்த கல்பட்டு,
சுக்குநூறாய் உடைந்தது,
குட்டையில் மிதந்த
அழுக்கு நிலா!!..


Friday, 15 January 2010

சுட்டசூரியன்..

சூரியனை 'சுட்டது' யாரு..!!!!!இன்று பிடித்த கிரகணம்.


கேமிராவுக்கும் கண்ணாடி போட்டுதான் எடுக்கப்பட்டது.

சந்திரரோ... சூரியரோ... யார்தான் இது..!!!!கிளியக்கா..!!!! கிரகணத்தை வெறுங்கண்ணால் பாக்காதே..

என்னவோ.... வளையல் கிரகணமாமே... தங்கம் விக்கிற விலையில் வளையலை இப்படித்தான் பாத்துக்கணுமோ.!!!!!!.Thursday, 14 January 2010

பொங்கல் பொங்கிருச்சுஎங்க வீட்டுக்கு பொங்கல் வந்தாச்சே..!!!!.
ஏற்கனவே அனுப்பிய பொங்கல் வாழ்த்து கிடைச்சுதா?..கண்டிப்பா கிடைச்சிருக்கும்..உங்களுக்காக பொங்கல் தயாராகுது.. வந்து சாப்புட்டு போங்க..

பொங்கல் பொங்கப்போவுது.....


பொங்கிருச்சேய்....!!!....


காக்கா புடிக்கதான் கஷ்டமா போச்சு..


நைவேத்தியம் காண்பிச்சாச்சு... எல்லோரும் சாப்பிடலாம்..


மஞ்சக்குலை எங்க வீட்டு வெள்ளாமை..அடுத்த வருஷம் இந்த உருளைக்கிழங்குலதான் சாம்பார் செய்யப்போறேன்.

Tuesday, 12 January 2010

மஹாராஷ்டிராவும் பொங்கலும் பின்னே ஞானும்

உழவுக்கும்,தொழிலுக்கும் வந்தனை செய்வோம், தை பிறந்தா வழி பிறக்கும், இதெல்லாம் பொங்கல் பண்டிகையை நினைவு படுத்தும், சில பொன் மொழிகள். நம் ஊரில் தைமாசம் முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வருடம் முழுக்க உழைத்த, தனக்கு உதவிய ஜீவன்களுக்கு நன்றி சொல்லி,ஆதவனை ஆராதிக்கும் பண்டிகையிது .

ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே வீடு, வாசல் கழுவி , வீட்டை தூய்மைப்படுத்தி, சாதனங்கள் சேகரித்து என்று, பண்டிகை களை கட்ட ஆரம்பித்து விடும்.கிராமங்களில் கட்டி அடுப்பு என்று ஒன்றை வீட்டிலேயே செய்வார்கள். மண்ணைக்குழைத்து, வேண்டிய அளவிலிருக்கும் பழைய, ஓரடி உயரத்திலிருக்கும் பக்கெட்டோ, பாத்திரமோ எடுத்து, மண்ணை அதில் அழுத்திஅடைத்து அப்படியே திருப்பி பின்னால் ஒரு தட்டு... துண்டாக வந்து விழும் கட்டியை அப்படியே காய விட்டுவிடுவார்கள்.வேண்டிய எண்ணிக்கையில் செய்து காயவிட்டு வீட்டுக்கு அடிக்கும் சுண்ணாம்பில் அதற்கும் கொஞ்சம் பூசி, காவிப்பட்டையால் அலங்கரித்து வைப்பார்கள்.

பொங்கலன்று இந்த அடுப்பில் பானையை ஏற்றி, சாஸ்திரத்துக்கு ரெண்டு பனைஓலையை வைத்து அடுப்பை ஆரம்பிச்சுட்டு அப்புறம் , விறகுகளின் துணை கொண்டு பொங்கல் கொதிக்க ஆரம்பிக்கும். விறகுகளின் இடையே சில பனங்கிழங்குகளை செருகி விட்டால் பிறகு கடித்துக்கொள்ளலாம்.சமயம் பார்த்து காற்றும் சோதனை செய்யும்... புகையுடன் போராடி, பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்தி, சூரியனுக்கு படையல் செய்வார்கள்.இஞ்சி மஞ்சளின் பச்சைமணமும், கரும்பின் இனிப்பும் கூடுதல் மகிழ்ச்சி தருது..

பொங்கல் பண்டிகை கிராமங்களில் மண்மணத்துடன் கொண்டாடப்படுகிறது. அந்த அளவு இல்லை என்றாலும், நகரங்களிலும் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை. அடி நாதமாய் அது இரண்டு இடங்களிலும் ஊடாடிக்கொண்டுதான் இருக்கிறது.
மஹாராஷ்டிராவில் பொங்கல் 'மகர சங்கராந்தி' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பச்சை காய்கறிகள், வெளிறிப்போயிருக்கும் கரும்பு ,எல்லாம் இங்கேயும் உண்டு. அரிசியும் பயத்தம்பருப்பும் போட்டு செய்யற கிச்சடிதான் இன்றைய ஸ்பெஷல். நம்மூர் வெண்பொங்கலாச்சேன்னுதானே நினைக்கிறீங்க. எஸ்ஸ்.. ஆனால், மைனஸ் மிளகு, மைனஸ் சீரகம், மைனஸ் முந்திரிப்பருப்பு. ஆனா, டேஸ்ட்டு மட்டும் ப்ளஸ்.. ப்ளஸ்.. காலை பூஜை முடித்ததுமே சாயங்காலத்துக்கு ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்து விடும்.

இரண்டு நாட்களுக்கு முன்னாடியே பொருட்கள் சேகரிக்கப்பட்டுவிடும். தெரிந்தவர்கள்.. நண்பர்களுக்கு...அழைப்பு அனுப்பப்பட்டுவிடும்.

சாயந்திரம் நன்கு அலங்கரித்துக்கொண்டு, சிறிதாக நறுக்கப்பட்ட காய்கறிகள், கரும்பு இவற்றின் கலவையை ஒரு சிறிய மண்பானையில் போட்டு வைத்துக்கொண்டு,இதனுடன் எள்ளுமிட்டாய்,சர்க்கரையை வைத்து தயாரிக்கப்படும் எள்ளுருண்டை,பூ, பழம், பூ,தாம்பூலம், வைத்துக்கொடுக்க ஏதேனும் ஒருபொருள், இவற்றுடன் தயாராக காத்திருப்பார்கள்.


ஒவ்வொருவராக வர ஆரம்பித்ததும், அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து, தாம்பூலம் அளித்து, எள்ளுமிட்டாய், சீனிஉருண்டை கலவையை"தில் குட் க்(G)யா.....கோ(G)ட்....கோ(G)ட்....போ(b)லா.." என்று சொல்லி கொடுப்பார்கள். அதாவது "இனிக்கும் எள்ளை எடுத்துக்கிட்டு இனிமையாக பேசு" என்று அர்த்தம்.வயதில் சிறியவர்கள், பெரியவர்களிடம் ஆசி பெற்றுக்கொள்வார்கள்.

குழந்தைகளும் ஒரு டப்பாவில் சீனி, எள் உருண்டைகளை போட்டுக்கொண்டு க்ரூப்பாக கிளம்பி விடுவார்கள். வீடுவீடாக சென்று எல்லோருக்கும் கொடுத்து  பெரியவர்கள் காலில் விழுந்து, ஆசி பெற்று வருவார்கள். அவர்கள் ஒருவயது கூடுதலானவர்களாக இருந்தால் கூட பெரியவர்கள் என்ற பதவி அளிக்கப்பட்டுவிடும் . நிறைய வீடுகளில் இவர்களுக்காக இனிப்புகள் வாங்கி வைத்திருந்து, கொடுப்பார்கள்.


எந்த இடத்தில் இருந்தாலும், எந்தப்பெயரில் கொண்டாடினாலும் பண்டிகை மகிழ்ச்சியையும், இனிமையையும் தரட்டும்.


எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

டிஸ்கி: படங்கள் வலை(போட்டு)யில் பிடித்தவை.

Monday, 11 January 2010

விடையில்லை

என்னை,
என் எண்ணங்களை,
எனக்கு
அறிமுகப்படுத்திய,
என்
எழுத்துக்கு நன்றி.

விரல்களில் வழியும்
எறும்புகளைப்போல்,
விட்டு விடாமலும்
பற்றிக்கொள்ளாமலும்,
ஓர்
அவஸ்தை!!!...

கரையேறும் வழி
தெரிந்தபின்,
ஆழங்கள்
அமிழ்ந்து போகின்றன.

சாரலடிக்கும் பொழுதுகளில்
கைக்குட்டையாய்,
சூறாவளியில்
அனல் காற்றாய்,
உருமாற்றம் கொள்கிறது!.

அதுவோ!,
இதுவோ!, என்று
மயக்கம் கொள்ளும்போது,
எதற்கும் பிடிபடாமல்,
காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது
ஓர் புதிர்!!.


Sunday, 10 January 2010

எனக்கு எதிரா நடந்த சதிசாயங்காலம் 5,6 மணி இருக்கும். தமிழ்மணத்தில் மூழ்கியிருந்.....என்னாச்சு...புது ஜன்னல் தெறக்க மாட்டேங்குது... ரீலோட் பண்ணு.... திருப்பி திருப்பி முயற்சி செய்யறேன். oops....லிங்க் கட்டாயிட்டுதுன்னு செய்தி சொல்லுது.சில சனி, ஞாயிறுகளில் இதுவேற சீண்ட்ரம்.(மெயிண்டெயின் செய்வாங்களாம்).சரி... நாளைக்கு பாக்கலாம்.

காலை 11மணி ஆகுது.. இன்னும் இணையம் சரியாகல்லை. கூப்பிடு.. பரம்ஜீத்தை..

"மேடம்.. போட்டிக்காரன்(மரியாதை என்ன வேண்டியிருக்கு), செஞ்ச வேலை... வயரை அத்து உட்டுட்டான்!!!. சாயங்காலத்துக்குள்ள வேற ஒயர் போட்டுடறேன்,சே... கஷ்டகாலம்ப்பா.."...

'இவர் யாரைச்சொல்றார்'... எனக்கு புரியலை..

"சரி..நீ அழுவாத... நான் அவர்கிட்டே பேசறேன்".

விஷயத்தை ரங்க்ஸ் கிட்ட சொல்லி, போட்டிக்காரன்(ர்)நம்பருக்கு போன் செஞ்சோம். மணி அடிக்குது..எடுக்க மாட்டேங்கிறார். 'அடப்போய்யா!!!... நான் கஸ்டமர் கேர் செண்டருக்கு போன் செஞ்சு விஷயத்தை சொல்லிக்கிறேன்'. அவங்க 'ஆகட்டும்.. பாக்கலாம்'ன்னு வழக்கமான பதிலை சொன்னாங்க.

எதுக்கும் லோக்கல் ஆளுக்கு இன்னோருக்கா போன் செஞ்சா என்ன?.. ஆ.....ப்டுட்டார்.!!!. அவர்கிட்டே விஷயத்த சொல்லி "இப்டில்லாம் அத்து... அத்து... வெளையாடாதேப்பா...அப்புறம் நாங்க நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்" ன்னு ஒரு சின்ன எச்சரிக்கை.... பையர் ஒத்துக்க மாட்டேங்கிறார். " நா செய்யவேல்லை....நா செய்யவேல்லை..இப்பவே உங்க வீட்டுக்கு வந்து பாக்றேன்"ன்னார். 'சரி... வாங்க..' ன்னு சொன்னோம்.

அவர் வர்றவரை ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்....

இணைப்பு எடுத்து ஒண்ணரை வருஷம் வரை ஒரு பிரச்சினையில்லை. ஒரு நாள் திடீர்ன்னு இணைப்பு கட்... விசாரிச்சா அப்போத்தான் போட்டிக்காரரோட கைவரிசை ஆரம்பம்னு தெரியவந்தது.. என்ன பண்ணுவார்னா... மெயிண்டெயின் செய்யப்போறதா செக்யூரிட்டி கிட்ட சொல்லிட்டு, ரெஜிஸ்டரில் தேதி.. பேரு... நேரம்... எல்லாம் எண்டர் பண்ணிட்டு(இல்லாட்டா பில்டிங் உள்ளேயே விட மாட்டார்) மொட்டைமாடிக்கு போய் நைசா கட் செஞ்சுட்டு வந்துடுவார்...

இது பெரிய பிரச்சினையாகி பஞ்சாயத்தெல்லாம் நடந்து முடிஞ்சுது.. ஆனா, நம்மாளு நெறைய நஷ்டப்பட்டுட்டதால கம்பெனிய தற்காலிகமா மூடிட்டார். போட்டிக்காரர் நெனைச்சது நடந்தது... நெறையப்பேர் அவங்க கிட்ட இணைப்பு எடுத்தாங்க. இப்படித்தான் புள்ளை பிடிக்கிறாங்களா..ஹூம்.. மேலிடத்தை திருப்திப்படுத்த இப்படி ஒரு வழி.10..15.நாள் பொறுத்து பாத்துட்டு நாங்களும் வேற வழியில்லாம அங்கயே போனோம்.டெபாசிட்டில் 1000ரூபாய் சலுகை..பழைய இடத்துலேர்ந்து போனவங்களுக்கு மட்டும்தான் இந்த சலுகையாம்..மத்தவங்களுக்கு...வழக்கமான தொகை.இது எப்படி இருக்கு.!!!.சர்வீசும் சரியில்லை....சரியான பாடாவதி சர்வீஸ். மாசத்துல 10நாள் இணைப்பு இருந்தாலே உலக அதிசயம்!!!. இலவசமாய் வைரஸ் சப்ளை வேற. பாதி நாள் எங்க சிஸ்டம் பிறந்தகம் போய் சீராடிட்டுதான் வரும்.

பழைய ஆள்கிட்டயே கேட்டுப்பாக்கலாம்ன்னு விசாரிச்சா.....
அப்பா!!!.... வயித்துல பால் வார்த்தமாதிரி பதில்.....

"சரி பண்ணிட்டோம் மேடம்.. நாளைக்கு இணையம் வந்துடும்"..

அப்புறம் போட்டிக்காரர்கிட்டே விஷயத்தை சொல்லி இணைப்பை கட் செஞ்சாச்சு.. பழைய கம்பெனியிலேயே இணைப்பி தேர் ஒழுங்கா ஓட ஆரம்பிச்சிருக்கு... இப்போ மறுபடியும் முட்டுக்கட்டை.ஆமா!!!... போட்டிக்காரர்தான் செஞ்சதுன்னு எப்டி தெரியும்.. அனுப்பு உளவுப்படையை...தகவல் ஏற்கனவே சேகரிக்கப்பட்டாச்சாம்.."மேடம்,.. நான் விசாரிச்சிட்டேன். நேத்து,சாயந்திரம் அவங்க ஆள் பக்கத்து பில்டிங் போயிருக்கார்.. ரிஜிஸ்டரில் எண்ட்ட்ரி ஆகியிருக்கு.கரெக்டா அப்போதான் எல்லா வீடுங்களுக்கும் கனெக்ஷன் கட் ஆகியிருக்கு."

கொஞ்ச நேரத்துல போட்டிக்காரர் வந்தார்.. சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். ரெண்டு பில்டிங்க்கோட மொட்டை மாடியையும் இணைச்சு வெச்சிருந்த ஒயர், இப்போ திறப்பு விழாவில் வெட்டப்பட்ட ரிப்பன்போல் தொங்குது. அப்பவும் ஒத்துக்க தயாரில்லை.."ஏம்ப்பா... உங்க கம்பெனி சர்வீஸ் சரியில்லைன்னுதான் வேற கம்பெனிக்கு போறோம், அதையும் கெடுத்தா எப்படி?..பிரச்சினைன்னு போன் பண்ணினா ஆள் வர்றதில்லை... வந்தாலும் என்ன பிரச்சினைன்னு கண்டுபிடிக்க தெரியாம ரெண்டு மூணு ஸ்க்ரூவை கழட்டி மாட்டிட்டு போயிடுறாங்க. இதுக்கு ஒரு நியாயம் சொல்லு"ன்னு கேட்டோம்.

பையர் இங்கே பார்ட்டைம் வேலை பாத்துக்கிட்டே படிக்கிறாராம். சரி.. நல்லா இருக்கட்டும்...ஆனா மத்தவங்களைப்பத்தியும் கொஞ்சம் நினைக்கணுமில்லே.இணையத்தையே சார்ந்திருப்பவர்களுக்கு எவ்வளவு இழப்பு ஆகியிருக்கும்.நான் ஒரு இடுகையாவது போட்டிருப்பேனே:).

இன்னும் தப்பை ஒத்துக்கிடலை.. மெதுவா கேட்டார்...'நாங்கதான் கட் செஞ்சோம்னு யார் சொன்னா'..விவரத்தை சொன்னதும் பேச்சுமூச்சில்லை.
நைசா கிளம்பிட்டார். நம்ம தலைவலி நமக்கு.. கீபோர்டுக்கு மேலே நெறைய வேலையிருக்கு!!.நம்ம கம்பெனிக்கு போன் செஞ்சு கேட்டா, இன்னும் நாலு நாளாவது ஆகும்.. எல்லா ஒயரையும் கட் அண்ட் பேஸ்ட் பண்ணணுமே அப்டிங்கிறார். நா....லு....நாளா!!.பதிவு எதையும் படிக்கமுடியாதே...அய்யோ.!!!!.

ஆலோசனை நடக்குது... கார்ட்லெஸ் வாங்கிரலாமான்னு ஒரு யோசனை... ஆனா மழைசமயம் இடிமின்னலால் பாதிப்பு வருமோன்னு பயம், "உள்ளதும் போச்சுன்னா?... நாலு நாள் நெட் இல்லைன்னா பரவாயில்லை..நெட்டே இல்லைன்னாலும் பரவாயில்லை." இது சதியாலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு. அப்போ என் பிளாக்கோட கதி..ஆரம்பத்திலேயே சங்கா.!!!...எல்லாம் ஒரு க்ரூப்பாத்தான் சதிவேலையில் இறங்கியிருக்காங்களா.!!!

போனுக்கு மேல போனப்போட்டு டார்ச்சர் கொடுத்ததில் ரெண்டே நாளில் இணைப்பு வந்துவிட்டது... இப்ப என்ன செய்வீங்க.!!!... இப்ப என்ன செய்வீங்க.!!!..

டிஸ்கி: பையர் வார்த்தை உபயம், துளசிடீச்சர்.

Friday, 8 January 2010

பெயர் போன பதிவர்

ஆகக்கூடி கடைசியில் நானும் பதிவர் ஆகிட்டேன்.வாசிப்புங்கிறதே ஒரு சுகமான அனுபவம். அதுவும் பாடப்புத்தகத்துக்கு உள்ளே மறைச்சு வெச்சு படிக்கிறதுங்கறது எம்புட்டு த்ரில் தெரியுமா!!!

வாராந்திர, மாத பத்திரிகைகள்தான் முதல் அறிமுகம்.அப்புறம் பாக்கெட் நாவல் வந்த புதிதில் அதையும் விட்டதில்லை. காலேஜ்லதான் மொதமொத லைப்ரரிக்கு போற பாக்கியம் கெடைச்சுது.பாலகுமாரனோட 'மெர்க்குரிப்பூக்கள்',கல்கியோட 'பொன்னியின் செல்வன்',சிவகாமியின் சபதம்,தியாகபூமி' அப்புறம் இன்னும் எக்கச்சக்கம்.(பெரிய லிஸ்ட், நெறைய பேரு கூட மறந்து போச்சு).

மஹாராஷ்ட்ரா வந்ததுக்கப்புறம்,தமிழில் வாசிக்க வாரப்பத்திரிக்கைகளை தவிர எதுவும் கெடைச்சதில்லை. கெடைக்குமாயிருக்கும்... கொஞ்சம்மெனக்கெடணும்.
அப்படியிருந்ததுக்கு, வலையில் தமிழ் படிக்கமுடியும்னு தெரிஞ்சதும் ...ஆஹா!!!!
அப்பிடியே தட்டித்தடவி மரத்தடியை கண்டுபுடிச்சேன்.

துளசிடீச்சர் அவங்க செல்லங்களைப்பத்தி எழுதியிருந்தாங்க.படிச்சிட்டு ஒரே கஷ்டமாப்போச்சு.ரொம்ப நாளா மனசுக்கு ஏதோ மாதிரி இருந்தது. மறுபடியும் படிக்க நெனைச்சு தேடினா லிங்க் மறந்து போச்சு. அதனாலென்னன்னு, கூகிள் கிட்டயே கேட்டேன், அது கொண்டுவிட்டது துளசி தளத்துக்கு.ஆரம்பத்துல படிச்சிட்டு சிரிச்சிட்டு போயிடுவேன்.அப்புறம் மனசுக்கு பட்டதை
சொல்லணும்னு தோணிச்சு.

'ஐம்கூல்' அப்பிடிங்கிற பேர்ல பின்னூட்டம் மட்டும் போட்டுட்டிருந்தேன்.அப்பத்தான் ஒரு நாள் ரங்க்ஸ் 'மக்கா..நீயும் ஏன் எழுதக்கூடாது'அப்பிடீன்னு ஒரு மின்னலை தூக்கிப்போட்டார்(எவ்வளவு நாள்தான் இடின்னே சொல்லி ஏமாத்துறது). என்டே அம்மே!!...இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை...நமக்கு அந்த தகுதி இருக்கா... இல்லைன்னாலும் வளத்துக்கிட கண்டிப்பா முயற்சி செய்வேன்.

ஏதோ கல்லூரி நாட்களில் கொஞ்சம் கிறுக்குவேன். கவிதைன்னு ஒன்னு எழுதினதுக்கு பொழைச்சுபோட்டும்ன்னு ஆறுதல் பரிசொண்ணு குடுத்தாங்க. அப்புறம் நான் க....வி....தை.... ன்னு கூட எழுதினதில்லை.

ஒரு முடிவெடுத்தா அப்புறம் நம்ம பேச்ச நாமே கேக்கக்கூடாது. வலைப்பூ ஆரம்பிப்பது இவ்வளவு ஈஸியா!!!.பேரு வைக்கும் படலம் ஆ...ரம்பம்.. புதுசா இருக்கணும், அழகா இருக்கணும்... 'ஐம்கூல்' என்ன ஆச்சா?.... அடப்போங்க... இதழ்கள் இல்லாமல் பூவான்னு பசங்க பேரைச்சேத்துக்கிட்டு 'ஐம்கூல்பாசு'
ஆனேனா.... டீச்சர் பயமுறுத்திட்டாங்க.... பெயரில் பாதி ஏற்கனவே இருக்கார்ன்னு அவங்க சொல்லவும் கூகிளாண்டவர் சன்னிதியில் போய் நின்னா... 'ஆம்..மகளே... ஆனா அவரு பீட்டரு'ன்னாரு. இம்போர்ட்டட் ஆட்டோ வந்துடுமோன்னு பயந்து தங்க்ஸும் ரங்க்ஸுமா 'அமைதிச்சாரல்' ஆகிட்டேன்.
பேரு போனது வருத்தமாத்தான் இருக்கு.( டீச்சர் 'அசிஸ்டெண்ட் க்ளாஸ் லீடர்'
பதவியெல்லாம் ஆஃபர் பண்ணாங்க).

முட்டி மோதி அங்க இங்க தேடிக்கண்டுபிடிச்சு, பட்டை மொதக்கொண்டு அடிச்சாச்சு. ஆனா புது இடுகையை இணைக்க முடியாம கஷ்டப்பட்டு, கடைசியில் தமிழ்மணத்துக்கே ஒரு விண்ணப்பம் வெச்சு .... சுபம்.

ஆதரவை நாடும்,
அமைதிச்சாரல்.
Wednesday, 6 January 2010

3-idiots
இன்றைய கல்வி முறையில் காணப்படும் குறைபாடுகளை தேன் தடவிக்கொடுத்திருக்கிறார்கள்.

காணாமல் போன தனது நண்பனை கண்டுபிடிக்க, விமானத்தை அவசரக்கால தரையிறக்கம் செய்து மாதவனும்,ஷர்மன் ஜோஷியும் ஒரு போன் காலை நம்பி வருகின்றனர்.நண்பன் நண்பனைத்தேடி வந்த அவர்களுக்கு சைலன்சர்(ஓமி)ஏமாற்றத்தைக்கொடுத்து, தான்தான் அவர்களை வரவழைத்ததாக கூறுகிறான்.தான் போட்ட சபதத்தை நினைவூட்டுகிறான்.

'நான் என்னவாக ஆசைப்படுகிறேன் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை' என்று மாதவன் புலம்பும்போதுதான் உண்மையில் படம் ஆரம்பிக்கிறது.wild life போட்டோகிராபராக ஆக விரும்பும் மாதவனும், குடும்பத்தை சுமக்க தயார் படுத்தப்படும் ஜோஷியும் பெற்றோர் விருப்பத்திற்காகவே ,விருப்பமில்லாமல் படிக்கிறார்கள்.வந்த அன்றே சீனியர் மாணவர்களுக்கு ஷாக் கொடுக்கும் மாணவனாக அறிமுகமாகிறார் அமீர்கான்.அன்றிலிருந்து ஆரம்பிக்கிறது அவரது சேட்டைகள்.

வீரு சகஸ்ரபுத்தே,சுருக்கமாக 'வைரஸ்'.. இது பொ(b)மன் இரானி.புது மாணவர்களுக்கு, அறிமுக உரைகொடுக்கும்போது, தனது கல்லூரியின் அருமை, பெருமைகள் மற்றும் தனது விரிவுரையாளர் தனக்கு கொடுத்த, விண்வெளியில் புவிஈர்ப்புவிசை இல்லாத இடத்தில் கூட எழுதும் பேனாவை தன்னைப்போல் ஒரு புத்திசாலி மாணவனிடம் கொடுக்க வருடக்கணக்கில் காத்திருப்பதாக கூறுகிறார். அப்போது 'பென்சிலை ஏன் உபயோகிக்கக்கூடாது'என்று கேட்கும் அமீர்கானுக்கு க்ளைமாக்ஸில் பதில் கூறுகிறார்.

கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்ணும் முறையை அமீர்கான் கிண்டல் செய்யும்போதெல்லாம் தியேட்டர் அதிர்கிறது. 'புத்தகத்தில் இருப்பதை வரிக்குவரி எழுதினால்தான் மதிப்பெண், சொந்தமாக எழுதினால் ஒத்துக்கொள்ள முடியாது' என்று விரிவுரையாளர் சொல்லும்போது நிறைய சோகக்குரல்கள்.புரிந்து படிக்காமல், மனப்பாடம் செய்யும் முறை தவறு என்று உணர்த்துவதற்காக சதுர்(ஓமி) தயார் செய்து வைத்திருக்கும், வரவேற்புரையில் சில வார்த்தைகளை அமீர்கான் மாற்றி விட, அவமானப்படும் சதுர் 'இன்னும் பத்து வருடம் கழித்து இதே இடத்துக்கு வருவோம்.வாழ்க்கையில் யார் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று பார்ப்போம்' என்று சவால் விடுகிறான்.அதே நேரத்தில் மாதவனுக்கும்,ஜோஷிக்கும் வேலை கிடைப்பது கஷ்டம் என்று பொமன் இரானியும், அமீர்கானிடம் சவால் விடுகிறார். இவர்கள் சவால் என்னவானது, என்பதுதான் மீதிக்கதை.

அமீர்கானின் கலாட்டாக்கள் ரசிக்கவைக்கின்றன.அவருக்கு இணையாக இருக்கிறது சதுரின் பாத்திரப்படைப்பு.படம் முழுக்க வந்தாலும்கூட, 'என்னுடன்சேர்ந்தால்உன்னைக்காப்பாற்றுகிறேன், ஆனால் உன்நண்பனை கல்லூரியிலிருந்து நீக்குவதாக,உன் கைப்பட கடிதம் தயார் செய்ய வேண்டும் 'என்று வைரஸ் கூறும்போது, நண்பனுக்காக, உயிரையே கொடுக்கத்துணியும் ஜோஷி , நெகிழ வைக்கிறார். .வைரஸுக்கும் அமீர்கான்&கோவிற்கும் இடையே நடக்கும் போட்டிகள் கலகலப்பு.கடைசியில் அமீர்கானைப்புரிந்துகொண்டு, தனது பேனாவைத்தரும் இடம் உணர்ச்சிகரம்.

மோனா சிங்(கரீனாவின் அக்கா) கிற்கு பிரசவம் பார்க்கும் காட்சியில் மும்பை மழை முக்கிய பங்கு வகிக்கிறது.கரண்ட் கட்டான நிலையில் அமீர்கானின் புத்திசாலித்தனத்தால் தாயும் சேயும் நலம்.

க்ளைமாக்ஸில் வைரஸ் சொல்லும் பதில்:விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் பென்சில் முனை உடைந்தால் அது சுற்றிக்கொண்டே வரும். அது எந்த வகையிலாவது கஷ்டம் கொடுக்கலாம்'.
கடைசியில் அமீர்கான் உண்மையில் யார் என்பது வெளிப்படும் இடம் சுவாரஸ்யம்.டைரக்க்ஷன் அருமை.'All is well' பாடல் தாளம் போட வைக்கிறது.
இது ஒரு மீள் பதிவு.

Friday, 1 January 2010

இன்னுமொரு புத்தாண்டு.


இதோ,

இன்னுமொரு புத்தாண்டு.

வாழ்வின் கணக்கில் இன்னுமொரு பக்கம்.

சென்ற வருஷம் சந்தோஷங்களும் , சில கஷ்டங்களும் நிறைந்ததாக இருந்திருக்கலாம்.நல்லவை எடுத்து, அல்லவை தள்ளலாமே.மனமும் ஒரு குப்பைத்தொட்டிதான், அதையும் அவ்வப்போது சுத்தம் செய்யலாமே.

கொண்டாட்டமென்பது இன்றோடு முடிந்து விடாமல், இன்று என்பது இன்னொரு நாளாகிவிடாமல்,மகிழ்ச்சி என்பது பண்டிகையின்போது மட்டுமே என்றாகிவிடாமல்,புது வருடத்திற்கும், புதுவாழ்க்கைக்குமாய்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Happy New Year

LinkWithin

Related Posts with Thumbnails