அடுத்த வருஷங்களுக்கான அறிவிப்பு..
ஏதாவது ஒரு பொதுவான தொழில்ல இருக்கற நண்பர்கள் உதவி தேவைப்படும் சமயங்களில், தங்களுக்குள்ளயே ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கறது சகஜம்தான். இப்ப நம்ம பதிவுலகத்தையே எடுத்துக்குவோம். நமக்கு தெரிஞ்ச தொழில் நுட்பங்களை இடுகையிடறது மூலமா, நிச்சயம் ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கறோம்தானே.
1970-களில் மும்பையின் ஃபோர்ட் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வெச்சிருந்த சில நண்பர்களும் அப்படித்தான் தங்களுக்குள்ளேயே தொழில் முறையில் உதவி செஞ்சுக்கறதை வழக்கமா வெச்சிருந்தாங்க. புகைப்படத் துறையில் நாளுக்கு நாள் எவ்வளவோ புதுப்புது முயற்சிகள் நடக்குது, புகைப்படக் கருவிகள், லென்சுகள்ன்னு சந்தைக்கு தெனமும் எவ்வளவோ விதவிதமா வந்துக்கிட்டே இருக்குது. இது தவிர, எடுத்த படத்தை டெவலப் செய்யறது, ப்ரிண்ட் போடறது, அதுகளை ஆல்பமாக்குறதுன்னு எவ்வளவோ வேலைகள் இருக்குது. (அப்ப டிஜிட்டல் காலம் வரலைங்கறதை நினைவில் கொள்க).
அந்த வேலைகளில் ஏற்படற சந்தேகங்களை நிவர்த்தி செய்யறதுல ஆரம்பிச்சு, ஆல்பம் தயார் செய்யறதுக்கான தரமான பொருட்கள், பிலிம், எங்கே டெவலப் செய்யக் கொடுத்தா வேலை தரமானதா இருக்கும்கற தகவல் உதவிகள் உட்பட எல்லோரும் ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்துக்குவாங்க. இப்ப நம்ம ‘பிட்,ஃப்ளிக்கர்’ எல்லாம் ஆத்துதே.. அதே கடமையைத்தான் அப்ப அவங்களும் ஆத்திக் கிட்டிருந்துருக்காங்க.
அந்த வேலைகளில் ஏற்படற சந்தேகங்களை நிவர்த்தி செய்யறதுல ஆரம்பிச்சு, ஆல்பம் தயார் செய்யறதுக்கான தரமான பொருட்கள், பிலிம், எங்கே டெவலப் செய்யக் கொடுத்தா வேலை தரமானதா இருக்கும்கற தகவல் உதவிகள் உட்பட எல்லோரும் ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்துக்குவாங்க. இப்ப நம்ம ‘பிட்,ஃப்ளிக்கர்’ எல்லாம் ஆத்துதே.. அதே கடமையைத்தான் அப்ப அவங்களும் ஆத்திக் கிட்டிருந்துருக்காங்க.
அப்பத்தான், இதை மாதிரி தகவல் உதவிகள் தேவைப்படற மத்த புகைப்பட ஆர்வலர்களுக்கும் உதவியா இருக்கற மாதிரி நம்ம வட்டத்தை பெரூசாக்கினா என்னான்னு அவங்களுக்கு தோணியிருக்கு. மளமளன்னு ஏற்பாடுகள்ல இறங்கி, 1973-ம் வருஷம் ஜூன் 23-ம் தேதியன்னிக்கு சுமார் இருபத்தஞ்சு நண்பர்கள் கூடி, Photographic Dealers Association(PDA)ன்னு ஒரு அமைப்பை ஏற்படுத்தினாங்க. காலப்போக்குல வட்டம் 3400 மெம்பர்களைக் கொண்டதா வளர்ந்து தன்னோட பேரை All India Photographic Trade & Industry Association அப்டீன்னு மாத்திக்கிடுச்சு.
கண்காட்சிக்குள் ஒரு கண்காட்சி..
புகைப்படக் கலையை ஊக்குவிக்கறதுக்காகவும், லேட்டஸ்டான டெக்னிக்குகளை மக்கள் கிட்ட பகிர்ந்துக்கவும் என்ன வழின்னு யோசிச்சப்பதான் மக்களெல்லாம் ஒரு கூரையின் கீழ் கூடி எக்ஸிபிஷன் நடத்தினா என்ன?ன்னு தோணியிருக்கு. புகைப்படக் கலை சம்பந்தமா இருக்கற எல்லா விஷயங்களும் ஒரு கூரையின் கீழ் கிடைக்குதுன்னா நல்லதுதானே.. அப்படியே மக்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களையும் கண்காட்சியா வெச்சாங்கன்னா, புது விஷயங்களையும் கத்துக்கிடலாம்ன்னு முடிவெடுத்து 1978-ம் வருஷம் முதற் கொண்டு ‘போட்டோ ஃபேர்’ நடத்த ஆரம்பிச்சுருக்காங்க. அப்பலேர்ந்து இன்னி வரைக்கும் அதே கோரேகாவ் (Goregaon) NSE மைதானத்துல இருக்கற Bombay Exhibition Centre-லதான் இது நடக்குதுங்கறது ஒரு விசேஷச் செய்தி. இங்கே மட்டும் இன்னும் மும்பையாக்காம விட்டு வெச்சிருக்காங்களேன்னு யோசனையோட பார்த்தேன். ஒரு கேட்ல மட்டும் Bombay-ஐ சுரண்டி எடுத்துட்டு, வெறுமே எக்ஸிபிஷன் செண்டரை மட்டும் விட்டு வெச்சிருக்காங்க. மத்த கேட்ல இன்னும் பாம்பேயோட அதிகாரம்தான் நடக்குது.கண்காட்சி நடக்குற இடத்துல உள்ளே ஸ்டால் போடறவங்களுக்காகவும், அதெல்லாம் சரியாயிருக்கான்னு செக் செய்யறதுக்காக வந்து போற பார்வையாளர்களுக்கும் தனித்தனியா ஆன்லைன்ல ரெஜிஸ்ட்ரேஷன் வசதி செஞ்சுருந்தாங்க. அதெல்லாம் வெளியூர்லேர்ந்து வரவங்களுக்குத்தான். உள்ளூர்க் காரங்க நமக்கெதுக்கு? நாம நேரடியா டீல் செஞ்சுக்குவோம்ன்னுட்டு கிளம்பிட்டோம். நீள நீளமான மேசைகள்ல விண்ணப்ப படிவங்களை வெச்சுக்கிட்டு நமக்காகக் கால் கடுக்க காத்துட்டிருக்காங்க. படிவத்தை நிரப்பிக்கிட்டு, பக்கத்துலயே இருக்கற ஜன்னல்ல நூறு ரூபாயையும் சேர்த்துக் கொடுத்ததும், கொஞ்சம் இந்தப் பக்கம் வந்து காமிராவைப் பாருங்கன்னு சொல்லி நம்மைப் படம் எடுத்துக்கறாங்க. ஆச்சு.. ஐடி தயார். அதையும் ஐடியை கழுத்துல போட்டுக்கறதுக்காக ரிப்பனில் கோர்த்த கார்டையும் ஒரு பையில் போட்டுக் கொடுத்துடறாங்க. வாங்கிட்டு நேராப் போயி க்யூவில் நின்னு உள்ளே நுழைஞ்சோம்.
பீரங்கியை.. அதாங்க.. நம்ம கேனானை தவிர மத்தவங்க எல்லாம் ஸ்டால் போட்டுருக்காங்க. ஒலிம்பஸ், ஃப்யூஜியோட நம்ம நிகானும் அங்கே நிக்கார். மொதல்ல ஒவ்வொரு வரிசையா பார்த்துட்டே வருவோம். வேணுங்கறதை மனசுல முடிச்சுப் போட்டு வெச்சுக்கிட்டு, பொருளை கம்பேர் செஞ்சு வாங்கிக்கலாம்ன்னு முடிவு எடுத்திருந்தேன். அதான் ஒவ்வொரு பொருளுக்கும் நாலஞ்சு கடைகள் தொறந்து வெச்சுருக்காங்களே..
ஸ்டால்கள்..
முந்தின தடவை போயிருந்தப்ப போட்டோ, வீடியோ காமிராக்கள், லென்சுகள்ன்னு நிறைய கடைகள் இருந்தது. இப்ப ஒரே ஒரு கடையை தவிர மத்த இடங்கள்ல காமிராக்களை காணோம். ஜூம் லென்சுகள் பார்க்கலாம்ன்னு ஒரு ஐடியா இருந்தது. ஆனா sigmaவுல மட்டும்தான் லென்சுகள் வெச்சிருந்தாங்க. நாலஞ்சு கடைகள் பார்த்துட்டு, ஒரு கடையில் வாங்கினாத்தானே நமக்கு திருப்தி. வெறுமே ஒரே ஒரு கடையில் பார்த்துட்டு வாங்கினா நம்ம கொளுகையை விட்டுக் கொடுத்துட்டதா ஆகிடாதோ.. அதனால வெறுமே ட்ரைபாட் மட்டும் வாங்கிக்கிட்டேன். லென்ஸ் வேணும்னா இங்கே இருக்கற வாஷிக்குப் போனா ஆச்சு. இன்னொரு சமயம் வாங்கிக்கலாம். மொதல்ல எனக்கு எந்த மாதிரி லென்ஸ் தேவைங்கறதை மொதல்ல முடிவு செஞ்சுட்டு அப்றம் போகலாம்ன்னு ஒத்திப் போட்டுட்டேன்.போட்டோ ஸ்டுடியோ வெச்சுருக்கறவங்களுக்கு இந்தத் தடவை நடந்த கண்காட்சி ரொம்பவே உபயோகமா இருந்துருக்கும்.ஃப்ளாஷ் லைட்டுகள், ரிஃப்ளெக்டர்கள், ட்ரைபாடுகள், பின்னணிக்கான துணிகள், அப்றம் வீடியோவுலயும், போட்டோக்கள்லயும் உபயோகப் படுத்தறதுக்கான எக்கச்சக்கமான தீம்களுக்கான சாப்ட்வேர்கள், போட்டோ ஃப்ரேம்கள், வீடியோ எடிட்டிங்குக்கான சாப்ட்வேர்ன்னு கொட்டிக் கிடந்துது. இப்பல்லாம் கல்யாண வீடியோக்கள், போட்டோக்களை 3D தொழில் நுட்பத்துல தயாரிக்கிறதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்டு. விருப்பமிருக்கறவங்க பேரைப் பதிஞ்சுகிட்டா, எப்படித் தயாரிக்கிறதுன்னு பயிற்சி கொடுப்பாங்க. பயிற்சி எடுத்தப்புறம் அந்த முறையில் வீடியோக்கள், போட்டோக்கள்ன்னு தயார் செஞ்சு அசத்தலாம். அதுக்குன்னு இருக்கும் கண்ணாடியைப் போட்டுக்கிட்டு வீடியோக்களைப் பார்த்து எஞ்சாயலாம் :-)
இப்பல்லாம் யாரும் பெயர் பொறிக்கறதில்லையாம்...
இப்பல்லாம் கப், தலையணை, ப்ளேட், பொம்மை இத்யாதிகள்ல தங்களோட போட்டோக்களை பதிஞ்சு வெச்சுக்கற வழக்கம் பெருகிட்டு வருது. முக்கியமா குட்டீஸ் இதை ரொம்பவே விரும்பறாங்க. அதுக்கான கருவிகளும் காணக்கிடைச்சது. அதே மாதிரி சினிமா, டெலிவிஷன் ஷூட்டிங்குகளுக்கு உபயோகப் படுத்தற கிரேன்கள் அங்கங்கே கொக்கு மாதிரி தலையை நீட்டி எட்டிப் பார்த்துட்டு இருக்குது. ‘ஸ்டெடிகேம்’ன்னு ஒரு வகை காமிரா. இது கூடுதல் அதிர்வுகள் இல்லாம ஷூட் செய்ய ஏதுவா இருக்குமாம். மத்த காமிராக்கள் மாதிரி இதை ட்ரைபாடிலோ, ட்ராலியிலோ வைக்க தேவையில்லை. காமிராமேன் உடம்புல கட்டிக்கிட்டு நடிகர், நடிகைகள் கூடவே நடந்து போய் நடிப்பைப் படம் பிடிக்க ஏதுவா Garrett Brown என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கு. இதை உடம்புல கட்டிக்கிட்டு ரெண்டு பேர் அங்கியும் இங்கியும் நடந்து டெமோ கொடுத்துட்டிருந்தாங்க.ஸ்டெடியாப் படம் புடிக்கும் ஸ்டெடிகேம்..
கண்காட்சி நடந்த நாட்கள் முழுசும், பிரபல போட்டோகிராபர்கள் வந்து, வொர்க் ஷாப்கள் நடத்துனாங்க. அழகழகான போட்டோக்களெல்லாம் கண்காட்சிக்கு வெச்சிருந்தாங்க. விட்டுட்டு வர மனசேயில்லை. போன தடவை ஃபேஷன் ஷோ சமயத்துல மாடல்கள் ஒவ்வொரு கம்பெனிகளோட காமிராக்களைக் கையில் பிடிச்சுட்டு பூனை நடை நடந்துட்டிருந்தாங்க. இந்தத் தடவை portrait மாடலிங்காம். அங்கங்கே நின்னு போஸ் கொடுத்துட்டிருந்தாங்க. தொழில் முறை போட்டோ கிராபர்கள் சந்தர்ப்பத்தை உபயோகிச்சுக்கிட்டு சுட்டுத் தள்ளிட்டிருந்தாங்க. என்னை மாதிரி கத்துக்குட்டிகள் ‘ஞே’ன்னு வேடிக்கை பார்த்துட்டு நகர்ந்து போயிட்டோம்.வளைச்சு வளைச்சு படம் எடுத்தாலும் அசராம போஸ் கொடுத்தவங்க..
காஃபிடோரியா பரவாயில்லாம இருக்கு.இன்னும் நாலு டேபிள் சேர் போட்டுருந்தா, அலைஞ்சு திரிஞ்சு அலுத்த கால்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துட்டு, வாய்க்கு வேலை கொடுத்துருக்கலாம். இல்லாததால மியூசிக் சேர் விளையாண்ட மாதிரி, உக்காந்துர்ந்தவங்கள்ல யாரு எழுந்திரிச்சுப் போறான்னு கவனிச்சுட்டு இருந்துட்டுக் காலியான நாற்காலியைக் கபால்ன்னு கவ்விட்டு வர வேண்டியதாப் போச்சு.அடுத்த வருஷத்துக்கான புகைப்படக் கண்காட்சி இந்தியத் தலை நகர்ல நடக்கப் போவுதாம். துண்டு போட்டு இடம் புடிக்க ரெடியா இருந்துக்கோங்க. அதுக்கு அடுத்த வருஷம் அதாவது 2014-ல் மறுபடியும் மும்பை வருதாம்.