அமுதசுரபி இதழில் ஜூலை மாத வெண்பாப்போட்டிக்கான ஈற்றடியை பாவலர் கருமலைத் தமிழாழன் வழங்கியிருந்தார். "உழைப்பே தரும்நல் உயர்வு" என்ற அந்த ஈற்றடிக்கான வெண்பாக்களில் நான் எழுதிய வெண்பாவும் தேர்வாகி பிரசுரமாகியிருக்கிறது.
கல்லாமை நீக்கிக் கருத்தூன்றி நாளும்நற்
சொல்லாளன் போலவே சொல்லெடு- நல்லாய்
விழைவொடு நாள்தொறும் வீறுகொண்டு கற்பாய்
உழைப்பே தரும்நல் உயர்வு
ஊழைநம்பிச் சோம்பி உலோபர்பின் ஏகாதோர்
கூழைபோல் கும்பிட்டுக் கோராதோர் - வாழி
தழைத்திடச் செய்யும் தகவோர்க்கு என்றும்
உழைப்பே தரும்நல் உயர்வு
நற்பேறு நாளும் நடைவந்து நிற்காது
பொற்பேறாம் நற்செயல் பூணுக - மற்றோ
பிழைக்க வழிகண்டு பேறுகள் காண்பாய்
உழைப்பே தரும்நல் உயர்வு.
சோம்பல் களைந்து சுறுசுறுப்பாய் நாளும்நாம்
ஆம்பல் மலராய் அகமலர்ந்(து) — ஓம்பும்
விழைவு கருதி விவேகமாய் ஆற்றும்
உழைப்பே தரும்நல் உயர்வு.
