Monday, 29 January 2018

மொபைல் க்ளிக்ஸ் 2 (உணவு)


கண்ணைக்கவரும்படி உணவை அலங்கரித்து வைக்கும் ஃபுட்டோக்ராபியைப்பற்றி ஏற்கனவே இரண்டு பாகங்களில் பகிர்ந்திருந்தேன். சுட்டியைப் பற்றிச்சென்றால் அவற்றைக் கண்டு களிக்கலாம். ஒளிப்படத்துக்காக உணவை அலங்கரிக்கும்போது, உணவின் நிறத்திலிருந்து வேறுபட்ட வண்ணங்களிலான பின்புலம் அமைந்திருப்பது நன்று. விரும்பினால் மேசை விரிப்பு, தட்டு, தம்ளர், ஸ்பூன் போன்றவற்றையும் களப்பொருட்களாக சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒளியைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளல் உணவின் தன்மையை மேலும் மேம்படுத்திக்காட்டும். பொதுவாக காலை நேர இயற்கை ஒளியில் ஜன்னலின் அருகே டிஸ்ப்ளே செய்து எடுக்கும்போது நல்ல ரிசல்ட் கிடைக்கிறது. விரிப்புகள் எதுவும் சரியில்லையெனில் வீட்டிலிருக்கும் மரத்தாலான மேசை மற்றும் நாற்காலிகளின் மீது உணவுப்பொருட்களைப் பரப்பியும் படம் பிடிக்கலாம். அவ்வாறு படம் பிடிக்கும்போது மரப்பொருளின் மேற்பரப்பில் தண்ணீரை நன்கு தெளித்து லேசாகத்துடைத்து விட்டு ஈரம் காயுமுன் படம் பிடித்தால், பின்புலம் அருமையாக அமையும். 

சக்கையப்பமும் மசால் வடையும் பின்னே பூந்தட்டும்.

 அட!!! அட!! அடை.

 ஆலு பராத்தாவும் ச்சன்னா மசாலாவும்.

 அயினிச்சக்கை

 பேஸ்ட் செய்தபின் காப்பி அருந்தல் நன்று.

 பாரம்பரியத்துக்குண்டோ ஈடு?

 இரண்டு காப்பியிலும் ஒரே E

 தோஸ்ஸ்ஸை.. மசால் தோசை.


 பாலக் பனீர்

 ராகி சேமியா கிச்சடி.

தொடரும்..

Friday, 26 January 2018

69 - வது வாழ்த்துகள்

குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற தினங்களில் மும்பையின் முக்கியமான கட்டடங்கள் நம் மூவண்ணக்கொடியை நினைவூட்டும் வகையில் மூவண்ண பலூன்கள் அல்லது விளக்குகளால் அலங்கரிக்கப்படுவது வழக்கம். நவிமும்பையின் மாநகராட்சிக்கட்டடமும்  அந்தப்படியே மூவண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்டிருந்தது காண கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. காமிராவில் சிறைப்பட்ட அக்காட்சி உங்களுக்காக..


 225 அடி உயரக்கம்பத்தில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும் நம் இந்தியத்தாயின் மணிக்கொடி. இதைப்பற்றி ஏற்கனவே இங்கே எழுதியிருக்கிறேன்.


அனைவருக்கும்
இனிய
குடியரசு தின நல்வாழ்த்துகள்

Wednesday, 24 January 2018

மாயத்திரை..

ஒரு தடவைதானே, சின்ன விஷயம்தானே என்று உரிமையை பிறரிடம் விட்டுக்கொடுக்க ஆரம்பித்து விட்டால், அப்புறம் அவர்களே பிடுங்கிக்கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.

பயத்தை முறியடித்து துணிச்சல் களம் வெல்லும்போது, அங்கே வெற்றி அரியணை ஏறும்.

அறியாமை தவறல்ல.. அறிந்த பின்னும் அறியாதது போல் பிடிவாதமாய் இருப்பதே பெருந்தவறு.

மேடு பள்ளமற்ற வெகு சுலபமான பாதையிலும் வாய்த்து விடுகிறது வெகு கடினமான பயணம். 

அளவு கடந்த பயத்தில் தோன்றும் அசட்டுத்துணிச்சல் ஆபத்தையும் விளைவிக்கும்.

ஆட்டமும் வாட்டமும் நிரந்தரமல்ல..

வாழ்வைப்பற்றி கனவு காண்பவன் ஜெயிக்கிறான், கற்பனையில் திளைப்பவனோ அதிலேயே உழல்கிறான்.

சோம்பி முடங்கியிராமல், முடிந்ததைச் செய்து உடலையும் மனதையும் இயக்கத்தில் வைத்திருப்பது இருத்தலின் பொருட்டென்றாலும், அதிலும் ஓர் மனநிறைவு ஏற்படும்படி இயங்குவதே அதன் வெற்றி. இல்லையெனில் நேரமும் உழைப்பும் வீணே.

செய்த நன்மை மற்றும் தீச்செயல்களின் விளைவுகள், பின் தொடரும் காலடிச்சுவடுகளைப் போன்றவை. மணற்பரப்பில் பதிந்த சுவடுகளாய் சில விரைவிலேயே விலகி விடுகின்றன. சிலவோ களிமண் பரப்பில் பதிந்த தடமாய் காலாகாலத்துக்கும் அழுத்தமாய் நிலைத்து நிற்கின்றன.

வெற்றிக்கும் நமக்கும் நடுவில் இருப்பது பெரும்பாலும் நாமாக இட்டுக்கொண்ட திரைதான். காலப்போக்கில் கற்சுவராய் கடினப்பட்டு விட்டதுபோல் தோன்றினாலும், உடைத்தெறிய மனம் கொண்டால் அதுவே புகையாய்க் கலைந்து விடும் அளவுக்கு ஒன்றுமில்லாததே.

Monday, 22 January 2018

மொபைல் க்ளிக்ஸ் 1 (கோவில்கள்)

வெளியிடங்களுக்குச்செல்லும்போதோ அல்லது முக்கியமான ஏதேனும் நிகழ்வுகளின்போதோ அதன் ஞாபகார்த்தமாக ஒளிப்படங்கள் எடுத்துக்கொள்வது மக்களின் வழக்கம். அதிலும் காமிரா வசதி கொண்ட அலைபேசிகள் வந்தபின், விதவிதமான வகைகளில் படங்கள் எடுத்து மெமரி கார்டை நிரப்புவது இன்னும் அதிகரித்திருக்கிறது. என்னதான் டியெஸ்ஸெல்லார் வகை காமிராவின் தரத்துடன் இவை போட்டி போட இயலாதெனினும், நல்ல தரமான பிக்ஸல் எண்ணிக்கை கொண்ட அலைபேசியில்.. ஒளிப்படக்கலையின் அடிப்படை விதிமுறைகளைப் பின்பற்றி எடுக்கப்பட்ட படங்கள் தொழில்முறை காமிராக்களில் எடுக்கப்பட்ட படங்களுக்கு சவால் விடும் வகையில் அமைகின்றன. தவிரவும், டியெஸ்ஸெல்லார் வகை காமிராக்கள் அனுமதிக்கப்படாத இடங்களில்  மொபைல்தான் ஆபத்பாந்தவனாக உதவிக்கு வருகிறது. குறைந்தது 16 மெகாபிக்ஸல் கொண்டிருக்கும் மொபைலில் எடுக்கப்படும் படங்கள் ஓரளவு திருப்திகரமாகவே இருக்கிறது. பரீட்சார்த்தமாக ஒரு பயணத்தின்போது எனது நிக்கானை வீட்டில் விட்டுவிட்டு மொபைலிலேயே நிறையப்படங்களை எடுத்தேன். அவை உங்கள் பார்வைக்கு. "மொபைல் க்ளிக்ஸ்" என்ற எனது ஃப்ளிக்கர் ஆல்பத்திலும் அவற்றைக்காணலாம்.

சரியான விதத்தில் படம் எடுப்பதே ஒளிப்படக்கலையின் பாலபாடம். எதைப்படம் பிடிக்க நினைக்கிறோமோ அந்த சப்ஜெக்ட் ஃப்ரேமுக்கு வெளியில் சென்று, அரையும் குறையுமாக படத்தில் பதியாமல் முழுவதும் ஃப்ரேமுக்குள் அடங்கும்படி எடுத்தல் ஒரு விதம். இவ்வாறு எடுக்கும்போது சப்ஜெக்டைச்சுற்றிலும் சற்று இடம் விட்டு க்ளிக் செய்தல் அவசியம். சாய்ந்திருக்கும் படத்தை நேர்செய்தல் போன்ற பிற்சேர்க்கையின்போது சப்ஜெக்ட் வெட்டுப்படுவது இதன் மூலம் தவிர்க்கப்படுகிறது. கோவில் கோபுரங்கள், பிரம்மாண்டமான மரங்கள், கட்டிடங்கள் போன்றவற்றின் முழு அமைப்பையும் படம் பிடிக்க முனையும்போது இவ்விதியைக் கவனத்தில் கொள்வது அவசியம்.


மொபைலில் எடுத்த படங்களை பிற்சேர்க்கையின் மூலம் மேம்படுத்த விரும்பினால், கணினியில் காப்பி பேஸ்ட் செய்து கொண்டு வழக்கமாக எந்த போட்டோஷாப் மென்பொருளை உபயோகப்படுத்துகிறோமோ அதன் மூலம் மேம்படுத்திக்கொள்ளலாம். தவிரவும், இப்பொழுது மொபைலிலும் ப்ளேஸ்டோரில் அடோப், பிக்ஸ் ஆர்ட், போன்ற ஆப்கள் கிடைக்கின்றன. அவற்றைத்தரவிறக்கி அதன் மூலமும் பிற்சேர்க்கை செய்து படத்தை அழகுபடுத்திக்கொள்ளலாம்.

தொடரும்..

LinkWithin

Related Posts with Thumbnails