Saturday 19 August 2023

நினைவில் நின்றவர்கள் 3 - குட்டன்


இரண்டு வயதுக்குழந்தையாக இருந்த பருவத்தில் அவனுக்குத்தெரியாமல் வீட்டில் எங்கேயும் முந்திரிப்பருப்போ, அல்லது காஜுகத்லியோ ஒளித்து வைத்து விட முடியாது. குளிர்பதனப்பெட்டியில் வைத்திருந்தாலும் திறந்து அதன் தட்டுகளில் ஏறி தேடி எடுத்துக்கொண்டு விடுவான் குட்டன்

இவனுக்கும் எங்களுக்கும் ஏதோவொரு ஜென்மத்தில் ரத்த பந்தம் இருந்திருக்க வேண்டும். இல்லையெனில், எங்கோ ராஜஸ்தானைப்பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் குடும்பமும், தமிழ்நாட்டில் பிறந்த எங்கள் குடும்பமும் மஹாராஷ்ட்ராவில் சந்தித்து, தாயும் பிள்ளையுமாகப் பழகியிருக்க முடியுமா? கருவில் அவன் உருவான நாளிலிருந்தே அவனுக்காக அனைவரும் காத்திருந்தோம். அவன் பிறப்பதற்கு முன்பே ஆண்குழந்தைதான் பிறக்கப்போகிறது என அனைவருக்கும் தெரியும். ஆணாக இருந்ததால்தான் பூமியைப் பார்ப்பதற்கே அனுமதிக்கப்பட்டது அந்தக்கரு.

வீட்டில் பணிப்பெண் இருந்தபோதும், சுகப்பிரசவமாக வேண்டுமென மாங்கு மாங்கென வேலைகளைச்செய்வாள் அவன் அம்மா. தாய் சுறுசுறுப்பாக இருந்தால்தான் குழந்தையும் சுறுசுறுப்பாக இருப்பானென யாரோ கொளுத்திப்போட்டு விட, மதிய வேளைகளில் தூக்கத்தை வெல்ல, எங்கள் ஃப்ளோரில் நீள் செவ்வகத்துண்டையொத்த நடைபாதையில் இந்தக்கோடிக்கும் அந்தக்கோடிக்குமாய் நடையாய் நடப்பாள், படிக்கட்டுகளில் ஏறியிறங்கி விட்டு மூச்சு வாங்க அமர்ந்திருப்பாள். அந்த கூற்றில் உண்மை இருக்கிறதோ என்னவோ? வெடிவாலாக வந்து பிறந்தான் பயல். குரங்குச்சேட்டையும், செல்லக்குறும்பும் சொல்லி முடியாது.

சிறுகுழந்தைகள் மெல்ல மெல்ல தவழ ஆரம்பிக்கும்போது, தன்னைத்தூக்கிக்கொண்டு அடுத்த அறைக்குப்போக, வீட்டு வாசற்படியைத்தாண்ட இனிமேல் பெரியவர்களின் உதவி தேவையில்லை எனக் கண்டுகொள்கிறது. இவனும் அப்படித்தான்.. வீட்டுக்குள்ளேயே மெல்ல மெல்ல தவழ்ந்து கொண்டிருந்தவன் ஒரு நாள் வீட்டுக்கு வெளியே செல்லும் வழியையும் கண்டு கொண்டான். கொஞ்சம் அசந்தாலும் வெளியே பாய்ந்து விடுவான். மொத்தம் எட்டு வீடுகளைக்கொண்ட எங்கள் ஃப்ளோரில் எந்த வீட்டுக்கதவு திறந்திருக்கிறதோ அங்கு நுழைந்து விடுவான். கிருஷ்ணனைத்தேடியலையும் யசோதை போல் அவன் அம்மா, “கோல்யா.. கோலு” எனக்கூப்பிட்டபடி இவனைத்தேடியலைவாள். கொழுக்மொழுக்கென மைதா உருண்டை போல் இருப்பதால் ‘கோலு’ என்ற செல்லப்பெயர்.

என்னதான் தினமும் பார்த்து வந்தாலும் தவழ ஆரம்பித்தபின் எங்களுடன் ‘பச்சக்’ என ஒட்டிக்கொண்டான். எங்கள் வீட்டின் ஃபோயர் பகுதி சீலிங்கில் ஒட்டி வைத்திருந்த வண்ணவண்ண சீரியல் லைட்டுகள் மின்னி ஒளிரும்போது தரையிலும் எதிரொளிக்கும். அதோடு விளையாடுவது அவனது தினசரி பொழுதுபோக்கு. ‘ஆ..’வென வாய்பிளந்து அதையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருப்பவன் அதைப்பிடிக்கவும் முயல்வான். கையில் அகப்படாத கோபத்தில் ஓவென கச்சேரி வைக்கத்துவங்குவான்.

தக்காளியை மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி அத்துடன் சர்க்கரை சேர்த்த ஜூஸ் என்றால் மிகப்பிரியம் அவனுக்கு. மதியம் பள்ளி விட்டு வீடு வரும் என் குழந்தைகளுக்காகத் தயாரிக்கும்போது ஒரு நாள் அவனுக்கும் கொடுத்தேன். பயலுக்கு ருசி நாக்கில் ஒட்டிக்கொண்டது. அவன் அம்மாவின் அனுமதியுடன் தினமும் கொடுத்தேன். “அண்ணி,.. வீட்ல தக்காளிக்கூடையைக் கண்டாலே கை நீட்டி என்னவோ சொல்றான், கூடையை இழுத்துப்போடறான். நீங்க பழக்கி வெச்சுட்டீங்க இப்ப என்னைப்படுத்தறான்” என அவன் அம்மா செல்லமாய் அலுத்துக்கொண்டாள். சிரித்துக்கொண்டேன்.

“பன்ட்டி ஔர் பப்லி” என்றொரு ஹிந்திப்படம் ரிலீசாகியிருந்தது. ஐஸ்வர்யா ராய், பின்னாளில் கணவராகப்போகும் அபிஷேக் பச்சனுடனும், மாமனாராகப்போகும் அமிதாப் பச்சனுடனும், தங்களுக்குள் பின்னாளில் இப்படியொரு உறவு ஏற்படப்போகிறது என்பதை அறியுமுன் நடிகர்களாக மட்டுமே இருந்த காலகட்டத்தில் “கஜ்ரா ரே.. கஜ்ரா ரே..” என்றொரு பாடலுக்கு ஆடி, அது வைரலாகப் பரவியிருந்த சமயம். குடியிருப்புகளில் நடைபெறும் விழாக்களில் இந்தப்பாடலுக்கான ஆடல் கண்டிப்பாக இடம்பெறும். அந்தப்படியே என் மகளும், கோலுவின் சகோதரியும் இன்னுமொரு சிறுமியுமாக மேடையில் ஏறிய அடுத்த நிமிடம் இவன் வாயைத்திறந்து சைரன் ஒலிக்க விட்டான். மேடையில் அவர்களுடன் ஆட வேண்டுமென்று ஒரே பிடிவாதம். எந்த சமாதானமும் எடுபடவில்லை. கடைசியில் அவன் அம்மா, மேடையில் ஏற்றி விட்டு விட்டார். அந்த நடனத்தில் “வாவ்.. வாவ்.. வாவ்” என்று புகழ்வது போல் ஒரு வரி வரும். சரியாக அந்த வரி வரும் வரை சும்மா நின்று கொண்டிருந்தவன், “வாவ்.. வாவ்..” என அபிநயித்து விட்டுப் பெருமையுடன் பார்த்தான். ‘குழந்தை செம ஸ்மார்ட்” என வியந்து வெடித்துச்சிரித்தது கூட்டம். 

நம்மூர் அயிட்டங்கள் எல்லாமும் பிடிக்குமென்றாலும் தயிர்சாதமென்றால் வெளுத்து வாங்குவான். அக்கா.. அக்கா.. என என் மகளுடன் இழைவான், ஆனால், என் கணவரிடமோ அல்லது என் மகனுடனோ அதிகம் ஒட்ட மாட்டான். அப்படிப்பட்டவன் ஒரு நாள் ஏதோ சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் மகள் அவனிடம், 

“டேய்.. ஒரு துண்டு குட்றா” என கவுண்டமணி செந்திலிடம் கெஞ்சுவது போல் கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

திரும்பி முதுகைக்காட்டிக்கொண்டு அமர்ந்து தின்னத்தொடங்கினான்.

என் மகள் மறுபடியும், “தின்னத்தா.. தின்னத்தா..” என பழைய பல்லவியைப் பாடத்தொடங்கினாள்.

பொடியன் எழுந்து நேராக என் மகனிடம் சென்று அமர்ந்தான், பாக்கெட்டுக்குள் கையை விட்டு கை நிறைய அள்ளினான், பலவந்தமாக என் மகனுக்கு ஊட்டினான். முழுவதும் ஊட்டி முடித்து விட்டு ஒன்றும் தெரியாத அப்பாவி மாதிரி “அக்கா.. உனக்கு வேணுமா? இந்தா” என்றவன் பாக்கெட்டில் ஒட்டியிருந்த அணுவிலும் சிறிய ஒரு துகளை விரல் நுனியால் ஒற்றியெடுத்து “இந்தா” என நீட்டினானே பார்க்க வேண்டும்.

கோகுலத்துக்கிருஷ்ணனுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல இவனது லீலைகள். ஒரு நாள், பெட்ரூமின் சன்ஷேடில் இறங்கி கமுக்கமாக அமர்ந்து கொண்டான். வீட்டில் ஆள் அனக்கத்தைக்காணோமேயென, எங்கள் வீட்டுக்கு வந்திருக்கலாமென அவன் அம்மா வந்து தேடினார். “இங்கே வரலை..” என்றதும் அவன் போக சாத்தியமுள்ள எல்லா வீடுகளுக்கும் போய்த் தேட ஆரம்பித்தார். எங்கேயும் கிடைக்கவில்லை என்றதும் பயம் பற்றிக்கொள்ள அழ ஆரம்பித்தார். ஆண்கள், வீட்டின் அருகிலிருந்த சாக்கடைப்பக்கம், குடியிருப்பின் நிலவறை தண்ணீர் டாங்க் எனத் தேட ஆரம்பித்தார்கள். அழுதழுது அவன் அம்மாவின் முகம் வீங்கியது. “புள்ளய கவனிக்கறத விட உனக்கு என்ன பெரிய சோலி?” என வயதான பெண்கள் கடிந்து கொண்டார்கள். இந்த களேபரத்தின்போது, அவன் அக்கா எதற்கோ பெட்ரூம் சன்ஷேட் பக்கம் எட்டிப்பார்க்க.. பயல் பொங்கும் சிரிப்பைக் கையால் பொத்தி அடக்கிக்கொண்டு குலுங்கிச்சிரித்துக்கொண்டிருந்தான். அப்புறமென்ன? ஆளும் பேருமாக வந்து அவனை வீட்டுக்குள் இழுத்துப்போட்டார்கள், எல்லோரும் போனபின் அவனை அன்னை வெளுத்தெடுத்தாள்.

காலையில் விடிந்ததிலிருந்து இரவு பொழுது அடைவது வரை எங்கள் வீட்டிலேயே கிடப்பதால் அவன் அம்மா, “க்ருஷ்ணனை யசோதா வளர்க்கறது போல, இவனை நீங்க வளர்க்கறீங்க” என்று சொல்வாள். இப்போதும் அவனைப்பற்றி என்னிடம் குறிப்பிடும்போது, “அவன் முதலில் உங்க புள்ள, அப்புறம்தான் என் பையன்” என்றுதான் குறிப்பிடுவாள். ஒரு நாள் இரவு பத்து மணி இருக்கும். “அண்ணி.. அண்ணி..” எனக்கூப்பிடும் குரல் கேட்டு கதவைத்திறந்தேன்.

பொட்டுத்துணியில்லாமல் இவன் நிற்கிறான், ‘இவனை என்ன செய்ய?’ என்ற முகபாவத்துடன் அவன் அம்மா அருகில் நிற்கிறாள்.

“என்னடா?.. தூக்கம் வரலையா? எங்க வீட்ல தூங்கறியா? உள்ளே வா. ஊஞ்சல்ல படுத்துக்கறியா? இல்லே ஏசில படுத்துக்கறியா” என அழைத்தேன்.

‘உம்புள்ள பண்ணியிருக்கற காரியத்தப்பாரு..” என்றபடி அவனைத் திரும்பி நிற்கச்செய்தாள்.

“ஐயோ..” என முதலில் கத்தி விட்டேன். வடிவேல் ஒரு படத்தில் கட்டியிருப்பாரே அதைப்போல், பின்பக்கம் இடுப்புப்பகுதி முழுவதும் பெரிய பேண்டேஜால் மூடியிருந்தது. 

“என்ன பண்ணினான்?”

“கதவு சுவரில் அடிச்சுக்காம இருக்க, காந்தம் கொண்ட ஸ்டாப்பர் பதிச்சுருப்போமில்லே. அது மேல போய் குதிரை உட்காரப்பாத்திருக்கான். வழுக்கி விழுந்து கூரான பாகம் கிழிச்சுருச்சு. இப்பத்தான் அவங்க பெரியப்பாட்ட போய் ட்ரெஸ்ஸிங்க், டெட்டனஸ் ஊசி எல்லாம் போட்டுட்டு வந்தோம்.. நீங்களும் பாத்து ரசிங்க” என்றாள். அந்த பெரியப்பா, தம்பி பிள்ளைக்கு வைத்தியம் பார்க்கவே குழந்தை மருத்துவராகியிருப்பார் போலிருக்கிறது. அந்தத்தழும்பு ரொம்ப நாளைக்கு மறையாமல் இருந்ததால், அவனுக்கு, “ஹாரி பாட்டர்” என்று செல்லப்பெயரும் வைத்தோம்.

ஹனுமான் என்றால் கொள்ளைப்பிரியம் அவனுக்கு. ஒரு சமயம் அவனது பிறந்த நாளுக்காக, ப்ளாஸ்டிக்கில் செய்த கதாயுதத்தை தெரியாத்தனமாகப் பரிசளித்து விட்டேன். அன்றே, பெரியப்பாவின் மகன் மீது அதைப் பிரயோகித்து, “ஆன்ட்டி, நல்லா ஸ்ட்ராங்கா உள்ள பொருளாத்தான் வாங்கித்தந்திருக்கா, இங்கே பாரு, நெத்தி எப்படிப்புடைச்சுருக்குன்னு” என்று எனக்கு நற்பெயர் வாங்கித்தந்தான். இரண்டு நாட்களுக்கு அவன் பாட்டியின் கண்ணில் அகப்படாமல் தலைமறைவாகத் திரிந்தேன்.

பின்னொரு நாள், அவன் அப்பாவை காலையில் போய் எழுப்பியிருக்கிறான். எழவில்லை, கதாயுதத்துடன் நான் சின்னதொரு விசிலும் வாங்கிக்கொடுத்திருந்தேன். காதருகே கொண்டு சென்று அதைப் பிரயோகித்தான். ‘உய்ங்ங்’ என காது பாடினாலும் பொத்திக்கொண்டு, அவர் பாட்டுக்கு புரண்டு படுத்துக்கொண்டு விடவே,  ‘மடேர்’ என்று கதாயுதத்தால் முதுகில் ஒன்று போட்டிருக்கிறான். ‘ஐயோ.. அம்மா..’ என அலறியடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தார். இந்த வீரதீர பராக்கிரமசாலி வெற்றியுடன் அறைக்கு வெளியே நடை போட்டான்.

பிள்ளைகளின் மேற்படிப்புக்காக, நாங்கள் நவிமும்பைக்குக் குடிபெயர்ந்தோம். அன்றைக்கு அவன் அழுத அழுகை இருக்கிறதே.. அப்பப்பா.. மனதைக்கல்லாக்கிக்கொண்டுதான் கிளம்பினோம். அதன் பின் அங்கே போய் விட்டுத்திரும்பும்போதெல்லாம் கண்கள் கலங்க, உதடு பிதுங்க காரின் கதவைப்பிடித்துக்கொண்டு, பாவம் போல் நிற்பான். 

“எங்க வீட்டுக்கு வரியா?” என்று ஒரு முறை கேட்டேன். டக்கென்று பின்சீட்டில் ஏறிக்கொண்டான். அவன் அம்மாவிடம் அனுமதி கேட்கக்கூட இல்லை. விஷயமறிந்து அவன் அம்மா அவசர அவசரமாக மாற்றுடைகளைக்கொண்டு வந்தாள். நவிமும்பையின் அருகிலிருக்கும் பறவைகள் சரணாலயமான “கர்நாலா”வில் நிறைந்திருந்த குரங்குகளையும் அவற்றின் சேட்டையையும் ரொம்பவே ரசித்தான்.

இந்த விஷமக்கொடுக்கும் ஒரு விஷயத்திற்குப் பயப்படும். அவன் அம்மா செய்யும் ‘கிச்சடி’ என்ற அயிட்டம்தான் அது. ஒரு கிண்ணத்தில் எடுக்கும்போதே நைசாக நழுவி எங்கள் வீட்டுக்கு ஓடி வந்து, “படார்..’ என கதவையும் அடைத்துக்கொண்டு விடுவான். பின்னாலேயே ஓடி வரும் அவன் அம்மா கோபத்தில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நிற்பாள். “பிடிக்கலைன்னா விடு, இங்கே சாப்பிடட்டும்” என என் பிள்ளைகளுடன் சாப்பிட வைப்பேன். தென்னிந்திய உணவுகளென்றால் அவனுக்குக் கொள்ளைப்பிரியம். “பேசாமல், தென்னிந்தியாவிலேயே அவனுக்குப் பெண் பார்த்துடுங்க அண்ணி. எனக்கு பெண் பார்க்கற தொந்தரவு மிச்சம்” என்பாள் அவன் அம்மா.

என்னதான் அடிபட்டாலும், எத்தனை பெரிய காயமென்றாலும் லேசில் அழ மாட்டான். குழந்தையாக இருந்த சமயம், “தூ.. த்தீ.. தம்பா” என்று சொல்லிவிட்டு டேபிள், டீப்பாய், ஜன்னல் என எங்கிருந்தாலும் கீழே குதித்து விடுவான். ‘ஒன்.. ட்டூ.. த்ரீ.’ சொல்கிறானாம். இந்த விளையாட்டு ஒரு நாள் விபரீதமாக முடிந்தது. வழக்கம்போல் “தூ.. த்தீ.. தம்பா..” என்று குதித்தவன் விழுந்தது கண்ணாடி டீப்பாயின் மேல். அதன் விளிம்பு நெற்றிப்பொட்டில் வெட்டி முகமே தெரியாத அளவுக்கு ரத்தம் சொட்டுகிறது. பக்கத்து வீட்டு அக்கா படிகாரம் கொண்டு வந்து காயத்தின் மேல் வைக்கிறார்கள். யாரோ ஈரத்துணியைக்கொண்டு வந்து முகத்தைத்துடைக்கிறார்கள். அவன் அம்மா அழுது அரற்றிக்கொண்டு, குழந்தைகள் சிறப்பு மருத்துவரான அவன் பெரியப்பாவுக்குப் போன் செய்கிறாள். நான் அவனை மடியில் வைத்துப் பிடித்துக்கொண்டிருக்கிறேன். ஆட்டோ கொண்டு வர யாரோ ஓடுகிறார்கள். இவ்வளவு களேபரத்துக்கும் அவனென்னடாவென்றால், “அப்படி ஓரமாப்போய் விளையாடுங்க” என்ற முகபாவத்துடன் அமைதியாக உட்கார்ந்திருந்தான். 

அப்படிப்பட்ட குழந்தையுடன்தான் விதி மிக மோசமாக விளையாடியிருக்கிறது. கோவாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற இடத்தில் வழுக்கி விழுந்து ஒரு பக்க இடுப்பெலும்பில் முறிவு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்து ஓரளவு குணமான சமயம் மறுபடி விழுந்து இன்னொரு பக்க இடுப்பெலும்பிலும் முறிவு ஏற்பட்டது. தகடு வைத்து சிகிச்சை செய்த சில காலத்தில் அதில் சீழ் வைக்கவே கிட்டத்தட்ட இடுப்பு எலும்பு வளையம் முழுவதுமே பாதிக்கப்பட்டு மறுபடியும் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. எழுந்து நிற்கவியலாமல் சில காலத்துக்கு சக்கர நாற்காலியின் துணையை நாட வேண்டிய சூழல். அவனைச்சரி செய்து விட வேண்டுமென்பதற்காக, டில்லி, சென்னை, மும்பை என பெரிய பெரிய டாக்டர்களிடமெல்லாம் சிகிச்சைக்காகக் கூட்டிச்சென்று ஓரளவு தேற்றிக்கொண்டு வந்து விட்டார்கள். 

வலியையும் வேதனையையும் பொறுத்துக்கொண்டு பத்தாம் வகுப்புத் தேர்வுக்கும் தயாரான என் வளர்ப்புப்பிள்ளை, எழுபது சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றான்.  இன்னொரு முறை தப்பித்தவறி விழுந்தால், பெரிய அசம்பாவிதம் நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்திருந்தார்கள். மூன்று அறுவை சிகிச்சைகளைச் சந்தித்து, செயற்கை இடுப்பு வளையம் பொருத்தப்பட்ட குழந்தைக்கு வாழ்வே போராட்டமாய், எந்த நொடியில் நிரந்தரமாகச் சக்கர நாற்காலியில் அமர நேரிடுமோ என்ற பயத்துடன் அமைவதென்பது பெருங்கொடுமை. 

மெதுவாக சுவரைப்பிடித்துக்கொண்டும், பிடிக்காமல் லேசாகத் தடுமாறியும் நடந்தவன் நல்லதொரு பிஸியோதெரப்பிஸ்ட்டின் வழிகாட்டுதலில் படிப்படியாக முன்னேறி இப்போது சைக்கிள், டூ வீலர் ஓட்டுமளவுக்கு குணமாகி இயல்பு வாழ்க்கைக்குத்திரும்பி விட்டான். எனினும் இடுப்பு எலும்பு முழுவதையுமே நீக்கி செயற்கை இடுப்பு வளையம் பொருத்தப்பட்டிருப்பதால் அவன் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. 

அத்தனை இடர்களையும் கடந்து, கேலிகளையும் கிண்டல்களையும் புன்முறுவலோடு எதிர்கொண்டு, எதிர்மறைப் பேச்சுகளைப் புறங்கையால் ஒதுக்கித்தள்ளி இன்று அவன் நிமிர்ந்து நிற்கிறானென்றால் அது அவனுடைய தன்னம்பிக்கையாலும் அவனுக்காக எதையும் செய்யத்தயாராயிருக்கும் பெற்றோரின் அன்பினாலும் மட்டுமே. இதோ அடுத்தபடியாக தனது கனவான 'C.A' படிக்க நுழைவுத்தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறான். நிச்சயம் அந்தத்துறையிலும் பெயரெடுக்கும் அளவுக்குச் சாதிப்பான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails