Saturday 12 August 2023

நினைவில் நின்றவர்கள் 2- பில்டர்


மும்பையின் புறநகர்ப்பகுதியான கல்யாணில், அபார்ட்மெண்ட் எனப்படும் நவீன கூட்டுக்குடித்தனத்தில் எங்கள் வீடு இருந்தது. அபார்ட்மெண்டில் தேர்தல் முறையிலோ அல்லது வாய்மொழி முறையிலோ தலைவர், உபதலைவர், காசாளர், செயலாளர் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். தேர்ந்தெடுக்கப்படும் நாளன்று காரசாரமான விவாதங்களும், ஒருவரையொருவர் மட்டந்தட்டி கீழிறக்கிக்கொள்ளும் அவலங்களும் நிகழும். ஒவ்வொரு பில்டிங்கிலுமே பெரிய ஆள் அல்லது அப்படி தன்னை நினைத்துக்கொள்ளும் ஒரு சில்வண்டும் அதற்கு ஜால்ரா தட்டும் ஒரு கூட்டமும் கண்டிப்பாக இருக்கும். 

அன்றும் அப்படித்தான் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வழக்கம் போல் பெண்கள் கருத்துக்கூறாமல், “அதெல்லாம் ஆம்புளைங்க பாத்துப்பாங்க” என ஒதுங்கி அவரவர் வீடுகளுக்குள் பதுங்கி விட்டனர். இறுதியாக காசாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அடிதடி நிகழாத குறையாக வாக்குவாதம் வலுத்துக்கொண்டிருந்தது. இதற்கு முன்பு இருந்த காசாளருக்கு ஆதரவாக ஒரு சிலரும், எதிராகப் பலரும் வாதித்துக்கொண்டிருந்தனர். “புது பில்டிங்குன்னுதான் பேரு, இப்பவே பல்லிளிக்குது, நிறைய ரிப்பேர் வேல இருக்குது, மக்கள் கொடுத்த பராமரிப்புக்காசை பழைய காஷியர் என்ன பண்ணினார்? இனிமேயும் அந்தாளை நீடிக்க விடக்கூடாது’ என ஒரு கூட்டமும், “சார் பெரிய பில்டராக்கும்.. இதெல்லாம் அவருக்கு தூசு மாதிரி. அவரு நெனைச்சா ஒரு நிமிஷத்துல எல்லா ரிப்பேர் வேலையையும் முடிச்சுருவாரு, ஆனா பாருங்க, அவரு இப்ப பயங்கர பிஸி” என ஜால்ரா கூட்டமும் கத்திக்கொண்டிருக்க நடுவாந்திரமாக அமர்ந்திருந்தார் அவர்.

மும்பையின் பெருந்தலைகள் அணியும் வெள்ளை குர்த்தா பைஜாமா, தலையில் மராட்டியர்கள் அணியும் வெள்ளைத்தொப்பி, வாயில் அவ்வப்போது அடக்கிக்கொள்ளும் வெற்றிலை, சில சமயங்களில் கீழுதட்டின் உள்ளே இழுவிக்கொள்ளும் தம்பாக்கு என பக்கா மராட்டிய மண்ணின் மைந்தர். எப்போதுமே வானத்தைப்பார்த்துதான் மிதப்பாக நடப்பார், “என் தகுதிக்கு நான் எங்கே எப்படியிருந்திருக்க வேண்டியவன்!! என் கெரகம் இந்தக் கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டேய்ன்” என்ற மனப்பான்மையோடே அலைவார். தானொரு பில்டர் எனவும் கோடிக்கணக்கில் மதிப்புள்ள ப்ரொஜெக்டுகளில் வேலை செய்வதாகவும் அடிக்கடி சொல்லிக்கொள்வார். என் கணவர் வேலைக்குக் கிளம்பும் அதே சமயத்தில்தான் அவரும் கிளம்புவார். “நமஸ்தே சாப்ஜி” என புல்லட்டைத்துடைத்துக்கொண்டே அவர் குரல் கொடுப்பார், “நமஸ்தே நமஸ்தே” என ஸ்கூட்டரைத்துடைத்துக்கொண்டே என் கணவர் பதில் குரல் கொடுப்பார். என் கணவர் மத்திய அரசு அதிகாரி எனத் தெரிந்து கொண்டதிலிருந்து தனி மரியாதை பொங்கி வழிந்தது. அடுத்து வந்த கூட்டத்தில் என் கணவரை காஷியராகவும் ஆக்கினார்.

கோடிகளில் புரள்வதாகப் பேசுவாரே தவிர ஆளைப்பார்த்தால் அப்படிச்சொல்ல முடியாது, அவரும் சரி, அவரது குடும்பமும் சரி .. ரொம்பவும் எளிமையான தோற்றத்தில் இருப்பார்கள். வசதி படைத்த பிற வீடுகளைபோல் இண்டீரியர் டெக்கரேஷனும் எதுவுமே கிடையாது. “அங்கே அத்தனை கோடி மதிப்பில் ஒரு குடியிருப்பு கட்டறேன், இங்கே இத்தனை பெரிய குடியிருப்பு கட்டறேன்” என வாய்ப்பேச்சுக் கேட்கும்போதெல்லாம் “இத்தனை பெரிய ஆள், இப்படியொரு சாதாரண குடியிருப்பில் அதுவும் சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டில் ஏன் இருக்க வேண்டும்? இவருக்கு இருக்கும் வசதிக்கு பங்களாவிலேயோ வில்லாவிலோ இருக்கலாமே?” எனத்தோன்றும். ஆனால் உள்ளொன்று வைத்துப் புறமொன்று காட்டுவதுதான் மும்பை வாழ்க்கை. கொஞ்சம் சம்பாத்தியம் இருக்கிறதென்று வெளியே காட்டிக்கொண்டால் அப்புறம் அண்டர்க்ரவுண்ட் ஆட்களின் தொல்லை ஆரம்பித்து விடும். ஒரு வேளை அதனால்தான் சிம்பிளாக இருக்கிறாரோ என நாங்களே சமாதானமாகிக்கொள்வோம்.

குடியிருப்பின் நுழைவுப்பகுதியில் கொஞ்சம் காலியிடம் இருந்தது, அதில் பிள்ளைகள் விளையாட ஊஞ்சல், சீசா போன்றவை அமைக்கலாமென்று குடியிருப்பின் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. ‘நம்ம பில்டிங்க்லயே பில்டர் இருக்கறச்சே வேலைய வெளியாள் கிட்ட ஏன் கொடுக்கணும்? சல்லிசா முடிச்சுத்தரட்டுமே. அவர் பிள்ளைகளும்தானே விளையாடப்போகுது?” என ஆளுக்காள் அபிப்ராயப்பட்டார்கள், அவரிடம் சொன்னபோது, “அதுக்கென்ன பேஷா செஞ்சுட்டாப்போச்சு, இப்ப மெட்டீரியல் வெலையெல்லாம் ஏறிக்கிடக்கு, சிமெண்டுக்கு தட்டுப்பாடும் இருக்குது, மழைக்காலம் முடிஞ்சு புள்ளையார் சதுர்த்தி, தீபாவளின்னு எல்லாம் முடியட்டும், உடனே வேலையை ஆரம்பிச்சுரலாம். என் கிட்ட இருக்கற வேலையாட்களையே கொண்டு வரேன்” என்றார். மக்களெல்லாம் ஏதோ உடனேயே வேலை முடிந்து விட்டாற்போல் அவ்வளவு சந்தோஷப்பட்டனர்.

தீபாவளி முடிந்தது.. வேலை ஆரம்பிப்பதாகக் காணோம். ‘ஆட்களெல்லாம் ஊருக்குப்போயிட்டாங்க, ஜனவரி வாக்கில் திரும்ப வருவாங்க, உடனே ஆரம்பிச்சுரலாம்” என்றார் பந்தாவாக. இப்படியே மாதங்கள் கடந்தன. இதற்கிடையே, எங்கள் குடியிருப்பின் வாட்ச்மேன் பொழுது போகாமல் தோட்டம் போட்டு வைக்க, அங்கே தானாய் முளைத்தது ஒரு அரசங்கன்று. உடனே மக்கள் இங்குள்ள வழக்கப்படி அரசங்கன்றைச் சுற்றி வந்து பூஜை செய்வதும், விளக்குப்போடுவதும், வீட்டிலிருந்து சுவாமி படங்களைக் கொண்டு வந்து வைத்துப்பூஜிப்பதுமாக ஒரு தெய்வீகச் சூழல் அமைந்தது. “அச்சச்சோ!!.. கோவில் மாதிரியே இருக்கே, இந்த இடத்துலயா விளையாட்டுத்திடல் அமைக்கணும்!! கூடாது கூடாது. ப்ரோஜெக்டைக் கேன்சல் பண்ணுங்க” என்றார் பில்டர். “ஆடத்தெரியாதவ கூடம் கோணல்ன்னு சொன்னாளாம். இன்னா அன்னான்னு கடைசில ஒரு வேலையும் செஞ்சு குடுக்காம ஏமாத்திட்டாரே. இவரு நெஜமாவே பில்டருதானா?” என சிலர் பொருமியது பலர் காதில் விழவேயில்லை.
ஒரு சில வருடங்களில் பில்டிங்கில் மண்தரையாக இருந்த இடங்களில் மழை காரணமாக சகதியாகிறது, ஆகவே அதை சிமெண்ட் போட்டு பூசி விடலாம் என்றொரு யோசனை ஆலோசிக்கப்பட்டது. அப்போதும் அந்த வேலையையும் பில்டரிடமே கொடுக்கலாம் என்று பேசப்பட்டது. அதிசயமாக பில்டர் அந்த வேலையை உடனே ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல் உடனே வேலையை ஆரம்பிக்கவும் செய்தார். “எனக்கு மணல், சிமெண்ட் எல்லாம் சல்லிசான விலையில் கிடைக்கும், அதனால பட்ஜெட்டுக்குள்ளேயே வேலையை முடித்து விடலாம், ஒண்ணும் கவலைப்படாதீங்க” என்று வாயாலேயே வெல்லப்பாயாசம் காய்ச்சினார். வேலையும் முடிவடைந்து, பில்லை குடியிருப்பில் ஒப்படைத்தார். அப்புறம் விசாரிக்கும்போதுதான் தெரிந்தது, சலுகை விலையில் சிமெண்ட் எதுவும் கிடைக்கவில்லை, மார்க்கெட் விலையில்தான் கிடைத்தது என்று.  வேலையிலும் தரமில்லை.. நம்பி கொடுத்த குடியிருப்பு வாசிகள் நொந்து கொண்டனர். ஆனால், இதுவும் பில்டருக்கு சாதகமாகத்தான் அமைந்தது. அவரது புதுக்காரை நிறுத்த இடம் வசதியாக அமைந்து விட்டதே.

அந்தக்குடியிருப்பில் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி மட்டுமே உண்டு. பில்டர்தான் முதன்முறையாக குடியிருப்பில் கார் வாங்கியவர். செகண்ட் ஹேண்ட் வண்டிதான் எனினும், தினமும் காலையில் அதற்கு நடைபெறும் சவரட்சணை இருக்கிறதே.. அடடா!!! காணக்கண்கோடி வேண்டும். இண்டு இடுக்கு விடாமல் முதலில் துடைப்பார், பின் ஈரத்துணியால் கண்ணாடிகள், காரின் முன் பின், பக்கவாட்டுப்பகுதிகள் என எல்லாவற்றையும் துடைத்துத்துடைத்து மெருகேற்றுவார். அதன் பின் வண்டியினுள் உட்கார்ந்து இஞ்சினை ஸ்டார்ட் செய்து ஐந்து நிமிடம் ஓட விடுவார். அப்புறம் ரிவர்ஸ் கியரைப்போட்டு பத்தடி பின்னால் ஓட்டுவார், பின் முதல் கியரைப்போட்டு முன்னால் ஓட்டி வண்டியை ஏற்கனவே நின்றிருந்த இடத்தில் நிறுத்தி விட்டு வண்டியை விட்டு இறங்குவார். பின் வண்டியைப்பூட்டிக்கொண்டு பைக்கில் ஏறி கிளம்புவார். தினமும் இப்படித்தான் நடக்குமே தவிர ஒரு நாளாவது குடும்பத்தோடு வெளியே போனதாகவோ, இல்லையெனில் அவர் வெளியே காரில் போனதாகவோ நாங்கள் அந்த குடியிருப்பில் இருந்த வரைக்கும் சரித்திரம் பூகோளம் எதுவும் கிடையாது. பந்தாவுக்காக வாங்கிய கார், ரோட்டில் என்றைக்குமே ஓடவில்லை.

பழைய குடிநீர்க்குழாய்களை மாற்றி பெரிய புதுக்குழாய்களைப்பதித்தல், தண்ணீர் டேங்க் ரிப்பேர் என எந்த சிவில் வேலையானாலும், ‘நானாச்சு’ என்று ஒப்புக்கொள்வதும், அதன் பின் வேறொருவரிடம் மாற்றி விட்டு, கை கழுவி விடுவதும் அவருக்கு வாடிக்கை. எப்படியோ வேலை முடிந்தால் சரி என மக்களும் பெரிதாக ரியாக்ட் செய்வதில்லை. ஆனால் என்னவோ தானே எல்லா வேலைகளையும் செய்து தருவதாகப் பீற்றிக்கொள்வார். குடியிருப்பில் கூட்டம் நடக்கும் தினங்களில் தனது பரிவாரம் சூழ வந்து அமர்வதும், வாய்ச்சவடால் விடுவதும், அவரது எதிராளிகளும் ஆதரவாளர்களும் ஒருத்தருக்கொருத்தர் சண்டையிட்டுக்கொள்வதை வேடிக்கை பார்த்து விட்டு, கடைசியில் கிளம்பிச்செல்வதும் வாடிக்கை. குடியிருப்பில் வருடாவருடம் நடக்கும் பிள்ளையார் சதுர்த்தி விழாவுக்கு கணிசமான தொகையை அன்பளிப்பாகக் கொடுத்து வந்ததால், பணம் மக்களின் வாயை அடைத்திருந்தது. தவிர, இத்தனை வருடங்களில் அவரது பந்தா காட்டும் குணம் மக்களுக்கு நன்கு புரிந்து போயிருந்ததால் அவர்கள் அதைப் பெரிதாக எண்ணாமல் ‘இவர் இப்படித்தான்’ என்ற முடிவுக்கு வந்திருந்தனர். அதற்கும் வந்தது ஒரு நாள் ஆப்பு. 

தரைத்தளத்திலிருந்த பில்டருக்கும் நான்காவது மாடியிலிருந்த இன்னொருவருக்கும் ஒத்துப்போகவே போகாது. அடிக்கடி வாய்த்தகராறு நடக்கும். நான்காவது மாடியிலிருந்தவர் கட்டடம் கட்டுபவர்களுக்கு சிமெண்ட், மணல், வீடுகளில் பதிக்கும் குடிநீர்க்குழாய்கள் போன்றவற்றை சப் காண்ட்ராக்ட் முறையில் சப்ளை செய்பவர். சரி,.. ஒரே துறையில் இருப்பவர்களிடம் தொழில்முறை போட்டி பொறாமை இருப்பது சகஜம்தானே என எவருமே அத்தகராறுகளைப் பெரிதாக எண்ணுவது கிடையாது. எப்போதுமே குடியிருப்பின் மாதாந்திரக்கூட்டத்தின் போதுதான் குடியிருப்பு வாசிகளிடையே இருக்கும் வேற்றுமைகள், கருத்து வேறுபாடுகள் சண்டையாக வெடிக்கும். “உன்னைப்பத்தித் தெரியாதா?” என ஆரம்பித்து ஒவ்வொருவரும் எதிராளியின் ஏழு தலைமுறை வரைக்கும் கிழித்துத் தோரணம் கட்டுவர். 

அப்படியான ஒரு கூட்டத்தின்போதுதான், தனது வீட்டுக்கான மாதாந்திர பராமரிப்புத்தொகையை சப் காண்ட்ராக்டர் சரிவரக்கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டின் மேல் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது பார்த்து பில்டர் ஏதோ வார்த்தையை விட்டு விட, சப் காண்ட்ராக்டர் பாய்ந்து குதறி எடுத்து விட்டார். அவர் சொன்ன வார்த்தைகளில் ஒரு சில மட்டும் குடியிருப்பு வாசிகளின் காதுகளில் நன்கு விழுந்தன.

“நீயெல்லாம் என்னத்த பில்டரு? உன் பந்தாவையெல்லாம் மூட்டை கட்டி சாக்கடைல போடு. மொதல்ல நீ ஒரு குடிசை வீடாவது யாருக்காவது கட்டிக்குடுத்திருக்கியா? வீடு கட்டுறதைப்பத்தி உனக்கு ஆனா ஆவன்னாவாவது தெரியுமா? என்னைய மாதிரி நீயும் செங்கல் சப்ளை பண்ற சாதாரண சப் காண்ட்ராக்டர்தானே?”

நாலாவது மாடிக்காரர் அடுக்கிக்கொண்டே போனார். பில்டர் அது வரை நிர்மாணித்திருந்த சாம்ராஜ்யத்தின் செங்கற்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து விழத்தொடங்கின. அதன்பின் அடிக்கடி வெளியே தலைகாட்டுவதேயில்லை. நாங்கள் அந்தக்குடியிருப்பிலிருந்து வேறு பெரிய ஃப்ளாட்டுக்கு மாறிய ஒரு சில வருடங்களிலேயே அவரும் வேறு குடியிருப்புக்குக் குடிபெயர்ந்து விட்டார் எனக்கேள்விப்பட்டோம். புது இடத்தில் என்னவெனச்சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறாரோ.. யாருக்குத்தெரியும்!

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

கதை மாந்தர் - உங்கள் பகுதி Bபில்டர் குறித்த பதிவு ஸ்வாரஸ்யம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

இன்னும் இரு பகுதிகள் எழுதியிருக்கேன், அவைகளையும் வாசியுங்கள். உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails