அன்பு ஒன்றே நிலையானது, எதிர்பார்ப்புகளற்ற அன்பு என்பது கொடுத்துக்கொடுத்து வளர்வது. அப்படிப்பட்ட அன்பினால் நிரம்பியவர்கள்தான் வண்ணதாசனின் மனிதர்கள். அந்த மனிதர்களின் வாழ்வியல் சித்திரங்களின் ஒரு துளியே “கனிவு” என்ற இந்த சிறுகதைத்தொகுப்பு. இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் உதயம், இதயம், தாய், குங்குமம், குமுதம், இந்தியா டுடே, சுபமங்களா மற்றும் காலச்சுவடு இதழ்களில் வெளியானவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் ஒன்றான 'கனிவு' என்பதே இத்தொகுப்பின் பெயராகவும் அமைந்துள்ளது.
மனம் நொந்து இருப்பவர்கள், வயதானவர்கள், நோயாளியாய் படுக்கையில் இருப்பவர்கள், இவர்களின் கைகளை ஆதரவாய்ச் சற்று நேரம் பற்றியிருப்பதை விடப் பெரிய ஆறுதலை நம் வார்த்தைகள் தந்து விடாது. கவலை, துக்கம், கண்ணீர், சந்தோஷம் என எந்த வகையான உணர்வுகளுக்கு ஆட்படும்போதும் ஒரு கரம் வந்து நம் விரல்களைக் கோர்த்துக்கொள்ளுமேயானால் அதை விடப் பேறு என்ன உண்டு?! வண்ணதாசனின் மனிதர்களுக்கோ இவை எதுவுமில்லாவிட்டாலும் சக மனிதகர்களின் கைகளைப் பிடித்திருப்பதே ஒரு பெரும் ஆறுதலளிக்கிறது, ‘பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னிதி’ என்ற கண்ணதாசனின் வரிகளைப்போல.. சும்மா அருகிலிருப்பதே பெரும் நிறைவாய்.
மொத்தம் பதினாறு கதைகளைக்கொண்ட இத்தொகுப்பில் வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு வாழ்க்கை ஆனால் அனைவருக்கும் ஒரே முகம். அன்பின் முகம். அன்பு கனிந்த குரல். இனிமேல் நவ்வாப்பழம் என்றதும் ஈஸ்வரியையும் ஆலங்கட்டி மழை என்றதும் பரமாவையும் நினைவிற்கு இழுத்து வந்து விடும் அந்தப் பசலிக்கொடி. வாழ்விலும் நீந்திக் கரையேறக் கற்றுக்கொடுக்கும் மகாதேவன் பிள்ளை போன்ற ஒருவர் எல்லோர் வாழ்விலும் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!
அளவுக்கதிகமாக எது கிடைத்தாலும் சில சமயம் மூச்சு முட்ட வைக்கும். தைப்பூச மண்டபம் முங்க வெள்ளம் கரை புரண்டு வரும் தாமிரபரணி, கரையிலிருப்பவற்றைச் சேதப்படுத்துவது போல அளவுக்கதிகமான அன்பும் ஒருவரை மூச்சு முட்டச்செய்து விடக்கூடாது. ஊற்றெடுத்து நிரம்பித்தளும்பும் தனலட்சுமியின் அன்பும் அதனாலேயே அவரது துக்கம் படர்ந்து பரவுவதும் அப்படிப்பட்டவையே. காலம் முழுக்க உலகுவின் நிம்மதி பறிபோனதற்குக் காரணம் புரிந்து கொள்ளப்படாத அவரது தூய அன்பா! அல்லது அவரது அன்பை இன்னொரு பெண்ணுடன் பகிர விரும்பாத அவரது மனைவியின் அன்பா?! என்னதான் சிறகுகள் விலாப்புறத்திலிருந்து முளைத்துப் பறக்க எத்தனித்தாலும் இக்காரஸ் போல கரிந்து கீழே விழுபவர்கள்தான் அனேகம்.
“ஆம்பூர் தர்மசங்கரய்யர் பார்த்ததையும் நான் பார்த்ததையும் வடக்கின் இளம் குருத்துகள் பார்த்திருக்க முடியாது”
“ஒப்புக்கொள்கிறேன், இந்த டில்லிச்சிறுமி பார்க்கிறதை உங்களைப்போன்ற பேர்கள் பார்த்திருக்கவும் அதே நேரத்தில் முடியாது”
“கனிவு” சிறுகதையில் சங்கரய்யரின் பேத்திக்கும் பெரிய ஆயானுக்கும் நடக்கும் இந்த உரையாடலில்தான் எத்தனை அர்த்தமும் நெருக்கமும் பொதிந்துள்ளது. அதுதானே அவரை தனது இருண்ட பக்கங்களை அவளிடம் திறந்து காட்டுமளவுக்குத் துணியச்செய்கிறது.
வண்ணதாசன் எனும் எழுத்தாளருக்குள் இருக்கும் கல்யாண்ஜி என்றொரு கவிஞரும் அவ்வப்போது தரிசனமளிக்கிறார். படிமங்களும் குறியீடுகளும் நிரம்பிய இந்த சிறுகதைத்தொகுப்பு இனியதொரு வாசிப்பனுபவத்தைத்தருகிறது. அவரது கதைகளிலும் கவிதைகளிலும் தவறாமல் இடம் பெறும் வாதாங்கொட்டை மரத்தையும் காய்களையும் இலைகளையும் போல நீங்காத இன்னொரு இடத்தைப் பிடிப்பது பேரன்பு. பாலத்தைப்பார்த்தாலே ஆற்றைப் பார்த்தாற்போலதான் என்பது போல் இப்போதெல்லாம் வாதாங்கொட்டை மரத்தையும் மரமல்லிப்பூக்களையும் பார்த்தாலே பேரன்பின் அடையாளமான வண்ணதாசன் ஐயாவைப் பார்த்தது போன்றுதான் என்றே எனக்குத்தோன்றுகிறது.
No comments:
Post a Comment