Monday, 31 December 2018

ஃபேஸ்புக்கில் பேசியவை - 20

இருந்திருக்கலாம்.. சாதகமாயொன்றுமில்லை. இல்லாமற் போனதால் பாதகமாயுமொன்றுமில்லை.

சூழ் உறவுகளிடை விதிக்கப்பட்ட தனி வாழ்வு போல் நன்னீர் நடுவே தாகித்திருக்கிறதொரு நீர்க்காகம்.

ஆகாயக்கோட்டையானாலும் ஏதோ ஓர் அஸ்திவாரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எழுப்பப்படுகின்றன.

காரிருள் மறைத்த கருநாகம் போன்று மனதில் ஔிந்து கிடக்கும் வஞ்சம். வெளிப்படும் நேரம் வரை எதுவும் தெரிவதில்லை.

ஒருமித்த குரலில் பாடும் பள்ளிப்பிள்ளைகள் போல் கூட்டமாய்ப் பேசிக்கொண்டிருக்கின்றன குருவிகள்.

அப்பேர்க்கொத்த நிலவுட்பட, காணும் யாவற்றிலும் களங்கம் கண்டுபிடிக்கும் மனித மனதை விட களங்கம் மிக்கது வேறொன்றுமில்லை.

காற்றிற்பறக்கும் பதராய்ப் பிறப்பினும், குருவியின் அலகிடைக் கொறிபடும் நெல்மணியாய்ச் சிறத்தல் இனிது.

விஷந்தோய்ந்தவற்றை விட, அமுதில் நனைந்த அம்புகளே அதிகம் பலிகொள்கின்றன.

சிறகிழந்த தும்பியைப்போல் தத்தித் தவ்விக்கொண்டிருக்கிறது வாலறுந்த ஒரு பட்டம்.

பாசி படர்ந்த குளத்து நீரென மூடிக்கிடக்கும் ஞாபகங்களின் மேல், யாரோ கல்லெறிந்த பின், அல்லது உள்ளிருந்தொரு மீன் குதித்து வெளியுலகம் பார்த்துச் சென்றபின், கலைவதை விட அதி விரைவாக மூடிக்கொள்கிறது குளம்.

Thursday, 27 December 2018

மண் கோட்டையானாலும் மலைக்கோட்டையாக்கும்..


"Diwali killa".. மஹாராஷ்ட்ராவில் தீபாவளி தோறும் குழந்தைகளால் தத்தம் குடியிருப்புப்பகுதிகளில் கட்டப்படும் சின்னஞ்சிறு கோட்டைகளே திவாலி கில்லா.. அதாவது தீபாவளிக்கோட்டை என அழைக்கப்படுகிறது. மராட்டிய மன்னரான சிவாஜி மஹராஜை நினைவு கூரும் விதமாக குழந்தைகள் இக்கோட்டையைக் கட்டுகிறார்கள்.


பொதுவாக ஒரு சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதில் அங்கிருக்கும் கோட்டைகளுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நிலம், நீர், மலை, பாலைவனம் என ஒவ்வொரு பகுதியிலும் கோட்டை கட்டி பாதுகாப்பைப் பலப்படுத்துவார்கள் அரசர்கள். மலைப்பகுதி நிறைந்த மஹாராஷ்ட்ராவில் சுமாராக 150க்கும் மேற்பட்ட கோட்டைகளை சிவாஜி மஹராஜ் கட்டுவித்தார். அவற்றில் பெரும் எண்ணிக்கையிலான கோட்டைகள் மலைகளில்தான் அமைக்கப்பட்டுள்ளன. மராட்டா சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பதில் மலைக்கோட்டைகள் பெரும்பங்கு வகித்தன என்றால் மிகையாகாது.

சிறு வயதில் சிவாஜி மஹராஜ் தன் விளையாட்டுத்தோழர்களுடன் சேர்ந்து, சிறு கோட்டை கட்டி போர் விளையாட்டு விளையாடுவதில் பெரு விருப்பம் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படிப் பெற்ற பயிற்சியும் இப்பகுதியிலுள்ள மலைகளின் மூலை முடுக்குகளைப் பற்றிய பரிச்சயமும் அவருக்கு எதிரிகளுடன் போரிடுவதில் பெரிதும் துணை நின்றன. மலைகளில் ஔிந்திருந்து கொண்டு, யாரும் எதிர்பாரா சமயத்தில் திடீரென வெளிப்பட்டு எதிரிகளைத் தாக்கி விட்டு மறுபடியும் மலைகளில் ஔிந்து கொள்வார். அவரது அப்போதைய எதிரிகளான முகலாயர்களால் அவரை எளிதில் பிடிக்கவே முடியவில்லை. இத்திறமைகளால் அவர் "மலை எலி"எனவும் அழைக்கப்பட்டார். சஹ்யாத்ரி மலைத்தொடரில் இருக்கும் ராய்கட் கோட்டையில்தான் அவர் மன்னராக முடி சூட்டிக்கொண்டு ராய்கட்டை தன் தலைநகராக அறிவித்தார். இங்கிருந்துதான் மராட்டா சாம்ராஜ்யம் தமிழகத்தின் தஞ்சை வரை விரிவடைந்தது. இக்கோட்டையில்தான் சிவாஜி மஹராஜின் சமாதியும் அமைந்துள்ளது. வருடந்தோறும் ஷிவ் ஜெயந்தியன்று அரசு மரியாதை செலுத்தப்பட்டும் வருகிறது. இன்றளவும் மஹாராஷ்ட்ராவின் ஹீரோவாக சிவாஜி மஹராஜே விளங்குகிறார்.

அரையாண்டுத்தேர்வு முடிந்ததுமே குழந்தைகள் கோட்டை கட்டுவதைப் பற்றி கலந்தாலோசிக்கத் துவங்கி விடுவார்கள். தீபாவளிக்குச் சில நாட்கள் முன்பிருந்து வேலை ஆரம்பமாகும். பல வித அளவுகளிலான கற்கள், உடைந்த செங்கற்கள், டைல் துண்டுகள், கோணி, மற்றும் மண் போன்றவை சேகரிக்கப்படும். கோட்டை கட்டப்படும் இடத்தில் முதலில் கற்கள், செங்கற்கள் மலை போல் குவிக்கப்பட்டு அதன் மேல் கோணியால் மூடுவார்கள். மலை போல் தோற்றமளிக்கும் பொருட்டு சற்று ஒழுங்கற்ற வடிவிலேயே இது செய்யப்படும். அதன்பின் மண்ணைக் குழைத்து, கோணியின் மேல் நன்கு பூசி விடுவார்கள். மண் ஈரமாக இருக்கும்போதே மலையுச்சியை சற்றே சமதளமாக்கி டைல் துண்டு ஒன்றை அதில் வைப்பார்கள். ஆங்காங்கே ஒன்றிரண்டு படிக்கட்டுகள் அமைக்கப்படும். மலையின் ஒரு பகுதியில் சிறை ஒன்று அமைக்கப்படும். துடைப்பக்குச்சிகள் சிறைக்கம்பிகளாக உருமாறும். மலையைச் சுற்றி கோட்டைச்சுவரும் மண்ணைக் குழைத்து அமைக்கப்படும். கற்பனையைச் சற்றே நீட்டினால் மலைக்கும் கோட்டைச்சுவருக்கும் இடையே அகழி ஒன்றும் அமைக்கப்பட்டு முதலைகள் விடப்படும். ஊற வைத்த கடுகு, வெந்தயம் போன்றவற்றைஏராளமாகத் தூவி விட்டால் இரண்டு நாளில் அவை முளைத்து வளர்ந்து அடர்த்தியான காடாக மாறியிருக்கும். இப்போது மலை ரெடி.

தீபாவளி சமயத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் சிவாஜி மஹராஜ், மற்றும் பீரங்கிகள், மாவல் எனப்படும் சிப்பாய்கள், குடி மக்கள், புலி, அஃப்ஸல் கான் ஆகிய பொம்மைகள் கிடைக்கும். இவற்றை வாங்கி வந்து கோட்டைச் சுவரில் ஆங்காங்கே பீரங்கிகளையும் காவலர்களையும் நிறுத்துவர். அஃப்சல்கானை சிறையிலிட்டு வாசலில் இரண்டு புலிகளை நிறுத்தி விட்டால் தப்பிக்கும் எண்ணம் கனவில் கூட வராது. இறுதியாக மலையுச்சியில் காவலர்கள் புடை சூழ சிவாஜி மஹராஜை அமர்த்தி, ஆங்காங்கே குடி மக்களையும் நிறுத்தினால், அசல் தர்பார் கெட்டது போங்கள்.

இதன்பின் தினமும் காலை, மாலை கோட்டை வாசலில் வண்ணக்கோலமிட்டு அகல் விளக்குகளை ஆங்காங்கே ஏற்றி வைப்பார்கள். ஆகும் எல்லாச் செலவுகளையும் குழந்தைகள் மொத்தமாகப் பகிர்ந்து செய்வார்கள். நரக சதுர்த்தசி வரை இந்த வைபவம் தொடரும். வடக்கர்களின் தீபாவளியான லஷ்மி பூஜை தினத்தன்று விடிகாலையில் அத்தனை குழந்தைகளும் குளித்து தயாராகி வந்தபின், மலையில் ஏற்கனவே போட்டு வைத்திருக்கும் சிறு பள்ளத்தில் ஒரு அணுகுண்டை வைத்து வெடிப்பார்கள். கோட்டை மொத்தமும் வெடித்துச்சிதறும். அதன்பின் மற்ற வெடிகளை வெடித்து கோட்டை தரை மட்டமாக்கப்படும். பொம்மைகள் அடுத்த தீபாவளிக்கென எடுத்து பத்திரப்படுத்தப்படும். இப்படியாகத்தானே தீபாவளி கோலாகலம் ஆரம்பிக்கும்.

பிள்ளைகளிடையே ஒற்றுமையுணர்ச்சி, வேலைகளைப் பகிர்ந்து செய்தல், கற்பனைத் திறன் மேம்படுதல், கணக்கு வழக்குகளைத் திறம்படக் கையாளுதல், விட்டுக்கொடுத்தல், நட்புணர்வு போன்ற திறன்கள் மேம்படுவதோடு குறைந்தது ஒரு வாரத்துக்கு பிள்ளைகளை மேய்க்கும் பொறுப்பிலிருந்து பெற்றோருக்கும் சற்று ஓய்வு கிடைக்கும். இப்போதெல்லாம் மண்பாண்டங்கள், பீங்கான் ஜாடிகள் செய்பவர்கள் சிறு கோட்டைகளையும் செய்து விற்கிறார்கள். இட நெருக்கடியுள்ள குடியிருப்புகளில் இதை மட்டும் வைத்து விடுகின்றனர். கொஞ்சம் இட வசதியிருந்தால் இதைச்சுற்றிலும் கோட்டையை மேலும் விரிவாக்கம் செய்கின்றனர். கற்பனைத் திறனுக்கு வானம் கூட எல்லையில்லைதானே?..

Monday, 10 December 2018

சிறுபயறுடன் கூட்டணியமைத்த பூசணி.

புட்டு செய்யலாமெனவோ, சிறுபயிறு சப்பாத்தி செய்யலாமெனவோ அட.. வெறுமனே அவித்துத் தாளித்துத் தின்னலாமெனவோ திட்டமிட்டு சிறுபயிறை ஊற வைத்தபின் திட்டமாறுதலேற்பட்டு விட்டதா? கவலை வேண்டாம்.

சாம்பார், கூட்டுக்கறி, அல்லது அல்வா என ஏதாவது செய்யலாமென வாங்கி வைத்த பூசணிக்காயின் சிறுபகுதி மீதமாகி விட்டதா?.  ஃப்ரிஜ்ஜில் வைத்தாலும் கெட்டுப்போகும் அபாயமோ அல்லது நாட்கணக்கில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு நீர்ச்சத்தெல்லாம் இழந்து சுருங்கி, கடைசியில் குப்பையில் அடைக்கலமாகும் தலையெழுத்தோ ஏற்படலாம். என்ன செய்யலாமென சுணங்கி நிற்கிறீர்களா?.. அஞ்சற்க. உதிரிக்கட்சிகள் இணைந்து ஒரு பலமான கூட்டணி அமைப்பது வழக்கம்தானே. அந்தப்படி பயிறையும் பூசணியையும் ஒன்று சேர்த்து கூட்டுக்கறி சமைத்து விடலாம்.

ஒரு கப் பயிறு இருந்தால், கால் கிலோ பூசணிக்காய், பாதி வெங்காயம், மூன்று பல் பூண்டு, மற்றும் ஒரு ஆர்க்கு கறிவேப்பிலை போதும். தலா கால் டீ ஸ்பூன் அளவு கடுகு, ஜீரகம் போதும் தாளிப்பதற்கு. உப்பு காரம் அவரவர் ருசிக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்துச் சூடாக்கி, ஒன்றரை டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை விட்டுச் சூடாக்கிக் கொண்டு அதில் கடுகு ஜீரகம் கால் ஸ்பூன் வீதம் போட்டுப் பொரிய விடவும். பொரிந்தபின் முதலில் பொடியாக நறுக்கி வைத்த பூண்டைப்போட்டு சிவ்வக்க வதக்கி, அதற்கடுத்தாற்போல் நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு வதக்க வேண்டும். 

வெங்காயம் வதங்கி லேசாகச் சிவக்க ஆரம்பிக்கும்போது, ஊறிய பயிறை அதிலிட்டு ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து அரை வேக்காடு வரும் வரை வேக விடவும். பயிறைப்போடும் முன்பாக சிட்டிகை பெருங்காயத்தூளும் சேர்த்தால் வீடே மணக்கும். அதன் பின், பூசணித்துண்டங்களை அத்துடன் சேர்த்து முக்கால் ஸ்பூன் அல்லது ருசிக்கேற்ப உப்பிட்டு வேக விடவும். பயிறு முக்கால் வேக்காடு ஆனதும் மஞ்சள் தூளும், மிளகாய்த்தூளும் சேர்த்து, கறிவேப்பிலையையும் உருவிப்போடுங்கள். எல்லாம் சேர்ந்து கொதித்து நன்கு வேகட்டும். அள்ளி வைத்தால் அங்கிங்கு ஓடாமல் ஒரு இடத்தில் சமர்த்தாக இருக்க வேண்டும். அதே சமயம் உலர்ந்து பொரியல் பக்குவத்திலும் இருக்கக்கூடாது. ஆகவே, கூட்டு பதத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அவ்வளவு இருக்குமாறு கவனித்துக்கொள்ள வேண்டும். பயிறு வெந்து மலர்ந்து வர வேண்டும், அதே சமயம் அதிகம் குழைந்து கூழாகி விடக்கூடாது. நல்ல மணம் வரும் இப்பொழுதில் அடுப்பை அணைத்து வாணலியை மூடி விட வேண்டும். ஐந்து நிமிடங்களாவது அப்படியே விட்டு வைத்து பின் பரிமாறினால் ஆஹா.. ஓஹோ!!!

இது சப்பாத்தியுடனும் சாதத்துடனும் மட்டுமே ஒத்துப்போகும். சாதத்தில் மேலாக ஊற்றிப் பிசைந்து கொண்டு, வறுத்த கேரள பப்படத்தைத் தொட்டுக்கொள்ளல் சுவை. ஊற வைத்த பயிறு மட்டுமே இந்த முறையில் சமைக்க ஏற்றது. கூடுதல் சத்திற்காக முளை கட்டிய பயிறை ஒரு முறை உபயோகித்தபோது அத்தனை சுவை கிடைக்கவில்லை. தவிரவும், தோல் தனியாகவும் பருப்பு தனியாகவும் மிதந்து வரும் அபாயமுண்டு. சின்ன குக்கரில் நேரடியாகத் தாளித்து, அதில் இதர பொருட்களைச் சேர்த்து ஒரு முறை செய்தேன். அதிகமில்லை ஜெண்டில்விமென்.. ஒர்ரே ஒரு விசில்தான். அது கூடப்பொறுக்காமல் குழைந்து விட்டது. வேண்டாம் விஷப்பரீட்சை என இப்பொழுதெல்லாம் நேரடியாக பாத்திரத்தில்தான் இதைச் சமைக்கிறேன். சற்றே கோபத்துடன் பார்த்தால், அந்த உஷ்ணத்திலேயே வெந்து விடுமளவுக்கு மென்மையானது சிறு பயிறு. ஆகவே அங்கிங்கு நகராது அண்டையிலேயே இருந்து சமைக்கவும்.

செய்முறையை ஒரு சிறிய வீடியோவாகவும் பகிர்ந்திருக்கிறேன். கண்டு உய்யவும்.
சப்பாத்தி, சாதம் தவிர மற்ற உணவுகளுடன் பொருந்திப்போகுமா என்று பரிசோதிப்பதானால், அவரவர் சொந்தப்பொறுப்பில் சூனியம் வைத்துக்கொள்ளலாம். வயிற்றுக்குள் கலவரம் ஏதேனும் ஆனாலோ, நா தன் சுவையறியும் வேலையை இழந்தாலோ கம்பேனி பொறுப்பேற்காது.

LinkWithin

Related Posts with Thumbnails