Monday 10 December 2018

சிறுபயறுடன் கூட்டணியமைத்த பூசணி.

புட்டு செய்யலாமெனவோ, சிறுபயிறு சப்பாத்தி செய்யலாமெனவோ அட.. வெறுமனே அவித்துத் தாளித்துத் தின்னலாமெனவோ திட்டமிட்டு சிறுபயிறை ஊற வைத்தபின் திட்டமாறுதலேற்பட்டு விட்டதா? கவலை வேண்டாம்.

சாம்பார், கூட்டுக்கறி, அல்லது அல்வா என ஏதாவது செய்யலாமென வாங்கி வைத்த பூசணிக்காயின் சிறுபகுதி மீதமாகி விட்டதா?.  ஃப்ரிஜ்ஜில் வைத்தாலும் கெட்டுப்போகும் அபாயமோ அல்லது நாட்கணக்கில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு நீர்ச்சத்தெல்லாம் இழந்து சுருங்கி, கடைசியில் குப்பையில் அடைக்கலமாகும் தலையெழுத்தோ ஏற்படலாம். என்ன செய்யலாமென சுணங்கி நிற்கிறீர்களா?.. அஞ்சற்க. உதிரிக்கட்சிகள் இணைந்து ஒரு பலமான கூட்டணி அமைப்பது வழக்கம்தானே. அந்தப்படி பயிறையும் பூசணியையும் ஒன்று சேர்த்து கூட்டுக்கறி சமைத்து விடலாம்.

ஒரு கப் பயிறு இருந்தால், கால் கிலோ பூசணிக்காய், பாதி வெங்காயம், மூன்று பல் பூண்டு, மற்றும் ஒரு ஆர்க்கு கறிவேப்பிலை போதும். தலா கால் டீ ஸ்பூன் அளவு கடுகு, ஜீரகம் போதும் தாளிப்பதற்கு. உப்பு காரம் அவரவர் ருசிக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்துச் சூடாக்கி, ஒன்றரை டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை விட்டுச் சூடாக்கிக் கொண்டு அதில் கடுகு ஜீரகம் கால் ஸ்பூன் வீதம் போட்டுப் பொரிய விடவும். பொரிந்தபின் முதலில் பொடியாக நறுக்கி வைத்த பூண்டைப்போட்டு சிவ்வக்க வதக்கி, அதற்கடுத்தாற்போல் நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு வதக்க வேண்டும். 

வெங்காயம் வதங்கி லேசாகச் சிவக்க ஆரம்பிக்கும்போது, ஊறிய பயிறை அதிலிட்டு ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து அரை வேக்காடு வரும் வரை வேக விடவும். பயிறைப்போடும் முன்பாக சிட்டிகை பெருங்காயத்தூளும் சேர்த்தால் வீடே மணக்கும். அதன் பின், பூசணித்துண்டங்களை அத்துடன் சேர்த்து முக்கால் ஸ்பூன் அல்லது ருசிக்கேற்ப உப்பிட்டு வேக விடவும். பயிறு முக்கால் வேக்காடு ஆனதும் மஞ்சள் தூளும், மிளகாய்த்தூளும் சேர்த்து, கறிவேப்பிலையையும் உருவிப்போடுங்கள். எல்லாம் சேர்ந்து கொதித்து நன்கு வேகட்டும். அள்ளி வைத்தால் அங்கிங்கு ஓடாமல் ஒரு இடத்தில் சமர்த்தாக இருக்க வேண்டும். அதே சமயம் உலர்ந்து பொரியல் பக்குவத்திலும் இருக்கக்கூடாது. ஆகவே, கூட்டு பதத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அவ்வளவு இருக்குமாறு கவனித்துக்கொள்ள வேண்டும். பயிறு வெந்து மலர்ந்து வர வேண்டும், அதே சமயம் அதிகம் குழைந்து கூழாகி விடக்கூடாது. நல்ல மணம் வரும் இப்பொழுதில் அடுப்பை அணைத்து வாணலியை மூடி விட வேண்டும். ஐந்து நிமிடங்களாவது அப்படியே விட்டு வைத்து பின் பரிமாறினால் ஆஹா.. ஓஹோ!!!

இது சப்பாத்தியுடனும் சாதத்துடனும் மட்டுமே ஒத்துப்போகும். சாதத்தில் மேலாக ஊற்றிப் பிசைந்து கொண்டு, வறுத்த கேரள பப்படத்தைத் தொட்டுக்கொள்ளல் சுவை. ஊற வைத்த பயிறு மட்டுமே இந்த முறையில் சமைக்க ஏற்றது. கூடுதல் சத்திற்காக முளை கட்டிய பயிறை ஒரு முறை உபயோகித்தபோது அத்தனை சுவை கிடைக்கவில்லை. தவிரவும், தோல் தனியாகவும் பருப்பு தனியாகவும் மிதந்து வரும் அபாயமுண்டு. சின்ன குக்கரில் நேரடியாகத் தாளித்து, அதில் இதர பொருட்களைச் சேர்த்து ஒரு முறை செய்தேன். அதிகமில்லை ஜெண்டில்விமென்.. ஒர்ரே ஒரு விசில்தான். அது கூடப்பொறுக்காமல் குழைந்து விட்டது. வேண்டாம் விஷப்பரீட்சை என இப்பொழுதெல்லாம் நேரடியாக பாத்திரத்தில்தான் இதைச் சமைக்கிறேன். சற்றே கோபத்துடன் பார்த்தால், அந்த உஷ்ணத்திலேயே வெந்து விடுமளவுக்கு மென்மையானது சிறு பயிறு. ஆகவே அங்கிங்கு நகராது அண்டையிலேயே இருந்து சமைக்கவும்.

செய்முறையை ஒரு சிறிய வீடியோவாகவும் பகிர்ந்திருக்கிறேன். கண்டு உய்யவும்.
சப்பாத்தி, சாதம் தவிர மற்ற உணவுகளுடன் பொருந்திப்போகுமா என்று பரிசோதிப்பதானால், அவரவர் சொந்தப்பொறுப்பில் சூனியம் வைத்துக்கொள்ளலாம். வயிற்றுக்குள் கலவரம் ஏதேனும் ஆனாலோ, நா தன் சுவையறியும் வேலையை இழந்தாலோ கம்பேனி பொறுப்பேற்காது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails