"Diwali killa".. மஹாராஷ்ட்ராவில் தீபாவளி தோறும் குழந்தைகளால் தத்தம் குடியிருப்புப்பகுதிகளில் கட்டப்படும் சின்னஞ்சிறு கோட்டைகளே திவாலி கில்லா.. அதாவது தீபாவளிக்கோட்டை என அழைக்கப்படுகிறது. மராட்டிய மன்னரான சிவாஜி மஹராஜை நினைவு கூரும் விதமாக குழந்தைகள் இக்கோட்டையைக் கட்டுகிறார்கள்.
பொதுவாக ஒரு சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதில் அங்கிருக்கும் கோட்டைகளுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நிலம், நீர், மலை, பாலைவனம் என ஒவ்வொரு பகுதியிலும் கோட்டை கட்டி பாதுகாப்பைப் பலப்படுத்துவார்கள் அரசர்கள். மலைப்பகுதி நிறைந்த மஹாராஷ்ட்ராவில் சுமாராக 150க்கும் மேற்பட்ட கோட்டைகளை சிவாஜி மஹராஜ் கட்டுவித்தார். அவற்றில் பெரும் எண்ணிக்கையிலான கோட்டைகள் மலைகளில்தான் அமைக்கப்பட்டுள்ளன. மராட்டா சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பதில் மலைக்கோட்டைகள் பெரும்பங்கு வகித்தன என்றால் மிகையாகாது.
சிறு வயதில் சிவாஜி மஹராஜ் தன் விளையாட்டுத்தோழர்களுடன் சேர்ந்து, சிறு கோட்டை கட்டி போர் விளையாட்டு விளையாடுவதில் பெரு விருப்பம் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படிப் பெற்ற பயிற்சியும் இப்பகுதியிலுள்ள மலைகளின் மூலை முடுக்குகளைப் பற்றிய பரிச்சயமும் அவருக்கு எதிரிகளுடன் போரிடுவதில் பெரிதும் துணை நின்றன. மலைகளில் ஔிந்திருந்து கொண்டு, யாரும் எதிர்பாரா சமயத்தில் திடீரென வெளிப்பட்டு எதிரிகளைத் தாக்கி விட்டு மறுபடியும் மலைகளில் ஔிந்து கொள்வார். அவரது அப்போதைய எதிரிகளான முகலாயர்களால் அவரை எளிதில் பிடிக்கவே முடியவில்லை. இத்திறமைகளால் அவர் "மலை எலி"எனவும் அழைக்கப்பட்டார். சஹ்யாத்ரி மலைத்தொடரில் இருக்கும் ராய்கட் கோட்டையில்தான் அவர் மன்னராக முடி சூட்டிக்கொண்டு ராய்கட்டை தன் தலைநகராக அறிவித்தார். இங்கிருந்துதான் மராட்டா சாம்ராஜ்யம் தமிழகத்தின் தஞ்சை வரை விரிவடைந்தது. இக்கோட்டையில்தான் சிவாஜி மஹராஜின் சமாதியும் அமைந்துள்ளது. வருடந்தோறும் ஷிவ் ஜெயந்தியன்று அரசு மரியாதை செலுத்தப்பட்டும் வருகிறது. இன்றளவும் மஹாராஷ்ட்ராவின் ஹீரோவாக சிவாஜி மஹராஜே விளங்குகிறார்.
அரையாண்டுத்தேர்வு முடிந்ததுமே குழந்தைகள் கோட்டை கட்டுவதைப் பற்றி கலந்தாலோசிக்கத் துவங்கி விடுவார்கள். தீபாவளிக்குச் சில நாட்கள் முன்பிருந்து வேலை ஆரம்பமாகும். பல வித அளவுகளிலான கற்கள், உடைந்த செங்கற்கள், டைல் துண்டுகள், கோணி, மற்றும் மண் போன்றவை சேகரிக்கப்படும். கோட்டை கட்டப்படும் இடத்தில் முதலில் கற்கள், செங்கற்கள் மலை போல் குவிக்கப்பட்டு அதன் மேல் கோணியால் மூடுவார்கள். மலை போல் தோற்றமளிக்கும் பொருட்டு சற்று ஒழுங்கற்ற வடிவிலேயே இது செய்யப்படும். அதன்பின் மண்ணைக் குழைத்து, கோணியின் மேல் நன்கு பூசி விடுவார்கள். மண் ஈரமாக இருக்கும்போதே மலையுச்சியை சற்றே சமதளமாக்கி டைல் துண்டு ஒன்றை அதில் வைப்பார்கள். ஆங்காங்கே ஒன்றிரண்டு படிக்கட்டுகள் அமைக்கப்படும். மலையின் ஒரு பகுதியில் சிறை ஒன்று அமைக்கப்படும். துடைப்பக்குச்சிகள் சிறைக்கம்பிகளாக உருமாறும். மலையைச் சுற்றி கோட்டைச்சுவரும் மண்ணைக் குழைத்து அமைக்கப்படும். கற்பனையைச் சற்றே நீட்டினால் மலைக்கும் கோட்டைச்சுவருக்கும் இடையே அகழி ஒன்றும் அமைக்கப்பட்டு முதலைகள் விடப்படும். ஊற வைத்த கடுகு, வெந்தயம் போன்றவற்றைஏராளமாகத் தூவி விட்டால் இரண்டு நாளில் அவை முளைத்து வளர்ந்து அடர்த்தியான காடாக மாறியிருக்கும். இப்போது மலை ரெடி.
தீபாவளி சமயத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் சிவாஜி மஹராஜ், மற்றும் பீரங்கிகள், மாவல் எனப்படும் சிப்பாய்கள், குடி மக்கள், புலி, அஃப்ஸல் கான் ஆகிய பொம்மைகள் கிடைக்கும். இவற்றை வாங்கி வந்து கோட்டைச் சுவரில் ஆங்காங்கே பீரங்கிகளையும் காவலர்களையும் நிறுத்துவர். அஃப்சல்கானை சிறையிலிட்டு வாசலில் இரண்டு புலிகளை நிறுத்தி விட்டால் தப்பிக்கும் எண்ணம் கனவில் கூட வராது. இறுதியாக மலையுச்சியில் காவலர்கள் புடை சூழ சிவாஜி மஹராஜை அமர்த்தி, ஆங்காங்கே குடி மக்களையும் நிறுத்தினால், அசல் தர்பார் கெட்டது போங்கள்.
இதன்பின் தினமும் காலை, மாலை கோட்டை வாசலில் வண்ணக்கோலமிட்டு அகல் விளக்குகளை ஆங்காங்கே ஏற்றி வைப்பார்கள். ஆகும் எல்லாச் செலவுகளையும் குழந்தைகள் மொத்தமாகப் பகிர்ந்து செய்வார்கள். நரக சதுர்த்தசி வரை இந்த வைபவம் தொடரும். வடக்கர்களின் தீபாவளியான லஷ்மி பூஜை தினத்தன்று விடிகாலையில் அத்தனை குழந்தைகளும் குளித்து தயாராகி வந்தபின், மலையில் ஏற்கனவே போட்டு வைத்திருக்கும் சிறு பள்ளத்தில் ஒரு அணுகுண்டை வைத்து வெடிப்பார்கள். கோட்டை மொத்தமும் வெடித்துச்சிதறும். அதன்பின் மற்ற வெடிகளை வெடித்து கோட்டை தரை மட்டமாக்கப்படும். பொம்மைகள் அடுத்த தீபாவளிக்கென எடுத்து பத்திரப்படுத்தப்படும். இப்படியாகத்தானே தீபாவளி கோலாகலம் ஆரம்பிக்கும்.
பிள்ளைகளிடையே ஒற்றுமையுணர்ச்சி, வேலைகளைப் பகிர்ந்து செய்தல், கற்பனைத் திறன் மேம்படுதல், கணக்கு வழக்குகளைத் திறம்படக் கையாளுதல், விட்டுக்கொடுத்தல், நட்புணர்வு போன்ற திறன்கள் மேம்படுவதோடு குறைந்தது ஒரு வாரத்துக்கு பிள்ளைகளை மேய்க்கும் பொறுப்பிலிருந்து பெற்றோருக்கும் சற்று ஓய்வு கிடைக்கும். இப்போதெல்லாம் மண்பாண்டங்கள், பீங்கான் ஜாடிகள் செய்பவர்கள் சிறு கோட்டைகளையும் செய்து விற்கிறார்கள். இட நெருக்கடியுள்ள குடியிருப்புகளில் இதை மட்டும் வைத்து விடுகின்றனர். கொஞ்சம் இட வசதியிருந்தால் இதைச்சுற்றிலும் கோட்டையை மேலும் விரிவாக்கம் செய்கின்றனர். கற்பனைத் திறனுக்கு வானம் கூட எல்லையில்லைதானே?..
No comments:
Post a Comment