ரஜினி..ரஜினி..ரஜினி..... படம் முழுக்க இந்த மூன்றெழுத்து காந்தத்தின் கவர்ச்சியே நிறைந்திருக்கிறது. வசீ, சிட்டி, இன்னும் கட்டக்கடைசி க்ளைமாக்சின் சண்டைக்காட்சிகளில் வரும் ரோபோக்கள் வரை எங்கும் எதிலும் ரஜினியே...
ஐஸ்வர்யா ராய் இனிமேல் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே, இனிமேல் ரஜினிக்கு வயசாகிவிட்டது, எனவே அவர் வயசுக்குத்தகுந்த வேடங்களில் நடிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்... டீல் ஓகேயா :-)))))).
புதிய மனிதன் பூமிக்கு வரும் முதல் காட்சியில் ரஜினியின் பிரம்மாண்டமான அறிமுகக்காட்சி இல்லை... பஞ்ச் டயலாக் இல்லை.. ஹீரோவா லட்சணமா, கதாநாயகியை காப்பாற்ற நூறுபேருடன், கைகால் உதைத்து சண்டை போடவில்லை.. சண்டை போடக்கிடைத்த ஒரு வாய்ப்பிலும், கலாபவன் மணியின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்.. இப்படி படத்தில் நிறைய இல்லை, இல்லைகள் இருப்பதால் சில சமயங்களில் இது ரஜினி படம்தானா என்று சந்தேகம் வந்துவிடுகிறது.. சிட்டி வந்து காப்பாற்றுகிறார் :-))
சிட்டியை பார்க்கும்போது வருங்காலத்தில் நிஜமாகவே இப்படிப்பட்ட ரோபோக்கள் உருவானால் எப்படியிருக்கும் என்ற பயங்கலந்த ஆர்வம் தோன்றுகிறது.. மாமூல் வெட்டுவது என்றால் என்னவென்று செய்துகாட்டியிருப்பது அட.. அட.. அட!! போட வைக்கிறதென்றால், ஐஸ்வர்யாவின் டாய்ஃப்ரெண்டாக அறிமுகமாகி, பாய்ஃப்ரெண்டாக ஆசைப்படும் கட்டம் அழகு. பர்த்டே பார்ட்டிக்குபோக தயாராகும்போது சிட்டியிடம் தென்படும் ஆர்வமும், தன்னை அலங்கரித்துக்கொள்வதில் காட்டும் ஆசையும், அதனால் வசீகரனிடம் உருவாகும் பொஸஸிவ்னெஸ்ஸும்.. படம் இப்படித்தான் போகப்போகிறது என்று லேசாக கோடிகாட்டி விடுகிறது. அதையே கடைசிவரை நகர்த்திச்சென்றிருப்பது இயக்குனரின் திறமைக்குச்சான்று.
ரோபோக்களுக்கும், மனிதனுக்கும் உள்ள வேற்றுமையே ஆறாம் அறிவான பகுத்தறிவுதான். அது இருந்தால், மனிதனுக்குண்டான உணர்ச்சிக்கலவையாக ஒரு இயந்திரம் இருந்தால் என்னவாகும் என்பதுதான் படத்தின் கதை. ஆனாலும் அழகான ஐஸ்வர்யாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு, சிட்டி என்னும் இயந்திரத்தை மனிதனாக்க, ரஜினி முயற்சித்திருக்க வேண்டாம்.. தன் வினை தன்னையே சுட்டுவிடுகிறது :-))))
1989-ல் அஜ்னபி என்ற சீரியலில் பார்த்ததுபோலவே இப்பவும் டேனி டெங்க் சோ பா இருக்கிறார்... என்ன!! கொஞ்சம் வயசாகிவிட்டது அவ்வளவுதான். மற்றபடி குறை சொல்ல முடியாத நடிப்பு. ரோபோ பிரசவம் பார்த்ததை சிலாகித்துப்பேசிக்கொண்டிருக்கும் ரஜினியிடம் பேசிக்கொண்டே, 'இனிமேல்தான் எல்லாமே ஆரம்பமாகப்போகிறது' என்று போகிற போக்கில் எச்சரித்தாலும், அந்த ஆரம்பத்துக்கு வித்திட்டவர் அவர்தானே.. வழக்கமான வில்லன்களைப்போலவே அழிவுஆயுதங்களை தயாரித்து, வித்தியாசமாக பாதிப்படத்தில் மண்டையைப்போடுகிறார்.
சந்தானமும், கருணாசும்... சிட்டியை ஒவ்வொரு முறையும் கலாய்த்து, ரஜினியிடம் திட்டுவாங்குவதைத்தவிர உருப்படியாக வேறொன்றும் செய்யவில்லை. அந்தக்குறை சிட்டி செய்யும் கலாட்டாக்களால் மறைந்துவிடுகிறது. சைக்கிள்செயின் மாலையணிந்து அவர் துர்க்காதேவியாக அவதாரமெடுக்குமிடத்தில், தமிழ்நாடாக இருந்திருந்தால் தியேட்டர் அதிர்ந்திருக்கும்.. நண்பனாக இருந்து, காதலுக்காக எதிரியாக மாறி க்ளைமாக்ஸில் க்ராபிக்ஸ் துணையுடன், தன்னைப்படைத்தவனுக்கெதிராக ஆடும் அதிரடி ஆட்டமும், அதை முறியடிக்க சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று, அதன் போனிடெயிலைப்பிடித்து உலுக்கும் ரஜினியுமாக எங்கெங்கு காணினும் ரஜினியடா.. (சண்டையின் நீளத்தையும், சத்தத்தையும் கொஞ்சம் குறைச்சிருந்தா இன்னும் ரசித்திருக்கலாம் :-)))). தன்னைத்தானே டிஸ்மேண்டில் செய்து கொள்ளும் காட்சி சூப்பர்.
பொதுவா, தமிழ்ப்பட ஹீரோயின்களுக்கு, படத்தில் முக்கியத்துவம் இருக்காது. ஆனா,.. இந்தப்படத்தில், ஹீரோவை விட ஐஸ்வர்யாவுக்கே முக்கியத்துவம் அதிகம்.. சந்தேகமா இருந்தா, கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க.. ஐஸ்வர்யா மேலுள்ள காதலால்தானே சிட்டி, வசீகரனுக்கெதிராக திரும்புகிறான். படமே நகருது.. இல்லைன்னா ரோபோ பிரசவம் பார்த்த கையோட, டேனியிடம் போய் 'நீ நல்ல ரோபோதான்' அப்படீன்னு சர்ட்டிபிகேட் வாங்கிட்டு இந்தியப்படையில் இல்ல போயிசேர்ந்திருக்கும் :-)))
டிஸ்கி : பாடல்களுக்கும், ஏ. ஆர். ரஹ்மானின் இசைக்கும், ஐஸ்வர்யா மற்றும் ரஜினியின் டான்சை பார்த்ததுக்கும், மற்றும் க்ளைமாக்ஸ் சண்டைக்குமே கொடுத்தகாசு செரிச்சுப்போச்சு. அதால இன்னொருக்கா எந்திரனை தமிழில் பார்க்கப்போறேன். ஏன்னா.. நேத்து பாத்துட்டு வந்தது இந்தி வெர்ஷன். என்ன பண்றது!! தமிழ்ல பார்க்கணும்ன்னா நவிமும்பையில் இருக்கும் வாஷிக்கு போகணும். எப்படியோ ரஜினி படத்தை முதல் நாளே பார்த்தாச்சு :-))