Showing posts with label என் தோட்டம். Show all posts
Showing posts with label என் தோட்டம். Show all posts

Wednesday, 26 June 2013

கிருஷ்ண கமல்..

பச்சைப்பசேல் பின்னணியில் நீலக்கற்களைப் பதித்தது போல் பூத்திருப்பவைகளைக் கண்டாலே மனது நிறைந்து போகிறது. 'க்ருஷ்ண கமல்' இப்படித்தான் மஹாராஷ்டிர மக்கள் இந்தப்பூவை அழைக்கிறார்கள். 'பிரம்மகமலுக்கு' அடுத்தபடியாக இந்தப்பூவை வீட்டில் வளர்ப்பதை மிகவும் பெருமையாகக் கருதுகிறார்கள். வீட்டில் இந்தப்பூச்செடியை வளர்த்தால் ஐஸ்வரியம் என்பது இங்கே உள்ளவர்களின் நம்பிக்கை.

ஆங்கிலத்தில் இந்தப்பூவை 'Passion flower' என்று அழைக்கிறார்கள். கொடி வகையைச்சேர்ந்ததால் மல்லிகையைப்போலவே வாசலில் இதைப் பந்தலிட்டும் வளர்க்கலாம். பற்றிப்படர ஏதுவாக தொட்டியிலேயே நான்கு அல்லது ஐந்தடி உயரத்திற்கு சில மூங்கில் குச்சிகளை ஊன்றி வைத்து அதிலும் படர விடலாம். நர்சரிகளில் அப்படித்தான் வைத்திருக்கிறார்கள்.மேலும் சில வழிமுறைகள் இங்கே இருக்கின்றன. கொஞ்சம் விலையுயர்ந்த வகை என்பதால் நர்சரிகளில் எண்ணிக்கையில் குறைவாகத்தான் வைத்திருக்கிறார்கள். வளர்ந்திருக்கும் அளவு மற்றும் நர்சரிகளைப்பொறுத்து, ஒரு செடி 200 ரூபாயிலிருந்து 400 வரை விலை போகிறது.

வெள்ளை, பிங்க், மற்றும் நீல வண்ணங்களில் பூக்கும் க்ருஷ்ணகமலில் நீலம் நாட்டு வகையைச் சேர்ந்ததாம். மற்றவையெல்லாம் ஹைப்ரிட் வகையைச் சேர்ந்தவை என்று நர்சரி நடத்துபவர் கூறினார். க்ருஷ்ணகமலில் சுமார் 500க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கிறதாம். எங்கள் வீட்டில் வளர்வது எந்த வகை என்று அறியும் ஆவலில் விக்கியண்ணனிடம் கேட்டபோது அது 'passiflora incarnata' வகையைச் சேர்ந்தது என்று கூறினார். மேலும் பல விவரங்களை அள்ளித்தந்திருக்கிறார்.

இதற்கு எக்கச்சக்க மருத்துவ குணங்கள் இருக்கின்றனவாம், கூடவே பக்க விளைவுகளும். மூலிகையாயிற்றே.. பக்க விளைவுகள் இருக்குமா என்ன? என்று ஆச்சரியத்தோடு மேலும் கேட்டால் அதிர்ச்சியூட்டும் தகவல்களை நம் முன் அள்ளிக்கொட்டுகிறார் கூகிளாண்டவர். ஆகவே இந்தச்செடியை வெறுமே அலங்காரத்திற்கும் பூஜைக்குமாக மட்டுமே வளர்ப்பது சாலச்சிறந்தது. எங்கள் வீட்டில் வெறும் அலங்காரத்திற்கு மட்டுமே..

மொட்டு ஒன்று மலர்ந்திடக்காத்திருக்கிறது..
மெல்ல மெல்ல இதழ் விரித்து..
ரகசியமாய் ஒரு புன்னகையுடன்..
மலர்ந்து சிரிக்கிறது..

பூவைத்தேடி வந்த தேனீ..
பளீரென்ற சிரிப்பு..
இந்தப்பூவுக்கு 'பாண்டவ கௌரவர் பூ' என்றும் பெயருண்டு என்றொரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது. அதாவது..

நீலக்கலரில் சுற்றியிருக்கும் இதழ்கள் கௌரவர்களாம்..

அதன் உட்புறம் மஞ்சள் கலரில் இருக்கும் ஐந்து மகரந்த இழைகள் பாண்டவர்களாம்..

அதற்கு மேற்புறம் மஞ்சள் கலந்த பச்சைக்கலரில் உருண்டையாக இருப்பது திரௌபதியைக்குறிக்குமாம்..

அதற்கும் மேற்புறம் இருக்கும் மூன்று இழைகள் பிரம்மா,விஷ்ணு,சிவன் என்ற மும்மூர்த்திகளைக் குறிக்கின்றனவாம்.

நீலத்தின் உட்புறம் தெரியும் பர்ப்பிள் வளையம் கிருஷ்ணர் கையிலிருக்கும் சுதர்சனச்சக்கரத்தைக் குறிக்கிறதாம்.

இப்படியெல்லாம் நினைத்துப்பார்க்க சுவாரஸ்யமாகத்தானிருக்கிறது இல்லையா :-)

வேடிக்கை காட்டிய களைப்பில் நொந்து நூடுல்ஸாகி..
இந்தப்பூவை வீட்டில் வளர்த்தே ஆகவேண்டும் என்று தவமாய்த்தவமிருந்து வாங்கிக் கொண்டு வந்து, "இது என் செடி, நானே தண்ணி ஊத்தி வளர்க்கப்போறேன்" என்று சொல்லி வீட்டில் நட்டு வைத்து விட்டு, அப்புறம் அதை அம்பேல் என்று விட்டு விட்ட என் பெண்ணிற்கு இந்த இடுகை சமர்ப்பணம் :-)))))))

என் செடிகளுக்குப் பொசியும் நீர் ஆங்கே கிருஷ்ண கமலுக்கும் பொசிகிறது :-))

Friday, 8 June 2012

அரசாங்கத் துரோகத்துலேர்ந்து தப்பிச்சேன்..

எங்கூட்டு மரம் ஜனவரியில்.
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்ன்னு அரசாங்கமே சொல்லுது. மீறினா அரசாங்கத்துக்குச் செய்யற துரோகமாயிடாதோ.. அதான் நம்மால முடிஞ்ச ஒண்ணை வளர்ப்போம்ன்னு ஆரம்பிச்சிருக்கேன்.

மும்பை வாசம் வாழையிலைச் சாப்பாட்டை மறக்கடிச்ச இத்தனை காலமா, அதை எப்பத்தான் கண்ணுல பார்ப்போம்ன்னு ஏக்கமா இருக்கும். புள்ளையார் சதுர்த்திக் காலம் நெருங்கியதும் மார்க்கெட்ல கண்ணுல தட்டுப்பட ஆரம்பிச்சுரும். ஒரு கட்டுல மூணோ நாலோ இலைகளை வெச்சுக் கட்டியிருப்பாங்க. ஒரே ஒரு இலை வேணும்ன்னாலும் தனியா வாங்கிக்கலாம். அதுக்குத் தனி ரேட்டு. நாஞ்சில் பகுதிகள்ல வாழையிலைக் கட்டுகளை 'பூட்டு'ன்னு சொல்லுவோம். ஒரு பூட்டுல அஞ்சுலேர்ந்து ஆறு இலைகளை வெவ்வேறு அளவுகள்ல வெச்சுக் கட்டியிருப்பாங்க. அதுவும் நல்ல இளம் இலைகளா தளதளன்னு இருக்கும். இங்கே கிடைக்கிறது கொஞ்சம் முத்தல்தான்.. இருந்தாலும் இதுவாவது கிடைக்குதேன்னு திருப்திப் பட்டுக்கிட வேண்டியதுதான்.

நம்மூட்லயே வளர்த்தா எப்ப வேண்ணாலும் இலை பறிச்சுக்கலாமேங்கற பேராசை இருந்தாலும் அபார்ட்மெண்டில் எங்கேயிருந்து அதுக்கு இடம் ஒதுக்கறது?.. பால்கனியில் வளர்க்க முடிஞ்சா நல்லாருக்குமேன்னு இருந்தேன். நம்ம துளசி டீச்சர் வீட்ல தொட்டியில் வளரும் வாழைமரம் பார்த்ததும் ஒரு நம்பிக்கை குருத்து விட்டுச்சு :-)

நர்சரியில் போய்ப் பார்த்தப்ப கட்டை, நெட்டை, செந்துளுவன்னு நாஞ்சில் பகுதியில் செல்லமா அழைக்கப்படும் சிவப்பு வாழை, நேந்திரம்ன்னு நாலஞ்சு வகைகள் இருந்துச்சு. இதுல நெட்டை ஆறடிக்கு மேல வளருமாம். பால்கனியில் வெச்சாத் தாங்காது. கொஞ்சம் பலமா காத்தடிச்சாலே முறிஞ்சுரும். ஆனா நாளப்பின்னே பழம் பறிக்கணும்ன்னா சுலபமா இருக்கும். படிக்கட்டுகளேறி மேல் மாடி வீட்டுக்குப் போயி அங்கேயிருந்து கையை நீட்டுனா, கை மேல் பழம் கிடைச்சுரும். அங்கே உட்கார்ந்து அரட்டையடிச்சுட்டே முழுங்கிட்டு வரலாம். நம்மூட்டு பழக்குலையை கவனமாப் பார்த்துக்கறதுக்காக அவங்களுக்கும் ஒரு பங்கு கொடுத்துட்டாப் போச்சு. குட்டை ரகம் அஞ்சடி அளவுல வளரக்கூடியது. நம்ம வீட்டை விட்டுத் தாண்டாது. கஷ்டமோ நட்டமோ இங்கேயே இருந்து அனுபவிச்சுக்கறேன்னு சொல்ற வகை. தொட்டியில் வளரப் போவதால காத்துக்கும் தாங்கும். நமக்கு இதான் சரின்னுட்டு வாழைக்கன்னு, அதுக்கு வேண்டிய ஆர்கானிக் உரம் எல்லாம் வாங்கிட்டு வந்தேன். செடி வளர்க்கத் தோதா நம்மூட்டு பழைய அரிசி டப்பா ரெடியா இருந்துச்சு.

வாழையை வளர்க்க ஆரம்பிச்சாச்சு. அதுவும் தளதளன்னு வளர ஆரம்பிச்சுருக்கு. வாழைப்பழம் கிடைக்குதோ இல்லியோ இலைக்கு ஆச்சுன்னுதான் வளர்க்க ஆரம்பிச்சுருக்கேன். சின்ன வயசில் தாத்தா வீட்டு வாழைத்தோப்புக்கு போனப்பல்லாம் "தாய்க்கன்னில் எப்பவுமே இலை அறுக்காதே. அது குலை தள்ளுவதை தாமசப்படுத்தும். எப்பவுமே பக்கக்கன்னில்தான் இலையறுக்கணும்"ன்னு சொல்லுவாங்க. அதை அப்படியே கேட்டுக்கிட்டு, பக்கக்கன்னுலதான் இலை நறுக்கிட்டு வந்த ஞாபகம். தொட்டியில் வளரும் வாழைக்கு ஏது பக்கக்கன்னு வரப்போவுதுன்னு கொஞ்சம் கவலையோட இருந்த எனக்கு சின்னதா முளைச்சு வந்துருக்கும் ரெண்டு குட்டிக்கன்னுகள் காட்சி கொடுத்து சந்தோஷப் படுத்தியிருக்கு. ஆனா, தாய்வாழை ஒரு குறிப்பிட்ட அளவு வளர்றவரைக்கும் பக்கக்கன்னுகளையும் நறுக்கி விட்டுரணுமாமே!!. பாவம்தான் குழந்தைகள்..

இங்கே நவி மும்பையில் முதல் தளத்துல இருக்கும் ஒரு வீட்டில் வாழைத்தோட்டமே வெச்சிருக்காங்க. மொதல்ல ஒரே ஒரு கன்னு வெச்சிருந்துருப்பாங்களா இருந்துருக்கும். அப்றம் அது வளர்ந்து வரச்சே பக்கக் கன்னுகள் முளைச்சு கிட்டத்தட்ட ஆறேழு மரங்கள் வளர்ந்து நிக்குது. கூட்டமா இருந்தா அது தோட்டம்தானேன்னு நானா மனசிலாக்கிக்கிட்டேன் :-). சிக்னல்ல நின்னுட்டிருந்தப்ப கார்லேர்ந்து எடுத்ததால மங்கலா இருக்கு, சிரமம் பார்க்காம கொஞ்சம் உத்துப்பார்த்துக்கோங்க ப்ளீஸ்.
வாழைத்தோட்டம்..
வாழையின் அடி முதல் நுனி வரைக்கும் எல்லாப் பாகங்களுமே ஏதாவதொரு வகையில் மனுஷனுக்குப் பயன் படுது. ஆனா, இது உண்மையில் மரம் கிடையாது, புல் வகையைச் சேர்ந்தது :-) இது விதையில்லாமல் வளரக்கூடிய தாவரங்களில் ஒண்ணு. கிழங்கின் துண்டை பூமிக்குள் புதைச்சு வெச்சாப் போதும், வளர ஆரம்பிச்சுரும்.

பூமிக்குள்ளே இருக்கும் பகுதிதான் வாழையின் உண்மையான தண்டுப்பகுதியாம். அப்ப வெளியே நம்ம கண்ணுக்குத்தெரியறது தண்டு இல்லையா?.. அது போலித்தண்டுன்னு சொல்றாங்க. இதுலயுமா அசல் போலின்னு ஆகிப்போச்சு?!!!. தண்டுலேர்ந்து வளர்ற இலையுறைகள் ஒண்ணையொண்ணு மூடிப்பொதிஞ்சு இருக்கறதால அதைப் பார்க்கறப்ப தண்டு மாதிரியான தோற்றம் தருது. இதில் தடிமனா இருக்கும் இலையுறைகளை வாழைமட்டைன்னும், அதையே காஞ்சு போச்சுன்னா வாழைத்தடைன்னும் சொல்லுவோம். கிராமங்கள்ல இந்த வாழைத்தடை ஒரு நல்ல எரிபொருள். மண்ணெண்ணெய் உபயோகப்படுத்த தேவையில்லாமலேயே சட்னு பத்திக்கும். இதைப் பதப்படுத்தி எடுக்கப்படும் நார்லேர்ந்து புடவையும் நெய்யப்படுதாம். வீட்ல வாழைமரம் இருந்தா பூக்கட்டறதுக்கும் அதுலேருந்தே நார் கிழிச்சுக்கலாம். நூல் வெச்சுக்கட்டறப்ப பூக்களோட காம்பு அறுந்து போகற மாதிரி இதுல ஆகாது. பூவும் ரொம்ப நேரம் வாடாம இருக்கும்.

வாழைத்தண்டுச் சாறையோ, பொரியலையோ அடிக்கடி சாப்பிட்டு வந்தா சிறுநீரகக் கற்கள் கரைஞ்சு போயிருமாம். டயாபடீஸ் நோயாளிகளுக்கும் நல்லது. வாழைத்தண்டை நறுக்கறப்ப லேசா நூல் மாதிரி வரும். தண்டை வட்ட வட்டமா நறுக்கறப்ப, ஒவ்வொரு முறையும் டக்ன்னு விரலைச்சுழற்றி அந்த நூலை விரல்ல சுத்தி வெச்சுக்குவாங்க. அப்றம் அதைத் திரியாக்கி விளக்கேத்தவும் பயன்படுத்தறதுண்டு.

வாழைப்பூ உசிலியின் அருமை பெருமைகளை அறியாத நாக்கு உண்டா?.. சுவை நரம்புகள்தான் உண்டா?. அதே மாதிரி வாழைக்காய் பஜ்ஜி பிடிக்காதவங்க இருக்க முடியுமா என்ன?.. பொண்ணு பார்க்கும் வைபவம் அன்னிக்கு இவங்கதானே உண்மையான வி.ஐ.பி :-) அந்த கல்யாணம் திகைஞ்சு வந்து நிச்சயம் செஞ்சுக்கறப்ப கொஞ்சம் மேக்கப் போட்டுக்கிட்டு வந்து, பரிசத்தட்டுல பழமா உக்காந்துருப்பாங்க. தினமும் சாப்பிட்டப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சு வாழைப்பழம் சாப்பிட்டா நல்லதாம்.. யாருக்கு?. கடைக்காரருக்கும் நமக்கும் :-))

பொதுவா வாழைப்பூவுல முதல் சீப்புக்காய்கள் வந்த மூணு மாசத்துல முழுக்குலையும் காய்ச்சுத் தயாராகிரும். நல்லாக் காய்ச்சு அப்றம் மரத்துலயே பழுத்த பழத்தோட ருசியே தனி. ஆனா, அது வரைக்கும் விட்டு வெச்சா சந்தைக்கு வந்து வித்து முடியறதுக்குள்ளே எல்லாம் உதிர்ந்து போய் வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் நஷ்டமாகிரும்.. தாங்காது. அதனால முக்கால் விளைச்சல் வந்ததுமே வெட்டிருவாங்க. வயல்லேர்ந்து களத்து மேட்டுக்கு ஆட்கள் தலைச்சுமையாக் கொண்டாந்து சேர்ப்பாங்க. வந்து சேரும் ஒவ்வொரு வாழைக்குலையிலும் தண்டுப்பகுதியின் மேலும், விவசாயி ஏதாவதொரு அடையாளத்தோட தயார் செஞ்சு வெச்சுருக்கும் ஒரு இரும்புக்குழாயை வெச்சு ஒரு அழுத்து,.. சக்ன்னு அடையாளக்குறி பதிஞ்சுரும். அது வெட்டிய இடத்துலேர்ந்து வெளியாகும் வாழைச்சாறு கொஞ்ச நேரத்துல காய்ஞ்சதும், அடையாளம்" பளிச்சுன்னு தெரியும். பூக்கள், நட்சத்திரம், அதுவுமில்லைன்னா தன்னோட பெயர்ன்னு ஒவ்வொருத்தரும் ஒரு அடையாளம் வெச்சுருப்பாங்க. சிலர் அந்த இரும்பு அடையாளத்து மேல கருப்புச் சாயம் பூசிட்டு, அப்றமா மார்க் செஞ்சுக்குவாங்க. சந்தையில் வந்து சேர்ந்து விக்கிற வரைக்கும் நம்ம பொருள் பாதுகாப்பாவும் இருக்கும். இதை எழுதிட்டிருக்கும்போது எங்க குடியிருப்பில் விளைஞ்ச வாழைக்காய்களை வீட்டுக்கு ரெவ்வெண்டுன்னு கொடுத்துட்டுப் போனார் செக்யூரிட்டி :-)

முந்தியெல்லாம் வீடுகள்ல விசேஷம் வருதுன்னா சந்தையிலிருந்தோ, தங்களோட சொந்தத் தோட்டத்துலேர்ந்தோ வாழைக்குலையைக் கொண்டாந்து ஊத்தம் போடுவாங்க. அதுல நிறைய முறைகள் இருக்குது. வாழைக்காய்களை ஒரு பானையில் நிரப்பி, பானைக்குள் ஊதுபத்திக்கட்டை ஏத்தி வெச்சுட்டு தட்டு போட்டு நல்லா இறுக்கி மூடிரணும். ரெண்டு நாள் கழிச்சுப் பார்த்தா நல்லாப் பழுத்திருக்கும். இதுவும் ஒரு முறை. ஆனா, இப்பல்லாம் அதுக்கும் பொறுமையில்லாம ரசாயனம் வெச்சுப் பழுக்க வைக்கிறாங்க. சட்ன்னு பார்த்தாத் தெரியாதபடிக்கு ரசாயனப் பொட்டலங்களை வாழைச்சீப்புகளுக்கு உள்ளே மறைச்சு வைக்கிறாங்க. கண்டிப்பா உடலுக்குக் கேடுதான் தரும் இப்படிப்பட்ட வாழைப்பழங்கள்.

வாழைப்பழத்துல பழவகை, காய்வகைன்னு ரெண்டு இருக்காம். சில வகைகள் கறிக்கு நல்லாருக்குமாம். ஆனா பழம் ருசியா இருக்காதாம். இதுகளைக் காய்வகைன்னு சொல்றாங்க. நாஞ்சில் பக்கங்களில் அவியலுக்கு எல்லா வகை வாழைக்காயும் சேர்க்க மாட்டாங்க. பேயன் அல்லது சிங்கன்னு சொல்லப்படும் தனி வகைதான் உபயோகப்படுத்துவோம். பழ வகைகள்ல செந்துளுவனைத் தினமும் சாப்பிட்டு வந்தா உடம்புல புது ரத்தமே ஊறும், அவ்வளவு சத்து. அதே மாதிரி ஏத்தம்பழம்ன்னு சொல்லப்படும் நேந்திரம்பழம் காயா எரிசேரியிலும், பழமா 'பழம்பொரி'யிலுமாக ரெண்டு அட்டகாசமான ருசிகளைக்கொடுக்குது.
எங்கூட்டு மரம்.. ஜூனில்..
வாழையிலை நம்மூர்ல சாப்பாட்டுத்தட்டாப் பயன்படுத்தப்படுது. அதுவும் விருந்துச்சாப்பாடுன்னா அது வாழையிலையில்தான் பரிமாறப்படணும்ங்கறது சம்பிரதாயம். அதுல சாப்பிட்டா இருக்கற மணமும் ருசியும் தனியாச்சே. ஊர்லேருந்து வரப்ப கட்டுச்சோறு கொண்டாரதா இருந்தா, வாழையிலையில்தான் வேணும்ன்னு கண்டிப்பாச் சொல்லிருவேன். வாழையிலையில் சாப்பாட்டை அப்படியே வெச்சுக்கட்டாம, இலையைத் தணல்ல லேசா வாட்டிட்டு அப்றம் பேக் செஞ்சா இலையும் கிழியாது, சாப்பாட்டோட ருசியும் இன்னும் அருமையாயிருக்கும். எங்க வீட்லயும் இப்பத்தான் கொஞ்சம் பெரிய இலைகள் வர ஆரம்பிச்சுருக்கு. தளதளன்னு இருக்கறதைப்பார்க்கறப்ப நறுக்க மனசு வர மாட்டேங்குது... இலையப்பம் செஞ்சு சாப்பிடணுங்கற ஆசை வேற மனசுக்குள் அலையடிக்குது..

Tuesday, 13 March 2012

அறுவடை செஞ்ச அமோக பல்புகள்..


ஆனாலும் இது கொஞ்சம் பேராசைதான். இந்த ஊருக்கு வந்தப்புறம், தமிழ் நாட்டுல கிடைக்கறதெல்லாம் இங்கே கிடைக்கலியே.. முக்கியமா நமக்குத் தேவையான இந்தப் பொருளெல்லாம் கிடைக்கலையேன்னு அங்கலாய்க்கறதுல அர்த்தமே இல்லை. (மும்பையே என்றாலும் அது தமிழ் நாட்டைப் போலாகுமா!!.ன்னுதான் இப்பவும் பாடிக்கிட்டுத் திரியறது தனிக்கதை) அதுவும் சுமார் இருபது வருஷத்துக்கு முந்தைய நிலைமை. இப்போ மாதிரியா?.. இப்பல்லாம் வேணுங்கறதை நம்மாட்கள் கடையில் போயி சட்ன்னு வாங்கியாறலாம். அத்தியாவசப் பொருட்கள் தவிர தேவைப்படும் விசேஷப் பொருட்களும் சட்ன்னு கிடைச்சிருது.

புது ஊருக்கு ஏத்தமாதிரி வாழ்க்கையை நகர்த்தப் பழகிட்டாலும் இந்த ஊருக்கு வந்தப்புறம் முதல் பொங்கல் பண்டிகை வந்தப்ப மனசுக்கு ஏக்கமா இருந்தது. வீடு கழுவல், சுத்தப் படுத்தல்ன்னு அவலை நினைச்சு உரலை இடிச்சு பண்டிகையை வரவேற்க ஆயத்தமானாலும், கரும்பும் மஞ்சக்குலையும் வாழைப்பழமும், பனங்கிழங்குமா மணக்கும் நம்மூர்ப் பொங்கல் பண்டிகைக்கு ஈடாகலை!! அது செம்பூர், மாட்டுங்கா பகுதிகளைத் தவிர புற நகர்ப் பகுதிகளுக்கு தமிழகப் பொருட்கள் விற்பனைக்கு வராத போறாதகாலம் என்பதை நினைவில் கொள்க. ஜூஸ் கடையிலிருந்து ஒரு அடி நீளத்துல ரெண்டு வெள்ளைக் கரும்புத் துண்டுகளை வாங்கி வந்து சாஸ்திரத்துக்கு வெச்சாலும் பொங்கப் பானையைச் சுத்திக் கட்டுறதுக்கு மஞ்சள் குலைக்கு எங்கே போறது?ன்னு உக்காந்து அரிசியில் கல் பொறுக்கிக்கிட்டே யோசிச்சேன்.

ஊர்லேர்ந்து வரச்சே மங்களகரமா பேக்கிங்கை ஆரம்பிக்கணும்ன்னு சொல்லி, அரிசிப்பானைக்குள் அரிசியுடன் ஏழெட்டு குண்டு மஞ்சள்களையும் சேர்த்து வெச்சுருந்தாங்க. ஆஹா!!.. ஆப்டுச்சு ஐடியா. இங்கேயெல்லாம் பூக்கடைகளில் பூச்சரத்தை தேக்கிலையில் பொதிஞ்சு நல்ல ஏழெட்டு இழைகளாலான நூல்கயித்தால கடையில் கட்டிக் கொடுப்பாங்க. எதுக்காச்சும் உபயோகப்படுமேன்னு அந்த நூல்கயித்தைச் சேகரிச்சு வீட்ல எப்பவும் வெச்சிருப்பேன். அதுல கொஞ்சத்தை எடுத்தேன். மஞ்சப்பொடியை நல்லா தண்ணீர்ல குழைச்சு கயித்துல தடவிக் காய விட்டேன். காய்ஞ்சதும், அஞ்சாறு குண்டு மஞ்சள்களை அதுல கட்டி விட்டேன். நம்ம மஞ்சக்குலை ரெடி. அதை பானையின் கழுத்துல சுத்திக்கட்டி தலைப்பொங்கலை அமரிக்கையாக் கொண்டாடியாச்சு.

அங்கிருந்து நவி மும்பைப் பகுதிக்கு வீடு மாத்திக்கிட்டு போனப்ப ஆஹா!!.. ஒரு மினியிலும் மினி தமிழ் நாடே இங்க இருக்குதேன்னு கண்டுக்கிட்டேன். மஞ்சக்குலையும் கரும்புமா அங்கயிருந்தவரைக்கும் வாசனையோட பொங்கல் அமர்க்களப்பட்டது. நமக்கோ அடிக்கடி மாத்தலாகும் வேலைச்சூழ்நிலை. எல்லா இடத்துலயும் மஞ்சக்குலை கிடைக்குமுன்னு எதிர்பார்க்கவும் முடியாது. அதனால விவசாயி ஆகறதுன்னு முடிவு செஞ்சு ஒரு துண்டு மஞ்சளைத் தொட்டியில் நட்டு வெச்சேன்.

வந்தா சாமிக்கு,.. வரலைன்னாலும் சாமிக்குன்னு மனசைச் சமாதானப் படுத்திக்கிட்டாலும் தண்ணீர் ஊத்திக் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கிட்டதுக்கு நல்லாவே விளைச்சல் கொடுத்துச்சு. அப்புறமென்ன?.. வருஷா வருஷம் பொங்கலுக்கு மஞ்சக்குலை நம்ம தோட்டத்தோட உபயத்துல தங்கு தடையில்லாமக் கிடைச்சிட்டிருந்தது. எப்பவுமே பொங்கல் முடிஞ்சதும் அறுவடை செஞ்ச கிழங்குகள்ல ஒரு துண்டை மறுபடி நட்டு வைக்கிறதுக்குன்னு எடுத்து வெச்சிட்டு, மிச்சத்தை சமையலுக்கும், காஸ்மெடிக் உபயோகத்துக்கும்ன்னு உபயோகப் படுத்துவேன்.

பசுமை மாறாம இருக்கற மஞ்சக்கிழங்கைத் தோல் சீவிட்டுச் சின்னச்சின்னத் துணுக்குகளா நறுக்கி நிழலில் நல்லாக் காயவெச்சு எடுத்துக்கிட்டு மிக்ஸியில் பொடிச்சுக்கலாம். கெமிக்கல் நிறமிகள் எதுவும் சேர்க்காத சுத்தமான மஞ்சப்பொடி சமையலுக்குத் தயார். இதே மாதிரி கடைகளில் கிடைக்கும் காய்ஞ்ச விரலி மஞ்சளை வாங்கிட்டு வந்து நல்லாக் கழுவி ஒரு இரவு முழுக்க தண்ணீரில் ஊற விட்டுட்டு, அப்புறம் இன்னொருக்கா ரெண்டு மூணு முறை தண்ணீரில் அலசிட்டு துணுக்குகளா நறுக்கிக் காயவெச்சும் வீட்லயே மஞ்சப்பொடி தயாரிச்சுக்கலாம்.

இது ஒரு சிறந்த கிருமி நாசினியா இருக்கறதுனால மருந்துகள்லயும் சருமத்துக்கான அழகு சாதனப் பொருட்கள்லயும் அதிகமா உபயோகப்படுத்தப் படுது. நம்மூரைப் பொறுத்தமட்டில் உணவே மருந்து. மருந்தே உணவுன்னு நோய்களை சாப்பாட்டாலயே விரட்டியடிச்சு ஆரோக்கியமா வாழறோம். அதனால சமையல்லயும் இது அதிக அளவுல சேர்க்கப்படுது. மஹாராஷ்ட்ரா,கோவா, கொங்கண், இந்தோனேஷியா போன்ற பகுதிகள்ல மஞ்சள் இலைகளையும் சமையலுக்கு பயன்படுத்தறாங்க.

கடலைமாவுடன், வெங்காயம், இஞ்சி, உப்பு, எண்ணெய், ரெட் சில்லி பவுடர், காயப்பொடி, மற்றும் எக்கச்சக்கமான கொத்தமல்லி இலைகளைச் சேர்த்துப் பிசைஞ்சு, சேப்பங்கிழங்கு இலைகளில் தடவிச்சுருட்டி, ஆவியில் வேக வைக்கணும். நல்லா வெந்ததும் ஸ்லைஸ் செஞ்சு அப்படியேவோ இல்லைன்னா தவாவில் ரெண்டு சொட்டு எண்ணெய்யில் வாட்டியோ சாப்பிடப்படும் ‘ஆலு வடி’ என்ற வஸ்து இங்கே ரொம்பவும் பிரசித்தம். இதில் சே.இலைகளுக்குப் பதிலா ம.இலைகளையும் பயன்படுத்திச் செய்வாங்க. மஞ்சள் வாசனையோட ரொம்பவே அருமையா, டேஸ்டியா, சத்தா இருக்கும். முக்கியமா மஹாராஷ்ட்ராவில் மஞ்சள் அதிகம் விளையும் சாங்க்லி பகுதியில் இது ரொம்பவே பிரபலமான உணவு.
சேப்பங்கிழங்கின் இலையில் செஞ்ச ஆலுவடி..
தாய்லாந்து, பெர்ஷியன் நாட்டுச் சமையல்ல இதுக்கு முக்கிய இடம் உண்டாம். மஞ்சப்பொடி சேர்க்காத இந்தியச் சமையல் உண்டோ!!.. அதுவும் அசைவம்ன்னா அதோட உடம்பு முழுக்க மஞ்சப்பொடி தடவி மஸாஜ் செஞ்சுட்டு அப்றம் சமைச்சு எடுக்கறதுதானே வழக்கம். இப்படிச் செய்யறதால அசைவத்துல இருக்கற கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிக்கப்படுது. உலகத்துல பெருகி வரும் சுற்றுப்புற மாசு காரணமா நம்ம உடம்புக்குள்ள எவ்வளவு அசுத்தக் காத்து, வாகனங்கள் வெளியேத்தும் விஷ வாயுக்கள், நடமாடும் புகைபோக்கி எந்திரங்கள் வெளியேத்தும் சிகரெட் புகை எல்லாம் சேருது, அதனால நம்ம உடம்பு எவ்வளவு பாதிக்கப்படுதுன்னு சொல்லத் தேவையில்லை. ஆனா, நம்ம உணவில் தினசரி மஞ்சளைச் சேர்த்துக்கிட்டோம்ன்னா நம்ம ரத்தத்தைச் சுத்திகரிச்சு, அசுத்த வாயுக்கள் ஏற்படுத்தற பாதிப்புகள்லேருந்து நம்மைக் காப்பாத்துது.

வெளித்தாக்குதல்லேர்ந்து மட்டுமல்ல, உடம்புக்குள்ளே நடக்கும் அல்ஸீமர்ஸ், ஆர்த்ரைடிஸ் மாதிரியான தாக்குதல்கள்லேர்ந்தும் இது நம்மை பாதுகாக்குதான்னு கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடந்துட்டிருக்குது. கான்சர் செல்களை இது அழிக்குதுன்னும் இதுவரையிலான ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சு, அதை நிரூபிக்க மேற்கொண்டு ஆராய்ச்சிகளும் நடந்துட்டு வருது. மஞ்சளிலிருக்கும் Tetrahydrocurcuminoids(THC)-ஐ பிரிச்செடுக்க தாய்லாந்து அரசு அந்தூரு ஆராய்ச்சியாளர்களுக்குப் பொருளுதவி செய்யுது. இந்த THC தோலின் நிறத்தைக் கூட்டுதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கான மருந்துகள், காஸ்மெடிக்குகளில் இதை உபயோகப்படுத்தப் போறாங்களாம். வெள்ளைத்தோல் மோகம் யாரைத்தான் விட்டு வெச்சிருக்குது.

மங்களகரம்ன்னதும் நம்ம மனக்கண்ணுல மொதல்ல மஞ்சள்தான் வந்து நிக்குது. அதனாலத்தான் மாதாந்திர மளிகை லிஸ்ட்டாகட்டும், சுப நிகழ்ச்சிகளுக்காக தயாரிக்கிற பலசரக்கு லிஸ்ட்டாகட்டும், மஞ்சளைத்தான் லிஸ்டுல மொதல்ல எழுதுவாங்க. சுபச்செலவோட ஆரம்பிக்கணுமாம்.. அதேமாதிரி நாலு மூலைகளிலும் மஞ்சள் தடவி வர்ற அழைப்பிதழைப் பார்த்ததுமே, இது சுப நிகழ்ச்சிக்கானதுன்னும் நமக்குப் புரிஞ்சிருது இல்லையா..

நம்ம முன்னோர்கள் ரொம்பவே கில்லாடிகள்தான். இல்லைன்னா வெளி நாட்டுக்காரங்க ஆராய்ச்சி செஞ்சு இப்போ கண்டு பிடிச்சதையெல்லாம்,  எப்பவோ அந்தக் காலத்துலயே கண்டுபிடிச்சுச் சுவடிகள்ல எழுதி வெச்சுருக்க முடியுமா?. ஆயுர்வேதத்துலயும், நம்ம பாட்டிகளின் கைவைத்தியத்துலயும் இதுக்குத் தனியிடம் இருக்குதே. சளி, காய்ச்சல், இருமல், தீப்புண்,சரும வியாதிகள்ன்னு எந்த வியாதிக்கும் கஷாயத்தோட சேர்த்து உள்ளுக்குக் கொடுத்தும், வெளிப்பூச்சாகத் தடவியுமே குணப்படுத்திடுவாங்க. இருமல் வந்தாத்தான்னு இல்லை, பொதுவாகவே ராத்திரியில் ஒரு சிட்டிகை மஞ்சப்பொடி சேர்த்த பாலைக் குடிக்கிறதை வழக்கமா வெச்சுக்கிறது ரொம்பவே நல்லது.

வியாதிகளுக்கு மட்டுமல்ல பாம்பு, முதலை மாதிரியான விலங்குகளுக்கும் கூட மஞ்சள்ன்னா அலர்ஜி. வீட்ல மஞ்சள்செடி இருந்துச்சுன்னா அந்தப் பக்கமே பாம்பு எட்டிப் பார்க்காதுன்னு சொல்லிக்கிறாங்க. அதேமாதிரி உடம்பு முழுக்க மஞ்சளை அரைச்சுத் தடவிக்கிட்டு முதலைகள் இருக்கற குளத்துல இறங்கினா முதலைகள் நம்மை விட்டு ஓடிருமாம். ஆனாலும் இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு இல்லே.. விஷப்பரீட்சைக்குத் துணிஞ்சு யாரும் குளத்தில் ஐமீன் களத்துல இறங்கிடாதீங்க. அப்றம் மஞ்சள் தடவின கோழி நமக்கு விருந்தாகற மாதிரி, (மஞ்சள் தடவிக்கிட்ட) நாம முதலைக்கு விருந்தாகிருவோம். சாப்பிடறதுக்குத் தயாராத்தான் நம்மை அனுப்பியிருக்காங்கன்னு முதலை தப்புக் கணக்குப் போட்டுச் சாப்பிட்டுட்டு, “நல்லாத்தான் இருக்கு. காரம்தான் கொஞ்சம் கம்மி”ன்னு நொட்டை சொல்லிட்டுப் போயிரும் :-))

வருஷா வருஷம் செய்யும் வழக்கப்படி புதுத்தொட்டியில் மஞ்சக்கிழங்கை நட்டு வெச்ச கொஞ்ச நாளுக்கப்புறம் பார்த்தா பழைய தொட்டியிலும் கன்னுகள் முளைச்சு வந்துக்கிட்டிருந்தது. கொஞ்சமா வேர் மிச்சமிருந்தாக்கூடப்போதும். அதுலேர்ந்தும் புதுச்செடிகள் முளைச்சு வந்துருது போலன்னு நினைச்சுட்டு, அந்த கன்னுகளை வீணாக்க வேணாமேன்னு பிடுங்கி, புதுச்செடியோடவே நட்டு வெச்சு வளர்த்தேன். நல்லா தளதளன்னு தொட்டி நிறைய வளர்நது நின்னதுகளை சமீபத்திய பொங்கலுக்காக அறுவடை செஞ்சாச்சு. கொஞ்சம் அவசரப்பட்டதில் ஓரளவு பெரிய இலைகளோட இருந்த ஒரு செடி கிழங்கை தொட்டியிலேயே விட்டுட்டு, இலைப்பகுதி மட்டும் கையோட வந்துருச்சு. அப்றம் நிதானமா இன்னொரு செடியை எடுத்து பொங்கப்பானையில் கட்டி பண்டிகை கொண்டாடி முடிச்சது தனிக்கதை.

நல்ல மகசூல் இருக்கும்ன்னு நினைச்சுக்கிட்டு அகழ்வாராய்ச்சி செஞ்சதில் சுமார் ஐம்பது கிராம் அளவுக்கு மஞ்சள் தேறிச்சு. அவ்வ்வ்வ்வ்வ்வ்... ஏனோதானோன்னு கவனிக்கிறப்பல்லாம் நல்ல மகசூல் கொடுத்துட்டு, இப்ப பார்த்துப் பார்த்து கவனிக்கிறப்ப பல்பு கொடுத்துருச்சு.. சின்னச்சின்னதா சுமார் ஐம்பது கிராம் அளவுலான குண்டு பல்புகள். பல்புகளை உபயோகிக்கிறதைத் தவிர்க்கணும்ன்னு நடக்கற பிரச்சாரத்தை இது இப்படி தப்பாப் புரிஞ்சுக்கிச்சோ என்னவோ :-) சரி,.. உலகத்துல இருக்கற அத்தனை ஜீவன்கள் கிட்டயும் பாரபட்சமில்லாம பல்பு வாங்கியே தீரணும்ன்னு நாம கங்கணம் கட்டிக்கிட்டு காத்திருக்கறப்ப இது மட்டும் ஏமாத்திருமா என்ன?? :-)) 

ஊசிக்குறிப்பு: படங்கள்ல இருக்கறது எங்கூட்டுச் செடிகள்ன்னு சொல்லாமலேயே புரிஞ்சுக்கிட்டிருப்பீங்களே :-))


Tuesday, 4 October 2011

நிறங்களும் குணங்களும்



பாலின் நிறம் மட்டுமா?... குழந்தை மனசும் வெள்ளைதான். இந்தப் பூப்போல :-)
வெள்ளை நிறம் தூய்மை, சுத்தம், பொறுமை, உருவாக்கும் தன்மை,சமாதானம் இதெல்லாத்தையும் குறிக்கிறது. மேலும் இதற்கு குணமாக்கும் தன்மையும் உண்டாம். எதிர்மறை எண்ணங்களை விரட்டி மனசை அமைதிப்படுத்தும் குணமும் இதற்கு உண்டாம். இத்தனை நல்ல குணங்கள் இருக்கறதுனாலதான் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் உடைகளில் இது இடம் பிடிச்சிருக்கோ என்னவோ! இத்தனையையும் செய்யும் வெண்மைங்கறது உண்மையில் ஒரு தனிப்பட்ட நிறம் கிடையாது என்பது ஆச்சரியமூட்டும் விஞ்ஞான உண்மை.
வெக்கப்படும் பிங்க்கி
பிங்க் நிறத்துக்கு கோபத்தைக் குறைக்கும் சக்தி உண்டாம். கோபப்படும் போது இந்த நிறம் நம்ம ஆற்றலை கிரகிச்சுக் கொள்கிறது. அதனால நம்ம இதயத்தோட தசைகள் வேகமாக செயல்படுவது குறையுது. இதனால கோபமும் கட்டுக்குள்ள வருதுரொம்பவும் முரட்டுத்தனம் உள்ளவர்களைக் கட்டுப்படுத்தணும்ன்னா, அவர்கள் தங்கி இருக்கும் அறையின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றினாலே போதும் என்கிறார், அமெரிக்க பயோசோஷியல் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் ஸ்காஷ். அடிக்கடி மே(லி)டத்திடம் 'பாட்டுக் கேக்கும்' நிலையில் இருப்பவர்கள் இதை முயற்சி செஞ்சு பார்த்து முடிவைச் சொல்லலாம் :-)மே(லி)டத்தின் அறையை பிங்க் மயமாக்குற முயற்சியில் இன்னும் பாட்டு விழுந்தா கம்பேனி பொறுப்பேற்காது :-)
புல்லின் மேல் தூங்கும் பனித்துளியில் தலைகீழாய்த் தொங்கும் கட்டிடம்
ஒரு நாட்டுல எங்க பார்த்தாலும் பச்சைப்பசேல்ன்னு இருக்கறதுன்னா என்ன அர்த்தம்?. அந்த நாடு செழிப்பா இருக்கறதுன்னுதானே!.இந்த ஒரு நிறத்தைப் பார்த்தால் மட்டுமல்ல, நினைச்சாலே மனசு குதூகலமடைகிறது. செழிப்பைக் குறிக்கும் இந்த நிறம் வளர்ச்சி, இயற்கை, மற்றும் ஒரு இடத்தின் உயிர்த்தன்மையையும் குறிக்கிறது. ஒரு இடத்துல புல் பூண்டாச்சும் வளர்ந்தாத்தானே அந்த மண்ணில் உயிர்ச்சத்து இருக்குதுன்னு சொல்றோம். இதனால்தானோ என்னவோ உலகின் சில இடங்களில் மணப்பெண்கள் திருமணத்தின்போது பச்சை நிறத்தில் உடையணிகிறார்களாம்.


வெண்மை மட்டுமல்ல பசுமையும் கூட சமாதானத்துக்கான நிறமாய் விளங்குகிறது. இருந்தும் பொறாமையையும் இந்த நிறமே குறிப்பது சுவாரஸ்யமான எதிர்மறைதான்.(ஓனிடா டிவியின் சாத்தானை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை)பச்சை நிறத்துக்கு மன அழுத்தம், மனச்சோர்வு, இன்னபிற உடல் அசௌகரியங்களை குணப்படுத்தும் தன்மையும் இருக்கிறது. மருத்துவர்கள் கையில் கண்ணாடியை கழட்டி வெச்சுக்கிட்டு, ஒவ்வொரு திரைப்படங்கள்லயும் "ஏதாவதொரு மலை வாசஸ்தலத்துக்கு கூட்டிட்டுப்போனா வியாதி குணமாக வாய்ப்பு இருக்கு"ன்னு வசனம் பேசிக் கேட்டிருப்பீங்கதானே.
யார் அது தூங்கறப்ப தண்ணி தெளிச்சு எழுப்புனது????
மங்களகரமான மஞ்சள் நிறம் ஆற்றல், விழிப்புணர்வு, சந்தோஷம் போன்ற நேர்மறை எண்ணங்களை வளர்க்கிறது. காலையில் உதிக்கும் மஞ்சள் நிறச் சூரியனை பார்க்கிறப்பவும், அந்த ஒளியில் நனையுறப்பவும் நமக்கு ஏற்படும் புத்துணர்ச்சியும் உற்சாகமுமே இதுக்கு சான்று. இந்த நிறத்தால், அது சுவருக்கு பூசப்பட்ட வண்ணமா இருந்தாலும் சரி, பூக்களா இருந்தாலும் சரி, நாம் சூழப்பட்டிருந்தால் நம்முடைய நரம்பு மண்டலம் ஒழுங்கா இயங்குதாம், அதே போல் நம்ம உடம்பின் வளர்சிதை மாற்றங்களும் சரியா நடக்குமாறு தூண்டப்படுதாம். நிறங்களிலேயே ஆளுமை மிக்க நிறமாவும் இது கருதப் படுகிறது.
கருப்பு மிளகாய் செம காஆஆஆரம்..
ருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு',.. 'கருப்பே அழகு காந்தலே ருசி'.. இன்னும் எத்தனையெத்தனை விதமா எப்படியெப்படிச் சொன்னா என்ன?? ஒரு பலனும் இல்லைங்கறது நாட்டுல விக்கிற சிகப்பழகு க்ரீம்களோட விற்பனை நாளுக்கு நாள் எகிறுவதை வெச்சே புரியுமே. அதெப்படி ஏழே நாள்ல செக்கச்செவேர்ன்னு ஆக முடியும்ன்னு ஒருத்தரும் யோசிக்கறதேயில்லைஇவ்வளவு சொல்றவங்க விளம்பரத்துல ஒரு காகத்தை வெள்ளையாக்கி நிரூபிக்கட்டுமே. கருப்பு நிறத்தை நாம்தான் தாழ்வா நினைக்கிறோம். ஆனால், உண்மையில் சக்தி, உறுதி, பலம், புத்திக்கூர்மை போன்ற நேர்மறைக் குணங்களை கருப்பு நிறம் குறிக்கிறது. கொஞ்சம் குண்டாக இருப்பவர்கள் கருப்பு நிற உடைகளை அணிந்து கொண்டால், ஒல்லியாத் தெரிவார்களாம்


ளுமைத்தன்மையையும் இது குறிக்கிறது, பெரிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புல இருக்கறவங்க அதிகமா இந்த நிறத்தில் உடையணிவது வழக்கம்கருப்பு என்பது நிறங்களின் இல்லாமை ஆகும். ஒரு பொருளானது, தன் மீது விழும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறத்தை உண்டாக்குகிறது. அப்படி, தன் மீது விழும் ஒளியில் அனைத்து நிறங்களையும் உள்வாங்கிக் கொண்டு எந்த நிறத்தையும் பிரதிபலிக்கலைன்னா, அங்கு கருப்பு நிறம் உண்டாகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கருப்பு நிறம் மர்மம், திகில், போன்றவற்றுக்கான நிறமாவும் விளங்குது.

இதயத்தோடு தொடர்புடைய நிறமும் பூவும் :-)
உணர்ச்சிகளைத் தூண்டும் ஒரு நிறமே சிவப்பு. இது இதயத்தோட தொடர்புள்ளதாவும் அன்பு, பாசம், காதல், ஆசை போன்றவற்றின் நிறமாவும் குறிக்கப் படுகிறது. ஆர்வம் மற்றும் ஆற்றலுடனும் தொடர்பு இருப்பதால் தன்னம்பிக்கையையும் கூட்டுவதாக சொல்லப்படுது. இதுக்கு தூண்டும் சக்தி அதிகமிருப்பதால் பிறரின் கவனத்தையும் எளிதாக கவர்கிறது. இந்த நிறத்துக்குக் கோபத்தையும், உணர்ச்சிகளையும் தூண்டும் சக்தி இருப்பதாவும் சொல்லப்படுது. இவ்வளவும் இருந்தா அது கண்டிப்பா ஆபத்தையும் கொண்டு வரத்தானே செய்யும். அதனாலத்தான், சாலைகள்ல முக்கியமா நிறுத்தங்களுக்கான போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு சிவப்பு நிறம் உபயோகிக்கப் படுகிறது.


டிஸ்கி: வல்லமைக்காக எழுதினதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.




LinkWithin

Related Posts with Thumbnails