Tuesday, 30 March 2010

இப்ப சொல்லுங்க..


ஒரு நாள் டீச்சர் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.முன்னொரு காலத்தில் 'பூமி உருண்டையாக இருக்கிறது... இல்லையில்லை.. தட்டையாகத்தான் இருக்கிறது' , என்று மக்களும், தத்துவ ஞானிகளும்,விஞ்ஞானிகளும்,வேறு வேறு பிரிவுகளாக பிரிந்து சண்டையிட்டுக்கொண்டு, அரசுகளை பகைத்துக்கொண்டு,குழப்பிக்கொண்டிருந்ததைப்பற்றி விளக்க ஆரம்பித்தார். அதற்கு முன் அவருக்கு, 'மாணவர்களுக்கு எந்த அளவுக்கு, பூமியைப்பற்றி தெரியும்?..' என்று தெரிந்து கொள்ள ஆவல் வந்தது.

எனவே மாணவர்களைப்பார்த்து,"பசங்களா... உலகம் உருண்டையா?... தட்டையானதா?.." என்று கேட்டார்.

ஒரு மாணவர் எழுந்து," உலகம் உருண்டையானதுதான் டீச்சர்" என்று சொன்னார்.

டீச்சர் அகமகிழ்ந்து, "உன்னால் நிரூபிக்க முடியுமா?" என்று கேட்டார், அவனுக்கு பாடம் ஏற்கனவே தெரிந்திருக்கலாம் என்ற நம்பிக்கையில்.

மாணவர் சொல்லத்தொடங்கினார்..

"டீச்சர்.. உங்களுக்கு கரப்பான் பூச்சியை தெரியுமா?.."

டீச்சர் ஒரு நிமிடம் குழம்பினாலும், "கரப்பான் பூச்சிக்கும், நீ சொல்லப்போவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?" என்று கேட்டார்.

மாணவர் தொடர்ந்தார்...

"கரப்பான் பூச்சி.. பொதுவா சாக்கடையில்தான் இருக்கும். எனவே, அது சாக்கடையில் வசிக்கும் இன்னொரு விலங்கான எலிக்கு பயப்படுகிறது.

எலி, பூனைக்கு பயப்படுகிறது.

பூனை,.. நாயைப்பார்த்து பயப்படுகிறது.

நாய்,..உள்ளூர மனிதனைப்பார்த்து பயப்படுகிறது.

மனிதன், தன்னுடைய மனைவி/காதலிக்கு பயப்படுகிறான்..

மனைவி/காதலி, கண்டிப்பா கரப்பான் பூச்சிக்கு பயப்படுவாங்க.

இப்ப சொல்லுங்க.. உலகம் உருண்டைதானே??..."

தடால்... என்று ஒரு சத்தம். 'டீச்சர்.. டீச்சர்... என்னாச்சு... அய்யய்யோ!!!.. டீச்சர் மயங்கி வுழுந்துட்டாங்க.. யாராச்சும் தண்ணி கொண்டு வாங்க..'


Wednesday, 17 March 2010

நீர்வளத்தைக்காப்போம்.

ஒரு மனிதனின் வாழ்வாதாரம் தொடங்குவதே நீரிலிருந்துதான்.இயற்கை நமக்களித்த அற்புதமான வரங்களில் ஒன்று அது. நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கும், அறிவியல் முன்னேற்றத்துக்கும் விலையாக நாம் கொடுக்க நேர்ந்தது,வரங்களை... பெற்றுக்கொண்டது சாபங்களை. விளைவு..இன்று குடிதண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

ஒரு மனிதனின் உடம்பில் சுமார் 60% நீர்தான் நிரம்பியிருக்கிறது. மீதமுள்ள 40%தான் இன்னபிற அம்சங்களான தசை, நரம்புகள், எலும்புகள் எல்லாம்.ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!!. இந்த நீர்தான் நமது உடலின் வெப்பத்தை சம நிலையில் வைத்திருக்கிறது. வெய்யில் காலத்தில் நமது உடலின்வெப்ப நிலை உயரும்போது, வியர்வையாக வெளிப்பட்டு, வெப்பத்தை குறைக்கிறது. மேலும் ,..ரத்த ஓட்டம், சுவாசம்,ஜீரணம் போன்ற செயல்கள் தடையில்லாமல் நடக்க காரணம் இந்த நீர்தான்.

பூமியில் இருக்கும் நீர் வளத்தில் 97% கடல்நீராக இருக்கிறது. வெறும் 3%தான் நல்ல நீர். அதிலும் மூன்றில் இரண்டு பங்கு உயர்ந்த மலைப்பகுதிகளிலும்,துருவப்பகுதிகளிலும் உறைபனியாக உறைந்திருக்கிறது.மீதமுள்ளது நிலத்தடி நீராகவும், சிறிதளவு காற்றில் ஈரப்பதமாகவும் உள்ளது. நினைக்கும்போதே நாம் எதிர்கொள்ளவிருக்கும் நிலை புரிகிறதல்லவா...

அதனால்தான் அணைகளை கட்டுகிறோம். ஏரி, குளங்களை ஏற்படுத்தி தண்ணீரை சேமித்து வைக்கிறோம்.. அதிலும் பெரும்பாதி ஆவியாகி போய்விடுகிறது. விளைவு.. அண்டை மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நிலை. ஏனெனில் நாம் நீர்த்தேக்கங்களை பெருக்குகிறோமே தவிர, நீர் ஆதாரங்களை பெருக்குவதில்லை. முக்கியமாக மரம், மழைக்கு நண்பன் என்பதை தெரிந்து கொண்டும் மரங்களை அழிக்கிறோம்.நிலத்தடி நீரை சொட்டு விடாமல் மோட்டார் போட்டு உறிஞ்சி விடுகிறோமே தவிர, அதை பாதுகாப்பதில் அக்கறை காட்டுவதில்லை.

நமது முன்னோர்கள் புத்திசாலிகள். கோயில் தோறும் குளங்கள் ஏற்படுத்தி வைத்து நிலத்தடி நீர் வற்றிப்போகா வண்ணம் பாதுகாத்தார்கள். ஊருக்கொரு ஊருணி அமைத்து விவசாயத்துக்கான நீரை பகிர்ந்து கொண்டார்கள். நாம் அவற்றையெல்லாம் பிளாட் போட்டு, நிலத்துக்குள் சொட்டு நீர்கூட போகாவண்ணம் தடுத்து வைத்திருக்கிறோம்.ஆறுகளில் மணலை எடுப்பதால் அந்த சுற்று வட்டாரத்தில் நிச்சயமாக நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது, என்று தெரிந்தபின்னும் அதை கட்டாயமாக செய்கிறோம்.

தண்ணீர் தட்டுப்பாட்டுக்கான முக்கிய காரணமாக மக்கள் தொகை பெருக்கத்தை சொல்லலாம். கூடவே இலவச இணைப்பாக தொழிற்சாலைகள் பெருகுதல், வேலைவாய்ப்புக்காக நகரத்துக்கு இடம் பெயரும் மக்கள் புற நகர்களை உண்டாக்குதல், இவற்றை சொல்லலாம். அவற்றுக்கான தண்ணீர் சப்ளை அதிகரிக்கும்போது ஏற்கனவே அங்கு வசிப்பவர்களுக்கு நிச்சயமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கிராமங்களிலோ விதவிதமான மோட்டார்கள் இரவும் பகலும் பூமித்தாயின் ரத்தத்தை உறிஞ்சி எடுத்து விடுகின்றன.

இருக்கும் நீர் நிலைகளையும் வேண்டியமட்டும் பாழ்படுத்தி வைத்திருக்கிறோம். "தூரப்போடுறதை தண்ணியில போடு" என்று புது மொழி உண்டாக்கி வைத்திருக்கிறோம்.ஆறுகளில் வந்து சேரும் குப்பைகளும்,கழிவுகளும் தான் எத்தனை விதங்கள். அதிலும் தொழிற்சாலைக்கழிவுகளை அப்படியே தண்ணீரில் கலக்க விடுகின்றனர். சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுகளை விடக்கூடாது என்று சட்டமே இருந்தாலும் அதை நிறைய பேர் பின்பற்றுவதில்லை. இதனால் அந்த தண்ணீர் எதற்கும் பயன்படாமல் போகிறது. தமிழ் நாட்டில் நொய்யல் ஆற்றை ஒரு உதா'ரணமா' சொல்லலாம். கழிவு நீரின் வீரியம் பக்கத்து வயல்களுக்கும் பரவியிருப்பதால் அவைகளும் தரிசாக கிடக்கின்றன. இங்கே உல்ஹாஸ் என்றொரு நதி இருக்கிறது. ஆனால் சாக்கடையாக ஓடிக்கொண்டிருக்கிறது.பக்கத்திலுள்ள ஃபேக்டரி கழிவுகளெல்லாம் அதில்தான் கொட்டப்படுகின்றன. தொட்டுபொட்டு வைத்துக்கொள்ளலாம்போல் கரேலென்றுதான் ஓடுகிறது. கடந்து போக வேண்டுமென்றால் மூக்கு வேலை நிறுத்தம் செய்தால்தான் முடியும்.உல்ஹாஸ் நதி???..

கடலையும் நாம்விட்டு வைப்பதில்லை. எல்லாக்கழிவுகளும் கடைசியில் அங்கேதான் போய் சேர்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு, எதிர்ப்பு வந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.மேலும் காற்றில் கலந்திருக்கும் நச்சுப்புகையிலிருக்கும் கெமிக்கல்கள் மழை பெய்யும் போது நீரில் கலந்து, கடைசியில் கடலை அடைகின்றன. சில இடங்களில் அமில மழை பெய்தது என்று கேள்விப்படுகிறோமே அது இப்படித்தான் நடக்கிறது.நம் முன்னோர் சிறுகச்சிறுக சேமித்து வைத்த செல்வமாகிய நிலத்தடி நீரை கண்மூடித்தனமாக செலவு செய்து கொண்டிருக்கிறோம்.இப்படியே போய்க்கொண்டிருந்தால் நம் சந்ததியினருக்கு தண்ணீர் என்பது மியூசியத்தில் இருக்கும் பொருளாகத்தான் இருக்கும். நாம் முயற்சி எடுத்தால் நிலைமையின் தீவிரத்தை கொஞ்சமாவது மாற்ற முடியும்.தண்ணீர் சுழற்சி.

மழை நீர் சேகரிப்பு என்பது ஒரு அற்புதமான விஷயம். இயற்கை கொடுக்கும் பரிவை நாமும் கொஞ்சம் திருப்பிக்கொடுக்கலாம். பெய்யும் மழையை சிமிண்ட் திரையிட்டு தடுக்காமல் இருக்கலாம். ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்பு என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். நிச்சயமாக அதன் பிரதிபலன் விரைவிலேயே தெரிய வரும்.

இருக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.தாகத்தால் தவிக்கும் மனிதனுக்கு ஒரு தம்ளர் தண்ணீர் என்பது விலைமதிப்பில்லாத பொக்கிஷமாகத்தான் தோன்றும்.ஆகவே சில விஷயங்களில் கொஞ்சம் மெனக்கெட்டால் ஒரு சில லிட்டர்களையாவது மிச்சம் பிடிக்கலாம். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் அது நிச்சயம் பெருகும்.

 • காய்கறிகளை கழுவ குழாய் நீரை திறந்துவிடாமல், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் முக்கி கழுவலாம் .கழுவிய தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம்.

 • பாத்திரங்களையும் இதே போல கழுவலாம் . இரண்டு பாத்திரங்களில் தண்ணீர் எடுத்துக்கொண்டு முதல் பாத்திரத்திலுள்ள தண்ணீரைக்கொண்டு கழுவி, பின் இரண்டாவது பாத்திரத்தில் முக்கி கழுவலாம். இந்த முறை மும்பை மழையின் போது ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டின் போது எனக்கு பலன் கொடுத்தது. இது என் ஆச்சி சொல்லிக்கொடுத்தது.

 • வாகனங்களை கழுவ பக்கெட் தண்ணீர் போதும். எங்க பில்டிங்கில் ஒரு வாளித்தண்ணீரைக்கொண்டே, சுமார் நாலு காரை எங்க செக்யூரிட்டி துடைத்து விடுவார்.

 • நிறைய பேர் தன்னை அறியாமல் செய்யும் தப்பு இது. அதாவது பல் தேய்க்கும்போது தண்ணீரை திறந்து விடுவது. ஒரு மக்கில் தண்ணீர் எடுத்துக்கொண்டால் போதுமே. தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம்.

 • துணி துவைக்க வேண்டிய துணிகள் சேர்ந்தபின்னே மெஷினை இயக்கலாம். சிறு சிறு துணிகளாக இருந்தால் கைகளாலேயே துவைக்கலாம் இது இன்னும் தண்ணீரை மிச்சப்படுத்தும். துணி துவைத்த தண்ணீரை பெரிய டப்பில் பிடித்து வைத்து பாத்ரூமில் உபயோகப்படுத்தலாம்.
 • தனி வீடுகளாக இருந்தால், பாத்திரம் கழுவிய தண்ணீர் நேராக தோட்டத்துக்கு போகுமாறும் ஏற்பாடு செய்யலாம்..

 • வீடுகளில் பைப்பில் தண்ணீர் லீக்கேஜ் இருந்தால் உடனடியாக வாஷரை சரி செய்யலாம். அதுவரை ஒரு பக்கெட்டை வைத்து, தண்ணீர் வீணாக போகாதவாறு பார்த்துக்கொள்ளலாம்.

 • இப்போதெல்லாம் ஃப்ளஷ் டேங்க் half மற்றும் full வசதியுடன் வருகிறதாம். நம் தேவைக்கேற்றவாறு பாதி டேங்க் அல்லது முழு டேங்க் ஃப்ளஷ் ஆகிறதாம் . இதனால் தேவையில்லாமல் தண்ணீர் வேஸ்ட் ஆகாது.

 • செடிகளுக்கு காலை அல்லது மாலையில் மட்டும் தண்ணீர் ஊற்றலாம்.மதிய வேளையில் மண் லேசாக சுட ஆரம்பித்திருக்கும் அப்போது ஊற்றினால் நிறைய தண்ணீரை வாங்கும்.
 • மழைக்காலங்களில் வீடுகளில் மழை நீரை சேகரித்து உபயோகப்படுத்துவது நிறைய வீடுகளில் வழக்கம். கூரையை ஒட்டினாற்போல் ஒரு தகரம் அல்லது ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டை பதித்து, வழியும் நீரை ஒரு பெரிய பாத்திரத்தில் சேகரிப்பார்கள். இதை வென்னீர் போட மற்றும் வடிகட்டிய சுத்தமான நீராக இருந்தால் சமைக்கவும் பயன் படுத்தலாம்.
தொலை நோக்கு திட்டமாக வீட்டுக்கொரு மரம் வளர்க்கலாம். மரங்கள் நமக்கு தரும் பயன்கள் கணக்கில் அடங்காதவை.இதை உணர்ந்து கொள்ளாமல் வெட்டி வீழ்த்தி வருகிறோம். மரங்கள் செழித்தால் மழை செழிக்கும். மழை செழித்தால் தண்ணீர் வளமும் செழிக்கும். 'வரப்புயர' என்று அவ்வையார் பாட்டி வாழ்த்தியதை நாம் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வோம்.

இயற்கை நமக்கு இரண்டு சந்தர்ப்பங்களை தந்திருக்கிறது. ஒன்று அசுத்தங்களோடு கூடியது. இன்னொன்று தூய்மையானது. இரண்டில் நாம் எதை தேர்ந்தெடுக்கப்போகிறோம்?...

தொடர் பதிவுக்கு அழைத்த மாதேவிக்கு நன்றி.இப்போ நானும் யாரையாவது அழைக்கணுமே.

வாங்க அம்பிகா,

இன்னும் விருப்பமுள்ளவர்கள் எல்லோரும் எழுதலாம்.

Tuesday, 16 March 2010

வாழ்த்துக்கள்..புதுகைத்தென்றல்..


புதுகைத்தென்றலுக்கு ஒரு யுகாதிப்பரிசு . அளித்தவர்.. .ஆனந்த விகடன்'. ஆமாம். இந்தவார விகடனில் வரவேற்பறையில்அவரது கூட்டுப்பதிவான கானகந்தர்வன் பாராட்டப்பட்டுள்ளது.

நல்ல மெலோடியஸான பாடல்களை கேக்கணும்னா வலையிலிருந்து தரவிறக்கம் செய்வது வழக்கம். அப்படியான ஒரு பொழுதில்தான் இந்த வலைப்பூ கிடைத்தது.

இப்பல்லாம் நல்ல மெலோடியஸான பாடல்களை கேக்கணும்னா அங்கேயும் விசிட் அடிக்கிறது உண்டு. ஜேசுதாஸின் நல்ல கலெக்ஷன் இங்கே இருக்கு. நவரத்தினங்களில் எது சிறந்தது என்று சொல்வது கஷ்டம்தான். என்னுடய ஃபேவரிட் பாடல்...."தேரி தஸ்வீர் கோ சீனே ஸே லகா ரக்கா ஹை"

வாழ்த்துக்கள் தென்றல்.Wednesday, 10 March 2010

ஆணென்ன....பெண்ணென்ன.!!!


ஒரு குழந்தை ஆணாக வேண்டுமென்றோ, பெண்ணாக வேண்டுமென்றோ விரும்பி பிறப்பதில்லை. சுமக்கும்போது எல்லா தாய்களும் ஒரே மாதிரிதான் கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். பின் ஏன்?..எங்கிருந்து ?.. வருகிறது இந்த ஆண்குழந்தை உசத்தி,.... பெண்குழந்தை மட்டம்.... என்ற எண்ணங்கள்?....பிறந்த அந்த நொடியிலேயே வேறுபாடு ஆரம்பித்து விடுகிறது.. சில ஆஸ்பத்திரிகளில், ஆண்குழந்தை பிறந்தால், அதை சொந்தங்களிடம் வந்து சொல்லும் சில ஆயாக்களுக்கு, ஐம்பது, நூறு என்று பணம் கொடுக்க வேண்டும்.இல்லையேல் லேசில் குழந்தையை வெளியே கொண்டு வந்து காட்ட மாட்டார்கள். என் மகள் பிறந்த சமயத்தில், சக பெண் ஒருவரின் உறவினர்களிடம்,அவர்களின் ஆண்குழந்தை பிறந்த செய்தியை சொல்லிவிட்டு பேரம் பேசியதை, கேள்விப்பட்டபோது ஏன் இப்படி?.. என்றுதான் தோன்றியது..

ஒரு வகையில் பார்த்தால், பெண்களாகிய நாமும், இதற்கு ஒரு காரணமாக இருக்கிறோம்..சென்ற தலைமுறைகளாகட்டும்.. இந்த தலைமுறையில் சில பேர்களாகட்டும், எத்தனை பேர் வீடுகளில்,இரண்டுபேரும் சமமாக நடத்தப்பட்டிருப்போம்?...நல்லவை எல்லாம் ஆண்குழந்தைக்கும், அவன் வேண்டாமென்று ஒதுக்கியவை பெண்ணுக்கும் என்பது எத்தனை வீடுகளில் தினசரி நிகழ்வுகளாகவே இருந்திருக்கும்!!!!.சில வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு நல்ல சாப்பாடுகூட இருக்காது.பாரபட்சம் என்பதை நிறையவே அந்த துரதிர்ஷ்டசாலி குழந்தைகள் அனுபவித்திருப்பார்கள்.

பெண்களுக்கான பொறுப்புகள் நிறையவே, அந்த சின்ன வயசிலேயே திணிக்கப்படும்.தம்பி, தங்கைகளை பார்த்துக்கொள்வது சுகமான சுமைகள்தான் என்றாலும் அவளுக்கும் அந்த வயசுக்கான ஆசைகளும், ஏக்கங்களும் இருக்குமே.. அதை ஏனோ,வீட்டிலுள்ளவர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை. .

சில இடங்களில் பெண்ணின் ஆரோக்கியம் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை.ஆணின் வயிறு நிறைந்தபின் மீதம்தான் பெண்குழந்தைக்கு. சொல்லப்போனால்,பெண்குழந்தைக்குத்தான் சாப்பாடு ஒருகை அதிகமாகவே வைக்க வேண்டும்.உடல்ரீதியாக அவள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை சமாளிக்க தெம்பு வேண்டாமா?..அவனது எச்சில் தட்டைக்கூட கழுவும் இடத்தில் எடுத்துப்போட மாட்டான். அதையும் அவள்தான் செய்து, கழுவி வைக்க வேண்டும்.தன் சகோதரனிடம் குரலுயர்த்தி,பேசுவதற்க்குக்கூட... அவள் அனுமதிக்கப்படுவதில்லை.ஒரு தாய் நினைத்தால், இந்த நிலைமையை மாற்றமுடியாதா என்ன!!!

இப்படி சில தாய்மார்களே, தங்கள் பெண்குழந்தைகளை ,நடத்தும்போது, அதைப்பார்த்து வளரும் ஆண் எப்படி.. பெண்ணை சகமனுஷியாக மதிப்பான்??..பெண் என்பவள் தன்னுடைய தேவையை நிறைவேற்றவே பிறந்தவள் என்றுதானே அவனுக்கு பாடமாகியிருக்கும்!!. இதுதானே வளர்ந்தபின் ஈவ் டீஸிங் செய்யும் துணிச்சலையும் கொடுக்கிறது.'ஆம்பளை அப்படித்தான் இருப்பான்' என்று கண்டு கொள்ளாமல் இருப்பதால்தானே பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன.பெண்ணை ஒரு உடலாக மட்டும் பார்க்காமல், அவளும் தன்னைப்போல் ஓர் உயிர் என்ற நினைப்பை, பெற்றோர் நினைத்தால் ஏற்படுத்தலாம். தன் வீட்டு பெண்களை மதித்து பழக்கப்பட்டவன், நிச்சயமாக அடுத்த பெண்களையும் மதிப்பான்.

நம்முடைய தலைமுறையில் மாற்றங்கள் வருகிறதென்றாலும்,இன்னும் வெளிச்சத்துக்கு வராத மனிதர்களும் இருக்கின்றனர். 'ஆணை குற்றம் சொல்வதை விட்டு நம்வீட்டு ஆண்குழந்தைகளை சரியாக வளர்க்கலாமே.'..
அவள் மேல் பாசமும், மதிப்பும் வருவதற்கு நாமே வழிகாட்டியாக இருக்கலாம்.
சிறுவயதிலேயே வீட்டு வேலைகள் பெண்ணுக்கானவை என்று ஒதுக்காமல் ஆண்களையும் சிறுகச்சிறுக ஈடுபடுத்தலாம். சாப்பிடமட்டும், எட்டிப்பார்த்துவிட்டு போய்விடாமல் கொஞ்சம் சமையலையும் பழக்கப்படுத்தலாம்.

இது அவர்கள் தனியாக ஹாஸ்டல், வெளிநாடு ,போன்ற இடங்களில் தங்க நேரிடும்போதும், பந்த் சமயங்களிலும் பட்டினி கிடக்காமல் காப்பாற்றும்.பீமன், நளன் ..இவர்களும் ஆண்கள்தானே.. இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு உணவகங்களிலும்,கல்யாண சமையல்துறையிலும் ஆண்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். ஆகவே, ஆண் சமைப்பது கேவலமானது அல்ல. குறிப்பிட்ட வயதுக்குப்பின் அவர்களுடைய கர்சீப், சாக்ஸ்,உள்ளாடைகள் போன்ற சின்னச்சின்ன துணிகளை துவைக்கப்பழக்கலாம். இப்பத்தான் வாஷிங் மெஷின் வந்துவிட்டதே என்று சொல்லக்கூடாது.கரண்ட் இல்லாத சமயங்களில் தன் கையே தனக்குதவி செய்யும்.சின்னச்சின்ன வீட்டு வேலைகளையும் செய்ய பழக்கப்படுத்தலாம்.பெண்ணின் சுமைகளை பகிர்ந்து கொண்டு வளரும் ஆண் நிச்சயமாக அவளை,அவள் வலிகளை புரிந்து கொள்வான்.

பெண் குழந்தைகளை வேண்டாம் என்று சொல்வதற்கு சிலர் காரணங்களாக சொல்வதில்... வரதட்சிணை, குடும்ப வன்முறை .. இவைதான் முக்கியமானவை. சாப்பிட இன்னொரு வயிறு வந்துவிட்டதே... என்று வருத்தப்படுபவர்களுக்கு, உழைக்க இரண்டு கைகள் கிடைத்திருப்பது ஏனோதெரிவதில்லை.பெரும்பாலான இடங்களில் ,வரதட்சிணையை எதிர்பார்ப்பது இன்னொரு பெண்தான்."எங்கிட்ட ஒருத்தி கேக்குறதை கொடுக்கணும்னா நான் இன்னொருத்திகிட்ட கேக்கத்தானே வேண்டியிருக்கு" என்பது இவர்கள் சொல்லும் நியாயம்.

சிறுவயதிலிருந்தே சகோதரன், சகோதரி ஒருவருக்கொருவர் அன்புடன், பாசத்துடன் வளர்வது நம்கையில்தான் இருக்கிறது.இருவரும் சமம் என்று சொல்லியே நடத்தப்படவேண்டும்.எங்கள் வீட்டிலும் என் குழந்தைகள் இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வார்கள். சிலசமயங்களில் பையர் குக்கர் வைத்தால், குழம்பு வைப்பதை பெண் செய்வார்.டைனிங் டேபிளை இருவரும்தான் செட் செய்வார்கள். அதே போல் சாப்பிட்டு முடித்ததும்,ஒதுங்க வைப்பதும் அனேகமாக அவர்கள்தான். அவ்வப்போது இண்டியாவும், பாகிஸ்தானும் போல இருப்பார்கள். ஆனாலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுத்ததில்லை.

நம்மிடம் அன்பு செலுத்துவதில் குழந்தைகள் பாரபட்சம் காட்டுவதில்லை. பின் நாம் ஏன் அவர்களிடம் பாகுபாடு காட்ட வேண்டும்.பெண்குழந்தையை பெற்றுவிட்ட காரணத்துக்காக மனைவியை கொலை செய்த கணவனைப்பற்றிய செய்தி, தினசரியில்ஒரு மூலையில் இன்று வந்து போனது, ஏனோ,.. இப்ப ஞாபகம் வருது....

Monday, 8 March 2010

மகளிர் தின வாழ்த்துக்கள்

பெண் என்பவள் எடுக்கும் அவதாரங்கள் எத்தனை?? எத்தனை??... மகளாக,தாயாக,தோழியாக,மனைவியாக, சக மனுஷியாக, ... "சில சமயம் பத்ரகாளியாக".. மகனர் அணியினர்தான் குரல் விடுறாங்க... ஒன்னும் கண்டுக்காதீங்க.. சரி..சரி.. :-))). தீமைகளை காணும் போது அந்த அவதாரமும் எடுக்கத்தானே வேண்டியிருக்கு..

மகளிர் தின ஸ்பெஷலா 33% க்கான மசோதா நிறைவேறப்போகுது. ஒருபக்கம் சந்தோஷமா இருந்தாலும், இதை எதிர்க்கவும் ஆளுங்க இருக்காங்களேன்னு கஷ்டமா இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணங்கள்.நமக்கு அரசியல் வேணாம்ப்பா.. அதனால அந்த பாயிண்டுகளை அலசப்போறதில்லை.
ஒரு மம்தா பானர்ஜியை பாத்தே தலைவர் முலாயம்சிங் யாதவ் பயந்து போய் "ஆத்தா.. ஒண்ணையே நாடாளுமன்றம் தாங்கமுடியலையே!! 33% கொடுத்தா என்னாகும்"ன்னு நடுங்கிக்கிட்டிருக்காராம்..ஹா..ஹா..ஹா...

ஒரே ஒரு பாயிண்ட் மட்டும்தான் மூளைக்குள்ள பூச்சி மாதிரி குடையுது. இப்ப இந்தியா முழுக்க பல்வேறு துறைகள்ள பெண்கள் புகுந்து புறப்பட்டுகிட்டிருக்காங்க. இதில் எத்தனை பெண்களுக்கு சுயமா முடிவு செய்யுற சுதந்திரம் இருக்கு?...முக்கியமா தமிழ் நாட்டில் பஞ்சாயத்து ,மற்றும் கிராமங்களில் முக்கிய பொறுப்புகளில், தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் பெண்கள், வெறும் பொம்மைகளாக.. அவங்க வீட்டு ஆண்கள் சொல்படி கேட்கவேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலைகளில் இருக்காங்க.

சில இடங்களில் கூட்டங்களுக்கே, அவங்க கணவர்கள்தான் வர்றாங்கன்னு படிச்ச ஞாபகம்.இந்த நிலைமை, நாடாளுமன்றத்துக்கும் வந்துவிடக் கூடாதுங்கிறதுதான் இப்போ கவலையா இருக்கு. நாடாளுமன்றத்துக்கு இதுவரை வந்த பெண்மணிகளைப்போலவே இந்த இடஒதுக்கீட்டின் மூலம் வரப்போறவங்களும், பெண்களுக்கும் நாட்டுக்கும் நல்லது செஞ்சா நல்லாருக்கும்.

பெண்கள் முந்திமாதிரி முழுக்க அடிமையா இல்லை.. பேச்சுசுதந்திரம், எழுத்து, உடை... ன்னு எல்லா வகைகளிலும் சுதந்திரம் ஓரளவாவது இருக்குது. இன்றைய பெண்களை நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. ஆண்களுக்கு சமமா.. ஏன்?.. ஒருபடி மேலாவே இருக்காங்க. அவங்க இல்லாத துறைகளே இல்லை.. அரசியல்லேர்ந்து, விண்வெளிவரை கலக்குறாங்க.

சில பெண்கள் தங்களோட உரிமைகளை துஷ்பிரயோகமும் செய்றாங்கப்பா.. ஆணுக்குப்பெண் சமம்ன்னு சொல்லிக்கிட்டு குடி, சிகரெட், இன்னபிறன்னு ரொம்பத்தான் முன்னேற்றமா இருக்காங்க.இன்னும் சொல்லப்போனா ஒருபடி மேலயே இருக்காங்க. பெண் சுதந்திரத்தை இப்படி ஏந்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்காங்களோ??!!!..

மகளிர் தின ஸ்பெஷலா மகளிர் மட்டுமே பைலட்குழுவாக கொண்ட ஏர் இந்தியா விமானம் மும்பையிலிருந்து நியூயார்க் செல்கிறது.கேப்டன் ராஷ்மி மிராண்டா,கேப்டன் சுனிதா நரூலா ரெண்டுபேரும் கமாண்டர்களாக வழி நடத்தப்போகிறார்கள். இது பதினாலு மணி நேரப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.நம்ம எல்லோரோட வாழ்த்தும், பிரார்த்தனையும் நிச்சயமா அவங்ககூட இருக்கும்.

பெண்ணுக்கு பெண்ணே எதிரின்னு நிறைய கெட்டபெயர் சம்பாதிச்சு வெச்சிருக்கோம். நாம நெனச்சா இதெயெல்லாம் ஒழிச்சுக்கட்டி எதிராளிங்களை டெபாஸிட் இழக்க வைக்க முடியாதா என்ன???.. அதுதான் உண்மையான மகளிர் தினமாக இருக்க முடியும் என்பது என் கருத்து.

இங்கேயும் படிச்சு உங்க கருத்தை சொல்லுங்க..

அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்:

பெண்மையை மதிக்கும் ஆண்களுக்கு நன்றிகள்


Friday, 5 March 2010

உடனிருந்தே கொல்லும் வியாதி..


உங்களுக்கு கோபம் வருவதுண்டா?...' இது என்ன கேள்வி!!...மனுஷனாப்பொறந்தவனுக்கு கோபம் வர்றது சகஜமானதுதானே'ங்கிறீங்களா!!!. உண்மைதான்..நம்ம ஆழ்மனசுல அடக்கி வைக்கப்பட்ட உணர்வு மற்றும் மன அழுத்தங்களே எல்லை மீறும் போது கோபமாக வெளிப்படுகின்றன. கோபப்படறது சகஜம்ன்னாலும் , அது எல்லை மீறி, நம்மை அழிச்சிடாம இருக்கிறவரைக்கும் அதுவும் ஓர் உணர்வுதான்.(வேறொன்னுமில்லை.. பதிவு கொஞ்சம் நீளமா போச்சு.. டைம் எடுத்து படிச்சிடுங்க. ப்ளீஸ்..ஹி..ஹி..)

நமக்கு அதிகமா கோபம் வருதுங்கிறதை நம்ம உடல்மொழிகளே(body language) காட்டிக்கொடுத்திடும். தாடை இறுகி, நறநறன்னு பல்லைக்கடிப்போம்,இதயத்துடிப்பு கூடுதலாகும், முகமெல்லாம் சிவந்து உடம்பெல்லாம் வேர்த்துக்கொட்டும்,பாதாதிகேசம் நடுங்கும்,பின் தலையில் பாரமா இருக்கிறது மாதிரி இருக்கும்,தலைசுத்தும்.

கொஞ்சம்கொஞ்சமா தலைக்கேறிடுச்சுன்னா, குரலை உயர்த்தி கத்த ஆரம்பிப்போம்,எதிரில் இருக்கிறவங்களை என்ன செஞ்சா தகும்ன்னு மனசுக்குள்ள இருந்து சாத்தான் குரல் கொடுப்பான்..அந்த இடத்தை விட்டே போயிடலாமான்னு தோணும்.எரிச்சலா வரும்.கையிலிருக்கிறதை விட்டெறியிற ஆட்களும் இருக்காங்க.

கோபம்ங்கிறது ஒரு உடனிருந்தே கொல்லும் வியாதி.கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சுக்கலைன்னா நம்மையே அது அழிச்சிடும். நாம கொஞ்சம் கவனிச்சு பாத்தோம்ன்னா எந்தெந்த விஷயங்கள் நமக்கு கோபமூட்டுதுன்னு தெரிஞ்சிக்கலாம். ஒவ்வொருத்தரையும் கேட்டுப்பாத்தா, கீழ்க்கண்ட காரணங்கள் கண்டிப்பா இருக்கும்.

 1. நான் சொல்ற எதையும் காதுல போட்டுக்கறதே இல்லை.. என்மேலே அக்கறையே கிடையாது. இது தங்க்ஸ்களின் டெம்ப்ளேட் புலம்பல்.
 2. எங்கிட்ட ரொம்பத்தான் எதிர்பாக்கிறாங்க,என் கண் முன்னால சிரிச்சிப்பேசிட்டு முதுகுக்கு பின்னால எளக்காரமா பேசுறாங்க. என்னை ஒருத்தனும் மதிக்கிறதே இல்லை.
 3. அவங்களுக்கு சாதகமா உபயோகப்படுத்திக்கிட்டு பின்னாடி கழட்டி விட்டுர்றாங்க, சரியான சுய நலம் பிடிச்சவங்களா இருக்காங்கப்பா.இதெல்லாம் வேலைக்குப்போகும் தங்க்ஸ்+ரங்க்ஸ்களின் ஆபீஸைப்பற்றிய அங்கலாய்ப்புகள்.
 4. வரவர ஒரு வேலையும் செய்றதில்லை. தனியா கிடந்து அல்லாடுறேனே.கூடமாட ஒத்தாசை செஞ்சா என்னவாம்?எப்பப்பாரு என்னை அதிகாரம் செய்றதை தவிர வேற நெனப்பே கிடையாது.. இது யாருடைய புலம்பல்ங்கிறதை உங்க ஊகத்துக்கே விட்டுர்றேன் :-))).
 5. எவ்வளவுதான் பாத்துப்பாத்து நகை, புடவைன்னு வாங்கிக்கொடுத்தாலும்,பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு அம்மணிங்க வாங்கியிருக்கிறது மாதிரி லேட்டஸ்ட்டா இல்லைன்னு புலம்பறாங்களே..இது ரங்க்ஸின் புலம்பல்கள்.
 6. மும்முரமா ஒரு போஸ்டை படிச்சிக்கிட்டோ, இல்லை எழுதிக்கிட்டோ இருக்கும்போது நெட் கனெஷன் புடுங்கிக்கிச்சின்னா வருமே .. அதுக்குப்பேர் என்னப்பா :-))).
 7. குடும்பத்தோட உக்காந்து டி.வி. பாத்துக்கிட்டிருக்கும்போது, ஒலக மகா முக்கியமான சில கண்றாவிகளை பாக்க நேரிடும்போது..
 8. மேல படிக்கணும்ன்னு, பொண்ணுங்க ஆசைப்படும்போது,பெத்தவங்க ஒத்துக்கிட்டாலும்,"பொம்பளைப்புள்ளை படிச்சு கலெக்டர் வேலைக்கா போகப்போற.."ன்னு மத்தவங்ககிட்டேயிருந்து ஒரு நொட்டச்சொல்லு வந்து விழும்போது..
 9. பெண் என்பதற்காகவே திறமைகள் மதிக்கப்படாம போகும்போது...
 10. ஆணோ, பெண்ணோ.. அவர்களின் உணர்ச்சிகள் மதிக்கப்படாவிட்டால்...,
இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போகும் அபாயம் இருப்பதால் ஒரு கமா போட்டுக்கறேன்.உங்க கோபத்தை தூண்டும் விஷயங்கள் என்னென்னன்னு யோசிச்சு, குறிச்சு வெச்சிக்கங்க.

இப்ப, அந்த பேப்பரை எடுத்து வாசியுங்க.. மேலோட்டமா பாத்தா மத்தவங்க உங்ககிட்ட சரியா நடந்துக்காததால்தான் நீங்க கோபப்பட்டிருப்பீங்க,...சில சமயம் ஏதாவது ஒரு விஷயம் உங்களை அடிக்கடி கோபப்படுத்தியிருக்கலாம். உங்க கோபம் நியாயமானதுதான்னு தோணும்.. ஆனா,..யோசிச்சுப்பாத்தா,ஒரே விஷயத்தை இருவேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமா கையாண்டிருப்போம்.ஒரு சமயம் டேக் இட் ஈஸின்னு போயிருப்போம். அதுவே வேறொரு சந்தர்ப்பத்தில் பாய்ந்து பிறாண்டியிருப்போம்..இதிலேருந்து நீங்களே புரிஞ்சிட்டிருப்பீங்களே!!.. யெஸ்..நம்ம கோபத்தை எது தூண்டுதுன்னு உண்மையிலயே,.. நம்மாலயே புரிஞ்சிக்க முடியாது..

இப்படி, கொஞ்ச நாள் உங்களை நீங்களே கவனிச்சு வந்தாலே எது உங்க கோபத்தை தூண்டப்போகுதுன்னு நீங்களே கண்டுபிடிச்சிடலாம், நீங்க தன்னிலை மறந்து கத்த ஆரம்பிக்குமுன்னே உஷாராயிடலாம்.கோபத்தை தூண்டும் எண்ணங்கள் பெரும்பாலும் அந்த ஒரு நிமிட உணர்ச்சிகளாகவே இருக்கும்.அப்படின்னா எதுக்குமே கோபப்படாம இருக்க முடியுமான்னு தானே கேக்கறீங்க. நாம அந்த ஒரு நிமிடத்தை ஜெயிச்சிட்டோம்ன்னாலே, ஆத்திரம் கட்டுக்குள்ள வந்திடும்.

எப்பவும், நம்முடைய நிலையிலிருந்தே பாக்காம எப்பவாவது அடுத்தவங்க கோணத்திலிருந்தும் யோசிக்க பழகிக்கலாம்.ஏன்னா.. எதுக்கெடுத்தாலும் கோபப்படுவதால நம்ம மன,உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகுதில்லையா?.. அதை தவிர்க்கலாமே.பொதுவா, நம்ம சமூகத்தில ஆம்பிளைங்க அழப்பிடாது,.. பொண்ணுங்கன்னா ஆத்திரப்படப்பிடாது,எதுக்கெடுத்தாலும் பயந்தா எப்படி?ன்னு உணர்ச்சிகளை அடக்கியே வாழ பழக்கப்படுத்திடறாங்க.இப்படி மனசுக்குள்ளயே அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் என்னிக்காவது வெடிச்சி சிதறும்போது,அது சுனாமியை விட பேரழிவை குடும்பத்தில் உண்டாக்கும்.

ஆத்திரம் என்பது ஒரு நோய். உடனிருந்தே கொல்லும் ஒரு வியாதி.. இந்த வியாதி நம்மை அழிக்க விடலாமா?.. நாலஞ்சு வகையிலே இதுக்கான மருந்துகள் இருக்கே..
 1. ஆழ்ந்த சுவாசம்: ஒரு மனிதன் ஆத்திரப்படும்போது அவனு(ளு)டைய சுவாசம் தாறுமாறா எகிறும். மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கும்.இதை சமனப்படுத்துவதன் மூலம் ,வியாதி கட்டுக்குள் வரும். இதற்கு முதலில்,மூச்சை நன்கு இழுத்து விடவேண்டும். மூச்சை உள்ளிழுக்கும்போது நான்கு வரை மனசுக்குள் எண்ண வேண்டும். வெளிவிடும்போது எட்டு வரை எண்ண வேண்டும். இப்படி ஒரு பத்துப்பதினஞ்சு தடவை மூச்சுப்பயிற்சி செய்யலாம். இந்தப்பயிற்சியை யார்வேண்டுமானாலும் செய்யலாம். ஆஸ்துமா காரங்க இதை தவறாம செஞ்சா நல்லது.
 2. ஒன்றிலிருந்து பத்துவரை எண்ணலாம். எதிர்க்க இருக்கறவங்களைப்பொறுத்து இந்த எண்ணிக்கை வித்தியாசப்படும். தங்க்ஸ் முன்னாடி வாயைத்திறக்க பயப்படும் கைப்புள்ளைகளும் இதை செய்யலாம். யாராவது கேட்டா, சமாளிக்கலாமுல்ல :-))
 3. கோபத்தை மத்தவங்களுக்கு தொந்தரவில்லாம வெளிப்படுத்த சிபாரிசு செய்யப்படும் சில விஷயங்கள்--தலையணையை குத்துதல், சுவரில் தலையை முட்டிக்கொள்தல்(ஹி..ஹி.. ச்சும்மா... செஞ்சு பாக்காதீங்க).ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சுக்கு நூறாக கிழித்தல்,.. இதெல்லாம் வேணாமுங்க..கிழிச்ச பேப்பர் முக்கியமானதா இருந்தா ஆத்திரம் கூடுவிட்டு கூடு பாயும் அபாயம் உண்டு. தலையணையை குத்திக்கிழிச்சா புதிசு வாங்கிய செலவு இன்னொருத்தருக்கு, இல்லாத கோபத்தை வரவைக்கும்.
 4. உங்களுக்கு அமைதிதர்ற மாதிரி ஏதாவது படிக்கவோ,ஏதாவது உடலுழைப்போ இருந்தா செய்யுங்க.வாக்கிங், நீந்துதல்,தோட்ட வேலை இதெல்லாம் கூட physical outletsதான்.
 5. கண்ட கண்ட அழுவாச்சி சீரியல்களை பாக்காதீங்க. இலவச இணைப்பா வீடியோ கிளிப்பிங்க்ஸை பாக்க வேண்டியிருக்கும். :-)
 6. மறுபாதி கிட்ட, நீங்க எனக்கு உதவி செய்றதில்லைன்னு புகார் வாசிக்கிறதை விட்டுட்டு,உதவி செஞ்சா நல்லார்க்கும்ன்னு சொல்லலாம்.அவங்க உதவி செய்யும்போது குத்தம் கண்டுபிடிக்காம இருக்கலாம்(அது முடியாதே ..கொஞ்சம் கஷ்டமாச்சே :-)))) இதைவிட இன்னொரு வழி இருக்கு. கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம். எல்லோருக்கும் பொதுவா ,ஒரு பழமொழி சொல்வார்கள்.. "சொல்லிப்பார்...தல்லிப்பார்... தள்ளிக் களெ"...தப்பிருந்தா சொல்லித்திருத்தலாம், கேக்கலையா ரெண்டு தட்டு தட்டலாம்(தங்க்ஸ்+ரங்க்ஸை இல்லைங்க)அதுக்கும் அடங்கலையா விட்டுவிடலாம். அவங்களுக்கு தெரிஞ்சவரையில் செய்றாங்க.. அதுவே பெரிசில்லையா. உதவி செய்யணும்கிற மனசுதானே முக்கியம்.
 7. எல்லாத்தையும் விட முக்கியம், சம்பந்தப்பட்டவங்களை மன்னித்து, அந்த நிகழ்ச்சியை மறந்துடறதுதான். இதுக்கு ரொம்பப்பெரிய,பக்குவப்பட்ட மனசு வேணும் சாமி..
ஆத்திரம் என்பது ஒரு உணர்ச்சி மட்டுமல்ல. ஒரு பிரச்சினையும் கூட..அது நம்மை கட்டுப்படுத்துகிறதா?..நாம் அதை கட்டுப்படுத்துகிறோமா?என்பதுதான் அது.கட்டுப்படுத்த தவறினால் சீக்கிரமே அது நம்முடைய குணங்களில் ஒன்றாக மாறிவிடும். 'அட.. அது ஒரு முசுடுப்பா'ன்னு நம்ம கோபத்துக்கு பயந்து பணிஞ்சு போறாங்களே... அது உண்மையான அன்பினால் வந்த பணிவா?

கோபத்தை ஒட்டுவாரொட்டி (ஒட்டுவார் ஒட்டி)அப்படீன்னும் சொல்வாங்க. ஒருத்தர் தன்னோட கோவத்தை அடுத்தவர் மேல காமிக்க, அவங்க இன்னொருத்தர் மேல பாய, இது ஒரு தொடர்கதையாக்கூட சமயங்களில் ஆகிடும்.எதுக்கெடுத்தாலும் ஆத்திரப்படுறவங்க ஒரு எரிமலைக்கு சமம். அவங்க எங்கே போனாலும், அவங்களைச்சுத்தி அழிவைத்தான் உண்டாக்குவாங்க. மத்தவங்களை அடக்கியே பழக்கப்பட்டவங்க வேற எப்படி இருப்பாங்க?... விளைவு.. குடும்ப உறவுகளில் விரிசல், உடல் நலக்கேடு,வெளியுலகத்தொடர்பு அற்றுப்போதல் இதுதான் மிச்சம்.ஒரு கிருமியைக்கண்ட மாதிரி விலகிப்போவாங்க .. இதெல்லாம் தேவையா?...

LinkWithin

Related Posts with Thumbnails