Tuesday, 29 January 2013

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ட்ராபெர்ரி..


புளி, நெல்லி, மாங்காய் வரிசையில் பேரைச்சொன்னாலே நாவில் எச்சில் ஊற வைக்கும் ஒரு பழம்தான் ஸ்ட்ராபெர்ரி. உருண்டை உடம்புடன் செக்கச்செவேலென்ற ட்ரெஸ்ஸுடன் பச்சைத்தொப்பிப் போட்டுக்கொண்டு ஒய்யாரமாய் இந்தச்சீமாட்டி மால்களிலும் பழக்கடைகளிலும் உட்கார்ந்திருக்கும் அழகே அழகு. பார்த்தவுடனேயே கொத்திக்கொண்டு போய்விட வைக்கும் இந்தக் கொள்ளையழகுச் சீமாட்டி தன்னை விழுங்கியவரையும் நோயின்றி வாழ வைக்கும் ஈர மனசுக்காரி.
கொடி வகையைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டாலும் இப்பொழுது உலகம் முழுக்கப் பயிரிடப்படுகிறது. ரோஜாக்குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி Fragaria ananassa  என்ற தாவரவியல் பெயராலும் அறியப்படுகிறது.

காட்டுப்பயிராக இருந்த ஸ்ட்ராபெர்ரியை நாட்டுக்குள் கொண்டு வந்த பெருமை பிரெஞ்சுக்காரர்களையே சாரும். 1300களின் கடைசியில் ஆட்சி புரிந்த ஐந்தாம் சார்லஸ் மன்னனின் தோட்டத்தில் 1200 செடிகள் இருந்தனவாம். பழங்கால ரோம் இலக்கியங்களில் இதன் மருத்துவ மகிமையைப்பற்றி நிறையச் சொல்லி வைத்திருக்கிறார்களாம். 1500களில் பரவலாகப் பயிரிட ஆரம்பித்திருக்கிறார்கள். பயிரிடும் மற்றும் அறுவடை செய்யும் முறைகளை பக்காவாக 1578லேயே எழுதி வைத்திருக்கிறார்கள்.
மஹாராஷ்டிராவில் மஹாபலேஷ்வரில் இருக்கும் ஸ்ட்ராபெர்ரித் தோட்டங்கள் ருசியான பழங்களுக்குப் பெயர் பெற்றவை. பிரிட்டிஷார் ஆஸ்திரேலியாவிலிருந்து செடிகளைக்கொண்டு வந்து பஞ்ச்கனியிலும் மஹாபலேஷ்வரிலும் நட்டு வைத்து வளர்த்திருக்கிறார்கள். இங்கே விளையும் பழங்கள் உலகம் முழுக்கவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மஹாபலேஷ்வருக்கு சுற்றுலா போய்த்திரும்புபவர்கள் கையில் நிச்சயமாக பழப்பாக்கெட்டும், கண்கள் விரியச்சொல்வதற்கு ஸ்ட்ராபெர்ரி ஃபார்மில் சுற்றித்திரிந்த ஏராளமான அனுபவங்களும் இருக்கும். 

மகளின் தோழியொருத்தி அங்கே பஞ்ச்கனியில் தங்கிப்படித்தவளாததால் தோட்டங்களில் செடி வளர்க்கப்படும் விதம் பற்றிச் சொன்னதுண்டு. சில இடங்களில் நம்மூரில் திராட்சை வளர்க்கப்படுவது மாதிரியே உயரத்தில் செடிகள் நடப்பட்டிருக்கும். பழங்களும் காய்களுமாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். இம்முறையில் பழங்கள் மண்ணில் புரண்டும், காலில் மிதிபட்டும் வீணாவது தடுக்கப்படுகிறது. இன்னும் சில இடங்களில் ப்ளாஸ்டிக் விரிப்பொன்று தயார் செய்யப்பட்ட நிலத்தின் மேல் விரிக்கப்படுகிறது. ஆங்காங்கே துளையிடப்பட்ட அந்த விரிப்பில் துளைகளில் செடிகள் நடப்படுகின்றன. இந்தச்செடிகளுக்கு சொட்டு நீர்ப்பாசன முறையில் நீர் பாய்ச்சப்படுகிறது. இதிலும் பழங்கள் விரிப்பின் மேல் பாதுகாப்பாக இருப்பதால் அறுவடைக்கால நஷ்டம் தவிர்க்கப்படுகிறது. இந்தக் குளிர்கால லீவில் போய் அதையெல்லாம் பார்த்து வர வேண்டுமென்ற எனது ஆசை வழக்கம்போல் வீட்டார் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தால் ஊற்றி மூடிக்கொண்டது. அவ்வ்வ்வ்வ்வ்…. 
ஸ்ட்ராபெர்ரியை வீட்டிலும் வளர்க்கலாம் என்றும் இணையம் சொல்கிறது. விதை போட்டும் கன்றுகளை நட்டும் வளர்க்கும் வழக்கமான முறைகளைத்தவிர நன்கு முதிர்ந்த பழத்திலிருந்து விதைகளை உபயோகப்படுத்தியும் வளர்க்கலாமாம். பழத்தை ஐந்து மி.மி. அளவுக்கு ஸ்லைஸ் செய்து கொண்டு அதை மண்ணில் நட்டு வைக்க வேண்டுமாம். அதிலிருக்கும் விதைகள் மூலம் செடிகள் வளருமாம். இந்தப்பழத்தில் எங்கே விதைகள் இருக்கின்றன என்றுதானே கேட்கிறீர்கள்?.. சிவந்த பட்டுப்புடவையில் மஞ்சள் ஜரிகைப்பொட்டுகள் போன்று இருக்கின்றனவே அவைதான் விதைகள். அடுத்த தடவை வாங்கும்போது நட்டு வைத்து வளர்கிறதா என்று பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். 
செடிகளுக்குத்தண்ணீர் பாய்ச்சும்போது இலைகளில் படாமல் வேரில் மட்டும் படும்படியாக ஊற்ற வேண்டும். இல்லையெனில் இலைகள் அழுகி விடும். சம்மரின் பிற்பகுதி அல்லது ஸ்ப்ரிங்க் சமயம் பயிரிட ஏற்றது. மணற்பாங்கான பகுதி உகந்தது. எல்லாக் கால நிலைகளிலும் நிலைத்து நிற்கக்கூடியதென்றாலும் பழம் வரும் சமயம் ஈரப்பதம் இருந்தால் நல்லது 

கலோரிகள் குறைந்த அளவில் இருக்கும் இந்தப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. ஒரு கப் பழத்தில் வெறும் 49 கலோரிகள் மட்டும்தான் இருக்கிறதாம். ஒரு நாளைக்கு எட்டுப்பழங்கள் எடுத்துக்கொண்டாலே போதும். குழந்தைகளுக்கு அன்றைக்குத்தேவையான வைட்டமின் சி 140 சதவீதம் கிடைத்துவிடும். மேலும் இதில் ஃபோலிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்டுகள் அதிகம் இருக்கிறது. இவை உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்குகின்றன. ஒரு ஸ்ட்ராபெர்ரியை இரண்டாக வெட்டி அதன் சாறு பற்களிலும் ஈறுகளிலும் படுமாறு நன்றாகத் தேய்த்து விட்டு சிறிது நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். பின் சுத்தமான தண்ணீரில் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படிச்செய்தால் பற்களில் ஏற்படும் கறை போய்விடும். ஈறுகளும் பலப்படுமாம். இந்தப்பழத்திலிருக்கும் மாங்கனீஸ் உப்புச்சத்து நமது எலும்புகளைப் பலப்படுத்துகிறது. 
ஸ்ட்ராபெர்ரியைச் சேர்த்து வாசனையூட்டிய பால், மில்க் ஷேக், ஐஸ்க்ரீம், கேக், பை(pie) இன்னும் எத்தனையோ ஐட்டங்களைச்செய்யலாம். மருந்து சாப்பிடப் படுத்தும் சின்னக்குழந்தைகள்கூட இதன் வாசனை சேர்க்கப்பட்ட மருந்துகளாயிருந்தால் அடம் பிடிக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். எல்லோருக்கும் பிடித்தமான இந்தப்பழம் சிலருக்கு மூச்சுத்திணறல், வாய்ப்புண் போன்ற ஒவ்வாமையையும் உண்டாக்கலாம்.

இந்தப் பழத்தை வாங்கி வந்து இரண்டு நாட்களுக்குள் உபயோகப்படுத்தி விட வேண்டும். அதற்கு மேல் தாங்காது. அழுக ஆரம்பித்து விடும். ஃப்ரிஜ்ஜில் வைத்தால் கூடுதலாக இரண்டு நாள் அவ்வளவுதான். இப்பொழுதெல்லாம் பழங்களின் மேலும் பூச்சி மருந்து தெளிக்கப்படுவதால் திராட்சை போன்று இதையும் தண்ணீரில் கழுவிச்சுத்தப்படுத்தி உபயோகிப்பது நல்லது. வாங்கி வந்த பழங்களை சாப்பிடுமுன் கொஞ்சத்தைச் சுட்டு வைத்தேன். சுடுவதற்கு ஏற்ற இடம் ஏது?.. அடுக்களைதானே. அதுதான் இங்கே ஷூட்டிங் ஸ்பாட். அடுத்தது காட்டும் பளிங்காய்ப் பளபளத்த மேடை வா.. வா.. என்று அழைக்க மேடையில் அழகாகப் பிரதிபலித்த தன்னழகைத்தானே பார்த்துப் பெருமைப்பட்டுக்கொண்டது ஸ்ட்ராபெர்ரி. வெள்ளைப்பின்னணிக்கு ட்ராயிங் பேப்பர் உதவி செய்தது :-))
சிவப்பாக இருக்கும் பழங்களெல்லாம் இதயத்தைப்பலப்படுத்துவதிலும், புற்று நோய் வரும் வாய்ப்புகளைக் குறைப்பதிலும், வயதாவதைத் தாமதப்படுத்துவதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இப்பொழுது மார்க்கெட்டில் ஸ்ட்ராபெர்ரி மலிவாகக் கிடைக்கிறது. இந்த ஒரு காரணத்துக்காகவே தினமும் அதைச்சாப்பிடலாமே.

Tuesday, 22 January 2013

யாதெனில்..


இயங்காமலேயிருந்து இற்று வீழ்ந்து அழிவதை விட ஓடித்தேய்ந்து வீழ்வது மேல்.

தன் வரையில் எதுவும் கெடுதல்கள் நடக்காதவரைக்கும் 'உலகம் பாதுகாப்பானதாக இருக்கிறது' என்றே பலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

நாளையைத் திட்டமிடுவது முக்கியம்தான்.. அதேசமயம் இன்றை வாழ்ந்து பார்ப்பது அதை விட அவசியமானது.

வெகு நாட்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தபின் கிடைக்கும் எதுவும் கடுகை விடச்சிறியதாயினும் மலையளவு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

ஒரு சின்ன தலை வருடல் கூட எத்தனை பொக்கிஷமான தருணமானது என்பதை அன்புக்கு ஏங்கும் உள்ளங்களைக் கேட்டால் புரியும்.

தேர்ந்தெடுக்கப்படுவதற்கென நம்முன் இருக்கும் வாய்ப்புகள் அதிகமாக ஆக வேண்டும், வேண்டாமென்ற நமது விருப்பங்களும் மாறுபடுகின்றன. வாய்ப்புகள் அமையப் பெறாதவர்களுக்கோ கிடைத்ததே வரமாகிறது.

கடமைக்குச் செய்வதை விட, விரும்பும் செயலில் முழு மனதுடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதே நம்மை உண்மையான மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

நமது சுயரூபத்தை அறிந்த பின்னும் விட்டு விலகாமல், மனதார அப்படியே ஏற்றுக்கொண்டு அருகிலிருப்பவர்களே நம்மீது உண்மையான நேசம் கொண்டவர்கள்.

நேரெண்ணங்களுடன் நாளைத்துவக்குவதும் முடிப்பதும் அன்றைய நாளை மகிழ்ச்சியுடன் நல்லபடியாகக் கழித்ததற்கு அடையாளம்.

தோற்றத்திற்கும் உள்ளத்திற்கும் பெரும்பாலான சமயங்களில் சம்பந்தமிருப்பதில்லை.

Friday, 18 January 2013

ஏழு அதிசயங்களும் ஒரே இடத்தில்..(வொண்டர்ஸ் பார்க் - நெருல்)

பழையன கழிதலும் புதியன புகுதலும் உலகின் நியதி. பழசாகிப்போனதாலோ, சேதப்பட்டுப்போனதாலோ, இல்லை பார்த்துப்பார்த்து போரடித்துப் போனதாலோ அல்லது இது எதிலும் அடங்காத ஏதாவதொரு காரணத்தாலோ பழையவற்றை கழித்துக்கட்டி விட்டு புதியதாக ஒன்றைக் கொண்டு வருகிறோம்.(மறுபாதிகளுக்கும் இந்த நியதி பொருந்துமான்னு வில்லங்கமால்லாம் யோசிக்கப்டாது புரிஞ்சதோ. பிடிச்சு 'உள்ளே' தள்ளிருவாங்க :-))) அந்த நியதியிலிருந்து மாறாமல் உலகின் பழைய அதிசயங்களான பாபிலோனின் தொங்கும் தோட்டம்,  எகிப்து மன்னர் பாரோ கூபுவின் சமாதி அடங்கியுள்ள கிஸா பிரமிட், ஆர்ட்டிமிஸ் கோவில், ஒலிம்பியாவில் அமைந்திருந்த ஜீயஸ் கடவுளின் சிலை, மாசோலஸ் மசோலியம், ரோட்ஸ் சிலை, அலெக்சாண்ட்ரியா கலங்கரை விளக்கம். போன்றவை பட்டியலிலிருந்து விலக்கப்பட்டு புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டது.

பழைய பட்டியலில் உள்ள அதிசயங்கள் கிரேக்க எழுத்தாளரான ஆண்டிபேட்டர் என்பவரால் தேர்வு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. புதிய ஏழு அதிசயங்கள் சுவிட்சர்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும் கனடா நாட்டுக்காரருமான பெர்னார்ட் வெபர் என்பவரின் முயற்சியால் பொது வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கென நியூ செவன் வொண்டர்ஸ் அறக்கட்டளையும் ஆரம்பிக்கப்பட்டது. விரும்புபவர்கள் இணையம் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக தமது வாக்குகளை அளிக்கவும் வசதிகள் செய்து தரப்பட்டன.

இந்த வாக்கெடுப்பில் உலகின் பெருமளவு நாடுகள் கலந்து கொண்டாலும் சில நாடுகள் இதில் கலந்து கொள்ளாமல் தம் எதிர்ப்பைத்தெரிவித்தன. அதிசயங்களை வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுப்பதை யுனெஸ்கோவும் விரும்பவில்லை. ஆரம்பக்கட்டத்தில் தேர்வாளர்களை, அதாவது nomineeக்களை மட்டும் தேர்ந்தெடுப்பதில் தன்னுடைய ஆலோசனைகளை வழங்கி விட்டு ஒதுங்கிக்கொண்டு விட்டது. ஒருவரே எத்தனை வாக்குகள் என்றாலும் போட்டுக்கொள்வதைத் தடுக்க வழியில்லாததால் இந்த வாக்கெடுப்பை அறிவியல்பூர்வமாக ஆதாரமற்றது என்றும் கூறுகிறார்கள். எக்கச்சக்க கள்ள ஓட்டுகள் விழுந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறதுதானே.

சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தார்களாம். இதுவரை நடந்த கருத்துக்கணிப்புகளில் இதுவே வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய கருத்துக்கணிப்பென்று zogby international என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் கமிஷனரான john zogby கருத்துத்தெரிவித்திருக்கிறாராம். உண்மையில் எத்தனை பேரோ?.. கடவுளுக்குத்தான் வெளிச்சம்.  

நம் இந்தியாவில் மதுரை மீனாட்சியம்மனுக்கும், தாஜ்மஹாலுக்கும் நடந்த கடைசிக்கட்டப் போட்டியில் தாஜ்மஹால் ஜெயித்த விதம் குறித்து இங்கேதான் சற்றுச் சந்தேகம் வருகிறது :-) மதுரையை ஜெயிக்க வையுங்கள் என்று நம்மாட்கள் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் மன்றாடியும் தேர்தல் சமயங்களில் நடப்பது மாதிரி கன்னாபின்னாவென்று கள்ளஓட்டுகளைக் குத்தாமல் நம்மாட்கள் அம்போவென்று விட்டு விட்டதில் மீனாட்சியை அலங்கரிக்க வேண்டிய “தாஜ்” தாஜுக்குப் போய்விட்டது. தாஜ் என்றால் கிரீடம் என்றும்  இன்னொரு அர்த்தமுண்டு :-) என்னே மதுரைக்கு வந்த சோதனை..

2001 இல் நிறுவப்பட்ட இந்த நியூ செவன் வொண்டர்ஸ் அறக்கட்டளை தனியார் அளித்த நன்கொடைகள் மற்றும் இந்த வாக்கெடுப்பு சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கான ஒளிபரப்பு உரிமைகள் இவற்றைக் கொண்டே இயங்கியது, எந்தப் பொதுப் பணத்தையோ அல்லது வரிசெலுத்துவோர் பணத்தையோ ஏற்றுக் கொண்டதில்லை என்றும் கூறிக்கொள்கிறது.

யுனெஸ்கோவின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் பெட்ரிகோ மேயரைத் தனி நபர்த்தலைவராகவும், (அதாவது யுனெஸ்கோவுக்கும் இந்தக்குழுவுக்கும் சம்பந்தமில்லையாம்) உலகின் தலைசிறந்த கட்டிடக்கலை நிபுணர்களான, சாகா ஹதித், சீசர் பெல்லி, டடோ ஆன்டோ, ஹாரி சீட்லர், ஆசிஸ் டேயோப், யுங் ஹோ சாங், போன்ற ஆறு பேரையும் கொண்ட ஒரு குழு உலக அதிசயங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்தது. இந்தக்குழு உலகின் புதிய அதிசயங்களை 2007-ம் வருடம் ஜூலை மாதம் ஏழாம் தேதியன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பெருத்த ஆரவாரத்துக்கிடையே அறிவித்தது. போர்ச்சுகலின் தலைநகரான லிஸ்பனில் பென்பிசியா ஸ்டேடியத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியைக் காண நேரிலும் தொலைக்காட்சிப்பெட்டிகள் முன்னாடியும் லட்சோபலட்சம் மக்கள் தவமிருந்தனர்.

இந்தப்புதிய பட்டியலில்,
இந்தியாவின் தாஜ்மஹால்.

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில், மலை உச்சியில் உள்ள பிரம்மாண்ட இயேசு நாதர் சிலை.
சீனப் பெருஞ்சுவர்.
ரோம் நகரின் கொலோசியம்.
பெருவின் மச்சு பிச்சு.

ஜோர்டானின் பெட்ரா.
மெக்ஸிகோவின் மயன் கட்டடங்கள்..
போன்றவை சேர்க்கப்பட்டன.

இந்த அதிசயங்களையெல்லாம் உலகம் முழுக்கச்சுற்றி வந்து பார்க்க வேண்டுமென்றால, குறைவில்லாத பணமும், உடல் நலமும் வேண்டும். பக்கத்து ஊருக்குப் போய்வந்தாலே ‘அம்மாடி’ என்று காலைப் பிடித்துக்கொண்டு உட்கார்பவர்களும், வயதானவர்களும் சுற்றிப்பார்ப்பதைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஆகவேதான் பாஸ்போர்ட், விசா போன்ற எந்தப் பிடுங்கல்களுமில்லாமல் எல்லா அதிசயங்களையும் ஒரே இடத்தில் சுற்றிப்பார்க்க வொண்டர்ஸ் பார்க்கில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் புண்ணியவான்கள். அதுவும் வெறும் முப்பத்தைந்தே ரூபாய் செலவில் :-)

இந்தப்பக்கம் கால் வைத்தால் தாஜ்மஹாலின் முற்றத்தில் நிற்கலாம். அதுவே அந்தப்பக்கம் ரெண்டடி எடுத்து வைத்தால் ரியோ டி ஜெனிரோவின் ஏசுவைத் தரிசிக்கலாம். “மத்தவங்களுக்கு வழி விடாம ரொம்ப நேரமா நிக்காதீங்க.. பிச்சு பிச்சு” என்று யாராவது அன்பாக எச்சரித்தால் மச்சு பிச்சுவுக்குப் போய் விடலாம். பற்றாக்குறைக்கு மயன்கள் கட்டி வைத்த அமைப்பு வேறு இங்கே இருக்கிறது. “அடுத்தாப்ல எப்ப உலகத்துக்கு எக்ஸ்பயரி தேதி குறிச்சுருக்கீங்க?. இங்கே அது சம்பந்தமான கல்வெட்டு ஏதாவது இருந்தா சொல்லுங்க. எங்களுக்கும் பொழுது போக வேணாமா?. ப்ளாக், பேஸ்புக்ன்னு  கொஞ்ச நாளைக்கு தீப்பிடிக்க வைப்போமில்லே!!” என்று அலப்பறையைக் கூட்டி விட்டு வரலாம். ”ஆஹா!!.. என்னவொரு சௌகரியம். 

இந்த ஏழு அதிசயங்களையும் பற்றி விலாவாரியாக விரைவில் எழுதப்படும் அபாயம் இருக்கிறதென்று இப்போதே எச்சரித்துக் கொல்கிறேன் :-))))

Monday, 14 January 2013

பொங்கட்டும் மகிழ்ச்சிப்பொங்கல்..பால் பொங்குவது போல் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும் நிறைவும் என்றும் பொங்கிப்பெருகி, மங்கலம் எங்கும் நிறையட்டும்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..

Friday, 11 January 2013

போனோமே ஊர்வலம் (வொண்டர்ஸ் பார்க்-நெருல்)

"ஓடி விளையாடு பாப்பா" என்று பாடி வைத்து விட்டுப்போய் விட்டார் பாரதியார். இன்றைய அபார்ட்மெண்ட் கலாச்சாரத்தில் ஓடி விளையாடுவதை விடுங்கள்.. உட்கார்ந்து விளையாடக்கூட இடமில்லாத அளவுக்கு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. டவர்கள் என்று அழைக்கப்படும் சில பெரிய குடியிருப்புகளிலாவது பரவாயில்லை. க்ளப் ஹவுஸ், சின்னக்குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்களுடன் கூடிய புல்வெளி என்று ஓரளவு வசதி இருக்கிறது. ஆனாலும் அங்கே ஓடியாடி விளையாட முடியாது. நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், மற்றும் தரைத்தளத்தில் இருக்கும் வீடுகளின் கண்ணாடிகள் உடைய வாய்ப்பிருப்பதால் சிறுவர்களை பந்து போன்ற பொருட்களை வைத்து விளையாட அனுமதிப்பதில்லை. நேரக்கட்டுப்பாடு இன்னொரு புறம்.. விளைவு, குழந்தைகள் வீட்டிலேயே அடைந்து கிடந்து டிவி முன் பழி கிடக்க ஆரம்பித்து விடுகிறார்கள்..

நவிமும்பையின் ஒரு பகுதியில் இருக்கும் குடியிருப்பில் அங்கே வசிக்கும் குழந்தைகள் குடியிருப்பின் காம்பவுண்டுக்குள் விளையாடினால் பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ஒரு அபத்தமான சட்டம் போடப்பட்டது. அங்கு வசிப்பவர்கள், "முதலில் விளையாடும் பகுதிக்கும் வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கும் இடையில் வலையாலான தடுப்பு ஒன்றை அமையுங்கள். அதை விட்டு குழந்தைகளைக் கட்டுப்படுத்தாதீர்கள்" என்று எழுப்பிய கடுமையான ஆட்சேபத்துக்கப்புறம் நிர்வாகிகள் பொருட்களை சேதப்படுத்தும் குழந்தைகளின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நிபந்தனையை மாற்றிக்கொண்டார்கள்.

வார இறுதிகளில் குழந்தைகளைச் சமாளிப்பதே பெரிய காரியம் எனும்போது பள்ளி விடுமுறைக்காலங்களில் அவர்களைக் கட்டிப்போட்டு வைக்க முடியுமா என்ன?.. அதே சமயம் மற்றவர்களுக்கும் தொந்தரவாக இருக்கக் கூடாதென்றால் அருகிலிருக்கும் பூங்காக்களுக்குச் செல்வதுதான் ஒரே வழி. குழந்தைகளுடன் பெற்றோரும் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டுமானால் இதுவரைக்கும் மும்பையின் எஸ்ஸெல் வேர்ல்ட், வாட்டர் கிங்டம், நிஷி லேண்ட் என்று ஆங்காங்கே இருக்கும் தீம் பார்க்குகளுக்குச் செல்வது வழக்கம். நவிமும்பையிலும் அப்படி ஒரு இடம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற பலரது ஏக்கம் சமீபத்தில் நெரூலில் செக்டர் 19Aயில்  திறந்து வைக்கப்பட்டிருக்கும் "வொண்டர்ஸ் பார்க்"கால் தீர்ந்திருக்கிறது.
பன்வெலில் இருந்து மும்பை செல்லும் சயான் ஹைவேயில் பேலாப்பூர் கடந்ததும், ஹைவேயிலிருந்து இடப்புறமாக "உரன்" என்ற ஊருக்குச் செல்லும் பாதை பிரியும். அதில் பயணித்தால் ஐந்து நிமிடத்திலேயே வலப்புறம் இருக்கும் பார்க் இதோ இருக்கிறேனென்று கண்களுக்கு அகப்படும். நான்கு டயர் மற்றும் இரண்டு டயர் வாகனங்களுக்கு தனித்தனி பார்க்கிங் வசதிகள் இருக்கின்றன. சார்ஜும் அதிகமில்லை, நான்கிற்கு ஐம்பதும், இரண்டிற்கு பத்து ரூபாயும் வசூலிக்கிறார்கள். டயருக்கு ஐந்து ரூபாயென்று நியாயமான கணக்கு வைத்துக்கொண்டாலும் கூட நான்குக்கு வசூலிக்கும் தொகை அதிகம்தான் :-)). விரும்பினால் பே பார்க்கிங்கில் நிறுத்தாமல் இலவச பார்க்கிங்கிலும் நிறுத்திக்கொள்ளலாம். ஆனால் மாநகராட்சி வண்டி வந்து எப்போது கவ்விக்கொண்டு போகுமென்று தெரியாது :-)
டிக்கெட் எடுத்து உள்ளே நுழைந்ததும், இருக்கும் பெரிய முற்றத்தில் விளையாடுவதற்காக ஒரு பெரிய க்யூபை வைத்திருக்கிறார்கள். விளையாடலாம் என்று ஆசையாகக் கிட்டே போனால், "ஊஹும்.. நாம அதுக்குச் சரிப்பட மாட்டோம்" என்று தோன்றி விட்டது. இவ்வளவு பெரிய க்யூபை வைத்து விளையாட வேண்டுமென்றால் அவ்வளவு பெரிய கை இருந்தால்தான் முடியும் போலிருக்கிறது. 

முற்றத்தின் இடது புறம் ஜயண்ட் வீல், ட்ராகன்(இதை ஆக்டோபஸ் என்றும் விளிக்கிறார்கள்) கப் அண்ட் சாஸர், அனைத்தும் குழந்தைகளுக்காகக் காத்திருக்கின்றன. இது தவிரவும் ஸ்கேட்டிங் மைதானம், ஊஞ்சல், கயிற்றுப்பின்னல் என்று மற்ற விளையாட்டுகள் அடங்கிய மைதானமும் இருக்கிறது. விளையாடும் குழந்தைகளை மேற்பார்வையிட்ட களைப்புத்தீர ஆங்காங்கே இருக்கும் கூடங்களில் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் இருக்கவே இருக்கின்றன புல்வெளிகளும் அதற்கு அருகாமையில் அமைந்த நீரூற்றுகளும்.படிக்கட்டுகளில் ஜிலுஜிலுவென்று வரும் காற்றையும், அதில் மிதந்து வரும் இசையையும் ரசித்தபடியே அரட்டையடிக்கலாம். நீரூற்றுகள் இருக்கும் பகுதியில் இந்தப்பக்கமிருந்து அந்தப்பக்கம் போக இருக்கும் பாலத்தில் நீரின் குளிர்ச்சியை அனுபவித்தபடி மக்கள் நகர மனமில்லாமல் நின்று கொண்டிருந்தார்கள். தண்ணீரைப் பார்த்ததும் விளையாட ஆசை வந்து பாயும் குழந்தைகளை படிக்கட்டுகளைத்தாண்டி தண்ணீரில் கால் வைத்து விடாமல் கண் காணித்தபடி விசில் ஊதி விலக்கிக்கொண்டே இருந்தனர் காவலர்கள். அதானே.. ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் யார் பதில் சொல்வது?. 

மனதாலும் வயதாலும் குழந்தையாய் இருப்பவர்களுக்காகவென்றே ஒரு பொம்மை ரயிலும் இங்கே ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்து ரயிலில் ஏறினால் பத்தே நிமிடத்தில் பார்க்கைச் சுற்றிக் காட்டிவிட்டு வந்து இறக்கி விட்டு விடுகிறார்கள். அநியாயமாய் இருக்கிறது :-)). ராட்டினம் போன்ற விளையாட்டுகள் இருக்கும் இடங்களிலும் இப்படித்தான் மணிக்கணக்கில் வரிசையில் நிற்பதைப் பார்க்க முடிந்தது. டிக்கெட் எடுக்கவும் மணிக்கணக்கில் இன்னொரு வரிசையில் நிற்க வேண்டியிருப்பதை இதில் சேர்க்கவில்லை :-)
சென்ற வருடம் டிசம்பர் 15-ம் தேதி முன்னாள் மராட்டிய முதல்வரும் இப்போதைய விவசாயத்துறை அமைச்சருமான திரு. சரத் பவாரால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தப் பார்க்கில் ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவிலிருக்கும் ஆம்பி தியேட்டர் முக்கியமான ஒன்று. மேலும் லேஸர் நிகழ்ச்சிகளுக்கான மைதானம் ஒன்றும் வரவிருக்கிறதாம். ஆம்பி தியேட்டரின் முன் இருக்கும் இயற்கைக் குளத்தில் எதிர்காலத்தில் நீர் நிரப்பி வைப்பார்கள்  என்று நம்புவோமாக. அப்படியே அந்த காஃபிடோரியாவையும் திறந்து வைத்தால் நல்லது. தவித்த வாய்க்கு ஒரு டீ,காபி கூட கிடைக்க வழியில்லை இப்போது. நொறுக்ஸ் வேண்டுமென்றால் வீட்டிலிருந்தே கொண்டு போனால்தான் உண்டு.

உடம்புக்கு நல்லதென்று ஆங்காங்கே ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, தர்பூசணிப்பழங்களும் வைத்திருக்கிறார்கள். உள்ளே அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம். அந்த வழியாக யாராவது வந்தால் அவர்களிடம் மொபைலையோ, காமிராவையோ கொடுத்து தங்களைப் போட்டோவும் எடுக்கச் சொல்லலாம் :-)
உட்கார்வதற்கான இருக்கையேதான் இது..


ஆம்பிதியேட்டரின் பின்பக்கம் ஒரு சின்ன குன்று போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் விளையாட்டுகளைக் குறிக்கும் சிற்பங்களை வைத்திருக்கிறார்கள். நவீன சிற்பங்கள் என்று வைத்துக்கொள்வோமே :-). செஸ் விளையாட்டுக்கான பிரம்மாண்டமான தளம் காத்துக்கொண்டிருக்க, ராஜா ராணி, குதிரைகளுக்கு அப்போதுதான் மேக்கப் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். துடைத்து, பெயிண்ட் ஸ்ப்ரே செய்து என்று நாலைந்து பேர் அந்த வேலையில் பிசி. பார்க்கைச் சுற்றி வந்த களைப்பில் அப்பாக்கள் புல்தரையில் பள்ளி கொண்டு விட அம்மாக்கள் ஓவர்டைம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.வேறென்ன,.. குழந்தைகளை கண்ணுக்கெட்டிய எல்லைக்குள் வைத்துக்கொள்வதுதான்..


அவுட்டிங் போய் வர சிறந்த இடம்தான், ஆனாலும் முழுக்க இன்னும் தயாராகவில்லை. இப்பொழுது நட்டு வைத்திருக்கும் மரக்கன்றுகள் நாலைந்து வருடங்களில் வளர்ந்து விருட்சமாகி விட்டால் இந்த இடத்தின் தோற்றமே மாறி அழகாகி விடும். நுழைவுச்சீட்டு எடுக்கும் இடத்தின் அருகிலேயே ரைடுகளுக்கான சீட்டுகளையும் எடுக்க வசதி செய்து விட்டால், 'அங்கே' காத்திருக்கும் நேரம் குறையும். அதேபோல் காஃபிடோரியாவும் இயங்க ஆரம்பித்து விட்டால் பொட்டுப்பொடிசுகள் வருமிடத்தில் நியாயமான விலையில் ஸ்னாக்ஸ், ஜூஸ், காபி, டீ கிடைக்க ஏதுவாக இருக்கும். வெளியே வந்ததும் பெற்றோர்கள் ரோட்டோரக்கடைகளை நோக்கித்தான் முதலில் செல்கிறார்கள். 

இந்தப் பார்க்கின் சிறப்பம்சமே இங்கே அமைந்திருக்கும் உலகின் புதிய ஏழு அதிசயங்கள்தான். அவை, அடுத்த இடுகையில் :-))))

Tuesday, 1 January 2013

இனிய வாழ்த்துகள்..

அல்லன நீக்கி நல்லன கொண்டு
மனிதம் விதைத்து மனங்களை வென்று
பொல்லாப்புல்லரை பூண்டோடொழித்து
நந்தவனமாய்க்குலுங்கிடவும்
சிறகசைத்துப்பறக்கவும்
புதுயுகம் படைத்திட பூத்ததொரு விடியல்
சென்றவற்றுக்குக் கையசைத்தும்
வருபவற்றுக்கு வாழ்த்துச்சொல்லியும்..

கொண்டாட்டமென்பது இன்றோடு முடிந்து விடாமல், இன்று என்பது இன்னொரு நாளாகி விடாமல்,மகிழ்ச்சி என்பது பண்டிகையின்போது மட்டுமே என்றாகி விடாமல்,புது வருடத்திற்கும், புது வாழ்க்கைக்குமாய்..


நட்புகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails