Sunday, 28 February 2010

ஹோலி ஹை!!!!!!!.கடைத்தெருவெங்கும் களை கட்ட ஆரம்பிச்சிடுச்சு.. எங்கும் கு(g)லால்,பலூன் பாக்கெட்டுகள்,கலர் தண்ணீரை மத்தவங்க மேல தெளிக்க பிச்காரி ன்னு சொல்லப்படும் பிஸ்டன்கள்,எல்லாம் வந்து இறங்கி, வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிச்சு விட்டது.தெருவில் போகும்போது, கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் போக வேண்டியிருக்கு. எங்கயிருந்து, எப்ப தண்ணீர் நிரப்பிய பலூன் வந்து விழும்ன்னு சொல்லமுடியாது. யாரும், திட்ட மாட்டோம். ஏன்னா!!! பூ(b)ரா நா.. மான்னா... ஹோலி..ஹே..!! (தப்பா நினைக்காதீங்க... ஹோலி வந்தாச்சு..)இதுதான் அதன் அர்த்தம்.


ஹோலி வடநாட்டுப்பண்டிகையா??.. இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம். தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறதே என்று நினைக்கிறீர்களா!!!.. சமீப காலமா கொண்டாடப்படறதைச் சொல்லலைங்க.. நாம காமன்பண்டிகைன்னு கொண்டாடுகிறோமே.. அதுதான் நம்மூரு ஹோலி. ஹோலின்னா எரித்தல்ன்னு அர்த்தம்... இப்ப தெளிவாயிட்டுதா!!!

திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளைப்பற்றித் தெரியும்தானே!!!. அவர் மன்மதனை எரித்ததும், ரதியின் வேண்டுகோளுக்கிணங்கி உயிர்ப்பித்ததும்ன்னு எல்லாம் கதைகள். இந்தச் சம்பவத்தின் நினைவா நம்மூரிலும் மன்மதனின் உருவபொம்மையை எரிப்பது வழக்கம்.

வட இந்தியாவுல ஹோலி பிரகலாதனோட சம்பந்தப்பட்டது. பிரகலாதன் தன்னை விட்டுட்டு, ஹரி நாமத்தை ஜபித்ததால் அவங்கப்பா ஹிரண்யகஷ்புக்கு கோபம் வந்துட்டுது. பின்னே.. வராதா!!!. 'அது எப்படி நீ இன்னொருத்தரை பெஸ்ட்'ன்னு சொல்லலாம்ன்னு அவருக்கு கோபம்.. பக்கத்துல உக்காரவெச்சி அட்வைஸ் கொடுத்துப்பாத்தார், பயமுறுத்திப்பாத்தார், ஒன்னும் வேலைக்காவலை!! :-((
கவுன்சிலிங் கொடுக்க வேற யாரு இருக்கான்னு பார்த்து ஒவ்வொருத்தரையா அழைச்சார். வந்தவங்களும் 'தம்பி, உங்கப்பா, நல்லவரு... நாலும் தெரிஞ்ச வல்லவரு, அவரை பகைச்சுக்காதே'ன்னெல்லாம் அட்வைஸ் பண்ணாங்க.. ம்ஹூம்.. பிரகலாதன் மசியலை..

பெத்த மகன்னு கூட பாக்காம, பிரகலாதனோட உயிருக்கே ஆபத்து விளைவிச்சும் பாத்தார்.. பயத்துலயாவது புள்ளை.. "ஹிரண்யகஷ்பாய நமஹ" ன்னு சொல்லிட மாட்டானான்னு ஒரு நப்பாசை. புள்ளை என்னான்னா அந்த ஆசையில ஒரு லோடு மண்ணைக்கொட்டிட்டு ' நாராயணாய நமஹ' ன்னு சொல்லுது!!! இது சரிப்படாது.. தங்கையுடையான் எதற்கும் அஞ்சான்னு நினைச்ச ஹிரண்யகஷ்பு ஓலை அனுப்பினார் தங்கை ஹோலிகாவுக்கு..

'ஹோலிகா'வும் 'அண்ணே.. கூப்பிட்டு விட்டியாமே? ஆள் வந்து சொல்லுச்சு' என்றபடி வந்து சேந்தா.. .அப்பாடா!!!..பண்டிகைக்கு பெயர்க்காரணம் வந்தாச்சு.. விபரத்தைச்சொல்லி 'நீயாவது புத்தி சொல்லும்மா' ன்னு அண்ணன் வேண்டுகோள் வைக்க, அவளுக்கும் தோல்விதான். கடைசி சந்தர்ப்பத்திலயும் தோல்வின்னதும் ரெண்டு பேருக்கும் கோபம் தாங்கல. போட்டுத் தள்ளிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி 'தங்கச்சி, ஒன்னோட வரம் இன்னும் active ஆகத்தானே இருக்கு' ன்னு உறுதி செஞ்சுக்கிட்டு ஏற்பாடுகளெல்லாம் செய்ய ஆரம்பிச்சாரு ஹிரண்யகஷ்பு.

ஹோலிகாவை தீ எரிக்காது என்பது அவளுக்குக் கிடைச்ச வரங்களில் ஒன்னு. இதைப்பயன்படுத்தி, பிரகலாதனை எரிச்சு, ஒழிச்சுடணும்ன்னு திட்டம். பாவம்.. சின்னப்பையன்னு கூடப்பாக்கலை.. தயாரா இருந்த சிதையில், அவனை மடியில் வெச்சிக்கிட்டு, ஹோலிகா உக்காந்துக்கிட, நெருப்பு மூட்டப்பட்டது. 'ஐயோ.. அம்மா' ன்னு ஒரு அலறல் குரல்.... அலறல் வளர்ந்து, எதிரொலிச்சு, பின் தேய்ந்து மறையுது. நெருப்பும், புகைமண்டலமும் மெல்லமெல்ல குறைஞ்சபின்னே பாத்தா!! இதென்ன!!!... பிரகலாதன் நெருப்பால் எந்தவித சேதாரமுமில்லாம, நிக்கிறான்.. ஹோலிகா சாம்பலாகிக் கிடக்கிறாள். பிரகலாதன் வாய் மட்டும் 'நாராயணாய நமஹ'ன்னு உச்சரிச்சுக்கிட்டிருக்கு. ஹிரண்யகஷ்புக்கு ஒன்னும் புரியலை.. அப்புறமாத்தான் தெரிய வருது.. ஹோலிகா தனியா நின்னா நெருப்பு அவளை ஒன்னும் செய்யாது. அப்படித்தான் வரம் கிடைச்சிருக்கு. அவளும் பிரகலாதனுமா ரெண்டு பேரா நின்னதால வரம் back fire ஆகிடுச்சு. வாங்கும்போதே terms and conditions ஐ பாத்து வாங்கியிருக்க வேண்டாமோ!!! கியாரண்டி, வாரண்டி பீரியட் ஒன்னும் பாக்காம வாங்கிட்டாங்க. இப்போ எக்ஸ்பயர் ஆயாச்சு.

இதுதான் ஹோலியும்,பெயரும் வந்த கதை. ஹோலி இங்கே இரண்டு நாள் பண்டிகை. முதல் நாள் ச்சோட்டி ஹோலி, ரெண்டாம் நாள் ப(b)டீ ஹோலின்னு கொண்டாடப்படுது. ச்சோட்டி ஹோலி அன்னிக்குக் காலையிலேயே பண்டிகைக்கான ஏற்பாடு ஆரம்பிச்சுடும். பில்டிங் முன்னாடி காலி இடத்திலும், தெருக்களிலுமா சின்னதா குழி தோண்டி வெச்சிடுவாங்க. அப்புறமா, தோகையுடனுள்ள கரும்பு ஒன்னும், இலைகளோட கூடிய சின்ன மரக்கிளை ஒன்னும் முதல்ல நடுவாங்க. பச்சை மரம் ஹோலிகா உயிரோட எரிஞ்சதை குறிக்குமாம். அப்புறம், அதைச் சுத்தி, பெரிய பெரிய மரத்துண்டுகள், விறகுகள், வரட்டி, எல்லாம் அடுக்குவாங்க. கடைசியா பூமாலை ஒன்னும், ஹோலிக்குன்னே கிடைக்கிற சர்க்கரை மாலை ஒன்னும் போடுவாங்க.


bonfire க்கான ஏற்பாடுகள்.
ஹோலிக்கு நைவேத்தியமா பூரண்போளி, பாப்டி, குஜியா(சோமாஸ் அல்லது கரஞ்சி) மற்றும் அவரவர்க்கு வசதிப்பட்டதைச் செய்து, ஆரத்தித் தட்டில் அடுக்கி கொண்டு சென்று பூஜை செய்வார்கள். சில இடங்களில் சத்ய நாராயண பூஜை செய்வதுமுண்டு. பின் கலசத்திலிருக்கும் நீரை bonfire ஐ சுற்றி வலம் வந்து கொண்டே, தரையில் ஊற்றிக்கொண்டு வருவார்கள். கடைசியா, தட்டிலிருக்கும் தேங்காயை, bonfire ல் போட்டு விடுவார்கள். கூட்டத்தில் வயதில் பெரியவரை அழைச்சு, அவர் கையாலே நெருப்பிடச்செய்வார்கள். bonfire எரியும் நிகழ்ச்சிக்கு 'ஹோலிகா தகன்' என்றே பெயர். நெருப்பு எரியும் போது, எல்லோரும் ஒருவரை ஒருவர், 'ஹோலி ஹை'ன்னு சொல்லி வாழ்த்திக்குவாங்க. ஆரத்தி தட்டிலிருக்கிற, மஞ்சள்,குங்குமம், குலாலை ஒருவருக்கொருவர் இட்டுக்குவாங்க. இன்னிக்கு கலர்ப்பொடியை சின்னப் பசங்க மட்டும் பூசிக்குவாங்க. நெருப்பிலிடப்பட்ட தேங்காய்கள் சில சமயம் வெடித்துச்சீறிக்கொண்டு தீக்கு வெளியே வந்து விழும். சுட்ட தேங்காயை துண்டுகளாக்கி எல்லோருக்கும் பிரசாதமா கொடுப்பாங்க.

மறுநாள் எப்போ விடியும்ன்னே காத்திட்டிருப்பாங்க. காலை நாஷ்டா ஆனதும்,கிளம்பிடுவாங்க. முகம், கை கால்களில் தேங்கா எண்ணெய் தேய்ச்சுக்குவோம். அப்படித்தேய்ச்சுக்கிட்டா கலர்ப்பொடிகள் ஒரு அளவுக்கு மேல் ஒட்டாதில்ல. அதுக்குத்தான். ஒருவர் வீட்டிலிருந்து புறப்ப்பட்டு, இன்னொருவர் வீட்டுக்குப்போய் அவரை அழைச்சிக்கிட்டு அடுத்தவரை அழைக்கப் போறதைப் பாத்தா நம்ம ஆண்டாளம்மா மார்கழி நீராட கிளம்பினமாதிரிதான் தோணும். வீட்டுக்கு வர்றவங்களுக்காக ஏதாவது பலகாரமும் செஞ்சு வெச்சிருப்பாங்க. பில்டிங்குகளில் எல்லோருக்கும் பொதுவா, கலர்ப்பொடிகள், ஸ்நாக்செல்லாம் அரேஞ்ச் பண்ணியிருப்பாங்க. கலர்ப்பொடி பூசாத முதல் நாள் கணக்கையெல்லாம் இன்னிக்கி நேர் பண்ணிடுவாங்க. கையில் யார் அகப்பட்டாலும் அவங்களுக்கு வேஷங்கட்டிட்டுதான் விடுவாங்க. நம்ம பிள்ளைங்களையே குரலை வெச்சித்தான் அடையாளம் காணணும். மிகையா இருந்தாலும் இதுதான் உண்மை.. சில இடங்களில் ஹோலி ஸ்பெஷலா பாங் என்று சொல்லப்படற ஒருவகை பானமும் இருக்கும். அதைக்குடிச்சிட்டு சிலபேர் பண்ற அலப்பறை இருக்கே...

தண்ணி வசதி நிறைய இருக்கிற பில்டிங்குகளில் ரெயின் டான்செல்லாம் கூட நடக்கும். இந்த தடவை அதுக்கு ஆப்பு வெச்சிட்டாங்க. மும்பையில் சம்மரில் வரும் தண்ணீர் தட்டுப்பாடுதான் இதற்கு காரணம். குடிக்கிற தண்ணியை இப்படியெல்லாம் சீரழிக்கிறதான்னு மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வு வந்திருக்கு.எப்போதும் உள்ள அளவை விட குறைச்சலாத்தான் ஹோலி அன்னிக்கி தண்ணி சப்ளை செய்யப்படுமாம். நோட்டீஸே வந்தாச்சு..மக்கள் கொஞ்சம் முணுமுணுத்தாலும் ஏத்துக்கிடுவாங்க. ஹோலி வந்தாச்சுன்னா சம்மர் ஆரம்பிச்சாச்சுன்னு அர்த்தம். அடிக்கிற வெயிலுக்கு தண்ணியில ஊறினா நல்லாத்தான் இருக்கும்.

Eco friendly holi ன்னு இப்ப புதுசா பிரச்சாரம் பரவிக்கிட்டிருக்கு. ஹோலிகா தகனுக்காக நிறைய மரங்கள் வெட்டப்படுறதால மரங்களோட எண்ணிக்கை குறையுதில்லையா?? இப்ப இருக்கிற மாசுபட்ட சூழலுக்கு, இன்னும் மரங்கள் குறைஞ்சா எப்படி!!! அதனால ஒரு வேண்டுகோள் விடுத்திருக்காங்க.. எல்லோருக்கும் பொதுவா, ஒரு இடத்தில கொண்டாடினா bonfires எண்ணிக்கை குறையுமே..அதுவும், நல்லா இருக்கிற மரங்களை வெட்டாம, காய்ஞ்சு விழுந்துபோன மரம், மற்ற வேஸ்ட்டுகள் இதெல்லாம் உபயோகப்படுத்தலாமாம். அதுக்காக டயர், ப்ளாஸ்டிக்கெல்லாம் போடணும்ன்னு அர்த்தமில்லை. அது இன்னும் மோசமாச்சே!!

இதில் கலர்ப்பொடிகளை முக்கியமா சொல்லணும்.கண்ட கெமிக்கல்சையும் உபயோகப்படுத்தி தயாரிக்கப்படுற லிக்விட் கலர், கலர்ஸ்ப்ரே, சில்வர்,தங்கக்கலர்ன்னு கண்டதையும் உபயோகிக்கிறாங்க. விளைவு... சருமத்தில் அலர்ஜி, பருக்கள், தோல் சொரசொரப்பாதல்ன்னு பக்கவிளைவுகள். இதெல்லாம் ஆயிலை அடிப்படையா கொண்ட கலர்கள். பவுடர் கலர்கள் அவ்வளவா சேதம் விளைவிப்பதில்லை. என்னதான் ஹோலி விளையாடப்போகும்முன் தேங்காய் எண்ணெய்யை தேய்ச்சுக்கிட்டு போனாலும், ஒட்டறது ஒட்டத்தான் செய்கிறது..

ஹோலி ஸ்பெஷல் பாட்டு ஒன்னு கேளுங்க..

இவர் இல்லாம ஹோலி கொண்டாட்டமா!!!.. நோ ச்சான்ஸ் :-))).
"ஹேப்பி ஹோலி."

Wednesday, 24 February 2010

உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..


மஹாராஷ்ட்ராவில் 23-பெப்ரவரியிலிருந்தும், தமிழ் நாட்டில் மார்ச் ஒன்னாம் தேதியிலிருந்தும் பரீட்சை சீசன் ஆரம்பிக்கவுள்ளது.மொதல்ல பன்னிரண்டாம் வகுப்புக்கான பரீட்சைகளும்,அப்புறம் பத்தாம் வகுப்புக்கான பரீட்சைகளும் அதை தொடர்ந்து entrance exam களும் வரிசை கட்டி வரப்போகுது. (எங்க வீட்டிலும் திருவிழா உண்டு).

அட்வைஸ் கேட்டுக்கேட்டு காது புளிச்சுபோயிருக்கும்.. ஸோ.. நோ அட்வைஸ். உங்களுக்கு தெரியாததா என்ன! :-)))). இருந்தாலும் நானும் ஒரு பெற்றோர் என்ற முறையில்.. உங்களோடு கொஞ்ச நேரம்..

  • பரீட்சைக்கு முதல் நாளே ஹால் டிக்கெட், பேனா, ரீஃபில், பென்சில்,(தேவைப்பட்டால் கொஸ்டின் பேப்பரில்,ச்சாய்ஸ் கேள்விகளை குறித்துக்கொள்ள)ரப்பர், கணித உபகரணங்கள்,இன்னபிற(பிட் இல்லை)வற்றை சரிபார்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.காலையில எந்திரிச்சு, ஓடாதீங்க.

  • எக்ஸாம் சென்டரில் குறைந்தது இருபது நிமிடம் முன்பே இருப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்க. தேவையற்ற டென்ஷனை இது தவிர்க்கும்.

  • முக்கியமான விஷயம், காலை ஆகாரத்தை தவிர்க்கவேண்டாம். ஏதாவது லைட்டாகவாவது எடுத்துக்கொள்வது நல்லது. அட்லீஸ்ட் ஃப்ரூட் சாலட்,வெஜிடபிள் சாண்ட்விச் ஏதாவது எடுத்துக்கோங்க.மூளை சோர்வடையாம இருக்கும்.

  • அணியும் உடைகள் இறுக்கமாக அசௌகரியமாக இல்லாம பாத்துக்கோங்க.கோடை ஆரம்பிச்சுட்டதால பரீட்சை எழுதும்போது வேர்த்து வழிஞ்சு,கவனம் சிதறி அவஸ்தைப்பட வேண்டாம்.

  • முக்கியமான ஒன்று.. வீட்டுக்கு வந்தப்புறம் கொஸ்டின் பேப்பரை கையில் வெச்சிக்கிட்டு,விடைகள் கரெக்டா தப்பான்னு, உங்களுக்கு நீங்களே மார்க் போடவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. அடுத்த நாளே வேற பேப்பருக்கான எக்ஸாம் இருந்தா இது நம்ம மனவுறுதியை அசைச்சு பாக்க வாய்ப்பு இருக்கு. தைரியமானவங்களை இந்த லிஸ்டில் சேக்கலை :-)))

  • ஆன்ஸர் ஷீட்டை திரும்ப கொடுக்கும்போது சரியா கட்டியிருக்கீங்களான்னு சரிபார்த்துக்கோங்க. பேப்பர் ஏதாவது விட்டுப்போச்சுன்னா அப்புறம் ஐயோன்னாலும் வராது.. அம்மான்னாலும் வராது. உங்க வாழ்க்கை உங்க கையில்.

  • அனைவருக்கும்(என் பொண்ணு உட்பட),எதிர்காலம் ஒளிமயமாக சிறக்க, பதிவுலகம் சார்பாக எங்க வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.


ENJOY THE EXAMS.Monday, 22 February 2010

விடை பெறுகிறேன்..

ஊருக்கு புறப்படும்போது இருக்கிற உற்சாகமும், சுறுசுறுப்பும் ஏனோ அங்கிருந்து திரும்பும்போது, குறைஞ்சுதான் போகிறது.இந்த நாள் இப்படியே இன்னும் கொஞ்ச நேரம் நீண்டுகிட்டே போகாதான்னு இருக்கு...ஆனா, நம்மை மாதிரி ,வெளியூரிலோ, வெளி நாட்டிலோ இருக்கிறவங்க வாழ்க்கை,தவளை வாழ்க்கையாயில்ல இருக்கு.. எங்கியுமே கொஞ்சநாள் நல்லாத்தான் போகுது,.. அப்புறம் தூரத்துப்பச்சைதான் கண்ணுக்கு குளுமையா இருக்கு.

ஊருக்கு போகும்போதெல்லாம், எல்லோரும் மறக்காம சொல்றது..'இந்தப்பக்கம் மாத்தலாகி வந்துடுங்க',. நாங்களும் மறக்காம சொல்றது,.. 'ஆகட்டும் பார்க்கலாம்'.இந்த தடவை, ரங்க்ஸும் கொஞ்சம் யோசிக்கிற மாதிரி இருந்ததைப்பாத்ததும்,..என் பங்குக்கு நம்ம shifa வைப்பத்தி சொல்லி வெச்சேன். போனதடவை ஊருக்கு போனபோதே,அதை பார்க்கும்போது .. அட!! நல்லா இருக்கே!!ன்னு தோணிச்சு. அப்புறம், துளசி அக்காவோட பதிவுல அதைப்பாத்துட்டு அப்பவே, ரங்க்ஸ் காதுல போட்டு வெச்சாச்சு.. இப்ப, அதை நேரில் போய் பார்க்க நேரம் இல்லாததால்,போனில் விசாரிச்சுக்கிட்டோம்.

k.t.c. நகரில் நல்ல வீட்டுமனைகள் இருக்காம். அங்கே இருக்கிற அண்ணி கொடுத்த தகவல் இது. இருந்தாலும்.. 'வீட்டைக்கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்'..,..'யானை அசைந்து தின்னும்..வீடு அசையாம தின்னும்'....பயமுறுத்தறதுக்குன்னே பழமொழிகளை சொல்லி வெச்சிட்டாங்களே ....கல்யாணம் கூட இப்பல்லாம் ஈஸி போலிருக்கு.வீடு கட்டுறதுதான்.. அம்மாடி!!!
ரெடியா வாங்கிட்டா பிரச்சினை இல்லை பாருங்க.. இன்னும் குறைஞ்சது பதினஞ்சு வருஷம் கழிச்சு வரும்போது, இன்னும் நல்ல மாடலா கிடைக்காதா என்ன!!.

இந்த பத்து நாளும் நேரம் போனதே தெரியலை.. ஊர் சுத்துறதும், மிச்ச நேரத்துல தம்பிகளின் மகள்களுடன் விளையாடுவதுமாக சந்தோஷமாக கழிஞ்சது. அதிலும் ஆறுமாதப்பூ ஒன்னு 'அத்தைமடி மெத்தையடி' என்று கீழே இறங்கவே இல்லை. மெஹந்தி, என்னுடைய முறையில் மஹாராஷ்ட்ரா ஸ்பெஷல் கிச்சடி என்று கவனித்ததில் மருமகள்கள் மெச்சிய மாமியாராகிப்போனேன்.

மறுநாள் காலை, ஒரு கூட்டுக்கிளிகள் அவரவர் தோப்பைத்தேடி பறக்கத்தயாரானோம்.தயாராகி, வரும் வழியிலேயே லஷ்மி விலாசில் அல்வாவும், திருவிழா மிட்டாய் என்று ஊர் வழக்கிலும், சுத்துமிட்டாய் என்று என்வழக்கிலும், சொல்லப்படும் ஸ்வீட்டையும் வாங்கிக்கிட்டோம். திருவிழாக்கடைகளில் ஒரு பெரியவட்டமா அதை சுத்தி வச்சிருப்பாங்க. ராவணன் சபையில், அனுமார் தன்னோட வாலையே சுத்திவெச்சு, சிம்மாசனமா உக்காந்திருப்பாரில்லையா..அதை கற்பனை செஞ்சுக்குங்க. அதுமாதிரிதான் இதுவும் இருக்கும்.

ஸ்டேஷன் வந்து, பிளாட்பாரத்தில் நின்னாச்சு.. கரெக்டா 8.30 க்கெல்லாம் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி ஜங்க்ஷனுக்குள் மூக்கை நீட்டியது.இருக்கை தேடி, பெட்டிகளை ஒழுங்கு செஞ்சுட்டு,வழியனுப்ப வந்தவங்ககிட்ட 'போயிட்டு வரோம்'ன்னு சொல்லி நிமிரவும் வண்டி கிளம்பியது.

நேரப்போக்குக்கு துணையா கள்ளிக்காட்டு இதிகாசம் இருந்தது. மதுரை வைகைப்பாலத்துக்கு மேலே வண்டி ஓடும்போது மனசு ஒரு நிமிஷம் வைகைஅணைக்கு போய்வந்தது. இதைப்போல எத்தனை எத்தனை இதிகாசங்கள் ஒவ்வொரு அணைக்கட்டுக்குப்பின்னாலும் இருக்குமோ....

மறு நாள் மதியத்துக்கெல்லாம் மஹாராஷ்ட்ரா எல்லைக்குள் வந்துவிட்டோம். 'ஷோலாப்பூர்' பெட்ஷீட்டுகளுக்கு பெயர் போனது. அதை தாண்டியதும் வரிசையாக கரும்புவயல்கள், புஞ்சை நிலப்பயிர்கள்...சோளம்,கம்பு,தினை எல்லாம் விளைஞ்சு நிக்கிது. இங்கே அதை மாவாக்கி ரொட்டி செய்வார்கள். நம்ம ஊரில் இப்ப இதெல்லாம் கிடைக்குதான்னு தெரியல்லை.பூனா வந்ததும் ரங்க்ஸுக்கு போன்பண்ணி, எங்கிருக்கோம்ன்னு சொல்லியாச்சு.suburban மும்பையின் முதல் ஸ்டேஷன் 'கல்யாண்'. அங்கியே இறங்கிக்கலாம்ன்னு முடிவு செஞ்சோம்,

பூனாவிலிருந்து வேறு எஞ்சின் மாற்றப்பட்டு வண்டி பயணத்தை தொடரும்.லோனாவாலா,(லோனாவ்லா என்று இங்கே சொல்வார்கள்) போன்ற மலைப்பகுதிகளில் போகும்போதே ஹாலிடே மூடு வந்துவிடுகிறது.பக்கத்திலிருக்கும் கண்டாலாவும் இதுவும் ஹனிமூன் ஜோடிகளின் ஃபேவரிட்.இரவு நேரங்களில் அங்கிருந்து பார்க்கும்போது கர்ஜத்,கசாரா பகுதிகளின் மின் விளக்குகள் நட்சத்திரங்கள் போல் ஜொலிக்கும். "தொலைதூரம் தோன்றும் ஊரிட்ட மின்விளக்கோ விண்மீன் கூட்டம்"ன்னு வரிகள் ஞாபகம் வருதா!!! .(உவமைக்கவிஞர் சுரதா ன்னு ஞாபகம்). 'லோனாவாலா சிக்கி' புகழ்பெற்றது. கடலை, எள், பாதாம், கலவைபருப்புகள்ன்னு நிறைய வெரைட்டி கிடைக்கும்.

சுட்டதில் 'சிக்கி'' யது.
லோனாவ்லாவின் அழகிய தோற்றம்
அம்பர்'நாத்' வருதுன்னு மாசுபட்ட காற்றின் 'வாசனை'யே சொல்லிடும். அப்புறம் வர்ற உல்லாஸ் நகர், நான் மட்டும் என்ன எளப்பமா!!ன்னு அதோட பங்குக்கு உல்ஹாஸ் நதியோட வாசனையை சேர்த்து பரப்பும். ஒருகாலத்துல அது ஆறா இருந்ததுன்னு சத்தியம் செஞ்சாக்கூட யாரும் நம்பமாட்டாங்க. தொழிற்சாலைக்கழிவுகளை சுமந்து கொண்டு கரேல்ன்னு ஓடிக்கிட்டிருக்கு.தண்ணியை பழிக்கப்பிடாதுன்னு சொல்வாங்க.. சுயநலத்துக்காக மனுஷன் கொடுத்த விலைகளில் இதுவும் ஒன்னு....

கல்யாண் வந்து சேரும்போது மணி 7.40. ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து, சூடா ஒரு ச்சாய் குடிச்சிட்டு,பத்திரமா வந்து சேர்ந்ததை சொந்தங்களுக்கெல்லாம் சொல்லிட்டு, பக்கத்து தெருவில் விட்டிருந்த காரை எடுத்துக்கிட்டு(ஸ்டேஷனில் எதிர்க்க ஸ்கைவாக் கட்டிக்கிட்டிருக்காங்க ரெண்டு வருஷமா...எனவே அங்கே நோ பார்க்கிங்)வீடு வந்து சேர்ந்தோம்.ரங்க்ஸ் ஏற்கனவே சூடா சாப்பாடு தயார் செஞ்சு வெச்சிருந்தார்.தினமும் கிடைக்காதே!!!..ஸோ.... எஞ்சாய்...:-))

இவ்வளவு நாள் கூடவே வந்து ஆதரவு தந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி.._/\_.. பயணக்களைப்புல குறட்டை விட்டு தூங்கிடாதீங்க... அப்பப்ப வரணும்.:-))

Thursday, 18 February 2010

முத்து நகர் எக்ஸ்பிரஸ்...

எதிர்பாராத விதமா பரிசொன்னு கிடைச்சா மனசு குதியாட்டம் போடுமா இல்லையா?... அப்படித்தான் இருந்தது இந்த தூத்துக்குடி பயணம்.

நெல்லையில் ஹோட்டல் ஜானகிராமின்,அயோத்யா கான்ஃப்ரன்ஸ் ஹாலில் வெச்சு, உடன்பிறப்பின் மனைவிக்கு வளைகாப்பு,சீமந்தம். விசேஷமெல்லாம் நல்லபடியா முடிஞ்சு,தூத்துக்குடியிலிருக்கும் ,அவுங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. மறு நாள் நாங்க குடும்பத்தோட,அவுங்க வீட்டுக்கு போறதா பிளான் செஞ்சதும் ,பீச்சுக்கு போகணும்ன்னு பசங்க தீர்மானம் நிறைவேத்திட்டாங்க.

நகர எல்லையிலேயே 'சிப்காட்' வரவேற்கிறாங்க.வலதுபுறம் திரும்பி ஸ்பிக் நகர் போனோம். கொஞ்ச தூரத்திலேயே உப்பளங்கள்.சிலவற்றில் விளைந்த உப்பை குவிச்சு வெச்சிருக்காங்க.தம்பி மனைவி வீட்டிலிருந்து, சுமார் எட்டு கிலோமீட்டரில் பீச் இருக்குது. மாமா வழிகாட்ட எங்கள் வண்டி அவரைத்தொடர்ந்தது. துறைமுகம் போயி ,குட்டிப்பசங்களுக்கு கப்பல்களை காட்டலாம்ன்னா... இப்போ அனுமதி இல்லையாம்.உப்பளங்கள்.
மெயின் ரோட்டில் பயணிகள்மாதா ஆலயத்தின் எதிரே வலதுபுறம் திரும்பணும் .ரெண்டே எட்டில் தெர்மல் நகர் கடற்கரைக்கு வந்துட்டோம்.வண்டியை பார்க் செஞ்சுக்க இடம் இருக்கு.இந்தப்பகுதியில் 'மன்னார் வளைகுடா' என்று அழைக்கப்படுகிறது. மன்னார் வளைகுடாவில் 3600 வகை கடல்வாழ் உயிரினங்கள் இருக்காம்.

கடற்கரையில் அவ்வளவா கூட்டமில்லை. வித்தியாசமான சில வாகனங்கள், விதவிதமான மனிதர்கள். ஒரே ஒரு தெரிஞ்ச முகம்..சங்கிலி முருகன் அவர்கள்.'ஆனந்த் சினி ஆர்ட்ஸ்'ன்னு ஒரு வாகனத்தில் எழுதியிருக்கு.சினிமா ஷூட்டிங் நடக்குதா!!!கிரேன் ஒன்னை கஷ்டப்பட்டு ஒரு வாகனத்தில் ஏத்திக்கிட்டிருக்காங்க. இதென்ன கலாட்டா!!!!அதுக்குள்ளயா சுட்டுத்தள்ளிட்டாங்க!!!. ஹீரோ?,ஹீரோயின்?....யாரு!!.சுண்டலுக்கு தெரியாத கடற்கரை ரகசியமா?.. விசாரிச்சா போச்சு...

'சுறா'படத்தோட ஷூட்டிங்காம். அச்சச்சோ!!!! வட போச்சே.... 'விஜய்,தமன்னா' ஜோடியாமுல்ல....தேடுனா கிடைக்கல,கிளம்பிட்டாங்க போலிருக்கு.

நம்ம ஹீரோயின்...மன்னார்குடா கடலை நாலைஞ்சு போட்டோ எடுத்துட்டு,கிளம்பினோம். குட்டிப்பசங்களுக்கு கடலைவிட்டு வரவே மனசில்லை.கடலன்னையின் மடியில் வாழ்க்கை நடத்தும் எளிய மனிதர்கள் அன்னிக்குண்டான வாழ்க்கையைத்தேடி,புறப்பட்டுக்கிட்டிருக்காங்க. பரவாயில்லை... படகுகளை பார்க்கிங் செஞ்சுக்க கடலில் தாராளமா இடமிருக்கு.


தண்ணீரில் வாழ்க்கைப்படகு.
மஞ்சள் வெயில் மாலைப்பொழுது.
கடற்கரையிலிருந்து பாத்தா தெர்மல் பவர் ஸ்டேஷன் தெரியுது.. இப்பத்திக்கு நாலஞ்சு யூனிட் இருக்கு.. இரண்டாயிரம் மெகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுது.

குட்டிப்பசங்களை கூட்டி வர்றவங்க கொஞ்சம் ரிலாக்ஸ் செஞ்சுக்க பக்கத்திலேயே துறைமுகசபையின் 'குழந்தைகள் பூங்கா' இருக்கு. தண்ணியில விளையாட பயப்படும் குழந்தைகளை இங்கே விடலாம்.ஆனா.. இங்க தரையிலயுமில்ல கண்டம் இருக்கு. விளையாட்டு உபகரணங்களான ஊஞ்சல், சறுக்குமரம்,இன்னபிற எல்லாம் உடைஞ்சும்,நெளிஞ்சும் துருப்பிடிச்சும் போய் கிடக்கு. பசங்களை விளையாட விட்டா,போர்க்களத்திலிருந்து வர்ற வீரனைப்போல ரத்தம் பாக்காம வரமுடியாது.பராமரிப்பு சரியில்லை போலிருக்கு.புதுப்பிக்கும் வேலை ரொம்ப மெதுவா நடக்குதுன்னு மாமா சொன்னாங்க.செடிகள் கூட இப்பத்தான் வளர ஆரம்பிச்ச மாதிரி இருக்கு.
ஒன்னும் கண்டிக்க முடியாம, டாக்டர் அம்பேத்கர், சிலையா நின்னுவேடிக்கை பாத்துக்கிட்டிருக்கார்..பாவம்.

ரெண்டு இரும்புக்கம்பிகளை, பெருக்கல்குறி மாதிரி ,இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் நட்டு வெச்சி, அதுகளை இணைச்சு செஞ்சிருக்கிற ஒரு 'வலை' ப்பாடு நல்லா இருக்கு. தூத்துக்குடியின் மீன்பிடித்தொழிலின் சிறப்பை சிம்பாலிக்கா சொல்றமாதிரி வெச்சிருக்காங்க.
வலை போட்டு பிடிக்கிறாங்க.
கிளம்ப மனசில்லாம மறுத்த குட்டிப்பசங்களை, பிடிச்சுப்போட்டுக்கிட்டு வீட்டுக்கு கிளம்பினோம்.மறு நாள் ரங்க்ஸும், பெண்ணும் மும்பை திரும்பணும். மூட்டை முடிச்செல்லாம் கட்டணும்.வீட்டுக்கு போனதும், பெண்ணும் ரங்க்ஸுமா மடமடன்னு பெட்டி கட்டி வெச்சிட்டு, தூங்கப்போயாச்சு.

மறுநாள் காலை பதினொன்னரைக்கு வீட்டிலிருந்து கிளம்பியவர்கள், இரவு ஒன்பதரை வாக்கில் தான் மும்பை வந்து சேர்ந்தார்களாம். கொச்சியில் ஒரு ஸ்டாப் இருந்ததால் அங்கியே ஒரு மணி நேரம் இருக்கவேண்டியதாப்போச்சாம்.

எனக்கும் பையருக்கும், ரெண்டாம் தேதி நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் ரிசர்வேஷன். இடையில் ஒரு நாள்தான் இருக்கு. எங்கயும் போகாம ரெஸ்ட் எடுக்கணும்ன்னு பையரோட விருப்பம்.எனக்கும் இன்னும் கொஞ்சம் ஷாப்பிங் பாக்கி இருக்கு. வந்ததிலிருந்து இணையம் பக்கம் வர முடியல்லை. ஒரே ஒரு நாள் டாட்டாவின் வயர்லெஸ் இணைப்பு கிடைச்சுது. அவ்வளவுதான்.... அப்புறம் நவராத்திரி கொலு பொம்மைகள் நெல்லையப்பர் கோவிலின் வெளியே கிடைக்கும். நல்லதா ஏதாவது வாங்கணும்.

திரும்பி வரும்போது வ.உ. சி. மைதானத்துக்கு எதிரே.. நெல்லை ஆன்லைன்சின் 'ciber cafe'. இணையத்தை கொஞ்ச நேரம் கண்டுகிடலாம்ன்னா இணைப்பு ரொம்ப மெதுவா வருது. பதில் போடலாம்ன்னா தமிழ் fonts இல்லை. சுரதாவை download செய்யலாம்ன்னா லேசில் ஆகிற வேலையா தெரியல்லை. எ.கொ.ச.இ. ன்னு வெறுத்துப்போய் தரைத்தளத்தில் இருக்கிற "ஈகிள் புக் செண்டர்'க்கு வந்தோம்.

எல்லாத்துறை ஆட்களுக்கும் தேவையான எல்லா புத்தகங்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்குது. குழந்தைகளுக்கான ஆக்டிவிட்டி புத்தகங்களும்,சிடிக்களும் கொட்டிக்கிடக்குது.' நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்' இணையத்தில் தேடிப்பாத்து கிடைக்காம இருந்தது, இங்கே கிடைச்சது. இதைத்தான் கிடைக்கணுங்கிறது கிடைக்காம போகாதுன்னு சொல்றாங்களோ?...

நாளைக்காலை ட்ரெயினில் கிளம்பணும்.. பெட்டி கட்டணும்..வ்வர்ட்டா....

இங்கே கொஞ்சம் படங்கள் இருக்கு.

Tuesday, 16 February 2010

தைப்பூசமும்... ஆரெம்கேவியும்..


இன்னிக்கு காலை விமானத்தில் ரங்க்ஸும், பெண்ணும் வர்றதா ஏற்பாடு. நாலரைக்கெல்லாம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து சேர்ந்துட்டாங்க. ஃப்ரீ பெய்டு டாக்ஸி மூலம் வந்துடுவாங்க.ரெண்டே நாள்தான் ஊரில் தங்கல்ன்னாலும், ப்ளான் மட்டும் எக்கச்சக்கமா போட்டு வெச்சாச்சு. இதில் சில இடங்கள் விட்டுபோனது வேறு விஷயம்.

பையரை பாஞ்சாலங்குறிச்சி, எட்டையபுரம், ஓட்டப்பிடாரம், குற்றாலம் எல்லாம் கூட்டிப்போவதா நினைச்சிருந்தேன். நெனச்சதெல்லாமா நடக்குது.... இதுவும் நடக்கலை. சின்னப்புள்ளைல சொன்ன கதைகளை வெச்சு, பையர் அதெல்லாம் பாக்கணும்ன்னு ஆர்வமா இருந்தார். அடுத்த தடவை போனா ஆச்சு...

இன்றைய நிகழ்ச்சி நிரலில்,முதல்ல விடு ஜூட்..... வாசுதேவ நல்லூருக்கு.உறவினரை பாத்துட்டு அப்படியே ,திருநெல்வேலிக்கு வந்து கொஞ்சம் ஷாப்பிங்கும் செய்யணும்.

ஒரு வாரம் முன்னாடிதான் மழை பெஞ்சிருந்ததால் வெக்கை ரொம்ப இல்லை. வழியெங்கும் தைப்பூசத்திற்காக நடந்தே செல்லும் பக்தர்கள் கூட்டம்.கூடவே ஒரு வண்டியில் அவங்களுக்கு வேணுங்கிற சாப்பாடு,செஞ்சு கொடுக்கிற ஆட்கள் இன்னும் தேவையான பொருட்கள் போகுது.வண்டியில போறவங்க முன்னாடியே போய் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து சமைச்சு வெச்சிகிட்டு காத்திருப்பாங்க. நடைபயணம் போற ஆட்கள் வந்ததும் சாப்பிட்டுட்டு கொஞ்சம் ஓய்வும் எடுத்துகிட்டு கிளம்பிடுவாங்க.இதேமாதிரி இங்கேயும் ஷிர்டி சாயிபாபாவை தரிசிக்க நடைப்பயணம் போவாங்க.சில பேர் பால்கி அதாவது பல்லக்கில் சாயிபாபாவின் உருவப்படமோ,சிலையோ வெச்சு எடுத்துகிட்டு போவாங்க. ஊரூருக்கு ஒரே வழக்கம்தான் போலிருக்கு.

கந்தனுக்கு வேல்..வேல்..
அங்கங்க தாகத்தை தணிக்க நல்ல இளநீர் கிடைக்குது. நகரங்களில் வரும் காஞ்சுபோன காயா இல்லாம 'இள'நீரா இருக்குது.பொதுவா தள்ளுவண்டிகளில் குவிச்சி வெச்சிருப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். இங்க வித்தியாசமா தூக்குல போட்டிருக்காங்க. நல்ல ஒரு ஐடியா.. தரையில வெச்சா அப்பிடியே வளர்ந்து மரமாயிட்டா என்னாகிறது.!!!!.வாழைப்பழத்தை பாதுகாக்க கிராமங்களில் ஒரு டெக்னிக் செய்வாங்க. முதல்ல துணி காயப்போடுற மாதிரி நீளமா ஒரு கொடி கட்டுவாங்க, அதுல வாழைப்பழத்தை சீப்பு சீப்பா வெட்டி ,கோர்த்து வெச்சிடுவாங்க. பார்க்க, கொடியில பழத்தை காயப்போட்டது மாதிரி இருக்கும், ரொம்ப நாள் அழுகிப்போகாம இருக்கும்.

எளனீ... எளனீ.

திருநெல்வேலிக்கு போய் ஆரெம்கேவிக்கு போகாம வந்தா யாத்திரை பூர்த்தியாகாதுன்னு, புளுகியபுராணம் சொல்லுது. இல்லையின்னா... பரிகாரமா 51 புடவை எடுத்து தங்ஸம்மனுக்கு படையல் வெச்சாகணுமாம். எதுக்கு வம்புன்னு நுழைஞ்சாச்சு.புத்தம்புதுசா இருக்குது. கடை. நெல்லை டவுனிலிருந்து,பாளை வரும் திருவனந்தபுரம் ரோட்டில் ஆச்சீஸ் உணவகம் எதிரே இருக்குது.இது அவுங்க சொந்தக்கட்டிடம். கோவிலுக்கு பக்கத்தில் இருப்பது வாடகைக்கட்டிடம். அது ஆகிவந்த கடை..பக்கத்து கிராமங்களிலிருந்து வருபவர்களுக்கு அதுதான் சவுகரியமானது. அதனால இன்னும் குறைஞ்சது இருபது வருடங்களுக்காவது அங்கதான் இருக்குமாம்.

கடையின் முகப்புத்தோற்றம்

க்ரவுண்ட் ஃப்ளோர் நீங்கலாக,மூன்றுமாடிக்கட்டிடம்.க்ரவுண்ட் ஃப்ளோரில் நுழைவதற்கு முன் சோதனை மேல் சோதனை. கைப்பை, மெட்டல் டிடெக்டர் சோதனை எல்லாம் தாண்ட வேண்டும் . மும்பையில் இது வழக்கமான ஒன்று. வெற்றி பெற்றபின் வீரநடை போட்டு உள்ளே நுழைந்தால் நேர் எதிர்க்க இடதுபக்கம் வாட்ச்சுகள்,வலதுபக்கம் பில்போடுமிடம். நடுவில் காஸ்மெடிக் சாதனங்கள்.மற்றும் இமிடேஷன் நகைகள். பில்டிங்கை குறுக்குவாக்கில் ரெண்டா பிரிச்சு நடுவில் லிஃப்டும் படிக்கட்டும். அதாவது முன்பாதி, பின்பாதின்னு வெச்சுக்கலாம்.பின்பாதியில் காட்டன் வகைகள் உள்ளாடைகள் இத்யாதி.

முதல் மாடியில் தான் பட்டுப்புடவைகளின் வாண வேடிக்கை.படியேறி நுழைஞ்சதும்,நமக்கு இடதுபக்கம் பட்டுப்புடவைகள் செக்ஷன். இடதுபக்கம்,சல்வார்,சுடிதார்,குர்த்தி வகைகள்.பட்டுப்பாவாடை ஒன்னு எடுத்துக்கிட்டு பில்லு போடப்போனா... ஹை... பட்டு நெசவு செய்யும் தறி ஒன்னு பார்வைக்கு வெச்சிருக்காங்க. கேட்டுக்கிட்டா நெசவு செய்தும் காட்டுவாங்களாம். ஏற்கனவே காஞ்சிபுரத்தில் செய்முறையை பாத்துட்டதால் இப்போ வேண்டாம்.

பட்டுச்சேலை இங்கேதான் நெய்யப்படுகிறது.

இன்னும் என்னென்ன அதிசயங்கள் இருக்குன்னு பாத்துடலாம்ன்னு,பில்டிங் முழுக்க சுத்தியாச்சு. ரெண்டாம் மாடியில் இடதுபக்கம் ஆண்களுக்கானது. அந்தப்பக்கம் எட்டிக்கூட பாக்கலை. வலதுபக்கமும் என்னன்னவோ இருக்கு... யாருக்கு வேணும்.வேறென்ன.. சன் க்ளாஸஸ், அக்ஸசரீஸ்.. அவ்வளவுதானே...

ஆரெம்கேவியில் சிந்தடிக் புடவைகளும், செயற்கைபட்டுகளும் நிறைய கிடக்குது.ஒவ்வொரு தளத்திலும், சீலிங்கில் இருக்கும் பெயிண்டிங் அவ்வளவு அழகு. பட்டுப்புடவைகள் இருக்கும் தளத்தில் அவ்வளவு பிரம்மாண்டமான ஓவியம் இருக்கு. நிலைக்கண்ணாடிகளும் அதைச்சுற்றி இழைத்திருக்கும் வேலைப்பாடுகளும் அரண்மனையில் இருப்பதைப்போல் இருக்கு.

மூன்றாம் தளம் இடதுபக்கம் குழந்தைகளுக்கானது. தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சின்னப்பசங்களை இங்க கூட்டிட்டு வருமுன் கொஞ்சம் யோசிச்சுத்தான் கூட்டி வரணும்.அவங்களுக்கானது அவ்வளவு இருக்கு. வலதுபக்கம் வீட்டு உபயோகப்பொருட்கள், பரிசுப்பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்கள்,பள்ளி உபகரணங்கள். இன்னும் நிறைய இருக்..... இதுவும் இருக்கா!!!! நம்ப முடியவில்லை!!!...ல்லை!!!!.

புத்தகண்கள்...ஆஹா!!!! என்னல்லாம் இருக்கு... கிழக்குப்பதிப்பகம், காலச்சுவடு, விகடன் பதிப்பகம் இப்'போதைக்கு'. ஏற்கனவே தொடர்கதையா படிச்சதுதான்னாலும் ,கள்ளிக்காட்டையும், கருவாச்சியையும் அள்ளியாச்சு. 'புலி நகக்கொன்றை' ரொம்ப நாள் தேடுனது. அதையும் எடுத்தாச்சு. இன்னும் படிக்கல்லை. கலெக்ஷன் நிறைய இருக்கு. ரெண்டு மூணா வாங்கிப்போகணும்.

சுட்டிப்பசங்களுக்காக ஒரு அழகான ஏற்பாடு இருக்கு. உங்க குழந்தைகளை தேவதையாகவோ.. இல்லை வாலுப்பசங்களை கார்ட்டூனாகவோ மாத்தி அதை போட்டோவும் எடுத்து வெச்சிக்கலாம் எப்படியா!! ... இப்படித்தான்.

நான் எப்படி இருக்கேன்!!!!

இவ்வளவு நேரம் சுத்தினதுல காலு வலி எடுத்திருக்கும் பசியும் லேசா ஆரம்பிச்சிருக்கும். வெஜ் வேணுங்கிறவங்க இடதுபக்கம் ஹோட்டல் ராம் பிரசாத் போங்க. நான்வெஜ் பிரியர்கள் எதுக்காப்புல இருக்க ஆச்சீஸ்க்கு போயிட்டு வாங்க. அடுத்தாப்புல மன்னார் வளைகுடா போலாம். தெம்பு வேணுமில்ல!!!!
Sunday, 14 February 2010

அன்பெனும் மழையில்...happy valentine's day

உனக்கான என்னை
நீயும்
எனக்கான உன்னை
நானும்
கண்டு கொண்டதில்
ஆரம்பித்தோம்
நமக்கான நாம்.

**********************

ஊடலுக்குப்பின்
காதல்
இது பழமொழி
ஊடலுக்குப்பின்
ஊடல்
இது
காதலர் மொழி

**********************

இன்னும்
எத்தனைமுறை வேண்டுமானாலும்
விழுவேன்
தாங்கிக்கொள்ள
உன் கரம் இருந்தால்.

**********************

தினமும் பார்த்துக்கொள்ளவில்லை
பரிசுகள் என்னும்
உரமிடவுமில்லை
ஆனாலும் செழிக்கிறது
நாம் வளர்த்த பயிர்
அன்பெனும் மழையில்.

**********************
உன் கூந்தலில்
ரோஜாவை சூட்டியதால்
மற்ற மலர்களெல்லாம்
நிறமிழந்து போயின.
உன் கூந்தல் வாசத்தின் முன்
ரோஜாவோ
வாசமிழந்து போனது.

**********************

காதலர்களுக்குத்தான்
காதலர் தினம்
நமக்கெதற்கு!!!!
நாம்தான் தினம் தினம்
உயிர் வாழ்கிறோமே!!!
காதலை சுவாசித்து.

Friday, 12 February 2010

சிவராத்திரியில் அம்மன் தரிசனம்

வாக்கு கொடுத்தா, நிறைவேத்தணுமா இல்லையா?...கொடுத்த வாக்கை காப்பாத்தறதுதானே மனுஷத்தனம்.

சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி இருந்தா என்னப்பா செய்றது?

'சந்தர்ப்ப சூழ்நிலையை ஃபேஸ் பண்றவந்தான் மனுஷன்'... திரிசூலம் சிவாஜி டயலாக்க எடுத்து விட்டதும் மனசாட்சி அடங்கிப்போச்சு.

அம்மாவை பாக்க வரேன்னு, நேத்து வாக்கு கொடுத்திட்டு வந்தேனில்லையா..கெளம்பிட்டேன்.

ஏதோ ஒரு தெரு வழியா ஆட்டோ போய்க்கிட்டு இருக்கு.அப்ப கண்ணுல பட்டது அந்தக்கோவில். ஆட்டோவை வெயிட்டிங்கில் போட்டுட்டு,உள்ளே போனோம். நம்ம நேரத்தை பாருங்க. நடை சாத்திட்டு பட்டர் அப்பத்தான் வெளியே வந்துட்டு இருக்கார்.அதேதான்... பெருமாள் கோவில்தான்.'அழகியமன்னார் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி' என்ற திருநாமம்.
சாயந்திரம் ஆறுமணிக்கு நடை திறப்போம், கண்டிப்பா வாங்க..இவரை மாதிரி ஆஜானுபாகுவானவரை நீங்க பாத்திருக்க மாட்டீங்கன்னார். கோவில் புதுப்பொலிவுடன் இருக்கு. ஐநூறு வருடங்களுக்குப்பின் கோவில் கும்பாபிஷேகம் நடந்திருக்காம்.கிருஷ்ணர் மேய்ச்சலுக்கு கூட்டிக்கொண்டு போவார்ன்னு எதிர்பார்த்தோ என்னவோ,பக்கத்திலேயே நிறைய பசுக்கள்.கோசாலையா இருக்குமோன்னு கேட்டால் இல்லையாம். வந்ததுக்கு கோபுர தரிசனமாவது கிடைச்சுதே.கோபுரத்தின் ஒரு தோற்றம்.

நெல்லையப்பர் கோவிலுக்கு போய் சேர்ந்ததும்,அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு,அம்மாவைப்பாக்கப்போனோம்.வெளிப்பிரகாரத்திலேயே,
பாதியில்இடதுபக்கம் திரும்புனா கோவிலுக்கு போகும் வழி. நாயக்க மன்னர்களின் சிலைகள் வரிசையா நின்னு,நம்மளை வரவேற்குது.கல்மண்டபத்தை கடந்ததும் வருகிறது அம்மனின் கோவில். முன்மண்டபமே மிரட்டுது. ஏகப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள். பாக்க ரெண்டு கண்ணு பத்தாது. சிகரம் வெச்ச மாதிரி ரெண்டு ஆஞ்சநேயர்கள் எதிரெதிரே நின்னுகிட்டு ஒருத்தரை ஒருத்தர் முறைச்சு பாக்கிறாங்க.என்ன கோபமோ!!!(வாலியும் சுக்ரீவனுமோன்னு நினைச்சேன். ஆஞ்சநேயர்தான்னு கோவிலில் பணிபுரியும் ஒருத்தர் சொன்னார்)

ஏனிந்த கோபம் ஐயா!!!
நேரே வந்து நின்னது அம்மன் சன்னிதியில். இங்கேயும் மூணு ரூபா கொடுத்தா.. அம்மனை அர்த்த மண்டபம் வரைக்கும் சென்று பாக்கலாம்.திரை போட்டு வெச்சிருக்காங்க. அலங்காரம் நடக்குது போலிருக்கு. அஞ்சு நிமிஷம் காத்திருந்தோம்.பரவாயில்லை... புழுக்கம் இல்லாமலிருக்க மின்விசிறிகள் இருக்குது.சரேல்னு திரை விலகினதும், பச்சைபார்டர், ஆரஞ்சு பட்டுப்புடவையில் அம்மனின் தரிசனம்.வலது பாதம் சற்றே தூக்கி, இடது பக்கம் ஒசிந்த நிலை. பிரசாதம் கொடுக்கும் போது எதிர்பாராவிதமா, அம்மன் கழுத்தில் இருந்த மாலை ஒன்னைக்கழட்டி பையர் கழுத்தில் போட்டு அர்ச்சகர் ஆசிர்வாதம் பண்ணினார்.அவளே வந்து ஆசிர்வாதம் செஞ்சமாதிரி மெய் சிலிர்த்துப்போய்விட்டது... தட்சணையெல்லாம் கேக்கலை.

உள் பிரகாரத்தில் சின்னச்சின்ன பல்லக்குகளில்,உற்சவர்கள்.சாயந்திரம் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழாவாம். ஏற்பாடுகள் பலமா நடந்திட்டிருக்கு.முன் மண்டபத்தில் ஏராளமான தொட்டில்கள், பிரார்த்தனைக்காக கட்டப்பட்டவை.இந்தியாவின் மக்கள் தொகை பெருகிட்டிருக்குன்னு கவலைப்பட்டுகிட்டு இருக்கும்போது இப்படியும் ஒரு நிலை இருக்கத்தான் செய்யுது, 'இல்லை ஒரு பிள்ளை என்று... ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே' ன்னு தானே கவியரசரும் பாடியிருக்கார்.முன் மண்டபத்தில் போட்டோ எடுக்க அனுமதி இல்லையாம். அம்மான்னாலே கெடுபிடி கொஞ்சம் ஜாஸ்திதான் போலிருக்கு. நான் காந்திமதி அம்மன் கோவிலைச்சொன்னேன்.

வெளியே வரும்போது நமக்கு வலதுபக்கம் ஆயிரங்கால் மண்டபம். பூட்டிவெச்சிருக்காங்க. உள்ளே கம்பிகளினூடே எட்டிப்பாத்தா, திருநெல்வேலி கோவிலின் சரித்திரம் சித்திரங்களாக. ஏழெட்டு வருஷம் முன்பு வந்தபோது, இன்னும் நிறைய கதைகளை உள்ளே போய் பார்த்த ஞாபகம். இப்போ அனுமதி இல்லையோ என்னவோ!!!!

உள்ளே கோவிலின் மாதிரி ஒன்னை செஞ்சு, கண்ணாடிப்பொட்டிக்குள்ள வெச்சிருக்காங்க.

அம்மன் சன்னிதியின் நேர் எதிரே இருக்கும் ஊஞ்சல் மண்டபத்தில் நிறைய யாளிகளின் சிற்பங்கள்.ஊஞ்சல் மண்டபத்தின் இடதுபுறம் அழகான பெரிய தெப்பக்குளம். தூத்துக்குடி மீன்வள ஆராய்ச்சிக்கல்லூரியின் பராமரிப்பில் இருக்குது.தண்ணீர்தான் கொஞ்சம் பரவாயில்லாம லேசா பச்சைப்பிடிச்சுஇருக்கு.

தெப்பக்குளம்.

இன்னொரு கோணத்தில்..
வெளிப்பிரகாரத்தில் அரசமர மேடையின் கீழே வரிசையா நாகர்கள்.ரெண்டு எட்டு எடுத்து வெச்சா கோவிலின் தலவிருட்சமான மூங்கில் புதர்மாதிரி வளந்து நிக்கிது.

தல விருட்சம்.

வெளிப்பிரகாரம் சுத்தி வந்துட்டு அப்படியே வெளியே வரவும் ,தனி வாசல் இருக்கு.திரும்பிப்போய் ஆறுமுகனை தரிசிச்சிட்டு,கோவில்யானை காந்திமதியை காணோமேன்னு தேடுனா, வெளியே போயிருக்காளாம். நிறைவான தரிசனம் கிடைச்ச மன நிறைவோட வீட்டுக்கு போக, ஆட்டோ நிறுத்துன இடத்துக்கு வந்தா, .... 'காந்திமதி'. ஓட்டமும் நடையுமா கோவிலுக்கு போய்க்கிட்டு இருக்கா. கேமிராவை ஆன் செய்றதுக்குள்ள கடந்துட்டான்னா பாருங்களேன்.என்ன அவசரமோ!!

இன்னிக்கு சிவராத்திரி. அம்மாவை தாஜா செஞ்சாலே,போதும்அப்பாவின்
கவனிப்பு நிச்சயம்.

ஒரு நாலு படங்கள் ஆல்பத்தில் கிடக்கு.

Wednesday, 10 February 2010

ஊஞ்சலாடும் வயசு..


அறியாத வயசு.. புரியாத மனசுன்னுதான் எல்லோரோட டீனேஜும் இருக்கும்.பயம்ங்கிறதே இருக்காது. தீக்குள் விரலை வெச்சா சுடும்ன்னு தெரிஞ்சாலும், எவ்வளவு சுடும்ன்னு எல்லாம் ஆராய்ச்சி பண்ணி பாக்கத்தோணும்.யாராவது எதையாவது தடுத்தா, அட.. இது நல்லாருக்கே!! செஞ்சு பாத்தா என்னன்னு தோணும்.

எனக்கு தெரிஞ்சதெல்லாம் 'ஒரு கைதியின் டைரி'யும், 'சி.பி.ஐ. டைரிக்குறிப்பு'ம்தான். மேலும், டைரில எழுதி வெச்சா,வெந்தணலில் வெந்து,வெள்ளம் கொண்டு போகும் அபாயம் இருப்பதால் பின்னாடி, பொன்னேடுகளில் பொறிச்சு வைரத்தால பதிச்சிக்கலாம்ன்னு விட்டுட்டேன்.(ஒருத்தரு கூட ஒரு டைரி வாங்கிக்கொடுத்து, எழுதிப்பொழைச்சிக்க...ன்னு சொல்லலை. அம்பிடுதேன்).

முகப்பரு வந்தா கவலைப்படாத டீனேஜர் உண்டா!!!!!.அப்போ கிளியர்சில் வந்த புதுசு..அஞ்சே ரூபாய்தான். வாரத்துக்கொரு டியூப் காலியாகியும், பருக்கள் ஜோக்குகளில் வரும் தலைதீபாவளி மருமகன் மாதிரி அசையாம இருந்தா,பச்சப்புள்ள மனசு என்ன பாடுபடும்.அதுக்கு செஞ்ச வைத்தியம் ஒன்னா ரெண்டா...முகத்துல அப்புன,கடலமாவ மிச்சம் பிடிச்சிருந்தா, நாலு ப்ளேட் பஜ்ஜியாவது செஞ்சு சாப்ட்ருக்கலாம்.

டைரியே கிடைக்கலைன்னு சொன்னேனில்லையா...எம்மேல பரிதாபப்பட்டு சித்தப்பா ஒரு டைரி கொடுத்தார். அவ்வளவுதான்... ரொம்ப நாளைக்கு அதை பொன்னே.. பூவேன்னு வெச்சிருந்தேன். எதுவும் எழுதுறதில்லை. எப்பவாச்சும் தோணினா, நாலு வரி கிறுக்குவேன். அதனால, அதை மறைச்சு வெக்கணும்ன்னு தோணல்லை.ஆனா,கொஞ்ச நாளா அதை யாரோ படிக்கிறாங்கன்னு கண்டுபிடிச்சேன்.வெச்ச இடம் மாறுதே!!!! அப்புறம்தான் அது ஒரு ஆர்வக்கோளாறு பரிவாரதேவதைன்னு கண்டுபிடிச்சேன். அட.. சொந்தக்காரங்க....'இந்த டைரியை படிப்பவர்கள் நரகத்துக்கு செல்வார்கள்'...ன்னு கூட முதல் பக்கத்தில் எழுதி வெச்சேன். பிரயோசனமில்லை.

நமக்கு அப்ப இருந்ததெல்லாம் ஒரே ஒரு கனவுதான்... டைப்ரைட்டிங்,ஷார்ட்ஹேண்ட் படிச்சு கேரளா யூனிவர்சிட்டில வேலைக்கு சேரணும்..மடக்கு குடையும், க்ளிப் போட்ட டிபன் பாக்சும் எடுத்துகிட்டு வேலைக்கு போகணும். சிரிக்காதீங்க.. அப்ப இருந்த புத்திக்கு, ப்ரொஃபஸர் வேலைன்னு ஒன்னு இருக்குங்கிறது கூட தெரியாது.சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்கலைங்கிற மாதிரி, அம்மா சரின்னு சொன்னாலும், பரி'வார' தேவதைங்க அருள் கிடைக்கலை. ஒருவழியா எல்லாம் சரின்னு சொன்னாலும்,.. 'விதி'..சதிபண்ணிடுச்சி..சினிமா ரூபத்துல. அந்த படத்துல முக்கிய கதைக்களமா வருவது ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்... போதாதா!!!! சேப்டர் க்ளோஸ்....
(பையர் பிறந்தப்புறம் முழுசா கத்துகிட்டு,பரீட்சை வரைக்கும் வந்தேன், எக்சாமை தள்ளிப்போட்டுப்போட்டு, நான் ரயிலேறின அடுத்த நாள் பரீட்சை வந்தது.)

குடும்பத்துல மூத்த பொண்ணா பிறந்திட்டதால, வாலை எல்லாம் ஹேண்ட்பேகில் சுருட்டி வெச்சுக்க வேண்டியதா போச்சு. தம்பிங்களுக்கு நாமதானே ரோல் மாடலா இருக்கணும்.அதுவுமில்லாம, எதாவது காதுல விழுந்தா அப்புறம் படிப்பு போச்... நிறுத்திடற அபாயம்... நம்ம கேரளா யூனிவர்சிட்டி லட்சியம் என்னாவது?...மத்தபடி,எந்த விஷயத்திலும் ,கட்டுப்பாடெல்லாம் ஒன்னும் கிடையாது.அம்மா கிட்ட எல்லாம் பேசலாம்.ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போக,கூட்டிட்டு வர எந்த தடையும் கிடையாது.

அப்படியும் ஒரு நாள், லேசா டீனேஜுக்கே உரிய ஆர்வக்கோளாறில் ஒரு வேலை செஞ்சேன். எங்க பக்கத்து வீட்டுல, ஒரு நாள் ஒரே களேபரம். என்னன்னு பாத்தா... ஒரு பாம்புக்குட்டி.ஒரு அடி நீளம்தான் இருக்கும். ஒருவழியா அதைக்கொன்னுட்டாங்க. அதை எடுத்துகிட்டு வந்து,வீட்டுல காலியா இருந்த பட்டுப்புடவை டப்பா ஒன்னில் போட்டுவெச்சேன். எதுக்கா?... பஸ் ஸ்டாப்புல அதை போட்டு வெச்சிட்டு, அதை எடுக்கிறவங்க ரியாக்ஷன் என்னன்னு பாக்கத்தான். மறு நாள் காலேஜுக்கு புறப்படும்போது, அதையும் எடுத்துகிட்டேன். அம்மா பாத்துட்டு... இது என்னன்னு கேட்டாங்க... சொன்னதுதான் தாமதம். ஓடியே வந்து , பார்சலை பிடுங்கி எறிஞ்சிட்டாங்க. ஒரு நல்ல சினிமாப்படத்தை மிஸ் பண்ணிய ஃபீலிங்கோட காலேஜுக்கு போயிட்டேன். வேற வழி. தர்க்கம் பண்ணினா ஆக்ஷன் படமில்ல வீட்டுல ஓடும்.

எனக்கு தோட்டம்ன்னா ரொம்ப பிடிக்கும். வீட்டுல முன்னாடி இருந்த இடத்தை சிமிண்ட் தளம் போட்டுட்டாங்க. கொஞ்சூண்டு இடம் தோட்டத்துக்காக விடச்சொல்லி,நான் சொன்னதை காதுலயே போட்டுக்கலை. ஒரு நாள் அம்மா, ஆச்சியை பாக்க ஊருக்கு போயிருந்தாங்க. சாயங்காலம் வந்துடுவேன்னு சொல்லியிருந்தாங்க. இதுதான் சந்தர்ப்பம்ன்னு,கடப்பாறை இல்லாததால், தேங்கா உடைக்கிற அரிவாளை எடுத்து,கொஞ்சம் கொஞ்சமா சிமிண்டை உடைச்சு, சின்ன இடம் உண்டாக்கி, ரெண்டா உடைச்ச செங்கல்ல பதிச்சு கார்டன் ரெடி பண்ணிட்டேன்.அம்மா வந்து பாத்தா,..எங்கையி,கொப்புளிச்சு போயிருப்பதை பாத்துட்டு ஒன்னும் சொல்லல. அப்றம் அந்த கார்டனுக்கு செடியெல்லாம் வாங்கித்தந்தாங்க. அதுல ஜினியான்னு ஒன்னு பூ அழகா இருக்கும். செடியே தெரியாம பூக்கும். சும்மா பாத்தா நல்லா இருக்காதுன்னு, பைனாகுலர் வெச்சி பாத்துகிட்டு, 'நீயும் பாரு,ஊட்டி மாதிரி இருக்கு'...ன்னு கொடுமை பண்ணிகிட்டிருப்பேன்.

பள்ளிகூடத்துல மாசத்துல கடைசி வெள்ளிக்கிழமை சிவில் ட்ரெஸ் போடலாம். யூனிஃபார்ம் தேவையில்லை. அந்த ஒரு நாளுக்காக ஒரு வாரம் முழுசும் செட்டு சேர்ப்போம். ட்ரெஸ்ஸுக்கு மேட்சா வளையல், பொட்டு, கம்மல்ன்னு தேடித்தேடி வாங்குவோம்.அப்பிடி பாத்துப்பாத்து ட்ரெஸ் பண்ணிட்டு போனா, ஒரு தடியன்.. 'என்னடே.. புது ட்ரெஸ்ஸா... மேட்சாவே இல்லையே'ன்னான்.எனக்கு அழுகை...அழுகையா வந்துட்டுது.அப்போதான், எங்க ஹிஸ்டரி சார் வகுப்புக்குள் நுழைந்தார்.. நான் அசிஸ்டெண்ட் மானிட்டர்ங்கிறதால, திருத்தப்பட்ட பேப்பர்களை கொடுத்து வினியோகிக்கச்சொன்னார். இன்னும் பாடமே நடத்தலை.. அதுக்குள்ள எதுக்கு ஆனந்தக்கண்ணீர்ன்னு நெனச்சிட்டு கேக்கவும்,எப்பிடித்தான் தெகிரியம் வந்துதோ.... அவர்கிட்ட சொல்லிட்டேன். அவுருதான், அந்த தடியனோட க்ளாஸ் டீச்சர். நேராப்போய் அவனை பின்னு... பின்னுன்னு..பின்னீட்டார். அதுலேர்ந்து, என்னை ஒரு சொர்ணாக்கா ரேஞ்சுக்கு பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.ஓடி ஒளிஞ்சுக்குவாங்க.

காலேஜ்ல ஆரம்பத்துல சீனியர்களைக்கண்டா குனியுற தலை, க்ளாஸ் ரூம் வந்துதான் நிமிரும். அவ்வளவு பயம்.என் ஃப்ரெண்ட், 'டீ... கண்ணகி...(கண்ணகியக்கா..கோச்சுக்கப்படாது)நேராத்தான் வாயேன்'ன்னு சொல்லிச்சொல்லி எனக்கு கண்ணகின்னே எங்க வட்டத்துல , பட்டம் கொடுத்திட்டா.. அப்றமா நாங்க, பசங்களுக்கு பட்டப்பெயர் வைக்கிறதுவரை முன்னேறியதும், ட்ரெஸ் சென்சுக்கு மார்க் போட ஆரம்பிச்சதும் வேறு கதை. (எல்லாம் ரகசியமாத்தான். பசங்களுக்கு தெரிஞ்சா கதையே வேற)

அப்போ நதியா உச்சத்தில் இருந்த சமயம். நெறைய பேருக்கு ஃபேஷன் மாடல் அவங்கதான். அவுங்க மாதிரியே ஹேர்ஸ்டைல் செஞ்சுகிட்டு, நாமதான் நதியா.. ங்கிற நெனப்புல திரிவாளுங்க. அவங்களுக்கு என் கவுண்டர் கொடுக்கிற மாதிரி, அடுத்த நாளே இன்னொருத்தி, நதியா கம்மல் போட்டுகிட்டு வந்து, அட்ராக்ஷனை அவ பக்கம் திருப்பிடுவா.

என்னது...ஃபாலோயர்சா.. அதெல்லாம் மொக்கை ஃபிகருங்களுக்கு கெடையாது.சப்புன்னு போச்சா!!!!! என்னங்க பண்றது...

கொஞ்ச நேரம்,ஊஞ்சலாடிட்டு வர ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்த கண்ணகிக்கு ஒரு பெரிய நன்றி.ஆரம்பிச்சு வெச்ச முல்லைக்கும் பாராட்டுக்கள். இதை தொடர நாலு பேரை அழைக்கணும். எண்ணிக்கையா முக்கியம்,..வாங்க புதுகைத்தென்றல்,துளசியக்கா,வல்லிம்மா,L.K, வசந்து,கோமா, நசரேயன்..இன்னும் யாருக்கெல்லாம் கொசுவத்தி சுத்துதோ... எழுதுங்கப்பா.. அடுத்தவங்க டைரிய படிக்கிறதுல, என்னா த்ரில் இருக்கு தெரியுமா!!!!

Saturday, 6 February 2010

நெல்லையப்பா!!!!...இது நெல்லையப்பா.


நெல்லையப்பர் கோவிலின் நுழை வாயில்.
அம்மையப்பனை பாத்துட்டு வரலாமுன்னு, சாயந்திரம் கிளம்பினோம். சாயந்திரம் நாலுமணிக்கு மேல்தான் நடை திறக்குமுன்னு கிடைச்ச தகவலை உறுதிப்படுத்திக்கிட்டேன்.வரவேற்கிறதுக்கும், பாதுகாப்பு கொடுக்கிறதுக்கும்,காலையில் வழி நெடுக நின்ன காவல்துறையை இப்போ காணோம்.ஜனவரி 26-குடியரசு தினத்துக்கு,வ.உ.சி. மைதானத்தில், கொடியேத்த வந்த வி.ஐ.பி.க்காகவாம் அது.

B.S.N.L. முன்னாடி,ஆரம்பிச்சு, ராஜா மருத்துவமனை வரை,மதுரை ரோட்டில் மேம்பாலம் கட்டுறாங்களாம்.போக்குவரத்தையெல்லாம், தலையைச்சுத்தி வர்ற மாதிரி திருப்பி விட்டிருக்காங்க.பாலம் செயல்பட துவங்கியாச்சுன்னா, அந்த ரவுண்டானாவில் நெரிசல் குறையுமாம். நல்லதுதான். இப்போதைக்கு, பாலச்சுவர்களும்,தூண்களும் போஸ்டர் ஒட்டவும், மக்களை அழைக்கவும் பயன்படுது.

கோவிலினுள் நுழைந்ததும், நந்தியும் ,கொடிமரமும். நல்ல பெரிய மாக்காளை. கடல்சிப்பி, சுண்ணாம்பு இவற்றால் ஆனவராம்.நந்திகிட்ட உத்தரவு வாங்கிகிட்டு, நெல்லையப்பா... இதோ வந்துட்டேன்னு, முன்னாடி போய் நின்னேன். 'இந்தப்பக்கம் வாங்கோ'ன்னு கூப்பிட்டு, நமக்கு இடதுபுறம் இருக்கும்புள்ளையாரை தரிசனம் பண்ணி வெச்சார் அர்ச்சகர்.வெச்ச கண்ணு எடுக்க முடியலை. விஸ்வரூபம் எடுத்தமாதிரியான பெரிய சிலாபிம்பம்.ஒன்பது அடி உயரமாம்.

பிரம்மாண்டமான மாக்காளை.
கருவறைக்குள் அழகான எளிமையான அலங்காரத்தில் நெல்லையப்பர். அர்த்த மண்டபத்துக்குள் போய் இன்னும் கிட்டக்க தரிசிக்கலாம், நுழைவுக்கட்டணம் வெறும் மூணே ரூபாய்தான்.வெளியே வந்தா உள்பிரகாரத்தில்,இடது பக்கம் ஒரு சின்ன பள்ளத்துக்குள் இருக்கிற மாதிரி ஆதிலிங்கம்.இவருக்குத்தான் முதலில் பூஜைகள் நடந்தது என்று கேள்வி. தெரிஞ்சவுங்க சொல்லுங்க...விஷ்ணு இங்கே பள்ளி கொண்ட திருக்கோலத்தில், கோவிந்தப்பெருமாள் என்ற திரு நாமத்துடன் காட்சி கொடுக்கிறார்.மச்சானும்,மாப்பிள்ளையும் ஒருத்தருக்கொருத்தர் பேச்சுத்துணைக்கு ஆச்சு.தங்க்ஸ்கள் பக்கத்தில் இல்லையே.ஒருத்தர் தனிக்கோவிலில் இருக்கார்.இன்னொருத்தர் கஜலஷ்மியா வடக்குப்பிரகாரத்தில் இருக்கார்.

இரண்டாம் பிரகாரத்தில், அறுபத்து மூவர்,வரிசையா இருக்கிறாங்க.அவங்களுக்கு இடதுபக்கத்துல 'சுரதேவர்' இருக்கார். யாருக்காவது காய்ச்சல் வந்தா அவருக்கு வேண்டிகிட்டா சரியாப்போயிடும்ன்னு ஒரு நம்பிக்கை.நாகர்கோவிலின் அருகே, தடிமார் கோவில்ன்னு பேச்சு வழக்கில் சொல்லப்படும் தழுவிய மகாதேவர் கோவிலில்,சாமிக்கு சுக்கும், மிளகும் அரைத்துப்பூசும் வழக்கம் உண்டுன்னு கேள்வி. சப்தமாதர்களான பிராமி,மாஹேஸ்வரி, கௌமாரி,வைஷ்ணவி,வாராஹி, இந்த்ராணி,சாமுண்டி எல்லோரும் வரிசையா இருக்காங்க.மறுபடியும், சீதையை கிட்நாப் செய்யக்கூடாதுன்னும், ஏற்கனவே செஞ்சதுக்கு தண்டனையாவும், ராவணனை ஜெயில்ல போட்டு வெச்சிருக்கு. அவருக்கு மேலே இருக்கும் சன்னிதியிலிருந்து, சோமாஸ்கந்தர் கண்காணிச்சிட்டிருக்கிறார். (வார்டர் உத்தியோகம் கொடுத்துட்டாங்களே...)

கந்தரை கும்பிட்டுகிட்டு, லேசா வலதுபக்கம் திரும்பினா... தாமிரசபை!!!.தீபத்தையே நடராஜரா நினைச்சு கும்பிடணும். நடராஜரின் தரிசனமும் உண்டு. சபையின் வடக்குப்பக்கம் சந்தன நடராஜர் இடதுபாதம் தூக்கி ஆடும் தரிசனம் கொடுக்கிறார்.சந்தனக்காப்பினூடே மெல்லிய மீசை தெரியுதாம்..யாத்திரிகர்கள் கூட்டம் ஒன்னு கண்டுபிடிச்சு பரவசப்பட்டுகிட்டாங்க. என்ன இருந்தாலும் மீசைக்காரன்னா அது பார்த்தசாரதி மட்டும்தான்னு ஒருத்தர் கட்சி சேக்க ஆரம்பிச்சார்.ஸ்தலவிருஷமான மூங்கிலில் ஏராளமான தொட்டில் பிரார்த்தனைகள்.சனீஸ்வரனை கண்டுகிட்டு, வலது பக்கம் மண்டபத்தில் இருக்கும் சகஸ்ரலிங்கத்தையும் தரிசிச்சிட்டு முன்புறம் வந்தோம்.

பிரதோஷ காலத்து சிவதரிசனத்தை ஓவியமா வரைஞ்சு வெச்சிருக்காங்க. நந்தியின் கொம்புகளுக்கு நடுவே நின்றாடும் பெருமான்.அழகா இருக்கு..வலதுபக்கம் திரும்பி நடந்தா முன்மண்டபத்துக்கு இடதுபக்கம் குபேரலிங்கம். பெயருக்கு ஏத்தமாதிரி, நகைகளுக்கு நடுவே இருக்கார். ஜொலிக்குதே...ஜொலி..ஜொலிக்குதேன்னு பாடலாம்.முன்மண்டபத்தின் சங்கீத கல்தூண்களை வெளிமாநில பக்தர்கூட்டம் ஒன்றுக்கு, ஒருத்தர் தட்டிக்காண்பித்து , விளக்கிச்சொல்லிக்கிட்டிருக்கார்.

பிரதோஷ கால நடனம்.
இங்கே கோவிலில் ,கைடுன்னு யாரும் இருக்கிறதா தெரியல்லை..(சுசீந்திரம் கோவிலில் உண்டு)வெளியூர் பக்தர்களுக்கு, நம்ம கோவிலைப்பத்தி தெரிய வேணுமில்லையா.. ஏதாவது ஏற்பாடு இருந்தா நல்லா இருக்கும்.கோவிலைப்பத்தி சொல்லுங்கன்னதும்,உற்சாகமாகிட்டார். இது 1300 வருடம் பழமை வாய்ந்ததாம். மொத்தம் 14 ஏக்கர் பரப்பளவு கொண்டதாம் .கோவில் உருவான கதை வழக்கம் போலவே... ராமக்கோனார் அரசருக்கு பால் கொண்டு போறார்... கால்தடுக்கி பால்சிந்துது... தினமும் இது நடப்பதால் நம்பிக்கை இல்லாத அரசர்,நேரில் பார்வையிட வர்றார்.காலை இடறும் மூங்கிலை வெட்டுறார்.... ரத்தம் பீறிட்டு வருது... தோண்டிப்பாத்தா, ஒரு சிவலிங்கம் தலையில் வெட்டுப்பட்ட நிலையில் இருக்குது.கோவில் கட்டி கும்பிடுறாங்க. இத்யாதி.. இத்யாதி..

அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில், இந்த கதைகளை வரைஞ்சு வெச்சிருக்காங்க. பாக்க தவறிடாதீங்கன்னார். என் கவனம் முன்மண்டபத்துக்கு வலதுபக்கம் இருக்கிற ஒரு சிற்பத்துக்கு போச்சு..யானை மேலே உக்காந்து ஸ்ரீ சேரமான் திருக்கயிலாயத்துக்கு போகும் காட்சி.பட்டத்தரசியும் பக்கத்துல இருக்காங்க. முன்மண்டபத்தின் விதானத்துல இருக்கும் பூவேலைப்பாடு பிரம்மாதம். நாலாபுறமும் தாங்கும் யானைகள் கொள்ளை அழகு. அவற்றின் மேல் இருக்கும் நகைகளில் கூட நுணுக்கமான வேலைப்பாடுகள்.

சேரமான் திருக்கைலாயம் போகும் காட்சி.
சாமி கும்பிட்டுவிட்டு வந்த கூட்டம் ஒன்னு,போட்டோ எடுத்துட்டிருந்த என்னை காமெடிபீஸ் போல் பார்த்து விட்டு சென்றது. 'யாரும்மா இது'ன்னு கேட்ட சின்னப்பொண்ணு ஒன்னுக்கு, 'யாரோ...டி.வி. ரிப்போர்ட்டர் போலிருக்கு'ன்னு அவுங்கம்மா சொன்னதை வெச்சு, இன்னும் வீட்ல என்னை, வாரிக்கிட்டிருக்காங்க.

வெளிப்பிரகாரத்தில் இருந்துதான் காந்திமதி அம்மனை பார்க்கப்போகும் வழி பிரிகிறது. இரண்டு கோவில்களும் தனித்தனியே இருந்தாலும் இந்த கல்மண்டபம்தான் ரெண்டையும் இணைக்குது.பிரகாரத்திலேயே கோசாலை ஒன்னு இருக்குது. ஒரேஒரு பசுவும் கன்னும் இருக்குது.அங்கங்கே சுற்றுப்புற சூழலின் தூய்மையை வலியுறுத்தி,போர்டுகள். த்மிழ்நாடு மாசு கட்டுப்பாட்டுத்துறை மக்காத பிளாஸ்டிக்குகளை கோவிலில் தவிர்க்கச்சொல்லி கேட்டுக்கிறாங்க. நல்ல ஐடியா..மக்கள் ஒன்னு கூடும் இடத்தில் பிரச்சாரம் செஞ்சா, அட்லீஸ்ட் இளைய தலைமுறையாவது யோசிக்க ஆரம்பிக்குமே.!!!

துவாரபாலகர்கள் நல்ல கம்பீரம். சிற்பக்கலையோட சிறப்பு, உச்சத்தில இருந்த கால கட்டத்தில செஞ்சிருப்பாங்களோ என்னவோ!!! உயிரோட ஒரு ஆள் நிக்கிற மாதிரியே இருக்கு. கால் நகமெல்லாம் வழவழன்னு ... நல்லாப்பாத்தா பச்சை நரம்பு கூட தெரியும்போலிருக்கு.

அம்மாவை பாத்துட்டு வந்துடலாம்ன்னு திரும்பினா காத்து வாக்கில ஒரு செய்தி... அங்கங்க ஆட்கள் பரபரப்பா இருக்காங்க.. தங்கத்தேர் ஊர்வலம் வரபோகுதாம்... இப்பத்தான் புதுசா செஞ்சதுன்னு கேள்வி... அடிச்சது லக்கிப்ரைஸ்ன்னு இடம் பாத்து உக்காந்துகிட்டோம்.அரைமணி... கால்மணின்னு சொல்லி நேரம் ஆகிட்டிருக்கு. திரை போட்டு வெச்சு, அலங்காரம் நடக்குது. உற்சவர் வந்தாச்சு.லேசா திரை விலகுனபோது ஒரு சூரியஒளிக்கீற்று வந்து விலகுன மாதிரி, தங்கத்தேர் தகதகன்னு கண்ணைப்பறிக்குது.இரண்டுமாசம் முன்னாடிதான் வெள்ளோட்டம் நடந்திருக்கு.

தேரோட்டத்தை, போட்டோ எடுக்க கொடுத்து வைக்கலை. ஏழுமணின்னு சொல்லி எட்டேகால் ஆகியும் அலங்காரமே ஆரம்பித்த பாடில்லை.அதற்கு மேல் காத்திருக்க முடியாம கிளம்பிட்டோம். குடுப்பினை இருந்தா இன்னொருவாட்டி சந்தர்ப்பம் கிடைக்காமலா போயிடும்!!! எல்லோருக்காகவும் வேண்டிகிட்டேன்.தங்கத்தேருக்காக, கூகிளாண்டவரிடம் பிரார்த்தனை செஞ்சதில், பெரிய மனசு பண்ணி ஒரு படம் கொடுத்தார்.

இன்னிக்கு நடை சாத்துற நேரம் ஆகிட்டுது. அம்மாவை இன்னொரு நாள் வந்து பாக்கிறதா சொல்லிட்டு,வீடு வந்தோம்.

தங்கத்தேர் ஓடுது.

போகும் வழி வெகு தூரமில்லை.

ஸ்ட்ராபெர்ரி,வெனிலா,சாக்லெட்.. எந்த ஃப்ளேவர் வேணும்ன்னாலும் எடுத்துக்கலாம்.உறங்கப்போகும் நேரத்தில் ஐஸ்க்ரீம் தேவையான்னு நினைச்சாலும்,கை தானா நீண்டு,ஸ்டராபெர்ரியை எடுத்துகிட்டது.மத்தியானம் வெனிலாவும், சாக்லெட்டும் வந்தது.மத்தியானம் சரி.. டின்னருக்காவது, சூடா ஏதாவது குடிக்கணும்ங்கிறவங்களுக்காக,மெனுவை ச்சாய்ஸில் விட்டா நல்லாருக்கும்.

இதென்னா.. திடீர்ன்னு காதுக்குள்ள கச்சேரி நடக்குதா!!!! அடிச்சுப்பிடிச்சு எழுந்தா மொபைல் அலாரம் பாடிக்கிட்டிருக்கு!!!. வழக்கமான 'டைட்டானிக்' கை மாத்திட்டதை மறந்துட்டேன்.கொஞ்ச நேரத்தில், 'யாத்ரிகள் கவனத்துக்கு'ன்னு ஆரம்பிச்சு,திருவனந்தபுரம் வரப்போவதை,ஒரு அக்கா சொன்னாங்க.ஒவ்வொரு ஸ்டேஷன் வருவதற்கும்,ஐந்து நிமிஷங்கள்முன்பு அந்தந்த ஸ்டேஷங்கள் பெயரை அறிவிக்கிறாங்க.இது ஒரு நல்ல ஏற்பாடு.

சரியா ஐந்துமணி, நாப்பது நிமிஷத்துக்கு எங்க ரயில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குள்,மூக்கை நுழைத்தது.ரயிலைவிட்டு இறங்கி, காத்திருக்கும் நேரத்தில்,'கடுப்பம் கூடுதலாயிட்டு ஒரு ச்சாய'.பையருக்கு, நான் மலையாளத்தை பிச்சு ஒதறி,காயப்போடுவதைப்பாத்து சிரிப்பு தாங்கலை.

திருநெல்வேலிக்கு இங்கிருந்து இன்னும் மூன்றரை மணி நேரப்பயணம்.மாமா கூட வந்ததால் கலகலப்பா இருந்தது. நாலு வருஷத்துக்கு அப்புறம் பாக்கிறோம். அவுங்ககிட்ட குவைத் செய்திகளும், எங்ககிட்ட மும்பை செய்திகளும் இருந்ததால் ஒரு ந்யூஸ் சேனலே ஓடிக்கிட்டிருந்தது.திருவனந்தபுரம் எல்லை தாண்டியதும் பேச்சு மூச்சில்லை. கண்ணுக்கு விருந்து கொட்டிக்கிடக்கிறப்ப ,காது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டுமே.

உலகத்துல உள்ள எல்லா அழகுக்கும்,பிறந்தகம் இதுதான் என்பதுமாதிரி இருக்கு. தென்னந்தோப்புகளும், வயல்வெளிகளும், நீர்நிலைகளும்,கேரளத்துக்கே உரிய அந்த அதிகாலை நேர குளிர் காற்றும் மனசெல்லாம் நிறைஞ்சு போச்சு.வயல்வெளிகளில் பயிர்பச்சைகளுக்கு மேல்,சாம்பிராணி புகை மாதிரி பனி நிக்குது.வழியில் ஐயப்பன் கோவிலில்,வெடிவழிபாடை ஆச்சரியமா பார்த்த மாமாவுக்கு விளக்கி சொன்னேன்.

நாகர்கோவில் அருகே சுங்கான் கடைஎன்னும் இடத்தில் 'ஹோட்டல் கௌரிசங்கர்' புதுசா இருக்கு.அருமையான மெனு. மும்பையில் சில ஹோட்டல்களில் இருப்பதை போலவே, சின்னகடை ஒன்னும் அட்டாச்டா இருக்கு.சாக்லெட் ,பிஸ்கட்,மக்ரோன்,...'பானங்கள்'கூட இருக்குப்பா.. வெளியே இடதுபக்கமா ஜூஸ் செண்டரும் இருக்கு.காலை உணவை முடிச்சிகிட்டு, பயணத்தை தொடர்ந்தோம்.


வேளிமலையின் ஒரு தோற்றம்.
நாகர்கோவிலில் புகுந்து புறப்பட்டு, தோவாளையில் மல்லிப்பூ வாங்கிகிட்டு,ஆரல்வாய்மொழியை கடந்தோம்.முப்பந்தல் முன்னாடி இருக்கிற அந்த ரோட்டில் ரெண்டு பக்கமும்,அடர்த்தியா மரம் வளர்ந்து,பகல்லேயே இருட்டா,ஒருமாதிரி அழகா இருக்கும்.இப்போ ஏதோ பேருக்கு இருக்கு. பக்கத்துல இருந்த பொட்டல்காடெல்லாம்,காத்தாடி ஆலை வந்தபிறகு ஏதோ கொஞ்சம் மரம்,மட்டையோட இருக்கு. இப்போதான் ஆட்களுக்கான குடியிருப்பும் வர ஆரம்பிச்சிடுச்சே. ஆட்கள் வரவர, கொஞ்சமாவது முன்னேறத்தானே வேணும்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு குடியிருப்பையும் பார்த்தேன்.

இங்கிருந்து ஆரம்பிச்சு,வள்ளியூர் தாண்டியும் காத்தாடி பறக்குதாமே. முப்பந்தல் தாண்டும்போது, லேசா வலதுபக்கம் பாத்தா.. காத்தாடிக்கடலே இருக்கு.அன்னிக்கு நல்ல காத்து போலிருக்கு. சும்மா..விர்..விர்.ன்னு சுத்துது.

ஆத்தாடி..காத்தாடி!!!
நல்லாத்தான் இருக்கு 'தங்க நாற்கரச்சாலை' இந்தப்பக்கம் ரெண்டுலேன், அந்தப்பக்கம் ரெண்டுலேன், நடுவில் டிவைடர்..அந்தப்பகுதிகளின் அடையாளமே மாறிட்டது போலிருக்கு.எப்படியோ ..விபத்து நடப்பது குறைஞ்சா சரின்னு சொல்லி வாய் மூடலை..ரோட்டோரத்தில் ஆக்ஸிடெண்ட் ஆகிக்கிடந்த வேன் கண்ணுல பட்டுத்தொலைச்சது.முந்தின நாள் ராத்திரியிலிருந்து அங்கே கிடக்குதாம்.பாவம்... ஒருத்தருக்கும் ஒன்னும் ஆகாம இருக்கணும்.


நாற்கரச்சாலை.
வழியில் மூன்றடைப்பு வந்ததும்,பறவைகள் ஏதாவது தென்படுதான்னு பாத்தா, அங்க தண்ணியே ,ரொம்ப கொஞ்சமாத்தான் இருக்கு.பறவைகள் ஒன்னையும் காணல்லை. ஊருக்குள்ள போயிருக்கோ என்னவோ!!!.

வீட்டுக்கு போய் சேர்ந்து,ரிலாக்ஸாகி,டைம் பாத்தா... அச்சச்சோ!!!! அந்த இடத்துக்கு சாயங்காலம்தான் போக முடியும் போலிருக்கு.


LinkWithin

Related Posts with Thumbnails