பெருசா ஒண்ணுமில்லை.. ஒரு ஆடு வாங்கி வளக்கணுமாம். அது கொஞ்ச நாள்ல வளந்தப்புறம், குட்டிபோட்டு எண்ணிக்கை கூடுமாம். இப்படியே பெருகிப்பெருகி ஒரு பண்ணைக்கே சொந்தக்காரராயிடலாம்ன்னு நினைச்சாராம். அப்புறம் கொஞ்ச நாளுக்கப்புறம் ஆட்டுப்பண்ணையில் இருந்த விருப்பம் போய், அது கோழிப்பண்ணையா மாறிச்சு. ஆடு போயி கோழி வந்தது டும்..டும்..டும்.. நாலஞ்சு முட்டை குஞ்சுபொரிச்சு, எப்படி அது ஒரு பெரிய கோழிப்பண்ணையா மாறுதுங்கிற கதையை ரங்க்ஸ் சொல்லச்சொல்ல நாங்கல்லாம், வாயில கொசுபோறதுகூட தெரியாம கேட்டுக்கிட்டுருந்தோம்.
அப்பதான், "அப்பா,.. இதேமாதிரி ஒரு கதை எங்களுக்கு மாரல் ஸ்டோரி புக்குல வருதுப்பா"ன்னாங்க பசங்க. அந்தக்கதை எப்படீன்னா,
"ஒரு ஊர்ல ஒரு அழகான பொண்ணு இருந்தா.. பொண்ணுன்னாலே அழகுதானேன்னு எங்களுக்கு தெரியாதான்னு ஆரும் கேக்கப்டாது :-)). அவ வீட்டுல சுமாரான எண்ணிக்கையில கோழிகள் இருந்திச்சாம். அதுங்க இடுற முட்டைகளை இவ சந்தைக்கு எடுத்துட்டுப்போயி வித்துட்டு வருவா. அதுலதான் பொழைப்பே ஓடுது.
ஒரு நாள் வழக்கம்போல சந்தைக்கு போயிட்டிருக்கா. வீட்டுக்கும் சந்தைக்குமிடையில சுமாரான தொலைவு இருக்கும். எப்பவும்போல, தனக்குள்ளயே பேசிக்கிட்டு நடந்துக்கிட்டிருந்தா. 'இன்னிக்கு எல்லாத்தையும் வித்துடாம, கொஞ்சத்தை வீட்டுக்கு கொண்டுபோகணும். அதை அடைகாக்கவெச்சா குஞ்சு பொரிக்கும். அந்தக்குஞ்சுகளை தீவனமெல்லாம் போட்டு நல்லா வளர்ப்பேன். அதெல்லாம் பெருசா வளந்தப்புறம் முட்டை போடும். அதையும் அடைவெச்சா இன்னும் நிறைய கோழிக்குஞ்சுகள் வரும்.
இப்படியேபோனா, நான் ஒரு கோழிப்பண்ணைக்கு சொந்தக்காரியாகிடுவேன். அப்புறம் அதுல கொஞ்சம் கோழிகளை வித்து காஸ்ட்லி ஆடைகளெல்லாம் வாங்குவேன். அதப்போட்டுக்கிட்டு நான் தெருவுல நடந்து போகையில, இந்த ஊரு பெரியபணக்காரங்களெல்லாம் கண்டிப்பா என்னைப்பார்ப்பாங்க. என்னோட அழகுக்கு அவங்க திரும்பிப்பார்க்காம இருந்தாதான் ஆச்சரியப்படணும். அப்புறம் எங்கவீட்டுக்கு வந்து என்னை கல்யாணம் செஞ்சுக்கணும்ன்னு, என்னோட பெத்தவங்க கிட்ட நிச்சயமா பொண்ணு கேப்பாங்க. ஆனா, நா.. ஒத்துக்க மாட்டேன். இந்த ஊர்ல எனக்கு சரியான ஜோடி யாருமே கிடையாது. அதனால, என்னோட சம்மதத்த கேட்டா, 'ம்ஹூம்.. முடியாது'ன்னு தலையாட்டிடுவேன்'ன்னு தனக்குத்தானே பேசிக்கிட்டு வந்தவ உணர்ச்சி வசப்பட்டு தலையை இடவலமா வேகமா ஆட்டுனா.
அவ்வளவுதான், தலையில் வெச்சிருந்த கூடை கீழே விழுந்து, முட்டைகளெல்லாம் உடைஞ்சது. முட்டைகள் மட்டுமா உடைஞ்சது??.. கோழிப்பண்ணை, விலையுயர்ந்த ஆடைகள், பணக்கார இடத்து சம்பந்தம்ன்னு எல்லாக்கனவுகளும் சேர்ந்து உடைஞ்சது..."அப்படீன்னு கதையை முடிச்சாங்க. இதைச்சொல்லும்போதெல்லாம் பசங்களுக்கு சிரிப்புவரும். ரங்க்சும் சிரிச்சு சமாளிச்சுக்குவாரு. அப்புறம் காலப்போக்கில் நாளாக ஆக பிஸினஸ் கனவும் கொஞ்சம்கொஞ்சமா மறைஞ்சே போச்சு... வேறவழி!!.. ரிஸ்க் எடுத்து கையைச்சுட்டுக்க நான் தயாரா இல்லியே. அதுவுமில்லாம, பிஸினஸ்ன்னா ஒரு அர்ப்பணிப்போட இறங்கினாத்தான் உருப்படும். நாங்களோ, லீவு கிடைச்சா எங்கியாவது ஹாலிடே போலாமான்னு யோசிக்கிறரகம். நமக்குஒத்துவராதுன்னு தெரிஞ்சுபோச்சு. அதனால அப்புறம் அதப்பத்தி யோசிக்கிறதையே விட்டுட்டோம்.
இப்ப, இந்தக்கதை எதுக்குன்னு கேக்கறீங்களா??.. சொல்றேன். என்னோட பால்கனித்தோட்டத்துல பேர்தெரியாத செடியொண்ணு வளர்ந்துச்சு. இலைகளின் வடிவம் ரொம்ப அழகா இருந்ததால, சரி.. மணிப்ளாண்ட் மாதிரி இதுவும் இருந்துட்டுப்போட்டும்ன்னு விட்டுட்டேன். ஒரு நாள் அதுல ஒரு பூ.. என்னப்பூ??... தர்பூசணிப்பூ!!!!!. ஹைய்யோ!!!... கூகுளாத்தாவும் அதுதான் உறுதி செய்யவும், எனக்கு தலைகால் புரியலை. வேணும்வேணும்ன்னு விதை போட்டு வளத்தப்பல்லாம் வராம, இப்ப தானாவே வந்து நிக்குதே. இதைத்தான் கெடைக்கிறது கெடைக்காம போகாதுன்னு சொல்லுவாங்களோ??..
அம்புட்டுத்தான், இந்தச்செடி, தப்பு.. தப்பு.. இந்தக்கொடியில ஒரு தர்பூஸ் வந்தாலே சுமார் ஐம்பதுரூபா லாபம். நெறைய பூக்கள் இருக்கும்போலிருக்கே.. எல்லாமும் காய்ச்சா!!!!.. அடிச்சது யோகம். சீசன் இல்லாட்டாலும் தர்பூஸ் கிடைக்குமே :-))). இந்த குஷியில செடிக்கு தெனமும் கூடுதல் பராமரிப்பென்ன.. பிஞ்சை கண்காணிக்கிறேன் பேர்வழின்னு, அதுமேல எறும்பு ஊர்ந்துபோனாக்கூட.. அதை தூக்கிப்போடறதென்னன்னு ஒரே அடாவடிதான். இப்பத்தான் கவனிக்கிறேன்.. மஞ்சள் நிறம் கூடுதலாயி பிஞ்சு சுருங்கிட்டே இருக்குது. கடைசியில பொட்டுன்னு போயிட்டது. மனசுக்கு ரொம்ப கஷ்டமாப்போச்சு. இந்த ஒண்ணு பத்தாகும்ன்னு எப்படியெல்லாம் எதிர்பார்ப்போட இருந்தேன். ச்சே.. இப்படியாகிப்போச்சே.. சரி.. மறுபடியும் பூக்காமலா போகும். அப்ப கவனிச்சுக்கிறேன்.
வாழ்க்கையில, எப்பவுமே வெற்றிகளே வந்துக்கிட்டிருந்தா போரடிச்சுடும். அப்பப்ப தோல்விகளையும் ருசிக்கணும். அப்பத்தான் வாழ்க்கையின் ருசி தெரியும். நினைக்கிறது எல்லாமே நடந்துட்டா, அப்புறம் ஒரு சுவாரஸ்யம் இருக்காது. நாஞ்சொல்றது சரிதானா :-)))))