Monday, 31 May 2010

காளான் வறுவல்...


நேத்துப்பெஞ்ச மழையில இன்னிக்கு முளைச்ச காளான் தானேன்னு இதை அலட்சியப்படுத்திட முடியாது. அவ்வளவு சத்து இதில் நிரம்பியிருக்கு. காளான் களில் மொத்தம் 14,000 ஆயிரத்துக்கு மேற்பட்ட வகைகள் இருக்காம். இதில் சுமார் 3000 வகைகள் உண்ணத்தகுந்தவை. சுமார் 700 வகைகள் மருத்துவப்பயன்கள் உள்ளவை . ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான வகைகள் விஷமுள்ளவை... ஆங்ங் .

பழங்காலத்திலேயே இதை சமையலுக்கு பயன்படுத்தியிருக்காங்க. போர்வீரர்களுக்கு வேண்டிய சக்தியை இது தருவதாக கிரேக்கர்கள் நம்பியிருக்காங்க. ரோமன்கள் இது கடவுளின் கொடைன்னு மனசார நம்பி , விழாக்காலங்களில் மட்டும் சமைத்து உண்பார்களாம். சீனர்களைப்பொறுத்தவரை இது ஒரு சுவையான, ஆரோக்யம் கொடுக்கும் உணவு வகை. அதனாலதான் சூப், மஞ்சூரியன், ஃப்ரைட் ரைஸ்ன்னு விதவிதமா வெளுத்துக்கட்டியிருக்காங்க.

மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்லுவாங்க. அதைப்போல இத்துனூண்டு காளான்ல சத்தும், பலன்களும் நிரம்பியிருக்கு. இதுல சுமார் 80 லிருந்து 90% வரை நீர்ச்சத்து இருக்கு. கலோரி அளவு குறைவா இருக்கிறதால உடல் எடையை குறைக்க நினைக்கிறவங்களுக்கு ஏத்தது. சோடியம், கொழுப்பு ச்சத்துகள் குறைவாகவே இருக்கு. இதில் நிரம்பியிருக்கும் பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை குறைத்து, மாரடைப்பு வர்றதுக்கான ஆபத்தை குறைக்குது. ஒரு வாழைப்பழம் அல்லது ஒரு க்ளாஸ் ஆரஞ்சு ஜூஸில் எவ்வளவு பொட்டாசியம் இருக்குமோ அதே அளவு ஒரு காளானிலும் இருக்கு.

பொதுவா மஷ்ரூம்ன்னு சொன்னா அது Agaricus bisporus ன்னு சொல்லப்படும் வெள்ளை பட்டன் மஷ்ரூமைத்தான் குறிக்கும் . இப்பல்லாம் எல்லா சூப்பர் மார்க்கெட்டுகள், பெரிய காய்கறிக்கடைகளிலும் இது ஈஸியா கிடைக்குது. இப்பல்லாம் இது செயற்கைமுறைகளில் வளர்க்கப்படுது . நல்ல பால் வெள்ளை நிறத்தில் குண்டு குண்டா அழகா இருக்கும். லேசா கலர் மாறியிருந்தாலோ, கருமை படர்ந்திருந்தாலோ உபயோகப்படுத்தாதீங்க. கெட்டுப்போனதா இருக்கலாம் . இதை உபயோகப்படுத்தி சைனீஸ வகைகள் மட்டும்தான் செய்ய முடியும்ன்னு இல்லை. இந்திய வகைகளும் செய்யலாம்.
ஒரு குறிப்பு உங்களுக்காக.

மஷ்ரூம் - 1 பாக்கெட். (சுமார் 10 அல்லது 15 மஷ்ரூம்கள் இருக்கலாம்)

வெங்காயம் -2. (நீளமாக நறுக்கப்பட்டது.)

தக்காளி -1 (பொடியாக நறுக்கப்பட்டது.)

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை -4 ஸ்பூன் (பொடியாக நறுக்கப்பட்டது.)

இலவங்கப்பட்டை -2 இன்ச் நீளமுள்ளது.

கிராம்பு -2

ஏலக்காய் -2

அன்னாசிப்பூ -1(படத்தைப்பாத்துக்கங்க. அரை வட்டமா இருக்குதே அதுதான்)

பெருஞ்சீரகம்- 2 ஸ்பூன் அளவு.

தேங்காய்ப்பால் - 1 கப்.

தேங்காய் எண்ணெய் + சமையல் எண்ணெய் + நெய் - மூணும் சேர்ந்து மூணு ஸ்பூன் அளவு . அப்படீன்னா தனித்தனியா எவ்வளவு எடுத்துக்கணும்ன்னு கணக்கு தெரிஞ்சவங்க சொல்லுங்க பார்க்கலாம் :-))

இஞ்சி -1 இஞ்ச் அளவு.
பூண்டு - 4 பற்கள்.
பச்சை மிளகாய் -3.

மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள் -1 டீஸ்பூன்
உப்பு -ருசிக்கேற்ப - சுமார் 1 டீஸ்பூன்.
மஞ்சள் - கால் டீஸ்பூன்.

காளானும் நண்பர்களும்..

எப்படி செய்றது :

மஷ்ரூம்களை கழுவி துடைத்து வைக்கவும். துடைக்கும்போது மேல்தோல் லேசா கழண்டு வரும். அப்புறம் அதை ரெண்டாவோ, நாலாவோ வெட்டிக்கணும்.

பட்டை+கிராம்பு+ஏலம்+பெருஞ்சீரகம்+அன்னாசிப்பூவை பொடிச்சுக்கோங்க. அது கூட இஞ்சி+பூண்டு+பச்சைமிளகாயை சேர்த்து அரைச்சு மசாலா ரெடி பண்ணிக்கோங்க.

அடுப்பில் வாணலியை காயவைத்து , எண்ணெய்கள் + நெய் கலவையை ஊற்றி சூடாக்கவும்.

சூடானதும் , இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மசாலா கலவையை அதில் போட்டு வதக்கவும். பச்சை வாடை போனதும் வெங்காயத்தை அதில் சேர்த்து பொன்னிறமா வறுக்கணும்.

அப்றம், தக்காளியை அதுல போட்டு தக்காளி வெந்து மென்மையாகும்வரை வதக்கணும். அதுகூட மஷ்ரூமை போட்டு லேசா கிளறிவிடுங்க. ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கலாம். மூடி போட்டு வேகவுடுங்க. அரை வேக்காடானதும், கால்கப் தண்ணி சேர்க்கணும். இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் வேகட்டும். அதுவரை, உங்க இடுகைக்கு பின்னூட்டம் ஏதாவது வந்திருக்கான்னு போய்ப்பாருங்க.

வலையிலேயே மூழ்கிட்டீங்கன்னா அப்றம் வறுவல், கருகலாயிடும் சொல்லிட்டேன் :-)) . எழுந்திரிச்சு வந்து , தேங்காப்பாலில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்புத்தூள், கொத்தமல்லித்தூள்ன்னு சேருங்க. தூள் கிளப்பிட்டீங்கன்னு பின்னூட்டம் மட்டும்தான் போடணுமா?.. சமையலிலும் தூள் போடலாம் :-)

இப்ப இந்த கலவையை , மஷ்ரூம் கூட ஊத்தி கொதிக்க விடுங்க. மிதமான தீ இருக்கட்டும். இல்லைன்னா தேங்காப்பால் சீக்கிரம் திரிஞ்சுடும் . இது கூட கொத்தமல்லி , கருவேப்பிலையை சேர்த்துடுங்க. உப்பு, உறைப்பு சரியா இருக்கான்னு டேஸ்ட் பாத்து செக் பண்ணிக்கோங்க. எல்லாம் சேர்ந்து கூட்டு பதம் வரணும். வேணும்ன்னா இன்னும் கொஞ்சம் சுருள வதக்கிக்கலாம். குழம்புப்பதமும் ஓக்கேதான். எந்த உணவுக்கு இதை பக்கவாத்தியமா வெச்சுக்கப்போறீங்க என்பதைப்பொறுத்தது அது.

வறுவல் ரெடி.. சமையல் முடிஞ்சு போச்சு...

எண்ணெய் பிரிஞ்சு, லேசா மேலாக மிதந்துவரும். கரெக்டா அந்த டைமில் இறக்கிடுங்க. சப்பாத்தி, இட்லி, தோசை, பரோட்டா , ப்ரெட்டுக்கு சரியான ஜோடி இது. கலந்த சாதங்களுக்கும் இந்த பக்கவாத்தியம் நல்லா இருக்கும்.Friday, 28 May 2010

தோழி வந்திருக்காங்க.....

பாராட்டு விழாவுக்கு புறப்பட்டுக்கிட்டிருக்கும்போதுதான் ஞாபகம் வந்தது. வைர மோதிரம் வாங்க விட்டுப்போனது. அந்தக்குறை விழாமேடையில் தீர்ந்துடுச்சு. சென்னை சதுரத்தின் பொருளாளர் சந்தனமுல்லை , மேடையில் வெச்சு ஒரு வைர பென்டென்ட் பரிசா கொடுத்திருக்கார். வைரம் பெண்களின் தோழின்னு சொல்லுவாங்க .ஸோ பிடிக்காம இருக்குமா:-)) நன்றி சந்தனமுல்லை.


இதை நானும் பகிர்ந்தளிக்கிறேன்.


அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Thursday, 27 May 2010

வரலாறு ரொம்ப முக்கியம்....

வீடெங்கும் மலர்மாலைகளும் பூங்கொத்துகளுமாய் இறைந்து கிடந்தது. யாரோ தொலைபேசியில் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தார் . 'இது ஆரம்பம்தான்... இனிமே பாருங்க. வாங்குறதுக்கு ரெண்டு கை பத்தாது'. ஒருத்தர் சூட்டிய புகழாரத்துக்கு புன்னகையே பதிலாக கிடைத்தது.

'பத்திரிக்கைக்காரங்க எப்போ வரட்டும்ன்னு கேக்கிறாங்க' என்ற கேள்விக்கு அப்பாயிண்ட்மெண்ட் டைரி பார்த்து , மறுநாள் சாயந்திரத்துக்கு நேரம் குறிக்கப்பட்டது . " இன்னிக்கு அவங்க பொண்ணுக்கு பிறந்தநாள். இன்னிக்கு முழுசும் அவங்ககூடதான் இருக்கப்போறாங்களாம். அப்பாயிண்ட் மெண்டையெல்லாம் கான்சல் பண்ண சொல்லிட்டாங்க . நாளைக்குத்தான் டைம் கொடுத்திருக்காங்க. " செக்ரட்டரி சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார்.

இந்த வாரக்கடைசியிலேயே ஃபங்க்ஷன் வெச்சுக்கணும்... என்று வந்து நின்ற ரசிகர் மன்ற தலைவருக்கு, 'ஏற்பாடெல்லாம் பலமா இருக்கணும்.. புரிஞ்சதா?.. ஏர்போர்ட்டிலிருந்து விழாமேடை வரை வரிசையா வினைல் போஸ்டர் இருக்கணும். ஃபங்க்ஷன்ல எடுத்த போட்டோக்களை, முக்கியமான பத்திரிக்கைகளுக்கு அனுப்பிடுங்க. வீடியோ நல்ல க்வாலிட்டியா இருக்கணும். முக்கியமா அந்த பொன்னாடையை மறந்துடாதீங்க 'என்றெல்லாம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

என்ன ஃபங்க்ஷன்?... எதுக்கா?... என்னாங்க இப்படி கேட்டுப்புட்டீங்க!!!
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;

நம்ம தம்பி அஹமது இர்ஷாத் எனக்கு Best Story Writer விருது கொடுத்திருக்காரு. அதுக்கான விழாதான் நடக்கப்போவுது. உண்மையிலேயே சந்தோஷமா இருக்கு . நன்றிப்பா.

விருதுக்கு மேட்சிங்கா காஸ்ட்யூம், அக்சஸரீஸ் இருக்க வேண்டாமா?.. ஷாப்பிங் போறேன். வர்ட்ட்ட்ட்ட்ட்டா!!!

கிடைக்கிறதை பகிர்ந்து கொடுக்கணும் . நான் கொடுக்கப்போவது இவர்களுக்கு;
Wednesday, 26 May 2010

மனசுக்குள்.. மனசுக்குள்...

அப்போதுதான் கல்லூரி விட்டிருக்க வேண்டும்.. வகுப்பறையில் அடித்த அரட்டை போதாதென்று.. பேருந்து நிறுத்ததிலும், குழுமியிருந்த சிட்டுக்கள் சள சளவென்று பேசிக்கொண்டிருந்தனர்.

"டீ... பஸ் வந்திட்டது. வா போகலாம்"

"இருடி.. அடுத்த பஸ்ஸில் போய்க்கலாம் . இதுல கூட்டமா இருக்கு"

"இதோட ரெண்டு பஸ் போயாச்சு.. கூட்டமே இல்லாத பஸ்தான் வேணும்ன்னா.. பஸ்ல பாம் இருக்குன்னு புரளி கிளப்பினாத்தான் உண்டு . சௌகரியமா மாமியார் வீட்டுக்கே கொண்டுபோய் விட்டுடுவாங்க.. எப்படி வசதி?.."

பதில் பேச வாயெடுத்தவள், விஷாகா வருவதைப்பார்த்ததும் அப்படியே வார்த்தைகளை விழுங்கிக்கொண்டாள்.

விஷாகா அவள் கல்லூரித்தோழன். நல்ல நண்பன்... அதுதான் இப்போ அவளுக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. நாலைந்து மாதங்களாக அவனிடம் ஏதோ மாற்றத்தை உணர்கிறாள். முன்பைவிட இன்னும் நெருங்கிப்பேசுகிறான் . அவளைக்கண்டதும் , அவன் முகத்தில் ஒரு வித்தியாசமான உணர்ச்சிக்கலவை தெரிவது மாதிரி இருக்கிறது. அவன் தோழர்கள் கூட அவளிடம் இன்னும் மரியாதையாக நடந்து கொள்கிறார்கள்.

'ஒருவேளை என்னுடைய பிரம்மையாக இருக்குமோ. ஏதாவது கேட்கப்போய் அவன் தப்பாக எடுத்துக்கொண்டால்... நல்ல நட்பை நானே கெடுத்துவிடுவேனோ'
எப்போதும் போல் இயல்பாக பேசவும் முடியாமல் , ஒதுங்கிச்செல்லவும் இயலாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.

"ஹாய் ஷீல், இன்னும் வீட்டுக்கு போகலியா?" என்று கேட்டவாறே அங்கு வந்தான் விஷாகா.

"இல்ல.. வந்து.."

"அடுத்த பஸ்ஸுக்கு டைம் இருக்கு. வாயேன்,.. கான்டீன்ல ஒரு காப்பி சாப்பிட்டு வரலாம்"

ஷீலாவும் அவனும் கான்டீனில் வழக்கமான ஜன்னலோர டேபிளில் அமர்ந்தார்கள். மெனுகார்டில் தேடி,.. ஆர்டர் கொடுத்துவிட்டு நிமிர்ந்தவன் அவளைப்பார்த்து ,"கொஞ்சம் தனியாப்பேசணும்ன்னுதான் இங்க கூட்டிட்டு வந்தேன்" என்றான்.

"சரி,.. தனியா பேசிமுடிச்சதும் சொல்லு, நான் ஸ்னாக்ஸ் இருக்கான்னு பாத்துட்டு வரேன்"

"ஹா..ஹா.. ஜோக்கடிக்கறதாருந்தா முதல்லயே சொல்றதில்லையா.. லூஸு . எவ்ளோ கஷ்டப்பட்டு சிரிக்க வேண்டியிருக்கு.. ஓ.கே. சீரியஸாவே உங்கிட்ட பேசணும்ன்னுதான்.."

"சரி சொல்லு" அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை. அவன் என்ன சொல்ல வருகிறான் என்று ஒருமாதிரி ஊகித்துவிட்டிருந்தாள்.

கொஞ்ச நேரம் தலைகுனிந்து , விரல் நகங்களையே பார்த்துக்கொண்டிருந்தவன் மெதுவாக நிமிர்ந்தான். "ரொம்ப நாளா உங்கிட்ட சொல்லணும்ன்னு நினைப்பேன். நீ ஏதாவது திட்டிட்டா என்ன பண்றதுங்கிற பயத்துல சொல்ல முடியாம போயிடுவேன். ரொம்ப யோசிச்சிதான் இதை சொல்றேன்.... என் வாழ்க்கையில் நீ வந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன். I think i'm in love with you "

அவள் ஒன்றும் சொல்லாமல் தம்ளரிலிருந்து சிந்திய நீரில் விரலால் கோலமிட்டுக்கொண்டிருந்தாள் .

"ப்ளீஸ்.. ஏதாவது சொல்லேன்"

"என்ன சொல்றது.. நீ திடீர்ன்னு இப்டி சொல்வேன்னு நான் எதிர்பார்க்கலை"

"ஆனா,.. நான் ரொம்ப நாளா உன் நினைப்பாவே இருக்கேன் தெரியுமா?? . நம்ம காலேஜ்ல ஸ்ட்ரைக் நடந்தப்ப பசங்களை மட்டும் வகுப்புக்கு வரக்கூடாதுன்னு தள்ளி வெச்சிருந்தாங்களே, அப்ப நான் மட்டும் லைப்ரரிக்கு வரதா சொல்லிட்டு காலேஜுக்குள்ள வருவேனே, ஞாபகம் இருக்கா,மொத்த காலேஜும் பெங்களூருக்கு டூர் போனப்ப நான் மட்டும் ஏன் காலேஜ் வந்திட்டிருந்தேன் தெரியுமா?? , எல்லாம் உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும்ன்னுதான்"

அவன் ஒவ்வொன்றாய் லிஸ்ட் போடப்போட அவள் மனக்கண் முன் ஒவ்வொன்றாய் காட்சியாய் விரிந்து , புது அர்த்தங்கள் புரிந்தது. கோவிலில், தியேட்டரில் சந்தித்துக்கொண்டது , மணிக்கணக்காய் அவளிடம் பேசிக்கொண்டிருந்தது, வீட்டிலிருந்து 'உனக்குப்பிடிக்குமே' என்று ஏதாவது கொண்டு வருவது , கூடவே வந்த பஸ்பயணங்கள் ... தற்செயலாய் நடந்தது என்று நினைத்த ஒவ்வொன்றுக்கும் பின் இருந்ததெல்லாம் அவனுடைய மனசுதானா!!!!

லேசாக செருமிக்கொண்டவள் அவனை ஏறிட்டுப்பார்த்தாள். " ஸாரிப்பா.. இது நடக்காது. வேண்டாம்.. என் மனசுல அந்த மாதிரி எண்ணம் எதுவுமில்லை."

லேசாக கண்ணீர் திரையிட்ட கண்களை சிரமப்பட்டு மறைத்து சமாளித்துக்கொண்டான்.

"ஏன்?.. என்னைப்பிடிக்கலையா!!!"

"நான் அப்படிச்சொல்லலியே.. பிடிக்காமலா உன்னை என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்னு சொல்றேன்?. எனக்கு மேற்படிப்பெல்லாம் படிக்கணும். இந்த லவ்வு, ஜவ்வு மேட்டரெல்லாம் மூளைக்குள்ள புகுந்திடுச்சின்னா அப்றம் அவ்ளவுதான். அதுலயும் நாம இன்னும் படிப்பையே முடிக்கலை. எங்க வீட்டுல இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டாங்க"

"வீட்டுல இதுக்கு இப்ப ஏன் சம்மதம் கேக்கணும். நாம ரெண்டு பேருக்கும் வேலைகிடைச்சப்புறம் நானே உங்க வீட்டுல வந்து பேசறேன்"

"ஸாரிப்பா... அந்த சிரமம் உனக்கு வேண்டாம். எனக்கு இந்த காதல், கத்தரிக்காயிலெல்லாம் நம்பிக்கையில்லை. சும்மா ஊர் சுத்துறதுக்காகத்தான் காதல்ன்னா , அது எனக்கு தேவையில்லை... லவ்வை சொல்றதுக்கே இப்படி பயப்படுறியே,.. நாளைக்கே ஒரு பிரச்சினைன்னா சமாளிக்க தைரியம் இருக்கா உனக்கு?.. காபி வந்துட்டுது. எடுத்துக்கோ".

"இதப்பார்.. எதுவுமே பார்க்காம வர்றதுதான் காதல். உன்னைவிட அழகான பெண் கிடைக்காம நான் உங்கிட்ட காதல் சொல்லலை. ஃப்ரெண்ட்ஸ் கூடவும் ஊர் சுத்தலாம் ... அதுக்கு காதலி தேவையில்லை . மதம், மொழி, நிறம் இதையெல்லாம் பார்த்து வந்தா அதுக்கு பேரே வேற. உன்னை எப்போலேர்ந்து , ஏன் காதலிக்க ஆரம்பிச்சேன்னு கேட்டா எனக்கு பதில் தெரியாது. எந்த வினாடியில் நீ என் மனசுக்குள் நுழைஞ்சேன்னு எனக்கு சொல்லத்தெரியலை . ஆனா,. உன்னை என் மனசுக்குள் சிம்மாசனத்தில் உக்காத்தி வெச்சு அழகு பாத்துக்கிட்டிருக்கேன் , அது நிஜம். சொல்றதை நினைச்சு பயப்படலை. அதனால உன்னோட நட்பையும் இழந்துடுவேனோன்னுதான் ..... ஓ.கே.. உன்னை கட்டாயப்படுத்த விரும்பல. ஆனா,.. என் நினைவுகளிலிருந்து உன்னை தூக்கி எறிய என்னால் முடியாது. என் சாம்பலோடுதான் அதுவும் கரையும். ஹேய்... ஹேய்... ஏன் சிரிக்கிற!!! "

புரையேறியதால் லேசாக தலையை தட்டிக்கொண்டே... விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

" ஹா..ஹா.. ஹா.. நீ எப்போடா சொல்வேன்னுதான் நான் காத்துட்டு இருந்தேன். இன்னிக்கு மட்டும் நீ சொல்லாம இருந்திருந்தேன்னு வையி.. நானே உன் சட்டையை பிடிச்சு டீலா நோ டீலான்னு கேட்டுருப்பேன் . சும்மா நூல் விட்டு பார்த்தேன்... பரவாயில்ல, நல்லாவே பேசற. வீட்டுல உள்ளவங்களை நிச்சயமா பேசிப்பேசியே கழுத்தறுத்து ... ஐ மீன்.. சம்மதிக்க வெச்சுடுவே. ஆமா... உங்க வீட்டுக்கு காபி சாப்பிட ஒருதடவை கூப்பிட்டியே ஞாபகம் இருக்கா!!!"

அவன் நம்ப முடியாமல் நின்று கொண்டிருந்தான், ஆச்சரியத்தாலும் சந்தோஷத்தாலும்.... பின்,.

"இன்னிக்கே... இப்பவே போலாம்."டிஸ்கி: நிஜமாவே சிறுகதை எழுத முயற்சி பண்ணியிருக்கேன். ஏப்ரல்,மே, ஜூன், ஃபூலெல்லாம் பண்ணலை. குறைகளிருந்தா மெதுவாவே குட்டுங்க ... , மீ பாவம்....Friday, 21 May 2010

திக்.. திக்.. திக்..

இன்னிக்கு காலைல வேறெதுவும்தான் கிழிக்க முடியலை,.. இதையாவது கிழிப்போமேன்னு காலண்டரில் தாளைக்கிழிச்சேன். தேதிய பாத்ததும் திக்குன்னு ஆகிப்போச்சு. மே- 21.. ஆமா.. அதுக்கென்ன. நேத்திக்கி இருவதுன்னா இன்னிக்கு இருவத்தொண்ணு, நாளைக்கு இருவத்திரெண்டு. இதெல்லாம் ஒரு விஷயமான்னு கேக்கணும்போல் இருக்கா.. ஆனா, நீங்க கேக்க மாட்டீங்க ஏன்னா, உங்களுக்கே தெரியும் அந்த கறுப்பு தினத்தைப்பத்தி . இந்த தினம் என்னோட வாழ்க்கையிலும் மறக்கமுடியாத ஒண்ணு .

என் பையன் பிறந்தபின் , ரொம்ப சின்னக்குழந்தையை என்னால தனியா பார்த்துக்க முடியாது, அதுவும் முதல்குழந்தைங்கிறதால இன்னும் கவனம் தேவைன்னு சொல்லி , நான் நாலஞ்சு மாசம் ஊரிலேயே இருக்கும்படி கட்டாயப்படுத்திட்டாங்க. அதெல்லாம் நான் பார்த்துப்பேன்னு சொல்லியும் யாரும் கேக்கலை. ஒருவழியா டிக்கெட்டெல்லாம் புக் பண்ணி புறப்பட நாள் குறிச்சோம். என்னிக்கு,... மே இருபத்தொண்ணு அன்னிக்கு.

குழந்தைக்கு வேண்டியது , எனக்கு வேண்டியது , நாட்டுமருந்துப்பொருட்கள் , இன்னும் இங்கே கிடைக்காத சாதனங்கள்ன்னு பார்த்துப்பார்த்து மூட்டை கட்டுற வேலை நடந்துச்சு. இப்ப மாதிரி மும்பையில் சவுத் இண்டியன் கடைகளும் அப்போ நிறைய கிடையாது... இருந்தாலும் எல்லா அயிட்டங்களும் கிடைக்காது .

கிளம்புறதுக்கு முன்னால சொந்தக்காரங்க வீட்டுக்கு போய் , "நா போயிட்டு வரேன்"ன்னு சொல்லிட்டு வரவும் ,அவங்க எங்க வீட்டுக்கு வரவுமா ஒரே பிசி ஷெட்யூல். கடைசியா, நா ஊருக்கு பேக்கப் ஆகிற நாளும் வந்திச்சு . விடியக்காலை அஞ்சு மணிக்கு ட்ரெயினைப்பிடிக்கணும் . கடைசி நேர பேக்கிங்கில் அம்மா பிசியாயிட்டாங்க . அன்னிக்கு என்னோட சொந்தக்காரங்க ஒருத்தரும் என்னை வழியனுப்ப வந்திருந்தாங்க . வீட்டுக்கு பக்கத்துல இருந்த தியேட்டரில் நைட்ஷோ பாத்துட்டு வரலாம்ன்னு கிளம்பினோம் .

படம் பாத்துட்டு வெளிய வரும்போது நைட் ஒண்ணரை, ரெண்டு மணி இருக்கும். தியேட்டருக்கு வெளிய பயங்கரக்கூட்டம் . ரோட்டிலெல்லாம் ஆட்கள் நின்னுக்கிட்டு சீக்கிரம் வீட்டுக்கு போங்கன்னு எல்லாரையும் அவசரப்படுத்திட்டு இருக்காங்க. போலிஸெல்லாம் நிக்குது . நாளைக்காலைலதான ஊருக்கு போறேன் இப்ப எதுக்கு பாதுகாப்பு!!!! . அப்பத்தான் அந்த செய்தி இடி மாதிரி விழுந்திச்சு . "பிரதமர் ராஜீவ் காந்திய கொல செஞ்சுட்டாங்களாம் ". உண்மையிலேயே இடி மாதிரியான செய்திதான். அரசியலை அவ்வளவு உன்னிப்பா கவனிச்சதில்லைன்னாலும் அவர் கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கை அப்போ விவாதத்தில் இருந்ததை கவனிச்சிருக்கேன். நல்ல ஸ்மார்ட்டான ,துடிப்பான ஒரு அரசியல்வாதி . விவாதங்களுக்கு அப்பாற்பட்டு, அவரை அப்போதைய மாணவர்களுக்கு ரொம்ப பிடிக்கும் .

எப்படியோ வீடு வந்து சேர்ந்தோம் . இப்பத்தான் என்முன்னால் நிக்கிற பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமா உறைக்க ஆரம்பிச்சது . விடிஞ்சா ரயிலப்பிடிக்கணும் . இத விட்டா அப்றம் டிக்கெட் கிடைக்க எத்தனை நாளாகுமோ?.. மொதல்ல நாளைக்கு ரயில் ஓடப்போகுதோ இல்லியோ ,.. கைக்குழந்தையை கொண்டுக்கிட்டு எப்டி பயமில்லாம போகமுடியும் . ரெண்டு நாள் ரயில் பயணமாச்சே.. வழியில் ஏதாவது பிரச்னைன்னா , லக்கேஜ் போனாலும் போயிட்டுப்போகுதுன்னு விட்டுடலாம்.. கைக்குழந்தையை வெச்சுக்கிட்டு ஊர்போய்ச்சேர முடியுமா?? புத்தியில ஒண்ணுமே ஓடமாட்டேங்குது.

கடைசில ரிஸ்க் எடுக்க வேணாம்ன்னு முடிவு பண்ணி , பயணத்தை கான்சல் செஞ்சேன். அங்கங்க சின்னச்சின்னதா கலவரம் வேற ஆரம்பிச்சுட்டது. ரங்க்ஸுக்கு போன் பண்ணி , பயணம் ரத்து ஆனதை சொல்லிடலாம்ன்னா , லைனே கிடைக்க மாட்டேங்குது . ட்ரங்க் கால் புக் பண்ணி, ஒருவழியா சாயந்திரம் லைன் கிடைச்சது.

விஷயத்தை சொன்ன கையோட இன்னொரு கவலை பிடிச்சிக்கிட்டது. அடுத்தது எப்போ டிக்கெட் கிடைக்குமோ!!!! ஆனா.. பயந்தமாதிரி இல்லாம ரயில் கூடுதல் பாதுகாப்போட புறப்பட்டு பத்திரமா மும்பை வந்து சேர்ந்ததுன்னு அப்புறமா தெரிய வந்துச்சு. இருந்தாலும் எதுக்கு ரிஸ்க்.

இப்போ மாதிரி காலக்கெடுவெல்லாம் இல்லாட்டாலும்,... அப்பவும் டிக்கெட் புக் செஞ்சா ரெண்டு மாசத்துக்கப்புறத்திய தேதியில்தான் பயணம் புறப்படமுடியும். அடுத்த புறப்படும் படலம் ஆரம்பமாகியது. அடியைப்பிடிடா பாரதப்பட்டா...ன்னு மறுபடியும் முதலிலிருந்து டிக்கெட் புக் செய்வது, காத்திருப்பது, லக்கேஜ் பேக் செய்வதுன்னு ஆரம்பிச்சது . பட்ட காலிலே படும் என்பது மாதிரி இந்தமுறை தடங்கல் இன்னொரு ரூபத்தில் வந்தது. ரொம்ப நெருங்கிய சொந்தம் ஒண்ணு ஆக்ஸிடெண்டில் தவறிடுச்சு. இந்த முறை அம்மா எங்கூட வரமுடியாத நிலைமை. ஆகவே, வெற்றிகரமான இரண்டாவது தடவையா இப்பவும் பயணம் கேன்சல். திருவனந்தபுரத்திலிருந்து புறப்படுற ஏதாவது ட்ரெயினில் டிக்கெட் கிடைக்குமான்னு பார்க்க ஆரம்பிச்சேன் . இந்த தடவை கோடை விடுமுறை என்பதால், எந்த ட்ரெயினிலும் டிக்கெட் கிடைக்கலை.

வேற வழியில்லாம , அடுத்ததா இன்னொரு முயற்சி எடுத்தோம். சென்னையிலிருந்து மும்பைக்கு ஏகப்பட்ட ட்ரெயின் இருக்கு, அதுல தத்கால்ல முயற்சி செய்யலாம்ன்னு பார்த்தா நல்ல வேளையா கிடைச்சிட்டது. ரங்க்ஸ் சென்னை வந்து என்னைக்கூட்டிச்செல்வதா ப்ளான். திட்டப்படி , குறிப்பிட்ட நாள் காலைல , சென்னை வந்து சேர்ந்தோம். இந்த தடவையும் ஏதாவது குழப்பம் வராம இருக்கணுமேன்னு மனசுக்குள்ள ஒரே படபடப்பு .

ட்ரெயினில் ஏறி, மும்பை வந்து சேர்ந்தப்புறம்தான் நிம்மதியாச்சு. வருஷாவருஷம் .. மே-21 வந்தாலே கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சுடும். அன்னிக்கு இருந்த பதட்டமும் படபடப்பும், ஞாபகம் வரும்.கூடவே ஒரு குற்ற உணர்வும் வரும். நம்முடைய உடன்பிறவா சொந்தங்கள், வாழ்நாள் முழுசும் படற கஷ்டத்துக்கு முன்னாடி , இதெல்லாம் தூசு. இதைப்போய் கஷ்டம்ன்னு நினைக்கிறேனேன்னு தோணும். ஒரு நாள் பயணத்துக்கே நான் எப்படியெல்லாம் பயந்தேன். ஆனா, அங்க.....

டிஸ்கி: இது இருவத்தொண்ணாம் தேதி எழுதப்பட்டது. பிஞ்ச வலையை ஒட்ட வைக்கிறதுக்கு நாள் பிடிச்சதால் லேட்டா வெளியிடப்பட்டது.

எனக்குப்பிடித்த பாடல்கள்..

மனுஷன் பிறக்கறதிலிருந்து , இறக்கறவரைக்கும் கூடவே சங்கீதமும் வருது. தாலாட்டுலேர்ந்து, ஆரம்பிச்சு ஒப்பாரி வரைக்கும் எல்லாமே சங்கீதம்தான். இதுக்கு இடைப்பட்ட காலத்துல சங்கீதத்தை ரசிக்கிறதுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணமிருக்கும். ஒவ்வொருவருக்கும் ரசனைகளும் வேறுபடும். சங்கீதத்தை ரசிக்கிறதுக்கு மொழி தேவையில்லை என்பது என் கருத்து. வரிகளை ரசிக்கிறதுக்கு வேணுமானா .. மொழி தேவைப்படலாம்.

எனக்கும் பாட்டு கேக்கிறதுன்னா, ரொம்ப பிடிக்கும் . அதுவும் மெலோடியஸான பாடல்களை, அமைதியான சூழ்நிலையில் கேக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும் . ஒரு காலத்துல சென்னை வானொலியில பத்து, பத்தரை மணிக்கு மேல பழைய சினிமா பாடல்களை ஒலிபரப்புவாங்க. கேக்கிறதுக்கே அவ்வளவு சுகமா இருக்கும். வானொலி போய் டிவி வந்து,.. இப்ப வானொலி மறுபடி எஃப். எம் ஆக அவதாரம் எடுத்தபின், ஆஹா...

சினிமா பாட்டுகளை தவிர, கர்னாடக சங்கீதம்ன்னு ஒண்ணு அறிமுகமானது ஸ்கூலில்தான். எங்களுக்கு பாட்டுவகுப்புன்னு ஒண்ணு , மரத்தடியில வெச்சு நடக்கும். பாட்டு வாத்தியார் மொதல்ல, பாட்டு வரிகளை ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி வெச்சுக்க சொல்வார். ராகம், தாளம் எல்லாம் குறிச்சுக்கணும். அப்றம் பல்லவி, அனுபல்லவி, சரணம்ன்னு ஒவ்வொண்ணா பாட கத்துக்கொடுப்பார். எப்படியும் ஒரு பாட்டை பத்துப்பதினஞ்சு நாட்களுக்குள்ள கத்துப்போம். "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்" இந்த பாட்டுதான் மொதமொத கத்துக்கிட்டது. ஆனா,.. நாங்க பாட ஆரம்பிச்சதும், அந்த ஏரியாவுல கச்சேரி நடத்திக்கிட்டிருந்த கழுதைகள் , எங்ககிட்ட தோல்விய ஒத்துக்கிட்டு வெளிநடப்பு செஞ்சுடுச்சு. பாவம்.. அதுகளும் பொழைக்க வேணாமா??.. அதனால பாட்டு வகுப்பை ,வரலாறு டீச்சர்கிட்ட விட்டுக்கொடுத்துட்டு தூங்கப்போயிட்டோம் :-))))

உண்மையான சங்கீதத்தை எம்.எஸ் அம்மா குரலில்தான் உணர்ந்தேன். எப்பவாவது சினிமாப்பாட்டுகளுக்கிடையே , கர்னாடிக் சங்கீதமும் கேக்கும். தேடிப்பிடிச்சு ரசிச்சதில்லை.ஆனா.. காதுல விழுறதை ரசிப்பேன் . உண்மையை சொன்னா அப்பல்லாம் எம்.எஸ், எம்.எல். வி அம்மா,ன்னு ரொம்பச்சில பேரை மட்டும்தான் எனக்கு அடையாளம் தெரியும். பூந்தோட்டத்துக்கு விளம்பரம் தேவையில்லை. எம். எஸ். அம்மா பாடினதில பிடிச்ச பாடல் ஒன்னு நீங்களும் கேளுங்க:


டிசம்பர் சீசன்ல எம். எல்.வி. அம்மாவோட கச்சேரிகளைப்பத்தி ஆனந்தவிகடனில் படிச்சதுண்டு. இப்ப யூடியூப் புண்ணியத்தில் கேக்கவும் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. இவங்க நடிகை ஸ்ரீவித்யாவின் அம்மா என்பது கூடுதல் செய்தி.


இசையுலகில் இருக்கும் பெண்குரல்களில் சுசீலாம்மா, ஜானகியம்மா, சித்ரா, கவிதா கிருஷ்ணமூர்த்தி(இவங்க இந்திப்பாடல்களில் பின்னியெடுப்பாங்க).எல்லோருமே ரொம்ப பிடிக்கும். ஜானகியம்மா கூடுதல் விசேஷம். எப்படி வேணும்ன்னாலும் அவங்க குரல் வளைஞ்சு கொடுக்கும். மழலைக்கும் , முதுமைக்கும் கூட அழகா பாடியிருப்பாங்க . இப்பவும் அவங்க குரல் அவ்வளவு இனிமையா இருக்கு . அவங்க பாடினதில் இது ரொம்ப பிடிக்கும்.
இந்தியில் உதித் நாராயண்னு ஒரு பாடகர் இருக்கார். நம்மூருக்கு வந்து தமிழைக்கடிச்சு துப்புவாரே அவரேதான் . ஆனா,.. இங்கே அவரோட குரல் நிறைய பேருக்கு பிடிக்கும். சில பாடல்கள் , அவர்பாடினால்தான் உயிரோட்டம் இருக்கிறமாதிரி இருக்கு. 'உயிரே' படத்துல வர்ற இந்த பாடல் தமிழைவிட இந்திவெர்ஷன் ரொம்பபிடிக்கும். தமிழில் உன்னிமேனன் பாடியிருந்தாலும் இதை கேக்கும்போது தன்னையறியாமலே கண்கள் ஈரமாகும். கூட கவிதாவும் பாடியிருக்காங்க.தமிழில் எஸ்.பி.பி., ஜேசுதாஸ் ரொம்ப பிடிக்கும். ஜேசுதாஸின் மெலோடியஸ் பாடல்களும் , எஸ்.பி.பியின் காந்தக்குரலும் எத்தனை கேட்டாலும் அலுக்காது. ஆனாலும் என் ஆல்டைம் ஃபேவரிட் 'ஸோனு நிகம்" . மனுஷன் பாடுறது அவ்வளவு குழைவா இருக்கும். இத்தனை வருஷங்களாக பாடினாலும் , அவரோட குரலில் எந்த மாற்றமும் இல்லை. அவரோட எல்லாப்பாட்டுக்களும் பிடிக்கும். லேட்டஸ்ட் பாட்டு உங்களுக்காக.பிடிச்ச பாடல்களை பகிர்ந்துக்க சகோதரர் எல்.கே அழைச்சிருந்தார். அஞ்சுபேரைப்பத்தி சொல்லணும்னு சொல்லியிருந்தாலும், விதிமுறைகள் என்பதே மீறுவதற்காகத்தான் என்பதால் ...இன்னொரு பாட்டு பார்சல்ல்ல்ல்ல்.

பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலில், நிறைய பாட்டுகள் கேட்டிருந்தாலும், இந்த படத்தில் வரும் எல்லாப்பாடல்களும் பிடிக்கும். குறிப்பா இந்த பாட்டு.இன்னும் ஹரிஹரன் , ஷங்கர் மஹாதேவன் , அருணா சாய்ராம்ன்னு என் லிஸ்ட் அனுமார்வால் மாதிரி நீண்டுகிட்டே போகும்.. அதனால பாட்டு கேக்கணும்ன்னு நினைச்சா என்னோட இன்னொரு புதுவீட்டுக்கு வாங்க. அங்கே எனக்குப்பிடிச்ச இசையை உங்களோட பகிர்ந்துக்கிறேன்.


Tuesday, 18 May 2010

மாம்பழமாம் மாம்பழம்....

"மாம்பழம்..." பேரைச்சொன்னாலே ச்சும்மா நாக்குல எச்சில் ஊறுதில்ல ". மாம்பழ சீசன் ஆரம்பமாகி செம போடு போட்டுக்கிட்டிருக்கு. பழக்கடைகளில் மாம்பழத்தையும், வாழைப்பழத்தையும் தவிர வேறு பழங்களை பார்க்க முடியல்லை. அதிலும் மும்பையில், 'அப்பூஸ்' என்று அழைக்கப்படும் அல்போன்ஸா மாம்பழம் வந்தாத்தான் சீசன் களைகட்டும். சீசன் ஆரம்பத்தில் டஜன் ஐந்நூறு ரூபாய்க்கு ஆரம்பித்து , இப்போ நானூற்றைம்பதில் நிற்கிறது. எக்ஸ்போர்ட் க்வாலிட்டி, அதான் இந்த விலை. இப்போ இயற்கை உரத்தில் வளர்க்கப்பட்டது , ரசாயன+இயற்கை உரத்தில் வளர்க்கப்பட்டதுன்னு ரெண்டு ரகம் விற்பனைக்கு வருது. இயற்கை வகை கொஞ்சம் விலை கூடுதல்.சீசன் முடியும்போது எப்படியும் இருநூற்றைம்பது வரை விலை இறங்கும்.

மாம்பழ சீசன் இருக்கும்வரை நிறைய வீடுகளில் ஆம்ரஸ், பூரி,சப்பாத்தி கண்டிப்பா இருக்கும். அப்பூஸ் விலை அதிகமா இருக்குன்னாலும், அதே மாதிரி சுவையுள்ள 'பாதாம் அப்பூஸ்' அந்த இடத்தை இட்டு நிரப்புகிறது. சில சமயங்களில் அப்பூஸைவிட பாதாம் பயங்கர டேஸ்டா இருக்கும். கிலோ வெறும் முப்பது, முப்பந்தஞ்சு ரூபாய்தான். மாங்காய் , மாம்பழம் எல்லாம் சீசன்ல மட்டும்தான் சாப்பிட முடியும்ன்னு இல்லை. இப்போ வாங்கி பதப்படுத்தி வெச்சுக்கிட்டா சீசன் முடிஞ்சப்புறம்கூட சாப்பிடலாம்.

அப்பூஸ்,.. ஹப்பூஸ்.. எப்டி வேணும்ன்னாலும் சொல்லலாம். எப்படி சொன்னாலும் இனிக்கும்.

கிளிமூக்கு மாங்காயை , கேரட் துருவுற மாதிரி துருவி வெச்சுக்கணும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு மாங்காய் துருவலை வதக்கிக்கணும். ஒரே நிமிஷம்தான். அதுக்கு மேல வதக்கக்கூடாது. அப்புறம் ஒன்னரை மடங்கு சர்க்கரையை , அதனுடன் சேர்த்து கிளறிக்கிட்டே இருக்கணும். ரெண்டு ஏலக்காயை தட்டிப்போட்டுக்கலாம். எல்லாம் சேர்ந்து அல்வா பதத்தில் வந்ததும் இறக்கி ஆறவைத்து, சுத்தமான பாட்டிலில் வைத்து, ஃப்ரிஜ்ஜில் வெச்சிக்கலாம். கைபடாம எடுத்து பரிமாறினா கெட்டுப்போகாம இருக்கும். சப்பாத்தி, பூரி, ப்ரெட்டுக்கு நல்லா இருக்கும். ஜாமுக்கு பதிலா இதை உபயோகப்படுத்தலாம். சிலபேர் என்ன செய்வாங்கன்னா, மாங்கா துருவல், சர்க்கரை ரெண்டையும் ஒரு பாத்திரத்தில் வெச்சு, வெய்யிலில் வெச்சிடுவாங்க. வெய்யிலில் சர்க்கரை உருகி, பதம் தானாவே வந்துடும். வெய்யில் வீணாத்தானே போகுது... அப்பப்ப லேசா கிளறி வெச்சுடணும். ஒரு பத்து நாள் பொறுமையா செஞ்சா சர்க்கரையில் ஊறிய மாங்காய் அட்டகாசமா இருக்கும்.

லேசா பழுத்த மாங்காயை தோல்சீவி , பெரிய துண்டுகளாக்கி குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேகவெச்சுக்கணும். இன்னொரு பாத்திரத்தில் ஒண்ணரை மடங்கு சர்க்கரையை அரை கப் தண்ணீருடன் சேர்த்து,ஒரு கம்பிப்பதம் வரும்வரை பாகு காய்ச்சணும். அதில் இந்த மாங்காய்த்துண்டுகளை போட்டு, சிறு தீயில் கொதிக்க விடணும். மாங்காய்த்துண்டுகள் லேசா வெளிறி கண்ணாடித்துண்டுகள் போல் ஆகிடும். தின்னா ரத்தம்வருமான்னு எல்லாம் சந்தேகம் கேட்கக்கூடாது :-)))))). அப்றம் ஆறவெச்சு , தோணும்போதெல்லாம் திங்கவேண்டியதுதான் . இதை 'முரம்பா'ன்னு சொல்லுவாங்க.

மாம்பழத்துல ஆயிரத்துக்கு மேற்பட்ட வகைகள் இருக்காம். இங்கிலீஷுல mangoன்னு சொல்றாங்களே... அந்த வார்த்தை தமிழில் இருந்துதான் இங்கிலீஷுக்கு போயிருக்கு. தமிழில மாங்காய்ன்னும் மலையாளத்தில் மாங்ஙன்னும் சொல்லப்படுவதை கவனிச்ச போர்ச்சுக்கீசியர்கள் இதை mangaன்னு சொல்ல, இங்கிலீஷ்காரர்கள் mango ஆக்கிட்டாங்க. நாடுபிடிக்க வந்தவங்க மொழியையும் சேர்த்து பிடிச்சிக்கிட்டாங்க போலிருக்கு.

போர்ச்சுக்கீசியர்கள்தான் முதன்முதலில் அப்பூஸ் மாம்பழத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்திருக்காங்க. கொங்கண் பிரதேசத்தை சேர்ந்த கோவாவில்தான் இது பயிரிடப்பட்டது. கோவாக்காரங்க அப்பூஸ்ன்னு இதை அழைச்சா, பக்கத்துல இருக்கிற மராட்டிக்காரங்க ஹப்பூஸ்ன்னு சொல்றாங்க . மஹாராஷ்டிராவில் ரத்னகிரி, தேவ்கட் போன்ற இடங்களில் விளையுற மாம்பழங்கள்தான் வெளி நாடுகளுக்கு அதிகமா ஏற்றுமதி செய்யப்படுது. அமெரிக்கா இந்திய மாம்பழங்களின் மீதான தடையை 2007 ஏப்ரலில்தான் நீக்கியிருக்குது . நம்மூரு மாம்பழத்தோட ருசி அப்படி. ஆனானப்பட்ட அமெரிக்காவே அதிர்ந்து போச்சு :-))) . தடை நீக்கப்பட்டதும் மக்களெல்லாம் இந்திய மாம்பழம் சாப்பிடுறதை , செய்திகளில் கூட பார்த்த ஞாபகம்.

தள்ளுவண்டிகளில் மாம்பழம் விக்கிறதுக்கு வரும்போது ,"ஹப்பூஸ்,.. ஹப்பூஸ்.. ரத்னகிரி ஹப்பூஸ் ஆலா"ன்னு கூவிக்கிட்டே விப்பாங்கன்னா தெரிஞ்சுக்குங்க இதன் பெருமையை. Afonso de Albuquerque என்ற போர்ச்சுக்கீசிய போர்த்தளபதியின் ஞாபகமா இதுக்கு அல்போன்ஸான்னு பேர் வெச்சிருக்காங்க. இது இந்தியாவின் மேற்குப்பகுதிகளிலும், சவுத் ஈஸ்ட் பாகிஸ்தானிலும் அதிகமா விளைவிக்கப்படுது. இதோட சீசன் ஏப்ரல், மே ரெண்டு மாசமும் சக்கைப்போடு போடும் .

நம்ம கிரிக்கெட் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் பேரைக்கூட ஒரு மாம்பழ வகைக்கு வெச்சுருக்காங்க. உத்தரப்பிரதேசம் லக்னோ மாவட்டத்தில் இருக்கும் Malihabadல் கலீமுல்லா கான் என்று ஒரு மாம்பழ விவசாயி இருக்கார். பத்மஸ்ரீ அவார்ட் வாங்கியவர் இவர். இவரோட தோட்டத்தில் ஏகப்பட்ட வகைகளை சேர்த்து உருவாக்கிய ஒட்டு மாமரம் ஒண்ணு பழம் தர ஆரம்பிச்சது. அப்படி ஒரு அருமையான சுவை அதுக்கு. சச்சின் டெண்டுல்கரின் பரம விசிறியான அவர் , சச்சினின் பெயரையே அதுக்கு வெச்சிருக்கார்.

நம்ம தமிழ்நாட்டிலும் "இமாம் பசந்த்" அப்டீன்னு ஒரு வகை இருக்கு. பயங்கர டேஸ்ட்டா இருக்கும். திருச்சிக்கருகே ஸ்ரீரங்கத்தில் ,.. தாத்தாச்சாரியார் தோட்டத்தில் விளைவிக்கப்படும் மாம்பழங்களுக்கு தனி ருசி உண்டாம். ஒரு தடவை திருச்சி போயிருந்தப்ப , ஸ்ரீரங்கம் போயிருந்தோம் . இன்னொருக்கா போய் நிதானமா தரிசிச்சுட்டு வரணும். அவ்வளவு பெரிய , சிற்ப வேலைப்பாடுகள் உள்ள கோயில் அது. தரிசனம் முடிச்சுட்டு வெளிய வந்தப்ப , எங்க ட்ரைவர்தான் இமாம் பசந்தைப்பற்றி சொன்னார். கேள்விப்படாத வகையா இருக்கேன்னு , கொஞ்சமா வாங்கினோம். வீட்டுக்கு வந்து டேஸ்ட் செஞ்சு பார்த்ததும்தான் , அடடா!!! இன்னும் கொஞ்சம் வாங்கியிருக்கலாமேன்னு தோணிச்சு.

மாம்பழம் அதன் அழகான கலருக்காகவும், சுவை மற்றும் வாசனைக்காகவும் விரும்பப்படுது . மாமரம் சுபநிகழ்ச்சிகளோட சம்பந்தப்பட்டது . மாவிலை தோரணங்களுக்கும், சமித்து (காய்ந்த மாஞ்சுள்ளிகள்) ஹோமத்துக்கும் பயன்படுது. மாங்காயாக இருக்கும்போது அதில் விட்டமின் சி நிறைஞ்சிருக்கு. அதுவே பழுத்து மாம்பழமாகும்போது விட்டமின் ஏ (beta carotene) அதிகமா இருக்கு.

இங்கே ஓடி வாருங்கள்.. பங்கு போட்டுத்தின்னலாம்.


மாமரம் நல்லா வளர்ந்து நல்ல பழங்களை கொடுக்க வெப்பமான சூழ்நிலை தேவைப்படுது. பழுக்காத மாங்காய்களை பேப்பர் பையில், இல்லைன்னா அரிசிப்பாத்திரத்தில் போட்டு வைச்சா சீக்கிரம் பழுத்துடும். மூடி வைக்கிறதால , பழத்திலிருந்து உண்டாகும் எத்திலீன் என்ற வாயு சீக்கிரம் உற்பத்தியாகி பழுப்பதை துரிதப்படுத்தும். இப்பல்லாம் என்னன்னவோ கெமிக்கல்களை உபயோகப்படுத்தி பழுக்க வெக்கிறாங்க. உடம்புக்கு கெடுதல் தரும்ன்னு தெரிஞ்சும் வியாபார நோக்கத்தோட, மக்களோட உடல் நலத்தோட விளையாடறாங்க .

முறையா பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம்தான் நல்லது. சில இடங்களில் , வைக்கோலால் மூடியும் பழுக்க வைப்பாங்களாம். விட்டமின் ஏ கண்பார்வைக்கு நல்லது . ஆனா,.. மாம்பழம் சூட்டைக்கிளப்பும்ன்னு சிலபேர் அதை தவிர்ப்பாங்க . மாம்பழம் சாப்பிட்டபின் ஒரு கப் பால் குடிப்பது சூட்டை தவிர்க்கும். மில்க் ஷேக் செஞ்சு சாப்பிடா இன்னும் நல்லது . டேஸ்ட்டுக்கு டேஸ்டும் ஆச்சு.... உடம்பும் கெடாது . மாம்பழத்தோட விறுவிறுப்பான சுவை பிடிக்காதவங்க உண்டா என்ன?.. ஃப்ரூட்டி, ஜம்பின் (jumpin) ,மாஸா, ஸ்லைஸ், ட்யூக்ஸ் போன்றவற்றின் புண்ணியத்தில் வருஷம் பூராவும் மாம்பழச்சுவையை அனுபவிக்கலாம்.

Sunday, 16 May 2010

மைக்ரோசாப்டில் வேலை வேணுமா!!!!!

நாட்டுல வேலையில்லா திண்டாட்டம் தலையை விரிச்சுப்போட்டுக்கிட்டு ஆடுது. அதுக்கு ஒரு ஜடைபின்னி, பூ வெச்சு விடத்தான் ஆளில்லைன்னா, ஒரு பாப்கட், ஸ்டெப் கட், அட... அதுவுமில்லைன்னா ஒரு லேயர் கட்ன்னு செஞ்சு விடவும் ஆளில்லாம போச்சு. மனசுக்குள்ள பொலம்பிக்கிட்டே நடந்துக்கிட்டிருந்தார் நம்ம ஹீரோ. அப்பத்தான் அவரு கண்ல அந்த பந்தல் பட்டுது.

அக்ஷய த்ரிதியைன்னா... மோர்ப்பந்தல், அன்னதானப்பந்தல் எல்லாம் அந்தக்காலத்துல வெப்பாங்களாமே. இப்பத்தான் எல்லாரும் நகைக்கடை வாசல்ல க்யூவுல நிற்கிற சம்பிரதாயத்தை ஆரம்பிச்சிருக்காங்க. ஒருவேளை உலகம் ரிவர்ஸில் சுத்தி,.. நாம அந்தக்காலத்துக்கு போயிட்டோமோன்னு ஒரு நிமிஷம் குழம்பினாலும், அடிக்கிற வெய்யிலுக்கு மோராவது சாப்பிட்டு வரலாம்ன்னு பந்தலுக்குள் நுழைஞ்சார் . வரிசையா திருவிழாக்கடைகள் மாதிரி ஸ்டால்கள். ஒவ்வொண்ணிலும், ஒரு கம்ப்யூட்டர். கம்ப்யூட்டருக்கு முன்னால, நுனிநாக்கு இங்க்லீஷில் மட்டும் பேசும் பெண்கள். ஒவ்வொரு கவுண்டரின் மேற்பகுதியிலும் ஒரு பேனர் கட்டப்பட்டிருந்தது. அதுல என்னவோ எழுதியிருக்குதேன்னு கிட்டக்க போய்ப்பார்த்தா,... கம்பெனிகளோட பேர். ஓடிப்போய் வெளிய இருந்த விளம்பரத்த பாத்தார். 'Walk In Interview' அப்டீன்னு பொத்தாம்பொதுவா எழுதியிருந்தது. அப்ளிகேஷன் போடாம, காத்திருக்காம, நேரடியா இண்டர்வ்யூ நடத்தி ஆட்களை தேர்ந்தெடுக்கும் ஒரு முறை இது. ஆஹா!!!! அட்சய த்ரிதியை அன்னிக்கு அட்சய பாத்திரம் கிடைச்சிருக்கேன்னு ஒரு ஜாலியாட்டம் ஆடிட்டு, உள்ள போனார்.

நம்ம ஹீரோ ஒரு லட்சியவாதி. செய்யுற வேலையே தெய்வம், நேரத்தோட ஆப்பீசுக்கு போய் நேரத்தோட வீட்டுக்கு வரணும் , நாம பாக்குற வேலையில சின்சியரா இருந்து நல்ல பெயர் எடுக்கணும்ன்னு நினைக்கிற ஒரு சின்சியர் சின்ராசு. ஆனா பாருங்க,.. அவருக்கு இன்னும் வேலை கிடைக்காததால அவரோட சின்சியாரிட்டி, ப்ரிஜ்ஜில் வெச்ச பழமாட்டம்... அப்படியே ஃப்ரெஷ்ஷா , ஹாரிபாட்டர் படத்துல வர்ற வில்லன் வால்டிமார்ட்டோட உசிர் மாதிரி, வெளியுலகத்துக்கு தெரியாம அப்பிடியே இருக்கு.

வரிசையா பேனர்களை பாத்துக்கிட்டே, போனப்ப பில்கேட்ஸின் 'மைக்ரோசாப்ட்' கம்பெனியும் தனி ஹால்ல ஸ்டால் போட்டிருந்ததை பார்த்தார். இதுதான் நமக்கு சரியான இடம்ன்னு, முடிவு பண்ணி, ஹாலுக்குள்ள போனார். அவரோட அதிர்ஷ்டம் , 'மைக்ரோசாப்ட் ஆசியா'வுக்கான சேர்மனை தேர்ந்தெடுக்கிறதுக்கான இண்டர்வ்யூவை நடத்த பில்கேட்ஸே வந்திருந்தார். சுமார் ரெண்டாயிரம் பேர் வேலைக்காக வந்திருந்தாங்க அப்ளிகேஷன்லாம் தரவேண்டாம்.தனித்தனியா இண்டர்வ்யூ செஞ்சா வேலைக்காகாது,.. நான் மொத்தமாவே இண்டர்வ்யூ செஞ்சுக்கிறேன்னு பில்கேட்ஸ் சொல்ல எல்லோரும் நாற்காலிகளில் உக்காந்தாங்க. இண்டர்வ்யூ ஆரம்பிச்சது....

பில்கேட்ஸ்: "வந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி. சேர்மனுக்கான இண்டர்வ்யூ இது... நான் எதிர்பார்க்கிற தகுதிகளை சொல்லுவேன். அது இல்லாதவங்க தயவு செஞ்சு இண்டர்வ்யூல இருந்து விலகிடுங்க. மொதல்ல...

'ஜாவா' தெரியாதவங்க இண்டர்வ்யூல இருந்து விலகிக்கலாம்"

உடனே ஐநூறு பேர் இடத்தை காலி செஞ்சாங்க. 'எனக்கு ஜாவா தெரியாதுதான்.ஆனாலும் இங்கே இருக்கிறதால நான் இழக்கப்போறது எதுவுமில்லை. என்னதான் நடக்குது பார்க்கலாமே'ன்னு நினைச்சிக்கிட்டு நம்ம ஹீரோ அங்கியே இருந்தார்.

பில்கேட்ஸ் : "உங்கள்ல யாருக்காவது நூறு ஆட்களையோ, அதுக்கு மேலயோ, சமாளிச்ச அனுபவம் இருக்கா?. அப்படி இல்லாதவங்க விலகிடுங்க."

ஒடனே இன்னும் ஐநூறு பேர் வெளியேறிட்டாங்க. நம்மாளு மனசுக்குள்ள , 'எத்தினி தியேட்டர்ல, கூட்டத்த சமாளிச்சு டிக்கெட் எடுத்திருப்பேன். எனக்கில்லாத அனுபவமா'ன்னு நினைச்சிக்கிட்டு கெத்தா உக்காந்திருந்தார்.

பில்கேட்ஸ் : "இந்த பதவிக்கு எம்பியே (MBA) படிச்சவங்க இருந்தா, நல்லாருக்கும்னு நினைக்கிறேன். ஃபெயிலாயிருந்தா கூட பரவாயில்ல".

அவர் சொல்லி வாய்மூடலை. இன்னும் ஐநூறு பேர் எந்திரிச்சி போயிட்டாங்க. நம்ம ஹீரோவுக்கு லேசா தைரியம் வந்துச்சு. 'நாமதான் பன்னெண்டாம் வகுப்பு எம்பி, எம்பியே பாசாயிருக்கோமே, பாஸ் பெரிசா ஃபெயில் பெருசா?' ... ஏங்க... நீங்கதான் கொஞ்சம் சொல்லுங்களேன்....

பில்கேட்ஸ் (கடைசியாக) : "ஆசியாவுக்கான சேர்மன் பதவிக்கு ஆளெடுக்கிறோம். அதனால ஆசிய மொழி தெரிஞ்சவங்க மட்டும் இருந்தாபோதும்".

கட்டக்கடைசியா நானூத்தி தொண்ணுத்தியேழு பேர் வெளியேறினாங்க. பில்கேட்ஸ் இண்டர்வ்யூவை முடிச்ச திருப்தியோட மீதி, நம்ம ஹீரோஉட்பட இருந்த மூணு பேர் கிட்ட வந்தார். "ஃப்ரெண்ட்ஸ் எனக்கு ஃப்ளைட் புடிக்க டைம் ஆயிடிச்சு. உங்கள ஆப்பிசுக்கு வரச்சொல்ல நேரமில்ல.அதனால உங்களுக்கு இங்கியே அப்பாயின்ட்மெண்ட் லெட்டர் குடுத்துடறேன்."

ஆர்டரை கொடுத்துட்டு,"எதுக்கும் நீங்க மூணுபேரும்,உங்களுக்குள்ள ஆசிய மொழிகள்ல பேசிக்காமிங்களேன்.எனக்கும் திருப்தியா இருக்குமில்ல"

நம்ம ஹீரோ திரும்பி, பக்கத்தில் இருந்தவரிடம்,"அண்ணாச்சி, நீங்க எந்தூர்லருந்து வாரியோ?"

அவர் பதில் சொன்னார்," நமக்கு இங்கிணதான், ஆராமுளி பக்கத்துல நாரோயில்லேர்ந்து வாரென் மக்ளே".

மூணாவது ஆள் கிட்ட வந்து,"இன்னாபா... நம்மள கண்டுகிட மாட்டேங்றியே?.. இப்ப இன்னாங்கிற... அக்காங்".


இது என்னோட ஐம்பதாவது பதிவு. இந்த தொலைவை நிச்சயமாக உங்க ஆதரவு இல்லாம என்னால் கடக்க முடிந்திருக்காது. கூடவே வந்து ஆதரவளித்தும் , பின்னூட்டமிட்டும் உற்சாகப்படுத்திய அன்புள்ளங்களுக்கு, நன்றி என்ற சின்ன வார்த்தை போதாது. என்றாலும் நன்றி.. நன்றி.. நன்றி..

Tuesday, 11 May 2010

பெயர் வைக்கும் படலம்....-8

ரொம்ப நாளாவே மனசுக்குள்ள ஒரு தடுமாற்றம். ரங்க்ஸோட ரிட்டையர்மெண்டுக்கு அப்புறம் தமிழ் நாட்டுல செட்டில் ஆகலாமா,.. இல்லை இங்கியே இருந்துடலாமான்னு ஒரு ஊஞ்சலாட்டம். ஊருக்கு போயிட்டா, பசங்க அவங்கவங்க குடும்பத்தோட வந்து போறமாதிரி ஒரு நல்ல இடத்துல செட்டில் ஆகணும். அவங்களுக்கும் பிடிச்ச இடமா இருக்கணும். வந்த ரெண்டாம் நாளே போர் அடிக்குதுன்னு கிளம்பிடாம இருக்கணும். எல்லாத்துக்கும் மேல நமக்கும் ரிட்டையருக்கப்புறமான வாழ்க்கை, சந்தோஷமா, வேண்டிய மருத்துவ வசதிகளோட இருக்கணும்.

ஊர்ல வீடு கட்டினா, திண்ணை, முற்றம்,ஊஞ்சல் வெச்சு கிராமத்து ஸ்டைல்ல, ஆனா... அதே சமயம் நவீன வசதிகளோட கட்டணும். தோட்டம் கண்டிப்பா இருக்கணும். சுசீந்திரம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அழகான, குளுமையான, அமைதியான இடம். சாயங்காலமானா தாணுமாலயர் கோயிலுக்கு போயிட்டு, குளத்தங்கரையில் நேரம் போக்கலாம். ஆனா மருத்துவ உதவி வேணும்ன்னா பக்கத்துல பெரிய ஆஸ்பத்திரி கிடையாது. திருநெல்வேலியும் ஓ.கேதான். நெல்லையப்பர் இருக்கார். பார்க்கலாம்ன்னு இருந்தோம்.

ரெண்டு வருஷம் முன்னே சித்திப்பையன் கல்யாணத்துக்கு போயிருந்த சமயம்.. பாளையங்கோட்டைக்கு வர நேரிட்டது. வழியில் sifa constructions கட்டியிருந்த தொகுப்பு வீடுகளை பார்த்ததும் அட.. இந்த இடம் நல்லாருக்கும் போலிருக்கேன்னு ரங்க்ஸ் காதில் போட்டு வெச்சிருந்தேன். போனில் விசாரித்தபோது அவங்களுக்கு ஒரு வெப்சைட் இருக்குன்னும் அதுல மேல்விவரங்கள் இருக்குன்னும் சொன்னாங்க.லிங்க் இதோ...


அந்தா தெரியுதே,.. அதுதான் கம்யூனிட்டி ஹால்.

திருநெல்வேலியிலிருந்து, அங்கே போய்ச்சேர எப்படியும் அரைமணி நேரமாவது ஆகிறது. மொத்தம் மூணு டைப் வீடுகள். மனையின் அளவு ஒரே மாதிரிதான் இருக்காம். வீடுகளின் அளவுகள் மட்டும் வித்தியாசப்படுகிறதாம். கம்யூனிட்டி ஹால் ஒண்ணு கட்டிக்கிட்டிருக்காங்க. சுத்திலும் கடை, கண்ணி எதுவுமில்லையேன்னு கேட்டேன். இங்கியே சூப்பர் மார்க்கெட் ஒண்ணு கட்டுறாங்களாம். ஆனா,.. தண்ணி வசதி அவ்வளவு திருப்திகரமா இல்லை.

ஒரு வீட்டின் முகப்பு.

வீடுகளுக்குள்ளே போய்ப்பார்த்தோம். பரவாயில்லை... இன்னும் கொஞ்சம் ப்ளான் பண்ணியிருந்தா, வீடுகளுக்குள்ள இன்னும் இடவசதியை கொண்டு வந்திருக்கலாம். வெளியிலிருந்து பாத்தா அட்டகாசமா இருக்கு. தோட்டம் போட வீட்டைச்சுத்தி இடமிருக்கு. ஒதுக்குப்புறமா இருக்கிறதால கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. வெப்சைட்டுல burglar alarm இருக்கிறதா போட்டிருந்தது. கேட்டா, அப்படி ஒண்ணுமில்லைங்கிறாங்க. அப்றம், யோசிச்சு போன் செய்றோம்ன்னுட்டு வந்துட்டோம்.

மறுநாள், சொந்தபந்தம் எல்லோரும் தயாராகி, விழா நாயகனை, அதாங்க... குட்டிப்பையனை பார்க்க தூத்துக்குடி கிளம்பினோம். ஏற்கனவே சொல்லி வெச்சிட்டதால, பூஜைகளெல்லாம் நடக்க ஆரம்பிச்சிருந்தது. நாங்க போனப்ப நல்ல உறக்கத்தில் இருந்தார். மொதமொத கையில் எடுத்துக்கிட்டப்ப... ஹையோ!!!.. என்னன்னு சொல்ல!.. பிஞ்சுப்பூவை அதுக்கு வலிக்குமோன்னு பயந்துக்கிட்டே, மடியில் வெச்சிக்கிட்டேன். கிர்ர்ர்ர்ன்னு யாரோ மொறைச்சுப்பார்க்கறது மாதிரி ஒரு ஃபீலிங். இன்னொரு தம்பியோட எட்டு மாதமேயான, ரெண்டாவது பொண்ணுதான் அந்த மொறைப்பு சுந்தரி... சார்மிங் சார்மிஷா :-). அவளுக்கு போட்டிக்கு ஆள் வந்தாச்சுல்ல அதான் முறைப்பு :-)அவளையும் கிட்டக்க வெச்சுக்கிட்டதும் ஒரு சிரி..

பெயர் வைக்கிற நேரம் வந்ததும், பையனோட அம்மா மடியில வெச்சுக்க அப்பா, 'அக்ஷத்'ன்னு மூணு தடவை கூப்பிட்டு பெயர் வெச்சார் (Akshath).பெயர்க்காரணம் ஒண்ணும் புதுசில்லை. A-யில் ஆரம்பிக்கணும், அவ்வளவுதான். குழந்தை பிறந்தபின், பெயர் வைக்க எங்கிட்ட ஆலோசனை கேட்டார். சிம்பிளா, ஈஸியா, அழகா இருக்கணும் அவ்வளவுதான் கண்டிஷன். " @, இல்லைன்னா, .com ன்னு வை"ன்னு ஆலோசனை கொடுத்தேன். மறுபேச்சு பேசாம போனை வெச்சிட்டார். கடுப்பாயிட்டாரோ என்னவோ :-)))). அப்பா, அம்மா, ரெண்டுபேரும் software lineல இருக்காங்க. பொருத்தமான பேர்தானே சொல்லியிருக்கேன் :-))).

அதை தொடர்ந்து தங்க மோதிரத்துல தேனைத்தொட்டு, பையன் வாயில வெச்சு, எல்லோரும் ஆசிர்வாதம் செஞ்சாங்க. ரொம்ப தேன் வயித்துக்குள்ள போனா, குழந்தைக்கு நல்லதில்லைங்கிறதால அளவோட நிறுத்திக்கிட்டோம். சாயந்திரம் வரை கிட்டயே இருந்து, ஆசைதீர கொஞ்சிட்டு திரும்பினோம்.

மறு நாள் ஃபுல்லா ரெஸ்ட் எடுத்துட்டு, அதுக்கு மறுநாள் கிளம்பினோம். வழி நெடுக ஊர் சுத்திய அனுபவங்களை அசைபோட்டுக்கிட்டே வந்தோம். லோனாவ்லா வந்ததும், மறக்காம சிக்கி வாங்கிக்கிட்டேன். அசந்த நேரம் மிட்டாய் பையை உங்களுக்காக அப்படியே சுட்டுக்கிட்டு வந்திருக்கேன்.

சிக்கி... சிக்கிருச்சேய்!!!!
லோனாவ்லா தாண்டியதும், எங்களுக்கிணையா ஒரு ரயில் வந்துக்கிட்டிருந்தது. எதேச்சையா பார்த்ததும் அப்படியே ஆடிப்போயிட்டேன். ரெண்டு பெட்டிகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளியில், பெண்களும், ஆண்களும், குழந்தைகளுமா ஏழெட்டுப்பேர் பயணம் செய்றாங்க. அப்படியே உறைஞ்சு போயிட்டேன். மும்பை ரயில்களில் மேல்கூரைகள்ள கூட பயணம் செய்வாங்க. புளிமூட்டை மாதிரி அடைச்சிக்கிட்டு பெட்டிகளில் தொங்கிக்கிட்டும் பயணம் செய்வாங்க பார்த்திருக்கேன் ,புளிமூட்டையில இன்னொரு புளியா நானும் பயணம் செஞ்சிருக்கேன் . ஆனாலும் இது ஃபோர் மச். இயலாமை பாதி, சாகச உணர்வு மீதின்னு இருக்காங்களேன்னு வீடு வந்து சேர்றவரை அதப்பத்தியே பேசிக்கிட்டு வந்து சேர்ந்தோம்.

ஊருக்கு, இனி அடுத்த பயணம் எப்போன்னு தெரியாது. அதுவரை இந்த இனிய நினைவுகளை நினைச்சுப்பாத்துக்கிட்டிருக்க வேண்டியதுதான். கூடவே வந்த உங்க எல்லோருக்கும் தாங்க்ஸ்பா..

செவ்வானம் சேலை கட்டி....-7

கன்யாகுமரியோட சிறப்பு அம்சங்கள் பகவதியம்மன் கோவில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி, காமராஜர் மண்டபங்கள். இதோட முக்கியமான விஷயங்கள் சூரிய உதய, அஸ்தமனங்கள். கன்யாகுமரிக்கு வந்துட்டு இதெல்லாம் பார்க்காதவங்க இருக்க முடியாது. உதய, அஸ்தமன நேரங்களில் ஒரு கூட்டமே கடற்கரையில் காவல் இருக்குது. அதுவும் சித்ரா பௌர்ணமி அன்னிக்கு கூட்டம் கூடுதலாவே இருக்கும். அன்னிக்கு என்ன ஸ்பெஷல்ன்னா, இந்தப்பக்கம் சூரிய அஸ்தமனமாகிக்கிட்டிருக்கும்போதே அந்தப்பக்கம் நிலவு உதயமாகும். இருந்த இடத்திலிருந்தே லேசா கழுத்தை மட்டும் திருப்பித்திருப்பி பாத்துக்கலாம். ஒரு குறிப்பிட்ட நேரத்துல ஒரே சமயத்துல ரெண்டு சூரியன் மாதிரி இருக்குமாம். அடடா!!! அந்த கண்கொள்ளா காட்சியை வாழ் நாளில் ஒரு தடவையாவது பாத்துடணும்ன்னு நினைக்கிறேன்.

காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் எல்லாத்தையும் தாண்டிப்போயிட்டிருக்கோம். சங்கிலித்துறையில் கூட்டமான கூட்டம். அதுவுமில்லாம இங்கிருந்து பாத்தா எல்லா சமயங்களிலும் அஸ்தமனம் தெரியும்ன்னு சொல்லமுடியாது. சூரியனின் பாதையைப்பொறுத்து இடம் மாறிக்கிட்டே இருக்கும். வழியில அக்வேரியம் ஒண்ணைப்பாத்ததும் பசங்க ப்ரேக் போட்டமாதிரி நின்னுட்டாங்க. உள்ளே போய் பாக்கணுமாம். பத்து ரூபாய் டிக்கெட் இதுக்கு. உள்ளே விதவிதமான வகைகளில் மீன்கள் சிறுசும் பெருசுமா தொட்டிகள்ள நீஞ்சிக்கிட்டிருக்கு. அரவானா வகை மீனும் இருக்கு. இதுக்கு இன்னொரு பேரு வாஸ்து மீன்.

முன்னொரு காலத்துல அஸ்தமனத்தை நல்லாப்பாக்கணும்ன்னா கன்யாகுமரி கடற்கரையில மணல்தேரின்னு ஒரு இடத்துக்கு வந்துடுவாங்க. கடல் மணலை காலங்காலமா அலையடிச்சு சேத்துவெச்சு உண்டாக்கிய இடமது. அஸ்தமனத்துக்கு எந்த இடஞ்சலுமிருக்காது. இப்போ மணல்தேரி இருக்கான்னு தெரியலை. மணலையெல்லாம் அள்ளிக்கிட்டு போயிட்டாங்கன்னு எப்பவோ பேப்பர்ல படிச்ச ஞாபகம். இப்பல்லாம், அதுக்கு பதிலா வியூ டவர்க்கு போறாங்க. இது ஒருகாலத்துல முழுசும் கண்ணாடியாலான ரெஸ்டாரண்டா இருந்திச்சு. ஜிலுஜிலுன்னு கடல் காத்தோட, கடலைப்பாத்துக்கிட்டே ஸ்னாக்ஸ் சாப்பிடலாம்.ஒரு காலத்துல அங்க போய் பேஸ்ட்ரியும், காப்பியும் சாப்பிட்ட நினைவுகள் மட்டும்தான் இப்போ மிச்சமாருக்கு. ஊரிலிருந்து கொஞ்சம் தள்ளியிருக்கிறதாலோ என்னவோ,... ரெஸ்டாரண்ட் போய் வ்யூ டவர் வந்துச்சு டும்..டும்.. டும்.

இங்கேயும் அஞ்சுரூபா டிக்கெட் எடுத்துக்கிட்டு, மேலே போனோம். டாப் ஃப்ளோரில் பயங்கர கூட்டம். ஸ்கூல் பசங்கள்ளாம் பிக்னிக் வந்திருப்பாங்க போலிருக்கு. ஒரே கும்மாளமும் சிரிப்புமா எஞ்சாய் நடக்குது. மெல்ல மெல்ல எதிர்ப்பார்த்த அந்த நேரமும் வந்திச்சு. தகதகன்னு வெள்ளித்தட்டாய் இருந்த சூரியன் இப்ப தங்கத்தட்டாய் ஜொலிக்கிரார். வீட்டுக்கு வெளியிலதான் அட்டகாசம் பண்ணுவார் போலிருக்கு. வீட்டுக்கு போகும்போது அமைதியான ஆரஞ்சுத்தமிழனா போறார். உக்கிரமெல்லாம் அடங்கி, குளுமையான சொரூபமா பாக்கும்போது இவரா இவ்வளவு நேரம் நம்மையெல்லாம் காய்ச்சி எடுத்தவர்ன்னு ஒரு எண்ணம் வரும். பாவம்,.. அவருக்கும் வேர்த்திருந்துதோ என்னவோ, மேகத்தை எடுத்து முகம் துடைச்சிக்கிட்டே ஓடிட்டார். தண்ணிக்குள்ள போறதை பார்க்க முடியலை. ஆனாலும் பசங்க அந்த கடைசி நிமிஷத்துல கூச்சல் போட்டதை பார்க்கணுமே. ஹ்ம்... மறுபடியும் அந்தக்காலத்துக்கே போக முடிஞ்சா எவ்வளவு நல்லாருக்கும்.

சூரியாஸ்தமன காட்சிகள்.

நாலஞ்சு க்ளிக் எடுத்துட்டு கீழே வந்தா, தி ஃபேமஸ் சோழிக்கடைகள். ஒண்ணு கவனிச்சேன். கன்யாகுமரியில் ஒரு காலத்துல மரவேலைப்பாடுகள் உள்ள பொம்மைகள், (பஸ், ட்ரக் கூட கிடைக்கும்) கலைடாஸ்கோப்பு, பாசிமணிகள், சங்கு வேலைப்பாடுகள் உள்ள மாலைகள், கைவினைப்பொருட்களுக்கான கடைகள்ன்னு இருக்கும். நவராத்திரிக்கு கூட கலெக்ஷன் செஞ்சு வெச்சிக்கலாம். இப்போ எல்லாமே இட்ஸ் கான்,.. காயப்,.. போயே போச்சு.. போயிந்தி. அதுக்குப்பதிலா அஞ்சுரூபா கடைகள் வந்துடுச்சு. ரெண்டு ப்ளாஸ்டிக் ப்ளேட்டுகளை கையில் வெச்சிக்கிட்டு எதெடுத்தாலும் அஞ்சு ரூபான்னு கூவிக்கிட்டே நம்ம கிட்டவந்து டமார்ன்னு ப்ளேட்டுகளை ஒண்ணோடு ஒண்ணு அடிச்சிக்காமிக்கிறாங்க. உடையாதாம்... அவ்வளவு க்வாலிட்டியானதாம். திடீர்ன்னு அவ்வளவு கிட்டேவந்து டெமோ காமிக்கும்போது, நமக்குத்தான் எங்கெ நம்ம மூஞ்சியை உடைச்சிடுவாங்களோ!!!ன்னு பயம் வந்துடுது :-)

பொண்ணு, தன்னோட ஃப்ரெண்ட்சுக்கு கொடுக்க நாலஞ்சு, சோழிகளாலான ஃப்ரெஸ்லெட்டுகள் வாங்கிக்கிட்டா. அம்மணி இந்த வருஷம் பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சாச்சு. அதனால, நினைவுப்பரிசா கொடுக்கறதுக்கு, தோழிகளுக்கு சோழிகள் வாங்கணும்ன்னா. பெயரெழுதி, என்ன எழுதணும்ன்னு சொல்லிட்டா செஞ்சு கொடுத்துடுவாங்க. பையர் உடனே சிவப்புக்கொடி காமிக்க ஆரம்பிச்சுட்டார். இப்படி நாமெல்லாம் வாங்கறதாலதான், இந்த உயிர்களெல்லாம் அழியுது. நாம வாங்கறதை நிறுத்திட்டா, இதுகளெல்லாம் உயிரோட இருந்திருக்குமே. ஒரு விதத்துல இந்தமாதிரி இயற்கை வளங்களெல்லாம் அழியறதுக்கு நாமதான் காரணம்ன்னார். பாயிண்ட் இஸ் நோட்டட். ஆனாலும் இறுதியில் ஆசைதான் வென்றது.

beachன்னு ஒண்ணை கண்ணுலயே பாக்கமுடியலை. கடல் அரிப்பை தடுக்கிறதுக்காக கருங்கற்களை போட்டு வெச்சிருக்காங்க. சங்கிலித்துறையில் மட்டும் ஏதோ கொஞ்சம் இருக்கு. கூட்டமும் இருக்கிறதுனால குப்பையும் அதிகமாவே இருக்கு. கொஞ்ச நேரம் காத்துவாங்கிட்டு ரூமுக்கு வந்தோம். இருளின் அமைதியில் விவேகானந்தரும், வள்ளுவரும் ஓய்வெடுத்துக்கிட்டு இருக்காங்க.

காலையில சூரிய உதயத்தை பார்க்கிறதுக்காக அஞ்சுமணிக்கே அலாரம் வெச்சு எழுந்தோம். அஞ்சரை, அஞ்சேமுக்கால் இருக்கும்.. திடீர்ன்னு சைரன் ஒலி. சுனாமி எச்சரிக்கையோன்னு பதறியடிச்சுக்கிட்டு பாத்தா, விவேகானந்தர் பாறையில் ஸ்ரீபாத மண்டபத்தின் முன்னால் இருக்கும் கம்பத்துல கொடி ஏறிக்கிட்டிருக்கு. கடலுக்கடியில் கேபிள் போட்டு பாறைக்கு மின்னிணைப்பு கொடுக்கப்பட்டிருக்கு. மீன்பிடி படகுகள் வந்து நிற்குமிடத்தில் கூட்டமோ கூட்டம். எல்லாம் உதயம் பார்க்க வந்தவங்களும், மீன்வாங்க வந்தவங்களுமா நிக்கிறாங்க.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கீழ்வானம் சிவந்தது. இப்பவும் ஏமாத்திட்டார். வரும்போதே மேகத்தை குடையா பிடிச்சிக்கிட்டு வர்றார். தண்ணிக்குள்ள போறதைத்தான் பார்க்கமுடியலைன்னா,.. வர்றதையும் பார்க்க முடியலை. மெதுவா, நான் இங்கே இருக்கேன்னு கண்ணாமூச்சி ஆடுற குழந்தை மாதிரி தலைய நீட்டுனார். எப்போ!!... உதயமாகி கால்மணி நேரம் கழிச்சு. வந்து போஸ் கொடுத்துட்டுப்போங்கன்னு சொல்லி நாலஞ்சு க்ளிக் எடுத்தேன்.


உதயமான புது சூரியன்..

கடலுக்கு போயிருந்த மீன்பிடி படகுகள், வரிசையா வந்து நிக்க ஆரம்பிச்சது. பெட்டி பெட்டியா மீன்கள் வந்திறங்குது. ஃப்ரெஷ் மீனுக்காக எங்கிருந்தெல்லாமோ ஆட்கள் வந்துருக்காங்க. கொஞ்ச நேரம் வேடிக்கை பாத்துட்டு, ரூமை காலி செஞ்சுட்டு கிளம்பினோம். வீட்டுக்குப்போனப்புறம் இன்னொரு இடத்துக்குப்போகணும்.

முதல் முதலா 'பிட்' அடிக்கலாம்ன்னு இருக்கேன். இந்த மாச தலைப்பு சூரிய உதயம், அஸ்தமனம். எந்த போட்டோவை அனுப்பலாம்ன்னு எல்ப் பண்ணுங்களேன்...


அறிவிப்பு: பெருவாரியான மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற அஸ்தமனத்தின் மூன்றாவதுபடம் போட்டிக்கு அனுப்பப்பட்டது.


Monday, 10 May 2010

வல்லவனுக்கு பனைமரமும் ஆயுதம்.-6


'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு'ன்னு ஒரு பழமொழி இருக்கே. பழமொழின்னு இருந்தா,.. அதை மாத்தக்கூடாது இல்லியா :-). அன்னபூர்ணா கொடுத்த 'வெஜ் தாலி' நல்லாருந்துச்சு. நார்த் இண்டியன் சாப்பாட்டுவகைகளும் நல்லாவே இருக்கு. ருசி கொஞ்சம்கூட வித்தியாசப்படலை. திருப்பதியில் ஒருதடவை, தந்தூரி ரொட்டி ஆர்டர் செஞ்சோம். சாப்பாட்டுத்தட்டுக்கும், ரொட்டிக்கும் கொஞ்சம்கூட வித்தியாசமில்லாத 'கடக்'கான ஒரு வஸ்துவை கொண்டாந்து வெச்சாங்க. திங்கமுடியாம பேய்முழி முழிச்சிட்டு, கடைசில சிக்கூமில்க் ஷேக் குடிச்சிட்டு வெளியே தப்பிச்சு வந்தோம். இங்கே அப்படியில்லை. ஒரிஜினல் ருசி அப்படியே இருக்கு. சைனீஸ் வகைகளும் செம டேஸ்ட். இதனால், நான் சொல்ல வருவது, விரும்புவது என்னவென்றால் அன்னபூர்ணா பெயருக்கேத்தமாதிரி இருக்கு, நம்ம்பி சாப்பிடலாம்.

சாப்பாட்டுக்கப்புறம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்துக்கு கிளம்பினோம். பாண்டிய மன்னர்களும், திருவிதாங்கூர் மன்னரும், டச்சுக்காரர்களும் சம்பந்தப்பட்டது. இந்தியாவின் தென் கோடி பாதுகாப்பு மையமா இருந்தது. நான், சின்னவயசில் விசிட் அடிச்சது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வட்டக்கோட்டைக்குத்தான்.. இப்போ போய்க்கிட்டு இருக்கோம். கன்னியாகுமரியிலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில்தான் இருக்கு. கன்னியாகுமரியிலிருந்து, நாகர்கோவில் செல்லும் பாதையில், சில கிலோமீட்டர் தொலைவில் வலதுபக்கம் ஒரு ரோடு பிரியும். அதுதான் வட்டக்கோட்டைக்கு செல்லும் சாலை. கிளைச்சாலை பிரியும் இடத்துல போர்டும் வெச்சிருக்காங்க. அதனால குழப்பமில்லை.

வழியில், நீல நிற வேஷ்டியும், வெள்ளைச்சட்டையும், வெள்ளி நிறத்துல தொப்பியும், யூனிஃபார்மா போட்டுக்கிட்டு, ஆட்கள் நடந்துபோய்க்கிட்டிருக்காங்க. வேளாங்கண்ணிக்கு நடைப்பயணமாம். பழனி, திருச்செந்தூருக்கு போறமாதிரி, விசேஷம் இருந்தாத்தான் போகணும்ன்னு இல்லையாம். எப்போ வேணும்ன்னாலும், க்ரூப்பா கிளம்பிருவாங்களாம்.
நடைப்பயணம்.
வட்டக்கோட்டைக்கு போகணும்ன்னா டோல் டிக்கெட் எடுக்கணும். பாதிவழியில் ஒரு சின்ன ஓலைக்குடிசை. அதுதான் டோல் ஆப்பீசாம்.அஞ்சு ரூபா வசூலிக்கிறாங்க, அவ்வளவுதான். கொஞ்சதூரத்திலேயே வட்டக்கோட்டை வந்துடுச்சு.
கோட்டையின் முகப்பு.

இது பதினெட்டாம் நூற்றாண்டில், திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவால கட்டப்பட்டது. கடல்வழி தாக்குதல் மூலமா, எதிரிகள் நாட்டுக்குள்ள ஊடுருவாம இருக்கிறதுக்காக கட்டியிருக்கார். சுவர்கள் சுமார் 25 அல்லது26 அடி உயரம் இருக்கலாம். நல்ல கிரானைட்கற்களால் கட்டியிருக்காங்க. யானையும், சங்கும் மார்த்தாண்டவர்மா அரசாண்ட கேரள அரசின் சின்னங்கள். அதனால முகப்பிலேயே அவங்கதான் வரவேற்கிறாங்க. இந்தக்கோட்டை இப்போ தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் பராமரிப்பில் இருக்காம். பராமரிப்பு நல்லாவே இருக்கு.

கோட்டைக்குள் நுழைஞ்சதும்தான், அதன் பிரம்மாண்டம் புரியுது. நாலுபக்கமும் காவலாளிகள் தங்கறதுக்கான மண்டபங்கள், குதிரைகளை குளிப்பாட்டும் குளம், எல்லாமும் இருக்கு. இடதுபக்கம் படிக்கட்டுகளில் ஏறிப்போனால், கோட்டையின் மேற்புறம். மார்த்தாண்டவர்மா காலத்தில் வில் ,அம்புகளோடு காவலாளிகள் காவல் இருந்திருப்பாங்க. அதனால அப்ப, கோட்டையின் மதில்சுவர் மொழுமொழுன்னு.. மொட்டையா கட்டியிருந்திருக்காங்க. அப்புறமாத்தான் டிலனாய் வந்து, துப்பாக்கி வெச்சு சுடத்தோதா.. எடுத்துக்கட்டியிருக்கார். பார்க்கும்போதே ரெண்டு கட்டமைப்புகளுக்கும் வித்தியாசம் தெரியுது. பழைய கட்டிடம் கிரானைட் கற்களாகவும்,மேற்பகுதி காங்கிரீட்டிலும் இருக்கு.

பழசும், புதுசும்.
டிலனாய் எங்கே இங்க வந்தார்?.. அவர் டச்சுத்தளபதியில்லையா!!! சொல்றேன். திருவாங்கூர் மன்னருக்கும், டச்சுக்காரர்களுக்கும் இடையே போர் நடந்தது. எல்லாம் நாடுபிடிக்கவும், நம்மூர் கறுப்புத்தங்கம் மிளகை அள்ளிக்கிட்டு போகவும்தான்.. குளச்சல் போர்ன்னு ரொம்ப புகழ்பெற்ற சண்டை இது. அப்போ, கடல்வழியா, யூஸ்டாசியஸ் டிலனாய் தாக்கவர்றார்ன்னு தெரிஞ்சதும், என்ன செய்றதுன்னு புரியாம திண்டாடியிருக்காங்க. அவங்களோ துப்பாக்கி வெச்சிருக்காங்க. நம்ம கிட்ட வில்லும் அம்பும்தான். சுத்திலும் நிக்கிற தென்னை, பனை மரங்களை பாத்ததும் ஒரு யோசனை.. மரங்களையெல்லாம் அறுத்து துண்டாக்கி, மாட்டுவண்டிகளிலும், கோட்டை மதில்சுவரிலும் சாய்ச்சு வெச்சிட்டாங்க. தூரத்திலிருந்து பார்த்த டிலனாய்க்கு, 'ஆஹா... இவங்க பீரங்கியெல்லாம் வெச்சிருக்காங்க போலிருக்கு. உடம்புக்கு சேதாரமில்லாம பொழைக்கணும்ன்னா.. சரண்டர் ஆறதுதான் ஒரே வழி' ன்னு சரணடைஞ்சுட்டார்.

அவரோட போர்த்திறமையை கண்ட மார்த்தாண்ட வர்மா, தன்னோட படையில் அவரை தளபதியா சேத்துக்கிட்டார். தன்னோட போர் நுட்பங்களை, படைவீரர்களுக்கும் கத்துக்குடுக்கணும்ன்னு கேட்டுக்கிட்டார். இந்தக்கோட்டை கொஞ்சகாலம் பாண்டியர்கள் வசம் இருந்திருக்கும்ன்னு சொல்லப்படுது. தெற்குப்பக்கம் இருக்கும் மண்டபத்தின் கூரையில் இருக்கும் மீன்சின்னங்கள் இதுக்கு ஆதாரம். பீரங்கிகளை யானைகளின் உதவியோடு கோட்டையின் மேல்மதில்சுவருக்கு கொண்டு போவாங்களாம். ரெண்டுபக்கமும் படிக்கட்டுகளோடு கூடிய ஒரு சறுக்குப்பாதை இருக்கு.

பீரங்கிப்பாதை.
இங்கிருந்து ,பத்ம நாபபுரத்துக்கு ஒரு சுரங்கப்பாதை போகுது. காலப்போக்கில் இது மூடப்பட்டுவிட்டது. கோட்டையின் வடக்கே ஒரு ஆறு போகுது. ஆத்துக்கும் கடலுக்கும் இடைப்பட்ட மணல்பகுதியில் கபடி ஆட்டம் நடக்குது. சின்னப்பசங்களும் ஆடறாங்க. கடல் அலைகளும் ஆடுது. ஏதாவது ஒரு பெரிய அலை வந்தா, தண்ணி நடுக்கோட்டைத்தாண்டி ஆறுவரை வந்துபோகுது. ஆத்துக்கு அந்தப்பக்கம் திருநெல்வேலி மாவட்டமாம். கண்ணுக்கெட்டிய தூரம்வரை காத்தாடி ஆலைகள். ஒரு வீடுமட்டும் தனியா இருக்கு.

கபடி...கபடி.. கபடி..
சுரங்கப்பாதை..
கோட்டையின் மதில்சுவர்கள் நல்ல அகலமானவை. உறுதியானவை. இல்லைன்னா சுனாமியை எதிர்த்து நின்னுருக்க முடியுமா?.. மதிலுக்கு முக்கால் பாகம் வரை தண்ணி வந்துச்சாம். அலை அடிச்ச வேகத்துல கோட்டைக்குள்ளும் தண்ணி புகுந்திடுச்சு. நல்லவேளையா, அதுக்கு கொஞ்சம் முன்னாலதான் பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகளை வெளியேத்தியிருக்காங்க. காவலுக்கு இருந்த சோமசுந்தரம் ,அவரோட நேம் பேட்ஜை சட்டையில் நல்லா இறுக்கமா பொருத்திக்கிட்டு கோட்டைக்குள்ள உக்காந்துக்கிட்டாராம். ஏதாவது ஆச்சுன்னா அடையாளம் கண்டுபிடிக்க வசதியா இருக்குமில்லன்னார். அப்பத்தான், அரசாங்க உதவியோ, வேலையோ அவரோட குடும்பத்துக்கு கிடைக்குமாம். அப்பா காலமாகிட்டாராம். அம்மா, மனைவி, புள்ளைங்கல்லாம் சுனாமி வந்த அன்னிக்கு எப்படி துடிச்சிருப்பாங்க.. பாவம்.

கோட்டைக்குள்ள, குதிரைங்க குளிக்கிற குளமொன்னும், பக்கத்திலேயே லாயம் இருந்ததுக்கு அடையாளமா, கருங்கல்லுகளும் இருக்குது. சுனாமி வந்துபோனதும் ஒரே சேறும் சகதியுமா இருந்த கோட்டை, குளம் எல்லாத்தையும் சுத்தப்படுத்தி, புதுசா புல்வெளியெல்லாம் அமைச்சிருக்காங்க. பெரிசா இருந்த குளத்தை கொஞ்சம் சிறுசாக்கியிருக்காங்களாம். எண்கோண வடிவில் ஒரு கிணறு இருக்கு. கடல்பக்கத்துல இருந்தாலும் நல்ல தண்ணீரா இருந்ததாம். நிறைய வேப்பமரங்களை நட்டுவெச்சு பராமரிக்கிறாங்க. இப்போ சீசன்கிறதால பூத்துக்குலுங்குது.

பூக்களினூடே பூத்த சூரியன்..

..பார்வையாளர்கள், கோட்டையின் மேற்புறத்துல காத்துவாங்கிக்கிட்டே பொழுதைப்போக்கலாம். இங்கே ,பெயர்தெரியா மரமொன்னு இருக்கு. மதுரையிலிருந்தெல்லாம் தோட்டக்கலை ஆட்கள் வந்து பாத்துட்டு போயிருக்காங்களாம். என்ன மரம்ன்னு தெரியலையாம். இலையை பாத்தா வில்வமரத்தோட ஜூனியர் மாதிரி இருக்கு.

மர்ம மரம்..
அந்தக்காலத்துல பீரங்கி இருந்ததுக்கு அடையாளமா, பீரங்கியின் ஒரு சிறுபாகம் இருக்கு. பசங்களுக்கு இங்கே வந்ததுல ரொம்ப சந்தோஷம். இங்கே வர்றவங்க பத்மநாபபுரம் அரண்மனையோ, உதயகிரிக்கோட்டையோ போய்வந்தா அந்தக்காலத்திய சரித்திரத்தை இன்னும் புரிஞ்சிக்க முடியும்.

இங்கே பார்வையாளர்கள் நேரம் நாலு, நாலரை வரைதான். சுத்திப்பாக்க ஒண்ணரை, ரெண்டுமணி நேரம் போதுன்னாலும், கொஞ்சம் டைம் எடுத்துப்போனா, கடலலையை தவிர ஏதும் சத்தமில்லாத அந்த அமைதியை ,கடல்காத்தோட அனுபவிக்கலாம். நகரத்தோட பரபரப்புலேர்ந்து மனசுக்கும் கொஞ்சம் ஓய்வு தேவைதான் இல்லியா. அஸ்தமனத்தை, இங்கிருந்து பார்க்க முடியாதுன்னு ஆகிப்போச்சு. கன்யாகுமரியிலேயே பார்த்துக்கலாம்ன்னு கிளம்பினோம்.

போட்டோ செஷன் இங்கே இருக்கு.

LinkWithin

Related Posts with Thumbnails