Sunday 11 November 2018

சாரல் துளிகள்

அச்சிற்று உடையும் இறுதிக்கணத்திலும் இன்னொரு மயிற்பீலியைச் சுமத்தியபடி, பொறுமையைப் போதிக்கும் இவ்வுலகு.

நிழலுருவங்களில் நிஜத்தைப் பொருத்தி கற்பனையாய் உருவம் கொடுத்துக் குதூகலிக்கும் சிறுபிள்ளை விளையாட்டை பெரியவராய் ஆனபின்னும் அக்குழந்தை விட மறுக்கிறது.

அன்பைச் செலுத்த மட்டுமல்ல, அப்பேரன்பைப் புரிந்து கொள்ளவும் மதிக்கவும் கூட அன்புமுகிழ் மனத்தாலேதான் இயலும்.

வாழ்வின் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் தட்டுப்படுகின்ற சில பிம்பங்களின் பிரதிபலிப்புகள், நினைவுகளையும் பிரதிபலித்து பயணத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச்செய்கின்றன.

நிலவூரும் அவ்வனத்துள் தனிமையின் அசைவின்மையில் சலசலக்கும் ஒற்றையிலையொன்று மட்டும் இல்லாது போமோ!!!

பாலைப்பூவின் தைலவாசனையுடன் சொட்டிக்கொண்டிருக்கும் இப்பொழுதோடு கூட்டணி கொண்ட சாரல்காற்று கருணையற்றது.

அத்தனை பிரம்மாண்டமான உடலின் வால் நுனியில் மட்டும் முடியை வைத்த கடவுளுக்கு நன்றி சொன்னது வலி பொறுக்கவியலா யானை.

முணுக்கென்றால் தன்னைத்தானே ஊதிப்பெருக்கிக் கொண்டு மல்லாக்க மிதக்கும் அம்மீனை பகையேதும் நெருங்கவில்லை,.. போலவே நட்புகளும்.


கிளர்ந்தெழும் மண்வாசனை போல் மூச்சடைக்க வைக்கும் நினைவுகள், சில நொடி ஊசலாட்டத்தின் பின் அமைதியுறும் மனக்குரங்கின் தோள்களில்.

இங்கே சில நொடி, அங்கே சில நொடிகளென தவ்வித்தவ்விப் பறக்கிறதந்தக் குருவி, புதிதாய் சைக்கிள் விடப் பழகும் குழந்தை போல்.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிந்தனைகள்.....

இங்கேயும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails