Thursday, 31 August 2023

நினைவில் நின்றவர்கள் 4 - வெத்தலை ஆச்சி


வெற்றிலையின் காம்பையும் நுனியையும் கிள்ளி எறிந்து விட்டு, அதன் பின்பக்கம் கொஞ்சம் சுண்ணாம்பைத்தடவி ரெடியாக வைத்துக்கொள்வார். அதன் பின் ஒரு பாக்குத்துண்டை எடுத்து, தரையில் வைத்து கற்குழவித்துண்டால் ஒன்றிரண்டாக உடைத்து எடுத்து, அந்த பாக்குத்தூளை வெற்றிலையில் வைத்து மடக்கி வாயில் அதக்கிக்கொள்வார் பொன்னம்மா ஆச்சி. இதெல்லாம் பற்கள் நன்றாக இருக்கும்போது அவர் வெற்றிலை போட்டுக்கொண்ட அழகு. இப்போதோ இருக்கும் கடைவாய்ப்பற்களும் ஆடத்தொடங்கி விட்டன, அதற்காக வெற்றிலை போட்டுக்கொள்வதை விட்டு விட முடியுமா என்ன? வெற்றிலை பாக்கு என எல்லாவற்றையும் மொத்தமாகச் சதைத்து பல்லுக்குப் பதமாகப் போட்டுக்கொள்வார். தரையில் வைத்து இடிக்க வேண்டியிருக்கிறதே என மும்பையிலிருந்து ஒரு முறை இடி உரல் வாங்கிக்கொடுத்தேன். ஊஹூம்… “எல.. அது வாட்டமா இல்லல” என்று ஒதுக்கிப்போட்டு விட்டார். எந்த நேரமானாலும் சரி, ஆச்சி வெற்றிலை போட்டுக்கொள்ளப்போகிறார் என்றால், திருக்கழுக்குன்றம் கழுகு மாதிரி என் பெண்ணும் போய் ஒரு விள்ளல் வெற்றிலைக்கு கை நீட்டி நிற்பாள். என் அம்மாவின் அம்மாவான பொன்னம்மா ஆச்சிக்கு ‘வெத்தல ஆச்சி” என்று பெயரிட்டவள் என் மகள்தான்.

என் அப்பா அம்மா இரண்டு பேருக்குமே நெல்லை மாவட்டத்திலுள்ள “தெற்கு வள்ளியூர்”தான் சொந்த ஊர். இரண்டு பேரும் ஒரே ஊர்க்காரர்கள். சுற்றி வளைத்து சொந்தம் வேறு. அப்பா வீடு இருந்தது கீழத்தெரு என்றால் அம்மா வீடு இருந்தது பிள்ளையார் கோவில் தெரு என்றழைக்கப்பட்ட நடுத்தெரு. அப்போது நாங்கள் நாகர்கோவிலில் வசித்து வந்தோம். நினைத்துக்கொண்டால் எங்களைப்பார்க்க பொன்னம்மா ஆச்சி கிளம்பி வந்து விடுவார்கள். கிராமத்திலிருந்து யாராவது எங்கள் வீட்டுக்கு வந்தால் எங்களுக்கு ஒரே குஷிதான். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு, சீம்பால், கோவில் கொடை கழிந்த மறுநாள் படைப்புச்சோறு என ஏதாவது கொண்டு வருவார்கள். முக்கியமாக ஆச்சி எங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் தினங்களில் படிக்க வேண்டாம், அந்தக்காலத்திலெல்லாம் மருமகன் முன் மாமியார் வர மாட்டார், அதே போல் மாமியார் வந்திருக்கிறார் என்றால் மருமகனும் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்.

ஆச்சி எங்களைத் திட்டியதில்லை, அடித்ததில்லை, ஆனால் குரங்குச்சேட்டை செய்யும் எங்களை, கண்களாலேயே கண்டித்து அடக்கி வைக்கும் சாமர்த்தியம் இருந்தது அவரிடம். ரொம்பவும் ஆட்டம் போட்டால், “அதென்னங்கேன் ஒரே வாக்குல?” என்று ஒரு அதட்டுப்போடுவார். அவ்வளவுதான் கப்சிப்பென அடங்கி விடுவோம். கொள்ளை கொள்ளையாய்ப்பாசமுண்டு பேரக்குழந்தைகளிடம். ஆச்சிக்கு, மூன்று மகள்கள் இரண்டு மகன்கள் என ஐந்து குழந்தைகளிருந்தாலும் இரண்டாவது மகளான என் அம்மாவின் வீட்டுக்கு வரும்போதுதான் சற்று ரிலாக்ஸாக இருப்பார் எனத்தோன்றும். மற்ற பிள்ளைகளின் வீடுகளுக்குப்போனால் நாட்கணக்கில் மட்டுமே இருப்பவர் எங்கள் வீட்டுக்கு வந்தால் வாரக்கணக்கில் இருப்பார், அதுவும் என் திருமணத்திற்குப்பிறகு மாதக்கணக்கில் இருந்தார். அதென்னவோ?! எங்கள் வீடு அவருக்கு ரொம்பவும் சௌகரியமாக இருந்தது. எப்போது பார்த்தாலும் எசலிக்கொண்டே இருந்தாலும் என் இரண்டாவது தம்பி ஆச்சியை நன்கு கவனித்துக்கொள்வான். ஊரிலிருந்து நான் மும்பைக்குத்திரும்பும்போதெல்லாம், "அடுத்த தவண நீ வரேல்ல நான் இருப்பனோ இல்லியோ.. ஒங்கையால ஒரு கப்பு பாலு தந்துட்டுப்போ" என்பார். "இப்பிடியே சொல்லிச்சொல்லி பாலா குடிச்சு ஒடம்பத்தேத்து" என என் இரண்டாவது தம்பி வம்பிழுப்பான். இருவரும் எசலுவதை ரசித்தபடியே நாங்கள் கிளம்புவோம்.

ஆச்சி கடுமையான உழைப்பாளி, எனக்கு நினைவு தெரிந்தே முப்பது நாற்பது பசுக்கள், பத்து எருமைகள், அவைகளின் கன்றுக்குட்டிகள், இவை தவிர உழவு மாடுகள், வில்வண்டிக்கான காளைகள் என தொழுவும் முற்றமும் நிறைந்திருந்த காலம் அது. ஆயிரம்தான் உதவிக்கு ஆட்கள் இருந்தாலும், சளைக்காமல் தொழுவில் சாணியள்ளி தோட்டத்திலேயே ஒரு பக்கத்திலிருந்த உரக்குண்டில் போட்டு, மாடுகளைப்பராமரித்து, பால் கறந்து, என காலையிலிருந்து வேலை சரியாக இருக்கும். ஓரளவு சாணியுரம் சேர்ந்ததும், ஓலைப்பெட்டியில் அள்ளிச்சுமந்து போய் வயலில் போட்டு விட்டு வருவாராம். சாணிப்பெட்டி சுமந்தே ஒரு தடவை உச்சந்தலையில் கட்டி வந்து கஷ்டப்பட்டேன் என்றார். “ஒங்க ஆச்சி அப்படில்லாம் கூடமாட கை கொடுத்ததாலதான் நான் மேலும் மேலும் வயலு வாசல்ன்னு பெருகி வளந்தேன்” என பிற்காலத்தில் தாத்தா சொன்னபோது ஆச்சிக்கு நிச்சயம் பூரிப்பாகத்தான் இருந்திருக்கும். மனைவிகளை சுலபத்தில் கணவர்கள் பாராட்டாத காலமாயிற்றே அது. இது போக, வயலில் வேலை செய்பவர்களுக்கு மதியம் சோறு குழம்பு கறி என சமைத்து கொடுத்தனுப்ப வேண்டும். அடுக்களையிலேயே ஒரு பக்கத்தில் வைக்கோலால் மெத்தை போல் பரப்பி அதன் மேல் துணி விரித்து, அதன் மேல் வடித்த சோற்றை மலை போல் கொட்டி வைத்திருப்பார்கள். கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருக்கும் நீரும் நன்கு வடிந்து விடும். 

எனக்கு பன்னிரண்டு பதிமூன்று வயதிருக்கும்.. அப்போது அப்பாவைத்தவிர வீட்டில் எல்லோருக்கும் அம்மை வார்த்திருந்தது. மொத்தம் ஐந்து உருப்படிகள் படுக்கையில் கிடக்கிறோம். பெரிய பெரிய முத்துகளாக நீர்கோத்துக்கொண்டு படாத பாடு பட்டோம். அப்புறம், நாகர்கோவிலில் பெரிய வைத்தியரான கோபாலன் ஆசானைக் கூட்டி வந்து காண்பித்தார் அப்பா. வைத்தியரின் ஆலோசனைப்படி, பெரிய பெரிய வாழையிலைகளில் எண்ணெய் தடவி அதில்தான் என்னைக் கிடத்தியிருந்தார்கள். உடலெங்கும் அரித்துப்பிடுங்கும், இரவும் பகலும் தூங்க இயலாமல் தவிப்பேன். அழுது அரற்றும் என்னை, கையில் வேப்பிலைக்கொத்தை வைத்துக்கொண்டு உடலெங்கும் வருடி வருடி தூங்க வைப்பார். வைத்தியர் கொடுத்த எண்ணெய்யைத் தொட்டுப்போடுவார். நான் கொஞ்சம் கண்ணசரும் நேரம் என் தம்பி ‘ஆச்சி.. மேலு ஊறுது’ என ஆரம்பிப்பான். 

இப்படியே விடிய விடிய எங்களுக்குப் பண்டுதம் பார்ப்பார். எங்கள் பக்கத்தில் உக்கார்ந்த மேனிக்கே அரைத்தூக்கம் தூங்குவார். பகலில் அடுக்களை வேலைகளினூடே எங்களையும் கவனித்துக்கொள்ள வேண்டும். முகக்கெட்டு இறங்கி, ஒவ்வொருத்தருக்கும் மூன்று தடவை தலைக்குத்தண்ணீர் ஊற்றி, அம்மன் கோவிலுக்குப் புட்டமது செய்து கொடுத்து எங்களை வீட்டுக்குள் அழைக்கும்வரை ஆச்சி பட்ட பாடுகளை இப்போது நினைக்கும்போது கையெடுத்து வணங்கத்தோன்றுகிறது. இடுப்பு வரை நீண்ட என் கூந்தல் சடை பிடித்துக்கிடந்ததை பாப் வெட்டி விடலாம் என அப்பா சொன்னபோது, “பொம்பளப்புள்ள முடிய வெட்டாண்டாம்’ எனத்தடுத்து விட்டு, ஒரு மாத காலம், தினம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிக்கெடுத்துக் காப்பாற்றி விட்டார். ஒரே ஒருத்தருக்கு பணிவிடை செய்வதற்கே மூக்கால் அழும் இந்தக்காலத்தில், மூன்று பெண்கள், அவர்களின் பிரசவங்கள், பேரக்குழந்தைகளின் நோக்காடுகள், பேத்திகளின் பிரசவங்கள் என அத்தனையையும் சமாளிக்க வேண்டுமென்றால் உடலில் மட்டுமல்ல மனதிலும் எக்கச்சக்க வலு இருந்தால்தான் செய்ய முடியும். 

கைக்குழந்தைகளுக்கு ஆச்சி மருந்து புகட்டும் விதமே அலாதி. கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு பிள்ளையை இடது மடி மேல் வைத்துக்கொண்டு அதன் நீட்டிய கால்களின் மேல் தனது வலது காலைப்போட்டு மிண்டாமல் மிசுங்காமல் பிடித்துக்கொள்வார். அதன் வலதுகை ஆச்சியின் முதுகுப்புறம் கிடக்கும், தனது இடது கையால் பிள்ளையை வளைத்துப்பிடித்து அதன் இடது கையையும் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார். பிள்ளை ஒரு இஞ்ச் கூட அசைய முடியாமல் கிடந்து கத்தும். “கொக்கு வத்த.. குளம் வத்த..” என்று சொல்லிக்கொண்டே, கத்துவதற்காகத் திறக்கும் அதன் வாயில் சங்கில் கரைத்து வைத்திருக்கும் மருந்தைப் புகட்டி விடுவார். அழுது கொண்டேயானாலும் வேறு வழியில்லாமல் அது குடித்தே தீர வேண்டும். பின் நிமிர்த்தி உட்கார வைத்து, முதுகில் தட்டிக்கொடுத்து ஏப்பம் விடச்செய்வார். “மருந்து குடுக்கப்பட்ட ஆளுகள புள்ளேளுக்குப் பிடிக்காது, ஏசும்.. சண்ட புடிக்கும். அதுக்காக குடுக்காம இருக்கப்புடாது’ என்று அறிவுரைப்பார்.

ஆச்சி தன் வாழ்நாளில் என்றாவது நன்றாக ஆழ்ந்து உறங்கியிருப்பாரா என்பது சந்தேகமே. பாம்புச்செவி வேறு.. ஒரு சிறு அனக்கத்திற்கும் விழித்துக்கொண்டு விடுவார். என் கணவர் மேல் அதிகப்பிரியம் உண்டு. நான் ஏதாவது குற்றங்குறை சொன்னாலும் அவருக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு என்னைச் சமாதானம் செய்வார். ‘ரெண்டியரும் பாம்பேல ஒருத்தர் மொகத்த ஒருத்தர்தான் பாத்துக்கிட்டு கெடக்கணும், சண்ட போட்டுட்டு செவத்தையா பாத்துக்கிட்டு கெடப்பீங்க? ஒத்துமையா இருக்கணும்” என இருவருக்கும் பொதுவாக அறிவுரை சொல்வார். “எல.. அவேன் வெளில வாசல்ல போகப்பட்டவன், ஆயிரம் சடவு இருக்கும். என்னமும் சடைஞ்சு வந்தா, ஒரு சொல்லு சொன்னா.. நீதான் பொறுத்துப்போணும். சடவாறினா கொஞ்ச நேரத்துல தன்னால அமுந்துருவான்’ என வாழ்க்கைப்பாடம் எடுப்பார்.

பொதுவாக, வயதானவர்களுக்கு குடும்பத்தில் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைக்கும் வழக்கம் வரும். மற்றவர்கள் தங்களை ஒதுக்குகிறார்களோ என நினைத்துக்கொள்வதால் வரும் விளைவு அது எனச்சொல்வார்கள். வெத்தலை ஆச்சிக்கு அந்தப்பழக்கமே கிடையாது. அவர் பாட்டுக்கு ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு, வீட்டில் நடக்கும் எல்லாவற்றையும் கவனிப்பாரே தவிர கேட்காமல் அறிவுரை சொல்வதோ, பிறரிடம் மல்லுக்கட்டுவதோ அறவே கிடையாது. காலையுணவு ஆனதும், வாசல் நடைக்கு வந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டு போக வர இருப்பவர்களை வேடிக்கை பார்ப்பதிலேயே அவரது பொழுது போய் விடும். நாங்கள் மும்பையிலிருந்து ஊருக்குப்போகும்போது, அந்தத்திண்ணையில்தான் காத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். போனதும், ‘எல.. சோமாயிருக்கியா?” என கைகளைப்பிடித்துக்கொண்டு விசாரிப்பார். அப்புறம் கொள்ளுப்பேரக்குழந்தைகளிடம் ஒரு நிமிடம் கொஞ்சல்.. அவ்வளவுதான். ஆனால், நாங்கள் அந்த வீட்டில் இருக்கிறோம் என்ற அந்த உணர்வே அவரை நிரப்பி விடும். நாங்கள் மும்பைக்குக் கிளம்பிய அடுத்த நாளே, ‘ நான் ஊருக்குக் கெளம்புதேன்’ என்று அவரும் தெற்கு வள்ளியூருக்குக் கிளம்பி விடுவார்.

உட்கார வைத்து சொல்லிக்கொடுத்ததில்லையே தவிர, அவரைப்பார்த்துக் கற்றுக்கொண்ட ஏராளமான விஷயங்கள் வாழ்வில் கை கொடுத்திருக்கின்றன. சில சமயங்களில், இந்த விஷயத்தை ஆச்சி எப்படி சமாளித்திருப்பார் என நினைக்கும்போதே அதற்கான தீர்வும் கிடைத்து விடும். படு சிக்கனப்பேர்வழி. வெறும் இரண்டு பக்கெட் தண்ணீரை வைத்துக்கொண்டே அத்தனை பாத்திரங்களையும் சுத்தமாகக் கழுவி வெயிலில் காய வைத்து எடுத்து வைத்து விடுவார். “அடுப்படி சுத்தமா இருந்தாத்தான் சீதேவி தங்குவா” என்பார். தீபாவளி வந்தால், அண்டா அண்டாவாக கை முறுக்கும், அதிரசமும் முந்திரிக்கொத்தும் செய்து, பெண்கள் வீட்டுக்குக் கணிசமாகக் கொடுத்து விடுவார். ஆச்சி கொடுத்து விடும் முறுக்கே எங்களுக்கு ஒரு மாத காலத்துக்கு வைத்துத்தின்னும் அளவுக்கு வரும். 

அந்தக்காலத்து மனுஷி, வயதில் பெரியவர் அதனால் ரொம்பவும் பயந்துகொண்டு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் ஆச்சியிடம் கிடையாது, ஒரு ஃப்ரெண்டிடம் பேசுவது போல் பேசுவோம். கடைசித்தம்பியின் திருமணம் முடிந்த இரண்டொரு நாளில் மறுவீடு கிளம்பினோம். வேன் கிளம்பிய சிறிது நேரத்தில் தம்பி மனைவிக்கு தூக்கம் சொக்கியது, தூங்கித்தூங்கி விழுவதும் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு, ‘ஐயோ.. எல்லோர் முன்னாலும் தூங்குகிறோமே’ எனவுமாக அவஸ்தைப்பட்டாள். நாங்களெல்லாம் இதைப்பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தோம். அவர்களுக்குப் பின்சீட்டில் அமர்ந்திருந்தவர் சட்டென்று சற்று முன்னால் நகர்ந்து, புதுப்பெண்ணின் தலையை புதுமாப்பிள்ளையின் தோளில் சாய்த்து, “இனும தூங்கு, தூத்துடி வந்ததும் எழுப்புதோம்” என்று இதமாகச்சொன்ன மாடர்ன் ஆச்சி அவர்.

தாயம், பல்லாங்குழி விளையாடுவதில் சமர்த்தர். பல்லாங்குழி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எங்கள் குழிகளிலிருந்த முத்துக்கள் எல்லாமே ஆச்சியின் கைவசமாகி விடும். மூன்று நான்கு குழிகள் தர்க்கத்தில் கிடக்கும் எங்கள் பக்கம் அடுத்த ரவுண்டில் மிச்சம் மீதியிருப்பதையும் பறி கொடுத்து விட்டு கஞ்சி காய்ச்சிக்கொண்டிருக்கும். தன்னைப்புரட்டிப்போட்ட வாழ்க்கையையும் ஆச்சி அப்படித்தான் வெற்றி கொண்டார். மூன்று பெண்பிள்ளைகளுக்குப் பிறகு ஆண் வாரிசு இல்லையே என கவலைப்பட்ட தாத்தாவுக்கும் ஆச்சிக்கும் வெகு காலத்திற்குப்பிறகு,  கிட்டத்தட்ட மூத்தமகளுக்குத் திருமண வயது வந்த பிறகு இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்தனர். இந்த இடைவெளியில் ஆச்சி சந்தித்த கசப்பான அனுபவங்கள் எக்கச்சக்கம். ஆச்சியின் அம்மாவே அவருக்கு சக்களத்தி கொண்டு வர முயன்ற சம்பவமும் நடந்தது. தனக்குத் துரோகமிழைத்த அன்னையின் இறுதி மூச்சு நிற்கும் வரை அவரிடம் ஆச்சி பேசவுமில்லை, அவரது முகத்தைப் பார்க்கவுமில்லை. தன் அன்னையை பொன்னம்மா ஆச்சி மன்னித்தாரா இல்லையா என்பது அவருக்கே வெளிச்சம்.

ஆனால், தங்கள் வாழ்வில் நடந்த அந்த அனுபவங்களின் சிறு சாயல் கூட எங்கேயும் எச்சந்தர்ப்பத்திலும் பிரதிபலிக்க ஆச்சி விட்டதில்லை. தாத்தாவை எங்கேயும் யாரிடமும் விட்டுக்கொடுத்ததில்லை. அவர்களின் இறுதி மூச்சு வரைக்கும் எப்போதும்போல் அன்யோன்யமாகவும் கேலியும் கிண்டலுமாகத்தான் அவர்கள் வாழ்வு நிறைந்தது. "என்னடி முனியம்மா ஒன் கண்ணுல மைய்யி.." என்ற பாட்டு தாத்தாவுக்கு ரொம்பப்பிடிக்கும். அதில் வரும் "நாக்கு செவந்த புள்ள பொன்னம்மா.." என்ற வரியை தன் பேரனோடு சேர்ந்து கொண்டு பாடி ஆச்சியை வம்பிழுப்பார். கருத்த முகத்தில் நாணத்தின் செம்மை படர "சும்மாருங்க.." என ஆச்சி சிணுங்கும் அழகே அழகு. 

எந்தச்சூழலுக்கும் தன்னைப் பொருத்திக்கொள்பவர். இல்லையென்றால், எல்லாப்பிள்ளைகளுக்கும் திருமணமாகிப்போய், தாத்தாவும் போய்ச்சேர்ந்த பின் கடல் மாதிரியான அத்தனை பெரிய வீட்டில் தன்னந்தனியாக இருக்கும் நெஞ்சுரம் வாய்த்திருக்குமா என்ன? ஊரெங்கும் சுற்றிச்சூழ சொந்தக்காரர்கள் இருப்பதும் இரண்டு தம்பிகளின் வீடுகளும் எதிரிலும் பக்கத்திலுமே இருப்பதே பெரிய பலமாக உணர்ந்தவர், ‘எண்ணைக்காது காலைல வாசநட தொறக்கலைண்ணா ஒரு எட்டு வந்து பாத்துரு” என தன் தம்பியின் மனைவியிடம் சொல்லித்தான் வைத்திருந்தார். ஆனால், அதற்கு அவசியமே இல்லாது, ஒரு நாள் காலையுணவை தானே சமைத்து உண்டபின் தம்பியின் வீட்டுக்கு வந்து பாடு பேசிக்கொண்டிருந்தவர், “வீட்டுக்குப்போறேன்’ என எழுந்தவர் சுருண்டு விழுந்து அந்த நிமிடத்திலேயே மாஸிவ் ஹார்ட் அட்டாக்கில் போய் விட்டார். ‘கெடைல விழாம போயிரணும்’ என அவர் விரும்பிய வண்ணமே இறப்பும் அமைந்தது. 

காலம் முழுக்க ஓடியாடி உழைத்த அந்த ஜீவன் விடைபெற்றுப் புறப்பட்ட போது கொட்டுமேளத்துடன் கோலாகலமாக வழியனுப்பி வைத்தனர் எனக் கேள்விப்பட்டேன். கேள்விப்பட்டேன்தான்... கடைசி முறையாக அந்த முகத்தைப் பார்க்கக் கொடுப்பினையில்லை. ஆச்சியை எப்போது நினைத்தாலும் அந்த மலர்ந்த முகம்தான் ஞாபகத்துக்கு வர வேண்டுமென்பதற்காகத்தான் ஒரு வேளை நேரில் செல்ல வாய்க்கவில்லையோ என்னவோ?!!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails