Sunday, 3 December 2023

சாரல் துளிகள்


உறுமீன் வரும்வரை காத்திருக்காத கொக்கு ஓடுமீன்களையெல்லாம் வேட்டையாடுகிறது.. பேராசையோ!.. கொடும்பசியோ!!..

நிஜத்தின் ஔியைத் தன்னுள் ஔித்தும் அளித்தும் விளையாடும் இருண்மை கொண்ட பிரதிகள்தானே நிழல்கள்.

'எங்களை நம்புவதேயில்லை' என சடைத்துக்கொள்வதைத்தவிர வேறொன்றும் அறியாதவை மண்குதிரைகள். ஏனென்றும் புரிந்து கொள்வதில்லை, நம்பியவர் தத்தளிப்பதையும் கண்டுகொள்வதில்லை.

வாழ்வின் முக்கியமான கணங்களில் ஒரு திறப்பிற்காகக் காத்திருப்பதுவும், சூரியகிரகணத்தின் உச்சத்தில் நிகழும் வைர ஒளிச்சிதறலாய் ஒரு நொடியில் அத்திறப்பு நிகழ்ந்து முடிந்து விடுவதும் இவ்வாழ்வு நமக்களிக்கும் தரிசனம்.

பாரம் சுமக்கச் சோம்பல்படும் பொதிமாட்டுக்கு தினமும் வயிறு நிறையாது.

காற்றுக்காய் வாயைத் திறந்துதிறந்து மூடும் மீனைப்போல், மின்னிக்கொண்டு விரைகிறது ஏதோவொரு விமானம்.

பிறந்து விழுந்து எழுந்ததிலிருந்து மலர்களால் ஒத்தடம் கொண்டு, முட்களால் காயப்பட்டு, அடிபட்டு, மிதிபட்டு, நொந்து நூடுல்ஸாகி, தென்றலில் மிதந்து, புயலில் அலைக்கழிக்கப்பட்டு மறுபடியும் வீழும் வரையான சம்பவங்களின் கனமே 'அனுபவஸ்தர்' என்ற கிரீடமாக அழுந்தி அமைகிறது. கனக்கும்போது 'இறக்கி வைக்க மாட்டோமா' எனப் பரிதவிப்பதும், அழுந்தும்போது 'நமக்கு அமையுமா' என ஆவலுறுவதும் மனித மனங்களின் நிறம்.

காண்பதெலாம் கவிதையாகும், கடப்பதெலாம் கதையாகும், கற்பனை தொட்டு அலங்கரித்தால் அத்தனையும் உயிர் கொளும். கருக்கள் சுமக்கும் படைப்பாளியோ பூரண கர்ப்பம் நித்ய ஜனனம்..

அம்மையைத் தேடியலையும் பரிதவித்த கன்றுக்குட்டியின் குரலொலியை அமுக்கிவிடுகிறது நகரத்துத்தெருக்களின் வாகனச்சத்தம்.

பிற குடும்பங்களின் சலசலப்பை வேடிக்கை பார்ப்பதில் ஒரு குரூர திருப்தி சில கசடு படிந்த மனங்களுக்கு. உண்மையில் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது இம்மாதிரியான வேண்டப்பட்ட விரோதிகளிடம்தான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails