Thursday 3 August 2023

நினைவில் நின்றவர்கள் 1 - வெங்கிடு


கட்டைகுட்டையான உருவம், உருண்டையான சதுர முகம், எண்ணெய் தேய்த்துப் படிய வாரிய க்ராப்புத்தலை, அரைக்கைச் சட்டை, நிக்கர் , மென்மையான அதிராத பேச்சு, நாஞ்சில் நாட்டுப் பிள்ளைமாருக்கேயுரிய பொது நிறம்.. இப்படித்தான் எனக்கு அறிமுகமானான் வெங்கிட்டு என்ற வெங்கடாச்சலம். பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த எனக்கு நான்காம் வகுப்பு படிக்கும் வெங்கிட்டு விளையாட்டுத்தோழன் என்றால் இப்போது சிரிப்புத்தான் வருகுது. என் தம்பியின் தோழனாகத்தான் எங்கள் வீட்டுக்கு வந்தான். ஆராம்புளி மாமாவின் கடைக்குட்டிப்பிள்ளையான வெங்கிட்டுக்கு, மூன்று அண்ணன்களும் இரண்டு அக்காக்களும் உண்டு. அத்தனை பேருமே சாதுவான குணம் கொண்டவர்கள். 

வெங்கிட்டுக்கு விளையாட்டில் புத்தி போன அளவுக்குப் படிப்பில் போகவில்லை. விளைவு,.. ஒவ்வொரு பரீட்சை முடிவிலும் ப்ராக்ரஸ் ரிப்போர்ட் கொடுக்கப்படும்போது எப்படியும் இரண்டு மூன்று சிவப்புக்கோடுகள் அதிலிருக்கும். எப்படியாவது அவனுக்குப் படிப்பில் ஆர்வத்தை உண்டுபண்ணி விட வேண்டுமென்று வீட்டார் முயன்றனர். பலன்தான் கிட்டவில்லை. பரீட்சை முடிவுகள் வெளியாகும் சமயமெல்லாம் அண்ணன்கள் ஒவ்வொருவரும் முறை வைத்துக்கொண்டு அவனை உதைப்பார்கள். “ஐயோ.. அப்பா” என எட்டூருக்குக் கேட்கும் அளவுக்குக் கத்துவானே ஒழிய அந்த அடியெல்லாம் அவனுக்கு உறைக்கவே உறைக்காது. அடித்து ஓய்ந்து அவர்கள் அந்தப்பக்கம் நகர்ந்ததும் இவன் இந்தப்பக்கம் விளையாட ஓடி விடுவான். இத்தனை அடி வாங்கியும் ஒரு சொட்டுக் கண்ணீர் வர வேண்டுமே.. ம்ஹூம்.. சரியான கல்லுளி மங்கன்.

எங்கிருந்துதான் கிடைக்குமோ தெரியாது, நாய், பூனை என ச்சின்னக்குட்டிகளாகக் கொண்டு வருவான். அதுவும் கண் கூட திறக்காத சின்னக்குட்டிகள். பொத்திய கைகளுக்குள் ‘வீச்.. வீச்’ என முனகியபடி அம்மாவின் மடியில் கிடப்பதைப்போன்ற சொகுசுடன் மூக்கை உரசியபடி கிடப்பதைப் பார்க்கவே அவ்வளவு ஆசையாக இருக்கும். “எக்கா.. உங்கூட்டுல வளக்கேளா?” என்று கேட்டபடி கொண்டு வந்து நீட்டுவான். அம்மைக்கோ வளர்ப்புப்பிராணிகள் என்றாலே ஆகவே ஆகாது. ‘அதான் ஏற்கனவே நாலெண்ணத்தைப் போட்டு வளக்கேனே.. காணாதா? இன்னும் புதுசா வேற வேணுமா? நம்மால ஆகாது, கொண்டுக்கிட்டுப்போச்சொல்லு” என்று மறுத்து விடுவாள். அந்த ‘நாலெண்ணம்’ என்பது ஏற்கனவே இருக்கும் வளர்ப்புப்பிராணிகளான நானும் என் தம்பிகளும் என்பதை அறிக.

“ஏன் வெங்குட்டு.. உங்கூட்டுல வளக்கலாம்லா?. நாங்க அங்க வந்து வெளையாடிக்கிடுவோம்லா?” என்றால் “அம்மை உட மாட்டாக்கா” என பாவம்போல் பதிலளிப்பான். கொண்டு வந்ததற்காக அன்று சாயந்திரம் வரைக்கும் வைத்து விளையாடி விட்டு, அவ்வப்போது அம்மையிடம் கெஞ்சிக்கூத்தாடி அதற்குப் பால், சோறு என ஊட்டி விடுவோம். சாயந்திரம் அவன் திரும்பிப்போகும்போது கையோடு அந்தக்குட்டியைத் தூக்கிச்சென்று விடுவான். ‘குட்டியை என்ன செஞ்சே வெங்கிட்டு?’ எனக்கேட்டால், “அதுக்க தள்ளை இல்லாத்த நேரத்துல போயி மத்த குட்டிகளுக்க கூடயே விட்டுட்டேன்” என்பான். “ அடப்பாவி.. அம்மை கிட்டேருந்தா பிரிச்சிக்கொண்டு வந்தே? அது பாத்தா கடிக்குமே” என்ற நம் பதற்றம் அவனை ஒன்றும் செய்யாது. கமுக்கமாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டுப்போய் விடுவான். அப்படியென்றால் அடுத்த சில தினங்களிலேயே இன்னொரு குட்டியைக் கொண்டு வரப்போகிறான் என்று அர்த்தம். 

வளர்ப்புப்பிராணிகள் மேல் பாசம் அதிகம். நாய்க்குட்டிகளைக் கொண்டு வந்து பொறுமையாக உண்ணி பிடுங்குவான், குளிப்பாட்டி அதன் வாலில் ரிப்பன் கட்டி விடுவான், கழுத்தில் பட்டை கட்டவில்லையென்றால் முனிசிபாலிட்டியில் பிடித்துக்கொண்டு போய் விடுவார்கள் என்று யாரோ பயமுறுத்தியதற்காக கடையிலிருந்து பட்டை வாங்கி வந்து கட்டி விட்டிருந்தான். எல்லாம் நாலைந்து நாட்கள்தான், “இத எனக்கு வளக்குறதுக்குத் தாயெம்டே” என்று யாராவது கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு தூக்கிக் கொடுத்து விடுவான். நாயோ பூனையோ.. அதன் பல் பட்டாலும் சரி, நகத்தால் கீறி விட்டாலும் சரி, எதையுமே காட்டிக்கொள்ள மாட்டான். வலித்தால் கூட ஆள் நடமாட்டமில்லாத முட்டுச்சந்தில் போய் நின்று அழுவானே தவிர பிறர் முன் தன்னுடைய பலவீனத்தை ஒருபோதும் காட்டிக்கொள்ள மாட்டான்.

ஒரு தீபாவளி சமயம்.. காலையில் எண்ணெய் தேய்த்துக்குளித்து முடித்து பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தோம். பெண் குழந்தைகளுக்கு மத்தாப்பு, தரைச்சக்கரம் போன்ற சாத்வீகமான பட்டாசுகளைத்தான் தருவார்களே தவிர வெடிக்கும் பட்டாசுகளைத் தர மாட்டார்கள். நான் சண்டை போட்டு ஒரு சரம் லஷ்மி வெடியை வாங்கி வைத்துக்கொண்டு வெடிக்க வைக்க முயன்று கொண்டிருந்தேன். எப்படியென்றால்,.. ஒரு தாளைக் கிழித்து அதன் மேல் வெடியை வைத்து விட்டு தாளைக் கொளுத்தி விட்டு ஓடி வந்து விடுவேன். தீ கொஞ்சங்கொஞ்சமாகப் பரவி வெடியின் திரியைத்தொடும், அப்புறமென்ன? டமாலென வெடிக்கும். வெடியைக் கையில் வைத்துக்கொண்டு பற்ற வைத்து ஆகாயத்தில் வீசியெறிந்து சாகசம் செய்யும் ஆண்பிள்ளைகள் நடுவே நாங்களும் சளைத்தவர்களில்லை எனக்காட்டும் வீர வேடிக்கைதான் அது. அப்போதுதான் இவன் வந்தான், “ எக்கா.. நீ என்ன லெச்சுமி வெடிய இப்படி வெடிக்கே? நாம்லாம் அணுகுண்டையே கைல வெச்சு வெடிப்பேம் தெரியுமா?” என்றான்.

“ஆமாடே.. நீ சூரப்புலிதான். இந்தா இந்த பொட்டு வெடிய மொதல்ல பயப்படாம வெடி பாப்பம்”

“எக்கா, நா வெளையாட்டுக்குச் சொல்லல நானெல்லாம் அணுகுண்டு வெடிக்க பயப்படவே மாட்டேன். ஒண்ணு வெடிச்சுக் காட்டட்டுமா" என்று உதார் வேறு விட்டுக்கொண்டே ஒரு அணுகுண்டைக் கையில் எடுத்தான். சரி,.. ஊதுவத்தியைக் கொடுத்து விட்டு நாம் ஓட்டம் பிடித்து விடலாம் என்று நம்ம்ம்ம்பி கொஞ்சம் இந்தப்பக்கம் திரும்பினேன். 'பட்ட்டார்' என்றொரு சத்தம் காதைப்பிளந்தது. திடுக்கிட்டுத்திரும்பினால் கொதகொதவென்று வெந்த கையுடன் நிற்கிறார் அண்ணாத்தை. என்னடாவென்றால் அணுகுண்டை கையிலிருக்கும்போதே பற்ற வைத்து தூக்கி எறிந்து ஆகாயத்தில் வெடிக்க வைக்கலாம் என்று நினைத்தாராம். ஃப்ளாப் ஆகிவிட்டதாம். கூலாகச் சொல்கிறார். 

 நன்றாக நாலு திட்டு திட்டிவிட்டு, தரதரவென்று வீட்டுக்குள் இழுத்து வந்து குளிர்ந்த தண்ணீரில் கையை விடச்சொல்லி, பின் இங்க்கையும் நிறைய ஊற்றி, "வீட்டுக்குப் போய் அம்மா கிட்ட காமி. மருந்து இருந்தா போட்டு விடுவாங்க. இல்லைனா ஆசுத்திரிக்குப் போ" என்று சொல்லி அனுப்பினேன். இத்தனை களேபரத்திற்கும் பிள்ளையாண்டன் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வர வேண்டுமே!! மூச்.. அத்தனை வேதனையையும் எப்படித்தான் அடக்கிக் கொண்டிருந்தானோ. இப்பொழுது நினைத்தாலும் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. பின் அவன் அம்மாவிடம் விசாரித்தபோதுதான் அவன் இந்தச்சம்பவத்தை வீட்டில் சொல்லவேயில்லை எனத்தெரிந்தது. 

“சாப்புடச்செல கைல சோறு பட்டா காந்தும்லாடே? வீட்டுல சொல்லாம முடியுமா?”

“செண்டக்கா கிட்ட ஊட்டி விடச்சொன்னேன், சோலி முடிஞ்சது” என்று கூலாகச் சொல்லி விட்டுப் போய்க்கொண்டே இருந்தான். கடைக்குட்டி என்ற சலுகையைப் பயன்படுத்தி இரண்டு நாட்களாகச் செல்லங்கொஞ்சியே சமாளித்திருக்கிறான் பயல். அப்புறம் எங்கள் வீட்டிலிருந்த மருந்தைப்போட்டு விட்டது தனிக்கதை.

ஒரு சமயம் எங்கிருந்து கிடைத்ததோ.. ஒரு ஜோடி புறாக்களைக் கொண்டு வந்து தந்தான் வளர்ப்பதற்காக. வீட்டில் புறாக்கூண்டு கிடையாது. அதனாலென்ன? ஒரு அட்டைப்பெட்டியைக் கவிழ்த்துப்போட்டால் போகிறது என்று நானும் அவைகளை வளர்க்கத் தீர்மானித்தேன். அவைகள் வீட்டுக்குள் தத்தித்தத்தி நடமாடுமே தவிர பறக்காது.

“இது என்ன சாப்பிடும்டே?” எனக்கேட்டபோது, கொஞ்சம் தலையைச்சொறிந்து கொண்டே யோசித்து விட்டு “சோறு போடலாம்க்கா” என்றான். இவன் சொன்னானென நானும் அரிசி, பயிறு, சோறு போன்றவைகளைப் போட்டு வைத்தேன். அவுக் அவுக்கென கொத்தித்தின்று விட்டு இரண்டும் கண்ணயர்ந்தன. ராத்திரியானதும் தரையில் ஒரு நியூஸ்பேப்பரை விரித்து அதில் இந்தப் புறாக்களை விட்டு அட்டைப்பெட்டியால் மூடி வைத்தேன், விடிந்ததும் பார்த்தால் ஒன்றுதான் இருக்கிறது, இன்னொன்றைக்காணவில்லை. “பூச்ச என்னமும் தூக்கிட்டுப்போயிருக்கும்” என்று அசால்ட்டாக கூறி விட்டு மீதமிருந்த புறாவைத்தூக்கிக்கொண்டு போனான். சாயந்திரமே இரண்டு முயல் குட்டிகளுடன் வந்தான். 

“எடே.. மொதல்ல இத கொண்டுக்கிட்டுப்போ.. பாவம் போல இருக்கு, பூச்ச தூக்கிட்டுப்போயிற்றுன்னாக்க பாவம்லா”

“கெடக்கட்டும்க்கா.. இது குட்டி போட்டு பெருகும். அந்த மாமா வீட்டுல பஞ்சுருண்டை மாதிரி எவ்ளோ கெடக்கு தெரியுமா? நெறைய்ய மொசக்குட்டி இருந்துதுன்னா வெளையாட எவ்ளோ ஜாலியா இருக்கும் தெரியுமா?” என்றபடியே கீழே விட்டிருந்த முயல் குட்டியைப் பிடிக்கத்துரத்தினான். அது இவனுக்குப்பயந்து கொண்டு பாத்ரூம் தண்ணீர் வெளியே வருவதற்கென சுவரில் பதிக்கப்பட்டிருந்த குழாய்க்குள் போய்ப்பதுங்கிக்கொண்டது. தரையில் மண்டி போட்டுப் படுத்துக்கொண்டு நாக்கை லேசாகத்துருத்திக்கொண்டு, கையை நீட்டி குழாய்க்குள் விட்டு முயல் குட்டியைப் பிடித்து இழுத்தான். அது பிய்ந்து கையோடு வந்தது.. பயந்து அலறினேன்.

“எக்கா.. அதும் வாலுதான் பிஞ்சு வந்துட்டுது, வளந்துரும்” என்றபடி இன்னும் கொஞ்சம் கையை நீட்டி அதன் காதுகளைப் பிடித்து இழுத்தான். காதும் பிய்ந்து வந்து விடுமோ எனப்பயந்தேன். அப்படியாகாதாம்.. முயலைக் காதைப் பிடித்துதான் தூக்க வேண்டுமாம், பாடமெடுத்தான் பயல். ‘மொதல்ல இதக்கொண்டுட்டுப்போயி எங்கிருந்து கொண்டாந்தியோ அங்கியே விட்டுரு’ என்று துரத்தி விட்டேன். கவலையே படாமல் முயல்குட்டிகளைத் தூக்கிக்கொண்டு போனான்.

“கேரம் போடு கொண்டு வந்துருக்கேன், வெளையாடலாமா?” என்றபடி நிற்பான் ஒரு நாள். காய் அவனுக்கு சாதகமாக விழவில்லையெனில், “போர்டு சரியில்லக்கா, பவுடரு போட்டுக்கிடுதேன்” என்றபடி அத்தனை காய்களையும் கலைத்து எடுத்து வெளியே வைத்து விட்டு, சாக்பவுடரைக்கொட்டி பூசி மெழுகி, தரையெல்லாம் இழுகி வீட்டிலுள்ளவர்களிடம் திட்டு வாங்கி வைப்பான். தோற்பது போல் ஆட்டம் செல்கிறது எனில், “அம்ம சாப்பிடக்கூப்ட்டா.. வீட்டுக்குப்போறேன்” என்று ஆட்டையைக் கலைத்து விட்டு கேரம் போர்டை இடுக்கிக்கொண்டு ஓடியே போய் விடுவான். அவன் கள்ள ஆட்டம் ஆடுவது எங்களுக்குத்தெரியும் என்பதை நாங்களும் காட்டிக்கொள்வதேயில்லை.

எனக்குத்திருமணம் நிச்சயமான சமயம், இனிமேல் எப்போதும் போல் பார்க்க முடியாது, விளையாட முடியாது என்பது அவனை அதிகம் பாதித்தது. இருந்தாலும் பக்கத்து ஊருக்குத்தான் போகிறேன் என்பதில் கொஞ்சம் சமாதானமடைந்தான். “ எக்கா.. முயல் குட்டி கொண்டுட்டு வாரேன், ஒனக்க மாப்பிள்ளை வீட்டுல வெச்சு வளக்கியா?” என்றபடி நின்றான் ஒரு நாள். 

“டே.. நான் இங்கியே இருக்கப்போறதில்ல, பாம்பேக்குப் போயிருவேன். அப்பம் அத இங்க உள்ளவங்க யாரு பாக்கப்போறா? இங்க கெடக்கப்பட்ட ஆடு, மாடு, கோளி, நாயி இதுகளத்தாம் பாப்பாங்க, நான் கொண்டுட்டுப்போற மொசக்குட்டி, புறா இதெல்லாமா பாப்பாங்க?” என்றேன்.

யோசனையுடன் நின்றவன், “இங்க இம்புடு கெடக்கா.. அப்பம் நீ பாம்பேக்கு கொண்டுட்டுப்போ” என்று நிலையாக நிற்க ஆரம்பித்தான். “ஆமா… இவ்ளோ ஆசப்படுதவன் ஒங்க வீட்ல இதெல்லாம் வெச்சு வளக்கலாம்ல்லா?” என்றதற்கு “அம்ம, அண்ணம்ல்லாம் ஏசுவாங்க” என்று பாவம்போல் கண்ணீர் மல்க நின்றான். அந்த ஈரமனசுதான் வெங்கட்..  கல்யாணமான பின் அவனை அடிக்கடி பார்க்க வாய்க்கவேயில்லை, அம்மாவிடம் அடிக்கடி அவனை விசாரித்துக்கொள்வேன், ட்யூஷன் போகிறானாம், ஆனால் சுட்டுப்போட்டாலும் படிப்பு மட்டும் ஏறாமல் அப்படியே நிற்கிறதாம். 

ஒரு முறை ஊருக்குப்போயிருந்த போது, மடித்துக்கட்டிய லுங்கியும் அரும்பிய மீசையுமாக வளர்ந்திருந்தான் பயல்,.. அதே மென்மையான குரல், பச்சைப்பிள்ளை போன்ற முகம்.. “இப்பமும் நாக்குட்டி, பூச்சக்குட்டின்னுதான் திரியுதியா, இல்லே ஒழுங்கா படிக்கியா?” எனக்கேட்டேன். ஒன்றும் சொல்லாமல் சிரித்துக்கொண்டான். ஆனால், எனக்குத்தான் சின்னஞ்சிறு முயல்குட்டியைத் தொலைத்து விட்டாற்போன்ற உணர்வு. வெங்கிடு வளராமலேயே இருந்திருக்கலாம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails