Wednesday 24 January 2018

மாயத்திரை..

ஒரு தடவைதானே, சின்ன விஷயம்தானே என்று உரிமையை பிறரிடம் விட்டுக்கொடுக்க ஆரம்பித்து விட்டால், அப்புறம் அவர்களே பிடுங்கிக்கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.

பயத்தை முறியடித்து துணிச்சல் களம் வெல்லும்போது, அங்கே வெற்றி அரியணை ஏறும்.

அறியாமை தவறல்ல.. அறிந்த பின்னும் அறியாதது போல் பிடிவாதமாய் இருப்பதே பெருந்தவறு.

மேடு பள்ளமற்ற வெகு சுலபமான பாதையிலும் வாய்த்து விடுகிறது வெகு கடினமான பயணம். 

அளவு கடந்த பயத்தில் தோன்றும் அசட்டுத்துணிச்சல் ஆபத்தையும் விளைவிக்கும்.

ஆட்டமும் வாட்டமும் நிரந்தரமல்ல..

வாழ்வைப்பற்றி கனவு காண்பவன் ஜெயிக்கிறான், கற்பனையில் திளைப்பவனோ அதிலேயே உழல்கிறான்.

சோம்பி முடங்கியிராமல், முடிந்ததைச் செய்து உடலையும் மனதையும் இயக்கத்தில் வைத்திருப்பது இருத்தலின் பொருட்டென்றாலும், அதிலும் ஓர் மனநிறைவு ஏற்படும்படி இயங்குவதே அதன் வெற்றி. இல்லையெனில் நேரமும் உழைப்பும் வீணே.

செய்த நன்மை மற்றும் தீச்செயல்களின் விளைவுகள், பின் தொடரும் காலடிச்சுவடுகளைப் போன்றவை. மணற்பரப்பில் பதிந்த சுவடுகளாய் சில விரைவிலேயே விலகி விடுகின்றன. சிலவோ களிமண் பரப்பில் பதிந்த தடமாய் காலாகாலத்துக்கும் அழுத்தமாய் நிலைத்து நிற்கின்றன.

வெற்றிக்கும் நமக்கும் நடுவில் இருப்பது பெரும்பாலும் நாமாக இட்டுக்கொண்ட திரைதான். காலப்போக்கில் கற்சுவராய் கடினப்பட்டு விட்டதுபோல் தோன்றினாலும், உடைத்தெறிய மனம் கொண்டால் அதுவே புகையாய்க் கலைந்து விடும் அளவுக்கு ஒன்றுமில்லாததே.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails