ஆசிரியர்: சரவணன் சந்திரன்
பதிப்பகம்: உயிர்மை
விலை: 220
முதல் பதிப்பு : 2024
எழுத்தாளன் தான் சொல்ல விரும்புபவற்றை கதை, கவிதை, கட்டுரை, யாப்பு எனப் பல வடிவங்களின் மூலமாகப் பகிர்கிறான். இவற்றில் தான் சந்திக்கும் மனிதர்களை வாசித்து அந்த அனுபவங்களை நம்முடன் கட்டுரை வடிவில் பகிர்ந்திருக்கிறார் எழுத்தாளர் சரவணன் சந்திரன். அச்சு, மின், காட்சி என எல்லா தரப்பட்ட ஊடகங்களிலும் பங்களித்திருக்கும் அனுபவம், இவரது முதிர்ந்த எழுத்துகளிலும் பிரதிபலிக்கிறது. மொத்தம் 27 கட்டுரைகளைக்கொண்டிருக்கும் இத்தொகுப்பினை வாசிக்கும்போது, இவை கதைகளா? அல்லது கட்டுரைகளா? என்ற உளமயக்கம் ஏற்படுகிறது.
இலக்கிய மாந்தருக்குச் சற்றும் குறையாத வாழ்வியல் அனுபவங்களுடன் நடமாடும் மனிதர்கள், சித்தர்களுடனான அனுபவப்பகிர்வுகள், செய்யும் மீன்தொழில் முறையில் கொண்டிருக்கும் கடல் மற்றும் கடலுணவு பற்றிய ஞானம், விவசாயத்தையும் ஏற்றுச்செய்வதால் வானிலை மாற்றங்கள் பற்றிய கவனிப்பு, விளையாட்டு வீரராகவும் இருப்பதால், உடலை, ஆரோக்கியத்தைக் கவனிப்பது என எல்லாவற்றையும் ஒருக்கியிருக்கும் இவற்றை வாழ்வியல் கதைகள் என்றே சொல்லலாம். தன்னைச்சுற்றி இருப்பவற்றைக் கவனிப்பதும், அவற்றை எழுத்தில் கொண்டுவருவதும் எழுத்தாளனின் இயல்பு, ஆனால், நாமும் களத்தில் இருப்பது போன்றே உயிரோட்டத்துடன் உணரச்செய்கிறது இவரது எழுத்து.
எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றும் பழக்கம் எப்படி வந்தது எனவும் அச்சுமையை எப்படி இறக்கி வைத்து, தன்னைத்தானே அணைத்து வைக்கப் பழகிக்கொண்டார் எனச்சுட்டுகிறார் ‘அணைத்தல்’ என்ற கட்டுரையில்.
பூத்துக்கிடந்த வயிறு, ஓய்ந்து அணைவது வரையிலானது வயிற்றுக் கணக்கு மட்டுமல்ல.. வாழ்ந்த காலத்தின் கணக்கும் கூட. அதற்குப்பின்தான் மனித மனது நாவால் ருசித்தவற்றையெல்லாம் மனதால் ரசிக்க ஆரம்பிக்கிறது. பிறர் சாப்பிடுவதைப் பார்த்தாலே அதற்கு நிறைந்து விடுகிறது. தொகுப்பின் தலைப்புக்கட்டுரையாய், சோற்றுக்கணக்கின் பாதிப்பில் அமைந்த “வயிற்றுக்கணக்கு” சுவாரஸ்யம்.
நுணுக்கமாகக் கணித்து மதிப்பிடும் மனிதர்களைப்பற்றிய “கண்மதிப்பு” கட்டுரை சிறப்பு. சரியாகக் கணித்து கவனமுடன் செயல்பட்டாலே பல தோல்விகளைத் தவிர்க்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாவல் பிறந்த கதையைக்கூட அவ்வளவு சுவையாகச் சொல்லியிருக்கிறார் “சுபிட்ச முருகன்” கட்டுரையில்.
அவரவர் நியாயங்கள் அவரவருக்கு. அதை அடுத்தவர் மேல் ஏற்றித்துன்புறுத்தி அடுத்தவர் மேல் ஆக்கிரமிப்பு செலுத்தினால் என்னாகும்? “காதலின் பரிசு” கட்டுரையை வாசித்தால் தெரிந்து கொள்ளலாம். தற்காலத்தில் விவசாயம் ஒரு சூதாட்டமாக மாறிவிட்டது என்கிறார். எப்படி? என்பதை மூங்கில் புல் கட்டுரையில் காணலாம். அத்தனை இயற்கை மற்றும் செயற்கை இடர்பாடுகளைக் கடந்துதான் நடந்துகொண்டிருக்கிறது விவசாயம்.
போதையின் பாதையில் தடுமாறி கெடுவழியில் சென்ற மனிதர்களைப் பற்றிய கட்டுரைகள் சிந்திக்க வைக்கின்றன. ‘இளைதாய் முள்மரம் கொல்க’ என்பது வாக்கு. இக்கால இளைஞர்களில் சிலர் அவ்வாறு மூத்தோர் சொல் கேட்டு கெடுவழக்கங்களைக் கைவிடுவரா? எனச் சந்தேகிப்போர் “பொறுப்பு” கட்டுரையை வாசித்தல் நலம். தங்க ஊசிகள் நடமாடும் நாட்டில் நமது கண்ணை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
“மனிதன்தான் படைப்புச்செயலின் உச்சம்” என்று கூறும் சரவணன் சந்திரனின் படைப்புகளில் மனிதர்களுக்கும் அவர்தம் ஓயாத கதைகளுக்கும் பஞ்சமில்லை. ஒரு மூட்டை தானியத்தை ஒரே நாளில் கொத்தித்தின்ன ஆசைப்படும் வாசகக் குருவிகளுக்கு ஏற்றதுதான் அந்த விளைநிலம்.

No comments:
Post a Comment