சி.எஸ்.டி ரயில் நிலையம்
நாட்டிலேயே பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படும் மும்பை சி.எஸ்.டி. ரயில் நிலையம் யுனெஸ்கோவால் 2004ல் உலக பாரம்பரிய மிக்க கட்டிடம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ரயில் போக்குவரத்துக்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மூன்று நீராவி என்ஜின்களுடன் மும்பை- தாணே இடையே 1853ம் ஆண்டில் இயக்கப்பட்டது. முப்பத்து நான்கு கி.மீ பயண தூரத்தை 57 நிமிடங்களில் கடந்தது முதல் ரயில். நாட்டின் முதல் ரயில் பயணம் தொடங்கிய இடமே தற்போதைய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ். மும்பை கிழக்குக்கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரி பந்தர் எனும் பகுதியை ஆங்கிலேயர், ஏற்றுமதி இறக்குமதி பொருட்களைப் பாதுகாத்து வைப்பதற்காகத் தேர்ந்தெடுத்தனர். இங்கே ரயில் போக்குவரத்து அவசியம் என்பதை உணர்ந்ததால் கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வே என்ற அமைப்பினை ஏற்படுத்தி 1850ம் ஆண்டில் இங்கு ரயில்நிலையம் அமைத்தனர். அது போரி பந்தர் டெர்மினஸ் என அழைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேவை கருதி ரயில் நிலையக் கட்டடத்தைப் பிரம்மாண்டமாக கட்ட ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.
கட்டடத்தை வடிவமைக்க அப்போது பிரபல நிபுணராக இருந்த பிரெடரிக் வில்லியம் ஸ்டீவன்ஸ் என்பவர் பணிக்கப்பட்டார். அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 16.14 லட்சம்!. சுமார் பத்து மாதங்கள் பல்வேறு ரயில் நிலையங்களைச் சுற்றிப்பார்த்து ஆராய்ந்த பின்னர், மத்திய லண்டனின் செயின்ட் பாங்கிராஸ் ரயில் நிலையக் கட்டட வடிவமைப்பு பிடித்துப் போக அதைப்போலவே மும்பை ரயில் நிலையத்தையும் அமைக்க முடிவு செய்துள்ளார். கட்டடப் பணிகள் தொடங்கின. இந்திய, இத்தாலிய, கோதிக் கட்டடக்கலைகளின் கலவையாக, ஆங்கிலேய நிபுணர்களும் இந்தியக் கைவினைஞர்களும் இணைந்து தீட்டிய அழகோவியமாக உருவாக்கப்பட்டது மும்பை ரயில் நிலையம். மர வேலைப்பாடு, டைல்ஸ், அலங்கார இரும்பு வேலைப்பாடு என அனைத்திலும் கலைநயம் மிளிர அமைத்தனர். உள் அலங்கார வேலைப்பாடுகளில் பாம்பே ஸ்கூல் ஆப் ஆர்ட் (சர் ஜே.ஜே.ஸ்கூல் ஆப் ஆர்ட்) மாணவர்களும் கைவண்ணம் காட்டியிருக்கிறார்கள். இப்படிப் பிரம்மாண்டமாக உருவான ரயில் நிலையம் 1888ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இங்கிலாந்து ராணியைப் பெருமைப்படுத்தும் வகையில் விக்டோரியா டெர்மினஸ் எனப் பெயர் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வேயின் தலைமையகமாக விக்டோரியா டெர்மினஸ் திகழ்ந்து வந்துள்ளது. ரயில் டிக்கெட்டுகளையும் இங்கேயே அச்சடித்து வந்துள்ளனர். இச்சிறப்பு மிக்க ரயில் நிலையத்துக்கு 1996ம் ஆண்டில் மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி நினைவாக சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மத்திய ரயில்வேயின் தலைமையகமாகவும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நிர்வாக கட்டடம் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பெருமையும் இதற்குக் கிடைத்துள்ளது.
ரயில் நிலையக்கட்டிடத்தின் முன்புறத்தோற்றம்
கட்டடத்தின் பின்புறத்தோற்றம்.
கட்டடத்தின் உச்சியிலிருக்கும் முன்னேற்ற தேவியின் சிலை 1969-ல் இடியால் பாதிக்கப்பட்டு, செப்பனிடப்பட்ட பின்னர் மறுபடியும் நிறுவப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் நினைவிடம்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களின் பூதவுடல், தங்கச்சி மடம் பஞ்சாயத்துக்குட்பட்ட பேய்க்கரும்பு எனும் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்காலிகக்கொட்டகை அமைக்கப்பட்டுள்ள அந்த இடத்தில் இப்பொழுது மணி மண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.
ஃப்ளோரா ஃபவுண்டன்
ரோமானிய தேவதையான ஃப்ளோராவின் பெயரைத்தாங்கி நிற்கும் இச்செயற்கை நீரூற்று மண்டபம் மும்பையின் சி.எஸ்.டி ரயில் நிலையத்திலிருந்து அருங்காட்சியகம் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது. பெருவாரியான நேரங்களில் காய்ந்து கிடக்கும் இந்நீரூற்று மண்டபத்தில் எப்பொழுதாவது நீரூற்று வேலை செய்யும். மும்பை வர்த்தகச்சந்தைக்கட்டிடம், உயர்நீதி மன்றம், மும்பைப் பல்கலைக்கழகம், ஆகியவை இதன் அருகண்மையில் அமைந்துள்ளவற்றில் முக்கியமானவையாகும். இம்மண்டபத்திலிருந்து கூப்பிடு தூரத்தில்தான் சர்ச்கேட் ரயில் நிலையமும் அமைந்திருக்கிறது. ஜூராசிக் காலத்தைச் சேர்ந்த சுண்ணாம்புக்கற்கள் போர்ட்லேண்டிலிருந்து கொண்டு வரப்பட்டு கட்டப்பட்ட இம்மண்டபத்தின் உச்சியில் பூக்களின் தேவதையான ஃப்ளோரா ஒயிலாக நின்று கொண்டு அக்காலத்திலிருந்து தற்காலம் வரை மும்பை அடைந்து வரும் மாற்றங்களைக் கண் கொட்டாமல் கவனித்து வருகிறாள். அவளுக்குத்துணையாக நான்கு தூண்களிலும் மேலும் நான்கு ரோமானிய தேவ,தேவதைகள் இருக்கிறார்கள். ஹூதாத்மா சவுக் என இப்பொழுது அழைக்கப்படும் இப்பகுதியில்தான் அக்காலத்தில் மும்பைக்கோட்டை இருந்தது, நகர விரிவாக்கத்திற்காக அப்போதைய கவர்னரான Sir Batle Fraire என்பவரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட இக்கோட்டைக்குள் நுழைய அப்போலோ, சர்ச்(புனித தாமஸ் கதீட்ரல்), பஜார் என மூன்று நுழைவாயில்கள் இருந்தன. இவற்றில் கதீட்ரலின் நுழைவாயில் இருந்த அதே இடத்தில்தான் தற்சமயம் ஃப்ளோரா ஃபவுண்டன் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது முதலில் பைகுல்லாவிலிருக்கும் விக்டோரியா தோட்டத்தில் நிறுவப்படுவதாக இருந்து, இறுதியில் சர்ச் கேட் பகுதியில் இடம் பெற்றது. உலகளாவிய புராதானச்சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இம்மண்டபம் மும்பையின் மிக முக்கியமான அடையாளமாகும்.
"கேட் வே ஆப் இண்டியா"
மும்பையின் "கேட் வே ஆப் இண்டியா" அதாவது இந்தியாவின் நுழைவாயிலைப்பற்றிக் கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. இதைப்பற்றி முன்னெப்போதோ எழுதியது. "கேட் வே ஆஃப் இண்டியா" வெள்ளைக்காரங்க அவுங்க பாஷையில் வெச்ச பேரை, நாம தமிழ்ல இந்தியாவின் நுழைவாயில்ன்னு சொல்லிக்கலாமே. இது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துல அப்போதைய ராஜாவும் ராணியுமா இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், மேரியம்மா தம்பதியினரின் இந்திய வருகையைக் குறிக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கு. 1911-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1924-ல் பணிகள் முடிவடைஞ்சு, அதே வருஷம் டிசம்பர் 4-ம் தேதி திறந்து வைக்கப் பட்டிருக்கு. இதோட உசரம் 85 அடிகளாம். ஜெய்ப்பூர்லேருந்து கொண்டு வரப்பட்ட துளையிட்ட ஜன்னல்கள்(இதுகளை ஜாலின்னு சொல்லுவாங்க) பார்க்கவே பிரமிக்க வைக்குது. இந்திய மற்றும் முகலாயக் கட்டிடக்கலையின் கலவை கட்டிடம் முழுசும் பிரதிபலிக்குது. மும்பைக்கு முதன்முதல்ல வந்திறங்கும் சுற்றுலாப்பயணிகள் தவறாம பார்வையிட்டு அதிசயிக்கும் இடங்கள்ல இதுக்குத்தான் முதலிடம். மும்பைக்கு வந்துட்டு கேட்வே ஆஃப் இந்தியாவைப் பார்க்கலைன்னா ஜென்ம சாபல்யம் கிடைக்காது தெரியுமோ :-)//
//நினைவுகளைச் சுமந்து நிற்பவையல்ல நினைவுச்சின்னங்கள். பார்க்கும் போதும், எண்ணும்போதும் நம் மனதிலிருக்கும் நினைவுகளைக் கிளறி விடுவதைத் தவிர்த்த மற்ற நேரங்களில் அவை சும்மாதான் இருக்கின்றன.// என எப்பொழுதோ எழுதிய சாரல் துளியொன்று நினைவுக்கு வருகிறது. ஆனாலும் அவை கிளறி விட்ட அந்த வாசம் நெடு நாட்களாய் மணத்துக்கொண்டே இருக்கிறது மனதில் :-)
2 comments:
நானும் தற்சமயம் முமையில் தான் இருக்கிறேன். பழைய கட்டிடங்களும் வேறு கட்டுமானங்களும் காலஇடைவெளியை குறைத்து விடுகின்றன. ரசிக்கும் தருணம் அதன் தொடக்கக் கதைக்குள் நம்மையும் இழுத்துக் கொள்கின்றன. நல்ல தகவல்கள்.
அருமையான கோணங்கள். தகவல்களுடனான பகிர்வுக்கு நன்றி.
Post a Comment