Thursday, 4 August 2022

"ஆனந்தவல்லி" - புத்தக மதிப்புரை


முடியாட்சி நடந்து வந்த காலத்தில், வென்றவர் தோற்ற மன்னரின் நாட்டிலுள்ள செல்வங்களை அழித்ததையும், மகளிரைச் சூறையாடிப் பொசுக்கியதையும், கவர்ந்து சென்று தம் நாட்டில் அடிமைகளாக வைத்திருந்ததையும், கைது செய்து கொண்டு வந்த ஆண்களை தம் நாட்டில் அணை, கோவில் கட்டுதல் போன்ற கடினப்பணிகளில் ஈடுபடுத்தியதையும் கேட்டிருக்கிறோம். பிற்காலத்தில் ஆங்கிலேயர் காலத்தில் மக்களை அண்டை நாடுகளுக்கு கொத்தடிமைகளாக அனுப்பியதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தக்காலத்தில் அடிமை வாணிகம் சர்வ சாதாரணமாகவே இருந்திருக்கிறது. ஆனால் இந்த வாணிகம் வெளிநாட்டில் மட்டுமன்றி உள்நாட்டிலும் நடந்திருக்கின்றது, குறிப்பாகப் பெண்களை ராஜாக்கள் விலை கொடுத்து வாங்கியிருக்கின்றனர். இச்சமயம் அரிச்சந்திரன் தன்னையும் தன் மனைவி மற்றும் மகனையும் அடிமைகளாக விற்றுக்கொண்ட கதை நினைவுக்கு வருகிறது. இந்த அவலம் நம் தமிழ்நாட்டிலேயே நிகழ்ந்திருக்கின்றது என்பது சீரணிக்க சற்றுக் கடினமான ஒன்றே. அப்படி விற்கப்பட்ட.. அதுவும் பெற்ற தகப்பனாலேயே அக்கதிக்கு ஆளாக்கப்பட்ட “ஆனந்தவல்லி” என்பாளின் உண்மைக்கதையே இந்நாவல்.

ஊர்ந்து நடந்து அதன்பின் ஓடத்துவங்காமல், நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலேயே நாலுகால் பாய்ச்சலில் ஓடத்துவங்கி விடுகிறது நாவல். பெரிய நாயக் கொத்தனின் திருவிளையாடல்களையும் அவன் எப்பேர்ப்பட்ட வாய்ஜாலக்காரன் என்பதையும் ஆரம்பத்திலேயே கோடு போட்டுக்காட்டி விடுகிறார் நூலாசிரியர். இப்பேர்ப்பட்ட ஒருத்தனிடமிருந்து அவன் மனைவி பிள்ளைகளை அவன் கூடப்பிறந்தவர்கள் காத்திருக்கக்கூடாதா என்ற அங்கலாய்ப்பு பின்னர் நமக்கு எழுகிறது. குறைந்த பட்சம் அவன் மனைவியாவது எதிர்த்து நின்று அவனைக் கேள்வி கேட்டு, நெறிப்படுத்த முயன்றிருந்தால் பாவம்.. ஒரு பெண்பிள்ளையின் வாழ்வு பிழைத்திருக்கும் என்று தோன்றுகிறது.

மீனாட்சியாக இருந்தவள் ஆனந்தவல்லியாக மாறும் வரையிலான வருடக்கணக்கான அவளது அடிமை வாழ்வில், ஐந்து வயதில் தன்னை மணந்த சபாபதிப்பிள்ளையை ஒரே ஒரு முறைதான் நினைத்துப்பார்க்கிறாள். ஆனால், அவனோ அவளை மீட்பதைத்தவிர வேறு சிந்தனையே இல்லாதவன். “அவ வெளிய வந்தாலும் ஒம்பொண்டாட்டியா இருக்கறதுக்கு தகுதியானவளா இருக்க முடியாது” என தகப்பனே ரசக்குறைவாகப் பேசினாலும் “அவள மீறி நடந்த எந்த விஷயத்துக்கும் அவள பொறுப்பாக்க முடியாது” என்ற நிலைப்பாடு கொண்டவன். பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆண் அவ்வண்ணம் ஒரு கருத்தைக் கொண்டிருந்தது வரவேற்கத்தக்கதே. அப்படியொரு எண்ணம் இருந்ததால்தானே அவன் மதறாஸ் மாகாணத்தின் கவர்னரின் கதவுகளைத் தட்டும் வரை போயிருக்கிறான். “மொகம் கூட தெளிச்சியா இல்லை, ஆனா அந்தப்பாசத்த மாத்திக்க முடியாதுப்பா” எனும்போது நாமும் கலங்குகிறோம்.

இவ்விருவரின் ஊடேயும் நாவல் முழுக்க இழையோடுகிறது தஞ்சை அரசின் அரசியல் வரலாற்றுச்சிடுக்குகளும், கல்யாண மஹாலின் பதவிஅதிகார அடுக்கும். கத்திக்கல்யாணத்துக்கும், மன்னர் நேரடியாக மணந்த அரசியருக்கும் கூட அதிகாரத்திலும் அவர்கள் வயிற்றிலுதித்த மக்களுக்கான உரிமையின் அடுக்கிலும் வித்தியாசம் இருந்திருக்கிறது. தவிரவும் போகஸ்திரீகளான பாயிகள், அவர்களுக்குப் பணிவிடை புரியும் அக்காமார்கள், இறுதியாக தொண்டூழியம் புரியும் ஏவல் பெண்டுகள் என இத்தனை பேரின் ஊடே அந்தக்கால தஞ்சையைக் காண்கிறோம். 

அக்காலத்தில் பெருமளவில் நிலவி வந்த ‘உடன்கட்டையேறுதல்’ எனும் கொடிய பழக்கத்தை ஆங்கிலேயர் வெறுத்ததற்கு ‘அரசகுடும்பத்துப்பெண் சதிமாதாவானால் அது ஆங்கிலேயருக்கு எதிராக அச்சமஸ்தானம் எழுப்பும் குரல்’ என்ற கண்ணோட்டம் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், பெண்டிரோ இரு வகைகளில் தூண்டப்பட்டு வந்தனர். சதிமாதாவானால் கிடைக்கும் தெய்வநிலை, நடுகல் வழிபாடு போன்ற உயர்நிலை ஒரு பக்கமெனில், “அக்னிப்பிரவேசம் ஒன்றில்தான் பெண்ணுக்குக் குடிப்பெருமை கிடைக்கும், அப்பெண்ணின் மைந்தனுக்கு அதன்மூலம் கிடைக்கும் அதிகாரம் இணையற்றது” என்ற மனநிலை இன்னொரு பக்கம். அக்காலத்தில் சதிமாதாக்களின் உடலில் இருக்கும் நகையை ஈமக்கடனை நடப்பித்த புரோகிதர்கள் மறுநாள் சாம்பலிலிருந்து எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது என்பது சொல்லப்பட்டிருக்கிறது.

அப்போது நம் நாட்டை மெல்ல மெல்ல கைக்குள் கொண்டு வந்து ஆளத்தொடங்கியிருந்த பிரிட்டிஷாரின் நரித்தனம், உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அதிகாரம் செய்தல் போன்றவை இந்த நாவலில் நிறையவே விளக்கமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. சொகுசாய் வாழ்வது ஒன்றே குறியாய், மக்கள் எக்கேடும் கெட்டுப்போகட்டும் என்று வாழ்ந்திருந்த அவர்களிடமிருந்து என்ன நியாயம் கிடைத்து விடும்?. ஆங்கிலேயரின் உண்டு உறைவிடப்பள்ளிக்கு நன்கொடை தருவதாக மஹாராஜா சொன்னபின் அவரை எதிர்த்துக்கொள்வார்கள் என்றோ, மீனாட்சியை விடுதலை செய்து அவள் கணவனுடன் அனுப்பி வைக்கும்படி ராஜாவுக்கு உத்தரவிடுவார்கள் என்றோ எதிர்பார்க்க முடியுமா என்ன?

அசிங்கப்பட்ட உடம்போடு வாழ்வதா? என தற்கொலைக்குத்துணியும் சந்திரம்மாவிடம் ஆனந்தவல்லி கேட்கும் கேள்வி ஒவ்வொரு பெண்ணும் தன்னிடம் கேட்டுக்கொள்ள வேண்டியது. விசுவாசம் என்பது கூட சமூகத்தின் ஜாதி, பொருளாதார படிநிலைகளுக்கேற்ப மாறுமா என்ன? அப்படித்தான் அப்பெண்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். என்றேனும் ஒரு நாள் தன் அம்மாவைப் பார்த்து விட முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாள் ஆனந்தவல்லி.

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியாத நேர்மையாளரான மோஹித்தே, மீனாட்சியின் நிலை கண்டு, அவள் கணவனுடன் இணைய தடையாக இருந்துவிடக்கூடாதே என்ற அங்கலாய்ப்பால் வீரம்மா என்ற அக்காவிடம் உதிர்த்த “பவித்ரம்” என்ற ஒரு சொல் மீனாட்சியின் வாழ்வைப் புரட்டிப்போட்டு அவளை அவள் குடும்பத்திடமிருந்தே பிரித்து விடும் என அவர் அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. “நான் ஒண்ணும் பரம்பரையா அக்காவா இருக்கறவ இல்ல” என வீரம்மாவை அந்தச்சொல் உலுக்கிப்போடாமல் இருந்திருந்தால் ஒருவேளை மீனாட்சி அவள் குடும்பத்தினருடன் சேருவதைத் தடுக்காமல் இருந்திருப்பாளோ என்னவோ!! ஒரு பெண்ணின் அகங்காரத்தைத் தூண்டிய அச்சொல்லால் இன்னொரு பெண்ணின் வாழ்வையே பலியிடத்துணிகிறாள்.

கொடிகட்டிப்பறந்த அடிமை வியாபாரத்துக்கு எதிராக மன்னரிடமும், அதன்பின் அவர்களையே கேள்வி கேட்கும் அதிகாரம் கொண்ட ஆங்கிலேயரிடமும் புகாரளித்தும்  மீனாட்சியை மீட்க இயலாத சபாபதியின் கையறுநிலை கலங்க வைக்கிறது. காவலனே கள்வனானால் என் செய்ய இயலும்?. சபாபதி மதறாஸ் கவர்னருக்கு எழுதிய கடிதத்தின் மேல் எழுந்து நிற்கிறது இந்நாவல். ஒற்றைக் கடிதத்தை அஸ்திவாரமாய்க்கொண்டு, இதுவரை யாருமே தொடாத புதுக்களத்தில்  பெருங்கோட்டையொன்றை எழுப்பியிருக்கிறார் எழுத்தாளர் லஷ்மி பாலகிருஷ்ணன். இவரது முதல் நாவல் என்று சொல்லவியலாத அளவுக்கு ஆரம்பத்தில் தொடங்கி இறுதி வரிகள் வரை விறுவிறுப்புடன் செல்கிறது இந்த நூல்.

ஆசிரியர்:லஷ்மிபாலகிருஷ்ணன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails